சிவன்
பாதம் பதித்த சிவனொளிபாத மலையும், அதன் வரலாற்று உண்மைகளும்
பகுதி
3
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/162 9 மே 2020
கடந்த இரண்டு நாட்களாக சிவனொளிபாதமலையில் உள்ள சிவவழிபாடு பற்றியும், அதன் வரலாற்று உண்மைகளைப்
பற்றியும் எழுதி வந்தேன். மலையகத் தமிழர்களில் பலரும், ஏனைய பிரதேசங்களில் உள்ள
உள்ள ஓரிரு தமிழர்கள் மட்டுமே சிவனொளிபாத மலைக்குச் சென்று சிவனின் பாதத்தை
தரிசிக்கின்றனர். இந்த நிலை மாறி, பண்டைய காலம் போல ஏராளமான சைவ மக்கள் இம்மலைக்கு
யாத்திரை செல்ல வேண்டும் எனும் நோக்கத்தோடு இந்த நீண்ட கட்டுரையை எழுதியுள்ளேன். அந்தக்
கட்டுரையின் முத்தாய்ப்பான இறுதிப் பகுதி இது.
சோழர் காலத்தில் சிவனொளிபாதமலை
சோழர்
இலங்கையை ஆட்சி செய்த பொ.ஆ. 10 ஆம், 11 ஆம் நூற்றாண்டில் சிவனொளிபாத மலையை சிவ
வழிபாடு மேலோங்கிக் காணப்பட்டுள்ளது. சோழரை வெற்றி கொண்ட விஜயபாகுவின்
கல்வெட்டுகள்,
செப்பேடுகள் மூலம் இது தெளிவாகத் தெரிகிறது. சோழர் காலத்தில்
மலையில் நிலவிய சிவ வழிபாட்டின் தொடர்ச்சியே விஜயபாகுவின் கல்வெட்டு செய்தி மூலம்
தெரிகிறது.
விஜயபாகு அமைத்த சிவ வழிபாட்டு மண்டபம்
சோழரை
வெற்றி கொண்டு பொ.ஆ. 1055 முதல் 1110 வரை பொலநறுவையிலிருந்து இலங்கையை ஆட்சி
செய்து வந்த முதலாம் விஜயபாகு அம்பகமுவ என்னுமிடத்தில் ஓர் கல்வெட்டைப்
பொறித்துள்ளான். மேலும் பாணகடுவ எனும் இடத்தில் செப்பேடு ஒன்றையும் எழுதினான்.
இவற்றில் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் வசதி கருதி
அவர்கள் தங்குவதற்கு அம்பலங்கள் கட்டுவித்ததாகவும், அவற்றின் மூலம் உணவு, குடிநீர்
வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததாகவும் கல்வெட்டு கூறுகிறது.
விஜயபாகுவின்
இந்திய மனைவியான திலோகசுந்தரி சிவவழி பாட்டில் ஈடுபாடுடைய இந்து இளவரசியாவாள்.
திலோக சுந்தரியின் வேண்டுகோளின்படி விஜயபாகு சிவனொளிபாதமலை உச்சியில் ஒர்
மண்டபத்தைக் கட்டினான் என கல்வெட்டு மூலம் அறியக் கூடியதாக உள்ளது. இங்கிருந்து
திலோகசுந்தரி சிவத்தொண்டு புரிந்தாள் எனவும் தெரிகிறது. விஜயபாகு மூலம்
திலோகசுந்தரிக்குப் பிறந்த 5 பெண் பிள்ளைகளான சுபத்ரா,
சுமித்திரா, லோகநாதா, ரத்னாவள்ளி,
ரூபாவதி ஆகியோரில் நான்காவது பெண்ணான ரத்னாவள்ளியின் மகனே மகா
பராக்கிரமபாகுவாகும். சிங்கள மன்னர்களில் அதிகமான இந்துக் கோயில்களை புனர்
நிர்மாணம் செய்தவனும் இம்மன்னனே என்பதும் குறிப்பிடத்தக்கது.
திலோகசுந்தரி
விஜயபாகு கட்டிய மண்டபத்தில் இருந்து சிவத்தொண்டு புரிந்தாள் என்பதை நோக்கும்
பொழுது சோழர் காலத்தில் சிவாலயம் ஒன்று இங்கு இருந்திருக்க வேண்டும் எனவும், இதன்
காரணமாகவே ராணி மண்டபத்தை மட்டும் அமைக்க ஏற்பாடு செய்தாள் எனவும் கூறலாம்.
சிவனொளிபாத மலை உச்சி சுமார் 70 அடி நீளமும் 50 அடி அகலமும் கொண்டதாகும். இது
கீழ்த்தளம் என அழைக்கப்படுகிறது. இந்த இடத்தின் நடுவில் சுமார் 8 அடி உயரத்தில்
ஓர் கற்பாறை உள்ளது இப்பாறையின் மீதுதான் எல்லா சமயத்தவரும் வணங்கும் புனித பாதம்
பொறிக்கப் பட்டுள்ளது. பாதம் உள்ள பாறை மேல் தளம் என அழைக்கப் படுகிறது.
கீழ்த்தளம் ‘பகள மளுவ’ எனவும், மேல் தளம் ‘உட மளுவ’ எனவும் சிங்கள மொழியில் அழைக்கப்படுகிறது.
இந்த கீழ்த்தளத்தில் தான் விஜயபாகு ஓர் மண்டபத்தைக் கட்டினான்.
சோழர் காலம் முதல்
முக்கியத்துவம் பெற்ற சிவனொளிபாத மலை
மிகப்
புராதன காலம் முதல் சிவனொளிபாத மலை இந்துக்களின் வழிபாட்டுத்தலமாக இருந்தபோதும் பொ.ஆ.
10ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சிக் காலத்தின் பின்பு தான் மிக முக்கிய வணக்கத் தலமாக
மாறியது எனலாம். சோழர் காலம் தொடக்கம் இம்மலை வெளிநாட்டு யாத்திரிகர்களின்
கவனத்தையும், முக்கியத்துவத்தையும் பெற்றது. வெளிநாட்டு யாத்திரீகர்கள் மலையைத்
தரிசிப்பதில் ஆர்வம் காட்டினர். இந்தியாவிலிருந்து வந்த ஏராளமான யோகிகளும்,
துறவிகளும் மலையைத் தரிசித்த அதே சமயம் ஐரோப்பிய, அரேபிய
யாத்திரீகர்களும் மலையைத் தரிசித்தனர்.
சோழர்
இலங்கையைக் கைப்பற்றிய பொ.ஆ. 993 ஆம் ஆண்டு முதல் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன்
ஆட்சிப் பீடமேறிய பொ.ஆ. 1747 வரையான 754 வருடங்களில் (சுமார் 7 ½
நூற்றாண்டுகளில்) இடையிடையே சில ஆண்டுகளைத் தவிர மற்ற எல்லாக் காலங்களிலும்
சிவனொளிபாதமலை இந்துக்களின் செல்வாக்குடன் விளங்கியமை குறிப்பிடத்தக்கது. சோழர்
காலத்தின் ஆட்சி பீடமேறிய விஜயபாகு, பராக்கிரமபாகு, நிஸ்ஸங்கமல்லன், கலிங்க மாகன், 2 ஆம் பராக்கிரமபாகு, 4 ஆம் விஜயபாகு, வீர அழகேஸ்வரன், 5 ஆம் பராக்கிரமபாகு, 6 ஆம் பராக்கிரமபாகு, ஆரியச் சக்கரவர்த்தி, முதலாம் இராஜசிங்கன் போன்ற அரசர்களின் ஆதரவுடன் சிவனொளிபாத மலையில் சிவ
வழிபாடு நிலவியது எனத்தெரிய வருகிறது. இவர்களில் கலிங்க மாகன், ஆரியச்க்கரவர்த்தி, முதலாம் இராஜசிங்கன் ஆகியோரின்
காலத்தில் இந்துக்களும், பௌத்தர்களும் ஏனைய மதத்தவர்களும் மலையை வழிபட்டு வந்தனர்.
இரண்டாம் பராக்கிரமபாகுவின் திருப்பணி
பொ.ஆ.
1236-1271 வரை தம்பதெனியவில் ஆட்சி செய்த இரண்டாம் பராக்கிரமபாகு பௌத்த மன்னான
போதிலும் இந்து சமயத்தையும் ஆதரித்து வந்தான். பெந்தோட்டையில் காளிகோயிலை
அமைத்ததோடு, தெவி நுவரவில் விஷ்ணு கோயிலையும் புனரமைத்த இம்மன்னன் சிவனொளிபாத
மலையின் உச்சியில் ஓர் மண்டபத்தையும் கட்டினான்.
6 ஆம் பராக்கிரமபாகு காலத்தில் சிவனொளிபாத மலை
பொ.ஆ.
1412-1467 வரை கோட்டை இராச்சியத்தை 55 வருடங்கள் ஆட்சி செய்த 6 ஆம்
பராக்கிரமபாகுவின் காலத்தில் சிவனொளிபாத மலையில் இந்துக்களின் செல்வாக்கு
அதிகமாகக் காணப்பட்டது. இம்மன்னன் காலத்தில் தென்னிலங்கையில் பல இந்துக்
கோயில்களும் அமைக்கப்பட்டதோடு பல கோயில்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டன. இந்துக்களின்
செல்வாக்கு மேலோங்கிக் காணப்பட்டது. இக்காலப் பகுதியில் எழுதப்பட்ட சந்தேச நூல்கள்
மூலம் தென்னிலங்கையில் இருந்த பல இந்துக் கோயில்கள் பற்றிய விபரங்களை
அறியக்கூடியதாக உள்ளது.
முதலாம்
இராஜசிங்கன் காலத்தில் சிவ வழிபாடு மேலோங்கிக் காணப்பட்ட சிவனொளிபாதம்
பொ.ஆ. 1581-1593
வரை சீதாவக்கையை ஆட்சி செய்த முதலாம் இராஜசிங்கன் காலத்தில் சிவனொளிபாத மலையில்
சிவ வழிபாடு மீண்டும் செல்வாக்குப் பெற்று விளங்கியமைக்கான ஆதாரங்கள் உள்ளன. தனது
தந்தையைக் கொன்று விட்டு ஆட்சியைக் கைப்பற்றிய இராஜசிங்கன் தான் செய்த பாவத்திற்கு
பிராயச்சித்தம் தேடும் வகையில் சைவ சமயத்தை தழுவினான்.
சிவபக்தனாக
மாறிய இராஜசிங்கன் சோழ நாட்டிலிருந்து ஏழு சுவாமிகளை அழைத்து வந்து முக்கிய ஏழு
இடங்களில் சிவாலயங்களையும், ஆச்சிரமங்களையும் அமைத்து அவர்களைக் குடியமர்த்தினான்.
இந்த ஏழு இடங்களில் சில ஏற்கனவே சிவ வழிபாடு செல்வாக்குப் பெற்று விளங்கி பின்பு
அவ்வழிபாடு குன்றிப் போயிருந்த இடங்களாகவும், வேறு சில இடங்கள் இராஜசிங்கனின்
ஆட்சிக்குட்பட்ட பகுதிகளாகவும் இருந்தன.
இராஜசிங்கன்
சிவவழிபாட்டை மேம்படுத்திய இவ்வேழு இடங்களில் முதன்மையானது சமனலகந்த எனும்
சிவனொளிபாதமே. இவ்வேழு இடங்களின் பெயர்கள் இராஜசிங்கன் காலத்தில் விக்ரமாச்சார்ய
பண்டிதர் என்பவரால் எழுதப்பட்ட ‘மந்தாரம்புர புவத்த’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிவனொளிபாத
மலையின் நிர்வாகம் இக்காலப்பகுதியில் இந்துக் குருமார்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இங்கிருந்த பௌத்தர்கள் வெளி யேற்றப்பட்டனர். சமனலகந்தையில் சைவசமயம் மீண்டும்
மேலோங்கியது. மன்னனின் ஆதரவுடன் பிராமணர்கள் சிவ பூசைகள், யாகங்கள்
போன்றவற்றை நிகழ்த்தினர். மலையெங்கும் சிவனடியார்களும், ஆண்டிகளும்,
யோகிகளும் நிறைந்து காணப்பட்டனர்.
இமயமலை
அடிவாரத்தில் தியானம் புரிந்து வந்த நூற்றுக் கணக்கான சிவயோகிகளும், சுவாமிகளும்
சிவனொளிபாத மலைக்கு வந்து சிவனைத் தரிசித்ததோடு மலைச்சாரலிலும், அடிவாரத்திலும் காணப்பட்ட குகைகளில் தங்கியிருந்து தியானம் செய்தனர்.
இமயமலை அடிவாரத்தில் கனிகளையும், மூலிகைகளையும் உண்டு வந்த ஏராளமான யோகிகளும்,
சித்தர்களும் சிவனொளிபாத மலையில் நித்திய வாழ்வு தரும். சஞ்சீவினிச்
செடியை தேடிக் கண்டுபிடித்து உட்கொண்டதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.
சுமணகூட
மலையின் நிர்வாகத்தை இராஜசிங்க மன்னன் இந்துமதத் துறவிகளிடம் ஒப்படைத்தான் என
சூளவம்சத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் இராஜசிங்கன் காலமான பொ.ஆ. 1581
முதல் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் காலம் வரையான பொ.ஆ 1747 ஆம் ஆண்டு வரையான 165
ஆண்டுகள் சிவனொளிபாத மலையில் சிவ வழிபாடு செல்வாக்குப் பெற்று விளங்கியதோடு
இந்துக் குருமார்களின் ஆதிக்கத்தின் கீழ் சிவனொளிபாத மலை இருந்தமையும் சிறப்பாகக்
குறிப்பிடத்தக்கது.
சுவர்க்கா
ரோகணம் என இந்துக்களால் போற்றப்பட்ட
சிவனொளிபாதம்
இக்காலப்பகுதியில்
சிவனொளிபாத மலை ‘சுவர்க்கா ரோகணம்’ என இந்துக்களால் போற்றப்பட்டது.
18 ஆம் நூற்றாண்டில் இறுதிக் காலத்தில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் குடியமர்ந்த
இந்தியத் தொழிலாளர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற சிவஸ்தலமான காசிக்கு ஒப்பாக
சிவனொளிபாதத்தைப் போற்றி வணங்கினர். காசிக்குச் சென்று நிறைவேற்றும் நேர்த்திக்
கடன்களை இம்மலைக்குச் சென்று பூர்த்தி செய்தனர். தங்கள் பாலகர்களின் தலைமுடியை
சிவனொளிபாத மலையில் அர்ப்பணித்தனர்.
சிவனொளிபாத மலையிலிருந்து அகற்றப்பட்ட
சிவனடியார்கள்
முதலாம்
இராஜசிங்கனின் ஆட்சிக் காலத்திலிருந்து சிவனொளிபாத மலையில் சுதந்திரமாக தங்கி
சிவபூசை,
யாகங்களில் ஈடுபட்டிருந்த சிவனடியார்கள் பொ.ஆ. 1635-1687 வரையான
இரண்டாம் இராஜசிங்கனின் காலத்தில் ஒரு தடவை மலையிலிருந்து அகற்றப்பட்டமை பற்றி
குறிப்புகள் கூறுகின்றன. அப்போது தங்களிடம் இருந்த யானைத் தந்தங்களை 2 ஆம்
இராஜசிங்க மன்னனுக்கு சிவனடியார்கள் பரிசாகக் கொடுத்தனர். இவை 1827 இல்
ஆங்கிலேயருக்குக் கையளிக்கப்பட்டன. இந்த யானைத் தந்தங்கள் கடலாதெனியாவில் உள்ள
கோயிலில் வைக்கப்பட்டது என H.V. இரவிங் தனது நூலிலே
குறிப்பிட்டுள்ளார்.
சரித்திர முக்கியத்துவம் பெற்ற சிவனொளிபாத
மலைச்சாரல் குகைகள்
சிவனொளிபாத
மலைச்சாரலிலும் மலையடிவாரத்திலும் ஏராளமான கற்குகைகள் உள்ளன. இவைகளில் பல புராதன
சரித்திர முக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகின்றன. முக்குவத்தை வழியாக சிவனொளிபாத
மலைக்குச் செல்லும் பொழுது பாதையின் வலது பக்கத்தில் உள்ள ஒர் இடம் “ ராம கல்லு” என
அழைக்கப்படுகிறது. சீதையை மீட்க வந்த இராமர் இங்குள்ள குகையில் தங்கிச் சென்றதாகக்
கூறப்படுகிறது. தென்னிந்தியாவின் பொதிகை மலைப்பகுதிக்கு வந்த அகஸ்தியர் இலங்கைக்கு
வந்து திருக்கரசைப் பகுதியில் தங்கியிருந்த சமயம், சிவனொளிபாத
மலையடிவாரத்தில் உள்ள குகையில் தங்கி மலையைத் தரிசித்து சென்றதாகவும்
கூறப்படுகிறது. பிற்காலத்தில் இங்குதான் அகஸ்தியர் ஆச்சிரமம் அமைந்திருந்ததாகவும்
தெரிய வருகிறது. புத்தபகவான் இலங்கைக்கு வந்த மூன்றாவது விஜயத்தின் போது மலையடி வாரத்தில்
இருந்த திவா குகையில் தங்கிச் சென்றதாக மகாவம்சம் கூறுகிறது. இவை யாவும் ஐதீகக்
கதையாகவே உள்ளன.
சிவனொளிபாத மலையின் முழுமுதற் கடவுள் யார்?
இன்று
சிவனொளிபாதமலையைத் தரிசிக்க இந்து, பௌத்த,
இஸ் லாமிய, கிறிஸ்தவ சமயத்தவர்கள் சென்று வருவது வழக்கம்.
ஒவ்வொரு மதத்தவரும் தத்தமது கடவுளர்களுக்குரியதாகவே நினைத்து இம் மலையைத்
தரிசித்து வருகின்றனர். இருப்பினும் சிவனொளிபாத மலையின் முழுமுதற் கடவுள் யார் என
ஆராய்ந்து பார்க்கும் பொழுது ஒவ்வொரு மதமும் இலங்கையில் எக்காலப் பகுதியில்
அறிமுகமாயின என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.
பௌத்த, இஸ்லாம்,
கிறிஸ்தவம் போன்ற மதங்கள் இலங்கையில் அறிமுகமான காலம், ஆண்டு, மாதம், திகதி வாரியாக
அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் இம் மூன்று சமயங்களும் இலங்கையில் அறிமுகமாவதற்கு
முன்பு இங்கிருந்த ஒரே சமயம் சைவ சமயமே என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் இதற்கு
சான்றாக அமைகின்றன. இக்கல்வெட்டுக்களில் 283 கல்வெட்டுகள் இந்து தெய்வங்கள்
சம்பந்தமான கல்வெட்டுக்களாகும். இவற்றில் அதிக எண்ணிக்கையில் காணப்படுவது சிவன்
சம்பந்தமான கல்வெட்டுகளே.
இலங்கையில்
ஏனைய மதங்கள் அறிமுகமாவதற்கு முன்பு சைவ சமயமும், சிவ வழிபாடும்
செல்வாக்குப் பெற்று விளங்கியுள்ளமை இப்பிராமிக் கல்வெட்டுகள் மூலம் தெளிவாக
தெரிகிறது. எனவே, சிவனொளிபாத மலையின் முதற்கடவுள் சிவன் தான்
என உறுதியாகக் கூறக்கூடியதாக உள்ளது.
சிவ
வழிபாடு பொ.ஆ.மு. 11,300 ஆம் ஆண்டளவில் இலங்கையில் செல்வாக்குப் பெற்று விளங்கியதாகவும்,
சிவன் முதன் முதலில் கதிர்காமத்தில் உள்ள கதிரமலைப் பகுதியில் தான்
(ஏழுமலை) உறைந்திருந்தார் எனவும் அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. அதன் பின்பே
சிவனொளிபாத மலையில் சிவன் குடிகொண்டதாகவும், பின்பு இங்கு
சிவாலயம் அமைந்திருந்த தாகவும், சிவன் ஆலயம் என்பதே பின்பு
மருவி சிவன்-தெவொல எனவும் பின்பு சிவன்-ஒல எனவும் பின்பு சமன்-ஒல எனவும்
அழைக்கப்பட்டதாகவும், பௌத்த மதம் பரவிய பின் சமனொல எனவும்,
இறுதியில் சமனல கந்த, சமன கூட எனவும்
திரிபடைந்ததாகவும் ஆய்வாளர் தனேஷ் கொடிப்பிபி ஆராய்ச்சி கூறியுள்ளார்.
இதன் பின்பு
பொ.ஆ.மு. 5000 ஆம் ஆண்டளவில் இலங்கை வேந்தனான இராவணன் காலத்தில் இலங்கையில் சிவ
வழிபாடு மேலோங்கிக் காணப்பட்டமை பற்றி ஐதீகங்களும், இராமாயணக்
குறிப்புகளும் கூறுகின்றன. இக்காலப்பகுதியின் பல நூற்றாண்டுகளின் பின்பே பொ.ஆ.மு. 543 இல் புத்தபகவான்
இலங்கைக்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது.
இவற்றைத்
தவிர பொ.ஆ.மு. 10 ஆம் நூற்றாண்டு காலத்திற்குரிய ஆதி தமிழர் வாழ்ந்த தொல்பொருள்
மையங்கள் இரண்டு இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை யாவும் ஏனைய மதங்கள் இலங்கையில்
அறிமுகமாவதற்கு முன்பு இந்து மதமே இங்கு வாழ்ந்த மக்கள் கைக்கொண்ட சமயம் என்பதை
உறுதிப் படுத்துகின்றன.
இலங்கையின்
வரலாற்றுதய காலத்தின் முதல் மன்னனான விஜயன் சிவ வழிபாட்டில் ஈடுபாடுடையவன் என்பதை
யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகிறது. இவன் நான்கு ஈஸ்வரங்களைப் புணரமைத்தான் என
குறிப்பிடப்பட்டுள்ளது. இவனது காலம் பொ.ஆ.மு. 6 ஆம் நூற்றாண்டாகும்.
இதன் பின்பு
பொ.ஆ.மு. 5 ஆம் நூற்றாண்டில் பண்டுகாபயன் காலத்தில் இருந்த சிவலிங்கக் கோயில்கள்
மூலம் இம்மன்னன் சிவ வழிபாட்டில் கொண்ட ஈடுபாட்டைக் காட்டுகிறது. இதன் காரணமாகவே
தனது மகனுக்கு மூத்த சிவன் என்ற பெயரை சூட்டினான் பண்டுகாபயன். மூத்தசிவனின் மகனான
தேவநம்பிய திஸ்ஸன் காலத்தில் தான் பௌத்தம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது.
பௌத்த சமயம்
இலங்கையில் அறிமுகமாவதற்கு முன்பு, பொ.ஆ.மு. 437-367 வரையான
பண்டுகாபயன் ஆட்சிக் காலத்தில் சிவிகா சாலா, சொத்தி சாலா
ஆகிய சிவலிங்கக் கோயில்கள் இருந்தமை பற்றிய வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.
இச்சிவலிங்கக் கோயில்கள் அமைந்திருந்த காலத்திலிருந்து 75 ஆண்டுகளின் பின்பு பொ.ஆ.மு
308 இல் தேவநம்பியதீஸன் காலத்திலேயே பௌத்தம் இலங்கையில் அறிமுகமானது என்பதும்
குறிப்பிடத்தக்கது. எனவே, சிவனொளி பாதத்தின் முழு
முதற்கடவுள் சிவன் என்பது உறுதியாகத் தெரிகிறது.
நான் ஒவ்வொரு வருடமும் சித்ரா
பெளர்ணமி அன்று சிவனொளிபாத மலைக்குச் சென்று வருவது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
ஒரு தடவை அப்படி சென்று வந்த பின் எனது அலுவலகத்தில் உள்ள பட்டதாரி நண்பர் ஒருவர்
என்னிடம் ஓர் கேள்வியைக் கேட்டார். ஒவ்வொரு வருடமும் சிறிபாத மலைக்கு சென்று
வருகிறீர்களே, அங்கு புத்தரின் பாதம் தானே உள்ளது. நீங்கள் இந்து தானே, நீங்கள்
புத்தரின் பாதத்தை வணங்குவீர்களா எனக் கேட்டார்.
இல்லை நான் சிறிபாத மலையில் வணங்குவது எங்கள் சிவனின் பாதத்தை,
அப்படித்தான் நான் நூறு வீதம் நம்புகிறேன் என பதில் சொன்னேன். உடனே அந்த நண்பர்
இல்லை நீங்கள் சொல்வது தவறு, அது புத்தரின் பாதம் தான் என்று என்னுடன் வாதாடினார்.
உடனே அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.
உலகில் உள்ள கடவுளர்களில் ஒற்றைக்
காலில் நின்ற கடவுள் சிவன் மட்டும் தான்.
ஏனைய கடவுள்கள் யாரும் ஒற்றைக் காலில் நிற்கவில்லை. ஆனால் சிவனொளிபாத
மலையில் உள்ளது ஒற்றைப்பாதமே, எனவே அப்பாதத்தை ஒற்றை காலில் நின்ற சிவன் பதித்த
பாதம் என்று நான் ஆழமாக நம்புகிறேன். இலங்கையில் புத்தரின் பாதச்சுவடுகள் பல
இடங்களில் காணப்படுகிறன. அங்கெல்லாம் இரண்டு பாதச்சுவடுகளே உள்ளன. புத்தபகவான்
எப்போதாவது ஒற்றைகாலில் நின்றுள்ளாரா? எனக் கேட்டேன். அந்தப் பட்டதாரி நண்பர் எந்த
பதிலும் சொல்லாமல் மெளனமாக நகர்ந்து சென்றார்.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை
( வசந்தம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்
கிழமையும் காலை 7.30 மணிக்கு இடம்பெறும் "வழிபாடு" நிகழ்ச்சியில் இலங் கையின் பழமை வாய்ந்த கோயில்கள் பற்றிய எனது நிகழ்ச்சியைப் பார்க்கலாம். அல்லது vasantham.lk எனும் இணைய தளத்திற்குச் சென்று "வழிபாடு" நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.)
No comments:
Post a Comment