சிம்மகிரியில்
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/155 2 மே 2020
சிவபூமியின் சுவடுகளைத் தேடி காசியப்ப மன்னனின் சிம்மகிரி மலைக்
கோட்டைக்கு 6 தடவைகள் சென்றுள்ளேன். சிம்மகிரி தான் இப்போது சிகிரியா என அழைக்கப்படுகிறது.
அத்தனை தடவைகள் சென்றும் இன்னும் ஆய்வு
செய்து முடிக்க முடியவில்லை. அவ்வளவு வரலாற்றுப் பொக்கிஷங்களும், மறைக்கப்பட்ட
மர்மங்களும் அம்மலைக் கோட்டையில் புதைந்து கிடக்கின்றன. காசியப்ப மன்னன்
பற்றியும், சிம்மகிரி கோட்டை பற்றியும் இதுவரை சொல்லப்படாத பல தகவல்கள் பண்டைய எட்டுச்சுவடிகளில்
இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் மூலம் கிடைத்தன. அக்குறிப்புகளில் இருந்து
கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி சிம்மகிரி மலைக்கோட்டையை ஆய்வு செய்யச் சென்றேன்.
சிகிரியாவில் நான் ஆராய வேண்டிய சுமார் 200 இடங்கள் இருந்தன. அவற்றில்
ஒன்று மாபாகல் மலைக்கோட்டை. இம்மலையில் தான் காசியப்பன் கட்டிய எமதர்ம ராஜனின்
கோயில் அமைந்திருந்தது. அக்கோயிலை ஆராய்வதே எனது நோக்கம். சிகிரியா மலையின் தென் பகுதியில்
உள்ள குளத்தின் அருகில் இந்த மலை அமைந்துள்ளது.
சிகிரியாவில் ஆராய வேண்டிய இடங்கள் அதிகம் இருப்பதால் காலையிலேயே
செல்வது வழக்கம். அன்றும் காலையிலேயே மாபாகல மலைப்பகுதிக்குச் சென்றேன். சிம்மகிரி
மலைக்கோட்டையின் தெற்கு வாசலுக்குச் செல்லும் முச்சந்திக்கும், குளத்திற்கும்
இடையில் பாதையின் வலது பக்கம் இம்மலை அமைந்துள்ளது. அப்படி ஒரு மலை இருப்பது
வெளியே தெரியாது. ஏனெனில் மரங்களும், முள்ளுப் பற்றைகளும் நிறைந்த காட்டுக்குள் இம்மலை
மறைந்திருக்கும்.
முற்கள் நிறைந்த காட்டுப் பற்றை ஏறும் வழியில் காணப்பட்டது. அவற்றை
விலக்கியும், குனிந்தும், தாண்டியும் மலை உச்சிக்கு முன்னேறினோம். கைகளில் முற்கள்
கீறின. சிறிது தூரம் சென்றதும் சாய்வான பாறை தெரிந்தது. சில இடங்களில் கைகளை
ஊன்றியே செல்ல வேண்டும். அங்கிருந்து சில நிமிடங்களில் உச்சிக்கு வந்து விட்டோம்.
எமதர்ம ராஜனின் கோயிலின் தடயங்கள் எதுவும் இருக்கிறதா எனத் தேடினேன்.
எதுவும் தென்படவில்லை. அங்கிளிடம் அதுபற்றி விசாரித்தேன். அப்படி எதுவும் இல்லை
என்றார். மலை மேலே ஒன்றும் இல்லை. ஆனால் கீழே கோட்டைச் சுவரின் சிதைவுகள் உள்ளது எனக்
கூறினார். மாபாகல மலை உச்சியில் இருந்து பார்த்தபோது சிம்மகிரி மலை அழகாகத்
தெரிந்தது. சிறிது
நேரம் உட்கார்ந்து களைப்பாறி விட்டு கீழே இறங்கினோம்.
மலை அடிவாரத்தில் பிரதான வீதியின் அருகில் பற்றைகளுக்கு உள்ளே
கோட்டைச் சுவரை அங்கிள் காட்டினார். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சுமார் 10, 15 அடி
நீள, அகலம் கொண்ட பாரிய கருங்கல் துண்டுகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி
வைக்கப்பட்டு கோட்டை கட்டப்பட்டிருந்தது.
சிம்மகிரி
மலையின் தெற்குப் பக்கத்தில் இருக்கும் மாபாகல் மலையில் பண்டைய காலம் முதல் எமதர்மராஜனின் கோயில்
அமைந்திருந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. பண்டைய காலத்தில் இது “மகா-பாச-சைல” என அழைக்கப்பட்டதாகக்
கூறப்படுகிறது. இம்மலையின் அடிவாரத்தில் பாரிய கருங்கற்கள் மூலம் கட்டப்பட்ட ஓர்
கோட்டைச் சுவரின் சிதைவுகள் மட்டுமே காணப்படுகின்றன.
மாபாகலக் கோட்டை என்பது
காசியப்ப மன்னன் சிகிரியா நகரை உருவாக்க முன்பு, அனுராதபுர
இராச்சியத்தின் பண்டைய
அரணிடப்பட்ட தொகுதியாகக் காணப்பட்டது. இக்கோட்டை வடிவமற்ற 20 அடி
உயரமான பெருங் கற்பாறைகளினால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கற்களும் பரந்ததும், பருமனானதுமான 10, 15 அடி உயரமும் 4
அடி நீளமும், அகலமும் கொண்டவை. உலோகக் கருவிகள் பயன்பாட்டுக்கு
வருவதற்கு முன்னர் இகோட்டை
கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.காசியப்பன் காலத்தில் இக்கோட்டை மேலும் பலமான
கோட்டையாகக் கட்டப்பட்டது.
இந்திய ஆராச்சியாளர் பண்டிதர் சிவஷர்மா இம்மலை பற்றி கூறுகையில், இம்மலைக் கோட்டையைப் பார்க்கும் போது மகதப் பேரசின் ராஜகிருக நகரத்தில் காணப்படும் கோட்டை சுவர்களே நினைவுக்கு வருகின்றன எனக் கூறியுள்ளார்.
காசியப்பன்
மாபாகல மலையில் இத்தனை பலம் வாய்ந்த கோட் டையொன்றை அமைப்பதற்கு முக்கிய காரணம்
ஒன்றும் இருந்தது. அந்நிய நாட்டு படைகள் சிம்மகிரிக் கோட்டை மீது போர் தொடுத்த
போது, போரில் வெற்றி பெற்ற காசியப்பன் எதிரி நாட்டு மன்னர்களை சிறைப்பிடித்து
அடைத்து வைத்த இடமே இந்த மாபாகல மலைக் கோட்டையாகும். இவ்வாறு பல்லவ மன்னன்
ஸ்கந்தவர்மனும், பின்பு பாண்டிய மன்னனும் காசியப்பனிடம்
தோல்வி அடைந்து சிறைப்பிடிக்கப்பட்டு மாபாகல மலைக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.
இம்மலையில்
ஓர் முத்திரை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இம் முத்திரையில் ஸ்வஸ்திகா சின்னமும், “கிராம நேய” எனும்
சொல்லும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இம்மலை இந்து தெய்வ வழிபாட்டுடன் தொடர்புபட்டதெனத்
கூறலாம்.
காசியப்பன்
மாபாகல் மலையில் மட்டுமல்லாது சிம்மகிரி
மலைக் கோட்டை அடிவாரத்திலும் எமதர்மராஜனுக்கு ஓர் கோயில் கட்டியிருந்தான். காசியப்ப
மன்னன் ஏன் எமதர்மனுக்கு இரண்டு கோயில்கள் கட்டினான்?
காசியப்பன் தனக்குப்
பாதுகாப்பான ஓர் இடமாகவே சிம்மகிரியில் பலம் வாய்ந்த தனது கோட்டையை அமைத்தான்.
இருப்பினும் பகைவர்களால் தனக்கு எந்த சந்தர்ப்பத்திலும் மரணம் ஏற்படலாம் என்பதை
உணர்ந்து எமதர்மராஜனை வழிபட்டிருக்கலாம். எமதர்ம ராஜன் மட்டுமல்ல, மேலும் 15
தெய்வங்களை காசியப்பன் வழி பட்டுள்ளான். அவை பின்பு வரும்...
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று
ஆய்வாளர்
இலங்கை
( வசந்தம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 7.30 மணிக்கு "வழிபாடு" நிகழ்ச்சியில் இலங்கையின் பழமை வாய்ந்த கோயில்கள் பற்றிய எனது தொகுப்பைப் பார்க்கலாம்.
அல்லது vasantham.lk எனும் இணைய தளத்திற்குச் சென்று "வழிபாடு" நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.)
No comments:
Post a Comment