இராவணன் கோணேஸ்வரப் பெருமானையும், கேதீஸ்வரப் பெருமானையும், ஒரே நேரத்தில் இருந்து வணங்கிய மலை
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/183 01 ஜூலை 2020
குறிப்பு:
(நான்
இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத்
தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம்.
மிக்க நன்றி)
சிவபூமியின்
சுவடுகளைத் தேடி ஆராய்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், யார் இந்த இராவணன் எனும்
நூலை நான் எழுதிக் கொண்டிருந்த போது, இராவணன் காலத்தில் சிவலிங்கங்கள் இருந்த இடங்கள் எவை எனத் தேடினேன்.
இராவணன்
இலங்கையில் ஆயிரக்கணக்கான சிவலிங்கங்களை ஸ்தாபித்து வணங்கி வந்ததாகக்
கூறப்படுகிறது. இராவணன் காலத்தில் இருந்த லங்காபுரி எனும் இராவணன் நாடு
கடற்கோளினால் அழிந்த பின் இராவணன் நாட்டின் எஞ்சிய சிறு பகுதியே இன்றைய இலங்கை
என்பது வால்மீகி இராமாயணம் மூலம் அறியப்படுகிறது.
இதன்படி
இராவணன் ஸ்தாபித்த சிவலிங்கங்களில் ஏராளமானவை அழிந்து போய் விட்டன. இருப்பினும் கடற்கோளுக்குத்
தப்பிய இன்றைய இலங்கையில் எஞ்சிய சிவலிங்கங்கள் இருந்திருக்க வேண்டும். அப்படி
எஞ்சிய சிவலிங்கங்கள் எங்கிருந்தன எனத் தேடியபோது, 38 சிவலிங்கங்கள்
இருந்த இடங்களை அடையாளம் காண முடிந்தது.
அவற்றில்
ஒரு இடம் தான் இலக்கு மலை. இலக்கு மலையின் உச்சியில் உள்ள ஓர் இடத்தில் இராவணன்
தனது புஷ்பக விமானத்தை நிறுத்தி வைத்து விட்டு சிவலிங்க வழிபாடு செய்ததாகவும்,
இப்பகுதியில் உள்ள மக்கள் இராவணனை ஓர் பலம் மிக்க சக்தியாக நம்புவதாகவும்
மாத்தளையில் வசிக்கும் நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார்.
அன்று
முதல் இலக்கு மலைக்கும், இராவணனுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி ஆராய்ந்தேன்.
அப்போதுதான் பல ஆச்சரியமான விடயங்கள் கிடைத்தன.
இராவணன்
இம்மலையில் இருந்து காலை வேளையில் திருக்கேதீஸ்வரப் பெருமானையும், திருக்கோணேசப் பெருமானையும்
வணங்குவதாகவும் தகவல்கள் கிடைத்தன.
இத்தனை
சிறப்புமிக்க இலக்குமலையைப் பார்க்க வேண்டும் என ஆவலுடன் இருந்தேன். அதற்கான
சந்தர்ப்பமும் கிடைத்தது. எனது அலுவலக நண்பர்களுடன் அந்தப் பயணம் அமைந்தது.
மாத்தளை
நகரில் இருந்து வடக்கு நோக்கி தம்புள்ளைக்கு செல்லும் வீதியில் உள்ள ரத்தொட்ட
சந்தியில் இருந்து கிழக்குப் பக்கமாக செல்லும் வீதியில் 30 கி.மீ தூரத்தில் இலக்கு
மலை அமைந்துள்ளது. நக்கீள்ஸ் மலைத்தொடரில் 900 மீற்றருக்கு மேல் உயரமான 35 முக்கிய
மலைக்குன்றுகளில் இலக்கு மலைக் குன்றும் ஒன்றாகும்.
குறிப்பிட்ட
நாளில் வான் வண்டி மூலம் பயணம் செய்து பிற்பகல் 2 மணியளவில் இலக்கு மலையில் இராவணன் தியானம்
செய்த இடத்தை அடைந்தோம். பாதையின் இடது பக்கம் கொஞ்சம் பற்றைகள் இருந்தன. அவற்றைக்
கடந்தவுடன் அந்த இடத்தைப் பார்த்தேன். மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
சுமார்
3000 அடிகள் உயரமான இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ஓர் சமதரை காணப்பட்டது. இத்தரையின்
நடுப்பகுதியில் தரையில் சமதள பாறை அமைந்துள்ளது. உயரமான பகுதியில் இருந்து வரும்
நீர் ஊற்று அப்பாறையின் நடுவில் ஓடிக்கொண்டிருந்தது. நடுப்பகுதியில் இருந்து
சுமார் 10 பாகை வடக்கு நோக்கி பாறை உயர்ந்து கொண்டே போனது. கற்பாறையின் மேல்
மிகவும் மெல்லிய அளவில் மண் மூடப்பட்டு அதில் புல் வளர்ந்திருந்தது. இளம்பச்சை
வெல்வேட் துணி விரித்தது போல புல்தரை காணப்பட்டது.
உண்மையில்
அது ஓர் குட்டி விமானத் தளம் போல் தான் இருந்தது. இராவணன் இவ்விடத்தில் தான் தனது
புஷ்பக விமானத்தை நிறுத்திவிட்டு இப் புல்தரையின் உச்சிப் பகுதிக்குச் சென்று
அங்கிருந்து திருக்கேதீஸ்வரத்தையும், திருக்கோணேஸ் வரத்தையும் தரிசிப்பானாம்.
சமதரையின் தொடக்கப் பகுதியில் இருந்து சுமார் 600 மீற்றர் தூரம் நடந்து சென்று
அதன் உச்சிப் பகுதியை அடைந்தோம். பலமாகக் காற்று வீசியது. அதனால் உச்சியின்
ஓரத்துக்குச் செல்ல முடியவில்லை. ஓரத்தில்
படுபாதாளம் உள்ளது.
இவ்விடம்
தான் இராவணன் தியானம் செய்யும் இடமாம். உண்மையில் பனி, முகில் மூட்டம் இல்லாத
தெளிவான வானிலையில், மிகத் தூரம் வரை பார்க்கக்கூடிய தொலை நோக்கிக் கண்ணாடியில் பார்த்தால்
வடமேற்கில் திருக்கேதீஸ்வரத்தையும், வடகிழக்கில் திருக்கோணேஸ்வரத்தையும் நாமும்
பார்க்கலாம் போல் அவ்விடம் தோன்றியது. ஏனெனில் இலக்கு மலை மத்திய மலை நாட்டின்
வடக்குப் பக்கத்தில் உள்ள உயர்ந்த மலைப் பகுதியாகும். இம்மலையின் வடக்குப் பக்கம்
உள்ள மலைகள் எல்லாம் இம்மலையை விட உயரம் குறைந்தவைகளாகும்.
சிவனொளிபாதமலை
உச்சியில் இருந்து 74
கி.மீ தூரத்தில் இருக்கும் கொழும்புத் துறைமுகத்தை தொலைநோக்கிக்
கண்ணாடி இல்லாமல் சாதாரணமாக நான்
பார்த்துள்ளேன். இலக்கு மலையில் இவ்விடத்தில்
இருந்து வடமேற்கில் 179 கி.மீ தூரத்தில் திருக்கேதீஸ்வரமும், வடகிழக்கில் 126
கி.மீ தூரத்தில் திருக்கோணேஸ்வரமும் அமைந்துள்ளன.
இராவணனால் வழிபடப்பட்ட
சிவலிங்கம் ஒன்று இங்கிருந்து கிடைக்கப்
பெற்றுள்ளது. இது 6 அடி உயரமும், 3அடி அகலமும் கொண்ட முட்டை வடிவுடைய லிங்கக்
கல்லாகும்.
இலக்கு மலை இராவணனின் பாட்டன் புலத்தியரின்
மனம் கவர்ந்த மலையாகும். புலத்தியர் இம்மலையிலிருந்த
வண்ணம் தனது தலைநகரான புலத்தி நகரின் அழகைப் பார்த்து ரசிப்பதாக, இம் மலைப்பிரதேசத்தில் உள்ள மக்கள் கர்ணபரம்பரையாக ஓர் செய்யுளைப்பாடி
வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பாடல்
“புலத்தி முனிவர் தவம் செய்யும் மலை,
இராட்சஷ வீரர்கள் மரியாதையுடன்
தலைவணங்கும் மலை,
இரவு பகலாக புலத்தி நகரம்
தெரியும் மலை,
அதுவே இந்த லக்கல மலை”
எனக் கூறுகிறது.
இப்பாடலின் படி இராவணனின்
பாட்டனாரான புலத்திய முனிவர் இவ்விடத்தில் இருந்து தவம் செய்துள்ளார். அவரைப்
பின்பற்றி இராவணனும் இங்கு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வணங்கியுள்ளான்.
இராவணன் தியானம் செய்ததாகக்
கருதப்படும் இப்புல் வெளி சிங்கள மொழியில் “பிட்டவல பத்தன” எனவும், இவ்விடம் அமைந்துள்ள இலக்கு மலை “லக்கல” எனவும் அழைக்கப்படுகிறது. இவ்விடத்தில் தான் “புஞ்சி லோகாந்தய” அல்லது “மினி வேல்ஸ் என்ட்” என்றழைக்கப்படும் இடம் அமைந்துள்ளது. இப்படிபட்ட
உன்னதமான, அழகிய, அரிய இடமான இலக்கு மலையில், இராவணன் தியானம் செய்த இடத்திற்குச்
சென்று, பார்த்த பெரும் திருப்பியோடு அங்கிருந்து திரும்பினேன்.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை
வணக்கம் ஐயா நீங்கள் எழுதிய யார் இந்த இராவணன் புத்தகம் கிடைக்குமா ஜயா
ReplyDeleteவணக்கம் ஐயா
ReplyDeleteஎன் பெயர் மணிவண்ணன். நான் தமிழ்நாட்டில் மதுரையில் வசிக்கிறேன் .... நீங்கள் எழுதிய
#*யார் இந்த இராவணன்*# நான் ஒரு வருடமாக தேடிக்கொண்டு இருக்கிறேன் ஜயா மறக்காமல் பதில் அனுப்புங்கள் ஜயா
புத்தகம் கிடைக்குமா ஜயா இருந்தால் மறக்காமல் சொல்லுங்கள் ஜயா
முகவரி
மணிவண்ணன்
1/83 அல் அமின் நகர்
கோ புதூர்
மதுரை---625007
தொலைபேசி எண்: 7871222472,
புலனம் எண்: 8903046965
நிச்சயம் கிடைக்கும். சென்னையில் பெறலாம். உங்கள் புலனத்திற்கு விபரங்களை அனுப்புகிறேன்.
ReplyDelete