Sunday, November 29, 2020

கோயில் கிணற்றடியில் 600 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டு.

 

கோயில் கிணற்றடியில் 600 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டு.


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/198 29 நவம்பர் 2020

குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)


சிவ பூமியின் சுவடுகளைத் தேடி எமது தொன்மையான வரலாற்றைக் கூறும் கோயில்களும், பாரம்பரிய தொல்பொருள் சின்னங்களும் காணப்படும் இடங்களுக்கு சென்ற போது பல முக்கிய சின்னங்களை காணக்கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட ஓர் இடத்திற்குச் சென்றேன்.
அது வவுனியா மாவட்டத்தில் உள்ள ஆறுமுகத்தான் புதுக்குளம் எனும் ஊரில் உள்ள கந்தசுவாமி கோயில்.
இவ்விடம் வவுனியா நகரின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இங்குள்ள கந்தசுவாமி கோயில் சுமார் 600 வருடங்கள் பழமை வாய்ந்த கோயில் என்பதற்கான பல சான்றுகள் இங்கு காணப்பட்டன.

இங்கு 3 புராதன கற்தூண்களின் உடைந்த துண்டுகள் உட்பட பல தொல்பொருள் சின்னங்களைக் காண முடிந்தது. இவற்றில் புராதன கோமுகி கருவறையுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது. மற்றும் பலிபீடம் ஆகியவற்றோடு புராதன மயில் ஒன்றின் கற்சிலையும், சில கற் தூண்களின் பாகங்களும் காணப்பட்டன. இவை யாவும் தேடுவாரற்று ஆங்காங்கே கிடந்தன.

எல்லாவற்றையும் பார்த்து விட்டு கிணற்றடிக்குச் சென்றேன். அங்கு தான் நான் எதிர்பார்க்காத ஓர் முக்கிய சின்னத்தைக் காணக் கிடைத்தது.
அது ஓர் தமிழ்க் கல்வெட்டு. அதில் 15 வரிகளில் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. ஒரு நீளமான கற்தூணில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. கிணற்றின் அருகில் கால் கழுவப் பயன்படுத்தப்படும் சீமெந்து கட்டுக்கு செல்ல ஒரு படியாக இக்கல் வைக்கப்பட்டுள்ளது. இதில் பல எழுத்துக்கள் சிதைந்து காணப்பட்டன.


இது ஒரு கல்வெட்டு என அறிந்ததும் அங்கு வந்த ஆலய நிர்வாகிகளிடம் விபரத்தை கூறி அதைப் பாதுகாக்கும்படி கூறினேன். அங்கு வெளியே கண்டபடி கிடந்த தொல்பொருள் சின்னங்களையும் கோயிலின் உள்ளே பாதுகாப்பாக வைக்கும் படி கூறினேன்.
இது போன்ற நூற்றுக்கணக்கான அரிய, சின்னங்கள் எமது ஆலயங்களுக்கு வெளியே குப்பைகளில் தேடுவாரற்று கிடப்பதை பல இடங்களில் கண்டுள்ளேன்.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.

No comments:

Post a Comment