Tuesday, June 16, 2020

காட்டின் மத்தியில் ஒரு கந்தசுவாமி கோயில் - கபிலித்தை ஆன்மீகப் பயணம்-பகுதி 3


காட்டின் மத்தியில் ஒரு கந்தசுவாமி கோயில்
கபிலித்தை ஆன்மீகப் பயணம்-பகுதி 3
 

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/176     16 ஜூன் 2020


குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)
 

கபிலித்தைக்கு நண்பர் தேசாந்த சென்று வந்த புகைப்படங்களைப் பார்த்ததும் பிரமிப்பாக இருந்தது. அவருடன் தொடர்பு கொண்டு அதுபற்றிக் கேட்டபோது அந்தப் புகைப்படங்கள் நான் மாரி காலத்தில் சென்ற போது எடுக்கப்பட்டவை. கோடை காலத்தில் சென்ற 2 படங்களும் அதிலே உள்ளன. நீங்கள் கோடை காலத்தில் சென்று வாருங்கள். அதுவே இலகுவானது என்றார்.

நண்பர் தேசாந்த மூலமாக கொட்டியாகலயில் வசிக்கும் சந்தன எனும் நண்பர் அறிமுகமானார். கபிலித்தைக்கு சென்று வருவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் தேசாந்தவுக்கு செய்து கொடுப்பவர் சந்தன.

நாம் கபிலித்தை முருகனை தரிசிக்க இருக்கும் தினத்தை புதிய நண்பர் சந்தனவுக்கு அறிவித்து அதற்குரிய ஏற்பாடுகள் பற்றிக் கேட்டேன். ஒரு ட்ராக்டர் வண்டியில் அதிகப்படியாக 12 பேர் போகலாம் எனவும் அதற்குரிய கட்டணத்தையும் கூறினார். எத்தனை ட்ராக்டர் தேவை எனவும், சமைப்பதற்குரிய பாத்திரங்கள், விறகுகள், காய்கறிகள் மற்றும் பூஜைக்குத் தேவையான பழங்கள், பூக்கள் இப்படி என்ன தேவையோ எல்லாவற்றையும் பெற்றுத் தருவதாக நண்பர் சந்தன கூறினார். ஒரு வேண்டுகோள் பெண்களைக் கூட்டிக் கொண்டு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றார். ஏன், என்ன காரணம் என்று கேட்டேன். பல காரணங்கள் உள்ளன என்றார்.

உடனே நான் மட்டக்களப்பில் உள்ள எமது குருசுவாமியான அப்பா சுவாமியிடம் விபரங்களைத் தெரிவித்தேன். அவர் ஏற்கனவே கபிலித்தை யாத்திரைக்கு போக விருப்பம் தெரிவித்தவர்களோடு கலந்து பேசி ஓர் சனிக்கிழமை இரண்டு ட்ராக்டர் வண்டிகளில் செல்வதற்குரிய யாத்திரீகர்கள் தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே எதிர்பார்ப்போடு இருப்பதால் எல்லோரும் விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
கொட்டியாகல நண்பர் சந்தன மூலம் எல்லா ஏற்பாடுகளையும் செய்தபின், திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு பயணமானேன்.

அதிகாலை மாமங்கேஸ்வரத்தை அடைந்தேன். அங்கே கபிலித்தைக்கு செல்வதற்கு வந்த யாத்திரீகர்கள் அனைவரும் ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். எல்லோரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். நானும் உடனே குளித்து, உடை மாற்றிக் கொண்டேன். எல்லோரும் மாமங்க பிள்ளையாரை வணங்கி, குருசுவாமியிடம் ஆசி பெற்று முடியும் போது திட்டமிட்டபடி பஸ் வண்டி வந்து நின்றது. என்னையும் சேர்த்து மொத்தமாக 23 பேர் காவி உடை அணிந்து,  கதிர்காமத்துக்கு பாதயாத்திரை செல்வது போன்ற தோற்றத்துடன் வண்டியில் ஏறினோம். சரியாக காலை 5.30 மணிக்கு மாமங்கேஸ்வரத்தில் இருந்து எமது கபிலித்தை பயணம் ஆரம்பமானது. 



மட்டக்களப்பில் இருந்து 44 கி.மீ தூரத்தில் உள்ள காரைதீவு சந்தியை சரியாக 7 மணிக்கு அடைந்தோம். அங்கு காலை உணவை உட்கொண்ட பின் மீண்டும் பயணம் தொடர்ந்தது.
சம்மாந்துறை, மல்வத்தை ஊடாக 22 கி.மீ தூரத்தில் உள்ள அம்பாறையை அடைந்தோம். நாம் வந்த பஸ் வண்டிக்கு போக்குவரத்து அனுமதி பெறுவதற்காக அங்கு சுமார் முக்கால் மணி நேரம் நிற்க வேண்டி வந்தது. அங்கிருந்து மீண்டும் பயணம் ஆரம்பமானது. ஹிங்குரானை, தமனை, வட்டினாகல ஊடாக 58 கி.மீ தூரத்தில் உள்ள சியம்பலாண்டுவ சந்தியை அடையும் போது நேரம் 9.40. அங்கிருந்து மொனராகலைக்குச் செல்லும் வீதியில் 8 கி.மீ தூரத்தில் உள்ள கொடயான சந்தியின் வலது பக்கமாக எங்கள் வண்டி திரும்பியது. 

இச்சந்தியில் இருந்து தெற்குப் பக்கத்தில் 19 கி.மீ தூரத்தில் கொட்டியாகல கிராமம் அமைந்துள்ளது. நண்பர் சந்தனவுடன் கையடக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாம் கொடயான சந்திக்கு வந்து விட்ட செய்தியைத் தெரிவித்தேன். அவர் அங்கிருந்து கொட்டியாகலைக்கு வரவேண்டிய வழியை விளக்கினார். அதன்படி எங்கள் வண்டி சென்று கொண்டிருந்தது.

வண்டியின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்து சாரதிக்கு வழிகாட்டிக் கொண்டு வந்தேன். இங்கிருந்து 8 கி.மீ தூரத்தில் அத்திமலை சந்தி காணப்பட்டது. இச்சந்தியின் கிழக்குப் பக்கத்தில் 2 கி.மீ தூரத்தில் அத்திமலை எனும் பழமை வாய்ந்த கிராமம் அமைந்துள்ளது.

இங்கிருந்து தெற்கு நோக்கி கொட்டியாகலைக்கு செல்லும் போது 500 மீற்றர் தூரத்தில் குருகொட மலைக்கு செல்லும் சந்தி காணப்பட்டது. பாதையின் வலது பக்கம் குருகொட மலை தென்பட்டது. இங்கிருந்து ஒரு கி.மீ தூரம் சென்றதும் வலப்பக்கமாக ஓர் பாதை சென்றது. அது அத்திமலைக் குளத்துக்கு செல்லும் பாதை.

அவ்விடத்தைக் கடந்து மேலும் ஒரு கி.மீ தூரம் சென்றதும் விலா ஓயா ஆறு ஓடிக்கொண்டிருந்தது. இந்த ஆறு மொனராகலை மலைப்பகுதியில் உற்பத்தியாகி, அத்திமலைக் குளத்திற்கு நீர் வழங்கி கொட்டியாகலைக்குச் செல்லும் பாதையை ஊடறுத்து, மேலும் மூன்று குளங்களுக்கு நீர் வழங்கி, குருப்பன் ஓடை ஆற்றுடன் இணைந்து, பானமைக் கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. பழைய பாலத்தின்  ஊடாக எங்கள் வண்டி சென்றது.

பாலத்தைக் கடந்து சுமார் 700 மீற்றர் தூரத்தில் வத்தேகம என்னுமிடம் அமைந்திருந்தது. அங்கிருந்து சிறிது தூரத்தில் கொட்டியாகல குளம் காணப்பட்டது. குளத்தைக் கடந்து சிறிது நேரத்தில் சரியாக காலை 10.10 க்கு கொட்டியாகல கிராமத்தை அடைந்தோம். அங்கு நண்பர் சந்தனவும், அவரின் மைத்துனரும், சந்தனவின் நண்பரும் எம்மை வரவேற்றனர். சுமார் இரண்டு மாத காலமாக தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் இருவரும் நேரில் ஒருவரை ஒருவர் பார்த்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.


நாம் காவி வேட்டிகளோடு அங்கு இறங்கியதும் ஊர் மக்கள் எம்மை உற்றுப் பார்த்தனர். அப்போது நண்பர் சந்தன இந்த ஊருக்கு இப்படி காவி உடுப்போடு தமிழர்கள் யாரும் வந்ததில்லை. நீங்கள் தான் முதன் முதலில் வந்துள்ளீர்கள். எனவே தான் எல்லோரும் அப்படிப் பார்க்கிறார்கள் என்றார். இதுவரை ஓரிரு தமிழர்கள் தான் கபிலித்தைக் கோயிலுக்கு வந்துள்ளனர். அதிகளவில் ஒரு குழுவாக வந்தது நீங்கள் மட்டுமே என்றும் நண்பர் கூறினார். எங்களைக் கபிலித்தைக்குக் கூட்டிக் கொண்டு செல்வதை பெருமையாகக் கருதுவதாக சந்தன கூறினார். சந்தனவின் குடும்பத்தவர்கள் எமக்கு என்ன தேவை எனக் கேட்டு எம்மைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது நண்பர் சந்தன நான் கேட்டுக் கொண்டதன் படி எல்லோரும் ஆண்களே வந்துள்ளீர்கள். மிக நல்லது, ஆனால் எங்கள் ஆட்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார்கள். பெண்களைக் கூட்டிக் கொண்டு வருவார்கள். வந்து சரியாக தங்கள் வழிபாட்டை செய்ய முடியாமல் திரும்பிச் செல்வார்கள் எனக் கூறினார். அப்போது ஏன் பெண்களைக் கூட்டிக் கொண்டு வரக் கூடாது என்று கேட்டேன். அப்போது அதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக விளங்கினார்.


கபிலித்தை பிரதேசம் மிகப்பெரிய காடு, மிகவும் கஷ்டப்பட்டுத் தான் செல்ல முடியும், பாதைகள் சீரானவையல்ல, 22 கி.மீ தூரம், 4 அல்லது 5 மணித்தியால பயணம், நீங்கள் பயணம் செய்யும் போது கடினத்தை உணர்வீர்கள், போய்ச் சேரும் போது உடல் பயங்கரமாக வலிக்கும், 5 மணித்தியாலம் வண்டி குலுங்கிக் குலுங்கி ஓடி இடுப்பு முறிந்து விடும். வரும் போதும் இதே வலி, வேதனை. ஆண்கள் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். ஆனால் பெண்கள் பாடு பெரும்பாடுதான்.

சில நேரம் திடீரென மழை பெய்யும் இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்யும். காட்டுப் பாதைகள் எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். வாகனங்களில் திரும்பி வர முடியாமல் போகும்.
அடுத்தது காட்டிலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆண்கள் எங்கேயாவது, எப்படியாவது படுத்து எழுந்து வழிபாட்டை முடித்து விட்டு வரலாம். ஆனால் பெண்கள் அப்படியல்ல. எனவே ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அந்தக் கோயிலின் புனிதமே கேட்டுப் போய்விடும். இதுவரை அந்தப் புனிதம் கேட்டு விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.



இப்படிப்பட்ட நிலையில் பெண்களைக் கூட்டிக் கொண்டு வந்தவர் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். அவரால் நிம்மதியாக வழிபாடு செய்ய முடியாது. எனவே தான் கூட்டிக் கொண்டு வருவதைத் தவிர்த்தால் எல்லாமே நல்ல படியாக நடக்கும் என்று கூறி முடித்தார்.
நண்பர் சந்தன 25 வயது மிக்க ஓர் சிங்கள இளம் வாலிபர். இந்த வயதில் ஓர் முதியவரைப் போல, முருகப் பெருமான் மீது இத்தனை பக்தியாக, இத்தனை பக்குவமாக, இந்த விபரங்களைக் விளக்கிக் கூறியபோது மிகவும் வியப்பாக இருந்தது.    
  
சந்தன வீட்டு வாசலில் எமக்காக அவர்களின் இரண்டு ட்ராக்டர்  வண்டிகள் காத்திருந்தன. ட்ராக்டர் பெட்டிகளில் படுக்கை  மெத்தைகள் விரிக்கப்பட்டு, படங்கினால் மூடப்பட்டிருந்தது.
நாம் கொண்டு வந்த அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் பாத்திரங்கள் ஆகியவற்றை பஸ் வண்டியில் இருந்து இறக்கி, ட்ராக்டர் பெட்டிகளில் ஏற்றினோம். 


நாம் கொண்டு வந்த புனித முருக வேலோடு குருசுவாமி முதலாவது பெட்டியில் ஏறினார். அவரைத் தொடர்ந்து ஏனைய யாத்திரீகர்களும் தங்கள் கைப்பைகளுடன் ஏறினர். ஒரு ட்ராக்டர் பெட்டியில் 12 பேரும், அடுத்த பெட்டியில் 11 பேரும் ஏறினோம். சரியாக காலை 10.25 மணிக்கு ட்ராக்டர் வண்டிகள் கபிலித்தை நோக்கிப் புறப்பட்டன.

அன்று 2014 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 2 ஆம் திகதி சனிக்கிழமை. முதன் முதலாக ஒரு தமிழ்ப் பிரதேச, தமிழ் பக்தர் குழு, முழுமையான காவி ஆடைகளுடன், கையில் முருக வேலேந்தி, முழுக்க முழுக்க சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்தை ஊடறுத்து, கபிலித்தை எனும் பெரும் புனித வனத்துக்கு சென்ற இந்தப் புனித பயணம் ஓர் வரலாற்று சிறப்பு மிக்க பயணமாகும்.

(தொடரும்...)         

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

No comments:

Post a Comment