மட்டக்களப்பு
மாவட்டத்தில் கடைசி மலைப்பகுதியில் ஓர்
ஆய்வுப் பயணம்-பகுதி 1
என்.கே.எஸ்.திருச்செல்வம் NKS/189 27 ஆகஸ்ட் 2020
(நான் இங்கே
பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில்
பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)
நாட்டில் காணப்பட்ட கொள்ளை நோய்
காரணமாக சில மாதங்கள் ஆய்வுகளை மேற்கொள்ள முடியாமல் இருந்த நிலையில், கடந்த வாரம்
மீண்டும் ஓர் ஆய்வுப்பயணத்தை தொடங்கினேன். இந்தத் தடவை நான் சென்ற இடம் மட்டக்களப்பு
மாவட்டமாகும். இரண்டு நாட்களில் மூன்று வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று சில
இடங்களையும், கோயில்களையும் ஆய்வு செய்தேன். இந்த மூன்று பகுதிகளில் ஒன்றுதான்
கடைசிமலைப் பகுதியாகும். இது ஏறாவூர்பற்று எனும் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில்
அமைந்துள்ள ஈரளக்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள ஒரு மலைப் பிரதேசமாகும். இவ்
ஆய்வுப்பயணத்தில் மட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த ரஞ்சித், கல்லடியைச் சேர்ந்த
திவாகரன், சத்துருக் கொண்டானைச் சேர்ந்த சுஜீதரன் ஆகிய மூன்று நண்பர்கள் என்னோடு
இணைந்தனர்.
மட்டக்களப்பில் இருந்து
கொழும்புக்குச் செல்லும் வீதியில் உள்ள வந்தாறுமூலைக்கும், சித்தாண்டிக்கும்
இடையில் மாவடிவேம்பு என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து தென்மேற்குப் பக்கமாகச்
செல்லும் வீதி சந்தனமடு ஆறு வரை செல்கிறது. இவ்வீதியில் ஒரு கி.மீ தூரம் வரை
குடியிருப்புகள் காணப்படுகின்றன. ஊரின் எல்லையில் நாகதம்பிரான் கோயில்
அமைந்துள்ளது.
இக்கோயிலை அடுத்து மிகப்பெரிய
பசுமையான வயல் நிலங்கள் காணப்படுகின்றன. இங்கிருந்து மேற்குப்பக்கத்தில் சுமார் 3
கி.மீ தூரத்தில் உள்ள சந்தனமடு ஆறு வரை இவ்வயல் நிலங்கள் உள்ளன. இவ்வயல்
நிலப்பகுதி தெற்குப்பக்கத்தில் மகாஓயா வீதியில் உள்ள இலுப்படிச்சேனை வரை சுமார் 11
கி.மீ தூரம் வரை காணப்படும் மிகப்பெரிய வயல் களனியாகும். சுமார் 36 சதுர கி.மீ
பரப்பளவில் இப்பகுதியில் நெல் பயிர் செய்யப்படுகிறது.
நாகதம்பிரான் கோயிலில் இருந்து வயல்
வெளிகளின் ஊடாக சந்தனமடு ஆற்றுக்குச் செல்லும் வழியில் பம்மோதரை ஆறு எனும்
சிற்றாறு குறுக்கிடுகிறது. இவ்வாறு சித்தாண்டியின் மேற்குப் பக்கத்தில் வாழைச்சேனை
ஆற்றில் இணைகிறது. நாகதம்பிரான் கோயிலில் இருந்து ஒன்றரை கி.மீ தூரத்தில்
சின்னாளன்வெளிக் குளமும், அதன் அருகில் புளியடிப் பிள்ளையார் கோயிலும் அமைந்துள்ளன. இங்கிருந்து ஒன்றரைக் கி.மீ தூரத்தில் சந்தனமடு
ஆறு ஓடுகின்றது. இவ்விடத்தில் ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்லும் துறை
அமைந்துள்ளது. இதுவே முறாக்கமடுத் துறையாகும். ஆனால் பொதுவாக மக்கள் இத்துறையை
சந்தனமடு ஆற்றுத்துறை என அழைக்கின்றனர். ஆனால் சந்தனமடு ஆற்றுத்துறை இங்கிருந்து
வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. அத்துறையைக் கடந்து மேற்குப்பக்கத்தில் உள்ள
பெருமாவெளி எனும் கிராமத்திற்கு மக்கள் செல்வதுண்டு. ஆனால் தற்போது அத்துறை அதிகமாகப்
பயன்படுத்தப்படுவதில்லை. முறக்காமடுத் துறையே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
இவ்விடத்தில் ஓடும் சந்தனமடு ஆறு
சுமார் 200 மீற்றர் அகலம் கொண்டதாகும். கோடை காலத்தில் ஆற்றின் நடுப்பகுதியில்
ஒன்றரை அடி ஆழத்தில் சிறிதளவே நீர் ஓடுகிறது. எனவே வாகனங்களில் இலகுவாக
இத்துறையைக் கடக்கலாம். ஆனால் மாரி காலத்தில் அதிகளவில் நீர் ஓடுவதால் படகு
மூலமாகவே ஆற்றைக் கடக்க முடியும். இக்காலப்பகுதியில் வாகனங்களில் பயணம் செய்வோர் இரண்டு
படகுகளைக் இணைத்துக் கட்டிய சிறிய படகுப் பாலத்தின் மூலம் வாகனங்களை அக்கரைக்கு
ஏற்றிச் சென்று பயணத்தைத் தொடர வேண்டும்.
ஆற்றைக் கடந்தவுடன் மேற்குப்பக்கமாகப்
பாதை செல்கிறது. இப்பாதையில் 500 மீற்றர் தூரம் வரை உள்ள காட்டுப்பகுதி யானைகள்
நடமாடும் இடமாகும். இப்பாதையில் 300 மீற்றர் தூரத்தில் ஆறு ஒன்று ஓடுகிறது. இது
வெட்டு வாய்க்கால் என அழைக்கப்படுகிறது. இங்கிருந்து 200 மீற்றர் தூரத்தில்
இன்னுமோர் சிற்றாறு ஓடுகிறது. இது கல்மடு ஆறு எனவும், இடகாலி ஆறு எனவும் பெயர்
பெற்றுள்ளது. இவ்வாற்றை அடுத்து யானைகள் உட்புக முடியாத வகையில் மின்சார வேலி
அமைக்கப்பட்டுள்ளது.
வேலியை அடுத்து ஒரு சிறிய கிராமம்
காணப்படுகிறது. இது வேரம் திடல் என அழைக்கப்படுகிறது. இக்கிராமம் அமைந்துள்ள பகுதி
பண்டைய காலத்தில் வேலன் எனும் வன்னிய சிற்றரசனின் முக்கிய ஆட்சிப் பகுதியாக
இருந்ததாகவும், அதனால் இக்கிராமம் வேலன் திடல் என அழைக்கப்பட்டு பின்பு வேரம்
திடல் என மருவியதாகவும் ஊர் மக்கள் கூறுகின்றனர். இக்கூற்றை உறுதிப் படுத்தும்
முகமாக கிராமத்தில் ஆங்காங்கே பண்டைய கற்தூண்களின் துண்டுகள் காணப்பட்டன.
இக்கிராமத்தில் சுமார் 40
வீடுகள் காணப்பட்டன.
கிராமத்தின் முடிவில் ஒரு நாற்சந்தி
காணப்படுகிறது. இங்கிருந்து வலது பக்கமாக வடக்கு நோக்கிச் செல்லும் பாதை
பெருமாவெளி கிராமத்திற்கும், நேராக மேற்கு நோக்கிச் செல்லும் பாதை வெள்ளையன்
சேனைக் குளத்திற்கும், குடாவெட்டைக் குளத்திற்கும் இடையில் கடைசிமலைப்
பிரதேசத்தின் வடக்குப் பகுதியைச் சுற்றி ஈரளக்குளத்திற்கும், இடது பக்கமாக தெற்கு
நோக்கிச் செல்லும் பாதை இலுக்குப் பொத்தானை கிராமத்திற்கும் செல்கிறது.
இலுக்குப் போத்தானைக்குச் செல்லும்
வீதியில் 600 மீற்றர் தூரத்தில் சிறிய அம்மன் கோயிலும், அதன் அருகில் சிற்றாறு
ஒன்றும் ஓடுகிறது. இது முன்பு குறிப்பிட்ட இடகாலி ஆறாகும். இவ்விடத்தில் இருந்து
மேற்குப்பக்கமாக இரண்டு மலைகள் தெரிந்தன. இடது பக்கம் உள்ள மலையின் உச்சி
செம்மஞ்சள் நிறத்திலும், பச்சை நிறத்திலும் காணப்பட்டது வலது பக்கம் உள்ள மலையின்
உச்சியில் கோயில் காணப்பட்டது. அதுவே வேலோடு மலை முருகன் கோயிலாகும்..
இவ்விடங்களைக் கடந்து சுமார் ஒரு
கி.மீ தூரம் சென்றதும் இலுக்குப் பொத்தானை அரசினர் பாடசாலையும், அதை அடுத்து
கிராமமும் அமைந்துள்ளன. இங்கிருந்து
கிராமத்தின் எல்லையில் சுமார் 500
மீற்றர் தூரத்தில் ஒரு கந்தசுவாமிக் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த சில கல்
பிள்ளையார் சிலைகளும், குமாரத்தான் வழிபாட்டுக்குரிய சில ஆயுதங்களும் இக்கோயிலில்
காணப்படுகின்றன. கோயிலில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் கிராமத்தின்
முடிவில் யானை வேலி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து யானைக்காடு தொடங்குகிறது.
இக்காட்டுப் பாதையின் வலது பக்கம்
இலுக்குப் பொத்தானைக் குளம் அமைந்துள்ளது. இடது பக்கம் பல தட்டையான பாறைத்
தொடர்கள் காணப்படுகின்றன. தெற்குப் பக்கமாக சுமார் ஒன்றரை கி.மீ தூரம் வரை பரந்து
காணப்படும் இப்பாறைத் தொடர்கள் பொத்தானை மலைகள் என அழைக்கப்படுகின்றன. பொத்தானை
மலைகளின் மேற்கில் உள்ள இன்னுமோர் தட்டையான மலைப்பறைத் தொடர் இருட்டு மலை என
அழைக்கப்படுகிறது. இவற்றின் தெற்கில் முந்தன் குமாரவெளி என்னுமிடம் அமைந்துள்ளது.
இக்காட்டுப் பாதையில் சுமார் ஒரு
கி.மீ தூரம் சென்றதும் ஒரு மரத்தின் கீழ் பிள்ளையார் கோயிலும், தெற்குப் பக்கமாக
சிறிது தூரத்தில் ஒற்றைப் பனை மரமும், அதன் அருகில் நன்னீர்க் கிணறும் காணப்பட்டன.
காட்டில் அல்லது ஊர் எல்லையில் காணப்படும்
ஒற்றைப் பனைமரம் காவல் தெய்வமான கருப்பண்ண சாமியின் உறைவிடம் என
முதியவர்கள் கூறுவர்.
பிள்ளையார் கோயிலில் இருந்து
உள்நோக்கிக் காட்டுக்குள் சிறிது தூரம் சென்றதும் ஒரு மலையடிவாரம் காணப்பட்டது.
இது சுமார் 60 அடி உயரமான தட்டையான பரந்த மலையாகும். இம்மலையே செம்மஞ்சள்
நிறத்தில் காணப்பட்ட மலையாகும்.
மலையின் உச்சிப் பகுதியில் செம்மஞ்சள்
நிறத்தில் மண் மேடும், ஒரு புற்றும், குட்டையான மரங்கள் சிலவும் காணப்பட்டன. மண்
மேடு வட்டவடிவமாகக் காணப்பட்டது. இங்கு பழமை வாய்ந்த செங்கட்டிகள் ஆயிரக்கணக்கில்
சிதறிக் கிடந்தன. இது ஒரு தூபியின் சிதைவுகளாகும்.
மண் மேட்டின் நடுப்பகுதியில் மூன்று
இடங்களில் 5 முதல் 10 அடி ஆழம் வரையில் குழிகள் தொண்டப்பட்டிருந்தன. புதையல் திருடர்கள்
தமது கைவரிசையை இங்கே காட்டியுள்ளனர்.
இக்கல்வெட்டு இரண்டு வரிகளில்
பொறிக்கப்பட்டுள்ளது.மேல் வரியில் 18 எழுத்துக்களும், கீழ்
வரியில் 13
எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
இவ்வெழுத்துக்களை ஆராய்ந்த போது இவை பிற்கால பிராமி எழுத்துக்களாகத் தெரிந்தன. பெரிய
எழுத்துக்களில் ஆழமாக, தெளிவாக பின்வருமாறு கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது.
ல மஹநகொ ரொஜஹ தொகொலஹ நகொ விஹரொஹி கிரி கொஹதஹ அலி சகயொ திரெ
இவ்வெழுத்துக்களை பொருள்பட வாசிக்கும்
போது பின்வருமாறு வாசிக்கலாம்.
ல மகாநாக ரஜஹ தகலஹ நாக விஹரஹி
கிரி கஹதஹ அலி சகய திரெ
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை
(மிகுதி நாளை தொடரும்...)