Saturday, August 1, 2020

கபிலித்தை முருகன் கோயில் மூலமூர்த்திக்கு கும்புக்கன் ஆற்றில் சிறப்புமிக்க அபிஷேகம்


கபிலித்தை முருகன் கோயில் மூலமூர்த்திக்கு கும்புக்கன் ஆற்றில் சிறப்புமிக்க அபிஷேகம்

 கடந்த வாரம் சென்ற கபிலித்தை புனித யாத்திரைப் பயணம்-பகுதி 2


என்.கே.எஸ்.திருச்செல்வம்  
NKS/186     27  ஜூலை 2020



குறிப்பு:

(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

 

நேற்றைய தொடர்ச்சி.....

நேரம் இரவு 10.30. கபிலித்தையில் கும்புக்கன் ஆற்றின் இக்கரையில் பக்தர்கள் அனைவரும் தங்கியுள்ளனர். இக்கரையில் உள்ள கபிலித்தை காவல் தெய்வம் கடவர சுவாமிக்கு நவகோடி சித்தர் பீட சுவாமிகள் விசேட பூசை நடத்திக் கொண்டிருந்தனர். நாமும் அப்போசையில் கலந்து கொண்டோம். சிலர் நித்திரை கொண்டிருந்தனர். சிலர் டிராக்டர் வண்டியில் உட்கார்ந்து பூசையை  கவனித்த வண்ணமும் இருந்தனர்.

இந்த சமயத்தில் ஆற்றின் அடுத்த கரை ஓரத்தில் சலசப்பு ஏற்பட்டதை அனைவரும் அவதானித்தனர். அங்கு பெரிய யானை ஒன்று நீர் குடித்துக் கொண்டிருந்தது. அதன் அருகில் காட்டுப் பன்றி ஒன்றும் நீர் குடித்துக் கொண்டிருந்தது. நீர் குடித்த யானை ஆற்றில் இறங்கி இக்கரைக்கு வர முயற்சித்தது. ஆற்றின் நடுப்பகுதிக்கு வந்தது. உடனே நித்திரையில் இருந்தவர்கள் அனைவரும் எழும்பி விட்டனர்.

எல்லோரும் யானையை நோக்கி டோர்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சினர். ஜீப் வண்டியின் மேலே பொருத்தப்பட்டிருந்த பெரிய விளக்குகள் ஆற்றை நோக்கி ஒளி வீசின. இக்கரையை நோக்கி வந்த யானை சிறிது நேரம் நின்றது. பின்பு ஆற்றிலே சுமார் 50 மீற்றர் தூரம் நடந்து சென்று இக்கரைக்கு ஏறியது.

அன்றைய இரவு இக்கரையில் கூடாரங்களிலும், டிராக்டர் வண்டிகளிலும், ஜீப் வண்டிகளிலும், தரையிலும் சுமார் 150 பேர் வரை தங்கியிருந்தனர். அனைவரும் எழுந்து நின்றனர். காவல் திவத்துக்கு பூசை நடந்து கொண்டிருந்தது. கரைக்கு வந்த யானை காட்டின் ஓரமாக நாம் இருந்த இடத்தின் பின்பக்கமாக வந்தது. பக்தர்கள் உண்ட மதிய உணவின் மிச்சங்களை ஒரு மரத்தின் கீழ் கொட்டியிருந்தனர். அந்த இடத்திற்கு வந்த யானை அங்கிருந்த உணவை உண்டு விட்டு காட்டுக்குள் சென்றது.

அதன் பின் காவல் தெய்வத்துக்கு பூஜை முடிந்தது. இரவு 12 மணியளவில் அனைவரும் படுத்துக் கொண்டனர். எங்களை அழைத்து வந்த ட்ராக்டர் சாரதிகள் ஒன்று கூடி நாங்கள் விழித்திருக்கிறோம் நீங்கள் உறங்குங்கள், காட்டுக்கு சென்ற யானை மீண்டும் எந்த நேரத்திலும் வரலாம் என்று கூறிவிட்டு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

சில மணிநேர உறக்கத்தின் பின் அதிகாலை நான்கு மணிக்கு எல்லோரும் விழித்தோம். சாரதிகள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். எழுந்தவுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். நள்ளிரவு 2 மணியளவில் மீண்டும் யானை வந்ததாகவும் கூடாரத்தில் இருந்த ஒரு அரிசி பையை தூக்கிக் கொண்டு அக்கரைக்கு சென்று விட்டதாகவும் கூறினர். நித்திரையில் எமக்கு இவை எதுவும் தெரியவில்லை.

அதிகாலை எல்லோரும் கும்புக்கன் ஆற்றில் நீராடினோம். உடைகளை மாற்றிக் கொண்டு காவல் தெய்வத்தை வணங்கி, அடுத்த வேலைகளை ஆரம்பித்தோம். இன்று சுவாமிக்கு அபிஷகம், பொங்கல் பூசை ஆகியவை நடத்த திட்டமிட்டிருந்தோம். நேற்று மாலை கோயிலில் இருந்த பொறுப்பாளரிடம் நாம் சுவாமிக்கு அபிசேகம் செய்ய உள்ளோம். சுவாமி சிலை ஒன்றை தர முடியுமா எனக் கேட்டோம். எந்த மறுப்பும் தெரிவிக்காமல் காலையில் வாருங்கள் தருகிறேன் என்றார்.

அதிகாலையில் ஒருபக்கம் நண்பர்கள் சிலர் பொங்கல் தயார் செய்து கொண்டிருந்தனர். அடுத்த பக்கம் சிலர் அவல், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை தயார் படுத்திக் கொண்டிருந்தனர். சிலர் பூசைப் பொருட்களை வெவ்வேறாக ஒழுங்கு படுத்தினர். பழங்கள், இளநீர், ஆகியவற்றை சிலர் வெட்டி தனித்தனியாக வைத்துக் கொண்டிரு தனர்.

பொழுது விடிந்தது. மெல்ல மெல்ல வெளிச்சம் தோன்றியது. தயார் படுத்திய பூஜை பொருட்கள், பழங்கள், பொங்கல் எல்லாவற்றையும் நண்பர்கள் ஆற்றின் மத்திக்குக் கொண்டு சென்றனர். சரியாக காலை 6 மணிக்கு மூன்று பேர் மட்டும் அக்கரையில் உள்ள கோயில் வளாகத்துக்குச் சென்றோம். ஏனெனில் அபிஷேகம் செய்ய சுவாமி சிலையைக் கொண்டு வர வேண்டும். கோயிலுக்குப் பொறுப்பாளர் இன்னும் அந்த இடத்துக்கு வரவில்லை. அவருக்காக காத்திருந்தோம். அந்த சமயத்தில் சட்டென்று ஓர் எண்ணம் மனதில் தோன்றியது.

இந்த பயணத்திற்கு என்னை அழைத்த நவகோடி சித்தர் பீடத்தின் இளைய சுவாமி கோபிநாத் அவர்கள் அப்போது என்னிடம் ஓர் மகிழ்ச்சியான தகவலை சொன்னார். போன வருடம் ஒரு இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் உதவியுடன் கபிலித்தையில் ஒரு சிவலிங்கத்தை தாம் ஸ்தாபித்ததாக அவர் சொன்னவுடன்  பேரானந்தம் அடைந்தேன். ஏனெனில் கபிலித்தை கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு தடவையும் என் மனதில் ஒரே ஒரு விடயம் வேதனை தரும். அதுதான் எல்லா சுவாமி சிலையும் இருக்கும் இவ்விடத்தில் ஒரு சிவலிங்கம் இல்லையே என்பது. போன வருடம் கோபிநாத் சுவாமி அவர்கள் மூலம் அந்த மிகப்பெரும் குறை நீங்கியுள்ளதை எண்ணி அவருக்கு கோடி நன்றிகளைத் தெரிவித்து மகிழ்ந்தேன். இம்முறை எனது கபிலித்தை யாத்திரையின் முக்கிய நோக்கமே அந்த சிவலிங்கத்தைப் பார்க்க வேண்டும் என்பதுதான். 

நேற்று மாலை நவகோடி சித்தர் பீடத்தின் யாகம் முடிந்தவுடன் சிவலிங்கம் பற்றிக் கேட்டேன். அப்போது ஒரு வேதனையான் விடயத்தை அவர் கூறினார். இரண்டு சில மாதங்களுக்கு முன்பு இங்கு வந்த அதிகாரம் மிக்க சிலர் இங்கிருந்த பல சிலைகளை எடுத்துச் சென்று விட்டதாக கூறினார். சிவலிங்கத்தையும் காணவில்லை என்றும், அதையும் கொண்டு சென்றிருப்பர் எனவும்   கூறினார். ஆவலோடு பார்க்க வந்த சிவலிங்கத்தை அகற்றி விட்டார்களே என மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்நிலையில் தற்போது சுவாமி சிலைகள் உள்ள வளாகத்துக்கு வந்துள்ளேன். அப்போது சிவலிங்கம் பற்றி என் மனதிலே திடீரென அந்த எண்ணம் தோன்றியது. உண்மையில் சிவலிங்கத்தை கொண்டு சென்று விட்டார்களா? தேடித் பார்க்கலாமா? எனும் ஓர் நப்பாசை மனதிலே தோன்றியது. அங்கிருந்த பிள்ளையார் முருகன் உட்பட எல்லா சிலைகளையும் வணங்கிய வண்ணம் சிவலிங்கம் எங்கேயாவது உள்ளதா எனத் தேடினேன். எங்கும் சிவலிங்கத்தைக் காணவில்லை.     

அந்த இடத்தின் மத்தியில் சிலைகள் உள்ளன. இவை வேலியமைந்து யாரும் உள்ளே போகாத வகையில் பாதுகாக்கப் பட்டிருந்தன. வெளியே முன்பக்கம் பூஜைத் தட்டுகள் படைக்க மூன்று மேசைகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் இடது பக்கம் பிள்ளையார் சிலை காணப்பட்டது. வலது பக்கம் 6 முகங்கள், 12 கைகளுடன் முருகன் சிலையும், இவற்றின் முன்பக்கம் கற்பூரம் கொளுத்தும் கற்களும் இருந்தன. எல்லாவற்றிற்கும் முன்பக்கம் தேங்காய் உடைக்கும் இடம் காணப்பட்டது. சிலைகளைச் சுற்றி வட்டவடிவில் சுமார் 10 அடி அகலத்தில் சுற்றுவீதி அமைந்துள்ளது. அதை அடுத்து காட்டு மரங்கள் காணப்படுகின்றன. சிலைகள் உள்ள இடத்தில் சிவலிங்கத்தைக் காணவில்லை. சற்று உள்ளே சென்று காட்டு மரங்கள் உள்ள இடத்தில் தேடித் பார்க்கலாம் என நினைத்தேன்.

முன்பக்கத்தில் இருந்து மரங்களின் கீழே சிவலிங்கத்தைத் தேடிக் கொண்டே சென்றேன். சிறிது நேரத்தில் கோயிலின் பின் பக்கம் இருந்த ஒரு மரத்தின் கீழ் சருகுகளால் அரைவாசி மூடப்பட்ட நிலையில் கல் ஒன்றின் மேற்பகுதி தெரிந்தது. உடனே சருகுகளை விலக்கி விட்டு பார்த்தபோது அங்கே ஒரு பகுதி உடைந்த நிலையில் நான் தேடிவந்த சிவலிங்கம் காணப்பட்டது. லிங்கத்தின் கீழ் ஆவுடையாரின் நீர் வழியும் பகுதி உடைத்து நீக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் இருந்த சதுரமான பீடத்தையும் காணவில்லை. இருப்பினும் இல்லை என்று நினைத்து வேதனையடைந்த ஒரு பொருள் இருந்ததால் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சிவலிங்கத்தை எடுத்து துடைத்து அதை மரத்தின் கீழே முன்பக்கமாக வைத்து வணங்கினேன்.

அப்போது பொறுப்பாளர் வந்தார். எங்களைப் பார்த்தவுடன் சிலைகள் உள்ள இடத்திற்குச் சென்று ஓர் சிலையை தூக்கிக் கொண்டு வந்து எமது கையில் தந்தார். அப்போது தான் பார்த்தோம். அது ஒன்றரை அடி உயரமான முருகனின் கற்சிலை. இக்கோயிலின் மூல மூர்த்தி. அவர் ஏதாவது சிறிய வெண்கலச் சிலையைத்தான் தருவார் என நினைத்தோம். ஆனால் மூல மூர்த்தியையே கொடுத்து விட்டார். இதை யாருக்கும் நான்  கொடுப்பதில்லை. கவனமாகக் கொண்டு செல்லுங்கள் என்றார். அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு, முருகனின் மூலமூர்த்தி கிடைத்த மகிழ்ச்சியில், அவருக்கு நன்றி கூறிவிட்டு சிலையுடன் ஆற்றிற்கு வந்தோம். சிலையைப் பார்த்ததும் நண்பர்கள் அனைவரின் முகத்திலும் அளவில்லா ஆனந்தம் தெரிந்தது.

ஆற்றில் முருகனுக்கு அபிஷகம் செய்வதற்கான அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. எங்களுடன் ஐயர்மார் இருவர் வந்திருந்தனர். மேசை மீது முருகனை வைத்து அபிஷேகம் செய்தனர். பால், பழங்கள், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், குங்குமம், மஞ்சள் என்று முருகப் பெருமான் அபிசேகத்தில் நீராடினார். நண்பர்கள் ஒவ்வொருவரும் தமது கையால் முருகனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தனர். அருகில் பூஜை ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த சிங்கள நண்பர்கள் அனைவரும் வரிசையாக வந்து முருகப் பெருமானுக்கு இளநீர் அபிசேகம் செய்தனர். அபிஷேகம் ஆரம்பித்து சில நிமிடங்களில் அக்கரைக்கு பக்கம் இருந்து அந்தப் பெரியயவர் வந்து ஆற்றில் இறங்கினார். இறங்கிய தும்பிக்கையான்  அங்கே நின்று தம்பி ஆறுமுகனுக்கு நடந்த இந்த சிறப்பான அபிஷேகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பல மாதங்களாக கோயிலில் இருந்த மூலமூர்த்திக்கு சுமார் ஒரு மணிநேரம் அபிஷேகம் நடைபெற்றது. சுவாமியை புதிய பட்டாடைகளுடன் அலங்கரிந்து ஆற்றிலிருந்து கோயிலுக்குக் கொண்டு சென்றோம். நண்பர்கள் மிகவும் பயபக்தியோடு இருவர் இருவராக மாறி மாறி மூலமூர்த்தியை தூக்கிச் சென்றனர். நம் ஊர்க் கோயில்களில் நடக்கும் திருவிழாவை நடுக்காட்டில் நடத்தியது போன்று இருந்தது. இப்படி ஓர் சிறப்பான நிகழ்வு நடக்கும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்கவில்லை என நண்பர்கள் பெருமிதம் கொண்டனர்.

கோயிலில் பொறுப்பாளர் எம்மில் ஒருவரை மட்டும் வேலி அடைக்கப்பட்ட உள்பகுதிக்கு சென்று பூசை செய்யச் சொன்னார். நண்பர் ஒருவர் உள்ளே சென்று பூசை செய்தார். முன்பக்கம் பொங்கல், அவல், பஞ்சாமிர்தம், பழங்கள், தாமரைப்பூக்கள் ஆகியவை படைக்கப்பட்டன. மாலைகளை சிலைகளுக்கு சாத்தினோம். நண்பர்கள் எல்லோரும் தேங்காய் உடைத்தனர்.

அப்போது திடீரென அங்கு ஒரு யானை வந்தது. சிலைகள் இருக்கும் இடத்தை நோக்கி வந்தது. பொறுப்பாளர் கையில் ஓர் நீண்ட குச்சியை வைத்துக் கொண்டு யானையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பெரியவர் அமைதியானவர். ஆனால் இவர் கொஞ்சம் குழப்பமானவர், எனவே யாரும் அருகில் வர வேண்டாம் என்றார். அது மண்ணை வாரி தன் தலையில் போட்டுக் கொண்டு ஆக்ரோஷமாக முன்னே வர எத்தனித்தது. கொஞ்சம் பொறு, சுவாமிமார் பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள், பூசை முடிந்தவுடன் உனக்குத் தருவார்கள், அதற்குள் என்ன அவசரம் என பொறுப்பாளர் யானையை பார்த்து கேட்டார்.    

சிறிது நேரத்தில் பூசை முடிந்தது. அப்போது ஆற்றில் நின்று கொண்டிருந்த பெரியவரும் வந்தார். இருவரும் வந்து நாம் ஓரத்தில் வைத்திருந்த அவல் சட்டியில் தும்பிக் கைகளை விட்டு அவலை சாப்பிட்டனர். அது முடிந்ததும் சின்னவர் அவ்விடத்தில் நிற்க பெரியவர் முன்னோக்கி வந்தார். நாம் கொடுத்த பழங்களை கையில் வாங்கி உண்டார். அங்கு வந்த சிங்கள பக்தர்களுக்கும் பிரசாதங்கள் கொடுத்தோம்.

அதன்பின்பு அங்கிருந்து புனித புளிய மரத்தடிக்குச் சென்று மூன்று சிலைகளையும், மரத்தையும் வணங்கினோம். அங்கும் கம்பி  வேலியின் உள்ளே செல்ல ஒருவரை மட்டும் அனுமதித்தனர். நான் மட்டும் உள்ளே சென்று மூன்று சுவாமி சிலைகளுக்கும் மாலை அணிவித்து வணங்கினேன். அனைவரும் உட்கார்ந்து தியானம் செய்தோம். சிறிது நேரத்தில் அங்கிருந்து செல்ல மனமில்லாமல் அவ்விடத்தை விட்டுச் சென்றோம்.

ஆற்றிற்கு வந்து எமது பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, அவ்விடத்தை முன்பு இருந்தது போல் நன்றாக சுத்தம் செய்தோம். அக்கரைக்குச் சென்று எண்கள் பொருட்களை ட்ராக்டர் வண்டிகளில் ஏற்றி விட்டு, காவல் தெய்வம் கடவர சுவாமியை வணங்கி விட்டு, சரியாக 10.30 மணிக்கு கபிலித்தையில் இருந்து கிளம்பினோம்.

இடையில் காட்டில் இரண்டு இடங்களில் ஓய்வெடுத்து விட்டு சுமார் 5 மணி நேர பயணத்தின் பின் 3.45 மணியளவில் கொட்டியாகல நண்பரின் வீட்டை அடைந்தோம். இந்தத் தடவை எமது கபிலித்தை புனித யாத்திரை எந்த இடையூறும் இன்றி இனிதே நிறைவு பெற்றமைக்கு எல்லாம் வல்ல சிவனுக்கு நன்றி கூறினேன்.

கொட்டியாகல நண்பரின் வெட்டில் எமக்கு பகல் உணவு தயாராக இருந்தது. உணவை உண்டு விட்டு நண்பருக்கு எல்லோரும் நன்றிகளை கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                       

வரலாற்று ஆய்வாளர்

இலங்கை


No comments:

Post a Comment