Sunday, June 21, 2020

பொலநறுவையில் உள்ள கற்சிலை யாருடையது? பராக்கிரமபாகு மன்னனுடையதா? இராவணனின் பாட்டன் புலத்தியருடையதா?


பொலநறுவையில் உள்ள கற்சிலை யாருடையது? 
பராக்கிரமபாகு மன்னனுடையதா?
இராவணனின் பாட்டன் புலத்தியருடையதா?



என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/178     21 ஜூன் 2020


குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)


பொலநறுவையில் உள்ள பராக்கிரம சமுத்திரத்தின் அருகில் ஓர் கற்சிலை உள்ளது. பாடசாலையில் படிக்கும் காலத்தில் ஒரு தடவை சுற்றுலா செல்லும் போது முதன் முதலாக அச்சிலையைப் பார்த்தேன். அது மன்னன் பராக்கிரமபாகுவின் சிலை என்று புத்தகங்களில் கூறப்பட்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் இருந்த ரூபாய்த் தாள்களிலும் இந்த சிலையின் படம் அச்சிடப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது அக்காலப்பகுதியில் புழக்கத்தில் இருந்த முத்திரையிலும் பராக்கிரமபாகு மன்னன் எனப் பெயரிடப்பட்டு இந்த சிலையின் படம் போடப்பட்டிருந்தது.



பாடசாலைக் காலத்தின் பின் 1998 ஆம் ஆண்டு குடும்பத்துடன் சுற்றுலா போன போது பொலநறுவையில் அந்த சிலையை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்குள் ஓர் சந்தேகம் எழுந்தது.

ஒரு மன்னனின் சிலை என்றால் கையில் வாளுடன் வீரமாக, முறுக்கு மீசையுடன் அல்லவா இருக்க வேண்டும். ஆனால் இச்சிலை கையில் ஏட்டுச் சுவடிகளுடன், கீழ் நோக்கிய மீசையுடன், சாந்தமான முகத்துடன் காணப்படுகிறதே. தவிர பராக்கிரமபாகு மன்னன் ஓர் கவிஞனும் அல்ல, நூல்களை எழுதியவனும் அல்ல. அப்படி இருக்க எப்படி இது பராக்கிரமபாகுவின் சிலையாக இருக்க முடியும் எனும் சந்தேகம் எழுந்தது.

அதன் பின்பு சிவ பூமியின் சுவடுகளைத் தேடி நான் ஆராய்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில், 2006 ஆம் ஆண்டு பேராசிரியர் மகிந்த சோமதிலக எழுதிய சில சிங்கள மொழிக் குறிப்புகளை வாசித்தபோது எனது சந்தேகம் உர்ஜிதமானது. இச்சிலை ஓர் மன்னனின் சிலை அல்ல என அவர் குறிப்பிட்டிருந்ததை வாசித்தேன்.

அதன் பின்பு பொலநறுவைக்குச் சென்றேன். இந்தத் தடவை  அச்சிலையை ஆராயும் நோக்கத்தோடு அங்கு சென்றேன். வித விதமாக சிலையை ஒவ்வொரு கோணத்திலும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பொலநறுவையில் இச்சிலை பற்றிய அரிய சில குறிப்புகள் கிடைத்தன. அவற்றை வைத்து கொழும்பு தேசிய நூலகத்திலும் சில குறிப்புகளை தேடி எடுத்த போது இச்சிலை பற்றிய பல உண்மைகள் வெளிப்பட்டன. 

இச்சிலை 11 அடி 6 அங்குலம் உயரத்தில் ஓர் கற்பாறையின் மீது செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலையை டாக்டர் பரணவித்தான, மன்னன் பராக்கிரமபாகுவின் சிலை எனக் கூறக் கூறியுள்ளார். அண்மைக் காலத்தில் இச்சிலையை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் டாக்டர் பரணவித்தானவின் கூற்று பிழையானது எனக் கூறியுள்ளனர். இச்சிலை ஓர் மன்னனுக்குரிய லட்சணங்களைக் கொண்டிருக்க வில்லை எனவும், சிலையின் ஜடா முடி, கையிலுள்ள ஏடு, முகபாவம், தாடி, உடை போன்றவை இது ஓர் முனிவரின் வடிவத்திற்குரிய லட்சணங்களே அன்றி அரசனுடையது அல்ல என பேராதனை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் மஹிந்த சோமதிலக குறிப்பிட்டுள்ளார்.



பொலநறுவை கற்சிலை அகத்தியருடையதா?

புலத்தி நகரம் எனும் பொலநறுவையில் உள்ள கற்சிலை எந்த முனிவருடையது என பலரும் ஆராய்ந்துள்ளனர். இச்சிலை மன்னன் பராக்கிரமபாகுவின் சிலை என டாக்டர் பரணவித்தாண கூறுவதற்கு முன்பே இது அகத்திய முனிவருடையது என ஆய்வாளர்களான ஈ.ஊ. வின்சர், அன்ட்ரூனெல் ஆகியோர் கூறியுள்ளனர்.

எனினும் அகத்திய முனிவர் கையில் கமண்டலமும், தண்டமும் இருப்பது வழக்கம் மேலும் அகத்தியர் குள்ளமான தோற்றத்தை உடையவர். எனவே கையில் ஏட்டுச் சுவடிகளுடன், உயரமாகக் காணப்படும் இச்சிலை அகத்திய முனிவருடையது அல்ல என வேறு ஆய்வாளர்கள் கூறினர்.

பொலநறுவை கற்சிலை கருவூர்த் தேவருடையது எனக் கூறும் பேராசிரியர் மகிந்த சோமதிலக

இச்சிலை இராஜராஜ சோழனின் அரசகுருவான கருவூர்த் தேவரின் சிலை என பேராசிரியர் மகிந்த சோமதிலக்க குறிப்பிட்டுள்ளார். தஞ்சைப்பெரிய கோயில் எனும் பிரகதீஸ்வரர் கோயிலின் கருவறை யில் உள்ள சித்திரங்களில் இராஜராஜ சோழனுக்கு அருகில் கருவூர்த் தேவரின் உருவம் வரையப்பட்டுள்ளது. அவ்வுருவமும் பொலநறுவையில் உள்ள சிலையும் ஒரே வடிவத்தில் காணப்படுவதால் இது கருவூர்த் தேவருடையது என அவர் கூறியுள்ளார். எனினும் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கருவூர்த் தேவரின் சிலையை மன்னன் தனது இராஜதானியில் அரண்மனைப் பகுதியில் அமைக்காமல் அரண்மனையின் தொலைவில் அதுவும் தனியாக ஏன் அமைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தமது இராஜகுருவின் சிலையை தமது அரண்மனைக்கு அருகில் அல்லவா அமைத்திருக்க வேண்டும். எனவே இச்சிலை கருவூர்த் தேவருடையதல்ல என வேறு சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பொலநறுவை கற்சிலை கபிலமுனிவருடையதா?

மேலும் இச்சிலை கபிலமுனிவரின் சிலை என ஆங்கிலேயர் காலத்தில் தொல்பொருட்திணைக்கள அதிகாரியாக இருந்த எச்.சி.பி. பெல் கூறியுள்ளார். இவரது கருத்தை கங்குலி மற்றும் பேராசிரியர் சிறி குணதிலக ஆகியோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். மன்னன் பராக்கிரமபாகு கபில முனிவரின் நினைவாக ஓர் கட்டிடத்தை அமைத்தான் என சூளவம்சத்தில் குறிப்பிட்டுள்ளதை மேற்கோள்காட்டி அக்கட்டிடம் இன்று பொலநறுவையில் காணப்படும் ‘பொத்குல் விஹாரை’ எனவும், அதன் அருகில் இச்சிலை அமைந்திருப்பதால் இது கபில முனிவருடையது எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் இது ஓர் யூகமே தவிர இதற்கு வேறு எந்த ஆதாரங்களும் இல்லை என ஆய்வாளர்களால் கூறப்பட்டது.



பொலநறுவை கற்சிலை புலத்தியருடையது எனக் கூறும் கல்வெட்டு

இந்நிலையில் சர்ச்சைக்குரிய இச்சிலை உண்மையில் யாருடையது என ஆராய்ந்த பேராசிரியர் அநுராத செனவிரத்ன அதுவரை யாரும்  கண்டுபிடிக்காத ஓர் தடயத்தை இச்சிலையில் கண்டு பிடித்தார். சிலையின் தலைப்பகுதியின் பின்பக்கம் சிதைந்த நிலையில் ஓர் கல்வெட்டை இவர் கண்டுபிடித்தார். இக்கல்வெட்டில் நான்கு எழுத்துக்கள் காணப்பட்டன. இவை பு - ல - ச - த - எனும் எழுத்துக்களாகும். இது இச்சிலைக்குரிய ‘புலஸ்தி’ எனும் பெயர் என அவர் தெரிவித்தார். பொ.ஆ.12ஆம் நூற்றாண்டுக்குரிய இச்சிலைக்குப் பின்பகுதியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சிலையை செதுக்குவதற்கு முன்பே பொறிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதன்படி இச்சிலை இராவணனின் பாட்டனாரான புலத்திய முனிவரின் சிலை என்பதற்கு இக்கல்வெட்டு உறுதியான ஆதாரம் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கல்வெட்டில் உள்ள எழுத் துக்கள் வழமைக்கு மாறாக மேலிருந்து கீழாக செதுக்கப்பட்டுள்ள தாகவும் பேராசிரியர் அனுராத செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

புலத்தி நகரில் சோழர் நிறுவிய புலத்தியர் சிலை

இன்றைய பொலநறுவை புலத்திநகர எனும் பெயரில் மகாவம் சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலத்திய முனிவரின் தலைநகரான புலத்தி நகரம் எனும் இன்றைய பொலநறுவையில் புலத்தியரின் கற் சிலை காணப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரி நாட்டின் வடகிழக்குப் பகுதியான இலங்கையை ஆட்சி செய்ததுடன் பொதிகை மலை, மேருமலை ஆகியவற்றில் தவம் செய்து சிவ வழிபாட்டை இலங்கையிலும், குமரி நாட்டிலும் தோற்றுவித்ததோடு, சிறந்த மருத்துவராகவும் விளங்கிய புலத்திய முனிவருக்கு, சிவ வழிபாட்டில் மிக்க ஈடுபாடுடைய சோழ மன்னர்கள் இலங்கையைக் கைப்பற்றியபோது புலத்தியர் ஆண்ட புலத்தி நகரையே தமது புதிய இலங்கையின் தலைநகராகக் கொண்டதோடு, அந்நகருக்கு ஜனநாத மங்கலம் எனப் பெயரிட்டதொடு, புலத்தியரின் ஞாபகச் சின்னமாக அவரின் கற்சிலையை புலத்தி நகரில் நிறுவியுள்ளனர் என்பதே  உண்மையாகும்.

 என்.கே.எஸ்.திருச்செல்வம்                                      வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

Saturday, June 20, 2020

காட்டின் மத்தியில் ஒரு கந்தசுவாமி கோயில் கபிலித்தை ஆன்மீகப் பயணம்-பகுதி 4


காட்டின் மத்தியில் ஒரு கந்தசுவாமி கோயில்கபிலித்தை ஆன்மீகப் பயணம்-பகுதி 4


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/177     20 ஜூன் 2020


குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)


நாம் எமது கபிலித்தை புனித பயணத்தை ஆரம்பித்த இடமான கொட்டியாகல எனும் கிராமமே இப்பகுதியில் உள்ள கடைசிக் கிராமமாகும். இக்கிராமத்தில் சுமார் 1000 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள கிரவல் வீதிகளின் இரண்டு பக்கங்களிலும் இலுக்குப் பற்றைகளே காணப்படுகின்றன. 

இக்கிராமத்தில் உள்ள மக்களின் பிரதான தொழில் சேனைப் பயிற்செய்கையாகும். மிகமுக்கியமாக சோளமும், நெல்லும் இவர்கள் பயிரிடும் முக்கிய பயிர்களாகும். சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சோளமும், 3000 ஏக்கர் நிலத்தில் நெல்லும் பயிர் செய்யப் படுகின்றன. இதைத் தவிர இங்குள்ள மக்களுக்கு வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கும் இன்னுமோர் முக்கிய தொழிலாக விளங்குவது கபிலித்தை போக்குவரத்து ஆகும்.   ட்ராக்டர் வண்டி, ஜீப் வண்டி ஆகியவற்றின் மூலம் கபிலித்தைக்கு செல்லும் மக்களை கூட்டிச் செல்வது, ஒரு நாள் தங்க வைத்து அடுத்த நாள் கூட்டிக்கொண்டு வந்து விடுவது. இதனால் இங்குள்ள பல வீடுகளில் சொந்தமாக ட்ராக்டர் வண்டிகள் உள்ளன. சற்று வசதியுள்ள சிலரிடம் ஜீப் வண்டிகளும் உள்ளன.

சாதாரணமாக ஒரு காட்டுக் கிராமம் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்தக் கிராமமும் இருக்கும். ஆனால் ஏனைய கிராமங்களைப் போல் இல்லாது வருடத்தில் ஆறு மாதங்கள் இந்தக் கிராமம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். ஏப்ரல் மாதம் புதுவருடம் முதல் செப்டம்பர் மாத நடுப்பகுதி வரையான ஆறு மாதங்கள் இங்குள்ள வண்டிகளும், அதன் உரிமையாளர்களும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கையில் பணம் அதிகளவில் புரளும் காலம் அதுவாகத்தான் இருக்கும். அந்தக் காலம் தான் கபிலித்தை சீசன் காலமாகும். அந்த சீசன் முடிந்ததும் அவர்கள் தங்கள் வழமையான தொழிலைச் செய்வார்கள்.

இப்படிப்பட்ட கொட்டியாகல கிராமத்திற்கு இப்படி ஒரு பெயர் உண்டாவதற்கும் ஓர் காரணம் உண்டு. கொட்டியாகல என்றால் தமிழில் “புலிப்பாறை” எனப் பொருள்படும். இக்கிராமத்தின் வடமேற்கில் 4 கி.மீ தூரத்தில் வத்தேகம என்னுமிடத்தில் ஓர் மலைப்பாறை உள்ளது. கிராமத்தின் வடக்கில் 3 கி.மீ. தூரத்தில் வட்டராம என்னுமிடத்தில் ஓர் மலைப்பாறை உள்ளது. தெற்கில்   4 கி.மீ தூரத்தில் கோம்பஹெல எனும் மலை அமைந்துள்ளது.


இந்த மூன்று மலைகளும் முன்பு சிறுத்தைப் புலிகளின் கோட்டைகளாக விளங்கியுள்ளன. எந்நேரமும் இம்மலைகளில் புலிகள் அமர்ந்திருக்குமாம். எனவே இம்மலைகளுக்கு நடுவில் அமைந்த கிராமத்துக்கு கொட்டியாகல (புலிப்பாறை) எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. புலிகளுக்குப் பெயர்போன இவ்விடத்தில் மக்கள் குடியிருப்புகள் உண்டான பின்பு இங்கிருந்த புலிகள் எல்லாம் காட்டின் மத்திக்குப் போய் விட்டதாம். ஆனால் யானைகள் கோடை காலங்களில் கொட்டியாகல குளம், ஹெவன்பிட்டிய குளம் ஆகியவற்றுக்கு நீர் குடிக்க அடிக்கடி வருவதுண்டு. அச்சமயம் கிராமத்தின் உள்ளேயும் யானைகள் வந்து செல்லுமாம்.  

இத்தனை சிறப்புமிக்க கொட்டியாகல கிராமத்தில் நண்பர் சந்தன வீட்டில் இருந்து காலை 10.30 மணிக்கு எம்மை சுமந்து கொண்டு இரண்டு ட்ராக்டர் வண்டிகளும் விரைந்தன. சில நிமிட நேரத்தில் போகஸ் ஹந்திய எனும் அரசமரச் சந்தியின் வலது பக்கம் வண்டி திரும்பியது. இச்சந்தியில் இருந்து சற்று தூரத்தில் கப்பரகல எனும் சந்தி காணப்பட்டது. இங்கு சிறிய முருகன் கோயில் ஒன்று உள்ளது. கோயிலை அடுத்து சற்று தூரத்தில் ஹேவன்பிட்டிய குளம் அமைந்துள்ளது. அச்சந்திக்கு அப்பால் வீடுகளைக் காண முடியவில்லை. இலுக்குப் பற்றைக் காடாக இருந்தது.


நாம் கடந்து வந்த 5 நிமிட பயணம் சாதாரணமாக இருந்தது. இங்கிருந்து காட்டுப் பாதை ஆரம்பமானது. பாதை குன்றும் குழியுமாக இருந்ததால் ட்ராக்டர் பெட்டி குலுங்கியது. பெட்டியின் ஓரங்களைக் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டோம். அதனால் ஓரளவு மேலே தூக்கி அடிக்கப் படுவது குறைவாக இருந்தது. 

அங்கிருந்து 5 நிமிட பயணத்தின் பின் ஓர் சிறிய பள்ளத்தைக் கடந்தோம். அதுதான் குருப்பன் ஓடை ஆறு. ஆனால் ஆற்றில் மருந்துக்குக் கூடத் தண்ணீரை  காணவில்லை. மணல் மட்டுமே காணப்பட்டது.

அரை மணித்தியால பயணத்தின் பின் காட்டுப் பாதையின் வலது பக்கம் ஓர் மலை தெரிந்தது. அதுதான் சிறுத்தைப் புலிகள் வாழ்ந்த மூன்று மலைகளில் ஒன்றான கோம்பஹெல மலை. மலையைப் பார்த்த 5 நிமிட பயணத்தின் பின் ஓர் முக்கிய இடத்தை அடைந்தோம். அது தான் காட்டின் எல்லை ஆரம்பமாகும் இடம். இங்கிருந்து தான் அடர்ந்த காடு தொடங்குகிறது.

இவ்விடம் நுகே ஹந்திய என அழைக்கப்படுகிறது. இங்கு தான் எல்லை முருகன் கோயில் அமைந்துள்ளது. அவ்விடத்தில் வண்டியை நிறுத்தினார் சந்தன. இங்கு  5 அடி உயரமான மேடை ஒன்றின் மீது கையில் வேல் ஏந்திய நிலையில் சுதையினால் செய்யப்பட்ட முருகப் பெருமானின் சிலை ஒன்று திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்தது. முருகனின் தலையின் பின்பக்கம் ஒளி வட்டமும், மேல் பகுதியில் சிறிய கூரையும் அமைக்கப்பட்டிருந்தது. முருகனின் சிலைக்கு நான்கு பட்டுத் துண்டுகள் சாத்தப்பட்டிருந்தன.


மேடையின் கீழ்ப்பக்கம் ஒரு சட்டியில் விபூதியும், அதில் ஊதுபத்திக் குச்சிகள் குத்தப்பட்டும், அருகில் சிறிய பித்தளை விளக்கும், சீமேந்தில் செய்யப்பட்ட இரண்டு அடி உயரமான கற்பூரத் தட்டும் காணப்பட்டன. சிலையின் பின்பக்கம் முறித்துப் போடப்பட்ட மரக் கொப்புகளும் நிறைந்து காணப்பட்டன. சிங்கள மக்கள் காடுகளில் பயணம் செல்லும் போது அங்கிருக்கும் காட்டுக் கோயில்களில் உள்ள தெய்வங்கள் தம்மைக் காக்க வேண்டி மரக்கொப்புகளை முறித்து வைத்து வணங்கிச் செல்லும் வழக்கம் உள்ளது. அவ்வாறு வைக்கப்பட்ட கொப்புகளையே நாம் காணக் கூடியதாக இருந்தது. முருகன் சிலையின் பின்பக்கம் உயரமான, நேரான கருங்காலி மரம் ஒன்று வளர்ந்திருந்தது.

எல்லோரும் வண்டியை விட்டு இறங்கி கற்பூரம் கொளுத்தி முருகனை வணங்கினோம். சிலர் அருகில் இருந்த மரங்களில் இருந்த கொப்புகளை முறித்து முருகன் சிலையின் கீழே வைத்து வணங்கினர். ஒருவித பயபக்தியோடு, முதன் முதலாகக் கபிலித்தைக் காட்டுக்குள் பிரவேசிக்கும் யாத்திரீகர் அனைவருக்கும் காட்டு எல்லையில் முருகனைக் கண்டது அனைவரின் முகத்திலும் ஓர் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முருகனை வழிபட்டபின் சரியாக 11 மணிக்கு மீண்டும் பயணம் தொடர்ந்தது. அதுவரை இலுக்குப் பற்றைக் காட்டில் பயணம் செய்த நாம் இப்போது அடர்ந்த காட்டுக்குள் பிரவேசித்தோம். இக்காட்டுப் பாதை வாகனத்தின் இரண்டு சில்லுகளின் அடித்தடம் போல நடுவில் மேடாகவும், இரண்டு பக்கங்களும் பள்ளமாகவும் காணப்பட்டது. உண்மையில் இது பாதை அல்ல. மாரி காலத்தில் வெள்ளநீர் ஓடிய பள்ளங்கள். எனவே  சில இடங்களில் மணல் நிறைந்தும், ஒடுங்கி, வளைந்து வளைந்து மரங்களுக்கிடையில் செல்லும் பாதையாகக் இது காணப்பட்டது. அடர்ந்த காடு என்பதால் நடுப்பகல் வேளையாக இருந்தும் சூரிய வெயில் நிலத்தில் படவில்லை. சற்று இருட்டாகவே தென்பட்டது.  




அப்போது சந்தன எம்மிடம் ஓர் வேண்டுகோள் விடுத்தார். தயவு செய்து எல்லோரும் ட்ராக்டர் பெட்டியின் ஓரங்களைப் பிடித்துக் கொண்ட வர வேண்டாம் என்றார். எல்லோரும் அதிர்ச்சியில் என்னைப் பார்த்தனர். ஏன் என்றால் குலுங்கிக் குலுங்கிச் செல்லும் வண்டியின் பெட்டிகளில் இருந்து நாம் மேலே தூக்கி வீசப்படாமல் இருப்பதற்கு உள்ள ஒரே ஒரு பிடிமானம் பேட்டியின் ஓரங்கள் தான். ஆனால் இப்போது அதையும் பிடிக்க வேண்டாம் என்கிறாரே.

நண்பர் சந்தனவிடம் ஏன், என்ன காரணம் என்று கேட்டேன். அடர்த்தியான மரங்களின் ஊடாகவே பாதை உள்ளது. வண்டி செல்லும் போது ட்ராக்டர் பெட்டியின் ஓரங்கள் மரங்களில் உராய்ந்து கொண்டே போகும். கையை வைத்திருந்தால் கை மரங்களில் உராய்ந்து காயத்தை ஏற்படுத்தி விடும். எனவே கைகளை உள்ளே வைத்திருங்கள் என்றார்.

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். இனி நம் பாடு பெரும் பாடுதான் என ஒவ்வொருவரும் மனதில் நினைத்துக் கொண்டதை  அந்தப் பார்வையின் மூலம் நான் புரிந்து கொண்டேன். வேறு வழியில்லாமல் இப்போது ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டோம். பாதை சீராக இல்லாதபடியால் குலுங்கல் அதிகரித்தது. சில இடங்களில் எல்லோரும் குண்டுக் கட்டாக ஒரு அடி உயரத்துக்கு மேலே போய் வந்தோம். இடுப்பு எலும்பு முறிந்து விடும் போல் இருந்தது. ட்ராக்டர் பெட்டியில் தும்பு மெத்தைகள் போடப் பட்டிருந்ததால் பாதிப்பு அதிகமாக இருக்கவில்லை.

வண்டி மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது. எல்லை முருகன் கோயிலில் இருந்து 45 நிமிட குலுங்கல் பயணத்தின் பின் காடு முடிந்து ஓர் வெளி காணப்பட்டது. எல்லோரின் முகத்திலும் ஓர் சந்தோசம். எல்லோரும் ட்ராக்டர் பெட்டியின் ஓரங்களை மீண்டும்  கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

அவ்விடம் காட்டின் நடுவில் உள்ள சேனைப்பயிர் செய்யப்பட்ட இடம் போல் தெரிந்தது. சேனையின் நடுவில் இருந்த மரத்தின் மேல் காவற் பரண் ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. நண்பரிடம் கேட்டேன். சந்தன, என்ன இது காட்டின் மத்தியில் சேனைப்பயிர் செய்த இடமா? என்று கேட்டேன். ஆம் சேனைப்பயிர் செய்த இடம் தான். ஆனால் சட்டவிரோதமான சேனைப்பயிர் செய்த இடம். பல தடவைகள் காவல் துறையினரால்  சுற்றி வளைக்கப்பட்ட இடம். அதனால் இப்போது யாரும் இங்கு பயிர் செய்வதில்லை என்றார். அது என்ன பயிர் என்பது அப்போது தான் புரிந்தது.


அவ்விடத்தை அடுத்து ட்ராக்டர் வண்டிகள் இரண்டும் மீண்டும் காட்டுக்குள் புகுந்தன. மீண்டும் கைகளை உள்ளே இழுத்துக் கொண்டோம். மேலும் கீழும் வீசப்பட்டு, பக்கவாட்டில் வீசப்பட்டு, இருந்த இடத்திலிருந்து அங்கும் இங்கும் சாய்ந்தும் பயணித்துக் கொண்டிருந்தோம். சில இடங்களில் பாதையின் குறுக்கே யானைகள் முறித்துப் போட்ட மரங்கள் விழுந்து கிடந்தன. சில இடங்களில் பாதையில் பெரிய பள்ளங்கள் காணப்பட்டன. இப்படியான இடங்களில் வண்டியை காட்டுக்குள் திருப்பி, மரங்களுக்கிடையில் செலுத்தி, மிகவும் லாவகமாக  கொண்டு சென்றனர் நண்பர்கள். அவ்விடங்களில் மர வேர்களின் மேல் ட்ராக்டர் பெட்டிகள் ஏறி, பள்ளத்தில் வீழ்ந்து, மீண்டும் ஏறி எம்மை அலைக்கழித்தன. அந்த சமயத்தில் நாம் மேலே தூக்கி வீசப் பட்டபோது மரக்கிளைகளில் தொங்கிய இலைகளை எங்கள் தலைகள் தொட்டு வந்தன.                                                                                                                                                                                                                                                                      இப்படியாக 30 நிமிட நேர பயணத்தின் பின் நிழல் தரும் மரங்கள் நிறைந்த ஓர் இடத்தில் வண்டிகளை நிறுத்தினார்கள். நேரம் அப்போது பகல் 12.20. இவ்விடத்தில் ஓர் கற்பாறை அமைந்துள்ளது. இது தெலபோகல என அழைக்கப்படுகிறது. இது கபிலித்தைக் கோயிலுக்குச் செல்பவர்களின் இடைத்தங்கல் இடமாகும். கபிலித்தைக்குச் செல்பவர்கள் வண்டிகளில் இருந்து இறங்கி, உணவு உட்கொண்டு  அல்லது தேநீர் அருந்தி, சிறிது நேரம் இவ்விடத்தில் ஓய்வெடுத்து, தமது உடல் களைப்பைப் போக்கிச் செல்வார்கள். அதனால் இது வாடிகல எனவும் பெயர் பெற்றுள்ளது. இவ்விடத்தில் ஏற்கனவே ஓர் ட்ராக்டர் வண்டியில் வந்த சிலர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.




எமது யத்திரீகர்களும் ட்ராக்டர் பெட்டிகளில் இருந்து மகிழ்ச்சியாக இறங்கினர். வண்டியில் கட்டைகள் போல சுருண்டு கிடந்த எல்லோரும் இறங்கி கைகால்களை நீட்டியது உடல் வலியை சற்று குறைத்தது. இவ்விடத்தில் “இது ஒரு தெய்வ வனம். இங்கு ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள்” என சிங்கள மொழியில் எழுதப்பட்ட பெயர்ப் பலகைகள் மரத்தில் தொங்க விடப் பட்டிருந்தன.

இவ்விடத்தில் ஏதாவது உணவு உண்டு விட்டு செல்லலாமென குருசுவாமி கூறினார். அதன்படி கொண்டு வந்த பாத்திரங்களில் சிலவும், நீர் நிரப்பப்பட்ட பெரிய கேன்களும், அரிசி, தேங்காய்ப் பால்மா ஆகியவையும் இறக்கப்பட்டன. அங்கு ஓர் அவசர சாப்பாடு தயார் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. சிறிது நேரத்தில் பால்சோறு தயாரானது. குருசுவாமி எல்லோருக்கும் பால்சோறு பரிமாறினார். பயணக் களைப்பு, பசி ஆகியவற்றினால் எல்லோரும் மிகவும் ஆவலுடன் பாற்சோறை உண்டு மகிழ்ந்தனர். அங்கிருந்த கற்பாறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.



சுமார் 30 நிமிடங்களில் மீண்டும் பயணம் தொடர்ந்தது. அடர்த்தியான மரங்கள் நிறைந்த குகைக்குள் பயணம் செய்வது போல இருந்தது. இவ்வடர்த்தியான காடு மொறமண்டிய காடு எனும் பெயரில் அழைக்கப் படுகிறது. இங்கு அதிகளவில் கருங்காலி மரங்கள் காணப்பட்டன. மதிய உணவு உண்டு சுமார் முக்கால் மணி நேர பயணத்தின் பின் மணல் நிறைந்த ஓர் பள்ளத்தில் வண்டி இறங்கியது. அது தான் கொட்டியாகலைக்கும், கும்புக்கன் ஆற்றுக்கும் இடையில் ஓடும் பெரிய ஆறு. இதன் பெயர் அழகொல்ல ஆறு. மழைகாலங்களில் கபிலித்தைக்கு செல்லும் யாத்திரீகர்களின் வாகனங்களை இந்த ஆற்றில் இறக்கி ஏற்றுவது தான் மிகவும் சவாலாக இருக்குமாம். அப்படிப்பட்ட சவால் மிக்க அழகொல்ல ஆறு இப்போது ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் மணலை மட்டும் தன்னகத்தே கொண்டு அமைதியாகக் காணப்பட்டது.

ஆற்றுப் பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறும் போது எங்கள் விலா எலும்புகள் ஒரு வழியாகி விட்டன என்று தான் சொல்ல வேண்டும். இவ்வாற்றைக் கடந்ததும் பாதையின் மிக ஓரத்தில் கரடுமுரடான பெரிய உடுண்டையான பாறை காணப்பட்டது. எல்லோரும் பெட்டியின் இடது பக்கம் வாருங்கள், வலது பக்கம் பாறை உள்ளது, கவனம், என்றார் சந்தன. எல்லோரும் கவனமாக இடது பக்கம் நகர்ந்தோம். சுமார் 10 அடி உயரமான பாறை பாதையின் ஓரத்திலே காணப்பட்டது. ட்ராக்டர் பேட்டியின் ஓரங்கள் பாறையில் உரசிச் சென்றன. கொஞ்சம் அசந்திருந்தால் பாறை தலையைப் பதம் பார்த்திருக்கும்.


இவ்விடத்தைக் கடந்தவுடன் வலஸ்தெல்ல எனும் காடு அமைந்துள்ளது. இக்காடு கரடிகள் அதிகமாக வாழும் காடு. இக்காட்டில் உள்ள கோங்கெட்டு ஆற்றையும் கடந்தோம். இவ்வாற்றிலும் மணல் மட்டுமே காணப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் பாதையின் ஓரத்தில் சரசரவென்ற சத்தம் கேட்டது. நண்பர் சந்தன பார்த்து விட்டு அதோ சிறுத்தை ஓடுகிறது தெரிகிறதா என்று கேட்டார். பார்த்தோம் மரங்கள் சத்தமாக அசைந்தன. சிறுத்தை ஓடி விட்டது. இப்படித்தான் பாதைக்கு அருகில் சிறுத்தைகள் வருமாம். வண்டிகளின் சத்தம் கேட்டதும் ஓடிவிடுமாம். இப்பகுதியில் கோட்டைச் மதில் சுவர் போன்ற ஆறு, ஏழு அடி உயரத்தில் வேர்களைக் கொண்ட மருத மரங்கள் காணப்பட்டன.


தொடர்ந்து காட்டுக்குள் எமது வண்டிகள் ஓடிக்கொண்டிருந்தன. இடையில் இன்னுமோர் ஆற்று மணலைக் கடந்தோம். அது கரதங்க ஆறு. இவ்விடத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் காட்டுப்பாதை இரண்டாகப் பிரிந்தது. இடது பக்கம் சென்றால் கும்புக்கன் மடத்துறை அம்மன் கோயிலடிக்குச் செல்லலாம் என்றார் நண்பர். நாம் வலது பக்கம் திரும்பிச் சென்றோம். கபிலித்தையை நெருங்கி விட்டோம். பத்து நிமிட நேரத்தில் கந்தக் கடவுளின் கபிலித்தை வனத்தில் உள்ள கும்புக்கன் ஆற்றங்கரையை அடைந்தோம். நேரம் அப்போது சரியாக பிற்பகல் 3.20. சுமார் 5 மணி நேர சவாலான காட்டுப் பயணத்தின் பின் கந்தனின் கபில வனத்தை அடைந்தோம்.  

எல்லோரும் அரோகரா எனும் கோஷத்தோடு ட்ராக்டர் பெட்டிகளில் இருந்து இறங்கினர். இடுப்பு பயங்கர வேதனையைக் கொடுத்தது. உடல் நன்றாக வலித்தது. பல மணி நேரம் கால்களை மடக்கிய நிலையில் அமர்ந்து இருந்ததால் முழங்கால்கள் வலித்தன. பின்னால் வந்த ட்ராக்டர் பெட்டியில் இருந்தவர்கள் தூசியில் குளித்து மஞ்சள் வர்ணத்துடன் இறங்கினர். சிலரைக் கைத்தாங்களாக இறக்கினோம். இத்தனை கஷ்டங்களும், வேதனைகளும் இருந்தாலும் எல்லோர் முகத்திலும் ஓர் ஆனந்தக் களிப்பு தெரிந்தது. அதுதான் கபிலித்தைக் கந்தப் பெருமானின் சந்நிதியை அடைந்து விட்டோம் எனும் மகிழ்ச்சி.




இந்தக் கபில வனத்தில் அப்போது சில அற்புதங்கள் நடக்கும் என  எமக்குத் தெரியவில்லை. இங்கு நாம் பிரசாதங்கள் படைத்து பூஜைகள் செய்ய ஆயத்தமாக இருந்தோம். ஆனால் எம்மால் அவற்றை செய்ய முடியவில்லை. அங்கே திடீரெனத் தோன்றிய ஒருவர் எமக்காக பூஜைகள் செய்வார் என நாம் அப்போது அறிந்திருக்கவில்லை. யார் அவர்?

(மிகுதி நாளை....)

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

Tuesday, June 16, 2020

காட்டின் மத்தியில் ஒரு கந்தசுவாமி கோயில் - கபிலித்தை ஆன்மீகப் பயணம்-பகுதி 3


காட்டின் மத்தியில் ஒரு கந்தசுவாமி கோயில்
கபிலித்தை ஆன்மீகப் பயணம்-பகுதி 3
 

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/176     16 ஜூன் 2020


குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)
 

கபிலித்தைக்கு நண்பர் தேசாந்த சென்று வந்த புகைப்படங்களைப் பார்த்ததும் பிரமிப்பாக இருந்தது. அவருடன் தொடர்பு கொண்டு அதுபற்றிக் கேட்டபோது அந்தப் புகைப்படங்கள் நான் மாரி காலத்தில் சென்ற போது எடுக்கப்பட்டவை. கோடை காலத்தில் சென்ற 2 படங்களும் அதிலே உள்ளன. நீங்கள் கோடை காலத்தில் சென்று வாருங்கள். அதுவே இலகுவானது என்றார்.

நண்பர் தேசாந்த மூலமாக கொட்டியாகலயில் வசிக்கும் சந்தன எனும் நண்பர் அறிமுகமானார். கபிலித்தைக்கு சென்று வருவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் தேசாந்தவுக்கு செய்து கொடுப்பவர் சந்தன.

நாம் கபிலித்தை முருகனை தரிசிக்க இருக்கும் தினத்தை புதிய நண்பர் சந்தனவுக்கு அறிவித்து அதற்குரிய ஏற்பாடுகள் பற்றிக் கேட்டேன். ஒரு ட்ராக்டர் வண்டியில் அதிகப்படியாக 12 பேர் போகலாம் எனவும் அதற்குரிய கட்டணத்தையும் கூறினார். எத்தனை ட்ராக்டர் தேவை எனவும், சமைப்பதற்குரிய பாத்திரங்கள், விறகுகள், காய்கறிகள் மற்றும் பூஜைக்குத் தேவையான பழங்கள், பூக்கள் இப்படி என்ன தேவையோ எல்லாவற்றையும் பெற்றுத் தருவதாக நண்பர் சந்தன கூறினார். ஒரு வேண்டுகோள் பெண்களைக் கூட்டிக் கொண்டு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றார். ஏன், என்ன காரணம் என்று கேட்டேன். பல காரணங்கள் உள்ளன என்றார்.

உடனே நான் மட்டக்களப்பில் உள்ள எமது குருசுவாமியான அப்பா சுவாமியிடம் விபரங்களைத் தெரிவித்தேன். அவர் ஏற்கனவே கபிலித்தை யாத்திரைக்கு போக விருப்பம் தெரிவித்தவர்களோடு கலந்து பேசி ஓர் சனிக்கிழமை இரண்டு ட்ராக்டர் வண்டிகளில் செல்வதற்குரிய யாத்திரீகர்கள் தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே எதிர்பார்ப்போடு இருப்பதால் எல்லோரும் விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
கொட்டியாகல நண்பர் சந்தன மூலம் எல்லா ஏற்பாடுகளையும் செய்தபின், திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு பயணமானேன்.

அதிகாலை மாமங்கேஸ்வரத்தை அடைந்தேன். அங்கே கபிலித்தைக்கு செல்வதற்கு வந்த யாத்திரீகர்கள் அனைவரும் ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். எல்லோரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். நானும் உடனே குளித்து, உடை மாற்றிக் கொண்டேன். எல்லோரும் மாமங்க பிள்ளையாரை வணங்கி, குருசுவாமியிடம் ஆசி பெற்று முடியும் போது திட்டமிட்டபடி பஸ் வண்டி வந்து நின்றது. என்னையும் சேர்த்து மொத்தமாக 23 பேர் காவி உடை அணிந்து,  கதிர்காமத்துக்கு பாதயாத்திரை செல்வது போன்ற தோற்றத்துடன் வண்டியில் ஏறினோம். சரியாக காலை 5.30 மணிக்கு மாமங்கேஸ்வரத்தில் இருந்து எமது கபிலித்தை பயணம் ஆரம்பமானது. 



மட்டக்களப்பில் இருந்து 44 கி.மீ தூரத்தில் உள்ள காரைதீவு சந்தியை சரியாக 7 மணிக்கு அடைந்தோம். அங்கு காலை உணவை உட்கொண்ட பின் மீண்டும் பயணம் தொடர்ந்தது.
சம்மாந்துறை, மல்வத்தை ஊடாக 22 கி.மீ தூரத்தில் உள்ள அம்பாறையை அடைந்தோம். நாம் வந்த பஸ் வண்டிக்கு போக்குவரத்து அனுமதி பெறுவதற்காக அங்கு சுமார் முக்கால் மணி நேரம் நிற்க வேண்டி வந்தது. அங்கிருந்து மீண்டும் பயணம் ஆரம்பமானது. ஹிங்குரானை, தமனை, வட்டினாகல ஊடாக 58 கி.மீ தூரத்தில் உள்ள சியம்பலாண்டுவ சந்தியை அடையும் போது நேரம் 9.40. அங்கிருந்து மொனராகலைக்குச் செல்லும் வீதியில் 8 கி.மீ தூரத்தில் உள்ள கொடயான சந்தியின் வலது பக்கமாக எங்கள் வண்டி திரும்பியது. 

இச்சந்தியில் இருந்து தெற்குப் பக்கத்தில் 19 கி.மீ தூரத்தில் கொட்டியாகல கிராமம் அமைந்துள்ளது. நண்பர் சந்தனவுடன் கையடக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாம் கொடயான சந்திக்கு வந்து விட்ட செய்தியைத் தெரிவித்தேன். அவர் அங்கிருந்து கொட்டியாகலைக்கு வரவேண்டிய வழியை விளக்கினார். அதன்படி எங்கள் வண்டி சென்று கொண்டிருந்தது.

வண்டியின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்து சாரதிக்கு வழிகாட்டிக் கொண்டு வந்தேன். இங்கிருந்து 8 கி.மீ தூரத்தில் அத்திமலை சந்தி காணப்பட்டது. இச்சந்தியின் கிழக்குப் பக்கத்தில் 2 கி.மீ தூரத்தில் அத்திமலை எனும் பழமை வாய்ந்த கிராமம் அமைந்துள்ளது.

இங்கிருந்து தெற்கு நோக்கி கொட்டியாகலைக்கு செல்லும் போது 500 மீற்றர் தூரத்தில் குருகொட மலைக்கு செல்லும் சந்தி காணப்பட்டது. பாதையின் வலது பக்கம் குருகொட மலை தென்பட்டது. இங்கிருந்து ஒரு கி.மீ தூரம் சென்றதும் வலப்பக்கமாக ஓர் பாதை சென்றது. அது அத்திமலைக் குளத்துக்கு செல்லும் பாதை.

அவ்விடத்தைக் கடந்து மேலும் ஒரு கி.மீ தூரம் சென்றதும் விலா ஓயா ஆறு ஓடிக்கொண்டிருந்தது. இந்த ஆறு மொனராகலை மலைப்பகுதியில் உற்பத்தியாகி, அத்திமலைக் குளத்திற்கு நீர் வழங்கி கொட்டியாகலைக்குச் செல்லும் பாதையை ஊடறுத்து, மேலும் மூன்று குளங்களுக்கு நீர் வழங்கி, குருப்பன் ஓடை ஆற்றுடன் இணைந்து, பானமைக் கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. பழைய பாலத்தின்  ஊடாக எங்கள் வண்டி சென்றது.

பாலத்தைக் கடந்து சுமார் 700 மீற்றர் தூரத்தில் வத்தேகம என்னுமிடம் அமைந்திருந்தது. அங்கிருந்து சிறிது தூரத்தில் கொட்டியாகல குளம் காணப்பட்டது. குளத்தைக் கடந்து சிறிது நேரத்தில் சரியாக காலை 10.10 க்கு கொட்டியாகல கிராமத்தை அடைந்தோம். அங்கு நண்பர் சந்தனவும், அவரின் மைத்துனரும், சந்தனவின் நண்பரும் எம்மை வரவேற்றனர். சுமார் இரண்டு மாத காலமாக தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் இருவரும் நேரில் ஒருவரை ஒருவர் பார்த்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.


நாம் காவி வேட்டிகளோடு அங்கு இறங்கியதும் ஊர் மக்கள் எம்மை உற்றுப் பார்த்தனர். அப்போது நண்பர் சந்தன இந்த ஊருக்கு இப்படி காவி உடுப்போடு தமிழர்கள் யாரும் வந்ததில்லை. நீங்கள் தான் முதன் முதலில் வந்துள்ளீர்கள். எனவே தான் எல்லோரும் அப்படிப் பார்க்கிறார்கள் என்றார். இதுவரை ஓரிரு தமிழர்கள் தான் கபிலித்தைக் கோயிலுக்கு வந்துள்ளனர். அதிகளவில் ஒரு குழுவாக வந்தது நீங்கள் மட்டுமே என்றும் நண்பர் கூறினார். எங்களைக் கபிலித்தைக்குக் கூட்டிக் கொண்டு செல்வதை பெருமையாகக் கருதுவதாக சந்தன கூறினார். சந்தனவின் குடும்பத்தவர்கள் எமக்கு என்ன தேவை எனக் கேட்டு எம்மைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது நண்பர் சந்தன “நான் கேட்டுக் கொண்டதன் படி எல்லோரும் ஆண்களே வந்துள்ளீர்கள். மிக நல்லது, ஆனால் எங்கள் ஆட்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார்கள். பெண்களைக் கூட்டிக் கொண்டு வருவார்கள். வந்து சரியாக தங்கள் வழிபாட்டை செய்ய முடியாமல் திரும்பிச் செல்வார்கள்” எனக் கூறினார். அப்போது ஏன் பெண்களைக் கூட்டிக் கொண்டு வரக் கூடாது என்று கேட்டேன். அப்போது அதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக விளங்கினார்.


கபிலித்தை பிரதேசம் மிகப்பெரிய காடு, மிகவும் கஷ்டப்பட்டுத் தான் செல்ல முடியும், பாதைகள் சீரானவையல்ல, 22 கி.மீ தூரம், 4 அல்லது 5 மணித்தியால பயணம், நீங்கள் பயணம் செய்யும் போது கடினத்தை உணர்வீர்கள், போய்ச் சேரும் போது உடல் பயங்கரமாக வலிக்கும், 5 மணித்தியாலம் வண்டி குலுங்கிக் குலுங்கி ஓடி இடுப்பு முறிந்து விடும். வரும் போதும் இதே வலி, வேதனை. ஆண்கள் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். ஆனால் பெண்கள் பாடு பெரும்பாடுதான்.

சில நேரம் திடீரென மழை பெய்யும் இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்யும். காட்டுப் பாதைகள் எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். வாகனங்களில் திரும்பி வர முடியாமல் போகும்.
அடுத்தது காட்டிலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆண்கள் எங்கேயாவது, எப்படியாவது படுத்து எழுந்து வழிபாட்டை முடித்து விட்டு வரலாம். ஆனால் பெண்கள் அப்படியல்ல. எனவே ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அந்தக் கோயிலின் புனிதமே கேட்டுப் போய்விடும். இதுவரை அந்தப் புனிதம் கேட்டு விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.



இப்படிப்பட்ட நிலையில் பெண்களைக் கூட்டிக் கொண்டு வந்தவர் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். அவரால் நிம்மதியாக வழிபாடு செய்ய முடியாது. எனவே தான் கூட்டிக் கொண்டு வருவதைத் தவிர்த்தால் எல்லாமே நல்ல படியாக நடக்கும் என்று கூறி முடித்தார்.
நண்பர் சந்தன 25 வயது மிக்க ஓர் சிங்கள இளம் வாலிபர். இந்த வயதில் ஓர் முதியவரைப் போல, முருகப் பெருமான் மீது இத்தனை பக்தியாக, இத்தனை பக்குவமாக, இந்த விபரங்களைக் விளக்கிக் கூறியபோது மிகவும் வியப்பாக இருந்தது.    
  
சந்தன வீட்டு வாசலில் எமக்காக அவர்களின் இரண்டு ட்ராக்டர்  வண்டிகள் காத்திருந்தன. ட்ராக்டர் பெட்டிகளில் படுக்கை  மெத்தைகள் விரிக்கப்பட்டு, படங்கினால் மூடப்பட்டிருந்தது.
நாம் கொண்டு வந்த அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் பாத்திரங்கள் ஆகியவற்றை பஸ் வண்டியில் இருந்து இறக்கி, ட்ராக்டர் பெட்டிகளில் ஏற்றினோம். 


நாம் கொண்டு வந்த புனித முருக வேலோடு குருசுவாமி முதலாவது பெட்டியில் ஏறினார். அவரைத் தொடர்ந்து ஏனைய யாத்திரீகர்களும் தங்கள் கைப்பைகளுடன் ஏறினர். ஒரு ட்ராக்டர் பெட்டியில் 12 பேரும், அடுத்த பெட்டியில் 11 பேரும் ஏறினோம். சரியாக காலை 10.25 மணிக்கு ட்ராக்டர் வண்டிகள் கபிலித்தை நோக்கிப் புறப்பட்டன.

அன்று 2014 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 2 ஆம் திகதி சனிக்கிழமை. முதன் முதலாக ஒரு தமிழ்ப் பிரதேச, தமிழ் பக்தர் குழு, முழுமையான காவி ஆடைகளுடன், கையில் முருக வேலேந்தி, முழுக்க முழுக்க சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்தை ஊடறுத்து, கபிலித்தை எனும் பெரும் புனித வனத்துக்கு சென்ற இந்தப் புனித பயணம் ஓர் வரலாற்று சிறப்பு மிக்க பயணமாகும்.

(தொடரும்...)         

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை