Saturday, August 1, 2020

கடந்த வாரம் நாம் சென்ற கபிலித்தை புனித யாத்திரைப் பயணம்-பகுதி 1


கடந்த வாரம் நாம் சென்ற கபிலித்தை புனித யாத்திரைப் பயணம்-பகுதி 1

 


என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                            NKS/185     25 ஜூலை 2020

 

குறிப்பு:

(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

கபிலித்தை முருகன் கோயிலின் அமைவிடம், வழிகள், வரலாறு, பாரம்பரியம் மற்றும் பண்டைய சம்பிரதாயம் ஆகியவை பற்றி ஏற்கனவே நான் எழுதிய நான்கு கட்டுரைகளில் கூறியுள்ளபடியால் இந்தக் கட்டுரையில் நாம் சென்ற அனுபவத்தை மட்டுமே எழுதியுள்ளேன்.

யாள காட்டின் மத்தியில் உள்ள கபிலித்தை எனும் கபில வனத்தில் அமைந்திருக்கும் முருகன் கோயிலைத் தரிசிக்க கடந்த 3 ஆம் திகதி எமது ஆன்மீகப் பயணம் ஆரம்பமானது. ஏற்கனவே திட்டமிட்ட படி 4 ஆம் திகதி காலை 8 மணிக்கு சியம்பலாண்டுவையின் அருகில் உள்ள களுஒப்ப சந்தியில் அனைவரும் சந்தித்தோம். காலை 7 மணிக்கு இவ்விடத்திற்கு வருவதாக திட்டமிட்டிருந்த போதிலும் ஒரு மணிநேரம் பிந்தி விட்டது.

இந்தத் தடவை இப்புனித யாத்திரையில் என்னுடன் சேர்த்து மொத்தம் 19 பேர். இந்த நண்பர்கள் கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், திருகோணமலை, மட்டக்களப்பு, போரதீவு, ஓந்தாச்சிமடம், கல்முனை, திருக்கோயில் ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்தனர்.இவர்களில் 5 நண்பர்கள் மட்டுமே எனக்கு ஏற்கனவே பழக்கமானவர்கள். மிகுதி 13 பேரும் முகப்புத்தகம் மூலம் இணைந்த புதிய நண்பர்கள். இரண்டு வேன் வண்டிகள், மூன்று கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் நாம் வந்திருந்தோம். அனைவரும் அவ்விடத்தில் ஒருவருக்கொருவர் நேரில் அறிமுகமானோம்.

 

இவ்விடத்தில் இருந்து மேலும் 20 கி.மீ தூரத்தில் உள்ள கொட்டியாகலைக்கு செல்ல வேண்டும். அந்த நேரத்தில் கொழும்பில் இருந்து வந்த காரில் சிறு கோளாறு காணப்பட்டதை அறிந்தோம். மிகவும் சூடான நிலையில் இருந்த அந்த வண்டியை ஒரு மணித்தியாலம் சென்ற பின்பே மீண்டும் செலுத்த முடியும்.

இந்நிலையில் கொட்டியாகலவில் உள்ள நண்பருடன் தொடர்பு கொண்டு இச்சந்தியில் உள்ள அவரின் நண்பரின் கடையில் அந்தக் காரை நிறுத்தி விட்டு எல்லோரும் அங்கிருந்து கொட்டியாகல நோக்கிக் கிளம்பினோம்.

இடையில் ஓடும் விலா ஓயா பாலத்தின் அருகில் ஓர் சிறிய கோயில் காணப்பட்டது. அங்கு உள்ளே காவல் தெய்வம் கடவர தெவியாவின் சிலையும், வெளியே விநாயகரின் சிலையும் காணப்பட்டன. உடனே வண்டியில் இருந்து இறங்கி எமது கபிலித்தை புனித யாத்திரை எந்த வித இடையூறும் இன்றி நல்லபடியாக நிறைவுற வேண்டும் என எல்லோரும் விநாயகரை வேண்டினோம். விநாயகருக்கு அங்கு தேங்காய் உடைத்து வணங்கி விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.

காலை 10 மணியளவில் கொட்டியாகலவில் நண்பரின் வீட்டை அடைந்தோம். அங்கு எமக்காக இரண்டு டிரக்டர் வண்டிகள் காத்திருந்தன. அத்தோடு எம் அனைவருக்கும் காலை உணவும், பகல் உணவும் பொதி செய்யப்பட்டு தயாராக இருந்தன. காலை உணவை எல்லோரும் உண்ட பின் வண்டிகளில் ஏறிக்கொண்டோம். 10.45 மணிக்கு வண்டிகள் இரண்டும் கபிலித்தை வனத்தை நோக்கிப் புறப்பட்டன.

இந்தத் தடவை எம்மைக் கூட்டிக் கொண்டு சென்ற பாதை ஓர் புதிய பாதையாக இருந்தது. இப்பாதையில் கற்பாறைகளும், வெளிகளும், பற்றைகளுமே அதிகளவில் காணப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்தின் பின் ஓர் மரத்தடியில் 10 நிமிடம் ஓய்வு. வெட்ட வெளி என்பதால் வெய்யில் சுட்டெரித்தது. நண்பர்கள் தொப்பிகள், வேட்டித் துண்டுகள் மூலம் தலையை போர்த்திக் கொண்டனர்.

2 மணி நேரம் வெய்யிலிலே பயணம் செய்தோம். பகல் 12.45 மணியளவில் தான் அடர்ந்த காட்டுக்குள் வண்டிகள் புகுந்தன. காட்டுக்குள் புகுந்த போதுதான் முதல் நாள் காட்டில் மழை பெய்துள்ளமை தெரிய வந்தது. பல இடங்களில் பாதை சேற்றுக் குழிகளாகக் காணப்பட்டது.

சுமார் 10 நிமிட பயணத்தின் பின் வண்டிகள் நிறுத்தப்பட்டன. அது கபிலித்தைக்கு செல்பவர்கள் ஓய்வு எடுத்துச் செல்லும் இடம். அங்கு கபிலித்தையில் இருந்து வந்த ஓர் டிரக்டர் வண்டி காணப்பட்டது. ஒரு மரத்தின் முன்பக்கம் 6 அடி உயரத்தில் ஒரு முருகன் சிலை வைக்கப்பட்டிருந்தது. எல்லோரும் இறங்கி முருகனுக்கு கற்பூரம், ஊதுபத்தி கொளுத்தி வணங்கினோம். அவ்விடத்தில் எல்லோரும் தேநீர் பருகிய பின் மீண்டும் பயணம் தொடர்ந்தது.

இங்கிருந்து அடர்ந்த காட்டின் ஊடாக பயணம் சென்று கொண்டிருந்தபோது கபிலித்தையில் இருந்து வந்த பல வண்டிகள் எம்மைக் கடந்து சென்றன. பல இடங்களில் எதிரே வந்த வண்டிகளுக்கு வழிவிட்டு மாற்று வழியில் வண்டிகள் சென்றன. சில ஜீப் வண்டிகளும் கபிலித்தையில் இருந்து வந்தன. சாரதிகள் பாதையில் காணப்பட்ட சேற்றுக் குழிகளுக்குள் மிகவும் லாவகமாக வண்டிகளை செலுத்தினர். வண்டிகள் ஒரேயடியாக பள்ளத்தில் விழுந்து மேட்டில் ஏறின. சில இடங்களில் பெட்டிகள் கவிழ்ந்து விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு நூலளவில் வீழ்ந்து தப்பி எழும்பின. அப்போது ஒரு இடத்தில் எண்கள் வண்டி சேற்றுக் குழியில் இறுகி விட்டது. உடனே அடுத்த வண்டியுடன் சங்கிலியால் கட்டி இழுத்து எடுத்தோம்.

ஓர் இடத்தில் எங்கள் இரண்டு வண்டிகளும், எதிரே வந்த இரண்டு வண்டிகளும் சேற்றுக் குழிகள் இருந்த இடத்தில் சந்தித்தன. வண்டிகளுக்கு செல்ல இடம் கொடுப்பதில் சங்கடங்கள் இருந்தன. அப்போதுதான் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த வண்டிகளில் ஒன்றின் பெட்டி திடீரென சேற்றுக் குழிக்குள் குடை சாய்ந்தது. உடனடியாக எல்லோரும் பாய்ந்து ஒரு நொடிக்கும் வண்டியை நிமிர்த்தி விட்டோம். அந்த வண்டியில் வந்த சிறுவனின் காலில் சிறு சிராய்ப்புக் காயம் ஏற்பட்டிருந்தது. சிறுவனின்  காலுக்கு முதலுதவி செய்த பின் பயணம் தொடர்ந்தது. இவ்வாறு பயணம் செய்து மாலை 4.20 மணியளவில் கபிலித்தை, கும்புக்கன் ஆற்றங்கரையை அடைந்தோம். இன்றைய பயணத்திற்கு ஐந்தரை மணி நேரம் எடுத்துள்ளது.

எல்லோரும் முருகப் பெருமானுக்கு நன்றி கூறிய வண்ணம் வண்டியில் இருந்து இறங்கி, ஆற்றுக்குச் சென்றோம். ஆற்றில் முழங்கால் அளவு நீர் ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றின் மத்தியில் உள்ள மணல் பரப்பில் நவகோடி சித்தர் பீட சுவாமிகளின் யாகம் நடந்து கொண்டிருந்தது. இந்த சித்தர் பீடத்தின் இளைய சுவாமியின் அழைப்பின் பேரிலேயே இம்முறை கபிலித்தை பயணத்தை ஏற்பாடு செய்திருந்தேன். அந்த யாகத்திலும் கலந்து கொள்ள வேண்டும்.

நண்பர்கள் எல்லோருக்கும் நல்ல பசி. ஆற்றில் இறங்கிக் கை கால் முகத்தைக் கழுவி விட்டு மதிய உணவை உண்டோம். சிறிது நேரத்தில் எல்லோரும் பண்டைய வேடர்கால பாரம்பரிய முறைப்படி ஆற்றில் குளிக்க ஆயத்தமானோம். நேரம் அப்போது மாலை 4.50 மணி.

ஆற்றின் நடுப்பகுதியில் காணப்பட்ட மண் நிறைந்த பகுதியில் ஏழு சிறிய பூவல் கிணறுகளை தோண்டினோம். அதில் மஞ்சள் தூளைக் கலக்கி, நாம் கொண்டு வந்த ஏழு வகையான பூக்களை தூவி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிணற்றிலும் ஏழேழு தடவை கைகளில் நீரை அள்ளி தலையில் ஊற்றிக் குளித்தோம். அதன் பின் கும்புக்கன் ஆற்றின் ஆனந்தக் குளியல் நடைபெற்றது. ஐந்து மணி நேர பயணக் களைப்பில் பலர் நீரில் இருந்து கரையேற மனம் இல்லாமல் கிடந்தனர்.  

இருப்பினும் இருள் சூழ்வதற்குள் சுவாமியையும், புனித புளிய மரத்தையும் தரிசிக்க வேண்டும். கபிலித்தைக்கு வரும் பலர் வந்தவுடன் சில மணிநேரம் குளிப்பர். பின்பு உணவு சமைத்து சாப்பிட்டு விட்டு, ஓய்வெடுப்பர். இரண்டாம் நாள் காலையில் தான் சுவாமி தரிசனம் செய்வர். ஆனால் நான் அழைத்துச் வருபவர்களை முதல் நாளே சுவாமி தரிசனம் செய்யக் கூட்டிச் செல்வேன். ஏனெனில் இப்படி ஓர் அற்புதமான கோயிலுக்குச் சென்றவுடன் சுவாமியைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலோடு தான் எல்லோரும் வருவர். எனவே கோயிலையும், சுவாமியையும் பார்க்காமல் அவர்களுக்கு அந்த இரவில் நிம்மதியாக உறங்க முடியாது. எனவே தான் வந்த முதல் நாளே முதல் நாளே கோயிலுக்கு அழைத்துச் செல்வேன். 

குறிப்பிட்ட நேரத்திற்குள் நண்பர்களை கரையேற்றினேன். அவசரமாக உடை மாற்றிக் கொண்டோம். ஆற்றின் மத்தியில் நடந்த நவகோடி சித்தர் பீட யாகத்தில் கலந்து கொண்டோம். மாலை 6 மணிவரை அங்கு இருந்தோம். அதன்பின் சுவாமியை தரிசிக்க ஆற்றின் அக்கரைக்குச் சென்றோம்.

அக்கரையில் நின்று கொண்டிருந்த இராணுவ சிப்பாய் சற்று நேரத்தில் இருள் சூழ்ந்து விடும், காட்டு மிருகங்கள் வரும் நேரம், விரைவாக தரிசனம் செய்து விட்டு வாருங்கள் என்று எம்மை அனுப்பியதோடு எமக்குப் பாதுகாப்பாக எம்மோடு வந்தார். அவர் கையிலே 5 அடி நீளமான ஓர் குச்சி இருந்தது. அதுதான் அவருடைய ஆயுதம்.

கபிலித்தையில் மூன்று இடங்களில் வணக்கத் தலங்கள் உள்ளன. முதலாவது அரச மரம். இரண்டாவது சிலைகள் நிறைந்த இடம். இங்குதான் பூஜை மற்றும் படையல் செய்யலாம். மூன்றாவது புனிதமிக்க புளியமரம். ஆற்றங்கரையில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் இருந்த முதலாவது இடத்திற்கு விரைவாகச் சென்றோம். அங்கு அரச மரமும், புத்த பகவானின் சிலையும் உள்ளன. புத்தரை வணங்கி அரச மரத்தை வலம் வந்தோம். அடுத்ததாக  150 மீற்றர் தூரத்தில் இருந்த சிலைகள் உள்ள இடத்திற்கு சென்று அங்கு உள்ள எல்லா சிலைகளையும் வணங்கினோம். நண்பர்கள் மிகவும் அமைதியாக பயபக்தியுடன் சுவாமி சிலைகளை வணங்கினர். சென்ற தடவை வந்தபோது இங்கு நான் கண்ட சிலைகளில் பலவற்றைக் தற்போது காணவில்லை. அவற்றிற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

மூன்றாவதாக உள்ளது புனித புளிய மரம். இங்கிருந்து 100 மீற்றர் தூரத்தில் அவ்விடம் அமைந்திருந்தது. மயான அமைதி நிலவிய ஒற்றையடிப் பாதை வழியாக புனிதமான புளிய மரத்தடிக்குச் சென்றோம். சிறிது தூரத்தில் அந்த புனித இடம் தெரிந்தது.

முன்பு பார்த்ததை விட முற்றிலும் வித்தியாசமாக அந்த இடம் காணப்பட்டது. முன்பு பல சிலைகள் காணப்பட்ட இப்புனித புளிய மரத்தடியில் தற்போது மூன்று சிலைகள் மட்டுமே காணப்பட்டன. மரத்தின் முன் பக்கம் ஒன்றும், பின்பக்கம் ஒன்றும், மரத்தின் மத்தியில் ஒன்றும் காணப்பட்டன. மரத்தில் இருந்து சுமார் 20 அடி தூரத்தில் சுற்றிவர கம்பி கட்டப்பட்டு அதன் உள்ளே யாரும் சென்று புனித மரத்தை தொட்டு வணங்க முடியாத வண்ணம் தடை செய்யப்பட்டிருந்தது.

நண்பர்கள் அனைவரும் நிசப்தமாக சென்று அந்த அதிசய மரத்தைப் பார்த்து கைகூப்பி வணங்கி மரத்தை சுற்றி வந்தனர். அப்போது இராணுவ சிப்பாய் நீண்ட குச்சியுடன் அங்கு வந்தார். என் அருகில் வந்தவர் மெல்லிய குரலில் பெரிய யானை வந்து விட்டது, எல்லோரும் சத்தம் போடாமல் போய் விடுவோம் என்றார். நாளை வந்து ஆறுதலாக தியானம் செய்யலாம், இப்போது அமைதியாக செல்வோம் என நண்பர்களுக்குக் கூறினேன். எல்லோரும் அங்கிருந்து மெதுவாக சிலைகள் இருக்கும் இடத்திற்கு வந்தோம்.

அங்கு நண்பர்களை அதிர்ச்சி அடையச் செய்யும் அந்தக் காட்சியைக் கண்டனர். சுமார் 12 அடி உயரமான யானை அவ்விடத்தில் நின்று கொண்டிருந்தது. எம்மைப் பார்த்தவுடன் எமை நோக்கி வர முயன்றது. உடனே இராணுவ சிப்பாய் முன்னால் சென்று அவர் வைத்திருந்த நீளமான குச்சியை யானையின் முன்னே நீட்டினார். அது தானாக பின் வாங்கியது. அப்போது தான் அந்த சின்னக் குச்சியின் மகிமை தெரிந்தது. அந்த சாதாரண குச்சி அவ்விடத்தில் ஓர் அங்குசமாக பயன் படுத்தப்பட்டது. விரைவால் அனைவரும் ஆற்றங்கரைக்குத் திரும்பினோம். ஆற்றைக் கடந்து அடுத்த கரைக்கு வந்தோம். இருட்டி விட்டது.

அடுத்த நாள் காலை பொங்கல் வைக்க வேண்டும். பூஜை செய்ய வேண்டும். எனவே இரவே எல்லா பொருட்களையும் ஒழுங்கு படுத்தினோம். நாம் இரவு உணவுக்காக வெட்டப்பட்ட பாண் வாழைப்பழம், ஜேம் ஆகியவற்றை எடுத்து அனைவரும் உண்டோம். ட்ராக்டர் வண்டியில் சிலரும் நிலத்தில் சிலரும் உறங்க ஆயத்தமானோம். இரவில் நவகோடி சித்தர் பீட சித்தர் சுவாமிகள்  கபிலித்தையின் காவல் தெய்வமான கடவர தெவியாவுக்கு பூசை நடத்தினர். நாமும் அதில் கலந்து கொண்டோம்.  அன்றைய இரவும், அடுத்த நாள் காலையும் சில முக்கிய சம்பவங்கள் நடைபெற இருந்ததை யாரும் அறிந்திருக்கவில்லை. ஏன் நானும்தான்...

(மிகுதி தொடரும் ..)                           

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                       

வரலாற்று ஆய்வாளர்

இலங்கை



No comments:

Post a Comment