Saturday, April 18, 2020

அகநானூறில் சிவன் பற்றிக் கூறும் மூன்று பாடல்கள்




அகநானூறில் சிவன் பற்றிக் கூறும்    மூன்று பாடல்கள் 

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/124     19 Dec 2019


அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப் படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப் படுகி றது. நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு. 

பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டு எழுதப்பட்ட இந்நூலைத் தொகுத் தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். மன்னர்கள், அந்தணர், இடையர், பொற்கொல் லர், வணிகர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் களின் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரி கிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப்பட வில்லை.

அகநானூறு குருநில மன்னர்கள் பற்றிய எண்ணற்ற வரலாற் றுச் செய்திகளைத் தருகிறது. அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற் றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் 20,25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அகநானூற்றில் சிவன் பற்றியும், சிவன் கோயில் இருந்த இடம் பற்றியும் குறிப்பிடும் பாடல்கள்

 1. கடவுள் வாழ்த்துப் பாடல்-கார் விரி கொன்றை

சிவன் பற்றிக் குறிப்பிடும் கடவுள் வாழ்த்துப் பாடல்

பாடியவர் : பெயர் குறிப்பிடப் படவில்லை

கார் விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
மார்பி னஃதே மை இல் நுண்ஞாண்
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டுக்,
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு அத் தோலா தோற்கே;
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே
செவ்வான் அன்ன மேனி, அவ்வான்
இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிற்று,
எரியகைந் தன்ன அவிர்ந்து விளங்கு புரிசடை,
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொன்முறை மரபின்,
வரிகிளர் வயமான் உரிவை தைஇய,
யாழ்கெழு மணிமிடற்று, அந்தணன்
தாவில் தாள்நிழல் தவிர்ந் தன்றால் உலகே.
12
(அகநானூறு- களிற்றுயானை நிரை-கடவுள் வாழ்த்து)

கடவுள் வாழ்த்துப் பாடலின் விளக்கவுரை:
கார்காலத்தில் கட்டவிழ்ந்து மலரும் கொன்றையின் பொன்னைப் போன்ற புதுமலர்களினால் சேர்ந்த தாரினை உடையவன், கட்டிய மாலையினை உடையவன், தொடுத்த கண்ணியினையும் உடைய வன் சிவபிரான். குற்றமில்லாத நுண்மையான பூணூல் அவன் மார் பினிடத்தே விளங்கும். அவன் நெற்றியிடத்தோ இமையாத கண்,

அவன் கைகளில் விளங்குவனவோ குந்தாலியும், மழுவாயுதமும். அவை பகைவரை வென்ற சிறப்பும் உடையன. தோல்வியே அறியா தவன் அவன். அத்தகைய அவனுக்கு முத்தலை வேலும் உண்டு. அவன் ஏறி ஊர்ந்தது ஆன் ஏறு, அவனில் ஒரு பகுதியாகச் சேர்ந்தி ருப்பவள் உமையம்மை. செவ்வானத்தைப் போன்ற ஒளியுடைய செந்நிறம் வாய்ந்தது அவன் திருமேனி,

அவ்வானத்திலே விளங்கும் பிறை நிலவினைப் போன்ற வளைந்த வெண்மையான கூரிய பற்கள் அவனுடையவை. நெருப்பு கப்பு விட்டு எரிந்தாற் போன்று விரிந்து, இடையீடு பட்டு விளங்குவது அவனுடைய முறுக்குண்ட செஞ்சடை. வளர்ந்து முதிராத இளந் திங்களுடன் கூடியதாக அவன் சென்னி ஒளிவீசும். மூப்பே இல்லாத அமரர்களும், முனிவர்களும், மற்றையோரும்,

பிறர் யாவரும் அறிய முடியாத, அத்துணைப் பழமையான தன்மை யினை உடையவன் அவன். கோடுகளுடன் விளங்கும் வலிய புலி யின் தோலினை உடுத்தவன். யாழ் இசை முழங்குகின்ற நீலமணிக் கழுத் தினன். உயிர்கள் பால் அளப்பருங் கருணையை உடைய அந்தணன் அச்சிவபெருமான். அவனுடைய அழிதல் இல்லாத திரு வடி நிழலையே உலகம் தனக்குக் காப்பாகக் கொண்டு என்றும் தங்கியிருக்கிறது. 13

சிவனின் ஆலமரக் கோயில் பற்றிய பாடல்

நான்கு வேதங்களை அருளிச் செய்த முக்கண்ணனான சிவ னின் ஆலமர முற்றத்தில் இருக்கும் கோயில் பற்றி ஓர் அகநானூறு பாடல் கூறுகிறது. இப்பாடலின் மூலம் சங்க காலத்தில் சிவனுக்கு மரத்தடியின் கீழ் கோயில்கள் இருந்துள்ளன என்பதை அறியக் கூடியதாக உள்ளது. இது போன்று சிவபெருமானுக்கு கோயில்கள் இருந்தமை பற்றி மேலும் சில சங்ககால நூல்களின் பாடல்கள் கூறு கின்றன. ஆலமரக் கோயில் பற்றிக் கூறும் அகநானூறு பாடலின் விபரம் பின்வருமாறு,

2. நான் மறை முது நூல் முக்கட் செல்வன்

முக்கண்ணனான சிவனின் ஆலமர முற்றத்தில் இருக்கும் கோயில் பற்றிய பாடல்

பாடியவர்: பரணர்

ஞாலம் நாளும் நலம்கெழு நல்இசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்,
ஆல முற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
(அகநானூறு - 181 : 15-19)

விளக்கவுரை:
உலகம் எல்லாம் புகழ்மணம் பரவிய, நன்மை பொருந்திய, நற்புக ழையுடைய, நான்கு மறைகளாகிய பழைய நூலினை அருள் செய்த முக் கண்களையுடைய பரமனது ஆலமுற்றம் என்னுமிடத்திலே அழகு பெறு மாறு இயற்றப் பெற்ற பொய்கைகள் சூழ்ந்துள்ள பொழி லின் கண்ணே, சிற்றிலிழைத்து விளையாடும் சிறுமியர்களது கையாற் செய்யப் பெற்ற மணற்பாவைகள் விளங்கும் துறையினி டத்தே சென்று தங்கும்.

பி.டி.சீனிவாச அய்யங்கார் விளக்கவுரை:
உலகமெல்லாம் சென்று பரவும், நலம் தரும் நல்ல புகழ் வாய்ந்த நான்மறையாகிய முதுபெரும் நூலை அருளிய, முக்கண் கடவுள் வீற்றிருக்கும் ஆலமரம் நிற்கும் மன்றம்...  

3. வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து

சிவனையும், சக்தியையும் இருபெரும் தெய்வங்கள் என வர்ணி க்கும் பாடல். இருபெரும் தெய்வங்கள் என்பது சிவனும், திருமாலும் எனவும் சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

பாடியவர்: மதுரைக் கண்ணத்தனார்

வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து
உருவுடன் இயைந்த தோற்றம் போல
அந்தி வானமொடு கடலணி கொளாஅ
வந்த மாலை பெயரின் மற்றிவள்
பெரும்புலம் பினளே தெய்ய அதனால்,
(அகநானூறு- நித்திலக்கோவை- 360 : 6-10)

விளக்கவுரை:
மாலைக் காலத்துச் செக்கர் வானமும், நீலக்கடலும் அடிவானத்து ஒருங்கே இணைந்திருக்கும் காட்சியைச் செம்மேனியனான சிவ பிரானும், நீலமேனியின்ளான அம்மையும் உருவால் ஒன்றாகிப் பொருந் தியிருக்கும் தன்மை போலிருந்தது என்கின்ற நயத்தினை அறிந்து இன்புறுக.

பலவாகிய பூக்களையுடைய குளிர்ச்சியான பொழிலினிடத்தே பகற் போதெல்லாம் தலைவியுடனே கூடியிருந்து கழித்தனை. ஒற்றைச் சக்க ரத்தினைக் கொண்ட தேரினை யுடையவன் ஞாயிறாகிய அழ கிய செல்வன், அவன் மேற்றிசைக் கண்ணதாகிய பெரிய மலையிற் சென்று மறைந்தனன். வளைந்த கழியிலேயுள்ள தண்ணிய சேற் றிலே செறிந் துள்ள திரண்ட தண்டினையுடைய நெய்தற்பூவின் நுண்ணிய தாதினை உண்ட வண்டினங்களும் அதனைவிட்டு நீங் கின. அஞ்சத்தகும், மிக்க வலிமையினையுடைய இரண்டு பெருந் தெய்வங்களான சிவமும் சக்தி யும், ஒர் உருவத்தே உடன் பொருந் திச் சிவசக்தியாக விளங்குகின்ற தோற்றத்தைப் போல, அந்திச் செவ்வானத்துடன் நீலக்கடலும் இணை ந்து அழகு கொண்டது. இங்ஙனமாக வந்த மாலைக் காலத்திலே, நீயும் நீங்கிச் சென்றனை யானால் இவள் பெரிதும் தனிமை கொண்டவளாகி வருந்துவாள்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை 

No comments:

Post a Comment