Thursday, August 27, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடைசி மலைப்பகுதியில் ஓர் ஆய்வுப் பயணம்-பகுதி 1

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடைசி  மலைப்பகுதியில் ஓர் ஆய்வுப் பயணம்-பகுதி 1


என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                               NKS/189     27    ஆகஸ்ட்   2020

 குறிப்பு:

(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

 

நாட்டில் காணப்பட்ட கொள்ளை நோய் காரணமாக சில மாதங்கள் ஆய்வுகளை மேற்கொள்ள முடியாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் ஓர் ஆய்வுப்பயணத்தை தொடங்கினேன். இந்தத் தடவை நான் சென்ற இடம் மட்டக்களப்பு மாவட்டமாகும். இரண்டு நாட்களில் மூன்று வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று சில இடங்களையும், கோயில்களையும் ஆய்வு செய்தேன். இந்த மூன்று பகுதிகளில் ஒன்றுதான் கடைசிமலைப் பகுதியாகும். இது ஏறாவூர்பற்று எனும் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஈரளக்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள ஒரு மலைப் பிரதேசமாகும். இவ் ஆய்வுப்பயணத்தில் மட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த ரஞ்சித், கல்லடியைச் சேர்ந்த திவாகரன், சத்துருக் கொண்டானைச் சேர்ந்த சுஜீதரன் ஆகிய மூன்று நண்பர்கள் என்னோடு இணைந்தனர்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குச் செல்லும் வீதியில் உள்ள வந்தாறுமூலைக்கும், சித்தாண்டிக்கும் இடையில் மாவடிவேம்பு என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து தென்மேற்குப் பக்கமாகச் செல்லும் வீதி சந்தனமடு ஆறு வரை செல்கிறது. இவ்வீதியில் ஒரு கி.மீ தூரம் வரை குடியிருப்புகள் காணப்படுகின்றன. ஊரின் எல்லையில் நாகதம்பிரான் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலை அடுத்து மிகப்பெரிய பசுமையான வயல் நிலங்கள் காணப்படுகின்றன. இங்கிருந்து மேற்குப்பக்கத்தில் சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ள சந்தனமடு ஆறு வரை இவ்வயல் நிலங்கள் உள்ளன. இவ்வயல் நிலப்பகுதி தெற்குப்பக்கத்தில் மகாஓயா வீதியில் உள்ள இலுப்படிச்சேனை வரை சுமார் 11 கி.மீ தூரம் வரை காணப்படும் மிகப்பெரிய வயல் களனியாகும். சுமார் 36 சதுர கி.மீ பரப்பளவில் இப்பகுதியில் நெல் பயிர் செய்யப்படுகிறது.

நாகதம்பிரான் கோயிலில் இருந்து வயல் வெளிகளின் ஊடாக சந்தனமடு ஆற்றுக்குச் செல்லும் வழியில் பம்மோதரை ஆறு எனும் சிற்றாறு குறுக்கிடுகிறது. இவ்வாறு சித்தாண்டியின் மேற்குப் பக்கத்தில் வாழைச்சேனை ஆற்றில் இணைகிறது. நாகதம்பிரான் கோயிலில் இருந்து ஒன்றரை கி.மீ தூரத்தில் சின்னாளன்வெளிக் குளமும், அதன் அருகில் புளியடிப் பிள்ளையார் கோயிலும் அமைந்துள்ளன.  இங்கிருந்து ஒன்றரைக் கி.மீ தூரத்தில் சந்தனமடு ஆறு ஓடுகின்றது. இவ்விடத்தில் ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்லும் துறை அமைந்துள்ளது. இதுவே முறாக்கமடுத் துறையாகும். ஆனால் பொதுவாக மக்கள் இத்துறையை சந்தனமடு ஆற்றுத்துறை என அழைக்கின்றனர். ஆனால் சந்தனமடு ஆற்றுத்துறை இங்கிருந்து வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. அத்துறையைக் கடந்து மேற்குப்பக்கத்தில் உள்ள பெருமாவெளி எனும் கிராமத்திற்கு மக்கள் செல்வதுண்டு. ஆனால் தற்போது அத்துறை அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. முறக்காமடுத் துறையே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

இவ்விடத்தில் ஓடும் சந்தனமடு ஆறு சுமார் 200 மீற்றர் அகலம் கொண்டதாகும். கோடை காலத்தில் ஆற்றின் நடுப்பகுதியில் ஒன்றரை அடி ஆழத்தில் சிறிதளவே நீர் ஓடுகிறது. எனவே வாகனங்களில் இலகுவாக இத்துறையைக் கடக்கலாம். ஆனால் மாரி காலத்தில் அதிகளவில் நீர் ஓடுவதால் படகு மூலமாகவே ஆற்றைக் கடக்க முடியும். இக்காலப்பகுதியில் வாகனங்களில் பயணம் செய்வோர் இரண்டு படகுகளைக் இணைத்துக் கட்டிய சிறிய படகுப் பாலத்தின் மூலம் வாகனங்களை அக்கரைக்கு ஏற்றிச் சென்று பயணத்தைத் தொடர வேண்டும்.

ஆற்றைக் கடந்தவுடன் மேற்குப்பக்கமாகப் பாதை செல்கிறது. இப்பாதையில் 500 மீற்றர் தூரம் வரை உள்ள காட்டுப்பகுதி யானைகள் நடமாடும் இடமாகும். இப்பாதையில் 300 மீற்றர் தூரத்தில் ஆறு ஒன்று ஓடுகிறது. இது வெட்டு வாய்க்கால் என அழைக்கப்படுகிறது. இங்கிருந்து 200 மீற்றர் தூரத்தில் இன்னுமோர் சிற்றாறு ஓடுகிறது. இது கல்மடு ஆறு எனவும், இடகாலி ஆறு எனவும் பெயர் பெற்றுள்ளது. இவ்வாற்றை அடுத்து யானைகள் உட்புக முடியாத வகையில் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது.

வேலியை அடுத்து ஒரு சிறிய கிராமம் காணப்படுகிறது. இது வேரம் திடல் என அழைக்கப்படுகிறது. இக்கிராமம் அமைந்துள்ள பகுதி பண்டைய காலத்தில் வேலன் எனும் வன்னிய சிற்றரசனின் முக்கிய ஆட்சிப் பகுதியாக இருந்ததாகவும், அதனால் இக்கிராமம் வேலன் திடல் என அழைக்கப்பட்டு பின்பு வேரம் திடல் என மருவியதாகவும் ஊர் மக்கள் கூறுகின்றனர். இக்கூற்றை உறுதிப் படுத்தும் முகமாக கிராமத்தில் ஆங்காங்கே பண்டைய கற்தூண்களின் துண்டுகள் காணப்பட்டன. இக்கிராமத்தில் சுமார் 40 வீடுகள் காணப்பட்டன.

கிராமத்தின் முடிவில் ஒரு நாற்சந்தி காணப்படுகிறது. இங்கிருந்து வலது பக்கமாக வடக்கு நோக்கிச் செல்லும் பாதை பெருமாவெளி கிராமத்திற்கும், நேராக மேற்கு நோக்கிச் செல்லும் பாதை வெள்ளையன் சேனைக் குளத்திற்கும், குடாவெட்டைக் குளத்திற்கும் இடையில் கடைசிமலைப் பிரதேசத்தின் வடக்குப் பகுதியைச் சுற்றி ஈரளக்குளத்திற்கும், இடது பக்கமாக தெற்கு நோக்கிச் செல்லும் பாதை இலுக்குப் பொத்தானை கிராமத்திற்கும் செல்கிறது.

இலுக்குப் போத்தானைக்குச் செல்லும் வீதியில் 600 மீற்றர் தூரத்தில் சிறிய அம்மன் கோயிலும், அதன் அருகில் சிற்றாறு ஒன்றும் ஓடுகிறது. இது முன்பு குறிப்பிட்ட இடகாலி ஆறாகும். இவ்விடத்தில் இருந்து மேற்குப்பக்கமாக இரண்டு மலைகள் தெரிந்தன. இடது பக்கம் உள்ள மலையின் உச்சி செம்மஞ்சள் நிறத்திலும், பச்சை நிறத்திலும் காணப்பட்டது வலது பக்கம் உள்ள மலையின் உச்சியில் கோயில் காணப்பட்டது. அதுவே வேலோடு மலை முருகன் கோயிலாகும்..

இவ்விடங்களைக் கடந்து சுமார் ஒரு கி.மீ தூரம் சென்றதும் இலுக்குப் பொத்தானை அரசினர் பாடசாலையும், அதை அடுத்து கிராமமும் அமைந்துள்ளன. இங்கிருந்து

கிராமத்தின் எல்லையில் சுமார் 500 மீற்றர் தூரத்தில் ஒரு கந்தசுவாமிக் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த சில கல் பிள்ளையார் சிலைகளும், குமாரத்தான் வழிபாட்டுக்குரிய சில ஆயுதங்களும் இக்கோயிலில் காணப்படுகின்றன. கோயிலில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் கிராமத்தின் முடிவில் யானை வேலி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து யானைக்காடு தொடங்குகிறது.

இக்காட்டுப் பாதையின் வலது பக்கம் இலுக்குப் பொத்தானைக் குளம் அமைந்துள்ளது. இடது பக்கம் பல தட்டையான பாறைத் தொடர்கள் காணப்படுகின்றன. தெற்குப் பக்கமாக சுமார் ஒன்றரை கி.மீ தூரம் வரை பரந்து காணப்படும் இப்பாறைத் தொடர்கள் பொத்தானை மலைகள் என அழைக்கப்படுகின்றன. பொத்தானை மலைகளின் மேற்கில் உள்ள இன்னுமோர் தட்டையான மலைப்பறைத் தொடர் இருட்டு மலை என அழைக்கப்படுகிறது. இவற்றின் தெற்கில் முந்தன் குமாரவெளி என்னுமிடம் அமைந்துள்ளது.

இக்காட்டுப் பாதையில் சுமார் ஒரு கி.மீ தூரம் சென்றதும் ஒரு மரத்தின் கீழ் பிள்ளையார் கோயிலும், தெற்குப் பக்கமாக சிறிது தூரத்தில் ஒற்றைப் பனை மரமும், அதன் அருகில் நன்னீர்க் கிணறும் காணப்பட்டன. காட்டில் அல்லது ஊர் எல்லையில் காணப்படும்  ஒற்றைப் பனைமரம் காவல் தெய்வமான கருப்பண்ண சாமியின் உறைவிடம் என முதியவர்கள் கூறுவர்.

பிள்ளையார் கோயிலில் இருந்து உள்நோக்கிக் காட்டுக்குள் சிறிது தூரம் சென்றதும் ஒரு மலையடிவாரம் காணப்பட்டது. இது சுமார் 60 அடி உயரமான தட்டையான பரந்த மலையாகும். இம்மலையே செம்மஞ்சள் நிறத்தில் காணப்பட்ட மலையாகும்.

மலையின் உச்சிப் பகுதியில் செம்மஞ்சள் நிறத்தில் மண் மேடும், ஒரு புற்றும், குட்டையான மரங்கள் சிலவும் காணப்பட்டன. மண் மேடு வட்டவடிவமாகக் காணப்பட்டது. இங்கு பழமை வாய்ந்த செங்கட்டிகள் ஆயிரக்கணக்கில் சிதறிக் கிடந்தன. இது ஒரு தூபியின் சிதைவுகளாகும்.

மண் மேட்டின் நடுப்பகுதியில் மூன்று இடங்களில் 5 முதல் 10 அடி ஆழம் வரையில் குழிகள் தொண்டப்பட்டிருந்தன. புதையல் திருடர்கள் தமது கைவரிசையை இங்கே காட்டியுள்ளனர்.

இம்மலையை அடுத்து வேலோடு மலை காணப்படுகிறது. இங்கிருந்து பார்க்கும் போது வேலோடு மலை உச்சியில் உள்ள முருகன் கோயில் அழகாகத் தெரிகிறது. 

தூபி மலையின் தென்பகுதியில் ஓர் கட்டிடம் இருந்தமைக்கான ஆதாரங்களாக குழிக்கற்கள் சிலவும், கற்தூண்கள் சிலவும் காணப்பட்டன. இவ்விடத்தில் ஓர் சிறிய கற்சுனையும், அதன் கீழ் பகுதியில் சாந்து அரைக்கப் பயன் படுத்தப்பட்ட குழிகள் இரண்டும் காணப்பட்டன.


 


இம்மலையின் தென்மேற்கு அடிவாரத்தில் உள்ள பாறையில் ஓர் முக்கிய சின்னம் காணப் படுகிறது. அது பண்டைய பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட கல்வெட்டாகும்.

இக்கல்வெட்டு இரண்டு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.மேல் வரியில் 18 எழுத்துக்களும், கீழ் வரியில்  13 எழுத்துக்களும்  பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வெழுத்துக்களை ஆராய்ந்த போது இவை பிற்கால பிராமி எழுத்துக்களாகத் தெரிந்தன. பெரிய எழுத்துக்களில் ஆழமாக, தெளிவாக பின்வருமாறு கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது.

ல மஹநகொ ரொஜஹ தொகொலஹ நகொ விஹரொஹி                   கிரி கொஹதஹ அலி சகயொ திரெ

இவ்வெழுத்துக்களை பொருள்பட வாசிக்கும் போது பின்வருமாறு வாசிக்கலாம்.

ல மகாநாக ரஜஹ தகலஹ நாக விஹரஹி               

கிரி கஹதஹ அலி சகய திரெ


என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                         

வரலாற்று ஆய்வாளர்

இலங்கை


(மிகுதி நாளை தொடரும்...)


Monday, August 3, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, இராவணன் வெட்டிய வாய்க்கால் மற்றும் இராவணன் கட்டிய குளம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, இராவணன் வாய்க்கால் மற்றும் இராவணன் கட்டிய குளம்


என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                             NKS/188     2    ஆகஸ்ட்   2020

 


குறிப்பு:

(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

சிவபூமியின் சுவடுகளைத் தேடி ஆராய்ந்து கொண்டிருந்த வேளை கொடகே புத்தசாலையில் அவை பற்றிய சில குறிப்புகளை தேடிக் கொண்டிருந்தபோது, ஒரு நூலில்   சில அபூர்வமான, ஆச்சரியமான குறிப்புகளை வாசித்தேன். அவை மட்டக்களப்பு மாவட்டத்தில் இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, இராவணன் வெட்டிய வாய்க்கால் மற்றும் இராவணன் கட்டிய குளம் ஆகியவை பற்றி சில குறிப்புகள் ஆகும்.

இவ்விபரங்கள் பற்றிய உண்மைத்தன்மையை அறிவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில், மகாஓயா வீதியில் உள்ள உறுகாமம் என்னுமிடத்திற்குச் சென்றேன். அங்குள்ள தமிழ் மக்களிடம் இது பற்றி கேட்டபோது அவர்களுக்கு  இந்த விபரங்கள் பற்றித் தெரியவில்லை. பின்பு அருகில் இருக்கும் சிங்கள கிராமமான தெம்பிச்சிய எனும் இடத்துக்குச் சென்று விசாரித்தபோது  அவர்களிடம் சில தகவல்களைப் பெறக்கூடியதாக இருந்தது.

உண்மையில் இராவணன் பற்றிய விபரங்களை சிங்கள மக்களே அதிகளவில் தெரிந்து வைத்துள்ளனர். அதுபோல மலையகத் தமிழ் மக்களும் இராவணன் பற்றிய விபரங்களை தெரிந்து வைத்துள்ளனர். அவர்களே இராவணன் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதிலும், தெரிந்து வைப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் இராவணன் பற்றிய விடயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. இராவணனை சிங்கள மக்கள் தங்கள் மூதாதை என்று கூறத் தொடங்கிய பின் தான் தமிழர்களுக்கு இராவணன் பற்றிய அக்கறை வந்துள்ளது.  

இராவணனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்வெட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உறுகாமம் என்னுமிடத்தில் உள்ள ருகம் குளத்தின் மேற்குப் பக்கத்தில் உள்ள மலைப்பாறையில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இக்கல்வெட்டில் ராவண வபியே இம குவிர விஹரியட்ட தினி என எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது இராவணனின் குளத்தின் வரி குபேரனின் ஆலயத்திற்கு கொடுக்கப்பட வேண்டும் எனப் பொருள் படுகிறது. இக்கல்வெட்டின்படி இராவணன் கட்டிய குளமும், குபேரன் அமைத்த ஆலயமும் இப்பகுதியில் இருந்துள்ளமை தெரிய வருகிறது.

சுமார் 7000 வருடங்களுக்கு முன்பு இராவணன் கட்டிய குளம் ராவன் குளம் எனப் பெயர் பெற்றிருந்ததாகவும், பின்பு இது ரவன் குளம், ருவன் குளம் என மருவி பிற்காலத்தில் ருகம் குளம் என மாறிவிட்டதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.








                            இராவணன் வாய்க்கால் 

செங்கலடியிலிருந்து மகாஓயாவிற்குச் செல்லும் வழியில் உள்ள ருகம் குளமே கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள ராவணன் குளம் (ராவண வாவி) என ஆய்வுகள் கூறுகின்றன. இதன் மூலம் இலங்கையின் முதலாவது பழமையான குளம் ருகம் குளம் (உறுகாமம்) எனும் உண்மை தெரிய வருகிறது.

இக்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் இப்பகுதியில் இன்னுமோர் ஆதாரமும் உள்ளது. இப்பகுதியின் தென் மேற்கிலிருந்து வரும் கல்லோடை ஆறும், தெற்கிலிருந்து வரும் ரம்புக்கன் ஓயா ஆறு மற்றும் மஹா ஓயா ஆறு ஆகியவையும் ருகம் குளத்தின் தென்மேற்குப் பகுதியில் ஒன்றிணைந்து முந்தெனி ஆறு எனும் பெயரில் வடகிழக்கு நோக்கிப் பாய்கின்றது.

முந்தெனி ஆற்றிலிருந்து ஒர் கால்வாய் மூலம் ருகம் குளத்திற்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. இக்கால்வாயின் முதல் பகுதி இராவண எல (இராவணன் கால்வாய்) எனவும், பிற்பகுதி கோகில எல (கோகில கால்வாய்) எனவும் அழைக்கப்படுகிறது. முந்தெனி ஆற்றிலிருந்து கொலனிஸ்யாய, தெம்பிச்சிய ஆகிய கிராமங்கள்  வரைக்கும் உள்ள கால்வாயே இராவணன் கால்வாய் எனப் பெயர் பெற்றுள்ளது. பிற்காலத்தில் இக்கால்வாயின் பிற்பகுதி கோகில கால்வாய் எனப் பெயர் பெற்றுள்ளது.


இராவணன் காலத்தில் முந்தெனி ஆறு வற்றாத ஜீவ நதியாக இருந்திருக்க வேண்டும். எனவே இவ்வாற்றிலிருந்து ஒர் கால்வாயை வெட்டி ஒர் குளத்தை இராவணன் கட்டியிருக்க வேண்டும். எனவே தான் இராவணன் வெட்டிய கால்வாய் இரா வணன் கால்வாய் எனவும், அவன் கட்டிய குளம் இராவணன் குளம் எனவும் பெயர் பெற்று,காலப்போக்கில் திரிபடைந்துள்ளன. 

கோகில எல என்றழைக்கப்படும் கால்வாயின் அருகில் உள்ள மலைப்பாறையிலேயே இராவணன் குளம் என எழுதப் பட்டுள்ள பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. இக்கால்வாயின் வடக்கில் கித்துள்மலை அமைந்துள்ளது. கித்துள் மலையின் வடக்கில் கித்துள்வெவ எனும் சிறிய குளம் அமைக்கப் பட்டுள்ளது. கித்துள் மலையின் மேற்குப் பக்கத்தில், முந்தெனி ஆற்றின் வடக்கில் சிப்பிமடு என்னுமிடம் அமைந்துள்ளது. சிப்பி மடுவில் சுடுநீர் ஊற்று ஒன்றும் உள்ளது. 

 

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                       

வரலாற்று ஆய்வாளர்

இலங்கை


Sunday, August 2, 2020

காலி நகரின் அருகில் பண்டைய கோயில் இருந்த இடத்தில் பெளத்த விகாரை


காலி நகரின் அருகில் பண்டைய கோயில் இருந்த இடத்தில் பெளத்த விகாரை


என்.கே.எஸ்.திருச்செல்வம்

NKS/187     31  ஜூலை 2020

 


குறிப்பு:

(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

சிவபூமியின் சுவடுகளைத் தேடி அண்மையில் காலி நகருக்குச் சென்றேன். அங்கு கோவில கொடெல்ல என்ற இடத்தில் பண்டைய காலத்தில் ஓர் கோயில் இருந்தது பற்றி அறிந்து, அது பற்றி ஆய்வு செய்யச் சென்றேன். அங்கு பல அங்கு கோயில் பற்றிய சில தகவலகள் கிடைத்தன.  

காலி நகரில் இருந்து கொழும்புக்குச் செல்லும் வீதியில் ஒரு கி.மீ தூரத்தில் காலி பிரதான வைத்தியாசாலை அமைந்துள்ளது. அதை அடுத்து வலது பக்கத்தில் மகாமோதர குளம் காணப்படுகிறது. இக்குளத்தின் தென்கிழக்கில் பண்டைய காலத்தில் இந்துக் கோயில் ஒன்று அமைந்திருந்தது.

காலி வைத்தியசாலையை அடுத்து வலது பக்கம் செல்லும் போப்பே குறுக்குத் தெருவில் 200 மீட்டர் தூரத்தில் ஸ்ரீ புத்தசிங்க விஜேராம விகாரை எனும் பெளத்த விகாரை அமைந்துள்ளது. இவ்விடத்தில் தான் ஒல்லாந்தர் காலத்திற்கு முன்பு ஓர் இந்துக் கோயில் அமைந்திருந்தது. இக்கோயிலில் வணங்கப்பட்ட தெய்வம் எது என்பது சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் இங்குள்ள பண்டைய சின்னங்களை வைத்துப் பார்க்கும் போது இது ஓர் காளி கோயிலாக இருக்கலாம் என யூகிக்கக் கூடியதாக உள்ளது.

இக்கோயில் ஒல்லாந்தர் காலத்தில் அழிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு கோயில் இருந்த இடம் இடிபாடுகளுடன் மண் மேடாகக் காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ்விடம் கோவில கொடெல்ல என சிங்கள மொழியில் அழைக்கப்பட்டுள்ளது. கொவில கொடெல்ல என்பது கோயில் குவியல் எனப் பொருள்படும்.

அதன்பின்பு 1770 ஆம் ஆண்டு வெலவத்தே புத்தசிங்க எனும் பெளத்த பிக்கு இவ்விடத்தில் ஓர் பெளத்த விகாரையை அமைத்துள்ளார். அவ் விகாரையே தற்போது நாம் காணும் ஸ்ரீ புத்தசிங்க விஜேராம விகாரையாகும்.

பண்டைய கோயிலின் ஒரு சில சின்னங்கள் மட்டும் இங்கு தற்போது காணப்படுகின்றன. பண்டைய கோயிலின் நடுப்பகுதியில் இருந்த கதவு நிலையின் மேல்பகுதி இன்றும் இங்கு காணப்படுகிறது. இதில் சிம்மத்தின் சிற்பமும், மனித முகமும், குதிரை உடலும் கொண்ட ஒரு விலங்கின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. இதில் சக 1750 எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் பண்டைய கோயிலில் தெய்வச்சிலை ஒன்றும் இங்கே உள்ளது. இச்சிலை இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பண்டைய கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சின்னங்களை புகைப்படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை என்பது கவலையாக இருந்தது. மீண்டும் முயற்சி செய்வேன்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                       

வரலாற்று ஆய்வாளர்

இலங்கை


Saturday, August 1, 2020

கபிலித்தை முருகன் கோயில் மூலமூர்த்திக்கு கும்புக்கன் ஆற்றில் சிறப்புமிக்க அபிஷேகம்


கபிலித்தை முருகன் கோயில் மூலமூர்த்திக்கு கும்புக்கன் ஆற்றில் சிறப்புமிக்க அபிஷேகம்

 கடந்த வாரம் சென்ற கபிலித்தை புனித யாத்திரைப் பயணம்-பகுதி 2


என்.கே.எஸ்.திருச்செல்வம்  
NKS/186     27  ஜூலை 2020



குறிப்பு:

(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

 

நேற்றைய தொடர்ச்சி.....

நேரம் இரவு 10.30. கபிலித்தையில் கும்புக்கன் ஆற்றின் இக்கரையில் பக்தர்கள் அனைவரும் தங்கியுள்ளனர். இக்கரையில் உள்ள கபிலித்தை காவல் தெய்வம் கடவர சுவாமிக்கு நவகோடி சித்தர் பீட சுவாமிகள் விசேட பூசை நடத்திக் கொண்டிருந்தனர். நாமும் அப்போசையில் கலந்து கொண்டோம். சிலர் நித்திரை கொண்டிருந்தனர். சிலர் டிராக்டர் வண்டியில் உட்கார்ந்து பூசையை  கவனித்த வண்ணமும் இருந்தனர்.

இந்த சமயத்தில் ஆற்றின் அடுத்த கரை ஓரத்தில் சலசப்பு ஏற்பட்டதை அனைவரும் அவதானித்தனர். அங்கு பெரிய யானை ஒன்று நீர் குடித்துக் கொண்டிருந்தது. அதன் அருகில் காட்டுப் பன்றி ஒன்றும் நீர் குடித்துக் கொண்டிருந்தது. நீர் குடித்த யானை ஆற்றில் இறங்கி இக்கரைக்கு வர முயற்சித்தது. ஆற்றின் நடுப்பகுதிக்கு வந்தது. உடனே நித்திரையில் இருந்தவர்கள் அனைவரும் எழும்பி விட்டனர்.

எல்லோரும் யானையை நோக்கி டோர்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சினர். ஜீப் வண்டியின் மேலே பொருத்தப்பட்டிருந்த பெரிய விளக்குகள் ஆற்றை நோக்கி ஒளி வீசின. இக்கரையை நோக்கி வந்த யானை சிறிது நேரம் நின்றது. பின்பு ஆற்றிலே சுமார் 50 மீற்றர் தூரம் நடந்து சென்று இக்கரைக்கு ஏறியது.

அன்றைய இரவு இக்கரையில் கூடாரங்களிலும், டிராக்டர் வண்டிகளிலும், ஜீப் வண்டிகளிலும், தரையிலும் சுமார் 150 பேர் வரை தங்கியிருந்தனர். அனைவரும் எழுந்து நின்றனர். காவல் திவத்துக்கு பூசை நடந்து கொண்டிருந்தது. கரைக்கு வந்த யானை காட்டின் ஓரமாக நாம் இருந்த இடத்தின் பின்பக்கமாக வந்தது. பக்தர்கள் உண்ட மதிய உணவின் மிச்சங்களை ஒரு மரத்தின் கீழ் கொட்டியிருந்தனர். அந்த இடத்திற்கு வந்த யானை அங்கிருந்த உணவை உண்டு விட்டு காட்டுக்குள் சென்றது.

அதன் பின் காவல் தெய்வத்துக்கு பூஜை முடிந்தது. இரவு 12 மணியளவில் அனைவரும் படுத்துக் கொண்டனர். எங்களை அழைத்து வந்த ட்ராக்டர் சாரதிகள் ஒன்று கூடி நாங்கள் விழித்திருக்கிறோம் நீங்கள் உறங்குங்கள், காட்டுக்கு சென்ற யானை மீண்டும் எந்த நேரத்திலும் வரலாம் என்று கூறிவிட்டு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

சில மணிநேர உறக்கத்தின் பின் அதிகாலை நான்கு மணிக்கு எல்லோரும் விழித்தோம். சாரதிகள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். எழுந்தவுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். நள்ளிரவு 2 மணியளவில் மீண்டும் யானை வந்ததாகவும் கூடாரத்தில் இருந்த ஒரு அரிசி பையை தூக்கிக் கொண்டு அக்கரைக்கு சென்று விட்டதாகவும் கூறினர். நித்திரையில் எமக்கு இவை எதுவும் தெரியவில்லை.

அதிகாலை எல்லோரும் கும்புக்கன் ஆற்றில் நீராடினோம். உடைகளை மாற்றிக் கொண்டு காவல் தெய்வத்தை வணங்கி, அடுத்த வேலைகளை ஆரம்பித்தோம். இன்று சுவாமிக்கு அபிஷகம், பொங்கல் பூசை ஆகியவை நடத்த திட்டமிட்டிருந்தோம். நேற்று மாலை கோயிலில் இருந்த பொறுப்பாளரிடம் நாம் சுவாமிக்கு அபிசேகம் செய்ய உள்ளோம். சுவாமி சிலை ஒன்றை தர முடியுமா எனக் கேட்டோம். எந்த மறுப்பும் தெரிவிக்காமல் காலையில் வாருங்கள் தருகிறேன் என்றார்.

அதிகாலையில் ஒருபக்கம் நண்பர்கள் சிலர் பொங்கல் தயார் செய்து கொண்டிருந்தனர். அடுத்த பக்கம் சிலர் அவல், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை தயார் படுத்திக் கொண்டிருந்தனர். சிலர் பூசைப் பொருட்களை வெவ்வேறாக ஒழுங்கு படுத்தினர். பழங்கள், இளநீர், ஆகியவற்றை சிலர் வெட்டி தனித்தனியாக வைத்துக் கொண்டிரு தனர்.

பொழுது விடிந்தது. மெல்ல மெல்ல வெளிச்சம் தோன்றியது. தயார் படுத்திய பூஜை பொருட்கள், பழங்கள், பொங்கல் எல்லாவற்றையும் நண்பர்கள் ஆற்றின் மத்திக்குக் கொண்டு சென்றனர். சரியாக காலை 6 மணிக்கு மூன்று பேர் மட்டும் அக்கரையில் உள்ள கோயில் வளாகத்துக்குச் சென்றோம். ஏனெனில் அபிஷேகம் செய்ய சுவாமி சிலையைக் கொண்டு வர வேண்டும். கோயிலுக்குப் பொறுப்பாளர் இன்னும் அந்த இடத்துக்கு வரவில்லை. அவருக்காக காத்திருந்தோம். அந்த சமயத்தில் சட்டென்று ஓர் எண்ணம் மனதில் தோன்றியது.

இந்த பயணத்திற்கு என்னை அழைத்த நவகோடி சித்தர் பீடத்தின் இளைய சுவாமி கோபிநாத் அவர்கள் அப்போது என்னிடம் ஓர் மகிழ்ச்சியான தகவலை சொன்னார். போன வருடம் ஒரு இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் உதவியுடன் கபிலித்தையில் ஒரு சிவலிங்கத்தை தாம் ஸ்தாபித்ததாக அவர் சொன்னவுடன்  பேரானந்தம் அடைந்தேன். ஏனெனில் கபிலித்தை கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு தடவையும் என் மனதில் ஒரே ஒரு விடயம் வேதனை தரும். அதுதான் எல்லா சுவாமி சிலையும் இருக்கும் இவ்விடத்தில் ஒரு சிவலிங்கம் இல்லையே என்பது. போன வருடம் கோபிநாத் சுவாமி அவர்கள் மூலம் அந்த மிகப்பெரும் குறை நீங்கியுள்ளதை எண்ணி அவருக்கு கோடி நன்றிகளைத் தெரிவித்து மகிழ்ந்தேன். இம்முறை எனது கபிலித்தை யாத்திரையின் முக்கிய நோக்கமே அந்த சிவலிங்கத்தைப் பார்க்க வேண்டும் என்பதுதான். 

நேற்று மாலை நவகோடி சித்தர் பீடத்தின் யாகம் முடிந்தவுடன் சிவலிங்கம் பற்றிக் கேட்டேன். அப்போது ஒரு வேதனையான் விடயத்தை அவர் கூறினார். இரண்டு சில மாதங்களுக்கு முன்பு இங்கு வந்த அதிகாரம் மிக்க சிலர் இங்கிருந்த பல சிலைகளை எடுத்துச் சென்று விட்டதாக கூறினார். சிவலிங்கத்தையும் காணவில்லை என்றும், அதையும் கொண்டு சென்றிருப்பர் எனவும்   கூறினார். ஆவலோடு பார்க்க வந்த சிவலிங்கத்தை அகற்றி விட்டார்களே என மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்நிலையில் தற்போது சுவாமி சிலைகள் உள்ள வளாகத்துக்கு வந்துள்ளேன். அப்போது சிவலிங்கம் பற்றி என் மனதிலே திடீரென அந்த எண்ணம் தோன்றியது. உண்மையில் சிவலிங்கத்தை கொண்டு சென்று விட்டார்களா? தேடித் பார்க்கலாமா? எனும் ஓர் நப்பாசை மனதிலே தோன்றியது. அங்கிருந்த பிள்ளையார் முருகன் உட்பட எல்லா சிலைகளையும் வணங்கிய வண்ணம் சிவலிங்கம் எங்கேயாவது உள்ளதா எனத் தேடினேன். எங்கும் சிவலிங்கத்தைக் காணவில்லை.     

அந்த இடத்தின் மத்தியில் சிலைகள் உள்ளன. இவை வேலியமைந்து யாரும் உள்ளே போகாத வகையில் பாதுகாக்கப் பட்டிருந்தன. வெளியே முன்பக்கம் பூஜைத் தட்டுகள் படைக்க மூன்று மேசைகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் இடது பக்கம் பிள்ளையார் சிலை காணப்பட்டது. வலது பக்கம் 6 முகங்கள், 12 கைகளுடன் முருகன் சிலையும், இவற்றின் முன்பக்கம் கற்பூரம் கொளுத்தும் கற்களும் இருந்தன. எல்லாவற்றிற்கும் முன்பக்கம் தேங்காய் உடைக்கும் இடம் காணப்பட்டது. சிலைகளைச் சுற்றி வட்டவடிவில் சுமார் 10 அடி அகலத்தில் சுற்றுவீதி அமைந்துள்ளது. அதை அடுத்து காட்டு மரங்கள் காணப்படுகின்றன. சிலைகள் உள்ள இடத்தில் சிவலிங்கத்தைக் காணவில்லை. சற்று உள்ளே சென்று காட்டு மரங்கள் உள்ள இடத்தில் தேடித் பார்க்கலாம் என நினைத்தேன்.

முன்பக்கத்தில் இருந்து மரங்களின் கீழே சிவலிங்கத்தைத் தேடிக் கொண்டே சென்றேன். சிறிது நேரத்தில் கோயிலின் பின் பக்கம் இருந்த ஒரு மரத்தின் கீழ் சருகுகளால் அரைவாசி மூடப்பட்ட நிலையில் கல் ஒன்றின் மேற்பகுதி தெரிந்தது. உடனே சருகுகளை விலக்கி விட்டு பார்த்தபோது அங்கே ஒரு பகுதி உடைந்த நிலையில் நான் தேடிவந்த சிவலிங்கம் காணப்பட்டது. லிங்கத்தின் கீழ் ஆவுடையாரின் நீர் வழியும் பகுதி உடைத்து நீக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் இருந்த சதுரமான பீடத்தையும் காணவில்லை. இருப்பினும் இல்லை என்று நினைத்து வேதனையடைந்த ஒரு பொருள் இருந்ததால் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சிவலிங்கத்தை எடுத்து துடைத்து அதை மரத்தின் கீழே முன்பக்கமாக வைத்து வணங்கினேன்.

அப்போது பொறுப்பாளர் வந்தார். எங்களைப் பார்த்தவுடன் சிலைகள் உள்ள இடத்திற்குச் சென்று ஓர் சிலையை தூக்கிக் கொண்டு வந்து எமது கையில் தந்தார். அப்போது தான் பார்த்தோம். அது ஒன்றரை அடி உயரமான முருகனின் கற்சிலை. இக்கோயிலின் மூல மூர்த்தி. அவர் ஏதாவது சிறிய வெண்கலச் சிலையைத்தான் தருவார் என நினைத்தோம். ஆனால் மூல மூர்த்தியையே கொடுத்து விட்டார். இதை யாருக்கும் நான்  கொடுப்பதில்லை. கவனமாகக் கொண்டு செல்லுங்கள் என்றார். அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு, முருகனின் மூலமூர்த்தி கிடைத்த மகிழ்ச்சியில், அவருக்கு நன்றி கூறிவிட்டு சிலையுடன் ஆற்றிற்கு வந்தோம். சிலையைப் பார்த்ததும் நண்பர்கள் அனைவரின் முகத்திலும் அளவில்லா ஆனந்தம் தெரிந்தது.

ஆற்றில் முருகனுக்கு அபிஷகம் செய்வதற்கான அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. எங்களுடன் ஐயர்மார் இருவர் வந்திருந்தனர். மேசை மீது முருகனை வைத்து அபிஷேகம் செய்தனர். பால், பழங்கள், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், குங்குமம், மஞ்சள் என்று முருகப் பெருமான் அபிசேகத்தில் நீராடினார். நண்பர்கள் ஒவ்வொருவரும் தமது கையால் முருகனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தனர். அருகில் பூஜை ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த சிங்கள நண்பர்கள் அனைவரும் வரிசையாக வந்து முருகப் பெருமானுக்கு இளநீர் அபிசேகம் செய்தனர். அபிஷேகம் ஆரம்பித்து சில நிமிடங்களில் அக்கரைக்கு பக்கம் இருந்து அந்தப் பெரியயவர் வந்து ஆற்றில் இறங்கினார். இறங்கிய தும்பிக்கையான்  அங்கே நின்று தம்பி ஆறுமுகனுக்கு நடந்த இந்த சிறப்பான அபிஷேகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பல மாதங்களாக கோயிலில் இருந்த மூலமூர்த்திக்கு சுமார் ஒரு மணிநேரம் அபிஷேகம் நடைபெற்றது. சுவாமியை புதிய பட்டாடைகளுடன் அலங்கரிந்து ஆற்றிலிருந்து கோயிலுக்குக் கொண்டு சென்றோம். நண்பர்கள் மிகவும் பயபக்தியோடு இருவர் இருவராக மாறி மாறி மூலமூர்த்தியை தூக்கிச் சென்றனர். நம் ஊர்க் கோயில்களில் நடக்கும் திருவிழாவை நடுக்காட்டில் நடத்தியது போன்று இருந்தது. இப்படி ஓர் சிறப்பான நிகழ்வு நடக்கும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்கவில்லை என நண்பர்கள் பெருமிதம் கொண்டனர்.

கோயிலில் பொறுப்பாளர் எம்மில் ஒருவரை மட்டும் வேலி அடைக்கப்பட்ட உள்பகுதிக்கு சென்று பூசை செய்யச் சொன்னார். நண்பர் ஒருவர் உள்ளே சென்று பூசை செய்தார். முன்பக்கம் பொங்கல், அவல், பஞ்சாமிர்தம், பழங்கள், தாமரைப்பூக்கள் ஆகியவை படைக்கப்பட்டன. மாலைகளை சிலைகளுக்கு சாத்தினோம். நண்பர்கள் எல்லோரும் தேங்காய் உடைத்தனர்.

அப்போது திடீரென அங்கு ஒரு யானை வந்தது. சிலைகள் இருக்கும் இடத்தை நோக்கி வந்தது. பொறுப்பாளர் கையில் ஓர் நீண்ட குச்சியை வைத்துக் கொண்டு யானையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பெரியவர் அமைதியானவர். ஆனால் இவர் கொஞ்சம் குழப்பமானவர், எனவே யாரும் அருகில் வர வேண்டாம் என்றார். அது மண்ணை வாரி தன் தலையில் போட்டுக் கொண்டு ஆக்ரோஷமாக முன்னே வர எத்தனித்தது. கொஞ்சம் பொறு, சுவாமிமார் பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள், பூசை முடிந்தவுடன் உனக்குத் தருவார்கள், அதற்குள் என்ன அவசரம் என பொறுப்பாளர் யானையை பார்த்து கேட்டார்.    

சிறிது நேரத்தில் பூசை முடிந்தது. அப்போது ஆற்றில் நின்று கொண்டிருந்த பெரியவரும் வந்தார். இருவரும் வந்து நாம் ஓரத்தில் வைத்திருந்த அவல் சட்டியில் தும்பிக் கைகளை விட்டு அவலை சாப்பிட்டனர். அது முடிந்ததும் சின்னவர் அவ்விடத்தில் நிற்க பெரியவர் முன்னோக்கி வந்தார். நாம் கொடுத்த பழங்களை கையில் வாங்கி உண்டார். அங்கு வந்த சிங்கள பக்தர்களுக்கும் பிரசாதங்கள் கொடுத்தோம்.

அதன்பின்பு அங்கிருந்து புனித புளிய மரத்தடிக்குச் சென்று மூன்று சிலைகளையும், மரத்தையும் வணங்கினோம். அங்கும் கம்பி  வேலியின் உள்ளே செல்ல ஒருவரை மட்டும் அனுமதித்தனர். நான் மட்டும் உள்ளே சென்று மூன்று சுவாமி சிலைகளுக்கும் மாலை அணிவித்து வணங்கினேன். அனைவரும் உட்கார்ந்து தியானம் செய்தோம். சிறிது நேரத்தில் அங்கிருந்து செல்ல மனமில்லாமல் அவ்விடத்தை விட்டுச் சென்றோம்.

ஆற்றிற்கு வந்து எமது பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, அவ்விடத்தை முன்பு இருந்தது போல் நன்றாக சுத்தம் செய்தோம். அக்கரைக்குச் சென்று எண்கள் பொருட்களை ட்ராக்டர் வண்டிகளில் ஏற்றி விட்டு, காவல் தெய்வம் கடவர சுவாமியை வணங்கி விட்டு, சரியாக 10.30 மணிக்கு கபிலித்தையில் இருந்து கிளம்பினோம்.

இடையில் காட்டில் இரண்டு இடங்களில் ஓய்வெடுத்து விட்டு சுமார் 5 மணி நேர பயணத்தின் பின் 3.45 மணியளவில் கொட்டியாகல நண்பரின் வீட்டை அடைந்தோம். இந்தத் தடவை எமது கபிலித்தை புனித யாத்திரை எந்த இடையூறும் இன்றி இனிதே நிறைவு பெற்றமைக்கு எல்லாம் வல்ல சிவனுக்கு நன்றி கூறினேன்.

கொட்டியாகல நண்பரின் வெட்டில் எமக்கு பகல் உணவு தயாராக இருந்தது. உணவை உண்டு விட்டு நண்பருக்கு எல்லோரும் நன்றிகளை கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                       

வரலாற்று ஆய்வாளர்

இலங்கை


கடந்த வாரம் நாம் சென்ற கபிலித்தை புனித யாத்திரைப் பயணம்-பகுதி 1


கடந்த வாரம் நாம் சென்ற கபிலித்தை புனித யாத்திரைப் பயணம்-பகுதி 1

 


என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                            NKS/185     25 ஜூலை 2020

 

குறிப்பு:

(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

கபிலித்தை முருகன் கோயிலின் அமைவிடம், வழிகள், வரலாறு, பாரம்பரியம் மற்றும் பண்டைய சம்பிரதாயம் ஆகியவை பற்றி ஏற்கனவே நான் எழுதிய நான்கு கட்டுரைகளில் கூறியுள்ளபடியால் இந்தக் கட்டுரையில் நாம் சென்ற அனுபவத்தை மட்டுமே எழுதியுள்ளேன்.

யாள காட்டின் மத்தியில் உள்ள கபிலித்தை எனும் கபில வனத்தில் அமைந்திருக்கும் முருகன் கோயிலைத் தரிசிக்க கடந்த 3 ஆம் திகதி எமது ஆன்மீகப் பயணம் ஆரம்பமானது. ஏற்கனவே திட்டமிட்ட படி 4 ஆம் திகதி காலை 8 மணிக்கு சியம்பலாண்டுவையின் அருகில் உள்ள களுஒப்ப சந்தியில் அனைவரும் சந்தித்தோம். காலை 7 மணிக்கு இவ்விடத்திற்கு வருவதாக திட்டமிட்டிருந்த போதிலும் ஒரு மணிநேரம் பிந்தி விட்டது.

இந்தத் தடவை இப்புனித யாத்திரையில் என்னுடன் சேர்த்து மொத்தம் 19 பேர். இந்த நண்பர்கள் கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், திருகோணமலை, மட்டக்களப்பு, போரதீவு, ஓந்தாச்சிமடம், கல்முனை, திருக்கோயில் ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்தனர்.இவர்களில் 5 நண்பர்கள் மட்டுமே எனக்கு ஏற்கனவே பழக்கமானவர்கள். மிகுதி 13 பேரும் முகப்புத்தகம் மூலம் இணைந்த புதிய நண்பர்கள். இரண்டு வேன் வண்டிகள், மூன்று கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் நாம் வந்திருந்தோம். அனைவரும் அவ்விடத்தில் ஒருவருக்கொருவர் நேரில் அறிமுகமானோம்.

 

இவ்விடத்தில் இருந்து மேலும் 20 கி.மீ தூரத்தில் உள்ள கொட்டியாகலைக்கு செல்ல வேண்டும். அந்த நேரத்தில் கொழும்பில் இருந்து வந்த காரில் சிறு கோளாறு காணப்பட்டதை அறிந்தோம். மிகவும் சூடான நிலையில் இருந்த அந்த வண்டியை ஒரு மணித்தியாலம் சென்ற பின்பே மீண்டும் செலுத்த முடியும்.

இந்நிலையில் கொட்டியாகலவில் உள்ள நண்பருடன் தொடர்பு கொண்டு இச்சந்தியில் உள்ள அவரின் நண்பரின் கடையில் அந்தக் காரை நிறுத்தி விட்டு எல்லோரும் அங்கிருந்து கொட்டியாகல நோக்கிக் கிளம்பினோம்.

இடையில் ஓடும் விலா ஓயா பாலத்தின் அருகில் ஓர் சிறிய கோயில் காணப்பட்டது. அங்கு உள்ளே காவல் தெய்வம் கடவர தெவியாவின் சிலையும், வெளியே விநாயகரின் சிலையும் காணப்பட்டன. உடனே வண்டியில் இருந்து இறங்கி எமது கபிலித்தை புனித யாத்திரை எந்த வித இடையூறும் இன்றி நல்லபடியாக நிறைவுற வேண்டும் என எல்லோரும் விநாயகரை வேண்டினோம். விநாயகருக்கு அங்கு தேங்காய் உடைத்து வணங்கி விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.

காலை 10 மணியளவில் கொட்டியாகலவில் நண்பரின் வீட்டை அடைந்தோம். அங்கு எமக்காக இரண்டு டிரக்டர் வண்டிகள் காத்திருந்தன. அத்தோடு எம் அனைவருக்கும் காலை உணவும், பகல் உணவும் பொதி செய்யப்பட்டு தயாராக இருந்தன. காலை உணவை எல்லோரும் உண்ட பின் வண்டிகளில் ஏறிக்கொண்டோம். 10.45 மணிக்கு வண்டிகள் இரண்டும் கபிலித்தை வனத்தை நோக்கிப் புறப்பட்டன.

இந்தத் தடவை எம்மைக் கூட்டிக் கொண்டு சென்ற பாதை ஓர் புதிய பாதையாக இருந்தது. இப்பாதையில் கற்பாறைகளும், வெளிகளும், பற்றைகளுமே அதிகளவில் காணப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்தின் பின் ஓர் மரத்தடியில் 10 நிமிடம் ஓய்வு. வெட்ட வெளி என்பதால் வெய்யில் சுட்டெரித்தது. நண்பர்கள் தொப்பிகள், வேட்டித் துண்டுகள் மூலம் தலையை போர்த்திக் கொண்டனர்.

2 மணி நேரம் வெய்யிலிலே பயணம் செய்தோம். பகல் 12.45 மணியளவில் தான் அடர்ந்த காட்டுக்குள் வண்டிகள் புகுந்தன. காட்டுக்குள் புகுந்த போதுதான் முதல் நாள் காட்டில் மழை பெய்துள்ளமை தெரிய வந்தது. பல இடங்களில் பாதை சேற்றுக் குழிகளாகக் காணப்பட்டது.

சுமார் 10 நிமிட பயணத்தின் பின் வண்டிகள் நிறுத்தப்பட்டன. அது கபிலித்தைக்கு செல்பவர்கள் ஓய்வு எடுத்துச் செல்லும் இடம். அங்கு கபிலித்தையில் இருந்து வந்த ஓர் டிரக்டர் வண்டி காணப்பட்டது. ஒரு மரத்தின் முன்பக்கம் 6 அடி உயரத்தில் ஒரு முருகன் சிலை வைக்கப்பட்டிருந்தது. எல்லோரும் இறங்கி முருகனுக்கு கற்பூரம், ஊதுபத்தி கொளுத்தி வணங்கினோம். அவ்விடத்தில் எல்லோரும் தேநீர் பருகிய பின் மீண்டும் பயணம் தொடர்ந்தது.

இங்கிருந்து அடர்ந்த காட்டின் ஊடாக பயணம் சென்று கொண்டிருந்தபோது கபிலித்தையில் இருந்து வந்த பல வண்டிகள் எம்மைக் கடந்து சென்றன. பல இடங்களில் எதிரே வந்த வண்டிகளுக்கு வழிவிட்டு மாற்று வழியில் வண்டிகள் சென்றன. சில ஜீப் வண்டிகளும் கபிலித்தையில் இருந்து வந்தன. சாரதிகள் பாதையில் காணப்பட்ட சேற்றுக் குழிகளுக்குள் மிகவும் லாவகமாக வண்டிகளை செலுத்தினர். வண்டிகள் ஒரேயடியாக பள்ளத்தில் விழுந்து மேட்டில் ஏறின. சில இடங்களில் பெட்டிகள் கவிழ்ந்து விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு நூலளவில் வீழ்ந்து தப்பி எழும்பின. அப்போது ஒரு இடத்தில் எண்கள் வண்டி சேற்றுக் குழியில் இறுகி விட்டது. உடனே அடுத்த வண்டியுடன் சங்கிலியால் கட்டி இழுத்து எடுத்தோம்.

ஓர் இடத்தில் எங்கள் இரண்டு வண்டிகளும், எதிரே வந்த இரண்டு வண்டிகளும் சேற்றுக் குழிகள் இருந்த இடத்தில் சந்தித்தன. வண்டிகளுக்கு செல்ல இடம் கொடுப்பதில் சங்கடங்கள் இருந்தன. அப்போதுதான் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த வண்டிகளில் ஒன்றின் பெட்டி திடீரென சேற்றுக் குழிக்குள் குடை சாய்ந்தது. உடனடியாக எல்லோரும் பாய்ந்து ஒரு நொடிக்கும் வண்டியை நிமிர்த்தி விட்டோம். அந்த வண்டியில் வந்த சிறுவனின் காலில் சிறு சிராய்ப்புக் காயம் ஏற்பட்டிருந்தது. சிறுவனின்  காலுக்கு முதலுதவி செய்த பின் பயணம் தொடர்ந்தது. இவ்வாறு பயணம் செய்து மாலை 4.20 மணியளவில் கபிலித்தை, கும்புக்கன் ஆற்றங்கரையை அடைந்தோம். இன்றைய பயணத்திற்கு ஐந்தரை மணி நேரம் எடுத்துள்ளது.

எல்லோரும் முருகப் பெருமானுக்கு நன்றி கூறிய வண்ணம் வண்டியில் இருந்து இறங்கி, ஆற்றுக்குச் சென்றோம். ஆற்றில் முழங்கால் அளவு நீர் ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றின் மத்தியில் உள்ள மணல் பரப்பில் நவகோடி சித்தர் பீட சுவாமிகளின் யாகம் நடந்து கொண்டிருந்தது. இந்த சித்தர் பீடத்தின் இளைய சுவாமியின் அழைப்பின் பேரிலேயே இம்முறை கபிலித்தை பயணத்தை ஏற்பாடு செய்திருந்தேன். அந்த யாகத்திலும் கலந்து கொள்ள வேண்டும்.

நண்பர்கள் எல்லோருக்கும் நல்ல பசி. ஆற்றில் இறங்கிக் கை கால் முகத்தைக் கழுவி விட்டு மதிய உணவை உண்டோம். சிறிது நேரத்தில் எல்லோரும் பண்டைய வேடர்கால பாரம்பரிய முறைப்படி ஆற்றில் குளிக்க ஆயத்தமானோம். நேரம் அப்போது மாலை 4.50 மணி.

ஆற்றின் நடுப்பகுதியில் காணப்பட்ட மண் நிறைந்த பகுதியில் ஏழு சிறிய பூவல் கிணறுகளை தோண்டினோம். அதில் மஞ்சள் தூளைக் கலக்கி, நாம் கொண்டு வந்த ஏழு வகையான பூக்களை தூவி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிணற்றிலும் ஏழேழு தடவை கைகளில் நீரை அள்ளி தலையில் ஊற்றிக் குளித்தோம். அதன் பின் கும்புக்கன் ஆற்றின் ஆனந்தக் குளியல் நடைபெற்றது. ஐந்து மணி நேர பயணக் களைப்பில் பலர் நீரில் இருந்து கரையேற மனம் இல்லாமல் கிடந்தனர்.  

இருப்பினும் இருள் சூழ்வதற்குள் சுவாமியையும், புனித புளிய மரத்தையும் தரிசிக்க வேண்டும். கபிலித்தைக்கு வரும் பலர் வந்தவுடன் சில மணிநேரம் குளிப்பர். பின்பு உணவு சமைத்து சாப்பிட்டு விட்டு, ஓய்வெடுப்பர். இரண்டாம் நாள் காலையில் தான் சுவாமி தரிசனம் செய்வர். ஆனால் நான் அழைத்துச் வருபவர்களை முதல் நாளே சுவாமி தரிசனம் செய்யக் கூட்டிச் செல்வேன். ஏனெனில் இப்படி ஓர் அற்புதமான கோயிலுக்குச் சென்றவுடன் சுவாமியைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலோடு தான் எல்லோரும் வருவர். எனவே கோயிலையும், சுவாமியையும் பார்க்காமல் அவர்களுக்கு அந்த இரவில் நிம்மதியாக உறங்க முடியாது. எனவே தான் வந்த முதல் நாளே முதல் நாளே கோயிலுக்கு அழைத்துச் செல்வேன். 

குறிப்பிட்ட நேரத்திற்குள் நண்பர்களை கரையேற்றினேன். அவசரமாக உடை மாற்றிக் கொண்டோம். ஆற்றின் மத்தியில் நடந்த நவகோடி சித்தர் பீட யாகத்தில் கலந்து கொண்டோம். மாலை 6 மணிவரை அங்கு இருந்தோம். அதன்பின் சுவாமியை தரிசிக்க ஆற்றின் அக்கரைக்குச் சென்றோம்.

அக்கரையில் நின்று கொண்டிருந்த இராணுவ சிப்பாய் சற்று நேரத்தில் இருள் சூழ்ந்து விடும், காட்டு மிருகங்கள் வரும் நேரம், விரைவாக தரிசனம் செய்து விட்டு வாருங்கள் என்று எம்மை அனுப்பியதோடு எமக்குப் பாதுகாப்பாக எம்மோடு வந்தார். அவர் கையிலே 5 அடி நீளமான ஓர் குச்சி இருந்தது. அதுதான் அவருடைய ஆயுதம்.

கபிலித்தையில் மூன்று இடங்களில் வணக்கத் தலங்கள் உள்ளன. முதலாவது அரச மரம். இரண்டாவது சிலைகள் நிறைந்த இடம். இங்குதான் பூஜை மற்றும் படையல் செய்யலாம். மூன்றாவது புனிதமிக்க புளியமரம். ஆற்றங்கரையில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் இருந்த முதலாவது இடத்திற்கு விரைவாகச் சென்றோம். அங்கு அரச மரமும், புத்த பகவானின் சிலையும் உள்ளன. புத்தரை வணங்கி அரச மரத்தை வலம் வந்தோம். அடுத்ததாக  150 மீற்றர் தூரத்தில் இருந்த சிலைகள் உள்ள இடத்திற்கு சென்று அங்கு உள்ள எல்லா சிலைகளையும் வணங்கினோம். நண்பர்கள் மிகவும் அமைதியாக பயபக்தியுடன் சுவாமி சிலைகளை வணங்கினர். சென்ற தடவை வந்தபோது இங்கு நான் கண்ட சிலைகளில் பலவற்றைக் தற்போது காணவில்லை. அவற்றிற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

மூன்றாவதாக உள்ளது புனித புளிய மரம். இங்கிருந்து 100 மீற்றர் தூரத்தில் அவ்விடம் அமைந்திருந்தது. மயான அமைதி நிலவிய ஒற்றையடிப் பாதை வழியாக புனிதமான புளிய மரத்தடிக்குச் சென்றோம். சிறிது தூரத்தில் அந்த புனித இடம் தெரிந்தது.

முன்பு பார்த்ததை விட முற்றிலும் வித்தியாசமாக அந்த இடம் காணப்பட்டது. முன்பு பல சிலைகள் காணப்பட்ட இப்புனித புளிய மரத்தடியில் தற்போது மூன்று சிலைகள் மட்டுமே காணப்பட்டன. மரத்தின் முன் பக்கம் ஒன்றும், பின்பக்கம் ஒன்றும், மரத்தின் மத்தியில் ஒன்றும் காணப்பட்டன. மரத்தில் இருந்து சுமார் 20 அடி தூரத்தில் சுற்றிவர கம்பி கட்டப்பட்டு அதன் உள்ளே யாரும் சென்று புனித மரத்தை தொட்டு வணங்க முடியாத வண்ணம் தடை செய்யப்பட்டிருந்தது.

நண்பர்கள் அனைவரும் நிசப்தமாக சென்று அந்த அதிசய மரத்தைப் பார்த்து கைகூப்பி வணங்கி மரத்தை சுற்றி வந்தனர். அப்போது இராணுவ சிப்பாய் நீண்ட குச்சியுடன் அங்கு வந்தார். என் அருகில் வந்தவர் மெல்லிய குரலில் பெரிய யானை வந்து விட்டது, எல்லோரும் சத்தம் போடாமல் போய் விடுவோம் என்றார். நாளை வந்து ஆறுதலாக தியானம் செய்யலாம், இப்போது அமைதியாக செல்வோம் என நண்பர்களுக்குக் கூறினேன். எல்லோரும் அங்கிருந்து மெதுவாக சிலைகள் இருக்கும் இடத்திற்கு வந்தோம்.

அங்கு நண்பர்களை அதிர்ச்சி அடையச் செய்யும் அந்தக் காட்சியைக் கண்டனர். சுமார் 12 அடி உயரமான யானை அவ்விடத்தில் நின்று கொண்டிருந்தது. எம்மைப் பார்த்தவுடன் எமை நோக்கி வர முயன்றது. உடனே இராணுவ சிப்பாய் முன்னால் சென்று அவர் வைத்திருந்த நீளமான குச்சியை யானையின் முன்னே நீட்டினார். அது தானாக பின் வாங்கியது. அப்போது தான் அந்த சின்னக் குச்சியின் மகிமை தெரிந்தது. அந்த சாதாரண குச்சி அவ்விடத்தில் ஓர் அங்குசமாக பயன் படுத்தப்பட்டது. விரைவால் அனைவரும் ஆற்றங்கரைக்குத் திரும்பினோம். ஆற்றைக் கடந்து அடுத்த கரைக்கு வந்தோம். இருட்டி விட்டது.

அடுத்த நாள் காலை பொங்கல் வைக்க வேண்டும். பூஜை செய்ய வேண்டும். எனவே இரவே எல்லா பொருட்களையும் ஒழுங்கு படுத்தினோம். நாம் இரவு உணவுக்காக வெட்டப்பட்ட பாண் வாழைப்பழம், ஜேம் ஆகியவற்றை எடுத்து அனைவரும் உண்டோம். ட்ராக்டர் வண்டியில் சிலரும் நிலத்தில் சிலரும் உறங்க ஆயத்தமானோம். இரவில் நவகோடி சித்தர் பீட சித்தர் சுவாமிகள்  கபிலித்தையின் காவல் தெய்வமான கடவர தெவியாவுக்கு பூசை நடத்தினர். நாமும் அதில் கலந்து கொண்டோம்.  அன்றைய இரவும், அடுத்த நாள் காலையும் சில முக்கிய சம்பவங்கள் நடைபெற இருந்ததை யாரும் அறிந்திருக்கவில்லை. ஏன் நானும்தான்...

(மிகுதி தொடரும் ..)                           

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                       

வரலாற்று ஆய்வாளர்

இலங்கை