Monday, August 3, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, இராவணன் வெட்டிய வாய்க்கால் மற்றும் இராவணன் கட்டிய குளம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, இராவணன் வாய்க்கால் மற்றும் இராவணன் கட்டிய குளம்


என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                             NKS/188     2    ஆகஸ்ட்   2020

 


குறிப்பு:

(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

சிவபூமியின் சுவடுகளைத் தேடி ஆராய்ந்து கொண்டிருந்த வேளை கொடகே புத்தசாலையில் அவை பற்றிய சில குறிப்புகளை தேடிக் கொண்டிருந்தபோது, ஒரு நூலில்   சில அபூர்வமான, ஆச்சரியமான குறிப்புகளை வாசித்தேன். அவை மட்டக்களப்பு மாவட்டத்தில் இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, இராவணன் வெட்டிய வாய்க்கால் மற்றும் இராவணன் கட்டிய குளம் ஆகியவை பற்றி சில குறிப்புகள் ஆகும்.

இவ்விபரங்கள் பற்றிய உண்மைத்தன்மையை அறிவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில், மகாஓயா வீதியில் உள்ள உறுகாமம் என்னுமிடத்திற்குச் சென்றேன். அங்குள்ள தமிழ் மக்களிடம் இது பற்றி கேட்டபோது அவர்களுக்கு  இந்த விபரங்கள் பற்றித் தெரியவில்லை. பின்பு அருகில் இருக்கும் சிங்கள கிராமமான தெம்பிச்சிய எனும் இடத்துக்குச் சென்று விசாரித்தபோது  அவர்களிடம் சில தகவல்களைப் பெறக்கூடியதாக இருந்தது.

உண்மையில் இராவணன் பற்றிய விபரங்களை சிங்கள மக்களே அதிகளவில் தெரிந்து வைத்துள்ளனர். அதுபோல மலையகத் தமிழ் மக்களும் இராவணன் பற்றிய விபரங்களை தெரிந்து வைத்துள்ளனர். அவர்களே இராவணன் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதிலும், தெரிந்து வைப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் இராவணன் பற்றிய விடயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. இராவணனை சிங்கள மக்கள் தங்கள் மூதாதை என்று கூறத் தொடங்கிய பின் தான் தமிழர்களுக்கு இராவணன் பற்றிய அக்கறை வந்துள்ளது.  

இராவணனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்வெட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உறுகாமம் என்னுமிடத்தில் உள்ள ருகம் குளத்தின் மேற்குப் பக்கத்தில் உள்ள மலைப்பாறையில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இக்கல்வெட்டில் ராவண வபியே இம குவிர விஹரியட்ட தினி என எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது இராவணனின் குளத்தின் வரி குபேரனின் ஆலயத்திற்கு கொடுக்கப்பட வேண்டும் எனப் பொருள் படுகிறது. இக்கல்வெட்டின்படி இராவணன் கட்டிய குளமும், குபேரன் அமைத்த ஆலயமும் இப்பகுதியில் இருந்துள்ளமை தெரிய வருகிறது.

சுமார் 7000 வருடங்களுக்கு முன்பு இராவணன் கட்டிய குளம் ராவன் குளம் எனப் பெயர் பெற்றிருந்ததாகவும், பின்பு இது ரவன் குளம், ருவன் குளம் என மருவி பிற்காலத்தில் ருகம் குளம் என மாறிவிட்டதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.








                            இராவணன் வாய்க்கால் 

செங்கலடியிலிருந்து மகாஓயாவிற்குச் செல்லும் வழியில் உள்ள ருகம் குளமே கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள ராவணன் குளம் (ராவண வாவி) என ஆய்வுகள் கூறுகின்றன. இதன் மூலம் இலங்கையின் முதலாவது பழமையான குளம் ருகம் குளம் (உறுகாமம்) எனும் உண்மை தெரிய வருகிறது.

இக்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் இப்பகுதியில் இன்னுமோர் ஆதாரமும் உள்ளது. இப்பகுதியின் தென் மேற்கிலிருந்து வரும் கல்லோடை ஆறும், தெற்கிலிருந்து வரும் ரம்புக்கன் ஓயா ஆறு மற்றும் மஹா ஓயா ஆறு ஆகியவையும் ருகம் குளத்தின் தென்மேற்குப் பகுதியில் ஒன்றிணைந்து முந்தெனி ஆறு எனும் பெயரில் வடகிழக்கு நோக்கிப் பாய்கின்றது.

முந்தெனி ஆற்றிலிருந்து ஒர் கால்வாய் மூலம் ருகம் குளத்திற்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. இக்கால்வாயின் முதல் பகுதி இராவண எல (இராவணன் கால்வாய்) எனவும், பிற்பகுதி கோகில எல (கோகில கால்வாய்) எனவும் அழைக்கப்படுகிறது. முந்தெனி ஆற்றிலிருந்து கொலனிஸ்யாய, தெம்பிச்சிய ஆகிய கிராமங்கள்  வரைக்கும் உள்ள கால்வாயே இராவணன் கால்வாய் எனப் பெயர் பெற்றுள்ளது. பிற்காலத்தில் இக்கால்வாயின் பிற்பகுதி கோகில கால்வாய் எனப் பெயர் பெற்றுள்ளது.


இராவணன் காலத்தில் முந்தெனி ஆறு வற்றாத ஜீவ நதியாக இருந்திருக்க வேண்டும். எனவே இவ்வாற்றிலிருந்து ஒர் கால்வாயை வெட்டி ஒர் குளத்தை இராவணன் கட்டியிருக்க வேண்டும். எனவே தான் இராவணன் வெட்டிய கால்வாய் இரா வணன் கால்வாய் எனவும், அவன் கட்டிய குளம் இராவணன் குளம் எனவும் பெயர் பெற்று,காலப்போக்கில் திரிபடைந்துள்ளன. 

கோகில எல என்றழைக்கப்படும் கால்வாயின் அருகில் உள்ள மலைப்பாறையிலேயே இராவணன் குளம் என எழுதப் பட்டுள்ள பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. இக்கால்வாயின் வடக்கில் கித்துள்மலை அமைந்துள்ளது. கித்துள் மலையின் வடக்கில் கித்துள்வெவ எனும் சிறிய குளம் அமைக்கப் பட்டுள்ளது. கித்துள் மலையின் மேற்குப் பக்கத்தில், முந்தெனி ஆற்றின் வடக்கில் சிப்பிமடு என்னுமிடம் அமைந்துள்ளது. சிப்பி மடுவில் சுடுநீர் ஊற்று ஒன்றும் உள்ளது. 

 

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                       

வரலாற்று ஆய்வாளர்

இலங்கை


No comments:

Post a Comment