Sunday, August 2, 2020

காலி நகரின் அருகில் பண்டைய கோயில் இருந்த இடத்தில் பெளத்த விகாரை


காலி நகரின் அருகில் பண்டைய கோயில் இருந்த இடத்தில் பெளத்த விகாரை


என்.கே.எஸ்.திருச்செல்வம்

NKS/187     31  ஜூலை 2020

 


குறிப்பு:

(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

சிவபூமியின் சுவடுகளைத் தேடி அண்மையில் காலி நகருக்குச் சென்றேன். அங்கு கோவில கொடெல்ல என்ற இடத்தில் பண்டைய காலத்தில் ஓர் கோயில் இருந்தது பற்றி அறிந்து, அது பற்றி ஆய்வு செய்யச் சென்றேன். அங்கு பல அங்கு கோயில் பற்றிய சில தகவலகள் கிடைத்தன.  

காலி நகரில் இருந்து கொழும்புக்குச் செல்லும் வீதியில் ஒரு கி.மீ தூரத்தில் காலி பிரதான வைத்தியாசாலை அமைந்துள்ளது. அதை அடுத்து வலது பக்கத்தில் மகாமோதர குளம் காணப்படுகிறது. இக்குளத்தின் தென்கிழக்கில் பண்டைய காலத்தில் இந்துக் கோயில் ஒன்று அமைந்திருந்தது.

காலி வைத்தியசாலையை அடுத்து வலது பக்கம் செல்லும் போப்பே குறுக்குத் தெருவில் 200 மீட்டர் தூரத்தில் ஸ்ரீ புத்தசிங்க விஜேராம விகாரை எனும் பெளத்த விகாரை அமைந்துள்ளது. இவ்விடத்தில் தான் ஒல்லாந்தர் காலத்திற்கு முன்பு ஓர் இந்துக் கோயில் அமைந்திருந்தது. இக்கோயிலில் வணங்கப்பட்ட தெய்வம் எது என்பது சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் இங்குள்ள பண்டைய சின்னங்களை வைத்துப் பார்க்கும் போது இது ஓர் காளி கோயிலாக இருக்கலாம் என யூகிக்கக் கூடியதாக உள்ளது.

இக்கோயில் ஒல்லாந்தர் காலத்தில் அழிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு கோயில் இருந்த இடம் இடிபாடுகளுடன் மண் மேடாகக் காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ்விடம் கோவில கொடெல்ல என சிங்கள மொழியில் அழைக்கப்பட்டுள்ளது. கொவில கொடெல்ல என்பது கோயில் குவியல் எனப் பொருள்படும்.

அதன்பின்பு 1770 ஆம் ஆண்டு வெலவத்தே புத்தசிங்க எனும் பெளத்த பிக்கு இவ்விடத்தில் ஓர் பெளத்த விகாரையை அமைத்துள்ளார். அவ் விகாரையே தற்போது நாம் காணும் ஸ்ரீ புத்தசிங்க விஜேராம விகாரையாகும்.

பண்டைய கோயிலின் ஒரு சில சின்னங்கள் மட்டும் இங்கு தற்போது காணப்படுகின்றன. பண்டைய கோயிலின் நடுப்பகுதியில் இருந்த கதவு நிலையின் மேல்பகுதி இன்றும் இங்கு காணப்படுகிறது. இதில் சிம்மத்தின் சிற்பமும், மனித முகமும், குதிரை உடலும் கொண்ட ஒரு விலங்கின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. இதில் சக 1750 எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் பண்டைய கோயிலில் தெய்வச்சிலை ஒன்றும் இங்கே உள்ளது. இச்சிலை இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பண்டைய கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சின்னங்களை புகைப்படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை என்பது கவலையாக இருந்தது. மீண்டும் முயற்சி செய்வேன்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                       

வரலாற்று ஆய்வாளர்

இலங்கை


No comments:

Post a Comment