Saturday, June 27, 2020

குச்சவெளி செம்பிமலையில் செம்பீஸ்வரம் ஆய்வுப் பயணம்-பகுதி 1


குச்சவெளி செம்பிமலையில் செம்பீஸ்வரம்  ஆய்வுப் பயணம்             பகுதி 1



என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/181     27 ஜூன் 2020

குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)


சிவபூமியின் சுவடுகளைத் தேடி திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காடுகளுக்குப் பல தடவைகள் சென்றுள்ளேன். அவ்வாறு நான் சென்ற இடங்களில் ஒன்றுதான் செம்பி மலை.

குச்சவெளிக் காட்டில் உள்ள இம்மலையில் பண்டைய காலத்தில் செம்பீஸ்வரம் எனும் சிவன் கோயில் இருந்தமை பற்றிய வரலாற்றுத் தகவல்களைத் அறிந்து வைத்திருந்தேன். அங்கு கடந்த காலங்களில் யாருக்கும் செல்ல முடியாத சூழ்நிலை இருந்தது. யுத்தம் முடிவடைந்த பின் மலையடிவாரத்தில் உள்ள இராணுவ முகாம் அதிகாரிகளின் அனுமதியுடன் அங்கு செல்லக் கூடியதாக இருந்தது.

இந்நிலையில் அங்கு போவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போது, நிலாவெளியில் ஆசிரியராகப் பணி புரியும் நண்பர் பிரகாஷ், ஒரு பெளர்ணமி தினத்தில் செம்பிமலைக்குப் போக இருப்பதாகவும், அங்கு பொங்கல் பூசை ஒன்றை நடத்த இருப்பதாகவும், அப்போது தன்னோடு வரும்படியும் கூறினார். 

குறிப்பிட்ட பெளர்ணமி தினத்தன்று சனிக்கிழமை திருகோணமலையை அடைந்தேன். மோட்டார் சைக்கிள் மூலம் குச்சவேளிக்குச் சென்றேன். அங்கு நண்பர் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள், மாணவர்கள் என சுமார் 30 பேர் ஒரு ட்ராக்டர் வண்டி, மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் செல்வதற்கு தயாராகக் காத்திருந்தனர்.

நான் வந்ததும் வண்டிகள் செம்பிமலை நோக்கிக் கிளம்பின. ட்ராக்டர் வண்டி முன்னே செல்ல, அதன் பின் இருவர் மோட்டார் சைக்கிளிலும், அதற்குப் பின் நண்பர் பிரகாஷ் எனது மோட்டார் சைக்கிளில் ஏற, நாமும் பின் தொடந்தோம். சரியாக காலை 9.20 க்கு குச்சவெளி சந்தியில் இருந்து எமது செம்பிமலைப் பயணம் ஆரம்பமானது.
  
திருகோணமலையிலிருந்து வடக்குநோக்கி புல்மோட்டைக்கு செல்லும் வீதியில் சுமார் 34 கி.மீ தொலைவில் குச்சவெளி அமைந்துள்ளது. இங்கிருந்து தென்மேற்குப் பக்கமாக காட்டுப் பகுதிக்கு செல்லும் பாதை, சின்னக்கரைச்சி களப்பைக் கடந்து, அனல்கட்டிமடு, ஒட்டியடி மடு ஆகிய இடங்களில் உள்ள வயல் வெளிகள், சிறிய வில்லுக் குளங்கள் ஆகியவற்றின் ஊடாக பெரிய செம்பிக் குளத்திற்கு செல்கிறது.


குச்சவெளி சந்தியில் இருந்து பிள்ளையார் கோயிலின் பின்பக்கமாக கிராமத்தை ஊடறுத்து இப்பாதை அமைந்திருந்தது. இப்பாதையில் சுமார் 700 மீற்றர் தூரத்தில் சின்னக்கரச்சி களப்பு பாலம் காணப்பட்டது. இப்பாலத்தை அடுத்து சிறிய தட்டையான மலை ஒன்று அமைந்துள்ளது. மலையின் இடது பக்கம் களப்பும், வலது பக்கம் பாதையும் அமைந்துள்ளன. களப்பில் நீர் குறைவாகக் காணப்பட்டதால் வண்டி பாதையில் செல்லாமல்  மலையின் இடது பக்கம் களப்பின் ஓரமாகச் சென்றது. சுமார் ஒரு கி.மீ தூரம் வரை களப்பில் வண்டிகள் ஓடின. மலையையும், களப்பையும் கடந்தவுடன் களப்பின் இரண்டாவது பாலம் காணப்பட்டது.

பாலத்தைக் கடந்து ஒரு கி.மீ தூரத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னார் நண்பர் பிரகாஷ். அவ்விடத்தில் பாதையின் வலது பக்கம் ஒரு மரத்தின் கீழ் சிறிய மாடம் ஒன்று கட்டப்பட்டு, அதன் உள்ளே பழமை வாய்ந்து லிங்கம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. சீமெந்தில் செய்யப்பட்ட ஆவுடையாரில் இந்தக் கருங்கல் லிங்கம் வைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை அடி உயரமான இந்த லிங்கம் செம்பிமலையின் பின்பக்கம் உள்ள காட்டில் இருந்து வேட்டைக்குச் செல்பவர்களால் கண்டெடுக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து வைக்கப்பட்டதாக நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன்.


லிங்கத்தை வணங்கிய பின் மீண்டும் பயணத்தைத் தொடந்தோம். ட்ராக்டர் வண்டி சென்று விட்டது. மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள் இருவர் சற்று தூரத்தில் நாம் வரும்வரை காத்திருந்தனர்.
இங்கிருந்து ஒன்றரை கி.மீ தூரம் சென்றதும் பாதையின் இடது பக்கமாக ஓர் வண்டிப் பாதை பிரிந்து செல்கிறது. கோடை காலத்தில் மணல் நிரம்பிக் காணப்படும் இப்பாதை வழியாக மோட்டார் வண்டியை செலுத்துவது சற்று கடினமாக இருந்தது. மணலுக்குள் சக்கரங்கள் புதைந்து, இறங்கி வண்டியைத் தள்ளி, மீண்டும் ஏறிசென்றோம். சிறிது தூரத்தில் செம்பிமலை தெரிந்தது. மேலும் சிறிது தூரம் தூரம் சென்று காட்டின் மத்தியில் உள்ள செம்பிமலை அடிவாரத்தை அடைந்தோம்.


இம்மலையிலேயே மிகப் பண்டைய காலம் முதல் செம்பீஸ்வரர் என்றழைக்கப்படும் சிவன் கோயில் அமைந்துள்ளது. இச்சிவாலயம் பல்லவர் காலத்தில் செம்பிமலையில் அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. சோழர் ஆட்சியின் போது நன்கு பராமரிக்கப் பட்டு அவர்கள் காலத்தின் பின் கைவிடப்பட்டு அழிந்து போன ஆலயங்களில் செம்பீஸ்வரமும் ஒன்றாகும் என முதியவர்கள் கூறுகின்றனர்.

ட்ராக்டர் வண்டியில் வந்தவர்கள் செம்பிமலை அடிவாரத்தில் இறங்கி மேலே சென்று கொண்டிருந்தனர். அவ்விடத்தில் உள்ள ஓர் மரத்தின் கீழ் ஓர் சிறிய விநாயகர் கோயில் காணப்படுகிறது. திறந்தவெளி மரக்கோயிலாக இருந்த இதற்கு காட்டுமரத் தடிகளைக் கொண்டு நான்கு தூண்களை நிறுத்தி அதன் மேல் தகரக்கூரை போடப்பட்டுள்ளது. இக்கோயிலில் சுமார் மூன்று அடி உயரமான களிமண் மேடையில் 18 அங்குல உயரமுடைய கருங்கல் விநாயகர் சிலை வைத்து வழிபடப்படுகிறது. இப்பகுதியில் வயல் மற்றும் சேனைப்பயிர் செய்யும் விவசாயிகள் தங்களுக்குப் பாதுகாப்பாக இவ்விநாயகர் ஆலயத்தை உருவாக்கி வழிபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்த இக்காட்டுப் பிள்ளையாரை இப்பகுதிக்கு வரும் விவசாயிகளும், செம்பீஸ்வரரைத் தரிசிக்க வரும் பக்தர்களும் வணங்கி வந்துள்ளனர். தற்போது மலையடிவாரத்தில் சிறிய முகாம் ஒன்றை அமைத்துத் தங்கியிருக்கும் இராணுவத்தினரும் வழிபட்டு வருகின்றனர். பிள்ளையாரை வணங்கிய பின் நாமும் மலையேறத் தொடங்கினோம்.

 
செம்பிமலை சுமார் 150 மீற்றர் உயரமான ஓர் தட்டையான மலையாகும். வடக்கு தெற்காக நீண்டு, கிழக்கு மேற்காக ஒடுங்கிய வடிவமைப்பை கொண்ட இம்மலை 750 மீற்றர் நீளமும், 250 மீற்றர் அகலமும் கொண்டது. மலையின் கிழக்குப் பக்கத்தில் இருந்து மலை உச்சிக்கு ஏறுவதற்கு கற்படிகள் காணப்படுகின்றன. இப்படிகள் சிறிய கற்களைக் கொண்டு மலை அடிவாரத்தில் இருந்து மலையின் உச்சிப் பகுதியில் உள்ள தட்டையான பாறை வரை அமைக்கப் பட்டுள்ளன. தட்டையான பறையில் மேலும் சிறிது தூரம் ஏறியவுடன் சிவாலயத்தின் இடிபாடுகள் உள்ள இடத்தை அடைந்தோம்.



செம்பிமலை உச்சியில் 1938ஆம் ஆண்டு பண்டைய சிவாலயம் இருந்த இடம் கண்டு பிடிக்கப்பட்டு, அதன் சிதைவுகளுக்கு அருகில் மீண்டும் ஓர் ஆலயம் கட்டப்பட்டு, அங்கு சிவலிங்கமும், விநாயரும் ஸ்தாபிக்கப்பட்டதாக கிராம வாசிகள் கூறினர். 

அன்று முதல் வெள்ளிக் கிழமைகளில் பூஜை நடைபெற்று வந்த இவ்வாலயத்தில் யுத்த காலத்தின் போது யாரும் செல்லவில்லை எனவும், இக்கால கட்டத்தில் பல வருடங்களாக பூஜை வழிபாடுகள் இன்றி இவ்வாலயம் காணப்பட்டதாகவும், யுத்தம் முடிந்த பின்பே மக்கள் இம்மலைக்கு வந்து ஆலயத்தை துப்பரவு செய்து மீண்டும் பூஜை வழிபாடுகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. 
60 ஆண்டுகளுக்கு முற்பட்ட அக்கட்டிடம் தற்போது இடிந்த நிலையில் காணப்படுகிறது. தற்போது பெளர்ணமி தினங்கள் மற்றும் முக்கிய தினங்களின் போது மட்டும் மக்கள் செம்பிமலைக்கு வந்து பொங்கல் இட்டு, பூஜை செய்து இங்கிருக்கும் சிவனையும், விநாயகரையும் வழிபட்டுச் செல்கின்றனர்.


சிவாலயத்தின் அருகில் நின்று அப்பகுதியை நோட்டமிட்டேன்.
மலையின் உச்சிப் பகுதியில், அதன் மத்தியில் கிழக்குத் திசையை நோக்கிய வண்ணம்  சிவாலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தின் இடதுபக்கம் ஓர் கருங்கல் மண்டபம் இருந்தமைக் கான இடிபாடுகள் காணப்படுகின்றன. சிவாலயத்தின் மண்டபம் எனக் கருதப்படும் இக்கட்டிடச் சிதைவில் 7 அடி உயரமான 10 கற்தூண்கள் காணப்படுகின்றன. ஆலயத்தின் முன்பக்கம் இயற்கையான பாறையில் தீர்த்தச் சுனை அமைந்துள்ளது. சுமார் 30 அடி நீள, அகலம் கொண்ட வட்ட வடிவமான இக்கற்சுனையில் தெளிந்த, சுத்தமான நீர் காணப்படுகிறது. நீர்ச்சுனையின் ஒரு பக்கத்தில் சுனையில் இறங்குவதற்கு படிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை காலங்களிலும் இச்சுனையில் நீர் வற்றுவதில்லை என ஊர்க்காரர்கள் கூறுகின்றனர். ஆலயத் தேவைகளுக்காக இந்நீர் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.


ஆலயத்தின் வலது பக்கத்தில் (வடக்குப் பக்கம்) பாறையின் மீது  பண்டைய ஆலயத்தின் சிதைவுகள் காணப்படுகின்றன. தூண் தாங்கும் குழிக்கற்கள், உயரமான மற்றும் கட்டையான தூண்கள், பீடக்கற்கள் ஆகியவை இவ்விடத்தில் சிதறிக் கிடக்கின்றன. இவ்விடத்திற்கு சற்று பள்ளத்தில் மேலும் சில தூண் தாங்கும் குழிக்கற்களும், கற்தூண்களும் உள்ளன. இதில் ஆலயத்திற்குரிய இன்னுமோர் கட்டடம் இருந்துள்ளது. இவ்விடத்தில் மொத்தமாக சுமார் 20 தூண் தாங்கும் குழிக்கற்களும், 15 கற்தூண்களும் காணப்படுகின்றன. இத்தனை பழமை வாய்ந்த தொல்பொருள் சின்னங்கள் உள்ள இடத்தில் சிவாலயத்தில் பண்டைய கால லிங்கமும் இருக்க வேண்டும்.

நண்பர் பிரகாஷ் பொங்கல் பூசைக்காக தன் மாணவர்களை தயார் படுத்திக் கொண்டிருந்தார். அவரின் மாணவர்களில் ஒருவரான பானுசனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பானுசனின் உதவியோடு எனது வேலையை ஆரம்பித்தேன். பண்டைய செம்பீஸ்வரத்தின் லிங்கத்தை செம்பிமலையில் தேட ஆரம்பித்தேன். லிங்கம் கிடைத்ததா?
(தொடரும்..)

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

No comments:

Post a Comment