Sunday, June 28, 2020

நெலும் கன்னியவில் இருந்த விஷ்ணு கோயிலின் சிதைவுகளில் இருந்து வெளிப்பட்ட சிலைகளைத் தேடிச் சென்ற ஆய்வுப் பயணம்


நெலும் கன்னியவில் இருந்த விஷ்ணு கோயிலின் சிதைவுகளில் இருந்து வெளிப்பட்ட சிலைகளைத் தேடிச் சென்ற ஆய்வுப் பயணம்  


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/182     28 ஜூன் 2020




குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)


சிவபூமியின் சுவடுகளைத் தேடி அனுராதபுரத்துக்குச் சென்று, அங்குள்ள ஜேதவனாராம தொல்பொருள் காட்சிச் சாலையில் இருந்த சிலைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது  அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் அத்தொல்பொருள் காட்சிச் சாலையில் உள்ள இந்து தெய்வ வெண்கலச் சிலைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது அவர் ஒரு முக்கிய தகவலைக் கூறினார்.

இங்கிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள நெலும் கன்னிய என்னுமிடத்தில் அண்மையில் சில வெண்கலச் சிலைகள் கிடைத்துள்ளதாகக் கூறினார். அவை பற்றிய விபரங்களைக் கேட்டபோது தனக்குத் தெரியாது எனவும், நெலும் கன்னியவுக்குச் சென்று அங்குள்ள விகாரையில் விசாரித்தால் விபரங்களைப் பெறலாம் எனக் கூறினார். உடனே அவரிடம் இருந்து அங்கு செல்வது பற்றிய விபரங்களைப் பெற்றுக் கொண்டு, மாத்தளைக்குச் செல்லும் பேரூந்தில் ஏறினேன்.

அனுராதபுரத்தில் இருந்து மிகுந்தலைக்குச் செல்லும் வீதியில் 7 கி.மீ தூரத்தில் உள்ள மாத்தளை சந்தியின் தெற்கில் மாத்தளை வீதியில் மேலும் 5 கி.மீ தூரத்தில் இருந்த களத்தேவ எனும் சந்தியில் இறங்கினேன். இச்சந்தியின் கிழக்குப் பக்கம் ஒன்றரை கி.மீ தூரத்தில் நெலும் கன்னிய என்னுமிடம் உள்ளது. சந்தியில் நின்ற ஒரு முச்சக்கர வண்டியில் ஏறி கிழக்குப் பக்கமாகச் செல்லும் வீதியில் 2 கி.மீ தூரத்தில் இருந்த நெலும் கன்னிய விகாரைக்குச் சென்றேன். அங்கிருந்த பிக்குவிடம் சிலைகள் பற்றிய விபரங்களையும், சிலைகள் கண்டெடுக்கப்பட்ட கோயிலின் இடிபாடுகள் பற்றியும் கேட்டேன்.

இங்கிருக்கும் குளத்தின் பின்பக்கம் உள்ள காட்டுப்பகுதியில் இருந்த தேவாலய சிதைவுகளில் இருந்து மூன்று சிலைகள் கண்டெடுக்கப் பட்டதாகவும், அவை கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும் கூறினார். அத்துடன் இது பற்றிய ஒரு குறிப்பையும் என்னிடம் காட்டினார். அக்குறிப்பில் இச்சிலைகளின் படம் ஒன்றும் இருந்தது. அவரின் அனுமதியுடன் அக்குறிப்பை புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

கோயில் சிதைவுகள் இருக்கும் இடத்துக்குச் செல்வது பற்றி பிக்குவிடம் கேட்டபோது, அவ்விடத்துக்கு செல்வதற்கு பாதை எதுவும் இல்லை எனவும், குளக்கரை வழியாக பற்றைக் காட்டுக்குள் நடந்து செல்ல வேண்டும் எனவும் கூறினார். ஊர்க்காரர்கள் யாரையாவது எனக்கு வழிகாட்டியாக அனுப்ப உதவி செய்யுமாறு அவரிடம் கேட்டேன். ஆனால் காரியம் கைகூடவில்லை.

நான் வந்த அனுராதபுரப் பயணத் திட்டத்தில் இல்லாத திடீர் பயணமாக இது இருந்தபடியால் இன்னுமோர் நாளில் இங்கு வந்து அவ்விடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கலாம் என எண்ணியபடி, பிக்குவை வணங்கி, நன்றி கூறி விட்டு அனுராதபுரத்துக்குத் திரும்பினேன்.

நிலத்திலிருந்து வெளிப்பட்ட சிலைகள் பற்றி அவர் கொடுத்த குறிப்பு மிகவும் பெறுமதி வாய்ந்ததாக இருந்தது. அதன் மூலம் சிலைகள் பற்றிய பல விபரங்களைத் தெரிந்து கொண்டேன்.

இங்கு ஓர் பழமை வாய்ந்த விஷ்ணு கோயிலின் இடிபாடுகள் காணப்படுகின்றன. இங்கு அண்மையில் நிலத்தின் அடியில் இருந்து மூன்று வெண்கலச்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விஷ்ணு சிலையும், முருகன் சிலையும், பத்தினி அம்மன் சிலையுமே கிடைக்கப் பெற்றுள்ளன.

3 அடி உயரமான விஷ்ணு சிலை சதுரமான பீடத்தின் மீது நான்கு கைகளுடன் நிற்கும் நிலையில் வார்க்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற மூன்று சிலைகளிலும் இது தான் பெரியது. அடுத்தது 2½ அடி உயரமான முருகன் சிலை. இது ஒரு வட்டமான உயர்ந்த பீடத்தின் மீது நான்கு கைகளுடனும், மயிலுடனும் காணப்படுகிறது. இதுவே இம்மூன்று சிலைகளில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். அடுத்தது பத்தினி அம்மன் சிலை. தாமரை வடிவமுள்ள பீடத்தின் மீது இரண்டு கைகளிலும் சிலம்பை ஏந்திய வண்ணம், தலைக்குப் பின்னால் ஓர் ஒளிவட்டத்துடன் இது காணப்படுகிறது. 2 அடி உயரமுள்ள இச்சிலை பித்தளையில் வார்க்கப்பட்டுள்ளது.

இச்சிலைகள் யாவும் புதையல் தோண்டுபவர்களினால் இப்பகுதியில் உள்ள குளத்தின் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் காணப்பட்ட கோயில் சிதைவுகளின் அடியில் இருந்து தோண்டி எடுக்கப் பட்டுள்ளது. இச்சிலைகள் மூன்றையும் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய்க்கு விற்பதற்காக புதையல் தரகர்கள் முயற்சி செய்த போது பொலிசாரிடம் மாட்டிக் கொண்டனர்.
இச்சம்பவத்தின் மூலம் நெலும் கன்னியவில் முருகன், பத்தினி அம்மன் ஆகிய தெய்வங்களை பரிவார மூர்த்தியாகக் கொண்ட காட்டுக்குள் மறைந்து கிடந்த, தொன்மை வாய்ந்த ஓர் விஷ்ணு கோயிலின் தொல்பொருள் சின்னங்கள் வெளியே வந்துள்ளன.
வெளிநாட்டுக்குக் கடத்தப்பட இருந்த இச்சிலைகள் இறுதி நேரத்தில் பொலிசாரின் கையில் சிக்கியமையால் இப்படி ஒரு பழமை வாய்ந்த கோயில் மற்றும் அதன் சிலைகள் பற்றிய உண்மை வெளியே வந்துள்ளது.

ஆனால் இவ்வாறு காடுகளுக்குள் சிதைவுகளாய் மறைந்து கிடக்கும் எமது பண்டைய கோயில்களில் இருந்து, புதையல் பிரியர்களால் தோண்டி எடுக்கப்பட்ட, எமது தொன்மை வரலாற்றுப் பாரம்பரியத்தின் சான்றாக விளங்கும் ஆயிரக்கணக்கான சிலைகள், எமக்குத் தெரியாமல், யார் கையிலும் சிக்காமல் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட அங்குள்ள செல்வந்தர்களின் வீடுகளிலும், நூதன சாலைகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதனால் இலங்கையில் காடுகளுக்குள் மறைந்து கிடக்கும் எமது பாரம்பரியத்தைக் கூறும் கோயில்கள் பற்றிய விபரங்கள் எமக்குத் தெரியாமலே மறைந்து போய் விடுகிறது.

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

No comments:

Post a Comment