Sunday, November 29, 2020

அனுராதபுரத்தின் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட பண்டைய சிவன் கோயில்

 

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/200 29 நவம்பர் 2020

குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

சிவபூமியின் சுவடுகளைத் தேடி ஒரு தடவை அனுராதபுரத்திற்கு சென்றபோது அனுராதபுரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள காட்டில் உள்ள விஜேராம விகாரைப் பகுதியில் புதிதாக ஒரு இடத்தில் சில
இடிபாடுகள் அகழ்வாராய்ச்சி செய்யப்படுவதாக அறிந்தேன்.
அநுராதபுரத்தில் வடபகுதியில் தான் சோழர் காலத்தில் பல இந்துக் கோயில்கள் கட்டப்பட்டன. எனவே புதிதாக அகழ்வுகள் செய்யப்படும் இந்த இடத்திற்குச் சென்று பார்க்க வேண்டும் எனும் ஆவல் ஏற்பட்டது. அவ்விடத்திற்குச் சென்று பார்த்தபோது அதுவரை பார்க்காத சில அரிய விடயங்களைக் காணக் கிடைத்தது.
அனுராதபுரம் புராதன நகரின் வடக்கில் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள பலுகஸ்வெவ குளத்தின் வட கரையில் விஜேராம விஹாரையின் கட்டிட இடிபாடுகள் காணப்படுகின்றன. இங்கு ஓர் சிவன் கோயிலின் எச்சங்களையும் காணக்கூடியதாக இருந்தது.
இங்கு மேற்கொண்ட அகழ்வுகளின் போது கருங்கல் நந்தி சிலைகளும், இந்து தெய்வச்சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. இதே போன்ற வடிவத்தையுடைய நந்தி சிலைகள் மாத்தளை மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள மெனிக்தென என்னுமிடத்திலும் கண்டெடுக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு கிடைக்கப்பெற்ற நந்தி போன்று இன்னுமோர் நந்தி அபயகிரி விஹாரைப் பகுதியிலும் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இவை இங்கிருந்த சிவாலயத்தின் எச்சங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இத்தெய்வ உருவங்களைக் கொண்டிருந்த சிவாலயம் பொ.ஆ. 7 முதல் 10 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாக இருக்கவேண்டும் எனக் கூறப்படுகிறது.
இங்கிருந்த சிவாலயம் பல பரிவார மூர்த்திகளைக் கொண்டிருந்தது எனக்கூறும் வகையில் சிவாலயத்தின் அதிஷ்டானத்தில் 6 சிம்மக் கோமுகிகள் காணப்படுகின்றன.


மேலும் சிவாலய கட்டிடத்தின் சுவர்களில் நின்ற நிலையில் சிவன்-பார்வதியின் 6 புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிவன்-பார்வதி சிற்பங்களின் இரண்டு பக்கங்களிலும் துவார பாலகர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன.
இவற்றைத் தவிர இங்கு வெண்கலத்தினால் செய்யப்பட்ட சிறிய நந்தியின் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. இது 12 செ.மீற்றர் உயரமுடைய சிறிய நந்தியாகும்.


பொ.ஆ. 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இச்சிலையின் முதுகுப் பகுதி உடைந்துள்ளது. திமிலின் பின்பகுதி காணப்படவில்லை. இச்சிலை தற்போது கொழும்பு தேசிய நூதன சாலையில் உள்ளது.
இப்படியான சுமார் 20க்கும் மேற்பட்ட இந்துக்கோயில்கள் அனுராதபுரத்தில் காணப்படுவதாக H.C.P. பெல் அவர்களின் ஆய்வுக் குறிப்புகள் மூலம் தெரிய வருகிறது.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்.
இலங்கை.

No comments:

Post a Comment