மிகுந்தலையில் இந்து சமயம்-1
கந்தக்க தூபியில் இருந்த நந்தியும்,
பிள்ளையாரும் எங்கே?
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/169 29 மே
2020
குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளில்
பல எனது அடுத்த நூலில் இடம்பெற உள்ளன. எனவே எனது அனுமதி இல்லாமல் யாரும் இவற்றை
தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)
சிவபூமியின் சுவடுகளைத்
தேடி நான் சென்ற இடங்களில் ஒன்று தான் மிகுந்தலை. அனுராதபுரத்தின் கிழக்கில் 11 கி.மீ தொலைவில் மிகுந்தலை அமைந்துள்ளது.மிகுந்தலை என்ற பெயரைக்
கேட்டவுடன் இந்தியாவில் இருந்து வந்த மகிந்த தேரர் தங்கிச் சென்ற இடம் என்பதும்,
தேவநம்பிய தீசன் மகிந்த தேரரை சந்தித்த இடம் என்பதும் நாம் பாடப் புத்தகங்களில் படித்தது
நினைவுக்கு வரும். இவ்வாறு பெளத்த மதம் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கும்
இடமாக மிகுந்தலை விளங்குகிறது.
ஆனாலும் இந்து மத
செல்வாக்கும் இங்கு உள்ளது என்பதை பேராசிரியர் பரணவிதானவின் “புராவிது பரியேஷன” எனும் சிங்கள நூலில்
படித்தேன். இவர் 1972 ஆம் ஆண்டு எழுதிய நூல் இது. பேராசிரியர் 1964 ஆம் ஆண்டு மிகுந்தலையில் உள்ள
கந்தக்க தூபியில் ஆய்வுகளை மேற்கொண்டு சில ஆய்வுக் குறிப்புகளை எழுதியுள்ளார். மிக
முக்கியமாக இங்குள்ள வாஹல்கடவில் பிள்ளையார்
சிற்பம் ஒன்றும், நந்தி சிலை ஒன்றும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பிற்கால
கணபதி உருவங்களில் நான்கு கைகள் இருப்பினும், கந்தக்க தூபியில் உள்ள கணபதி
உருவத்தில் இரண்டு கைகள் மட்டுமே உள்ளதாகவும் ஓர் அரிய, முக்கியமான தகவலை அவர்
குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் குறிப்பைப் படித்த
நாளில் இருந்து மிகுந்தலைக்குச் சென்று அந்த சிற்பத்தைப் பார்க்க வேண்டும் என ஆவலாக
இருந்தேன். அதற்கிடையில் மிகுந்தலையில் பேராசிரியர் பரணவிதான பதிவு செய்துள்ள
பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றிய விபரங்களையும் குறிப்பெடுத்துக் கொண்டேன்.
குறித்த நாளில் அனுராதபுரத்திற்குச்
சென்று அங்கிருந்து பேரூந்தில் மிகுந்தலைக்குச் சென்றேன். இன்றைய எனது பயணத்தின்
நோக்கம் மிகுந்தலையில் கந்தக்க தூபியில் உள்ள பிள்ளையார் சிற்பத்தையும், நந்தி
சிலையையும், மிகுந்தலையில் உள்ள இந்து சமயம் தொடர்பான பிராமிக் கல்வெட்டுக்களையும்
பார்க்க வேண்டும் என்பதாகும்.
மிகுந்தலையில் ரஜரட்ட பல்கலைக் கழகத்தின் அருகில் இறங்கினேன். அங்கு
ஓர் முச்சக்கர வண்டியில் ஏறி சாரதியிடம் கந்தக்க
தூபிக்குச் செல்வதற்கான தொகையைப் பேசிக் கொண்டேன். அதற்கு முன்பக்கம் செல்லத்
தேவையில்லை ராஜகிரி குகை வழியாக ஓர் குறுக்குப்பாதை உள்ளது. அந்த வழியில்
செல்லலாம் என்றேன். சாரதி பல்கலைக் கழகத்தைக் கடந்து வலது பக்கம் வண்டியைத் திருப்பினார்.
அந்தக்
குறுக்குப் பாதையில் சுமார் 500 மீற்றர் தூரம் வரைக்கும் வீடுகள் இருந்தன. அதன்
பின்பு பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பிரதேசம் என பெயர்ப்பலகை போடப்பட்டிருந்தது.
அங்கிருந்து காடு ஆரம்பமானது. மிகுந்தலையில் பண்டைய சின்னங்கள் அமைந்துள்ள பகுதி
காடுகளும், மலைகளும், அவற்றிடையே நூற்றுக்கணக்கான கற்குகைகளும், கற்பாறைகளும்,
நீர்ச் சுனைகளும், இவற்றுக்கு மத்தியில் ஆங்காங்கே பண்டைய கட்டிட இடிபாடுகளும் காணப்படும்
ஓர் இயற்கை அழகுள்ள பிரதேசமாகும்.
காட்டுக்கு
மத்தியில் சிறிய கிரவல் பாதையில் சென்று கொண்டிருந்தேன். சுமார் 200 மீற்றர்
தூரத்தில் முச்சந்தி ஒன்று காணப்பட்டது. இங்கிருந்து இடதுபக்கம் சென்றால்
இந்திக்கட்டு சேய தூபிக்கு அருகில் கண்டி வீதியை அடையலாம். வலது பக்கம் சென்றால்
ராஜகிரி குகைப்பகுதி ஊடாக கண்டி வீதியை அடையலாம். எனவே வலது பக்கம் திரும்பிச்
சென்று ராஜகிரி குகைப்பகுதியைக் கடந்து கண்டி வீதியை அடைந்தேன்.
கண்டி
வீதியின் அடுத்த பக்கம் களுதிய பொக்குன எனும் கருநீர்ப் பொய்கை உள்ள பகுதிக்கு
செல்லும் பாதை தெரிந்தது. இங்கிருந்து மிகுந்தலைப் பக்கமாக கண்டி வீதியில் சுமார் 400
மீற்றர் தூரம் சென்றதும் வலது பக்கம் கந்தக்க தூபிக்கு செல்லும் சந்தி
காணப்பட்டது. இங்கிருந்து 600 மீற்றர் தூரத்தில் கந்தக்க தூபி உள்ளது.
அந்தப்பாதையில் வண்டி திரும்பியது. அவ்வழியில் இரு பக்கங்களிலும் மரங்களும்
அவற்றிடையே விதவித வடிவங்களில், பலவகை அளவுகளில் பாறைகளைக் கொண்டு வந்து போட்டது
போல் நிறைந்து காணப்பட்டது. அது மிக அழகிய இயற்கை வனப்பு மிக்க பிரதேசம்.
சிறிது
தூரம் சென்றதும் எட்டஅட்ட குகைகள் உள்ள பகுதியைக் கண்டேன். இப்பகுதியில் உள்ள
காட்டில் மொத்தமாக 68 கற்குகைகள் உள்ளன. இது மிகவும் அழகான பிரதேசம். இவற்றின் பக்கத்தில் தான்
கந்தக்க தூபி உள்ளது. கந்தக்க தூபியின் அருகில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில்
இறங்கினேன்.
வாகனத்
தரிப்பிடத்தின் அருகிலேயே சற்று உயரமான இடத்தில் கந்தக்க தூபி காணப்பட்டது. தூபிக்குச்
செல்ல கற்படிகள் அமைக்கப்பட்டிருந்தன. படிகளின் தொடக்கத்தில் கந்தக்க தூபி பற்றிய
விபரப்பலகை ஒன்று காணப்பட்டது. இவ்விடத்தில் படிகளின் இரண்டு பக்கத்திலும் இரண்டு
சிறிய செங்கல் தூபிகள் அமைக்கப் பட்டிருந்தன. படிகள் வழியாக ஏறி தூபி இருக்கும்
இடத்தை அடைந்தேன். சுமார் 200 படிகள் வரை காணப்பட்டன.
அது
தூபியின் தெற்கு வாசல் பகுதி. இது மிகவும் பழமை வாய்ந்த தூபி. இது 425
அடி சுற்றளவும், 140 அடி விட்டமும், 40 அடி உயரமும் கொண்ட தூபியாகும். இதன் அடிப்பகுதி கருங்கற்களால்
கட்டப்பட்டு, உள்பகுதியில் செங்கட்டி களால் நிரப்பப் பட்டுள்ளது.
தூபியின் நான்கு
திசைகளிலும் நான்கு வாயில் பகுதி அமைக்கப்பட்டிருந்தது. இது வாஹல்கட என அழைக்கப்படுகிறது.
இவ்வாசல் பகுதியின் இரண்டு
பக்கங்களிலும் பூக்கள் செதுக்கப்பட்ட
இரண்டு கற் தூண்கள் காணப்பட்டன. இத்தூண் களின் கீழ் பகுதியில் நின்ற நிலையில்
இரண்டு நாகராஜர் சிற்பங்கள் காணப்பட்டன. இந்நான்கு
வாயில்களும் கற்களினால் கட்டப்பட்டு, இவற்றில் கற்சிற்பங்கள் பலவும் செதுக்கப் பட்டிருந்தன.
அடிப்பகுதியில் வரிசையாக யானை சிற்பங்களும், மேல்பகுதியில் பூதகணங்களின்
சிற்பங்களும், வாமன உருவங்களின் சிற்பங்களும், போதிகைகள், அன்னப்பட்சிகள் ஆகிய சிற்பங்களும் செதுக்கப்பட்டிருந்தன. நான்கு
வாசல்களிலும் கிழக்கு மற்றும் வடக்கு வாசல்கள் இரண்டும் நல்ல நிலையில் காணப்பட்டன.
கிழக்கு
வாசலில் உள்ள தூண்களின் உச்சியில் யானையின் சிலைகள் காணப்பட்டன. வடக்கு வாசலின்
தூண்களின் உச்சியில் சிம்மங்கள் காணப்பட்டன. மேற்கு வாசலில் குதிரைகள் இருக்க
வேண்டிய தூண்கள் உடைந்து காணப்பட்டன. அதுபோல் தெற்கு வாசலில் உள்ள தூண்களில்
நந்திகள் இருக்க வேண்டிய தூண்களும் உடைந்து காணப்பட்டன. இவற்றில் இடது பக்கத் தூண்
முழுமையாக இருந்தாலும் அதன் உச்சியில் முன்பு இருந்த நந்தி சிலையைக் காணவில்லை. பேராசிரியர்
பரணவிதான இங்கு நந்தி சிலை உள்ளதாக தனது குறிப்பில் எழுதியுள்ளார்.
நந்தி
சிவனின் அடையாளம் அல்லவா? அது இருந்தால் இங்கு சிவ வழிபாடு இருந்துள்ளது என
பார்ப்பவர்கள் நினைக்க வாய்ப்புண்டு அல்லவா? அதனால் அந்த நந்தி சிலை சிலரின் கண்ணைக்
குத்திக் கொண்டு இருந்திருக்கும் அல்லவா? எனவே தான் அதை அகற்றி விட்டார்கள்
போலும்.
இங்கிருந்த
வலது பக்கத் தூண் முழுமையாக உடைந்து கீழே விழுந்து கிடந்தது. அதிலும் நந்தி சிலையை
காணவில்லை. தூபியை முழுமையாக ஒரு சுற்று சுற்றி வந்து விட்டேன். ஆனால் நான்
தேடிவந்த அந்த சிற்பத்தைக் காணவில்லை. அதுதான் பிள்ளையாரின் சிற்பம்.
முன்பு
தெற்கில் இருந்து கிழக்கு, வடக்கு, மேற்கு என சுற்றி வந்தேன். இப்போது தெற்கில்
இருந்து மேற்கு, வடக்கு, கிழக்காக ஓர் சுற்று சுற்றி வர நினைத்தேன். ஒவ்வொரு
வாசலிலும் உள்ள இரண்டு தூண்களுக்கும் இடையில் 5 பக்கங்கள் இருந்தன. இவை “-ப-” வடிவில்
அமைக்கப்பட்டிருந்தன. இடமிருந்து வலமாக ஒரு பக்கம், அதிலிருந்து ப வடிவில் மூன்று
பக்கங்கள், இடமிருந்து வலமாக இன்னும் ஒரு பக்கம். மொத்தமாக இந்த 5 பக்கங்களிலும்
சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன.
முதலில்
தெற்கு வாசலில் அடியிலிருந்து நுனிவரை 5 பக்கங்களிலும் உள்ள ஒவ்வொரு வரியாக
ஆறுதலாகப் பார்த்தேன். பிள்ளையார் சிலையைக் காணவில்லை. அடுத்ததாக மேற்கு
வாசலுக்குச் சென்று 5 பக்கங்களையும் உன்னிப்பாக கவனித்தேன். அங்கும் பிள்ளையாரைக் காணவில்லை.
அடுத்ததாக வடக்கு வாசல். அது நன்கு பேணப்பட்ட வாசல். அடிமுதல் நுனிவரை ஒவ்வொரு
பக்கமாக பிள்ளையார் சிலையைத் தேடினேன். அங்கும் பிள்ளையார் சிலையைக் காணவில்லை. கடைசியாக
எஞ்சியிருப்பது கிழக்குத் வாசல் மட்டுமே.
தூணில்
இருந்த நந்தி சிலையை அகற்றியது போல் பிள்ளையார் சிலையையும் அகற்றி விட்டார்களோ!
இந்த பிள்ளையார் சிலை வரலாற்று சிறப்பு மிக்கது. விநாயகரை தமிழக மக்கள்
வணங்குவதற்கு முன்பே இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் வணங்கியுள்ளார்கள் என்பதற்கு ஒரே
ஒரு ஆதாரம் இந்த பிள்ளையார் சிலை தான். பிள்ளையார் வழிபாடு தமிழகத்திற்கு
வருவதற்கு முன்பே இலங்கைத் தமிழர்களால் கைக் கொள்ளப் பட்டது என்பதற்கான சான்றுதான்
இந்தப் பிள்ளையார் சிற்பம். கந்தக்க தூபியில் மட்டுமே இருக்கிறது. அப்படிப்பட்ட
முக்கியத்துவம் வாய்ந்த பிள்ளையார் சிற்பத்தை இன்னும் காண முடியவில்லை.
சிவசிவா,
அந்த சிலையை நான் பார்க்க வேண்டும், அது அகற்றப் பட்டிருக்கக் கூடாது என சிவனை
மனதில் வேண்டிய வண்ணம், எஞ்சியிருந்த கிழக்குத் திசை வாசலை நோக்கி விரைவாகச் சென்றேன்.
(மிகுந்தலை
ஆய்வு தொடரும்....)
வரலாற்று
ஆய்வாளர்
இலங்கை
No comments:
Post a Comment