சவால்கள்
நிறைந்த குடும்பிமலை ஆய்வுப் பயணம்-பகுதி 2
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/172 6 ஜூன் 2020
குறிப்பு:
(நான்
இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத்
தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம்.
மிக்க நன்றி)
நான் ஆய்வுப் பயணங்கள் செல்லும் போது
சில சமயம் சில தவிர்க்க முடியாத தடைகள் ஏற்படும். ஆனால் நான் மேற்கொண்ட பயணத்தில்
இருந்து பின் வாங்கியதில்லை. விடா முயற்சியோடு எனது இலக்கை அடைந்து நான் சென்ற
காரியத்தை செய்து முடித்து விட்டுத் தான் திரும்புவேன்.
அது போல ஓர் தடை இன்றும்
ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று ஏற்பட்ட தடை இதுவரை ஏற்படாத வகையில் ஓர் மிகப் பெரும்
சவாலாக இருந்தது. எப்படி இதை சமாளிப்பது என்று யோசித்தவாறே நேரத்தைப் பார்த்தேன்.
சரியாக காலை 10 மணி. யோசித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை முன்னேறுவோம் என நினைத்த
வண்ணம் குடும்பிமலை நோக்கி வண்டியை
செலுத்தினேன்.
நேற்றைய
தொடர்ச்சி....
கூளாவாடி சந்தியில் இருந்து பாதை
மிகவும் ஒடுங்கிய, கரடுமுரடான, நேரான தார் பாதையாக இருந்தது. பாதையின் இரண்டு
பக்கமும் பற்றைக் காடும், மரங்களும் வளர்ந்திருந்தன. மனித நடமாட்டமே இல்லாத
சூனியப்பிரதேசமாக இப்பாதை காணப் பட்டது. தூரத்திலே உயரமான குடும்பிமலையின் உச்சி
தெரிந்தது. மோட்டார் சைக்கிளின் வேகத்தை விட எனது மனதின் எண்ண ஓட்டம் வேகமாக
ஓடியது. யோசித்த வண்ணமே சென்று கொண்டிருந்தேன். சுமார் 500 மீற்றர் பயணம்
சென்றிருப்பேன். சட்டென்று ஓர் யோசனை
வந்தது. வண்டியை ஓர் மரத்தின் கீழ்
நிறுத்தினேன்.
கொழும்பில் இருந்த இராணுவ உயர்
அதிகாரியான எனது நண்பரை தொலைபேசியில் அழைத்தேன். எனது சிக்கலான நிலையைக் கூறி,
குடும்பிமலைக்கும், அங்குள்ள கிராமத்துக்கும் சென்று பார்த்து வர வேண்டும் எனக்
கூறினேன். உடனே அவர் அந்தப்பகுதி இராணுவ முகாம் உயர் அதிகாரி யார் என்று தெரியுமா
எனக் கேட்டார். தெரியாது என்றேன். சரி நான் பார்த்து விட்டு உடனே அழைக்கிறேன்
என்று கூறி விட்டு தொலை பேசியைத் துண்டித்தார். அவரின் பதில் அழைப்பு வரும் வரை
அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தேன். 10 நிமிடமானது. எந்த பதிலும் இல்லை. சரி
வருவதை எதிர் கொள்வோம் என நினைத்தவண்ணம் வண்டியில் ஏறி குடும்பிமலை நோக்கிப்
போய்க்கொண்டிருந்தேன். 3 நிமிடங்களில் கைப்பேசி மணி அடித்தது. நண்பர் அழைக்கிறார்
என எண்ணியவாறு வண்டியை நிறுத்தி விட்டு அழைப்பை எடுத்தேன்.
மறுமுனையில் ஓர் புதிய குரல்
ஒலித்தது. “நீங்கள்
கொழும்பில் இருந்து வரும் மிஸ்டர் திரு செல்லமா” என எனது
பெயரை தட்டுத் தடுமாறி உச்சரித்து சிங்கள மொழியில் ஒருவர் கேட்டார். பெயரைத்
தடுமாறி உச்சரித்தாலும் குரலில் கம்பீரம் தெரிந்தது. ஆம் என்றேன். நான்
தரவைக்குளம் இராணுவ முகாமின் பிரிகேடியர் பேசுகிறேன். இந்தப் பிரதேசத்துக்கு பொறுப்பாக
இருக்கிறேன் என்று தன்னை அறிமுகம் செய்தார். உங்களைப் பற்றி கொழும்பில் உள்ள
உங்கள் நண்பர் கூறினார். உங்களை குடும்பிமலை உச்சிக்குக் கூட்டிக் கொண்டு போக
வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். உங்களுக்குத் தேவையான உதவிகளை நான் செய்து
தருகிறேன். இப்போது எங்கே இருக்கிறீர்கள்? எதில் வருகிறீர்கள்? என்று கேட்டார்.
நான் மோட்டார் சைக்கிளில் வருகிறேன்
என்று கூறி இடத்தின் அடையாளத்தையும் கூறினேன். சரி அப்படியே முன்னோக்கி வாருங்கள்,
ஓர் நாற்சந்தி வரும். அங்கே ஓர் சென்றி பொயிண்ட் உள்ளது. அவர்களுக்கு நான்
அறிவிக்கிறேன். அதைக்கடந்து 2 கி.மீ வந்தால் இராணுவ முகாம் இருக்கும். அதையும்
கடந்து கொஞ்ச தூரம் வந்ததும் ஓர் பிள்ளையார் கோயில் இருக்கிறது. அவ்விடத்தில் எனது
முகாம் வாசல் சென்றி பொயிண்ட் உள்ளது. அங்கு உங்களுக்காக ஓர் ஜீப் வண்டியும்,
இரண்டு இராணுவ கோப்ரல்களும் காத்திருப்பார்கள். உங்கள் மோட்டார் சைக்கிளை
அவ்விடத்தில் நிறுத்தி விட்டு ஜீப்பில் சென்று, குடும்பிமலையில் ஏறிப் பார்த்து
விட்டு, எனது முகாமுக்கு வாருங்கள். என்னோடு மதிய உணவை உண்டு விட்டு செல்லலாம்.
உங்களுக்காக சுத்த சைவ உணவை ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார். எல்லாம் உன் செயல்
என சிவனை நினைத்து பெருமிதம் கொண்டேன்.
பிரிகேடியர் கூறியதன் படி நாற்சந்தியை
அடைந்தேன். அச்சந்தியின் இடது பக்கமாகத் திரும்பி இந்தத் தார் பாதை செல்கிறது. அது
ஈரளக்குளம் ஊடாக கரடியனாறுக்கு செல்லும் பாதை. வலது பக்கம் செல்லும் கிரவல் பாதை
பேரில்லாவெளிக்குச் செல்கிறது. நேராகச் செல்லும் கிரவல் பாதை குடும்பிமலைக்குச்
செல்கிறது. பாதையின் ஓரத்தில் இருந்த சென்றி பொயிண்டில் இருந்து ஓர் ராணுவ வீரர்
வெளியே வந்தார். நான் வண்டியை நிறுத்தினேன். நீங்கள் தான் கொழும்பில் இருந்து
வரும் மாத்தையாவா என்று கேட்டார். ஆம் என்றேன். இன்னும் 3 கி.மீ சென்றதும்
தரவைக்குளம் இராணுவ முகாம் உள்ளது.
அதைக்கடந்து சென்றதும் பிள்ளையார் தேவால சந்தி வரும், அங்கு செல்லுங்கள் என்றார்.
தரவைக்குளம் நோக்கி முன்னேறினேன். அது
ஓர் கிரவல் பாதை. இரண்டு பக்கமும் காடு. பாதையின் இரண்டு பக்கங்களும் சுமார் 50
அடி அகலத்தில் காடு துப்பரவு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் ஒரு ஈ காக்கா
கூட இல்லை. கீ என்ற காட்டுச் சத்தம் மட்டும் கேட்டது. காற்று பலமாக வீசியது.
மோட்டார் சைக்கிளை ஒரு பக்கம் தள்ளுவது போன்று இருந்தது. இரண்டு கி.மீ
சென்றிருப்பேன். இடது பக்கம் ஓர் இராணுவ முகாம் காணப்பட்டது. ஓர் இராணுவ சிப்பாய்
பாதை நடுவில் வந்து வண்டியை நிறுத்தினார். “கொழும்பில் இருந்து
வரும் மாத்தையாவா” என்று
கேட்டார். ஆம் என்றேன். “நேராக செல்லுங்கள், கொஞ்ச தூரம் சென்றதும்
பிள்ளயார் தேவால வரும் அங்கு போங்கள்” என்று கூறினார்.
முன்னோக்கிச் சென்றேன். வலது பக்கம்
ஓர் சிறிய குளம் காணப்பட்டது. குளத்தை அடுத்து ஓர் பொட்டல் தரை. அதில் வரிசையாக
மண் புட்டிகள் தெரிந்தன. கூழாவடியில் ஐயா ஒருவர் சொன்ன மாவீரர் துயிலும் இல்லம்
அதுதான் என்பதைப் புரிந்து கொண்டேன். அதை அடுத்து பாதையின் இரு பக்கமும் சிறிய
குளங்கள் காணப்பட்டன. குளத்தைக் கடந்ததும் தரவைக்குளம் பிள்ளையார் கோயிலைக்
கண்டேன்.
அங்கே மூன்று பேருடன் ஜீப் வண்டி
எனக்காகக் காத்திருந்தது. ஒருவர் இராணுவ உடை அணிந்த சாரதி, மற்றைய இருவரும் சாதாரண
உடை அணிந்த கோப்ரல்கள். என்னைக் கண்டவுடன் இருவரும் வந்து கைகுலுக்கி தம்மை
அறிமுகப்படுத்திக் கொண்டனர். எனது வண்டியை சென்றி பொயிண்ட் அருகில் நிறுத்தி
விட்டு, கோயிலுக்குச் சென்று பிள்ளையாரை வணங்கினேன். அதற்கிடையில் நான் வந்த
விடயத்தை கோப்ரல் பிரிகேடியருக்குத் தெரிவித்தார். பிரிகேடியர் என்னோடு பேசினார். “வந்து சேர
இடையில் ஏதும் சிரமமில்லையே, நல்லது, சுணங்காமல் செல்லுங்கள், இப்போது பத்தரை மணி
வெய்யில் அதிகரிக்குமுன் மலையில் ஏறுங்கள். சுணங்கினால் உங்களுக்கு கஷ்டமாக
இருக்கும், உங்களுக்குத் தேவையான உதவிகளை கோப்ரல்மார் செய்வார்கள். எல்லாவற்றையும்
முடித்து விட்டு இங்கே வாருங்கள், இருவரும் சாப்பிடலாம் என்று கூறினார். மீண்டும்
அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு ஜீப் வண்டியில் ஏறினேன்.
புலி
பாய்ந்த கல்லில் இருந்து 12 கி.மீ தூரத்தில் தரவைக்குளம் அமைந்துள்ளது. குளத்தின்
அருகில் உள்ள தரவைக்குளம் சந்தியில் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. பிள்ளையார்
கோயிலின் முன்பக்கம் பண்டைய கோயிலின் பாரிய கற்தூண் ஒன்றின் உடைந்த பாகம்
காணப்படுகிறது.
தரவைக்குளத்தின்
அருகில் புராதன காலத்தில் கட்டப்பட்டிருந்து அழிந்துபோன ஆலய இடிபாடுகள்
காணப்படுகின்றன. கற்தூண்கள் சிலவும், புராதன செங்கற்கள் சிலவும் இங்கு ஆங்காங்கே
சிதறிக் கிடக்கின்றன. இவை புராதன காலத்தில் சிறப்புற்று விளங்கிய ஓர் ஆலயத்தின்
இடிபாடுகள் ஆகும்.
2000
வருடங்களுக்கு முற்பட்ட காலங்களில் இப்பகுதியில் சிவ வழிபாடு செழிப்புடன்
விளங்கியுள்ளது. சிவன் சம்பந்தமான பிராமிக் கல்வெட்டுக்கள் இப்பகுதியில் கிடைக்கப்பெற்றுள்ளன. தரவைக்
குளத்தின் மேற்கில் சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திம்புலாகலையில் உள்ள
நாமல் பொக்குண என்ற இடத்தில் காணப் பட்ட குகையொன்றில் “சிவனைக்
குலதெய்வமாக வழிபடும் கஹபதி யின் குகை” எனும் பொருளில் கல்வெட்டு ஒன்று
காணப்படுகிறது.
இதன்
வடக்குத் திசையில் சுமார் 15 கி.மீ தொலைவிலுள்ள முத்துக் கல் என்னுமிடத்தில் சிவன்
பற்றிய இரு பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ளன. ஒன்றில் “சிவனின்
புத்திரன் கமிக” என்ற
வாசகமும், மற்றைய கல்வெட்டில் “ சிவனின் குகை” என்ற
பொருளிலும் எழுத்துக்கள் காணப்படுகிறன. இக்குகைக் கல்வெட்டுக்கள் மூலம்
இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் ஆதி தமிழர்கள் எனவும் சிவ வழிபாட்டைப்
பின்பற்றியவர்கள் எனவும் அறியக் கூடியதாக உள்ளது.
ஜீப் வண்டி காட்டுப் பாதையில், அசுர
வேகத்தில் புழுதியை கிளப்பிக் கொண்டு குடும்பிமலை நோக்கி விரைந்தது. சிவில்
உடையில் இருந்த இராணுவ கோப்ரல்மார் இருவரும் மிகவும் நட்போடு என்னுடன் பேசிக்
கொண்டு வந்தனர். இங்கிருந்து சுமார் மூன்று கி.மீ தூரத்தில் ஓர் குடும்பிமலை சந்தி
காணப்பட்டது.
அது ஓர் நாற்சந்தி. அங்கு இராணுவ
முகாம் ஒன்று அமைந்திருந்தது. சந்தியின் இடது பக்கம் மியான்கல்லு எனும்
கிராமத்துக்கு செல்லும் பாதை காணப்பட்டது. நேராகச் சென்றால் 35 தூரத்தில் மாதுறு
ஓயா குளத்துக்கு செல்லலாம். வலது பக்கமாக ஜீப் வண்டி திரும்பியது. அது தான்
குடும்பிமலைக்கு செல்லும் பாதை. இங்கிருந்து 2 கி.மீ செல்ல வேண்டும்.
சிறிது தூரம் சென்றதும் அருகில்
இருந்த கோப்ரல் நண்பர் மாத்தையா அதோ தெரிகிறது தொப்பிகல என்றார். சற்று குனிந்து
பார்த்தேன். குடும்பிமலையின் குடும்பி போன்ற உச்சி அழகாகத் தெரிந்தது. மிகவும்
உற்சாகமாக இருந்தது. இன்றைய எனது இலக்கை அடையப் போகிறேன் எனும் ஆனந்தம் மனதை
நிறைத்தது. சிறிது தூரம் சென்றதும் பாதையின் வலது பக்கம் ஓர் வண்டிப்பாதை பிரிந்து
சென்றது. இந்தப் பாதை எங்கே போகிறது என்று கேட்டேன். அது மீரானைக்கடவை குளத்துக்கு
செல்லும் பாதை என்றார் சாரதி. போகப்போக குடும்பிமலையின் உச்சி இன்னும் அழகாகத்
தெரிந்தது. சற்று நேரத்தில் குடும்பிமலை அடிவாரத்தில் உள்ள இராணுவ முகாமின்
அருகில் ஜீப் வண்டி நின்றது. ஜீப் வண்டியை விட்டு இறங்கினேன். அங்கு நான் சற்றும்
எதிர்பாராத சில சம்பவங்கள் காத்திருந்தன.
(தொடரும் ...)
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை
No comments:
Post a Comment