Sunday, November 29, 2020

சிம்மகிரி, சிகிரியா எனும் சிவகிரியில் காளி வழிபாடு

 

சிம்மகிரி, சிகிரியா எனும்
சிவகிரியில் காளி வழிபாடு


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/196 29 நவம்பர் 2020

குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)
பண்டைய காலத்தில் சிவகிரி என்றும் காசியப்பன் காலத்தில் சிம்மகிரி என்றும் அழைக்கப்பட்டு தற்போது சிகிரியா என்றழைக்கப்படும் மலைக்கோட்டையில் காளி வழிபாடு நிலவிய கற்குகையைத் தேடிச் சென்றேன்.
இக்கற்குகை சிம்மகிரி மலைக் கோட்டையின் அடிவாரத்தில் உள்ளது. இக்கற்குகையில் 2000 வருடங்களுக்கு முன்பு காளி வழிபாடு நிலவியுள்ளது.
சிம்மகிரி மலை அடிவாரத்தில் உள்ள கற்குகைகளில் பொறிக்கப் பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுகளில் காளி பற்றிய கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இக்கற்குகை பிரதான மேற்குப்பக்க பாதையில் உள்ள பாறைத் தோட்டத்தில், இரு கற்பாறைகளுக்கு இடையில் அமைந்துள்ள நுழைவாயிலில், இடது பக்கத்தில் உள்ள பறையின் மேற்பகுதியில் வெட்டப்பட்டுள்ள கற்புருவத்தின் கீழே பொறிக்கப்பட்டுள்ளது.

இப்பாறையின் கீழ் காணப்படும் குகையில் காளி கோயில் இருந்திருக்கலாம் என எண்ணக் கூடியதாக உள்ளது. ஏனெனில் இவ்விடத்தில் தெய்வச் சிலை வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் நீள்சதுர வடிவமுள்ள பீடக்கல் ஒன்று காணப்படுகிறது. கற்பீடத்தின் பின்பக்கம் பாறையுடன் இணைக்கப்பட்டு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுப்பகுதியில் இருந்த கற்பலகை காணப்படவில்லை. கற்பீடத்தின் மூன்று பக்க விளிம்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன. புதையல் திருடர்கள் பீடக்கல்லைத் தோண்டி எடுத்து அதன் அடியில் இருந்த திரவியங்களை எடுத்திருப்பார் எனத் தோன்றுகிறது.
இக்குகையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு பேராசிரியர் பரணவிதானவால் வாசிக்கப் பட்டுள்ளது. இக்கல்வெட்டின் விபரம் பின்வருமாறு.
“பரும(க) கடிய புத்த”
இதன் பொருள், “பெருமகன் கடியின் புத்திரன்” என்பதாகும். கடி என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது காளியைக் குறிக்கும் பதமாகும் என பேராசிரியர் பரணவிதான கருதுகிறார்.

எனவே கல்வெட்டின் பொருள் பின்வருமாறு அமைகிறது.
“பருமகனான காளியின் பெயரைத் தாங்கியோனின் புத்திரன்”
இதன்படி சிகிரியா பகுதியில் காளி வழிபாடு நிலவியுள்ளது எனக் கூறக் கூடியதாக உள்ளது.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.

No comments:

Post a Comment