Sunday, May 31, 2020

தீவிர சிவபக்தனும் லங்காபுரி சக்கரவர்த்தியுமான இராவணனின் உண்மை வரலாறு-பகுதி-1


தீவிர சிவபக்தனும் லங்காபுரி சக்கரவர்த்தியுமான இராவணனின் உண்மை வரலாறு-பகுதி-1

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/1001     31  மே 2020



குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் இக்கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

இராவணனும், இராமாயணமும்-ஓர் அறிமுகம்

இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட ஆதிகாலத்தில் இரண்டு முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நடந்ததாக நூல்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. கந்தபுராணம், தக்ஷிண கைலாய புராணம் ஆகிய நூல்களின் படி சூரனின் மீதான கந்தனின் போர் இலங்கையில் நடந்த முதலாவது வரலாற்று நிகழ்வாகும். அதன் பின்பு இலங்கையில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வாக இராமாயணப் போர் கருதப்படுகிறது. இலங்கை வேந்தன் இராவணனுக்கும், வடஇந்தியாவிலிருந்து வந்த இராமனுக்கும் இலங்கையில் போர் நிகழ்ந்ததாக இந்தியாவின் புகழ் பெற்ற இதிகாசமான இராமாயணம் கூறுகிறது.

இராமாயண சம்பவங்களுக்கு சரித்திரப் பின்னணி உள்ளதா?

இராமாயணம் வால்மீகி முனிவரால் எழுதப்பட்ட ஓர் இதிகாசம் எனவும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் யாவும் புலவர் களின் கற்பனைப் படைப்புகள் எனவும், இதில் கூறப்பட்டுள்ள சம்ப வங்கள் அனைத்தும் கவிஞர்களின் கற்பனைக் கதைகள் எனவும், இராமாயண காவியத்திற்கு சரித்திரப் பின்னணி எதுவும் கிடையாது எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும் அண்மைக்கால ஆய்வுகளின்படி இராமாயண சம்ப வங்களுக்கு வரலாற்றுப் பின்னணி உள்ளது என்றும், இதன் கதாபாத்திரங்கள் உண்மையானவை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும், அதன் பின்பு மக்களால் வழிவழியாக, பரம்பரை பரம்பரையாக இவை பேசப்பட்டு வந்ததாகவும், மக்களால் வழங்கப்பட்டு வந்த இச்சம்பவங்களைக் கேட்டு, அவற்றைத் தொகுத்து பொ..மு. 6ஆம் நூற்றாண்டளவில் வால்மீகி முனிவர் இதை ஓர் காவியமாக எழுதினார் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

இராமாயணம் எழுதப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்த சம்பவங்கள்

இராமாயணம் எழுதப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இராம-இராவண யுத்தம் இலங்கையில் நடந்துள்ளது. இன்று நாம் காணும் வால்மீகி இராமாயணத்தில் 24,000 பாடல்கள் உள்ளன. இவை மொத்தமாக ஏழு காண்டங்களை உள்ளடக்கியுள்ளன. இவற்றில் முதலாவதாக உள்ள பாலகாண்டமும், ஏழாவதாக உள்ள உத்தர காண்டமும் இடைச்செருகல்கள் என அறிஞர்கள் கூறுகின்றனர். மிகுதியுள்ள 5 காண்டங்களே மூல இராமாயணக் கதையாகும். அதிலும் வால்மீகி எழுதிய முதலாவது இராமாயணத்தில் மொத்தமாக 10,000 பாடல்களே இருந்ததாகவும், அவர் காலத்தின் பின்பு அவரின் பெயரிலேயே இந்நூலை எழுதியவர்கள் மிகுதி 14,000 பாடல்களை பிற்சேர்க்கைகளாக இடையிடையே காலத்துக்குக் காலம் சேர்த்துள்ளார்கள் எனவும் வால்மீகி இராமாயணத்தை நன்கு ஆய்வு செய்த அமிர்தலிங்க ஐயர்இராமாயண விமர்சாஎனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலும், இலங்கை யிலும் நிகழ்ந்த சில சம்பவங்களை மக்கள் வழிவழியாகப் பேசி வந்துள்ளனர். இச்சம்பவங்களை ஒன்று திரட்டி, தொகுத்து 10,000 பாடல்கள் கொண்ட ஓர் நூலாக வால்மீகி எழுதியுள்ளார். இன்று நாம் வாசிக்கும் இராமாயணத்தில் பின்பு சேர்க்கப்பட்ட 14,000 பாடல்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் ஓர் தொடர்ச்சியான மூலக்கதை கிடைக்கும். இக்கதையையே பரம்பரை பரம்பரையாக மக்கள் பேசி வந்துள்ளனர். 2000 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் இராமாயணக் கதையின் சில குறிப்புகள் காணப்படுகின்றன.
எனவே மக்கள் கர்ண பரம்பரையாகப் பேசி வந்த இக்கதைக்கு முன்னோடியாக இந்தியாவிலும், இலங்கையிலும் சில வரலாற்று சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இச்சம்பவங்களை அடிப்படையாக வைத்து மக்கள் வழிவழியாகப் பேசி வரும் போது காலத்துக்குக் காலம் சில கற்பனைக் கதைகளும், மிகைப்படுத்தல்களும் இக்கதையில் சேர்க்கப்பட்டுள்ளன. இக்கதைகளைக் கேட்டு, தொகுத்து எழுதிய புலவர்களும் மேலும் சில கற்பனைக் கதைகளைப் புகுத்தி எழுதியதன் பின் இன்று நாம் காணும் இராமாயணம் உருவாகியுள்ளது. எனினும் இவை யாவற்றிற்கும் அடிப்படை வரலாற்று நிகழ்வுகள் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இலங்கையில் இராவணன் மற்றும் இராமாயணம் தொடர்பான ஆய்வு முயற்சிகள்

அண்மைக்கால ஆய்வுகளின் போது இராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரமான இலங்கை மன்னன் இராவணன் தொடர்பான கல்வெட்டுக்கள், செப்பேடுகள் ஆகியவை இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இலங்கையில் 2000 வருடங்களுக்கு முன்பு பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகளும், தென்னிந்தியாவில் பாண்டியர் காலத்தில் பொறிக்கப்பட்ட செப்பேடுகளும் மிக முக்கியமானவையாகும்.
மேலும் இலங்கையில் அண்மைக்காலமாக ஆய்வு செய்யப்பட்டு கண்டறியப்பட்ட சில இடங்களுக்கும், இராமாயணத்திற்கும் தொடர்புகள் உள்ளன. இவற்றின் மூலம் இராமாயண கதாபாத்திரங் களும், அதில் கூறப்பட்டுள்ள பல சம்பவங்களும் உண்மையானவை எனக் கூறக்கூடியதாக உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பிருந்து இலங்கையில் சிங்கள ஆய்வாளர்கள் சிலர் இராவணன் பற்றியும், இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்கள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை உல்லாசப் பிரயாணத்துறை வட இந்திய அமைப்பொன்றின் துணையுடனும், இலங்கையிலுள்ள அறிஞர்கள் சிலரின் ஆதரவுடனும் இராவணன் மற்றும் இராமாயணம் தொடர்பான 50 இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு அவை பற்றிய விபரங்களுடன் காணொளிக் காட்சிகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக வடஇந்திய உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் வண்ணம் இக்காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல இடங்கள் அந்தந்த இடங்களில் வசிக்கும் மக்களிடையே இராமாயணம் தொடர்பாக நிலவும் ஐதீகங்களின் அடிப்படையிலேயே சேர்க்கப்பட்டுள்ளன. இவ்விடங்களில் இராமாயண காலத்துடன் தொடர்பில்லாத சில இடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதே சமயம் இராமாயணம் மற்றும் இராவணன் தொடர்பான சில முக்கிய இடங்கள் விடுபட்டுள்ளன. குறிப்பாக பிராமிக் கல்வெட்டுக்கள், திருவிராமேஸ்வரம் போன்றவை விடுபட்டுள்ளன.

இராவணன் பற்றி இலங்கையில் நிலவும் ஐதீகங்கள்

இராமாயண காலத்துடன் தொடர்புடைய இலங்கையின் மாமன்னன் இராவணனைப் பற்றிய ஐதீகங்கள் இலங்கையின் பல பாகங்களிலும் மக்களால் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் இராவணனுடன் தொடர்புபடுத்தப்பட்ட பல ஐதீகங்களும், கர்ணபரம்பரைக் கதைகளும் நிலவுகின்றன. இப் பகுதியிலுள்ள மக்கள் இராவணன் என்றோர் மன்னன் இங்கு வாழ்ந்ததாகவும், அவனின் மாளிகைகள், நகரங்கள், குகைகள், சுரங்கப் பாதைகள், விமானத்தளங்கள் போன்றவை இப்பகுதியில் இருந்ததாகவும் உறுதியாக நம்புகின்றனர்.

இராவணனைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு இராமாயணத்தைவிட இலங்கை மக்களிடையே பேசப்படும் ஐதீகங்களும், அவை தொடர்பான இடங்களும், தடயங்களுமே மிக முக்கியமானதாக உள்ளன. இதன் காரணமாகவே இராமாயணத்தை நன்கு அலசி ஆராய்ந்த இந்திய அறிஞர்களும், ஆய்வாளர்களும் இராவணன் ஆட்சி செய்த இலங்கைக்கு வந்து இராமாயணத்தின் தடயங்களையும், இராவணனின் சுவடுகளையும் தேடுகின்றனர்.
( தொடரும்...)

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                          
வரலாற்று ஆய்வாளர்                                 
இலங்கை

Saturday, May 30, 2020

மிகுந்தலையில் இந்து சமயம்-பகுதி 2 கந்தக்க தூபியில் இருந்த நந்தியும், பிள்ளையாரும் எங்கே?


மிகுந்தலையில் இந்து சமயம்-பகுதி 2

கந்தக்க தூபியில் இருந்த நந்தியும், பிள்ளையாரும் எங்கே


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/170     30  மே 2020



குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளில் பல எனது அடுத்த நூலில் இடம்பெற உள்ளன. எனவே எனது அனுமதி இல்லாமல் யாரும் இவற்றை தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

நேற்றைய தொடர்ச்சி....
மிகுந்தலையில் உள்ள கந்தக்க தூபியில் பிள்ளையார் சிற்பத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். மொத்தமாக உள்ள நான்கு வாசல்களில் மூன்று வாசல்களில் தேடி விட்டேன். அங்கு பிள்ளையார் சிற்பத்தைக் காணவில்லை. கடைசியாக எஞ்சியிருப்பது கிழக்குத் வாசல் மட்டுமே.
சிவசிவா, அந்த சிலையை நான் பார்க்க வேண்டும், அது அகற்றப் பட்டிருக்கக் கூடாது என சிவனை மனதில் வேண்டிய வண்ணம், எஞ்சியிருந்த கிழக்குத் திசை வாசலை நோக்கி விரைவாகச்  சென்றேன்......

இந்த வாசலும் நன்கு பேணப்பட்ட ஓர் வாசலாகும். இடது பக்கம் இருந்த தூணின் உச்சியில் யானையின் சிலை காணப்பட்டது. அதன் இடது பக்கம் உள்ள முதலாவது முகப்பில் அடிமுதல் நுனிவரை மிகவும் உன்னிப்பாக, அவசரமில்லாமல் பிள்ளையார் சிற்பத்தை தேடினேன். காணவில்லை. அடுத்தது இரண்டாவது முகப்பு, அடியில் இருந்து நுனிவரை பிள்ளையாரைக் காணவில்லை. மூன்றாவது முகப்பிலும் இல்லை. இப்போது நெஞ்சு படபடத்தது. அழுகை வருவது போல இருந்தது. அடக்கிக் கொண்டேன். உண்மையிலேயே பிள்ளையார் சிற்பத்தை அகற்றி விட்டார்களோ!
தூணின் உச்சியில் இருந்த நந்தி சிலையை சுத்தியலால் தட்டி தனியாகக் கழட்டி விடலாம். அது மிகவும் சுலபமான வேலை. ஆனால் பிள்ளையார் சிற்பத்தை அவ்வளவு சுலபமாக உடைத்து அகற்ற முடியாது. கழட்டி எடுக்கவும் முடியாது. ஏனெனில் அது ஓர் புடைப்புச் சிற்பம். கல்லின் மேற்பரப்பில் முழுமையாகப் பதிந்துள்ள சிற்பம். எனவே அவ்வளவு சுலபமாக அதை உடைத்து அகற்ற முடியாது. 

  

முயற்சியைக் கைவிடவில்லை. நான்காவது முகப்பில் அடிமுதல் ஒவ்வொரு வரியாகத் தேடினேன். கீழிருந்து மேலாக பார்த்துக் கொண்டே போனேன். பிள்ளையார் இல்லவே இல்லை. இன்னும் ஒரே ஒரு முகப்பு தான் எஞ்சியிருந்தது. அது கிழக்கு வாசலின் வலது பக்கத் தூணின் அருகில் உள்ள கடைசிப் முகப்பு.
கந்தக்க தூபியில் உள்ள இந்த வாசல் பகுதி 25 அடி உயரமானது. நான்கு வாசல்களின் முன்பக்கம் 4 அடி உயரமான நீள்சதுர ஆசனக்கல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து வாஹல்கட எனும் வாசல் காணப்படுகிறது. இதில் நிலமட்டத்தில் இருந்து 5 அடி உயரத்தில் அதிஷ்டானம் அமைந்துள்ளது. அதற்கு மேல் பகுதியில் ஒன்றரை அடி அளவில் முதலாவது வரி காணப்ப டுகிறது. இந்த வரியில் வரிசையாக யானை, தாமரைப்பூ, யானை எனும் வரிசையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதன் மேல் பகுதியில் ஒவ்வொன்றும் ஒரு அடி உயரமான 2 ஆம், 3 ஆம்,  4 ஆம் வரிசைகள் காணப்படுகின்றன. இம்மூன்று நிரைகளிலும் சிற்பங்கள் எதுவும் செதுக்கப்படவில்லை. அதற்கு மேல் பகுதியில் ஒன்றரை அடி உயரத்தில் உள்ள 5 ஆம் வரிசையில் மேல் நோக்கிய வண்ணம் போதிகை, தாமரைப்பூ, போதிகை எனும் அளவில் சிற்பங்கள் உள்ளன. அதற்கு மேற்பகுதியில் ஒரு அடி உயரத்தில் 6 ஆம், 7 ஆம் வரிசைகள் உள்ளன. இவ்விரண்டு வரிசைகளின் நடுப்பகுதியில் சிறிய அளவில் அன்னப்பட்சிகளின்  சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதற்கும் மேற்பகுதியில் உள்ள   8 ஆவது நிரையில் சிறிய அளவில் பூத கணங்கள் வரிசையாக இருப்பது போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மொத்தமாக எட்டு வரிசைகள். அதற்கும் மேற் பகுதியில் இரண்டு பக்கங்களிலும் உள்ள தூண்களுக்கு அருகில் உள்ள முகப்பில் இரு தேவ கோஷ்டங்கள் காணப்படுகின்றன. அதில் உட்கார்ந்த வண்ணம் இரண்டு பெண் தெய்வச் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. சப்த கன்னியருக்குரிய இத்தெய்வச் சிலைகளின் தலைகள் காணப்படவில்லை.






இலங்கையிலேயே அதிகமான கோயில்களில் காணப்படும் தெய்வம் பிள்ளையார். ஒரு ஊரில் எந்த தெய்வத்துக்கு கோயில் இல்லாவிட்டாலும் நிச்சயமாக பிள்ளையாருக்கு கோயில் இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பு மிக்க, வரலாற்று முக்கியத்துவம் மிக்க பிள்ளையார் சிற்பத்தைக் கந்தக்க தூபியில் கடைசி முயற்சியாகத் தேடினேன். இப்போது கிழக்கு வாசலின் வலது பக்கத் தூணின் அருகில் உள்ள கடைசிப் முகப்பில் மட்டும் பிள்ளையார் சிற்பம் உள்ளதா எனப் பார்க்க வேண்டி உள்ளது.

இந்தப் முகப்பில் அடியில் இருந்து மேல் நோக்கிப் ஒவ்வொரு வரியாகத் தேடினேன். முதல் வரியில் யானைகளும், தாமரைப் பூக்களுமே செதுக்கப்பட்டிருந்தன. பிள்ளையார் சிற்பம் இல்லை.
2 ஆம், 3 ஆம்,  4 ஆம் வரிகளில் தேடினேன்.  இல்லை. 5 ஆவது வரியில் போதிகை. தாமரைப்பூ ஆகியவை காணப் பட்டன. பிள்ளையார் சிற்பம் இல்லை. 6 ஆம், 7 ஆம் வரிகளில் உன்னிப்பாகப் பார்த்தேன். சிறிய அன்னப்பட்சிகளின் சிற்பங்கள் காணப்பட்டன. மனம் சோர்வடைந்தது. கண்கள் களை இழந்தன. என்னை அறியாமலே கண்ணில் நீர் பெருகியது. தலையை அண்ணாந்து பார்த்துக் கொண்டே வந்ததில் கழுத்து வலித்தது. பிள்ளையாரைக் காணவில்லையே.

கந்தக்க தூபியில் நான்கு திசைகளிலும் ஒவ்வொரு வாசல். மொத்தமாக நான்கு வாசல்கள். ஒவ்வொரு வாசலிலும் 5 முகப்புகள் மொத்தமாக 20 முகப்புகள். ஒவ்வொரு முகப்பிலும் எட்டு வரிசைகள். மொத்தமாக 160 வரிசைகள். இதுவரை 159 வரிசைகளில் தேடி விட்டேன். பிள்ளையார் சிற்பத்தைக் காணவில்லை.
இன்னும் ஒரே ஒரு வரி உள்ளது. கடைசி வரி. உயரத்தில் உள்ளது. சுமார் 15 அடி உயரம். அண்ணாந்து பார்த்தேன். எல்லா பக்கங்களிலும் உள்ளது போல அந்த வரிசையிலும் சிறிய பூதகணங்கள் வரிசையாகக் காணப்பட்டன. இடமிருந்து வலமாக எண்ணிக் கொண்டே வந்தேன். மொத்தமாக 12 பூதகணங்கள். மீண்டும் வலமிருந்து இடமாக பார்த்துக் கொண்டே வந்தேன்.
அந்த பூத கணங்களில் சில முன்பக்கம் தெரியும் வண்ணமும், சில பக்கசாயல் தெரியும் வண்ணமும் அமர்ந்து இருப்பது போல் வடிவமைக்கப் பட்டிருந்தன.

இவற்றிலே முன்பக்கம் தெரியும் வண்ணம் அமர்ந்துள்ள பத்தாவது பூத கணம் சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. அந்த உருவத்தில் முகப்பகுதியில் தும்பிக்கை தெரிவது போல் இருந்தது. நீர் பெருகியிருந்த கண்ணைத் துடைத்து விட்டு உற்றுப் பார்த்தேன். தெளிவாகத் தெரியவில்லை. எனது டிஜிடல் புகைப்படக் கருவியில் அந்த உருவத்தை சூம் செய்து புகைப்படம் எடுத்தேன். எடுத்த அந்தப் புகைப்படத்தை பார்த்தேன்.

பார்த்தவுடன் உடல் சிலிர்த்தது. கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. அது ஆனந்தக் கண்ணீர். சந்தேகமே இல்லை. நான் தேடிவந்த பிள்ளையார் சிற்பம் அதுதான். கந்தக்க தூபியின் கடைசி வாசலில், கடைசி பக்கத்தில், கடைசி வரியில் அது செதுக்கப்பட்டிருந்தது. அப்பொழுது எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை. பல புகைப்படங்களை எடுத்தேன். முன்பக்கம் இருந்த கற்பாறையில் கீழே சாய்ந்து உட்கார்ந்தேன். புகைப்பட கருவியில் எடுத்த படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தேன்.




துதிக்கையுடன், பெரிய இரு காதுகளுடன், இரண்டு கைகளுடன் சம்மணம் கட்டி தொந்தி வயிறுடன் உட்கார்ந்த நிலையில் அந்த பிள்ளையார் சிற்பம் காணப்பட்டது. இடது பக்கம் இரண்டு பூத கணங்களும், வலது பக்கம் நான்கு பூத கணங்களும் கைகளில் பிரசாத பெட்டகங்களை எந்தி, பிள்ளையாரை நோக்கி வணங்கிய வண்ணம் வரிசையாக அமர்ந்து இருப்பது போல அந்த சிற்பத் தொகுதி காணப்பட்டது. மனம் நிறைந்த மகிழ்வோடு பெருமூச்சு விட்டு, சிறிது நேரம் களைப்பாறி விட்டு கந்தக்க தூபி பகுதியில் இருந்த அடுத்த ஆச்சரியமான விடயங்களை ஆராயத் தொடங்கினேன்.



மிகுந்தலையில் இந்துசமய தெய்வங்கள் தொடர்பான சிற்பங்கள் கந்தக்க தூபியின், வாஹல்கட என்றழைக்கப்படும் நான்கு பக்கங்களிலும் உள்ள வாயில்களில் தான் அதிகளவில் செதுக்கப்பட்டுள்ளன. இத்தூபி யாரால், எந்தக் காலப்பகுதியில் அமைக்கப்பட்டது எனும் விபரங்கள் வரலாற்று நூல்களில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் பொ.ஆ.மு 119-109 காலப் பகுதியில் இலங்கை மன்னனாகவிருந்த லஜ்ஜிதிஸ்ஸ எனும் மன்னன் கந்தக்க தூபிக்கு பூஜைகள் நடத்தியது பற்றிய குறிப்புகள் மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளன.

எனவே இவனது காலத்திலோ அல்லது இதற்கு சற்று முந்திய காலத்திலோ கந்தக்க தூபி அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதன்படி மிகுந்தலையில் கந்தக்க தூபி அமைக்கப் பட்ட காலத்தில் அதாவது சுமார் 2200 வருடங்களுக்கு முன்பு இங்கு பிள்ளையார் வழிபாடு செல்வாக்குடன் விளங்கியுள்ளது.

கந்தக்க தூபியில் காணப்படும் இப்பிள்ளையார் சிற்பத்தின் மூலம் தமிழகத்தை விட இலங்கையில் தான் காலத்தால் முற்பட்ட  பிள்ளையார் வழிபாட்டை இங்கிருந்த தமிழர்கள் கடைப் பிடித்துள்ளனர் எனக் கூறக் கூடியதாக உள்ளது. தமிழகத்தில் 1400  ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் காலத்தில் தான் பிள்ளையார் வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது என்பதும், இத்தனை பழமை வாய்ந்த பிள்ளையார் சிற்பம் தமிழ் நாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனால் இலங்கையில் உள்ள மிகுந்தலையில் 2200 ஆண்டுகளுக்கு முன்பே பிள்ளையார் வழிபாடு இருந்துள்ளது.
இதன் மூலம் மகிந்ததேரர் மிகுந்தலைப் பகுதிக்கு வருவதற்கு முன்பே இங்கு விநாயகர் வழிபாடு செல்வாக்குப் பெற்று விளங்கியுள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மிகுந்தலை அமைந்துள்ள வடமத்திய மாகாணத்தின் தொன்மைமிகு காவல் தெய்வம் பிள்ளையார் என்பது குறிப்பிடத்தக்கது.



கந்தக்க தூபியில் விநாயகர் மட்டுமல்லாது நந்தி சிலைகளும், நாகராஜர், சப்த கன்னியர் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. தூபியின் நான்கு பக்கங்களிலும் உள்ள வாகல்கடவில் அமைக்கப்படும் எட்டு கற்தூண்களில் இரண்டு தூண்களில் அழகிய நந்தியின் சிற்பம் காணப்பட்டது. இது இப்பகுதியில் நிலவிய சிவவழிபாட்டின் அடையாளமாகும். மேலும் வாயிலில் நாகராஜனின் இரண்டு சிற்பங்களும் காணப்படுகின்றன. இதன் மூலம் மிகுந்தலைப் பகுதியில் சிவன் மற்றும் நாக வழிபாடுகளும் சிறப்புடன் விளங்கியுள்ளன எனக் கூறலாம்.

மிகுந்தலையில் இது போன்ற இன்னும் பல ஆச்சரியங்கள் உள்ளன.  
(மிகுந்தலை ஆய்வு தொடரும்..) 

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                      
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

Friday, May 29, 2020

மிகுந்தலையில் இந்து சமயம்-1 கந்தக்க தூபியில் இருந்த நந்தியும், பிள்ளையாரும் எங்கே?



மிகுந்தலையில் இந்து சமயம்-1
கந்தக்க தூபியில் இருந்த நந்தியும், பிள்ளையாரும் எங்கே? 


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/169      29  மே 2020


குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளில் பல எனது அடுத்த நூலில் இடம்பெற உள்ளன. எனவே எனது அனுமதி இல்லாமல் யாரும் இவற்றை தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

சிவபூமியின் சுவடுகளைத் தேடி நான் சென்ற இடங்களில் ஒன்று தான் மிகுந்தலை. அனுராதபுரத்தின் கிழக்கில்  11 கி.மீ தொலைவில் மிகுந்தலை அமைந்துள்ளது.மிகுந்தலை என்ற பெயரைக் கேட்டவுடன் இந்தியாவில் இருந்து வந்த மகிந்த தேரர் தங்கிச் சென்ற இடம் என்பதும், தேவநம்பிய தீசன் மகிந்த தேரரை சந்தித்த இடம் என்பதும் நாம் பாடப் புத்தகங்களில் படித்தது நினைவுக்கு வரும். இவ்வாறு பெளத்த மதம் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கும் இடமாக மிகுந்தலை விளங்குகிறது.

ஆனாலும் இந்து மத செல்வாக்கும் இங்கு உள்ளது என்பதை பேராசிரியர் பரணவிதானவின் புராவிது பரியேஷன எனும் சிங்கள நூலில் படித்தேன். இவர் 1972 ஆம் ஆண்டு எழுதிய நூல் இது. பேராசிரியர் 1964 ஆம் ஆண்டு மிகுந்தலையில் உள்ள கந்தக்க தூபியில் ஆய்வுகளை மேற்கொண்டு சில ஆய்வுக் குறிப்புகளை எழுதியுள்ளார். மிக முக்கியமாக இங்குள்ள வாஹல்கடவில்  பிள்ளையார் சிற்பம் ஒன்றும், நந்தி சிலை ஒன்றும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பிற்கால கணபதி உருவங்களில் நான்கு கைகள் இருப்பினும், கந்தக்க தூபியில் உள்ள கணபதி உருவத்தில் இரண்டு கைகள் மட்டுமே உள்ளதாகவும் ஓர் அரிய, முக்கியமான தகவலை அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் குறிப்பைப் படித்த நாளில் இருந்து மிகுந்தலைக்குச் சென்று அந்த சிற்பத்தைப் பார்க்க வேண்டும் என ஆவலாக இருந்தேன். அதற்கிடையில் மிகுந்தலையில் பேராசிரியர் பரணவிதான பதிவு செய்துள்ள பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றிய விபரங்களையும் குறிப்பெடுத்துக் கொண்டேன்.

குறித்த நாளில் அனுராதபுரத்திற்குச் சென்று அங்கிருந்து பேரூந்தில் மிகுந்தலைக்குச் சென்றேன். இன்றைய எனது பயணத்தின் நோக்கம் மிகுந்தலையில் கந்தக்க தூபியில் உள்ள பிள்ளையார் சிற்பத்தையும், நந்தி சிலையையும், மிகுந்தலையில் உள்ள இந்து சமயம் தொடர்பான பிராமிக் கல்வெட்டுக்களையும் பார்க்க வேண்டும் என்பதாகும்.   

மிகுந்தலையில் ரஜரட்ட பல்கலைக் கழகத்தின் அருகில் இறங்கினேன். அங்கு ஓர்  முச்சக்கர வண்டியில் ஏறி சாரதியிடம் கந்தக்க தூபிக்குச் செல்வதற்கான தொகையைப் பேசிக் கொண்டேன். அதற்கு முன்பக்கம் செல்லத் தேவையில்லை ராஜகிரி குகை வழியாக ஓர் குறுக்குப்பாதை உள்ளது. அந்த வழியில் செல்லலாம் என்றேன். சாரதி பல்கலைக் கழகத்தைக் கடந்து வலது பக்கம் வண்டியைத் திருப்பினார்.

அந்தக் குறுக்குப் பாதையில் சுமார் 500 மீற்றர் தூரம் வரைக்கும் வீடுகள் இருந்தன. அதன் பின்பு பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பிரதேசம் என பெயர்ப்பலகை போடப்பட்டிருந்தது. அங்கிருந்து காடு ஆரம்பமானது. மிகுந்தலையில் பண்டைய சின்னங்கள் அமைந்துள்ள பகுதி காடுகளும், மலைகளும், அவற்றிடையே நூற்றுக்கணக்கான கற்குகைகளும், கற்பாறைகளும், நீர்ச் சுனைகளும், இவற்றுக்கு மத்தியில் ஆங்காங்கே பண்டைய கட்டிட இடிபாடுகளும் காணப்படும் ஓர் இயற்கை அழகுள்ள பிரதேசமாகும்.

காட்டுக்கு மத்தியில் சிறிய கிரவல் பாதையில் சென்று கொண்டிருந்தேன். சுமார் 200 மீற்றர் தூரத்தில் முச்சந்தி ஒன்று காணப்பட்டது. இங்கிருந்து இடதுபக்கம் சென்றால் இந்திக்கட்டு சேய தூபிக்கு அருகில் கண்டி வீதியை அடையலாம். வலது பக்கம் சென்றால் ராஜகிரி குகைப்பகுதி ஊடாக கண்டி வீதியை அடையலாம். எனவே வலது பக்கம் திரும்பிச் சென்று ராஜகிரி குகைப்பகுதியைக் கடந்து கண்டி வீதியை அடைந்தேன்.

கண்டி வீதியின் அடுத்த பக்கம் களுதிய பொக்குன எனும் கருநீர்ப் பொய்கை உள்ள பகுதிக்கு செல்லும் பாதை தெரிந்தது. இங்கிருந்து மிகுந்தலைப் பக்கமாக கண்டி வீதியில் சுமார் 400 மீற்றர் தூரம் சென்றதும் வலது பக்கம் கந்தக்க தூபிக்கு செல்லும் சந்தி காணப்பட்டது. இங்கிருந்து 600 மீற்றர் தூரத்தில் கந்தக்க தூபி உள்ளது. அந்தப்பாதையில் வண்டி திரும்பியது. அவ்வழியில் இரு பக்கங்களிலும் மரங்களும் அவற்றிடையே விதவித வடிவங்களில், பலவகை அளவுகளில் பாறைகளைக் கொண்டு வந்து போட்டது போல் நிறைந்து காணப்பட்டது. அது மிக அழகிய இயற்கை வனப்பு மிக்க பிரதேசம்.

சிறிது தூரம் சென்றதும் எட்டஅட்ட குகைகள் உள்ள பகுதியைக் கண்டேன். இப்பகுதியில் உள்ள காட்டில் மொத்தமாக 68 கற்குகைகள் உள்ளன. இது மிகவும் அழகான பிரதேசம். இவற்றின் பக்கத்தில் தான் கந்தக்க தூபி உள்ளது. கந்தக்க தூபியின் அருகில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில் இறங்கினேன்.



















வாகனத் தரிப்பிடத்தின் அருகிலேயே சற்று உயரமான இடத்தில் கந்தக்க தூபி காணப்பட்டது. தூபிக்குச் செல்ல கற்படிகள் அமைக்கப்பட்டிருந்தன. படிகளின் தொடக்கத்தில் கந்தக்க தூபி பற்றிய விபரப்பலகை ஒன்று காணப்பட்டது. இவ்விடத்தில் படிகளின் இரண்டு பக்கத்திலும் இரண்டு சிறிய செங்கல் தூபிகள் அமைக்கப் பட்டிருந்தன. படிகள் வழியாக ஏறி தூபி இருக்கும் இடத்தை அடைந்தேன். சுமார் 200 படிகள் வரை காணப்பட்டன.
அது தூபியின் தெற்கு வாசல் பகுதி. இது மிகவும் பழமை வாய்ந்த தூபி. இது 425 அடி சுற்றளவும், 140 அடி விட்டமும், 40 அடி உயரமும் கொண்ட தூபியாகும். இதன் அடிப்பகுதி கருங்கற்களால் கட்டப்பட்டு, உள்பகுதியில் செங்கட்டி களால் நிரப்பப் பட்டுள்ளது. 

தூபியின் நான்கு திசைகளிலும் நான்கு வாயில் பகுதி அமைக்கப்பட்டிருந்தது. இது வாஹல்கட என அழைக்கப்படுகிறது. இவ்வாசல் பகுதியின் இரண்டு பக்கங்களிலும்  பூக்கள் செதுக்கப்பட்ட இரண்டு கற் தூண்கள் காணப்பட்டன. இத்தூண் களின் கீழ் பகுதியில் நின்ற நிலையில் இரண்டு நாகராஜர் சிற்பங்கள் காணப்பட்டன.  இந்நான்கு வாயில்களும் கற்களினால் கட்டப்பட்டு, இவற்றில் கற்சிற்பங்கள் பலவும் செதுக்கப் பட்டிருந்தன. அடிப்பகுதியில் வரிசையாக யானை சிற்பங்களும், மேல்பகுதியில் பூதகணங்களின் சிற்பங்களும், வாமன உருவங்களின் சிற்பங்களும், போதிகைகள், அன்னப்பட்சிகள் ஆகிய சிற்பங்களும் செதுக்கப்பட்டிருந்தன. நான்கு வாசல்களிலும் கிழக்கு மற்றும் வடக்கு வாசல்கள் இரண்டும் நல்ல நிலையில் காணப்பட்டன.

 
















கிழக்கு வாசலில் உள்ள தூண்களின் உச்சியில் யானையின் சிலைகள் காணப்பட்டன. வடக்கு வாசலின் தூண்களின் உச்சியில் சிம்மங்கள் காணப்பட்டன. மேற்கு வாசலில் குதிரைகள் இருக்க வேண்டிய தூண்கள் உடைந்து காணப்பட்டன. அதுபோல் தெற்கு வாசலில் உள்ள தூண்களில் நந்திகள் இருக்க வேண்டிய தூண்களும் உடைந்து காணப்பட்டன. இவற்றில் இடது பக்கத் தூண் முழுமையாக இருந்தாலும் அதன் உச்சியில் முன்பு இருந்த நந்தி சிலையைக் காணவில்லை. பேராசிரியர் பரணவிதான இங்கு நந்தி சிலை உள்ளதாக தனது குறிப்பில் எழுதியுள்ளார்.

நந்தி சிவனின் அடையாளம் அல்லவா? அது இருந்தால் இங்கு சிவ வழிபாடு இருந்துள்ளது என பார்ப்பவர்கள் நினைக்க வாய்ப்புண்டு அல்லவா? அதனால் அந்த நந்தி சிலை சிலரின் கண்ணைக் குத்திக் கொண்டு இருந்திருக்கும் அல்லவா? எனவே தான் அதை அகற்றி விட்டார்கள் போலும்.




இங்கிருந்த வலது பக்கத் தூண் முழுமையாக உடைந்து கீழே விழுந்து கிடந்தது. அதிலும் நந்தி சிலையை காணவில்லை. தூபியை முழுமையாக ஒரு சுற்று சுற்றி வந்து விட்டேன். ஆனால் நான் தேடிவந்த அந்த சிற்பத்தைக் காணவில்லை. அதுதான் பிள்ளையாரின் சிற்பம்.

முன்பு தெற்கில் இருந்து கிழக்கு, வடக்கு, மேற்கு என சுற்றி வந்தேன். இப்போது தெற்கில் இருந்து மேற்கு, வடக்கு, கிழக்காக ஓர் சுற்று சுற்றி வர நினைத்தேன். ஒவ்வொரு வாசலிலும் உள்ள இரண்டு தூண்களுக்கும் இடையில் 5 பக்கங்கள் இருந்தன. இவை -ப- வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. இடமிருந்து வலமாக ஒரு பக்கம், அதிலிருந்து ப வடிவில் மூன்று பக்கங்கள், இடமிருந்து வலமாக இன்னும் ஒரு பக்கம். மொத்தமாக இந்த 5 பக்கங்களிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. 

முதலில் தெற்கு வாசலில் அடியிலிருந்து நுனிவரை 5 பக்கங்களிலும் உள்ள ஒவ்வொரு வரியாக ஆறுதலாகப் பார்த்தேன். பிள்ளையார் சிலையைக் காணவில்லை. அடுத்ததாக மேற்கு வாசலுக்குச் சென்று 5 பக்கங்களையும் உன்னிப்பாக கவனித்தேன். அங்கும் பிள்ளையாரைக் காணவில்லை. அடுத்ததாக வடக்கு வாசல். அது நன்கு பேணப்பட்ட வாசல். அடிமுதல் நுனிவரை ஒவ்வொரு பக்கமாக பிள்ளையார் சிலையைத் தேடினேன். அங்கும் பிள்ளையார் சிலையைக் காணவில்லை. கடைசியாக எஞ்சியிருப்பது கிழக்குத் வாசல் மட்டுமே.

தூணில் இருந்த நந்தி சிலையை அகற்றியது போல் பிள்ளையார் சிலையையும் அகற்றி விட்டார்களோ! இந்த பிள்ளையார் சிலை வரலாற்று சிறப்பு மிக்கது. விநாயகரை தமிழக மக்கள் வணங்குவதற்கு முன்பே இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் வணங்கியுள்ளார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் இந்த பிள்ளையார் சிலை தான். பிள்ளையார் வழிபாடு தமிழகத்திற்கு வருவதற்கு முன்பே இலங்கைத் தமிழர்களால் கைக் கொள்ளப் பட்டது என்பதற்கான சான்றுதான் இந்தப் பிள்ளையார் சிற்பம். கந்தக்க தூபியில் மட்டுமே இருக்கிறது. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிள்ளையார் சிற்பத்தை இன்னும் காண முடியவில்லை.

சிவசிவா, அந்த சிலையை நான் பார்க்க வேண்டும், அது அகற்றப் பட்டிருக்கக் கூடாது என சிவனை மனதில் வேண்டிய வண்ணம், எஞ்சியிருந்த கிழக்குத் திசை வாசலை நோக்கி விரைவாகச்  சென்றேன்.

(மிகுந்தலை ஆய்வு தொடரும்....) 

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

Sunday, May 24, 2020

தென்னமரவாடியில் இருந்த சைவ சாம்ராஜ்ஜியத்தின் சுவடுகள்



தென்னமரவாடியில் இருந்த சைவ சாம்ராஜ்ஜியத்தின் சுவடுகள்  



என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/168      25  மே 2020


குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளில் பல எனது அடுத்த நூலில் இடம்பெற உள்ளன. எனவே எனது அனுமதி இல்லாமல் யாரும் இவற்றை தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

சிவபூமியின் சுவடுகளைத் தேடி பல தடவைகள் திருகோணமலை மாவட்டத்திற்குச் சென்றுள்ளேன்.இங்கு பல இடங்களில் ஏராளமான சுவடுகள் புதைந்து கிடக்கின்றன. இவ்வாறு சிவபூமியின் சுவடுகள் புதைந்து கிடக்கும் இடங்களில் ஒன்றுதான் தென்னமரவாடி. திருகோணமலை மாவட்டத்தின்  வடஎல்லையில் திருமலை நகரில் இருந்து 70 கி.மீ தூரத்தில் தென்னமரவாடி அமைந்துள்ளது.
  
தென்னமரவாடி கிராமம் முற்கால பாண்டியர் காலத்தில் உருவான ஓர் ஊராக இருக்கவேண்டும். ஏனெனில் தென்னமரவாடி எனும் பெயரோடு பாண்டியருக்கு நெருங்கிய தொடர்புள்ளதாகத் தெரிகிறது. தென்னன்-மரபு-அடி எனும் மூன்று சொற்களைக் கொண்டு இவ்வூரின் பெயர் உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தென்னன் என்பது பாண்டியரைக் குறிக்கும் சொல்லாகும். இதுவே தென்னன் மரபடி என அழைக்கப்பட்டு பின்பு தென்னமரவாடி எனத் திரிபடை ந்துள்ளது. இதன்படி தென்னமரவாடி சுமார் 1200 வருடங்கள் பழமை வாய்ந்த ஊர் எனக் கூறலாம். 

தென்னமரவாடி பற்றிய விபரங்களைத் தேடினேன். அரிய, முக்கிய  சில தகவல்கள் கிடைத்தன. தென்னமரவாடிக்கு செல்வதற்கான தினத்தை  முடிவு செய்து விட்டு  குறித்த நாளின்  திருமலைக்குச் சென்றேன். இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து செல்லும் பேரூந்து மூலம் சென்று அதிகாலை திருகோணமலையை அடைந்தேன். அங்கு வசிக்கும் எனது சகோதரன் மகேஸ்வரன் எனக்குத் துணையாக பல இடங்களுக்கும் என்னோடு வருவார். அவருக்கு வர முடியாத சந்தர்ப்பத்தில் அவருடைய மோட்டார் சைக்கிளை எனக்குக் கொடுத்து விடுவார்.

அன்றும் அவர் என்னோடு வருவதாக இருந்தார். தென்ன மரவாடியைச் சேர்ந்த அவரின் நண்பர் குகநாதனும் எங்களுடன் வர இருக்கிறார். காலை 7.00 மணியளவில் மூவரும் இரண்டு மோட்டார் சைக்கிளில் திருகோணமலையில் இருந்து தென்னமர வாடிக்குப் பயணமானோம். அங்குள்ள பழமை வாய்ந்த கோயில் களின் சுவடுகளை ஆராய்வதும், அங்குள்ள கந்தசுவாமி மலையில் இருந்த சோழர்கால கோயிலின் இடிபாடுகளை ஆராய்வதும் அன்றைய எனது பயணத்தின் நோக்கமாகும்.

திருகோணமலையில் இருந்து சாம்பல் தீவு, நிலாவெளி, இறக்கண்டி பாலம், கும்புறுப்பிட்டி வழியாக சலப்பையாறு எனும் அழகிய இடத்தை அடைந்தோம். அது வடக்கில் இருந்து வரும் சலப்பை ஆறும், தெற்கில் இருந்து வரும் பன்குளம் ஆறும் ஒன்றிணைந்து கடலில் கலக்கும் கழிமுகப் பகுதி. ஒருபக்கம் கடலும், அடுத்த பக்கம் அகன்ற ஆறும், இவற்றின் நடுவில் பாலமும் அமைந்திருந்தது. மேற்குப்பக்கம் தூரத்தில் நாச்சியார் மலை அழகாகத் தெரிந்தது. இம்மலையை பாவா மலை என்று அழைக்கின்றனர். அவ்விடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். மீண்டும் பயணம் தொடர்ந்தது.

அங்கிருந்து குச்சவெளி என்னுமிடத்தைக் கடந்த பின்பு இன்னுமோர் ரம்மியமான இடத்தை அடைந்தோம். அதுதான் புடவைக்கட்டு பாலம். திருகோணமலை வடக்கு நெடுஞ்சாலையில் உள்ள மூன்று பாலங்களில் இதுவே நீளமான பாலமாகும். இப்பாலம் 270 மீற்றர் நீளமுடையது. இவ்விடம் குஞ்சிக்கும்பன் ஆறு கடலில் கலக்கும் கழிமுகமாகும். இதுவும் ஒருபக்கம் அகன்ற ஆறும், அடுத்த பக்கம் கடலும், அதனருகில் சிறிய மலையும் அமைந்த அழகிய இடமாகும். அங்கும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன்.   

மீண்டும் பயணம் தொடர்ந்தது. அடுத்து திரியாய் சந்தியைக் கடந்து சென்று கொண்டிருந்தோம். தூரத்தில் பிள்ளையார் மலை தெரிந்தது. அதை இன்னுமோர் தடவை வரும்போது ஆய்வு செய்யலாம் என எண்ணியவாறு முன்னேறினேன். சில நிமிடங்களில் யான் ஓயா பாலத்தை அடைந்தோம். அங்கும் சில படங்களை எடுத்துக் கொண்டேன். 

அங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் இருந்த புல்மோட்டை எனும் சிறிய நகரை அடைந்தோம். நேரம் சரியாக 9.30 மணி. இச்சிறிய நகரம் திருகோணமலையில் இருந்து 54 கி.மீ தூரத்தில் உள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் வடபகுதியில்  உள்ள கடைசி நகரம். இதையும் விட கடைசியாக உள்ளது ஓர் கிராமம். அதுதான் தென்னமரவாடி. அங்குதான் இப்போது சென்று கொண்டிருக்கிறோம். தென்னமரவாடிக்கு இன்னும் 16 கி.மீ தூரம் உள்ளது. புல்மோட்டையில் உள்ள ஓர் கடையில் தேநீர் அருந்தி விட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம். 
    
புல்மோட்டை சந்தியில் இருந்து மேற்குப் பக்கமாகச் செல்லும் வீதி பதவியாவிற்கு செல்கிறது. இவ்வீதியில் எங்கள் மோட்டார் வண்டி ஓடிக் கொண்டிருந்தது. இடையில் பாதை ஓரத்தில் ஓர் வழிப் பிள்ளையார் கோயிலைக் கண்டேன். அவ்விடத்தில் வண்டியை நிறுத்தி பிள்ளையாரை வணங்கி விட்டு, மீண்டும் பயணத்தைத்  தொடர்ந்தோம்.




















சிறிது தூரத்தில் ஓர் சந்தியை அடைந்தோம். அதுதான் அமரிவயல் சந்தி. பெயருக்கேற்ற வகையில் சுற்றிவர வயல் நிலங்கள் காணப்பட்டன. தென்னமரவாடிக்கு இங்கிருந்து வடக்குப் பக்கமாகத் திரும்பி 8 கி.மீ செல்ல வேண்டும். இச்சந்தியில் இருந்து கிரவல் மண் பாதை தொடங்கியது. இச்சந்தியில் ஓர் வழிப் பிள்ளையார் கோயில் காணப்பட்டது. சிறிய மாடம் அமைத்து உள்ளே பிள்ளையார் சிலையை வைத்திருந்தார்கள். அப்பிள்ளையாரையும் வணங்கி விட்டு தென்னமரவாடிக்கு முன்னேறினோம்.

சந்தியில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் பற்றைக்காடு காணப்பட்டது. இவ்விடத்தில் கேம்படி பிள்ளையார் கோயில் இருந்தது. இது ஓர் சிறிய கோயில். முன் பக்கம் சிறிய மண்டபமும், அதை அடுத்து கருவறையும் உள்ளது. கருவறை உள்ளே மேடை அமைக்கப்பட்டு அதில் சுதையில் அமைக்கப்பட்ட பிள்ளையார் சிலை வைக்கப் பட்டிருந்தது. அப்பிள்ளையாரையும் வணங்கி விட்டு முன்னேறினோம்.





















இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்திற்கு பாதையின் இரு பக்கங்களிலும் வயல் வெளிகள் காணப்பட்டன. அதன் பின்பு ஓர் காடு காணப்பட்டது. சுமார் ஒரு கி.மீ நீளமான இந்தக் காட்டின் நடுப்பகுதியில் மேடான நிலத்தின் ஊடாக பாதை அமைக்கப் பட்டிருந்தது. இம்மேட்டு நிலத்தில் பாதையின் இரு பக்கங்களிலும் சிறிய பாறைகளும், கற்களும் காணப்பட்டன. இவ்விடத்தை கூனப் பிள்ளையார் மலை என அழைக்கின்றனர். இவ்விடத்தில் பாதை ஓரத்தில் ஐந்து உருண்டையான கற்களும், இவற்றின் அருகில் ஓர் சிறிய மேடையில் குடில் அமைக்கப்பட்டு அதில் பிள்ளையார் கல் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் இறங்கி பிள்ளையாரை வணங்கி விட்டு அப்பகுதியை ஆராய்ந்தேன்.

தென்னமரவாடிப் பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த கோயில் கூனப்பிள்ளையார் மலை என்னுமிடத்தில் அமைந்திருந்தது. இங்கு பிள்ளையார் கோயிலும், கோயிலுக்குரிய கட்டிட இடிபாடுகளும், அவற்றின் அருகில் 4 கருங்கற் தூண்களும் காணப்பட்டதாக கிராம வாசிகள் கூறுகின்றனர். மேலும் 3 லிங்கக் கற்களும், பிள்ளையார் சிலையும்  காணப்பட்டதாகவும், இவை யாவும் யுத்த காலத்தின் போது இனவாதிகளால் அழிக்கப்பட்டு தற்போது சில கற் தூண்களின் துண்டுகளும், புதிதாக வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையும் காணப்படுவதாகவும் அறிந்தேன்.

இங்கிருந்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். சிறிது நேரத்தில் ஓர் ஆறு காணப்பட்டது. ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டிருந்த மிகவும் பழைய பாலத்தைக் கடந்தோம். இதுதான் குண்டாறு. ஆற்றைக் கடந்ததும் சுமார் ஒன்றரை கி.மீ தூரத்திற்கு வயல் வெளிகள் காணப்பட்டன.

அதன் பின்பு ஓர் ஆறு குறுக்கிட்டது. இவ்வாற்றின் பெயர் வண்ணாந்துறை ஆறு. இது சிங்கள மொழியில் மீ ஓயா என அழைக்கப்படுகிறது. ஆற்றில் நீர் காணப்படவில்லை. இவ்வாற்றைக் கடக்க பழைய பாலம் ஒன்று காணப்பட்டது. ஆற்றைக் கடந்தவுடன் 50 அடி தூரத்தில் இவ்வாற்றின் நீர் பாதையின் குறுக்கே ஒரு அடி ஆழத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் மோட்டார் வண்டியை சற்று கஷ்டப்பட்டே அடுத்த கரைக்குக் ஓட்டிச் சென்றோம்.

இங்கிருந்து 600 மீற்றர் தூரத்தில் முச்சந்தி ஒன்று காணப்பட்டது. அச்சந்தியின் மேற்குப் பக்கமாகச் செல்லும் வீதி முல்லைத்தீவுக்குச் செல்கிறது. நேராக வடக்குப் பக்கம் 4 கி.மீ தூரம் சென்றால்  தென்னமரவாடியை அடையலாம். கிரவல் பாதையில் மேலும் முன்னேறிச் சென்றபோது வலது பக்கம் கொக்கிளாய் களப்பும், கந்தசுவாமி மலையும் அழகுத் தோற்றத்தில் தெரிந்தன.

எனது இப்பயணத்தின் முக்கிய இலக்கு கந்தசுவாமி மலையில் இருந்த பண்டைய கோயிலை ஆராய்வதாகும். இம்மலையில் இருந்த சோழர் காலக் கோயில் இடிபாடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்பது எனது பிரதான நோக்கமாக இருந்தது. ஆனால் அம்மலைக்கு செல்வதானால் இராணுவ முகாமில் அனுமதி பெற வேண்டும் என ஊர் மக்கள் கூறினர். தென்னமரவாடி கிராமத்தில் இருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள முல்லைத்தீவு சந்தியில் உள்ள இராணுவ முகாமில் அனுமதி இல்லாமல் மலைக்குப் போக முடியாது எனக் கூறினர்.

உடனே இராணுவ முகாமுக்கு திரும்பினோம். முல்லைத்தீவு சந்தியில் இருந்த சிறிய இராணுவ முகாமுக்குச் சென்று அம்முகாமுக்குப் பொறுப்பான அதிகாரியோடு கதைத்தேன். நான் கொழும்பில் இருந்து இம் மலையைப் பார்ப்பதற்காக வந்தேன் எனக் கூறி அனுமதி கேட்டேன். அனுமதி கொடுக்க தனக்கு அதிகாரம் இல்லை எனவும், அது பாதுகாப்பாற்ற பகுதி, அங்கே எதற்காக செல்ல முயற்சி செய்கிறீர்கள் எனக் கேட்டார். நான் அங்குள்ள சிதைவுகளைப் பார்க்க வேண்டும் என்றேன். சிங்கபுர இராணுவ முகாமில் கேர்ணல் இருக்கிறார். அவர் இன்னும் சிறிது நேரத்தில் வருவார். வேண்டுமென்றால் அவரிடம் அனுமதி கேட்டுப் பாருங்கள் எனக் கூறினார்.

அதற்குள் கொழும்பில் உள்ள எனது நண்பர் பிரிகேடியர் ஒருவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். நான் தென்னமரவாடிக்கு வந்திருக்கும் விடயம் பற்றி அவரிடம் கூறினேன்.  சிங்கபுரம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி வந்தவுடன் அழைப்பு எடுங்கள் என்றார்.

பத்து நிமிடத்தில் ஒரு ஜீப் வண்டி வந்தது. அதில் இருந்து கேர்ணல் மூன்று இராணுவ வீரர்களுடன் இறங்கி வந்தார். என்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவரும் கொழும்பைச் சேர்ந்தவர்.  எனது விருப்பத்தை அவரிடம் சொன்னேன். கொழும்பில் உள்ள எனது பிரிகேடியர் நண்பர் பற்றிக் கூறினேன். பிரிகேடியரை  மீண்டும் தொலைபேசியில் அழைத்தேன். அவர் சிங்கபுர கேர்ணலுடன் கதைத்தார். இராணுவ அதிகாரிகள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள். நண்பர்கள் அன்போடு பேசிக் கொண்டார்கள். பின்பு என்னிடம் தொலைபேசியைத் தந்தார். எனக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டதாக கொழும்பு நண்பர் என்னிடம் கூறினார்.   

கந்தசுவாமி மலைப்பகுதி இன்னும் காடாக இருப்பதாகவும், யுத்தம் முடிவுற்ற பின்பு இன்னும் அப்பகுதியை கிளியர் செய்யவில்லை எனவும், பொது மக்களை இதுவரை அங்கு செல்ல அனுமதிக்க வில்லை எனவும், இன்னும் ஒரு மாதத்தின் பின்பு அங்கு செல்லலாம், இப்போது செல்வது பாதுகாப்பல்ல, உங்களை அங்கு அனுப்ப முடியாமைக்கு வருந்துகிறேன் எனவும் கேர்ணல் கூறினார். ஆனால் உங்களை ஓர் முக்கியமான இடத்திற்கு கூட்டிச் செல்கிறேன் என்றார். ஆவலோடு எங்கே என்று கேட்டேன்.

யுத்த காலத்தின் போது இப்பகுதியில் காடுகளுக்குள் சில இந்து தெய்வச் சிலைகள் ஆங்காங்கே காணப்பட்டதாகவும், அவற்றை எல்லாம் எடுத்து, சிங்கபுரம் இராணுவ முகாமின் முன்பாக ஓர் கோயிலை அமைத்து அதில் பாதுகாத்து வைத்துள்ளதாகவும், தினமும் காலை அதற்கு பூ வைத்து வணங்கி, பின்னேரம் விளக்கேற்றி வழிபட்டு வருவதாகவும் கூறினார். அச்சிலைகளை நான் உங்களுக்குக் காட்டுகிறேன் என்று கூறி தன்னைப் பின் தொடருமாறு கூறி ஜீப் வண்டியில் சென்றார். எங்களோடு வந்த நண்பரைப் பார்த்தேன். அவர் கலவரமடைந்த முகத்தோடு எம்மைக் பார்த்தார். நாங்கள் இருவரும் சென்று வருகிறோம் எனக் கூறி ஜீப் வண்டியைப் பின் தொடர்ந்தோம்.
 
இங்கிருந்து நான்கு கி.மீ தூரத்தில் சிங்கபுர இராணுவ முகாம் அமைந்திருந்தது. நானும், எனது சகோதரனும் குன்றும் குளியுமாகக் காணப்பட்ட கிரவல் பாதை வழியாக எங்கள் மோட்டார் சைக்கிளில் ஜீப் வண்டியைத் தொடர்ந்து சிங்கபுர இராணுவ முகாமுக்குச் சென்றோம். சில நிமிடங்களில் சிங்கபுர குளத்தின் அருகில் இருந்த இராணுவ முகாம் வாசலை அடைந்தோம். அங்கு பாதையின் ஓரத்தில் ஓர் சிறிய கோயில் காணப்பட்டது. அதனருகில் ஓர் சென்றி பாயிண்ட் காணப்பட்டது. ஓர் நாற்சதுர கட்டிடத்தின் மேல்பகுதியில் கொங்கிரீட் கூரை போடப்பட்டு, இரும்புக் கம்பிகளால் கதவு அமைக்கப்பட்டிருந்தது. அதன் சுவர்களில் அழகிய பிள்ளையார் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. கோயிலின் முன்பக்கம் சதுர வடிவில் தேங்காய் உடைக்க ஓர் கட்டு கட்டப்பட்டிருந்தது. கேர்ணல் இங்குதான் சிலைகள் உள்ளன. பாருங்கள் என்றார். அருகில் சென்று பார்த்தேன்.

  

நம்ப முடியாத,  ஆச்சரியமான, ஆனால் உண்மையான ஓர் காட்சியை அங்கே கண்டேன். தென்னைமரவாடிப் பகுதியில் இருந்த சைவ சாம்ராஜ்ஜியத்தின் சுவடுகள் எல்லாம் அங்குதான் இருந்தன. அக்கோயிலில் மொத்தமாக ஆறு கற்சிலைகள் காணப்பட்டன. நடுவில் இரண்டு அடி உயரமான மிகப்பண்டைய கால, கரடு முரடான பிள்ளையார் சிலை காணப்பட்டது. அதை அடுத்து ஒன்றரை அடி அளவிலான மிகப்பண்டைய நந்தியின் கற்சிலை காணப்பட்டது. இவற்றின் அருகில் ஓர் கல்லில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட ஒரு அடி உயரமான வேல், எட்டு அங்குலம் உயரமான பண்டைய மூஷிகத்தின் கற்சிலை, ஒரு அடி உயரமான கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்ட அம்மன் சிற்பம், ஒன்றரை அடி உயரமான ஓர் கற்சிலை. கை கூப்பி வணங்கிய வண்ணம் காணப்படும் இச்சிலையின் இடுப்பு வரையான உடைந்த துண்டுப்பகுதி மட்டுமே காணப்பட்டது.



சிலைகளைக் கண்டு மெய்சிலிர்த்த நிலையில் இவற்றை புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என கேர்ணலிடம் கேட்டேன். தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். சிலைகளை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். இச்சிலைகள் எப்படிக் கிடைத்தன என்று   கேர்ணலிடம் கேட்டேன். இவை தென்னமரவாடியை சுற்றியுள்ள காடுகளில் ஒவ்வொரு இடங்களிலும் காணப்பட்டதாகவும், இப்பகுதியில் உள்ள சிங்கள மக்கள் இவற்றை விகாரைகளுக்கு கொண்டு செல்ல முற்பட்டதாகவும், இவை இங்கிருந்த கோயில்களுக்கு உரியவை எனக் கூறி அவற்றை அவர் கொண்டு வந்து முகாமின் முன்பக்கம் கோயில் கட்டி தனது கண்காணிப்பில் வைத்துக் கொண்டதாகவும் கூறினார். இவற்றுக்கு உரிய கோயில் காரர்கள் யாராவது வந்து கேட்டால் கொடுத்து விடுவேன் எனவும் கூறினார்.

கேர்ணல் கூறிய விடயம் மன மகிழ்ச்சியைத் தந்தது. இந்த சிலைகளை எல்லாம் பெளத்த விகாரைகளுக்குள் சென்று விட்டால் அதன் பின்பு யாராலும் இவற்றைக் கண்டு பிடிக்க முடியாது. அந்த வகையில் இவற்றை பாதுகாத்து எனது கண்ணில் காட்டிய கேர்ணல் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.

கொழும்பில் இருந்து வந்திருக்கிறீர்கள். எனது நண்பரின் நண்பர் நீங்கள். வாருங்கள் தேநீர் அருந்தி விட்டு செல்லலாம் என முகாமுக்கு அழைத்தார். இல்லை நான் மீண்டும் திருமலைக்குச் சென்று இன்று இரவு கொழும்புக்குச் செல்ல வேண்டும், எனவே அடுத்த தடவை நிச்சயம் வருகிறேன் எனக் கூறி, நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றோம்.

முல்லைத்தீவு சந்தியில் முகாமுக்கு வெளியே எங்களை அனுப்பிவிட்டு காத்துக் கொண்டிருந்தார் எங்களுடன் வந்த நண்பர்.
எங்களைப் பார்த்தவுடம் கலவரத்தோடு இருந்த அவர் மனம் மகிழ்ந்து பெருமூச்சு விட்டார். அவரது பெருமூச்சின் அர்த்தம் என்னவென்று நான் புரிந்து கொண்டேன்.

தென்னமரவாடி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பிள்ளையார் கோயிலையும், கந்தசுவாமி மலையையும் அடுத்த தடவை ஆய்வு செய்யலாம் என நினைத்த வண்ணம் தென்னமரவாடியில் 1300 வருடங்களுக்கு முன்பு இருந்த சைவ சாம்ராஜ்ஜியத்தின் சுவடுகளைக் கண்ட மன நிறைவோடு திருகோணமலைக்குத்  திரும்பிக்  கொண்டிருந்தேன்.

(தென்னமரவாடி ஆய்வுப் பயணம் தொடரும்..)

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை