Saturday, June 13, 2020

காட்டின் மத்தியில் ஓர் கந்தசுவாமி கோயில் - கபிலித்தை ஆய்வுப் பயணம்-பகுதி 1


காட்டின் மத்தியில் ஓர் கந்தசுவாமி கோயில்

கபிலித்தை ஆய்வுப் பயணம்-பகுதி 1


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/174     13 ஜூன் 2020

 

குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

பாரம்பரியம் மிக்க கதிர்காமக் கந்தனின் வருடாந்த திருவிழா அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. இக்கால கட்டத்தில் கதிர்காமத்தைப் போன்ற புனிதமும், சக்தியும் மிக்க இன்னுமோர் முருகன் கோயில் யாள காட்டின் மத்தியில் அமைந்துள்ளது. அக்கோயில் பற்றிய பயணக் கட்டுரையை எழுத வேண்டும் என பல நண்பர்கள் கேட்டுக் கொண்டனர்.

கதிர்காமத்தைப் போன்று சக்தி மிக்க ஓர் முருகன் கோயில் காட்டுக்குள் இருப்பதாக 10 வருடங்களுக்கு முன்பு அறியக் கிடைத்தது. அக்கோயில் பற்றிய விபரங்களைத் தேடிய போது இங்கு அடிக்கடி சென்று வரும் ஓர் சிங்கள இளைஞர் அறிமுகமானார். அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரண்டு மூன்று தடவை பேசிய பின் அவர் எனது நண்பரானார். அவர் பெயர் தேசாந்த.

முருகப் பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்ட தேசாந்த ஒரு வருடத்தில் குறைந்தது மூன்று தடவைகள் இக்காட்டுக் கோயிலுக்கு சென்று வந்து தனது அனுபவங்களை வலைத்தளத்தில் பதிவிடும் வழக்கம் கொண்டவர். அக்கோயில் தான் யாள காட்டின் மத்தியில், கும்புக்கன் ஆற்றங்கரையில் உள்ள கபிலித்தை என்னும் இடத்தில் அமைந்துள்ள முருகன் கோயில்.

அக்கோயிலுக்கு நானும் செல்ல வேண்டும் என எனது விருப்பத்தைக் நண்பரிடம் கூறியபோது, என்னையும் தன்னோடு கூட்டிச் செல்வதாகக் கூறினார். நண்பர் தேசாந்த இக்கோயில் பற்றிய பல விபரங்களைத் கூறினார். அன்று முதல் கபிலித்தை முருகன் கோயில் பற்றி ஆராயத் தொடங்கினேன்.   

இக்கோயில் கூமுனை அருகில், கும்புக்கன் ஆற்றின் கரையில் உள்ள மடத்துறை அம்மன் கோயிலில் இருந்து வடமேற்குப் பக்கத்தில் 24 கி.மீ தூரத்தில் கும்புக்கன் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் இவ்விடத்தில் அமையப்பெற்ற வரலாறு பற்றி ஆராய்ந்தபோது இதுவரை நான் அறிந்திராத பல தகவல்கள் கிடைத்தன.

உகந்தையில் வீரபாகுத் தேவருடன் கரையிறங்கிய முருகப் பெருமான் உகந்தையில் இருந்து மடத்துறைக்கு வந்து தங்கியிருந்து அங்கிருந்து கபிலித்தைக்குச் சென்று குடிகொண்டதாகவும், அதன் பின்பு இங்கிருந்து கதிரமலைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சூரனை வதம் செய்த பின்பு மீண்டும் கபிலித்தைக்கு வந்து இங்கிருந்த புளியமரத்தின் கீழ் நிஷ்தையில் அமர்ந்ததாகவும், இப்புளியமரத்தின் அருகில் தான் முதன் முதலில் வள்ளியை சந்தித்ததாகவும் கர்ண பரம்பரையாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கதிர்காமத்தைப் போன்று கபிலித்தையும் ஓர் புனித தலமாகக் கருதப்படுகிறது.

அடுத்ததாக கபிலித்தை எனும் பெயர் இவ்விடத்திற்கு எப்படி வந்தது என ஆராய்ந்தேன். அப்போது இது பற்றிய மூன்று விடயங்கள் கிடைத்தன. கதிரமலைக்கு தீர்த்த யாத்திரை வந்த கபில முனிவர் இங்கிருந்த இத்திமரக் காட்டில் தங்கிச் சென்றதால் இவ்விடம் கபிலர் இத்திக்காடு எனப் பெயர் பெற்று பின்பு கபிலித்தைக் காடு என மருவியதாகக் தெரிய வந்தது.

மேலும் கபிலை என்பது தென்கீழ்த் திசை பெண்யானை என்பதைக் குறிப்பதாகும். இப்பிரதேசம் தென்கீழ் திசையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே கபிலை எனும் பெண் யானைகள் அதிகமாகக் காணப்படும் இத்திக்காடு, கபிலை இத்திக்காடு என அழைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக கபிலச் சிலந்தி எனும் சிலந்தி இனங்கள் காணப்படும் இத்திக்காடு என்பதால் கபிலித்தை எனப் பெயர் பெற்றது எனவும் கூறப்படுகிறது.

இத்தனை சிறப்புமிக்க கபிலித்தை முருகன் கோயிலுக்குச் செல்வதற்கு மொத்தமாக நான்கு வழிகள் உள்ளன.


உகந்தை முருகன் கோயிலின் அருகில் உள்ள குமண சரணாலய  வாசல் வழியாக கும்ம்புக்கன் ஆற்றங்கரைக்கு வந்து அங்குள்ள மடத்துறை அம்மன் கோயிலில் இருந்து வடமேற்குப்பக்கத்தில் கும்புக்கன் ஆற்றின் வலது கரை வழியாக கபிலித்தை முருகன் கோயிலுக்குச் செல்லும் ஓர் பாதை அமைந்துள்ளது. எனினும் இது சீரான பாதை அல்ல. கோயிலுக்குச் செல்லும் வழியில் மூன்று ஆறுகளைக் கடக்க வேண்டி உள்ளது. இவ்வாறுகளைக் கடக்க பாலங்கள் எதுவும் இல்லை. மடத்துறை அம்மன் கோயிலில் இருந்து போகும் வழியில் ஒன்றரை கி.மீ தூரத்தில் எதகும்புக்க என்னுமிடத்தில் வனத்துறை விடுதி உள்ளது.

இவ்விடத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் மகா கல் அமுன எனும் பெரிய கல்லணை அமைந்துள்ளது. பாரிய கற்பாலங்களை ஆற்றின் குறுக்கே போட்டு நீரைத் தேக்கி இங்கிருந்து கால்வாய் மூலம் குமண குளத்துக்கு நீர் அனுப்பப் படுகிறது. இவ்வணை இராவணன் காலத்தில் அசுரர்களால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதை அடுத்து குடா கல் அமுன எனும் சிறிய கல்லணையும், அதைத் தொடர்ந்து பதங்கி கஸ்தொட்ட, மண்டா கஸ்தொட்ட, பக்மீ தொட்ட ஆகிய இடங்களும் அமைந்துள்ளன. பக்மீ தொட்ட மகா கல் அமுனவில் இருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. இதை அடுத்து கல் குறிஞ்சான் ஆறு ஓடுகிறது. இவ்வாற்றை வாகனத்தில் கடக்கலாம்.


இங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் கல்வங்கெடி பொல என்னுமிடம் உள்ளது. இவ்விடத்தை அடுத்து அலகொல ஆறு ஓடுகிறது. எப்பொழுதும் நீர் அதிகளவில் காணப்படும் இவ்வாற்றை கோடை காலங்களில் கூட ஒரு சில மாதங்கள் மட்டுமே வாகனங்களில் கடந்து செல்ல முடியும். அனேகமாக இவ்விடம் வரையுமே வாகனத்தில் சென்று இங்கிருந்து ஆற்றைக் கடந்து நடந்தே கபிலித்தைக்குச் செல்ல வேண்டும்.

அலகொல ஆற்றில் இருந்து 9 கி.மீ தூரத்தில் கபிலித்தை உள்ளது. அலகொல ஆற்றைக் அடுத்து மகா வெல தொட்ட என்னுமிடம்  அமைந்துள்ளது. இவ்விடம் அலகொல ஆற்றில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து 6 கி.மீ தூரத்தில் கபிலித்தை அமைந்துள்ளது. இங்கு தொட்ட எனக் குறிப்பிட்டு வரும் அத்தனை இடங்களும் கும்புக்கன் ஆற்றைக் கடக்கும் துறைகளாகும்.
அடுத்த பாதை கதிர்காமத்தில் இருந்து கட்டகாமம் ஊடாக வந்து வரஹன பாலம் வழியாக மாணிக்க கங்கையைக் கடந்து அங்கிருந்து நாவலடி ஊடாக  கும்புக்கன் ஆற்றங்கரைக்கு வந்து, ஆற்றைக் கடந்து, முன்பு சொன்ன மடத்துறை அம்மன் கோயிலில் இருந்து வரும் பாதையை அடைந்து அங்கிருந்து கபிலித்தைக்குச் செல்லும் பாதையாகும்.

மூன்றாவது பாதை மொனறாகலையை அடுத்து உள்ள புத்தல சந்தியில் இருந்து கதிர்காமத்துக்கு செல்லும் வழியில் உள்ள கல்கே என்னுமிடத்தில் இருந்து கிழக்குப் பக்கமாகச் செல்லும் காட்டுப் பாதை. இப்பாதையில் 35 கி.மீ தூரம் பயணம் செய்து கும்புக்கன் ஆற்றைக் கடந்து கபிலித்தையை அடையலாம். இந்த மூன்று வழிகளிலும் கபிலித்தைக்குச் செல்வதற்கு வனத்துறையின் அனுமதியோடு அவர்களின் ஜீப் வண்டியிலேயே செல்ல முடியும்.

நான்காவது பாதைதான் மிகவும் இலகுவாக எல்லோரும் செல்லக் கூடிய  பாதை. வனத்துறையின் அனுமதியின்றி யாரும் இப்பாதை ஊடாகச் செல்லலாம். அதுதான் கொட்டியாகல பாதை. இது சியம்பலண்டுவை-மொனறாகலை வீதியில் உள்ள கொடயான சந்தியில் இருந்து தெற்கு நோக்கி 5 ஆம் கட்டை, வத்தேகம ஊடாக 19 கி.மீ தூரத்தில் உள்ள கொட்டியாகல எனும் கிராமத்துக்கு சென்று அங்கிருந்து 22 கி.மீ பயணம் செய்து கபிலித்தையை அடையலாம்.
கொட்டியாகல ஊடாக செல்லும் இந்தப் பாதையிலேயே அதிகமான யாத்திரீகர்கள் கபிலித்தைக்குச் செல்கின்றனர். ஏனைய மூன்று வழிகளை விட இவ்வழியே கபிலித்தை முருகன் கோயிலுக்கு  செல்வதற்கான இலகுவான வழியாகும்.

கபிலித்தை முருகன் கோயில் பற்றிய இத்தனை விபரங்களையும் ஆராய்ந்து அறிந்த பின் நண்பர் தேசாந்தவை தொடர்பு கொண்டு கபிலித்தை முருகனைத் தரிசிக்கும் முன்பு கடைப்பிடிக்க வேண்டிய பாரம்பரிய விரத முறைகள் ஏதாவது உள்ளதா எனக் கேட்டேன். அவர் கூறிய விரத முறைகளும், கபிலித்தை தொடர்பான வேடர்கால சம்பிரதாயங்களும் ஆச்சரியத்தை உண்டாக்கின.

(தொடரும்...)

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                       
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

No comments:

Post a Comment