Tuesday, June 30, 2020

இராவணன் கோணேஸ்வரப் பெருமானையும், கேதீஸ்வரப் பெருமானையும், ஒரே நேரத்தில் இருந்து வணங்கிய மலை


இராவணன்  கோணேஸ்வரப் பெருமானையும், கேதீஸ்வரப் பெருமானையும்ஒரே நேரத்தில் இருந்து வணங்கிய மலை


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/183       01 ஜூலை 2020


குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)


சிவபூமியின் சுவடுகளைத் தேடி ஆராய்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், யார் இந்த இராவணன் எனும் நூலை நான் எழுதிக் கொண்டிருந்த போது, இராவணன் காலத்தில் சிவலிங்கங்கள் இருந்த  இடங்கள் எவை எனத் தேடினேன்.

இராவணன் இலங்கையில் ஆயிரக்கணக்கான சிவலிங்கங்களை ஸ்தாபித்து வணங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இராவணன் காலத்தில் இருந்த லங்காபுரி எனும் இராவணன் நாடு கடற்கோளினால் அழிந்த பின் இராவணன் நாட்டின் எஞ்சிய சிறு பகுதியே இன்றைய இலங்கை என்பது வால்மீகி இராமாயணம் மூலம் அறியப்படுகிறது.

இதன்படி இராவணன் ஸ்தாபித்த சிவலிங்கங்களில் ஏராளமானவை அழிந்து போய் விட்டன. இருப்பினும் கடற்கோளுக்குத் தப்பிய இன்றைய இலங்கையில் எஞ்சிய சிவலிங்கங்கள் இருந்திருக்க வேண்டும். அப்படி எஞ்சிய சிவலிங்கங்கள் எங்கிருந்தன எனத் தேடியபோது, 38 சிவலிங்கங்கள் இருந்த இடங்களை அடையாளம் காண முடிந்தது.

அவற்றில் ஒரு இடம் தான் இலக்கு மலை. இலக்கு மலையின் உச்சியில் உள்ள ஓர் இடத்தில் இராவணன் தனது புஷ்பக விமானத்தை நிறுத்தி வைத்து விட்டு சிவலிங்க வழிபாடு செய்ததாகவும், இப்பகுதியில் உள்ள மக்கள் இராவணனை ஓர் பலம் மிக்க சக்தியாக நம்புவதாகவும் மாத்தளையில் வசிக்கும் நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார்.

அன்று முதல் இலக்கு மலைக்கும், இராவணனுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி ஆராய்ந்தேன். அப்போதுதான் பல ஆச்சரியமான விடயங்கள் கிடைத்தன.

இராவணன் இம்மலையில் இருந்து காலை வேளையில் திருக்கேதீஸ்வரப் பெருமானையும், திருக்கோணேசப் பெருமானையும் வணங்குவதாகவும் தகவல்கள் கிடைத்தன.

இத்தனை சிறப்புமிக்க இலக்குமலையைப் பார்க்க வேண்டும் என ஆவலுடன் இருந்தேன். அதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தது. எனது அலுவலக நண்பர்களுடன் அந்தப் பயணம் அமைந்தது.

மாத்தளை நகரில் இருந்து வடக்கு நோக்கி தம்புள்ளைக்கு செல்லும் வீதியில் உள்ள ரத்தொட்ட சந்தியில் இருந்து கிழக்குப் பக்கமாக செல்லும் வீதியில் 30 கி.மீ தூரத்தில் இலக்கு மலை அமைந்துள்ளது. நக்கீள்ஸ் மலைத்தொடரில் 900 மீற்றருக்கு மேல் உயரமான 35 முக்கிய மலைக்குன்றுகளில் இலக்கு மலைக் குன்றும் ஒன்றாகும்.

குறிப்பிட்ட நாளில் வான் வண்டி மூலம் பயணம் செய்து பிற்பகல்  2 மணியளவில் இலக்கு மலையில் இராவணன் தியானம் செய்த இடத்தை அடைந்தோம். பாதையின் இடது பக்கம் கொஞ்சம் பற்றைகள் இருந்தன. அவற்றைக் கடந்தவுடன் அந்த இடத்தைப் பார்த்தேன். மிகவும் ஆச்சரியமாக இருந்தது.



சுமார் 3000 அடிகள் உயரமான இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ஓர் சமதரை காணப்பட்டது. இத்தரையின் நடுப்பகுதியில் தரையில் சமதள பாறை அமைந்துள்ளது. உயரமான பகுதியில் இருந்து வரும் நீர் ஊற்று அப்பாறையின் நடுவில் ஓடிக்கொண்டிருந்தது. நடுப்பகுதியில் இருந்து சுமார் 10 பாகை வடக்கு நோக்கி பாறை உயர்ந்து கொண்டே போனது. கற்பாறையின் மேல் மிகவும் மெல்லிய அளவில் மண் மூடப்பட்டு அதில் புல் வளர்ந்திருந்தது. இளம்பச்சை வெல்வேட் துணி விரித்தது போல புல்தரை காணப்பட்டது.

உண்மையில் அது ஓர் குட்டி விமானத் தளம் போல் தான் இருந்தது. இராவணன் இவ்விடத்தில் தான் தனது புஷ்பக விமானத்தை நிறுத்திவிட்டு இப் புல்தரையின் உச்சிப் பகுதிக்குச் சென்று அங்கிருந்து திருக்கேதீஸ்வரத்தையும், திருக்கோணேஸ் வரத்தையும் தரிசிப்பானாம். சமதரையின் தொடக்கப் பகுதியில் இருந்து சுமார் 600 மீற்றர் தூரம் நடந்து சென்று அதன் உச்சிப் பகுதியை அடைந்தோம். பலமாகக் காற்று வீசியது. அதனால் உச்சியின் ஓரத்துக்குச் செல்ல முடியவில்லை. ஓரத்தில்  படுபாதாளம் உள்ளது.




இவ்விடம் தான் இராவணன் தியானம் செய்யும் இடமாம். உண்மையில் பனி, முகில் மூட்டம் இல்லாத தெளிவான வானிலையில், மிகத் தூரம் வரை பார்க்கக்கூடிய தொலை நோக்கிக் கண்ணாடியில் பார்த்தால் வடமேற்கில் திருக்கேதீஸ்வரத்தையும், வடகிழக்கில் திருக்கோணேஸ்வரத்தையும் நாமும் பார்க்கலாம் போல் அவ்விடம் தோன்றியது. ஏனெனில் இலக்கு மலை மத்திய மலை நாட்டின் வடக்குப் பக்கத்தில் உள்ள உயர்ந்த மலைப் பகுதியாகும். இம்மலையின் வடக்குப் பக்கம் உள்ள மலைகள் எல்லாம் இம்மலையை விட உயரம் குறைந்தவைகளாகும்.
  
சிவனொளிபாதமலை உச்சியில் இருந்து 74 கி.மீ தூரத்தில் இருக்கும் கொழும்புத் துறைமுகத்தை தொலைநோக்கிக் கண்ணாடி  இல்லாமல் சாதாரணமாக நான் பார்த்துள்ளேன். இலக்கு மலையில்  இவ்விடத்தில் இருந்து வடமேற்கில் 179 கி.மீ தூரத்தில் திருக்கேதீஸ்வரமும், வடகிழக்கில் 126 கி.மீ தூரத்தில் திருக்கோணேஸ்வரமும் அமைந்துள்ளன.

இராவணனால் வழிபடப்பட்ட சிவலிங்கம் ஒன்று இங்கிருந்து  கிடைக்கப் பெற்றுள்ளது. இது 6 அடி உயரமும், 3அடி அகலமும் கொண்ட முட்டை வடிவுடைய லிங்கக் கல்லாகும்.

இலக்கு மலை இராவணனின் பாட்டன் புலத்தியரின் மனம் கவர்ந்த மலையாகும். புலத்தியர் இம்மலையிலிருந்த வண்ணம் தனது தலைநகரான புலத்தி நகரின் அழகைப் பார்த்து ரசிப்பதாக, இம் மலைப்பிரதேசத்தில் உள்ள மக்கள் கர்ணபரம்பரையாக ஓர் செய்யுளைப்பாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பாடல்
புலத்தி முனிவர் தவம் செய்யும் மலை,
இராட்சஷ வீரர்கள் மரியாதையுடன் தலைவணங்கும் மலை,
இரவு பகலாக புலத்தி நகரம் தெரியும் மலை,
அதுவே இந்த லக்கல மலை
எனக் கூறுகிறது.



இப்பாடலின் படி இராவணனின் பாட்டனாரான புலத்திய முனிவர் இவ்விடத்தில் இருந்து தவம் செய்துள்ளார். அவரைப் பின்பற்றி இராவணனும் இங்கு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வணங்கியுள்ளான்.

இராவணன் தியானம் செய்ததாகக் கருதப்படும் இப்புல் வெளி சிங்கள மொழியில் பிட்டவல பத்தன எனவும், இவ்விடம் அமைந்துள்ள இலக்கு மலை லக்கல எனவும் அழைக்கப்படுகிறது. இவ்விடத்தில் தான் புஞ்சி லோகாந்தய அல்லது மினி வேல்ஸ் என்ட் என்றழைக்கப்படும் இடம் அமைந்துள்ளது. இப்படிபட்ட உன்னதமான, அழகிய, அரிய இடமான இலக்கு மலையில், இராவணன் தியானம் செய்த இடத்திற்குச் சென்று, பார்த்த பெரும் திருப்பியோடு அங்கிருந்து திரும்பினேன்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

Sunday, June 28, 2020

நெலும் கன்னியவில் இருந்த விஷ்ணு கோயிலின் சிதைவுகளில் இருந்து வெளிப்பட்ட சிலைகளைத் தேடிச் சென்ற ஆய்வுப் பயணம்


நெலும் கன்னியவில் இருந்த விஷ்ணு கோயிலின் சிதைவுகளில் இருந்து வெளிப்பட்ட சிலைகளைத் தேடிச் சென்ற ஆய்வுப் பயணம்  


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/182     28 ஜூன் 2020




குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)


சிவபூமியின் சுவடுகளைத் தேடி அனுராதபுரத்துக்குச் சென்று, அங்குள்ள ஜேதவனாராம தொல்பொருள் காட்சிச் சாலையில் இருந்த சிலைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது  அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் அத்தொல்பொருள் காட்சிச் சாலையில் உள்ள இந்து தெய்வ வெண்கலச் சிலைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது அவர் ஒரு முக்கிய தகவலைக் கூறினார்.

இங்கிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள நெலும் கன்னிய என்னுமிடத்தில் அண்மையில் சில வெண்கலச் சிலைகள் கிடைத்துள்ளதாகக் கூறினார். அவை பற்றிய விபரங்களைக் கேட்டபோது தனக்குத் தெரியாது எனவும், நெலும் கன்னியவுக்குச் சென்று அங்குள்ள விகாரையில் விசாரித்தால் விபரங்களைப் பெறலாம் எனக் கூறினார். உடனே அவரிடம் இருந்து அங்கு செல்வது பற்றிய விபரங்களைப் பெற்றுக் கொண்டு, மாத்தளைக்குச் செல்லும் பேரூந்தில் ஏறினேன்.

அனுராதபுரத்தில் இருந்து மிகுந்தலைக்குச் செல்லும் வீதியில் 7 கி.மீ தூரத்தில் உள்ள மாத்தளை சந்தியின் தெற்கில் மாத்தளை வீதியில் மேலும் 5 கி.மீ தூரத்தில் இருந்த களத்தேவ எனும் சந்தியில் இறங்கினேன். இச்சந்தியின் கிழக்குப் பக்கம் ஒன்றரை கி.மீ தூரத்தில் நெலும் கன்னிய என்னுமிடம் உள்ளது. சந்தியில் நின்ற ஒரு முச்சக்கர வண்டியில் ஏறி கிழக்குப் பக்கமாகச் செல்லும் வீதியில் 2 கி.மீ தூரத்தில் இருந்த நெலும் கன்னிய விகாரைக்குச் சென்றேன். அங்கிருந்த பிக்குவிடம் சிலைகள் பற்றிய விபரங்களையும், சிலைகள் கண்டெடுக்கப்பட்ட கோயிலின் இடிபாடுகள் பற்றியும் கேட்டேன்.

இங்கிருக்கும் குளத்தின் பின்பக்கம் உள்ள காட்டுப்பகுதியில் இருந்த தேவாலய சிதைவுகளில் இருந்து மூன்று சிலைகள் கண்டெடுக்கப் பட்டதாகவும், அவை கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும் கூறினார். அத்துடன் இது பற்றிய ஒரு குறிப்பையும் என்னிடம் காட்டினார். அக்குறிப்பில் இச்சிலைகளின் படம் ஒன்றும் இருந்தது. அவரின் அனுமதியுடன் அக்குறிப்பை புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

கோயில் சிதைவுகள் இருக்கும் இடத்துக்குச் செல்வது பற்றி பிக்குவிடம் கேட்டபோது, அவ்விடத்துக்கு செல்வதற்கு பாதை எதுவும் இல்லை எனவும், குளக்கரை வழியாக பற்றைக் காட்டுக்குள் நடந்து செல்ல வேண்டும் எனவும் கூறினார். ஊர்க்காரர்கள் யாரையாவது எனக்கு வழிகாட்டியாக அனுப்ப உதவி செய்யுமாறு அவரிடம் கேட்டேன். ஆனால் காரியம் கைகூடவில்லை.

நான் வந்த அனுராதபுரப் பயணத் திட்டத்தில் இல்லாத திடீர் பயணமாக இது இருந்தபடியால் இன்னுமோர் நாளில் இங்கு வந்து அவ்விடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கலாம் என எண்ணியபடி, பிக்குவை வணங்கி, நன்றி கூறி விட்டு அனுராதபுரத்துக்குத் திரும்பினேன்.

நிலத்திலிருந்து வெளிப்பட்ட சிலைகள் பற்றி அவர் கொடுத்த குறிப்பு மிகவும் பெறுமதி வாய்ந்ததாக இருந்தது. அதன் மூலம் சிலைகள் பற்றிய பல விபரங்களைத் தெரிந்து கொண்டேன்.

இங்கு ஓர் பழமை வாய்ந்த விஷ்ணு கோயிலின் இடிபாடுகள் காணப்படுகின்றன. இங்கு அண்மையில் நிலத்தின் அடியில் இருந்து மூன்று வெண்கலச்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விஷ்ணு சிலையும், முருகன் சிலையும், பத்தினி அம்மன் சிலையுமே கிடைக்கப் பெற்றுள்ளன.

3 அடி உயரமான விஷ்ணு சிலை சதுரமான பீடத்தின் மீது நான்கு கைகளுடன் நிற்கும் நிலையில் வார்க்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற மூன்று சிலைகளிலும் இது தான் பெரியது. அடுத்தது 2½ அடி உயரமான முருகன் சிலை. இது ஒரு வட்டமான உயர்ந்த பீடத்தின் மீது நான்கு கைகளுடனும், மயிலுடனும் காணப்படுகிறது. இதுவே இம்மூன்று சிலைகளில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். அடுத்தது பத்தினி அம்மன் சிலை. தாமரை வடிவமுள்ள பீடத்தின் மீது இரண்டு கைகளிலும் சிலம்பை ஏந்திய வண்ணம், தலைக்குப் பின்னால் ஓர் ஒளிவட்டத்துடன் இது காணப்படுகிறது. 2 அடி உயரமுள்ள இச்சிலை பித்தளையில் வார்க்கப்பட்டுள்ளது.

இச்சிலைகள் யாவும் புதையல் தோண்டுபவர்களினால் இப்பகுதியில் உள்ள குளத்தின் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் காணப்பட்ட கோயில் சிதைவுகளின் அடியில் இருந்து தோண்டி எடுக்கப் பட்டுள்ளது. இச்சிலைகள் மூன்றையும் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய்க்கு விற்பதற்காக புதையல் தரகர்கள் முயற்சி செய்த போது பொலிசாரிடம் மாட்டிக் கொண்டனர்.
இச்சம்பவத்தின் மூலம் நெலும் கன்னியவில் முருகன், பத்தினி அம்மன் ஆகிய தெய்வங்களை பரிவார மூர்த்தியாகக் கொண்ட காட்டுக்குள் மறைந்து கிடந்த, தொன்மை வாய்ந்த ஓர் விஷ்ணு கோயிலின் தொல்பொருள் சின்னங்கள் வெளியே வந்துள்ளன.
வெளிநாட்டுக்குக் கடத்தப்பட இருந்த இச்சிலைகள் இறுதி நேரத்தில் பொலிசாரின் கையில் சிக்கியமையால் இப்படி ஒரு பழமை வாய்ந்த கோயில் மற்றும் அதன் சிலைகள் பற்றிய உண்மை வெளியே வந்துள்ளது.

ஆனால் இவ்வாறு காடுகளுக்குள் சிதைவுகளாய் மறைந்து கிடக்கும் எமது பண்டைய கோயில்களில் இருந்து, புதையல் பிரியர்களால் தோண்டி எடுக்கப்பட்ட, எமது தொன்மை வரலாற்றுப் பாரம்பரியத்தின் சான்றாக விளங்கும் ஆயிரக்கணக்கான சிலைகள், எமக்குத் தெரியாமல், யார் கையிலும் சிக்காமல் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட அங்குள்ள செல்வந்தர்களின் வீடுகளிலும், நூதன சாலைகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதனால் இலங்கையில் காடுகளுக்குள் மறைந்து கிடக்கும் எமது பாரம்பரியத்தைக் கூறும் கோயில்கள் பற்றிய விபரங்கள் எமக்குத் தெரியாமலே மறைந்து போய் விடுகிறது.

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

Saturday, June 27, 2020

குச்சவெளி செம்பிமலையில் செம்பீஸ்வரம் ஆய்வுப் பயணம்-பகுதி 1


குச்சவெளி செம்பிமலையில் செம்பீஸ்வரம்  ஆய்வுப் பயணம்             பகுதி 1



என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/181     27 ஜூன் 2020

குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)


சிவபூமியின் சுவடுகளைத் தேடி திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காடுகளுக்குப் பல தடவைகள் சென்றுள்ளேன். அவ்வாறு நான் சென்ற இடங்களில் ஒன்றுதான் செம்பி மலை.

குச்சவெளிக் காட்டில் உள்ள இம்மலையில் பண்டைய காலத்தில் செம்பீஸ்வரம் எனும் சிவன் கோயில் இருந்தமை பற்றிய வரலாற்றுத் தகவல்களைத் அறிந்து வைத்திருந்தேன். அங்கு கடந்த காலங்களில் யாருக்கும் செல்ல முடியாத சூழ்நிலை இருந்தது. யுத்தம் முடிவடைந்த பின் மலையடிவாரத்தில் உள்ள இராணுவ முகாம் அதிகாரிகளின் அனுமதியுடன் அங்கு செல்லக் கூடியதாக இருந்தது.

இந்நிலையில் அங்கு போவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போது, நிலாவெளியில் ஆசிரியராகப் பணி புரியும் நண்பர் பிரகாஷ், ஒரு பெளர்ணமி தினத்தில் செம்பிமலைக்குப் போக இருப்பதாகவும், அங்கு பொங்கல் பூசை ஒன்றை நடத்த இருப்பதாகவும், அப்போது தன்னோடு வரும்படியும் கூறினார். 

குறிப்பிட்ட பெளர்ணமி தினத்தன்று சனிக்கிழமை திருகோணமலையை அடைந்தேன். மோட்டார் சைக்கிள் மூலம் குச்சவேளிக்குச் சென்றேன். அங்கு நண்பர் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள், மாணவர்கள் என சுமார் 30 பேர் ஒரு ட்ராக்டர் வண்டி, மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் செல்வதற்கு தயாராகக் காத்திருந்தனர்.

நான் வந்ததும் வண்டிகள் செம்பிமலை நோக்கிக் கிளம்பின. ட்ராக்டர் வண்டி முன்னே செல்ல, அதன் பின் இருவர் மோட்டார் சைக்கிளிலும், அதற்குப் பின் நண்பர் பிரகாஷ் எனது மோட்டார் சைக்கிளில் ஏற, நாமும் பின் தொடந்தோம். சரியாக காலை 9.20 க்கு குச்சவெளி சந்தியில் இருந்து எமது செம்பிமலைப் பயணம் ஆரம்பமானது.
  
திருகோணமலையிலிருந்து வடக்குநோக்கி புல்மோட்டைக்கு செல்லும் வீதியில் சுமார் 34 கி.மீ தொலைவில் குச்சவெளி அமைந்துள்ளது. இங்கிருந்து தென்மேற்குப் பக்கமாக காட்டுப் பகுதிக்கு செல்லும் பாதை, சின்னக்கரைச்சி களப்பைக் கடந்து, அனல்கட்டிமடு, ஒட்டியடி மடு ஆகிய இடங்களில் உள்ள வயல் வெளிகள், சிறிய வில்லுக் குளங்கள் ஆகியவற்றின் ஊடாக பெரிய செம்பிக் குளத்திற்கு செல்கிறது.


குச்சவெளி சந்தியில் இருந்து பிள்ளையார் கோயிலின் பின்பக்கமாக கிராமத்தை ஊடறுத்து இப்பாதை அமைந்திருந்தது. இப்பாதையில் சுமார் 700 மீற்றர் தூரத்தில் சின்னக்கரச்சி களப்பு பாலம் காணப்பட்டது. இப்பாலத்தை அடுத்து சிறிய தட்டையான மலை ஒன்று அமைந்துள்ளது. மலையின் இடது பக்கம் களப்பும், வலது பக்கம் பாதையும் அமைந்துள்ளன. களப்பில் நீர் குறைவாகக் காணப்பட்டதால் வண்டி பாதையில் செல்லாமல்  மலையின் இடது பக்கம் களப்பின் ஓரமாகச் சென்றது. சுமார் ஒரு கி.மீ தூரம் வரை களப்பில் வண்டிகள் ஓடின. மலையையும், களப்பையும் கடந்தவுடன் களப்பின் இரண்டாவது பாலம் காணப்பட்டது.

பாலத்தைக் கடந்து ஒரு கி.மீ தூரத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னார் நண்பர் பிரகாஷ். அவ்விடத்தில் பாதையின் வலது பக்கம் ஒரு மரத்தின் கீழ் சிறிய மாடம் ஒன்று கட்டப்பட்டு, அதன் உள்ளே பழமை வாய்ந்து லிங்கம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. சீமெந்தில் செய்யப்பட்ட ஆவுடையாரில் இந்தக் கருங்கல் லிங்கம் வைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை அடி உயரமான இந்த லிங்கம் செம்பிமலையின் பின்பக்கம் உள்ள காட்டில் இருந்து வேட்டைக்குச் செல்பவர்களால் கண்டெடுக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து வைக்கப்பட்டதாக நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன்.


லிங்கத்தை வணங்கிய பின் மீண்டும் பயணத்தைத் தொடந்தோம். ட்ராக்டர் வண்டி சென்று விட்டது. மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள் இருவர் சற்று தூரத்தில் நாம் வரும்வரை காத்திருந்தனர்.
இங்கிருந்து ஒன்றரை கி.மீ தூரம் சென்றதும் பாதையின் இடது பக்கமாக ஓர் வண்டிப் பாதை பிரிந்து செல்கிறது. கோடை காலத்தில் மணல் நிரம்பிக் காணப்படும் இப்பாதை வழியாக மோட்டார் வண்டியை செலுத்துவது சற்று கடினமாக இருந்தது. மணலுக்குள் சக்கரங்கள் புதைந்து, இறங்கி வண்டியைத் தள்ளி, மீண்டும் ஏறிசென்றோம். சிறிது தூரத்தில் செம்பிமலை தெரிந்தது. மேலும் சிறிது தூரம் தூரம் சென்று காட்டின் மத்தியில் உள்ள செம்பிமலை அடிவாரத்தை அடைந்தோம்.


இம்மலையிலேயே மிகப் பண்டைய காலம் முதல் செம்பீஸ்வரர் என்றழைக்கப்படும் சிவன் கோயில் அமைந்துள்ளது. இச்சிவாலயம் பல்லவர் காலத்தில் செம்பிமலையில் அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. சோழர் ஆட்சியின் போது நன்கு பராமரிக்கப் பட்டு அவர்கள் காலத்தின் பின் கைவிடப்பட்டு அழிந்து போன ஆலயங்களில் செம்பீஸ்வரமும் ஒன்றாகும் என முதியவர்கள் கூறுகின்றனர்.

ட்ராக்டர் வண்டியில் வந்தவர்கள் செம்பிமலை அடிவாரத்தில் இறங்கி மேலே சென்று கொண்டிருந்தனர். அவ்விடத்தில் உள்ள ஓர் மரத்தின் கீழ் ஓர் சிறிய விநாயகர் கோயில் காணப்படுகிறது. திறந்தவெளி மரக்கோயிலாக இருந்த இதற்கு காட்டுமரத் தடிகளைக் கொண்டு நான்கு தூண்களை நிறுத்தி அதன் மேல் தகரக்கூரை போடப்பட்டுள்ளது. இக்கோயிலில் சுமார் மூன்று அடி உயரமான களிமண் மேடையில் 18 அங்குல உயரமுடைய கருங்கல் விநாயகர் சிலை வைத்து வழிபடப்படுகிறது. இப்பகுதியில் வயல் மற்றும் சேனைப்பயிர் செய்யும் விவசாயிகள் தங்களுக்குப் பாதுகாப்பாக இவ்விநாயகர் ஆலயத்தை உருவாக்கி வழிபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்த இக்காட்டுப் பிள்ளையாரை இப்பகுதிக்கு வரும் விவசாயிகளும், செம்பீஸ்வரரைத் தரிசிக்க வரும் பக்தர்களும் வணங்கி வந்துள்ளனர். தற்போது மலையடிவாரத்தில் சிறிய முகாம் ஒன்றை அமைத்துத் தங்கியிருக்கும் இராணுவத்தினரும் வழிபட்டு வருகின்றனர். பிள்ளையாரை வணங்கிய பின் நாமும் மலையேறத் தொடங்கினோம்.

 
செம்பிமலை சுமார் 150 மீற்றர் உயரமான ஓர் தட்டையான மலையாகும். வடக்கு தெற்காக நீண்டு, கிழக்கு மேற்காக ஒடுங்கிய வடிவமைப்பை கொண்ட இம்மலை 750 மீற்றர் நீளமும், 250 மீற்றர் அகலமும் கொண்டது. மலையின் கிழக்குப் பக்கத்தில் இருந்து மலை உச்சிக்கு ஏறுவதற்கு கற்படிகள் காணப்படுகின்றன. இப்படிகள் சிறிய கற்களைக் கொண்டு மலை அடிவாரத்தில் இருந்து மலையின் உச்சிப் பகுதியில் உள்ள தட்டையான பாறை வரை அமைக்கப் பட்டுள்ளன. தட்டையான பறையில் மேலும் சிறிது தூரம் ஏறியவுடன் சிவாலயத்தின் இடிபாடுகள் உள்ள இடத்தை அடைந்தோம்.



செம்பிமலை உச்சியில் 1938ஆம் ஆண்டு பண்டைய சிவாலயம் இருந்த இடம் கண்டு பிடிக்கப்பட்டு, அதன் சிதைவுகளுக்கு அருகில் மீண்டும் ஓர் ஆலயம் கட்டப்பட்டு, அங்கு சிவலிங்கமும், விநாயரும் ஸ்தாபிக்கப்பட்டதாக கிராம வாசிகள் கூறினர். 

அன்று முதல் வெள்ளிக் கிழமைகளில் பூஜை நடைபெற்று வந்த இவ்வாலயத்தில் யுத்த காலத்தின் போது யாரும் செல்லவில்லை எனவும், இக்கால கட்டத்தில் பல வருடங்களாக பூஜை வழிபாடுகள் இன்றி இவ்வாலயம் காணப்பட்டதாகவும், யுத்தம் முடிந்த பின்பே மக்கள் இம்மலைக்கு வந்து ஆலயத்தை துப்பரவு செய்து மீண்டும் பூஜை வழிபாடுகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. 
60 ஆண்டுகளுக்கு முற்பட்ட அக்கட்டிடம் தற்போது இடிந்த நிலையில் காணப்படுகிறது. தற்போது பெளர்ணமி தினங்கள் மற்றும் முக்கிய தினங்களின் போது மட்டும் மக்கள் செம்பிமலைக்கு வந்து பொங்கல் இட்டு, பூஜை செய்து இங்கிருக்கும் சிவனையும், விநாயகரையும் வழிபட்டுச் செல்கின்றனர்.


சிவாலயத்தின் அருகில் நின்று அப்பகுதியை நோட்டமிட்டேன்.
மலையின் உச்சிப் பகுதியில், அதன் மத்தியில் கிழக்குத் திசையை நோக்கிய வண்ணம்  சிவாலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தின் இடதுபக்கம் ஓர் கருங்கல் மண்டபம் இருந்தமைக் கான இடிபாடுகள் காணப்படுகின்றன. சிவாலயத்தின் மண்டபம் எனக் கருதப்படும் இக்கட்டிடச் சிதைவில் 7 அடி உயரமான 10 கற்தூண்கள் காணப்படுகின்றன. ஆலயத்தின் முன்பக்கம் இயற்கையான பாறையில் தீர்த்தச் சுனை அமைந்துள்ளது. சுமார் 30 அடி நீள, அகலம் கொண்ட வட்ட வடிவமான இக்கற்சுனையில் தெளிந்த, சுத்தமான நீர் காணப்படுகிறது. நீர்ச்சுனையின் ஒரு பக்கத்தில் சுனையில் இறங்குவதற்கு படிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை காலங்களிலும் இச்சுனையில் நீர் வற்றுவதில்லை என ஊர்க்காரர்கள் கூறுகின்றனர். ஆலயத் தேவைகளுக்காக இந்நீர் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.


ஆலயத்தின் வலது பக்கத்தில் (வடக்குப் பக்கம்) பாறையின் மீது  பண்டைய ஆலயத்தின் சிதைவுகள் காணப்படுகின்றன. தூண் தாங்கும் குழிக்கற்கள், உயரமான மற்றும் கட்டையான தூண்கள், பீடக்கற்கள் ஆகியவை இவ்விடத்தில் சிதறிக் கிடக்கின்றன. இவ்விடத்திற்கு சற்று பள்ளத்தில் மேலும் சில தூண் தாங்கும் குழிக்கற்களும், கற்தூண்களும் உள்ளன. இதில் ஆலயத்திற்குரிய இன்னுமோர் கட்டடம் இருந்துள்ளது. இவ்விடத்தில் மொத்தமாக சுமார் 20 தூண் தாங்கும் குழிக்கற்களும், 15 கற்தூண்களும் காணப்படுகின்றன. இத்தனை பழமை வாய்ந்த தொல்பொருள் சின்னங்கள் உள்ள இடத்தில் சிவாலயத்தில் பண்டைய கால லிங்கமும் இருக்க வேண்டும்.

நண்பர் பிரகாஷ் பொங்கல் பூசைக்காக தன் மாணவர்களை தயார் படுத்திக் கொண்டிருந்தார். அவரின் மாணவர்களில் ஒருவரான பானுசனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பானுசனின் உதவியோடு எனது வேலையை ஆரம்பித்தேன். பண்டைய செம்பீஸ்வரத்தின் லிங்கத்தை செம்பிமலையில் தேட ஆரம்பித்தேன். லிங்கம் கிடைத்ததா?
(தொடரும்..)

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

Wednesday, June 24, 2020

அனுராதபுரத்தில் அபயகிரி விகாரை கட்டப்படுவதற்கு முன்பு அங்கிருந்த சிவன் கோயில்



அனுராதபுரத்தில் அபயகிரி விகாரை         கட்டப்படுவதற்கு முன்பு         
அங்கிருந்த சிவன் கோயில்       

 என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/180     24 ஜூன் 2020


குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

இலங்கையில் உள்ள இடங்களில் என் மனம் கவர்ந்த இடங்கள் சில உள்ளன. அவற்றில் முக்கியமானது அனுராதபுரம். அனுராதபுரத்துக்கு நான் செல்லும் போதெல்லாம் அங்குள்ள அபய தீர்த்தத்தில் நீராடி, அங்கு இருக்கும் முக்கிய ஏழு வணக்கத் தலங்களுக்குச் சென்று வணங்கி விட்டு வருவது வழக்கம். அச்சமயங்களில் நான் சென்று வணங்கும் இடங்களில் ஒன்று தான் அபயகிரி விகாரை.  

சிவபூமியின் சுவடுகளைத் தேடி நான் ஆய்வு செய்து கொண்டிருந்த சமயம் அபயகிரி விகாரை பற்றியும், அங்கிருந்த ஓர் சிவன் கோயிலை அழித்தே வட்டகாமினியால் இவ்விகாரை கட்டப்பட்டது எனவும் சில நூல்களில் படித்திருந்தேன். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் அந்நூல்களில் குறிப்பிடப்படவில்லை. எனவே அவற்றைத் தேடி எடுக்க வேண்டும் என எண்ணினேன். அபயகிரி விகாரையின் வரலாற்றைத் தேடிய போது அது பற்றிய பல விபரங்கள் கிடைத்தன.

அநுராதபுரம் புராதன நகரின் வடக்கில் அபயகிரி விகாரை வளாகம் அமைந்துள்ளது. இது பொ.ஆ.மு. 1ஆம் நூற்றாண்டில் வட்டகாமினி அபயவினால் கட்டப்பட்டது. இவ்விகாரை கட்டப்படுவதற்கு முன்பு இங்கு பெரிய சிவாலயம் ஒன்று இருந்துள்ளது. இச்சிவாலயத்தை அழித்து அதன் மீதே அபயகிரி விகாரை கட்டப்பட்டது என மலலசேகர, அரிச்சந்திர ஆகிய வரலாற்றாசிரியர்கள் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

தேவநம்பியதீசன் காலத்தில் பெளத்த சமயம் இலங்கையில் பரவத் தொடங்கினாலும், அவன் காலத்தில் செல்வாக்குடன் இருந்த பிராமண, ஜைன, நிகண்ட (சமணர்) துறவிகள் பெளத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் அதே செல்வாக்குடனேயே விளங்கினர். இலங்கையை 22 வருடங்கள் ஆட்சி செய்த தமிழ் மன்னர்களான சேனன், கூத்திகன் ஆகியோரிடமிருந்து ஆட்சியை கைப்பற்றிய அசேலன் என்பவன் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் எல்லாளன் எனும் தமிழ் மன்னன் அனுராதபுரத்தைக் கைப்பற்றினான். எல்லாளன் ஆட்சி அமைப்பதற்கு  இங்கிருந்த பிராமண, ஜைன, நிகண்ட (சமணர்) துறவிகளின் ஆதரவு கிடைத்ததாக சிங்கள நூல்கள் கூறுகின்றன.

எனவே எல்லாளன் காலத்தில் பிராமண, ஜைன, சமண துறவிகள் அரச ஆதரவுடன் இருந்துள்ளனர். எல்லாளன் ஆட்சி செய்த 44 வருட காலத்தில் இவர்களால் கோயில்கள் மற்றும் ஜைன, சமண பள்ளிகள் போன்றவை அமைக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக்காலப் பகுதியில் தமிழ் மன்னனான எல்லாளனின் ஆதரவுடன் அனுராதபுரத்தில் சிவன் கோயில் உட்பட பல சைவக் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.  

வட்டகாமினி அபய எனும் வலகம்பா மன்னன் இரண்டாவது தடவையாக ஆட்சியைக் கைப்பற்றிய பின்பே அபயகிரி விகாரை கட்டப்பட்டது. இது பொ.ஆ.மு 29-17 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டதாகும். தமிழ் மன்னன் எல்லாளனை வெற்றி கொண்ட துட்டகைமுனுவின் தம்பியான சத்தாதீசனின் மூன்றாவது புதல்வனே வட்டகாமினி அபய எனும் வலகம்பா என்பவனாவான். இவன் ஆட்சிக்கு வந்து 5ஆவது மாதத்தில் ருகுணு இராச்சியத்தில் இருந்த தீசன் என்ற பிராமணன் இவனது ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து கொண்டிருந்தான். இந்த கால கட்டத்தில் ஏழு தமிழர்கள் அனுராதபுரத்திற்கு படை எடுத்து வந்து வட்டகாமினியை சிறைப் பிடிக்க முயன்ற போது அவன் தப்பியோடி காட்டிற்குள் ஒளிந்து கொண்டான்.

இக்காலப்பகுதியில் ருகுணு இராச்சியத்திலும், அனுராதபுர இராச்சியத்திலும் பிராமண, சமண துறவிகளின் செல்வாக்கு ஓங்கியிருந்தது. ருகுணு இராச்சியத்தில் தீசன் எனும் பிராமணனும், அனுராதபுர இராச்சியத்தில் கிரி நிகண்டர் எனும் சமணத் துறவியும் செல்வாக்கு பெற்று விளங்கினர். இவர்களின் ஆதரவுடன் ஐந்து தமிழ் மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராக 15 ஆண்டுகள் அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி செய்தனர்.
   
இந்த ஐந்து மன்னர்கள் காலத்திலிருந்து 57 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் எல்லாள மன்னன் ஆட்சி நிலவியது. 44 வருடங்கள் இலங்கையின் மன்னனாக எல்லாளன் ஆட்சி செய்த காலத்தில் தான் (பொ.ஆ.மு 145-101) அபயகிரி பகுதியில் ஈஸ்வரன் கோயில் ஸ்தாபிக்கப் பட்டிருக்க வேண்டும். இந்த ஐந்து மன்னர்களும் பொ.ஆ. மு. 44 ல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். இவர்கள் காலத்தில் அபயகிரி பகுதியில் இருந்த சிவன் கோயில் பிரசித்தி பெற்று விளங்கியிருக்க வேண்டும். அனுராதபுரத்தின் வடக்குப் பக்கத்தில் சிவன் கோயிலும், சமணப் பள்ளியும் இருந்தன. கிரி நிகந்தர் எனும் சமணத் துறவியின் பொறுப்பில் பிராமணர்களும், சமணர்களும் இவற்றைப் பராமரித்து வந்தனர். தப்பியோடிய வட்டகாமினி இக்காலப்பகுதியில் மகாதீச எனும் தேரரின் நம்பிக்கைக்குரியவரான  தனசிவன் எனும் தமிழனின் பாதுகாப்பில் 14 வருடங்கள் இருந்தான்.

ஐந்து தமிழ் மன்னர்களில் கடைசியாக தாதிகன் என்பவன் ஆட்சி செய்த காலத்தில் படை திரட்டி வந்த வட்ட காமினி அபய தாதிகனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினான். தமிழ் மன்னர்களின் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த கிரி நிகந்தரின் கோயில்களை அழித்து அவ்விடத்தில் தூபியைக் கட்டினான். தனது பெயரில் உள்ள அபய எனும் பெயரையும், கிரி நிகந்தரின் பெயரில் உள்ள கிரி எனும் பெயரையும் சேர்த்து அத்தூபிக்கு அபயகிரி எனப்   பெயரிட்டான் என மகாவம்சம் கூறுகிறது.

அபயகிரி விகாரை வரலாறு பற்றிய இத்தனை விபரங்களையும் நூல் நிலையங்களில் இருந்த பழமை வாய்ந்த நூற் குறிப்புகளில் இருந்து பெற்றேன். இருப்பினும் அங்கு சிவன் கோயில் இருந்தமைக்கான வலுவான ஆதாரம் கிடைக்கவில்லை. எங்கேயோ இதற்கான ஆதாரம் ஒன்று உள்ளது எனும் நம்பிக்கை எனக்குள் உண்டானது.  அதைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில்  ஆதாரத்தைத் தேடி அபயகிரி விகாரைக்குச் சென்றேன். வழமை போல் தூபியைச் சுற்றி வந்தேன். தூபியைச் சுற்றி பல யக்ஷ, நாக வழிபாட்டுச் சின்னங்கள் காணப்பட்டன. அங்கு மிக முக்கியமான சிவ வழிபாட்டுச் சின்னமும் இருந்தது. ஆனால் அது வேறு பெயரில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இறுதியாக விகாரை வளாகத்தில் இருந்த காரியாலயத்துக்கு வந்து அங்கு இதன் வரலாறு பற்றிய குறிப்புகள் கிடைக்குமா என்று பார்த்தேன். அப்போது தான் ஒரு அதிசயமான, ஆச்சரியமான  அந்தப் படம் என் கண்ணில் பட்டது. நான் தேடி வந்த அந்த ஆதாரம் அதுதான். என் மனதுக்குள் கிடைக்கும் என நான் நம்பிக் கொண்டிருந்த ஆதாரம் அதுதான்.

அபயகிரி தூபியைக் கட்டுவதற்கு முன்பு, இங்கிருந்த சக்தி வாய்ந்த  லிங்கத்தையும், நந்தி தேவரையும் தூபியில் ஸ்தாபிப்பதற்காக நடக்கும் புனித பூஜையும், மன்னன் வட்டகாமினி இப்பூஜையில் கலந்து கொண்டு லிங்கத்தையும், நந்தி தேவரையும் வணங்கும் காட்சியும் அங்கே ஓர் இடத்தில் ஓவியமாக சித்தரிக்கப் பட்டுள்ளதைக் கண்டேன். அதன் பின்பு இது பற்றிய ஓர் பழைய குறிப்பும் அங்கே கிடைத்தது.


இங்கிருந்த கோயிலை அழித்த வட்டகாமினி, தூபியைக் கட்டும் போது, இவ்விடத்தில் இருந்து தன்னால் அழிக்கப்பட்ட சக்தி வாய்ந்த சிவன் கோயிலின் மூல மூர்த்தியான சிவலிங்கத்தையும், நந்தி தேவரையும் பயபக்தியுடன் வணங்கி, அவற்றை புனித சின்னங்களாக ஒரு பேழையில் வைத்து, தான் அமைத்த தூபியின் நடுப்பகுதியில் ஸ்தாபித்து, தூபியைச் சுற்றிக் காவல் தெய்வங்களையும் அமர்த்தி வழிபட்டான். குபேரக் கடவுளின் காவலர்களான சங்கநிதி, பத்மநிதி ஆகிய தெய்வங்களை தூபியின் பிரதான வாசலில் காவல் தெய்வங்களாக ஸ்தாபித்தான். அன்று முதல் இன்று வரை இப்பிரமாண்டமான தூபியின் உள்ளிருந்து சிவனும், நந்திதேவரும் அருளாட்சி செய்து வருகின்றனர்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

Monday, June 22, 2020

தென்னிலங்கையில் கசாகல என்னுமிடத்தில் காணப்பட்ட சிவபூமியின் சுவடு


தென்னிலங்கையில் கசாகல என்னுமிடத்தில் காணப்பட்ட    சிவபூமியின் சுவடு


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/179     23 ஜூன் 2020

 
குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

சிவபூமியின் சுவடுகளைத் தேடி தென்னிலங்கைக்கு சென்றேன்.  அங்கு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பண்டைய காலத்தில் சிவவழிபாடு நிலவிய சில  இடங்களில் உள்ள அதன் சுவடுகளைக் கண்டறிய வேண்டும் என்பதே அந்தப் பயணத்தின் நோக்கமாக இருந்தது. அவ்விடங்களில் ஒன்று தான் கசாகல. இங்கு ஆறு பிற்கால பிராமிக் கல்வெட்டுக்கள் இருப்பதாக சிங்கள பத்திரிக்கை ஒன்றில் படித்தேன். அன்றில் இருந்து கசாகலவுக்கு போய் அந்தக் கல்வெட்டுக்களைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் உண்டானது.

மாத்தறை நகரிலிருந்து அம்பாந்தோட்டைக்கு செல்லும் பேரூந்தில் ஏறி அவ்வீதியில் உள்ள ரன்ன சந்தியில் இறங்கினேன். அங்கிருந்து வடக்கு நோக்கி வீரகேட்டியவுக்கு போகும் பேரூந்தில் ஏறி 9 கி.மீ தூரத்தில் இருந்த கசாகல ரஜமகா விகாரை சந்தியில் இறங்கினேன். அங்கிருந்து இடது பக்கமாகச் செல்லும் வீதியில் 300 மீற்றர் தூரத்தில் விகாரை வளாகம் அமைந்திருந்தது. அது சுமார் 250 மீற்றர் அகலமும், 300 மீற்றர் நீளமும் கொண்ட ஓர் கற்பாறைகள் நிறைந்த பிரதேசத்தில் அமைந்திருந்தது.
இவ்விகாரை பொ.ஆ.மு.2ஆம் நூற்றாண்டில் மாகம இராச்சியத்தை ஆட்சி செய்த காவந்தீசன் எனும் மன்னனால் கட்டப்பட்டதாக ஆலய வரலாறு கூறுகிறது.

விகாரை வளாகத்தின் முன்பக்கம் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் இடது பக்கம் சுமார் 100 மீற்றர் தூரத்தில் பழமை வாய்ந்த கல் மதிற்சுவர் காணப்பட்டது. அதன் உள்ளே சிவபூமியின் சுவடுகள் உள்ளனவா எனத் தேடிப் பார்க்க வேண்டும். கல் மதிற் சுவரினால் சூழப்பட்ட அந்த விகாரை வளாகத்தினுள் சென்று பார்த்தேன்.

அங்கு மத்தியில் பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்றும், அதன்  பின் பக்கம் மூன்று பழமை வாய்ந்த கட்டிடங்களின் இடிபாடுகளும், முன் பக்கம் உள்ள பாறையின் மேல் தூபியும், அதன் அருகில் ஓர் கட்டிடத்தின் இடிபாடும் காணப்பட்டன. இவை 150 மீற்றர் நீளமும், 115 மீற்றர் அகலமும் கொண்ட கற்சுவரினால் மதில் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள கட்டிடத்தின் அதிஷ்டானம் முழுவதும் கருங்கலினால் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு நோக்கிய வாசலைக் கொண்ட இக்கட்டிடம் பழைய சிலைமனை எனக் கூறப்படுகிறது. உள்ளே புத்த பகவான், விஷ்ணு பகவான் ஆகியோரின் பழமை வாய்ந்த சுதைச் சிலைகள் காணப்படுகின்றன. 


இக்கட்டிடத்தின் பின்பக்கம் உள்ள மூன்று பழமை வாய்ந்த கட்டிட இடிபாடுகளில் 50 க்கும் மேற்பட்ட கருங்கல் தூண்கள் காணப்பட்டன. இப்பகுதியில் சிவபூமியின் சுவடுகள் நிச்சயம் இருக்க வேண்டும் எனும் ஆவலுடன் தேடித் பார்த்தேன். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

அடுத்ததாக மலைப்பறை உள்ள பகுதிக்குச் சென்றேன். மலைப் பறையின் உயர்ந்த பகுதியில் தூபி அமைக்கப்பட்டுள்ளது.  இம் மலைப் பாறையின் மேற்பரப்பில் மொத்தமாக 6 கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை பொ.ஆ. 5 ஆம், 7 ஆம் நூற்றா ண்டில் பொறிக்கப்பட்ட பிற்கால பிராமிக் கல்வெட்டுகளாகும். இக்கல் வெட்டுக்கள் அனைத்தும் தற்போது கம்பிவேலியால் அடைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுக்களை ஒவ்வொன்றாகப் பார்த்தேன். எல்லாம் சிதைந்து காணப்பட்டன. சில எழுத்துக்கள் மட்டுமே தெரிந்தன. அவற்றை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.



இக்கல்வெட்டுக்கள் உள்ள பகுதியில் கல்வெட்டு பற்றிய ஓர் பெயர்ப்பலகை பொருத்தப்பட்டிருந்தது. அதில் ஏதாவது எனக்குத் தேவையான விபரங்கள் இருக்கும் என ஆவலுடன் அங்கு சென்று பார்த்தேன். அதில் இங்கு 6 பாறைக் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் உள்ள எழுத்துக்கள் பெரும்பாலும் சிதைந்து காணப் படுவதால் அவற்றின் பொருளை வாசித்து அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது என எழுதப்பட்டுள்ளது. அங்கும் ஏமாற்றமே.

பின்பு இங்குள்ள புதிய விகாரையில் இங்குள்ள பண்டைய சிதைவுகள் பற்றிய விபரங்கள் கிடைக்கலாம் என நினைத்து அங்கு சென்று, அவ்வழிபாட்டுத்தலம் பற்றிய வரலாறு நூல் உள்ளதா என விசாரித்தேன். அப்பொழுது அங்கிருந்தவர்கள் இவ்விகாரை பற்றிய ஓர் சிறிய நூலைத் தந்தனர்.

அதை ஆவலுடன் வாசித்துப் பார்த்தேன். அதில் இங்குள்ள பாறையில்  பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் பற்றிய விபரங்கள் காணப்பட்டன. அவற்றை ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டு வந்தபோது, நான் தேடிவந்த சிவபூமியின் சுவடுகள் பற்றிய ஓர் முக்கிய விடயம் அதில் காணப்பட்டது.

அது இங்கு இருக்கும் ஆறு கல்வெட்டுகளில் ஒன்றில் சிவன் எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ள விடயமாகும். குறிப்பிட்ட இக் கல்வெட்டில் மொத்தமாக 5 எழுத்துக்கள் மட்டுமே உள்ளன. இதன்படி ம.. எனும் கிராமத்தைச் சேர்ந்த சிவன் என்பவனுக்கு சொந்தமான.... எனக் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் விபரம் பின்வருமாறு:

..... ம ஹி சிவஹ ....
பொருள்- ம.. எனும் கிராமத்தைச் சேர்ந்த சிவனுக்கு சொந்தமான...

இக்கல்வெட்டு கூறும் செய்தியின் மூலம் கசாகல பகுதியில் பண்டைய காலத்தில் சிவ வழிபாடு செய்த சிவன் என்பவன் வாழ்ந்துள்ளான் என்பது உறுதியாகத் தெரிகிறது. இவன் எனும் கிராமத்தை சேர்ந்தவன் என்பதும், இவனுக்கு சொந்தமான ஏதோ ஒன்றை தானமாக இங்கிருந்த ஆலயத்திற்கு வழங்கியுள்ளான் என்பதுமே கல்வெட்டு கூறும் செய்தியாகும்.


 அந்த ஆலயம் எது? அவன் தானம் செய்தது எதை? என்ற விபரங்கள் உள்ள எழுத்துக்கள் எல்லாம் சிதைந்துள்ளன. எனவே சிவன் என்பவன் இங்கிருந்த சிவன் கோயிலுக்கு தானங்கள் வழங்கியிருப்பான் என எண்ணக் கூடியதாக உள்ளது.
நான் தேடிச்சென்ற சுவடுகளின் முக்கிய விடயமொன்றைக் கண்ட  மகிழ்ச்சியில் அங்கிருந்து எனது அடுத்த இலக்கை நோக்கிப் பயணமானேன்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை