Wednesday, April 29, 2020

தமிழ் மன்னன் எல்லாளனின் பலம்வாய்ந்த விஜித்தநகரக் கோட்டை



தமிழ் மன்னன் எல்லாளனின் பலம்வாய்ந்த  விஜித்தநகரக்  கோட்டை


இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களில் மிகவும் பலம் வாய்ந்த கோட்டையைக் கட்டிய இரண்டு மன்னர்களில் ஒருவன் எல்லாளன்

 என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                 
 NKS/154      28 April 2020
http://nksthiru.blogspot.com/2020/04/blog-post_41.html



எல்லாள மன்னனின் கோட்டையின் பிரதான வாயில்-இருமலைகளுக்கிடையில் அமைந்திருந்த இடம்

2000 வருடங்களுக்கு முன்பு இலங்கையை 44 வருடங்கள் ஆட்சி செய்த தமிழ் மன்னன் எல்லாளனின் சுவடுகளைத் தேடி இலங்கையின் முதலாவது தலைநகரான அனுராதபுரத்துக்குச் சென்றேன். அங்கு எல்லாள மன்னனின் சுவடுகள் காணப்பட்ட சில இடங்களுக்குச் சென்று ஆராய்ந்த பின் அங்கிருந்து திரும்பும் வழியில் எல்லாள மன்னனின் முக்கிய அடையாச் சின்னமொன்று இருக்கும் இடத்திற்கும் சென்று ஆய்வுகளை நடத்தவேண்டும் என முடிவு செய்தேன். அந்த அடையாளச் சின்னம் தான் விஜித்தநகரக் கோட்டை. எல்லாள மன்னனின் 32 koட்டைகளில் மிகவும் பலம் வாய்ந்த கோட்டை. 

விஜித்தநகரம் தற்போது விஜித்தபுர என அழைக்கப் படுகிறது. கல்குளம், திரப்பனை, மருதங்கடவளை, தோணியாகல் ஆகிய இடங்கள் ஊடாக தம்புள்ளைக்கு செல்லும் வீதியில் தோணியாகல் வரை சென்று அங்கிருந்து விஜித்தபுரத்திற்கு செல்ல வேண்டும். செல்லும் வழியில் தோணியாகல, இஹலகம ஆகிய சந்திகளில் இருந்த வழிப்பிள்ளையாரையும் வணங்கிச் சென்றேன்.

அனுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களைக் கொண்ட வடமத்திய  மாகாணத்தில் சந்தி சந்திக்கு வழிப் பிள்ளையார் கோயில்களைக் காணலாம். ஏனெனில் நமது பிள்ளையார் தான் வடமத்திய மாகாணத்தின் காவல் தெய்வம். இலங்கையில் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களிலும் சிங்கள மக்கள் பெரும்பான்மை யாக வாழ்கிறார்கள். இவ்வேழு மாகாணங்களிலும் ஏழு வெவ்வேறு காவல் தெய்வங்களை சிங்கள மக்கள் வழி படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இஹளகம சந்தியில் இருந்து மேலும் சிறிது தூரம் முன்னோக்கிச் சென்ற போது பிரசித்தி பெற்ற யோத எல கால்வாய் காணப்பட்டது. தாதுசேனன் மன்னன் கட்டிய கலாவெவ குளத்தில் அதி வடமுனையில் இருந்து, வடமேற்குப் பக்கமாக நீரை எடுத்துச் செல்லும் பண்டைய கால்வாயே யோத எல என்றழைக்கப்படுகிறது. இலங்கையை ஆண்ட தாதுசேன மன்னனால் பொ.ஆ. 459 ஆம் ஆண்டு இக்கால்வாய் வெட்டப்பட்டது. கலாவெவ குளத்திலிருந்து அனுராதபுரத்தில் உள்ள திஸ்ஸா வாவி குளத்திற்கு நீரைக் கொண்டு செல்வத ற்காக 87 கி.மீ நீளத்திற்கு இக்கால்வாய் வெட்டப்பட்டது.

கால்வாயைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் நான் தேடிவந்த விஜித்தபுரியை அடைந்தேன். விஜித்தபுரி கலாவெவ குளத்தின் வடபகுதியில் அமைந்துள்ள ஓர் சிறிய ஊர்.  அங்கு பிரசித்தி பெற்ற இடம் விஜித்தபுர ரஜமகா விகாரை எனும் பெளத்த வழிபாட்டுத் தலமாகும். 

அவ்விடத்தை நான் வந்து சேரும் போது நேரம் சரியாக மாலை 4.20 மணி. இருள் சூழ்வதற்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்களே உள்ளன. அதற்குள் எல்லாள மன்னனின் கோட்டையை முழுமையாக ஆராய்ந்து விட வேண்டும் எனும் ஆர்வத்தோடு விகாரையின் முன்பக்கம் இருந்த வாகன தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த சிலரிடம் விசாரித்தேன். அவர்கள் விஜித்தபுரி கோட்டை இருந்த இடம் இதுதான் என்று விகாரை வளாகத்தைக் காட்டினர். 

வாகனத் தரிப்பிடத்தில் ஓர் பண்டைய கட்டிட இடிபாடு காணப்பட்டது. செவ்வக வடிவில் கருங்கல்லில் அமைக்கப் பட்ட கட்டிடத்தின் அத்திவாரமும், நிறுத்தி வைக்கப்பட்ட சில தூண்களும், உடைந்து கீழே விழுந்த நிலையில் சில தூண்களின் துண்டுகளும்  அவ்விடத்தில் காணப்பட்டன. அவற்றைப் பார்த்ததும் கோட்டை  இருந்த இடம் இதுவாகத்தான் இருக்கும் என்பதை யூகித்துக் கொண்டேன்.

பிரதான வாயில் வழியாக விகாரை வளாகத்திற்குள் நுழைந்தேன். அங்கு பெளத்த தூபி, சிலைமனை, சிறிய விஷ்ணு கோயில், பிக்குகள் விடுதி, அரச மரம் ஆகியவை மட்டுமே காணப்பட்டன. இவை எல்லாமே அண்மையில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடங்களாகத் தெரிந்தன.

வைரவர் சிற்பம் கிடைக்கப்பெற்ற கட்டிட இடிபாடு

விகாரை வளாகத்தின் பின் பக்கம் மட்டும் ஓர் பண்டைய கட்டிடத்தின் சிதைவுகள் காணப்பட்டன. சதுர வடிவில் மூன்று அடி உயரமான கருங்கல் அத்திவாரமும், வாசல் படியும், நிறுத்தி வைக்கப்பட்ட சில தூண்கள் மட்டுமே அவ்விடத்தில் காணப்பட்டன. இவற்றின் அருகில் இருந்த தூபியின் முன் பக்கம் இரண்டு காவற்கல் சிற்பங்கள் காணப்பட்டன. இவை ஓர் முனிவரின் வடிவம் போல் தெரிந்தது. வேறு ஒரு இடத் தில் நாக சிற்பமும், வைரவர் சிற்பமும், மேலும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட சில தூண்களும் காணப்பட்டன. இவை யாவும் எல்லாள மன்னனின் கோட்டையின் உள்ளே இருந்த கட்டிடத்தின் சுவடுகளாகும். விகாரை வளாகம் முழுவதும் சுற்றி வந்தேன். ஆனால் நான் தேடிவந்த எல்லாளனின் கோட்டை இடிபாடுகளை எங்கு தேடியும் காணக் கிடைக்கவில்லை. கோட்டை இருந்தமைக் கான எந்த சுவடுகளையும் காணவில்லை. அதற்குள் நேரம் 6 மணியை நெருங்கி விட்டது. 

பழமை வாய்ந்த நாக சிற்பத்தின் உடைந்த துண்டுகள்

இருப்பினும் நம்பிக்கையோடு அங்கிருந்த பிக்குவிடம் கேட்டேன். விஜித்தபுரி கோட்டை இவ்விடத்தில்  தான் இருந்த தாக அறிந்தேன். ஆனால் அதன் இடிபாடுகள் எதையும் காணவில்லையே, அவை எங்கே உள்ளன எனக் கேட்டேன். அப்போது பிக்கு கோட்டை இங்கு தான் இருந்தது, ஆனால் அவை பற்றிய விபரங்களை பெரிய சாதுவிடம் தான் கேட்க வேண்டும் எனக் கூறினார். உடனே நான் அவரை பார்க்க முடியுமா எனக் கேட்டபோது, அவர்  பிரதம விகாராதிபதி இருக்கும் ஆவாச கெயவுக்கு என்னைக் கூட்டிச் சென்றார். அங்கே பிரதம பிக்குவை வணங்கி, அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு விஜித்தபுரி கோட்டை பற்றிக் கேட்டேன். அவர் கோட்டை பற்றிய சில  விபரங்களைக் கூறினார்.

எல்லாளனின் விஜித்தநகரக் கோட்டை போரின் போதே முற்றாக அழிந்து விட்டது. மன்னன் துட்டகைனுனு நான்கு  மாதங்கள் கடும் போர் புரிந்தே இந்தக் கோட்டை யைக் கைப்பற்றினான். அவ்வளவு பலம் வாய்ந்த கோட்டை. மன்னன் போரின் போது தனது வாளைக் கூர்மையாக்க பயன்படுத்திய சாணைக்கல் இன்றும் உள்ளது. துட்ட கைமுனு இக்கோட்டையைக் கைப்பற்றிய பின் இவ் விடத்தில் ஓர் தூபியைக் கட்டினான். அதன் பின்பு அந்தத் தூபி பராக்கிரமபாகு மன்னனால் புனரமைக்கப்பட்டது. அதன் பின்பு 19 ஆம் நூற்றண்டிலேயே இப்போதுள்ள ஏனைய கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஆனால் கோட்டையின் வாசல் மட்டும் எஞ்சியுள்ளது எனக் கூறி, வாருங்கள் காட்டுகிறேன் என்று என்னை முன் பக்கம் அழைத்துச் சென்றார். மகிழ்ச்சியும் ஆவலும் அதிகரித்த நிலையில் கோட்டை வாசலைப் பார்க்க பிரதம பிக்குவோடு  வெளியே வந்தேன். அவர் விகாரை வாசல்  பக்கத்தைக் காட்டி, அதோ அதுதான் கோட்டை வாசல் என்றார். பிக்கு காட்டிய பக்கம் பார்த்த போது ஆச்சரியம் அடைந்தேன்.

அது பாதையின் அடுத்த பக்கம்  அமைந்திருந்த இரட்டை மலைகள். ஒரே அளவிலான இரண்டு மலைகளுக்கும் இடையில் ஓர் பிளவு போன்ற அடிவாரம் காணப்பட்டது. அப்பிளவு தான் கிழக்குக் கோட்டை வாசலாகப் பயன் படுத்தப்பட்டுள்ளது. இம் மலைகள் ஒவ்வொன்றும் சுமார் 400 மீற்றர் நீளமும் 100 மீற்றர் அகலமும் கொண்ட சிறிய மலைகளாகும். 

தமிழர் பாரம்பரியத்தின் முக்கிய புராதன சின்னங்களில் ஒன்றுதான் இந்த விஜித்தநகரக் கோட்டை. இக்கோட்டை பொ.ஆ.மு. 145-101 வரையான 44 வருட காலப்பகுதியில் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த தமிழ் மன்னன் எல்லாளனின் பலம் வாய்ந்த, மிக முக்கிய கோட்டையாக விளங்கியது. 

விஜித்த நகரக் கோட்டையில் நான்கு பக்கங்களிலும் நான்கு வாசல்கள் இருந்தன. இவற்றில் பிரதான வாசலாக இந்த இரு மலைகளுக்கிடையிலான கிழக்கு வாசலே விளங்கியுள்ளது. இதைத் தவிர தெற்கு வாசலும் முக்கிய வாசலாக இருந்து ள்ளது. கிழக்குப் பக்கம் மலைகள் அரணாக இருந்துள்ள அதேவேளை, ஏனைய மூன்று பக்கங்களிலும் மூன்று அகழி கள் அரண்களாக அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் உள்ளே கற்களைக் கொண்டு 18 முழ உயரமான கோட்டைச் சுவர் கட்டப் பட்டிருந்தது. நான்கு வாசல்களிலும் பலமான இரும்புக் கதவுகள் அமைந்து வாசல்கள் பாதுகாக்கப் பட்டிருந்தன. கோட்டை வாசல்களில் காவற் கோபுரங்கள் இருந்தன.

எல்லாள மன்னனின் பல கோட்டைகள் மகாவலி கங்கைக் கரையிலேயே அமைந்திருந்தன. இக்கோட்டைகளை துட்ட கைமுனுவின் படைகள் கைப்பற்றிய பின் அதிலிருந்து தப்பிய எல்லாளனின் தமிழ்ப் படையினர் விஜித்த நகர கோட்டைக்கே வந்து சேர்ந்தனர்.

துட்டகைமுனுவின் பத்து  ராட்சத படைத் தளபதிகளில் வேலுசுமணன் என்பவன் விஜித்த நகரக் கோட்டையின் கிழக்கு வாசலில் குதிரைப் படையுடன் நின்று எல்லாளனின் தமிழர் படையுடன் போர் புரிந்தான். கந்துலன், நந்த மித்திரன், சூரநிமலன் ஆகிய ராட்சத தளபதிகள் தெற்கு வாசலிலும், மகாசேனன், கோதன், தேரபுத்திரன் ஆகியோர் ஏனைய வாசல்களிலும் நின்று தமிழர்களுடன் போர் புரிந்தனர். இவ்வாறு நான்கு மாதங்கள் போரிட்ட பின்பே எல்லாள மன்னனின் விஜித்த நகர் கோட்டையை துட்டகைமுனுவின் படைகளால் கைப்பற்ற முடிந்தது.

மகாவம்சத்தில் இக்கோட்டை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லாள மன்னனின் 32 கோட்டைகளில் 32 வது கோட்டையே விஜித்தநகரக் கோட்டை எனவும், ரோகனை இராச்சியத்தில் இருந்து படைதிரட்டி வந்த துட்டகைமுனுவின் படைகள் 31 கோட்டைளைக் கைப்பற்றிய பின்விஜித்த நகருக்கு வந்து 4 மாதங்கள் போராடிய பின்பே இக்கோட்டையைக் கைப் பற்றி,  பின்பு இங்கிருந்து அனுராதபுரம் சென்றதாகவும்  மகா வம்சம் கூறுகிறது.

 விஜித்த நகரக் கோட்டையை துட்டகாமினியின் படைகள் முற்றுகையிட்ட போது தான் எல்லாளன் இந்தியாவிற்கு ஓலை அனுப்பி தன் மருமகனான பாலுகனுக்கு யுத்தம் பற்றிய செய்தியைத் தெரிவித்தான்.

    வைரவர் அல்லது முனிவரின் சிற்பம்

இங்கு புராதன தமிழர்சைவ பாரம்பரிய எச்சங்கள் சில இன்றும் இங்கு காணப் படுகின்றன. இங்குள்ள விஹாரையில் காணப்படும் வைரவர் சிற்பம் இவற்றில் ஒன்றாகும். பெளத்த விஹாரைகள் எதிலும் காணக் கிடைக்காத இச்சிற்பம் எல்லாள மன்னன் காலத்தில் இங்கிருந்த வழிபாட்டுத் தலமொன்றின் சின்னமாக இருக்கலாம்  என நம்பப்படுகிறது. மிகத்தொன்மை வாய்ந்த உருவ அமைப்பைக் கொண்ட இந்த சிற்பம் ஓர் முனிவரின் சிற்பம் எனவும் கூறப்படுகின்றது.

வாள் சாணை பிடித்த கல்

துட்டகைமுனு எல்லாளனின் படைகளுடன் போர் செய்ய பயன்படுத்திய  வாளைத் தீட்டி கூர்மைப் படுத்திய கருங்கல் ஒன்றும் இங்கிருக்கும் விஹாரையில் காணப் படுகிறது. இது “கட்டு கே கல” என அழைக்கப்படுகிறது.



பண்டைய விஷ்ணு கோயிலின் இன்றைய தோற்றம்

விஜித்தபுர ரஜமஹாவிகாரையில் ஓர் பழமை வாய்ந்த விஷ்ணு கோயிலும் காணப்படுகிறது. இது “புராண ஸ்ரீ விஷ்ணு தேவாலய” என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இதன் காலம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை. விஷ்ணு கோயிலின் வாசல் படிக்கல்கைப்பிடி வரிசை மற்றும் கோயிலின் முன் பக்கம் காணப்படும் இரண்டு கற்தூண்கள் போன்றவை இதன் தொன்மையைக் காட்டு கின்றன. இவற்றைத் தவிர விகாரை வளவில் சிதைந்த சில நாக சிற்பங்களும் காணப்படுகின்றன.

இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களில் மிகவும் பலம் வாய்ந்த கோட்டையைக் கட்டி 44 வருடங்கள் நீதி வழுவாத ஆட்சியை நடத்திய ஒரே மன்னன் எல்லாளன் என்பது குறிப்பிடத்தக்கது.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை 

Sunday, April 26, 2020

இலங்கையை சுற்றிவந்து இறுதியில் பெளத்த விகாரைக்குள் சங்கமமாகிய சிவபக்தன் இராவணனின் சிலை



இலங்கையை சுற்றிவந்து இறுதியில் பெளத்த விகாரைக்குள் சங்கமமாகிய  சிவபக்தன் இராவணனின் சிலை


என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                           NKS/153      27 April 2020
































தென்னிலங்கையில் சிவபூமியின் சுவடுகளைத் தேடி கதிர் காமத்துக்கு சென்றபோது சற்றும் எதிர்பாராத வகையில் இராவணன் பற்றிய ஓர் தொல்பொருள் விடயம் கிடைத்தது. அது இராவணனின் பழமை வாய்ந்த சிலை. அங்கு அதன் விபரங்களைப் பெற்ற பின் அது தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்களைத் திரட்டுவதற்காக கொழும்புக்கு அருகில் உள்ள பன்னிபிட்டிய என்னுமிடத் துக்குச் சென்றேன். அது ஒரு பெளத்த விகாரை. அங்கு நான் இதுவரை எங்கும் கண்டிராத இராவணனின் பழமை வாய்ந்த மரச்சிலையைக் கண்டேன்.


இப்படி ஓர் அபூர்வமான சிலை எப்படி, எங்கு கிடைத்தது என அங்குள்ள முக்கியஸ்தர்களிடம் கேட்டபோது மிகவும் சுவாரஷ் யமான தகவல்கள் கிடைத்தன.

சில வருடங்களுக்கு முன்பு மன்னார் மாவட்டத்தின் தெற்கில் உள்ள காட்டில்  இந்த சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை கண்டெடுத்தவர்கள் சிங்கள மக்கள். பத்து தலைகளும், பல கைகளையும் உடைய இச்சிலையை முருகனின் சிலை என நினைத்து கதிர்காமத்திற்குக் கொண்டு சென்று அங்குள்ள கோயிலில் ஒப்படைத்துள்ளார்கள். கதிர்காமத்தில் உள்ளவர்கள் அது முருகன் சிலை அல்ல என்பதைக் கண்டு கொண்டார்கள். ஆனால் யாரின் சிலை என்பதை சரியாக அடையாளம் காண வில்லை. பின்பு அச்சிலை ஓர் மூலையிலே சில காலம் கிடந்துள்ளது.

இந்தக் கால கட்டத்தில் திருகோணமலை உல்லாச விடுதி ஒன்றின் சிங்கள உரிமையாளர் ஒருவர் கதிர்காமத்திற்கு சென்றுள்ளார். அவர் கதிர்காம கோயில் முக்கியஸ்தர் ஒருவரின் நண்பர். அவர்  மூலையில் கிடந்த  இந்தச் சிலையைக் கண்டு, தனது விடுதியில் காட்சிக்கு வைக்க உகந்தது என எண்ணி, சிலையை தனக்கு தரும்படி கேட்க, அவரும் சிலையை நண்பருக்குக் கொடுத்து விட்டார்.
 

பல காலமாக மன்னார் காட்டில் மறைந்து கிடந்து, பின்பு மன்னாரில் இருந்து, கதிர்காமத்திற்கும் சென்று, பின்பு அங்கிருந்து திருகோண மலைக்கு, அதாவது தான் ஆட்சிசெய்த திரிகூடகிரிக்கே சென்றார் சிலை வடிவில் இருந்த இராவணன்.

இந்த கால கட்டத்தில் கொழும்புக்கு அருகில் உள்ள பன்னிபிட்டிய என்னுமிடத்தில் உள்ள ஓர் பெளத்த விகாரையின் பிரதம பிக்கு இராவணன் மீது மிகுந்த பற்று கொண்டவராகவும், இராவணன் பற்றிய விடயங்களில் ஆர்வமுள்ளவராகவும் இருந்தார். பிக்குவின் நண்பர் ஒருவர் மூலமாக மன்னார் காட்டுப்பகுதியில் பல தலைகளும், பல கைகளும் கொண்ட ஓர் சிலை இருப்பதாக அவர் அறிந்தார். பன்னிபிட்டிய விகாரை பிக்குவிற்கு  இராவணன் பற்றி நன்கு தெரிந்திருந்தபடியால்,  அச்சிலை தன் மனம் கவர்ந்த நாயகன் இராவணனுடையது தான் என்பதை சட்டென்று புரிந்து கொண்டார்.

உடனே மன்னாரில் குறிப்பிட்ட இடத்துக்கு தன் நண்பருடன் சென்று பார்த்த போது, அச்சிலை முருகனின் சிலை  என  நினைத்து கதிர் காமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என அறிந்தார். உடனே கதிர்காமத்துக்கு விரைந்த பிக்கு அங்கு இச்சிலையைப் பற்றிக் கேட்டபோதுதான் தனது யூகம் சரியானது என உறுதி செய்து கொண்டார். அங்கு இருந்தவர்கள் அச்சிலையில் பத்து தலைகளும், இருபது கைகளும் இருந்ததாகக் கூறினர். ஆனால் அது முருகன் சிலை இல்லை எனவும், யாருடைய சிலை என்பது தெரியவில்லை  என்பதால் ஓர் மூலையில் கிடந்ததாகவும், பின்பு ஓர் விடுதி உரிமை யாளர் திருகோணமலைக்கு  கொண்டு சென்று விட்டார்  எனவும்  பிக்குவிடம் கூறினர். 


உடனே அந்த சிலையை எப்படியாவது தனது இடத்துக்கு கொண்டு வரவேண்டும் என முடிவெடுத்து  சிலையை தேடி  திருகோணமலை க்குச் சென்ற பிக்குவுக்கு அங்கும் ஏமாற்றமே காத்திருந்தது.
திருகோணமலையில் குறிப்பிட்ட விடுதியில் அந்த சிலை காணப் படவில்லை. சிலையை விடுதியில் வைக்கக் கூடாது என நண்பர்கள் கூறியதால் சிலையை தன் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு கொடுத்து விட்டதாக விடுதி உரிமையாளர் பிக்குவிடம் கூறினார். 


இருப்பினும் பிக்கு தனது முயற்சியைக் கைவிடவில்லை. விடுதியின் பக்கத்து ஊரில் உள்ள நண்பரின் வீட்டுக்குச் சென்றார். அங்கும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிலை வீட்டில் இல்லை. 

வீட்டில் இருந்தவர்களிடம் சிலை பற்றி விசாரித்தபோது, அந்தச் சிலையை வீட்டில் வைத்திருக்கக் கூடாதாம், வைத்திருந்தால் வீட்டில் பிரச்சினைகள் ஏற்படுமாம் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறியதால் அருகில் உள்ள காட்டுப் பற்றைக்குள் மறைத்து வைத்து விட்டோம் எனக் கூறியுள்ளனர்.


அப்போதும் மனம் தளராத பிக்கு எப்படியாவது சிலையை எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு சிலையைத் தேடி அருகில் இருந்த ஓர் மைதானத்துக்கு அப்பால் உள்ள பற்றைக் காட்டுக்குச் சென்று பார்த்தார். தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஆறு அடி உயரமான இராவணனின் சிலையை கண்டார்.

பல நாட்களின் பின் தேடி அலைந்து இறுதியில் சிலை கைக்குக் கிடைத்த ஆனந்தத்தில் பூரித்துப்போன பிக்கு சிலையை கொழும்பு க்குக் கொண்டு வந்தார். கொழும்பிலே, பன்னிபிட்டியிலே தனது விகாரை வளாகத்திலேயே இராவணனுக்கு ஓர் கோயில் கட்டி அங்கே தனக்குக் கிடைத்த பொக்கிஷமான இராவணனின் சிலையை பாதுகாப்பாக வைத்துள்ளார். 


இந்த சம்பவத்தைக் கேட்டவுடன், ஆச்சரியமாக இருந்தது. ஓர் பெளத்த பிக்கு மிகவும் சிரமப்பட்டு, மனம் தளராமல் பல நாட்கள் இலங்கை முழுவதும் தேடி அலைந்து மாபெரும் சிவபக்தன்  இராவணனின் சிலையை பெற்றுள்ளார் என்பது வியப்பாக இருந்தது.



பன்னிபிட்டிய பிக்குவின் விகாரை வளாகத்தில் நான் கண்ட இராவணனின் இம்மரச்சிலை சுமார் 6 அடி உயரமானது. அந்த சிலை  9 தலைகள், 19 கைகளைக் கொண்டிருந்தது. மிகுதி ஒரு தலையும், ஒரு கையும் வீணையாக இராவணின் கைகளில் காணப் பட்டது. பத்து தலைகளின் நெற்றியில் முப்பட்டையாக விபூதி, பொட்டு மற்றும் முறுக்கிய மீசை, தலைகளில் கிரீடங்கள், மார்பிலும், தோள்களிலும் கவசங்கள், கைகளில் வளையங்கள், கைகள், மார்பு, வயிறு ஆகியவற்றில் முப்பட்டை விபூதி, இடுப்பிலே கச்சை என சிவபக்தன் இராவணனின் அனைத்து அம்சங்களையும் கொண்டதாக இச்சிலை காணப்பட்டது.

இச்சிலை  சுமார் 500 வருடங்கள் பழமையானது எனவும், வேப்ப மரத்தினால் வார்க்கப்பட்டது எனவும் அறிந்தேன். சிலை இலங்கையில் செய்யப்பட்டதா அல்லது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதா என்பது தெரியவில்லை. 


இச்சிலை மன்னாரின் தென்பகுதியில் உள்ள காட்டில் வாழ்ந்த ஓர் சந்நியாசியால் வணங்கப்பட்ட சிலையாக இருக்க வேண்டும். யுத்த காலத்தின் போது சந்நியாசி இவ்விடத்தை விட்டு வேறு இடத்திற்குச் சென்றிருப்பார். யுத்தம் முடிந்த பின்பு இப்பகுதிக்குச் சென்ற சிங்களவர்கள் சிலர் இச்சிலையைக் கண்டிருப்பார்கள். அவர்கள் மூலமாக இச்சிலை கதிர்காமத்திற்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளது.

நமக்கு சொந்தமானதை, நாம் கணக்கெடுக்காமல் விட்டு விட்டதால் அவர்கள் கையிலெடுத்து விட்டார்கள். கோயிலும் கட்டி விட்டார்கள்.

வடக்கில் இருந்து தெற்குக்கு வந்து, அங்கிருந்து கிழக்குக்குச் சென்று, கிழக்கில் இருந்து மேற்கு வந்து, மொத்தத்தில் இலங்கைத் தீவையே சுற்றி வந்து அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார் இராவணன். 

என்.கே.எஸ்.திருச்செல்வம்

வரலாற்று ஆய்வாளர்
இலங்கை 

Saturday, April 25, 2020

கோட்டை இராச்சியத்தில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட கோட்டை கந்தசுவாமி கோயில்



கோட்டை இராச்சியத்தில் போர்த்துக்கேயரால்  அழிக்கப்பட்ட கோட்டை கந்தசுவாமி கோயில் 


என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                                      NKS/152      25 April 2020


      

சிவ பூமியின் சுவடுகளைத் தேடி நான் சென்ற இடங்களில் ஒன்று தான் பண்டைய கோட்டை இராச்சியம். எனது அன்றைய ஆய்வுப் பயணம் கோட்டை இராச்சியத்தின் தலைநகரில் அமைந்திருந்த கோயில்களைக் கண்டறிவதாகும்.

கொழும்பு கோட்டையில் இருந்து பத்தரமுல்லைக்குச் செல்லும் வீதியில், ராஜகிரிய சந்தியை அடுத்து ஒரு கி.மீ தூரத்தில் உள்ள தியவன்னா ஓயா குளத்தின் எதிர்ப் பக்கம் கோட்டை வீதி சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து தெற்குப் பக்கமாக 1.7 கி.மீ தூரம் வரை உள்ள பிரதேசம் உள் கோட்டையாகவும், இங்கிருந்து மேலும் ஓர் கி.மீ தூரத்தில் உள்ள மிரிஹான சந்தி வரையான பிரதேசம் வெளிக் கோட்டையாகவும் பண்டைய காலத்தில் விளங்கின. இவை அத்துள் கோட்டே, பிட்ட கோட்டே என அழைக்கப்படுகின்றன. இவ்விரு கோட்டைகளும் மொத்தமாக            6 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருந்தன. உள் கோட்டை மட்டும்      1.8 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டிருந்தது.

ஓர் முக்கோண வடிவிலான இப்பிரதேசமே சுமார் 600 வருடங்களுக்கு முன்பு தோற்றம் பெற்ற கோட்டை இராச்சியத்தில் தலைநகர் பகுதியாகும். இப்பிரதேசத்தின் வடமுனையில் இருந்து, வடமேற்கு முனை வரை மூன்றரை கி.மீ தூரத்திற்கு கொலன்னாவ கால்வாய் அரணாகவும், வடமுனையில் இருந்து வடகிழக்கு முனை வரையான நான்கு கி.மீ தூரத்திற்கு தியவன்னா ஆறு அரணாகவும் அமைந்திருந்தது. இம்முக்கோண பிரதேசத்தின் தெற்கில் இருந்த கீழ்ப்பகுதி கபோக் என்றழைக்கப்படும் சிவப்பு நிற முருகைக் கற்களினால் கட்டப்பட்ட உயர்ந்த கோட்டை மதில்கள் மூலம் பாதுக்காக்கப் பட்டிருந்தது. இக்கோட்டை இராச்சியத்தில் உள் கோட்டைக்குள்ளும், வெளிக் கோட்டைகுள்ளும் பல கோயில்கள் அமைக்கப்பட்டிருந்தன.   

கோட்டை இராச்சியத்தில் இருந்த கோயில்கள் பற்றிய சிங்கள மொழிக் குறிப்புக்கள் சிலவற்றைத் தேடினேன். அப்போது கொடகே புத்தக சாலையில் இரண்டு முக்கிய நூல்கள் கிடைத்தன. இவை  இரண்டு சந்தேச நூல்களாகும். இந்நூல்களில் பொ.ஆ. 15ஆம் நூற்றாண்டில் கோட்டை இராச்சியம் அமைக்கப்பட்ட பின்பு கட்டப்பட்ட கந்தசுவாமிக் கோயில் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இக்கோயில் கோட்டை மன்னர்களால் பூஜிக்கப் பட்டதாகத் தெரிய வருகிறது. கோகில சந்தேச, பரவி சந்தேச ஆகிய சிங்கள தூது விடு இலக்கியங்களில் கோட்டை கந்தசுவாமி கோவில் பற்றிய பாடல்கள் உள்ளன. கோட்டை அரசமாளிகையின் அருகில் உள் கோட்டையினுள் இக்கோயில் அமைந்திருந்தது.


எனக்குக் கிடைத்த இரு ஆதாரங்களையும் வைத்துக் கொண்டு முதலில் அத்துள் கோட்டே பகுதிக்குச் சென்றேன். அங்கே பரகும்பா பிரிவேன எனும் ஓர் பெளத்த விகாரை உள்ளது. அங்கு கோட்டை இராச்சியம் பற்றிய சில தகவல்கள் கிடைத்தன. முக்கியமாக இக்கோட்டை இராச்சியத்தில் நான்கு முனைகளிலும் நான்கு தெய்வங்களுக்குரிய காவற் கோயில்கள் அமைந்திருந்ததாக அங்கிருந்த முக்கியஸ்தர்கள் கூறினர்.
அவற்றையும் எடுத்துக்கொண்டு ஒரு நாள் முழுவதும் கோட்டை இராச்சிய தலைநகரின் சுவடுகளைத் தேடி அலைந்தேன். மாளிகை வீதி, பெத்தகான நினைவுத் தூபி, அழகேஸ்வரர் மாளிகை, உள் கோட்டை அகழி, வெளிக்கோட்டை மதில், கருங்கல் அம்பலம், தலதா மாளிகை ஆகியவற்றை கண்டேன். மாலை 6 மணியாகி  விட்டது. வீடு திரும்பி விட்டேன்.
கிடைக்கப்பெற்ற குறிப்புகளை அன்றிரவு ஆராய்ந்தேன். அப்போது கோட்டை இராச்சியத்தில் கந்தசுவாமிக் கோயில் இருந்த இடத்தை ஓரளவு அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. இருப்பினும் அதை நேரில் சென்று பார்த்து  உறுதி செய்து கொள்ள வேண்டும் என எண்ணினேன்.
அடுத்தநாள் காலை குறிப்பிட்ட இடத்தைத் தேடிச் சென்றேன். அது அது ஓர் மேட்டு நிலம். அங்கு தான் கோட்டை தொல்பொருள் காட்சிச்சாலை அமைந்துள்ளது. அங்கு சென்று பார்த்தபோதுதான் பல உண்மைகள் தெரிய வந்தது. அந்த மெட்டு நிலத்தில் தான் கந்தசுவாமி கோயில் அமைந்திருந்ததாக அறியக் கிடைத்தது. அதாவது இக்கோயில் உள்கோட்டைக்குள் அமைந்திருந்தது. அது மட்டுமல்லாது கோயிலின் இரண்டு கற்தூண்களின் துண்டுகளும், கோயிலின் அதிஸ்டானத்தில் இருந்த யாளவரி சிற்பத் துண்டுகள் இரண்டையும்   கண்டேன். இரண்டு நாட்கள் தேடலின் பின்பு இந்த அரிய பொக்கிஷங்கள் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியாக இருந்தது.


அங்கிருந்த அதிகாரி சில குறிப்புகளைத் தந்தார். கோட்டை இராச்சியம் பற்றிய மேலும் விபரங்கள் தேவை என்றால் கொழும்பு தேசிய நூதனசாலையில் முயற்சி செய்து பாருங்கள் என்றார். அப்போது நேரம் காலை 10 மணி. உடனே கொழும்பு தேசிய நூதனசாலைக்கு விரைந்தேன்.
அங்குள்ள நூலக அதிகாரியை சந்தித்து எனது தேவையை விளக்கினேன். அவர் பழைமை வாய்ந்த ஓர் உசாத்துணை நூலைத் தந்தார். அந்த நூலைப் புரட்டிப் பார்த்தவுடன் வியப்படைந்தேன். நான் எதிர்பார்க்காத, மிகப்பெரிய பொக்கிஷம் அதில் கிடைத்தது. அதுதான் போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்பட்டு சுவடுகள் கூட இல்லாமல் போன கோட்டை கந்தசுவாமிக் கோயில் பற்றிய கல்வெட்டு. அது  பற்றிய ஓர் குறிப்பு அந்நூலில் காணப்பட்டது. நூதனசாலை மூடும் வரையும் கோட்டை இராச்சியம் பற்றிய பல குறிப்புக்களை வாசித்து குறிப்பெடுத்தேன். அவற்றை போட்டோ பிரதி எடுக்க கேட்டேன். அனுமதி கிடைக்கவில்லை. கடைசியில் ஓர் உயர் அதிகாரியோடு பேசி கந்தசுவாமிக் கோயில் பற்றிய கல்வெட்டுக் குறிப்பை மட்டும்  போட்டோ பிரதி எடுத்துக் கொண்டேன்.       
பொ.ஆ. 1415 முதல் 1597 வரை தென்னிலங்கையின் இராச்சியமாக  விளங்கிய கோட்டையில் கந்தசுவாமி கோயில் அமைக்கப் பட்டிருந்தது. கொழும்பு பொரல்லயிலிருந்து பத்தரமுல்ல செல்லும் வீதியில் உள்ள தியவண்ண ஓயாவின் இரு பாலங்களுக்கிடையில் தெற்கு நோக்கி பிட்டகோட்டே வரை உள்ள இடமே கோட்டை இராச்சியத்தின் தலைநகரமாகும். தியவண்ண ஓயாவின் கிளை ஆறுகளாலும், சதுப்பு நிலங்களினாலும் சூழப்பட்டு விளங்கும் இப் பகுதி உயர் மேடுகளையும், பள்ளங்களையும் கொண்ட முக்கோணப் பிரதேசமாகும். தியவண்ண ஓயாவும், அதையண்டிய சதுப்பு நிலப்பகுதியும் இயற்கை அரணாக அமைந்த இப்பகுதி சுமார் இரண்டு நூற்றாண்டு காலம் தென்னிலங்கையின் முக்கிய ஆட்சிப் பகுதியாக விளங்கியுள்ளது.

அரச முக்கியத்துவம் பெற்றிருந்த ஆலயம்
கோட்டை கந்தசுவாமிக் கோயில் அரச மாளிகைக்கருகில் உள்கோட்டையில் அமைக்குமளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது. அன்று கோட்டை மன்னர்களாலும், இந்து, பௌத்த மக்களாலும் பூஜிக்கப்பட்ட இக்கோயில் ஈ.டபிள்யூ. பெரேரா என்பவரின் வளவிற்கு அருகில் இருந்த மேடான இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
கருங்கற் தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த இக் கந்தசுவாமி கோயில் அன்று மகாசேனன் மாளிகை என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சீரும் சிறப்புடனும் விளங்கிய இக்கோயில் போர்த்துக்கேயரால் இடித்து அழிக்கப்பட்டது.
இன்று ஜயவர்தனபுர கோட்டே தொல்பொருட் காட்சிச்சாலை அமைந்திருக்கும் இடம் தான் ஈ.டபிள்யூ. பெரேரா என்பவரின் வீடு இருந்த இடம். இதனருகில் தான் புராதன கந்தசுவாமி கோயில் அமைந்திருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்கோயிலின் எஞ்சிய சின்னங்கள் எனக் கருதப்படும் கற்தூண்கள் இரண்டும் மேலும் சில கற்தூண்களும் கோட்டே தொல்பொருட் காட்சிச் சாலையில் இன்றும் காணப்படுகின்றன.

செண்பகப் பெருமாளின் குடும்பத்தினரால் கட்டப்பட்ட ஆலயம்.
கோட்டை இராச்சியத்தை ஆண்ட 6ஆம் பராக்கிமபாகுவின் விசுவாசமிக்க படைத் தளபதியாகவும், குடும்ப நண்பராகவும் விளங்கிய பணிக்கலவன் எனும் தமிழ்த் தளபதியின் மகனே செண்பகப் பெருமாள். இவனின் வீரதீரச் செயல்களினாலும், தனது விசுவாசமிக்க படைத் தளபதியின் நட்பின் பேரினாலும் செண்பகப் பெருமாளை மகனாகத் தத்தெடுத்தான் பராக்கிரமபாகு மன்னன். சுத்த சைவனான செண்பகப் பெருமாளின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் கந்தசுவாமி கோயில் அமைக்கப் பட்டதாகத் தெரியவருகிறது.
மேலும் இவ்வாலயம் பற்றி சலலிஹினி சந்தேச எனும் சிங்கள இலக்கிய நூலில் மகாசேனன் எனும் தேவ அரசனின் மாளிகை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டை இராச்சிய காலத்தில் முருகனை மகாசேனன் எனவும் பௌத்த மக்கள் அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

கோயில் பற்றிய கல்வெட்டும், கற்தூண்களும்
கோட்டை கந்தசுவாமி கோயில் பற்றிய மேலும் பல முக்கிய  சான்றுகள் கிடைத்துள்ளன. இக்கோயிலில் பொறிக்கப் பட்டிருந்த தூண் கல்வெட்டு ஒன்றும், மேலும் இக்கோயிலுக்குரிய தூண்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கண்டி வீதியில் 6ஆவது மைல் கல் அருகில் இருக்கும் மதகு ஒன்றின் அடிப்பகுதியில் இருந்து 32 கற்தூண்கள் கண்டுபடிக்கப்பட்டன. அந்நியர் ஆட்சிக்காலத்தில் இடிக்கப்பட்ட கோயில்கள் மாளிகைகள் போன்றவற்றின் கற்தூண்கள் கோட்டைகள் கட்டுவதற்கும், தேவாலயங்கள் கட்டுவதற்கும் மட்டுமல்லாது பாதைகள் அமைக்கவும் பயன்படுத்தப் பட்டுள்ளன. போர்த்துக்கேயரின் காலத்தில் இடிக்கப்பட்ட கந்தசுவாமி கோயிலின் தூண்களும் பாதைகள் அமைக்கும் பிரசித்திப் பெற்ற ஆங்கிலேய நிறுவனமொன்றினால் மதகு கட்டுவதற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரியான ஜோசப் பியர்சன் என்பவரால் மதகின் கீழ்ப்பகுதியில் இத்தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றில் 13 தூண்கள் எளிமையான முறையில் சதுர வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. 11 தூண்களின் அடிப்பகுதியும், உச்சிப் பகுதியும், சதுர வடிவிலும் நடுப்பகுதி எண்கோண வடிவிலும் அமைக்கப் பட்டுள்ளது. 8 தூண்கள் பலவித சிற்பங்கள் செதுக்கப்பட்ட தூண்களாக உள்ளன. மிகுதி ஒரு தூண் கல்வெட்டு பொறிக்கப்பட்டதாக உள்ளது. தமிழ்மொழியில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டின் மூலம் இத்தூண்கள் கந்தசுவாமி கோயிலுக்குரியவை எனத்தெரிய வருகிறது. 9 வரிகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

தமிழ் கல்வெட்டு கூறும் செய்தி
இக்கல்வெட்டில்  விஜயபாகு தேவரின் 11 ஆவது ஆட்சியாண்டில் வைகாசி மாதம் 10ஆம் நாள் ஒரு பிரதிநிதி மூலம் கந்தசுவாமி கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பிரதிநிதியின் பெயர் தெளிவாகத் தெரியவில்லை. வழங்கப்பட்ட தானம் என்ன என்பதும் தெரியவில்லை. இக்கல்வெட்டு மேலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் பல தகவல்களைப் பெறக் கூடியதாக இருக்கும்.
இக்கல்வெட்டும், தூண்களும் கோட்டை இராச்சியத்தில் அமைக்கப் பட்டிருந்த கந்தசுவாமி கோயிலின் எச்சங்களா அல்லது கோட்டைக்கு வெளியே களனிய பகுதியில் அமைந்திருந்த வேறு ஒரு கந்தசுவாமி கோயிலின் எச்சங்களா என்பது மேலாய்வு செய்யப்பட வேண்டும்.
பொ.ஆ. 14ஆம் நூற்றாண்டில் கோட்டை இராச்சியம்  அமைக்கப் பட்ட போது அழகேஸ்வரனால் கோட்டையின் நான்கு மூலைகளிலும் நான்கு காவற்கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றில் சுப்பிரமணியர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலும் மேலே குறிப்பிட்டிருந்த கந்தசுவாமி கோயிலும் ஒரே கோயில்களா அல்லது இருவேறு  கோயில்களா என்பதும் தெரியவில்லை. இருப்பினும் கடந்த இரண்டு நாட்கள் பெரு முயற்சியின் பின்னர் கோட்டை இராச்சியத்தில் இருந்து அழிந்து போன ஓர் கோயில் பற்றிய மிக முக்கிய விபரங்களைக் கண்டறிந்ததில் மனம் நிறைந்திருந்தது.  

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை 













Friday, April 24, 2020

கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் பற்றி 200 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஆங்கிலப் பாடல்

கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் பற்றி 200 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஆங்கிலப் பாடல்


என்.கே.எஸ்.திருச்செல்வம்             
 NKS/151      24  April 2020


திருகோணமலையின் அருகில் உள்ள கன்னியாவில் ஏழு வெந் நீர் ஊற்றுக்கள் உள்ளன. இவை உலகப் பிரசித்தி பெற்றவையாகும். இவ்வெந்நீர் ஊற்றுக்கள் பற்றிய பல விபரங்களை நாம் அறிந்துள் ளோம். நாம் அறிந்த வகையில் கடந்த காலங்களில் கன்னியா வெந் நீர் ஊற்றுக்களைப் பற்றி இருவர் மட்டுமே பாடல்கள் பாடியுள்ளனர்.  1940ல் நவாலியூர் சோமசுந்தரப் புலவரும், 1961ல் புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை அவர்களுமே பாடல்களைப் பாடியுள்ளனர்.

ஆனால் இவர்களுக்கு முன்பே, சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு டி.ஏ. அன்டர்சன் எனும் ஓர் ஐரோப்பிய வெள்ளையர் ஆங் கில மொழி யில் கன்னியா வெந்நீர் ஊற்றுக்களைப் பற்றிப் பாடல் பாடியுள் ள மை வியக்க வைக்கிறது. 1809 ஆம் ஆண்டு டி.ஏ.அன் டர்சன் எழுதிய இந்த ஆங்கிலப் பாடல் தான் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் பற்றி எமக்குக் கிடைக்கும் மிகப்பழைய பாடல்என்பதுகுறிப்பிடத்தக்கது.  மொத்தமாக 14 வரிகளைக் கொண்ட இப்பாடல் 210 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டுள்ளது.

டி.ஏ.அன்டர்சன் எனும் அறிஞர் கன்னியா வெந்நீர் ஊற்றுகளு க்குச் சென்று, அங்குள்ள வெந்நீர்க் கிணறுகளில் உள்ள நீரின் மகி மையை அறிந்து, அதை ஆங்கிலத்தில் பாடலாக எழுதியுள்ளார். 1809 ஆம் ஆண்டு இவர் எழுதிய Poems Written Chiefly in India” எனும் நூலில் இப் பாடல் இடம் பெற்றுள்ளது.

இந்நூலில் உள்ள 26 பாடல்களில் 15 ஆவது பாடல் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் பற்றிய பாடலாகும். ரம்மியமான நீரூற்று கள்எனப் பெயரிடப்பட்ட இப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலின் தலைப்பில் செய்யுள் 15-திருகோண மலையின் அரு கில் உள்ள வெந்நீர்க் கிணறுகள் அல்லது கன்னியாவில் எழுதப் பட்டது. எனக் குறிப்பிட்டுள்ளார்.

SONNET XV.
WRITTEN AT THE HOTWELLS or CANNIA NEAR
TRINCOMALEE

Salubrious  streams ! that have for ages pour’d
Thro’ these wild scenes, these solitary dells;
What tho’ your fame no pompous annal tells,
The untaught Indian has your power ador’d!
Majestic trees, and glens for ever green,
Forests of pathless shade, and mountains blue
Embosem you, and form a nobler scene,
Than ever fancy form‘d, or poet drew!
Fainting with heat, and labouring with disease,
To your lone springs how thankful did I turn!
And soon reviving health, recover’d ease,
Display’d the virtues of your modest urn;
Some timid village maid thus shuns the gaze,
Unconscious of the beauties she displays ! 

பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு
பல ஆண்டுகளாக ஊற்றில் ஓடும் வற்றாத நதிகளே!
வன காட்சிகளின் மத்தியில் ஓசையில் சலசலக்க,
எப்படி உன் மகிமையை எவ்விலக்கணமும் சொல்ல மறந்தது!
கற்காத இந்தியனும் உன் சக்தியை ஆதரிப்பவனே!
மாபெரும் மரங்களும் பச்சைப் பசேலென்ற கொடிகளும்,
நிழல் பதிவில்லா வனமும் நீல நெடில் மலைகளும்,
இந்தப் புனித பூமிக்கு மெருகு ஊட்டிக் கொண்டிருக்கும்
எந்தக் கவிஞனும் புனையாத அமுதக் கவிதை அது!
சூட்டின் மயக்கமா! நோயின் கொடுமையா!
தனிமை ஊற்றைத்தேடி ஓடிய நோயாளி,
வந்தான் தெளிவாக சுகமாகி,
ஊற்றின் விந்தையைப் பறைசாற்றி!
அழகிய கிராமத்துக் கன்னிகளும் தம் அழகை மறைக்க மறந்து
வெறிப் பார்வைகளில் ஒதுங்காமல் ஊற்றில் சங்கமம் ஆவதும் அழகு!


           













ஐரோப்பிய கவிஞர் டி.ஏ.அன்டர்சன் கன்னியா வெந்நீர் ஊற்றுகள் இருக்கும் இடத்திற்குச் சென்று, அங்குள்ள கிணறுகளில் உள்ள  வெந்நீரை அள்ளி எடுத்து, தன் உடலில் ஊற்றி, அதன் வெப்பத்தை அனுபவித்து, அந்த சுற்றாடலில் இருந்த மரங்கள், மலைகள், காடு கள், மலையில் இருந்து வரும் அருவி ஆகியவற்றைப் பார்த்து ரசி த்து, வெந்நீர் ஊற்றில் நீராடும் மக்கள், அழகிய மங்கைகள், நோயா ளிகள் ஆகியோரைப் பார்த்து, அங்கு நீராடி விட்டுச் செல்லும் மக்க ளிடம் அவர்களின் அனுபவத்தையும் கேட்டறிந்து, அவ்விடத்திலேயே இருந்து, அவ்விபரங்கள் அனைத்தையும் உள்ளடக்கி பதினான்கு வரி களில் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

கவிஞர் டி.ஏ.அன்டர்சன் இந்நூலில் எழுதிய நூற்றுக்கணக்கான கவிதைகள் மற்றும் பாடல்களில் இலங்கையில் உள்ள இரண்டு இட ங்களைப் பற்றி மட்டுமே பாடல் பாடியுள்ளார். அவற்றில் முதலாவது கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள். இரண்டாவது மகாவலி கங்கை. இது கன்னியா வெந்நீர் ஊற்றுகளுக்கு வெளிநாட்டவர்கள் கொடுக்கும் முக் கியத்துவத்தை இங்கே சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.

இதன் மூலம் நம்மைப் போலவே அல்லது அதைவிட அதிகமாக ஐரோப்பியர் கன்னியா வெந்நீர் ஊற்றின் அருமை பெருமைகளை யும், மகிமையையும் அறிந்து வைத்துள்ளார்கள் என்பது தெளி வா கத் தெரி கிறது. ஐரோப்பிய அறிஞர்கள் கன்னியா வெந்நீர் ஊற்று களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தையும், அவர்கள் மத்தியில் இவை பிரசித்தி பெற்று விளங்கியுள்ளமையும் இதன் மூலம் உறுதி யாகிறது.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை 


Thursday, April 23, 2020

பெளத்த விகாரைக்குள் ஓர் சோழர்கால இந்துக் கோயில்



பெளத்த விகாரைக்குள் ஓர்சோழர்கால இந்துக் கோயில்


என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                                  NKS/150   23  April 2020


சிவபூமியின் சுவடுகளைத் தேடி குருநாகல் பிரதேசத்திற்குச் சென்ற போது ஓர் அதிசயத்தைக் கண்டேன். அது முற்றிலும் பெளத்த மக்கள் வாழும் ஓர்  பிரதேசத்தின் மத்தியில் இருந்த பெளத்த விகாரைக்குள், இலங்கையில் எங்கும் காணக் கிடைக்காத அழகிய வடிவத்துடன் அமைக்கப்பட்டிருந்த ஓர் சோழர்கால இந்துக் கோயில். 

குருநாகலில் இருந்து கிழக்கு நோக்கி ரம்பொடகல என்னுமிடத்திற் குச் செல்லும் வீதியில்  ரிதிகம என்னுமிடம் உள்ளது. இங்குள்ள சிறிய மலைப்பாறையின் மீது ரிதிவிஹாரை அமைந்துள்ளது. மலைப்பா றையின் உச்சிப் பகுதிக்குச் சென்றவுடன் அங்கு பெளத்த விகாரை, தூபி போன்றவை காணப்படுகின்றன.

இவற்றின் அருகில் அழகிய இந்துக் கோயில் ஒன்றும் காணப்படுகி றது. கருங்கல்லினால் அழகிய வடிவில் செதுக்கப்பட்டுள்ள எட் டுத் தூண்களுடன் கூடிய, சிறிய மண்டபமொன்றும் அதை அடுத்து கரு வறையும் காணப்படுகிறது. இவை முற்றிலும் திராவிடக் கட்டிடக் கலைப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. கூரையும் கல்லினால் செதுக்கப்பட்டுள்ளது.























பொ.ஆ.11ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் இக்கோயில் அமை க்கப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இலங்கையில் இன்றும் பேணப்பட்டுள்ள முழுமையாகவே கல்லினால் கட்டப்பட்ட, விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரண்டு கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

தற்போது இக்கோயில் வரக்கா வெலந்து விஹாரை என அழைக் கப்படுகிறது. இப்பெயர் இக்கோயிலுக்கு வந்ததற்கு விசித்திரமான ஓர் கதையும் கூறப்படுகிறது. இவ்விடத்தில் அனுராதபுர காலத்தில்  இந்திரகுப்தன் எனும் பிரதானி பலாப்பழம் விற்பனை செய்தானாம். அதனால் இக்கோயிலுக்கு இப்படி ஒரு பெயர் வந்ததாம்.

எல்லாள மன்னன் காலத்தில் இப்பகுதியில் இந்து சமயம் மேலோங் கிக் காணப்பட்டிருக்கலாம் என நம்பக் கூடியதாக உள்ளது. ஏனெ னில்  எல்லாள மன்னனை வென்று, பொ.ஆ.மு. 101-77 வரை இலங் கையை ஆட்சி செய்த துட்டகைமுனு இங்கு ரிதிவிஹாரை எனும் பெளத்த வழிபாட்டுத் தலத்தை அமைத்தான் எனவும், இந்த இடத்தி ற்கு முதன்முதலாக துட்டகைமுனு சென்ற போது 500 பெளத்த பிக்கு களையும், 1500 இந்து பிராமணர்களையும் அழைத்துச் சென்றான் எனவும் இங்குள்ள பழமை வாய்ந்த ஓலைச்சுவடி ஒன்றில்  எழுதப் பட்டுள்ளது. பிக்குகளை விட மூன்று மடங்கு அதிகமாக பிராமண ர்கள் இங்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப் பிடத்தக்கது.

இதன்படி ரிதிகம பகுதி பெளத்தர்களை விட இந்துக்களின் செல்வா க்கு மிகுந்த இடமாக இருந்திருக்க வேண்டும் என யூகிக்கக் கூடிய தாக உள்ளது. எல்லாளன் காலத்தில் இப்பகுதி பிராமணர்களின் செல்வாக்கு மேலோங்கியிருந்த இடமாக இருந்திருக்க வேண்டும். அக்கால கட்டத்தில் இங்கு இந்துக் கோயில்கள் அமைக்கப்பட்டிரு க்க வேண்டும் என்பதும் உறுதியாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சி யாகவே சோழர் காலத்தில் இங்கு கற்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என நம்ப இடமுண்டு.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை