Friday, December 4, 2020

மட்டக்களப்பு புல்லுமலைக் காட்டில் பண்டைய வைரவர் கோயிலின் சுவடுகள்

 

மட்டக்களப்பு புல்லுமலைக் காட்டில்
பண்டைய வைரவர் கோயிலின்
சுவடுகள்

 

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                                  NKS/202      04   டிசம்பர்   2020

 குறிப்பு: 

(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

 புல்லுமலைக் காட்டின் எல்லைப் பகுதியில் மிகத்தொன்மை வாய்ந்த ஆலயமொன்றின் சிதைவுகளைக் கண்டேன். இக்காட்டுக் கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வைரவர் கோயிலாக இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

 இப்பகுதியில் இருந்த ஓர் முக்கிய இடத்திற்கு காவலாக இக்கோயில் கட்டப் பட்டிருக்கலாம் எனவும் நம்பப் படுகிறது. இங்கு பண்டைய காலத்தில் அமைக்கப்பட்ட குளம், கால்வாய் அல்லது மாளிகை ஆகியவற்றிற்கு காவலாக இக்கோயில் அமைக்கப் பட்டிருக்கலாம்.

புதையல் பிரியர்கள் இங்கு தமது கைவரிசையை காட்டி உள்ளமை தெரிகிறது. வாயில் தூண்கள் உட்பட 9 பாரிய கற்தூண்கள் இங்கு சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. சில தூண்கள் நிறுத்தி வைக்கப்பட்டும், சில தூண்கள் பாதி அளவு மண்ணுள் புதையுண்டும் காணப்பட்டன.

 கருவறை இருந்த இடத்தில் பெரிய குழி தோண்டப்பட்டுள்ளது. அதிலும் சில தூண்கள் இடிந்து விழுந்து கிடக்கின்றன.

இங்கு செல்வதற்கு என்னுடன் வந்த நண்பர் நிஷாந்தன், நண்பர் சச்சிதானந்தன், சோமன் ஐயா ஆகியோருக்கு எனது நன்றிகள்.

 என்.கே.எஸ்.திருச்செல்வம்                                              வரலாற்று ஆய்வாளர்                                           இலங்கை.


Wednesday, December 2, 2020

பிதுர்மலைக் காட்டில் சிவன் பற்றிய கல்வெட்டும், கற்குகையும்

 

பிதுர்மலைக் காட்டில் சிவன் பற்றிய கல்வெட்டும், கற்குகையும்



என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/201 02 டிசம்பர் 2020


குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

சிவ பூமியின் சுவடுகளைத் தேடி நான் சென்ற இடங்களில் மிக முக்கியமானவை சிகிரியா மற்றும் பிதுர்மலை ஆகிய பகுதிகளாகும். சிகிரியா பண்டைய காலத்தில் சிவகிரி, சிம்மகிரி எனும் பெயர்களில் வழங்கப்பட்டது.

சிம்மகிரியைப் போலவே சிம்மகிரி மலைக்குன்றின் வடக்குப் பக்கத்தில் சில மைல் தூரத்தில் அமைந்திருக்கும் பிதுரங்கல எனும் மலையும், அம்மலையடிவாரத்தில் உள்ள காடும் பண்டைய காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்கின. இம்மலைப் பகுதிக்குச் சென்றபோது அங்கு எமது பாரம்பரியத்தின் சுவடுகள் பலவற்றைக் காணக் கிடைத்தது.

பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டில் சிம்மகிரி மலைக் கோட்டையில் இருந்து ஆட்சி செய்த காசியப்பனுக்கும், அவனது தந்தையான தாது சேனனுக்கும் நெருங்கிய தொடர்புடைய இடமாக பிதுரங்கல மலை  விளங்கியுள்ளது.

காசியப்பன் தனது தந்தையான தாதுசேனனுக்கு ஒரு சமாதியை இம்மலையில் அமைத்தான் எனக் கூறப்படுகிறது. இதன்படி காசியப்பன் இங்கு தனது தந்தையின் பிதுர்க்கடன்களை நிறைவு செய்து, அதன்பின் மலை உச்சியில் சமாதியை அமைத்திருப்பான் என ஊகிக்கக் கூடியதாக உள்ளது. இதனால் இம்மலை பிதுர்மலை என அழைக்கப்பட்டுள்ளது. அதுவே சிங்கள மொழியில் பிதுர்கல எனவும் பின்பு பிதுரங்கல எனவும் மருவியுள்ளது.

காசியப்பன் காலத்திற்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு பிதுர்மலைப் பகுதி சிவவழிபாடு மற்றும் நாக வழிபாடு நிலவிய, அல்லது சிவனையும், நாகத்தையும் வழிபட்டவர்கள் இருந்த இடமாக இருந்திருக்க வேண்டும். மேலும் முனிவர் ஒருவர் இங்குள்ள ஒரு குகையைப் பயன்படுத்தியுள்ளமையும், கண்ணன் வழிபாடு செய்தமை பற்றியும் கூறப்பட்டுள்ளது. இக்கூற்றுக்களை உறுதிப்படுத்தும் வகையில் சில ஆதாரங்களை இம்மலை அடிவாரத்தில் உள்ள கற்குகைகளில் கண்டேன். மிக முக்கியமாக இங்கு பொறிக்கப்பட்டிருந்த மூன்று பிராமிக் கல்வெட்டுக்கள் இதனை உறுதிப்படுத்தின.

பிதுர்மலையின் வடக்குப் பக்க அடிவாரத்தில் இயற்கையான சில கற்குகைகள் காணப்படுகின்றன. இவற்றில் மொத்தமாக நான்கு பிராமிக் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலாவதாகக் காணப்படும் கல்வெட்டு மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டின் முதல் வரியில் கொலகாமம் என்னுமிடத்தை சேர்ந்த சிவனின் மகனான இளவரசன் மஜ்ஜிமன் என்பவனின் மகள் தீசா தேவியின் குகை சங்கத்தார்க்கு வழங்கப்பட்டது எனக் கூறப் பட்டுள்ளது.

இரண்டாவது, மூன்றாவது வரிகளில் கரடிகாமத்தை சேர்ந்த வீம நாகனின் மனைவியான மண்டநாழி மற்றும் தீசாதேவி எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ள சில சொற்களின் மூலம் சில முக்கிய விடயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. அதன்படி சிவவழிபாடு செய்த சிவன் என்பவன் இப்பகுதியில் ஓர் சிற்றரசனாக இருந்துள்ளான். இவன் ஓர் அரசன் என்பதால் இவனின் மகன் இளவரசன் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளான். சிவனின் மகனின் பெயர் மஜ்ஜிமன் என கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் பாண்டியருடன் தொடர்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மஜ்ஜி எனும் சொல் மீன், மீனவன் ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாகும் எனவும், எனவே இப்பதம் பாண்டிய வம்சத்தவர் அல்லது பாண்டியரின் கீழுள்ள குறுநில மன்னர்களைக் குறிப்பதாகும் எனவும் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வெட்டு பற்றிக் குறிப்பிடுகையில் தெரிவித்துள்ளார். எனவே இக்கூற்று பிதுர்மலைக் கல்வெட்டிற்கும் பொருந்துவதாக உள்ளது.

அடுத்ததாக கல்வெட்டில் உள்ள வீமநாகன் என்பவன் இங்கு நாக வழிபாடு செய்த ஒருவன் எனவும் கூறக் கூடியதாக உள்ளது. மேலும் இக்கல்வெட்டின் இரண்டாவது வரியில் காணப்படும் மண்டநாழி எனும் பெயரின் இறுதியில் உள்ள ழி எனும் எழுத்து தமிழ் பிராமிக்குரிய சிறப்பான எழுத்துக்களில் ஒன்றாகும்.

(தொடரும்..) 

என்.கே.எஸ்.திருச்செல்வம் வரலாற்று ஆய்வாளர் இலங்கை.