இலங்கையின் தென்கடலில் காணப்படும் இராவணன் கோட்டைகள்
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/167 21 மே 2020
குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளில் பல எனது அடுத்த நூலில் இடம்பெற உள்ளன. எனவே எனது அனுமதி இல்லாமல் யாரும் இவற்றை தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)
இலங்கையில் உள்ள பல இடங்களுக்கும் சென்று அவற்றைப் புகைப்படம் எடுத்து, அவை பற்றிய சிறு குறிப்புகளை வலைத் தளங்களில் பதிவிடும் ஓர் இளைஞர் குழு உள்ளது. இக்குழுவில் உள்ள தேசாந்த எனும் இளைஞர் எனது நண்பராவார். இலங்கையில் உள்ள மிகவும் கடினமான இடங்களுக்கு இவர் செல்வதுண்டு.
நண்பர்
தேசாந்தவோடு தான் நான் காட்டின் நடுவில் முருகன் கோயில்
அமைந்துள்ள கபிலித்தை என்னுமிடத்திற்கு முதன் முதலில் சென்றேன். தேசாந்த என்னை ஓர் முக்கியமான இடத்திற்கு அழைத்துச்
செல்வதாகச் சொன்னார். அவ்விடம் தான் இலங்கையின் தென் கடலில் காணப்படும் இராவணன்
கோட்டைகள். இவ்விடத்திற்கு கடற்கரையில் இருந்து சுமார் 15 கி.மீ தூரம் படகில் செல்ல வேண்டும். இதனால் இராவணன் கோட்டைகள்
பற்றிய விபரங்களை சேகரித்தேன்.
இலங்கையில் இராவணனின் சுவடுகள் பல உள்ளன. இவற்றில் முக்கியமானது இராவணன் கோட்டைகள். இவை தென்னிலங்கையில் உள்ள கடலில் அமைந்துள்ளன. இங்கு இரண்டு வெளிச்ச வீடுகள் அமைந்துள்ளன. இவை பெரிய இராவணன் கோட்டை, சிறிய இராவணன் கோட்டை என அழைக்கப் படுகின்றன. யாள வ விலங்குகள் சரணாலயத்தின் தென் பகுதியிலேயே இவை அமைந்துள்ளன.
பண்டைய
காலத்தில் இலங்கையில் இருந்து ஆட்சி செய்த சைவத் தமிழ்மன்னன் இராவணனின் லங்காபுரி
இராச்சியத்தின் தென்பகுதியில் இருந்த கோட்டைகளே இவை என ஆய்வுகள் கூறுகின்றன.
இராவணனின்
லங்காபுரி இராச்சியத்தின் பெரும்பகுதி கடற் கோள்களின் போது கடலில் மூழ்கி விட்டன. இராவணன்
இறந்த பின்பு ஏற்பட்ட கடற்கோளில் லங்காபுரியின் மூன்றில் இரண்டு பகுதி கடலில்
மூழ்கியதாகவும், இதன்போது இலங்காபுரியில் இருந்த இராவணனின் 25 மாளிகைகள் கடலில்
மூழ்கியதாகவும் இராஜாவளிய போன்ற நூல்கள் கூறுகின்றன. இதன்படி கடற்கோளினால் கடலில்
மூழ்கிய இராவணனின் இராச்சியத்தின் உயரமான இடங்களே கடலில் தெரியும் இரு
பாறைகளாகும். இப்பாறைகளே இராவணனின் கோட்டைகளின் எச்சங்கள் எனக் கூறப்படுகிறது.
இவை பவளப் பாறைகளாகும். சிறிய இராவணன் கோட்டை அமைந்துள்ள பாறைத்தொகுதி சுமார் 40 கி.மீ தூரத்திற்கு கடலில் நீண்டு காணப்படுகிறது. பெரிய இராவணன் கோட்டை பாறைத்தொகுதி கடலில் சுமார் 30 கி.மீ தூரம் வரை காணப் படுகிறது. இப்பாறைப் பகுதியில் சென்ற பல கப்பல்கள் பாறையில் மோதுண்டு கடலில் மூழ்கியுள்ளன. இதனால் இப்பாறைகள் மீது ஆங்கிலேயர் காலத்தில் இரண்டு வெளிச்ச வீடுகள் கட்டப்பட்டன. பெரிய இராவணன் கோட்டையில் 1873 ஆம் ஆண்டிலும், சிறிய இராவணன் கோட்டையில் 1878 ஆம் ஆண்டிலும் வெளிச்ச வீடுகள் கட்டப்பட்டன.
சிறிய
இராவணன் கோட்டை யாள காட்டில் உள்ள நாவலடியின் தெற்கில் உள்ள மேல்முனைக்
கடற்கரையில் இருந்து கிழக்குப் பக்கத்தில் 13 கி.மீ தூரத்தில் கடலில் அமைந்துள்ளது. பெரிய இராவணன் கோட்டை இங்கிருந்து தென்மேற்கில்
35 கி.மீ தூரத்தில் கடலில் அமைந்துள்ளது.
மாணிக்க கங்கை கடலில் கலக்கும் யாள கழிமுகத்தின் கிழக்குப்பக்கத்தில் 24 கி.மீ தூரத்தில் சிறிய இராவணன் கோட்டையும், தெற்குப் பக்கத்தில் 21 கி.மீ தூரத்தில் பெரிய இராவணன் கோட்டையும் அமைந்துள்ளன. பெரிய இராவணன் கோட்டை வெளிச்ச வீட்டுக்கும், சிறிய இராவணன் கோட்டை வெளிச்ச வீட்டுக்கும் சுமார் 20 கி.மீ இடைவெளி உள்ளது.
இராவணன்
கோட்டைகள் பற்றிய இவ்வளவு தகவல்களையும் சேகரித்த போதிலும் எனது நண்பரின்
வேண்டுகோளின் படி இதுவரை அங்கு போக சரியான சந்தர்ப்பம் அமையவில்லை. விரைவில்
அவ்விடத்திற்கு செல்லவுள்ளேன்.
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை
No comments:
Post a Comment