வில்பத்து கடல் அருகில் உள்ள குதிரைமலையில் அழிந்த நிலையில் காணப்படும் அஸ்வகிரி சிவாலயம்
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/164 14 மே 2020
சிவ பூமியின் சுவடுகளைத் தேடி புத்தளம்
மாவட்டத்திற்கு பல தடவைகள் சென்றுள்ளேன். புத்தளம் மாவட்டத்தில் ஏராளமான பண்டைய
சுவடுகள் உள்ளன. அப்படிப்பட்ட சுவடுகள் உள்ள ஓர் இடம் தான் குதிரை மலை. இவ்விடம்
வில்பத்து வன விலங்குகள் சரணாலயத்தின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு
மிகப் பண்டைய காலத்தில் அஸ்வகிரி சிவாலயம் அமைந்திருந்ததாக குறிப்புகள்
கூறுகின்றன. இக்கோயில் கடல் கோளின் போது முற்றாக அழிந்து போனதாகக் கூறப்படுகிறது.
குதிரை மலைக்குச் சென்று ஆய்வுகள்
செய்ய வேண்டும் என எண்ணியிருந்தேன். இது பற்றிய பல தகவல்களைத் தேடி எடுத்தேன்.
இருப்பினும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என ஆவலுடன் இருந்தேன். ஏனைய இடங்களைப்
போல நாம் நினைத்தவுடன் சாதாரணமாக செல்லக் கூடிய இடமல்ல இது.
புத்தளம் நகரின் வடக்கில் 32 கி.மீ
தூரத்தில்,
கலா ஓயா ஆற்றின் கரையில் வில்பத்து சரணாலய நுழைவாசல் உள்ளது.
இங்கிருந்து 34 கி.மீ தூரத்தில் குதிரைமலை அமைந்துள்ளது. இவ்விடம்
வரையும் தான் எமது சொந்த வாகனத்தில் செல்லலாம். இவ்விடத்தில் இருந்து நுளைவுச்
சீட்டைப் பெற்றுக் கொண்டு வனஜீவி திணைக்களத்தின் ஜீப் வண்டியில், அவர்களின் வழிகாட்டி ஒருவரின் துணையுடனேயே காட்டுக்குள் செல்ல வேண்டும்.
இச்சமயத்தில் குதிரைமலைக்குச்
செல்வதற்கான ஓர் சந்தர்ப்பமும் வந்தது.
வசந்தம் தொலைக்காட்சியில், வழிபாடு எனும் நிகழ்ச்சியில், இலங்கையின் பழமை வாய்ந்த கோயில்கள் பற்றிய ஓர் ஆய்வுத் தொகுப்பு நிகழ்ச்சியை
வாராவாரம் வழங்கி வந்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7.30 மணிக்கு
இந்நிகழ்ச்சி இடம்பெறும்.
இந்நிகழ்ச்சியில் அடுத்த தடவை குதிரைமலையில் இருந்த அஸ்வகிரி சிவாலயம் பற்றிய வரலாற்றுத் தொகுப்பை வழங்கவிருந்தேன். அந்த வகையில் வசந்தம் தொலைக்காட்சியின், வழிபாடு நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் நண்பர் மூர்த்தி, புத்தளம் பகுதியில் இருந்த ஒளிப்பதிவாளர் ஒருவரை என்னோடு குதிரைமலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.
குறிப்பிட்ட நாளில் இங்கு செல்வதற்கான
ஆயத்தங்களை மேற்கொண்டேன். புத்தளம், கற்பிட்டியில் வசிக்கும்
எனது நண்பர் ஆசிரியர் சுப்பிரமணியம், கற்பிட்டி முருகன்
கோயில் செயலாளர் நண்பர் ரவி ஆகியோர் வில்பத்து காட்டிற்குச் செல்வதற்கான வாகன
ஏற்பாடுகளைச் செய்தனர்.
எனது பயண தூரம் 203 கி.மீற்றர். ஒரு
நாளில் சென்று வர வேண்டும். எனவே முதல் நாள் இரவு 7 மணியளவில் கொழும்பில் இருந்து
கிளம்பி 110 கி.மீ தூரத்தில், புத்தளம் வீதியில் அமைந்துள்ள
முந்தலுக்குப் பயணமானேன். முந்தலில் இருந்து 93 கி.மீ தூரத்தில் குதிரைமலை
அமைந்துள்ளது. எனவே காலையிலேயே குதிரைமலைக்குச் சென்று பார்த்து விட்டு வீடு
திரும்ப வேண்டும். அங்கு நண்பர் ராமச்சந்திரன் வீட்டில் தங்கினேன். அவரும் என்னோடு
குதிரைமலைக்கு வர இருக்கிறார்.
அடுத்த நாள் காலை 6 மணிக்கு முந்தலில்
இருந்து இருவரும் கிளம்பினோம். பேரூந்து மூலம் 6.30 க்கு 22 கி.மீ தூரத்தில் உள்ள
பாலாவி சந்தியை அடைந்தோம். இச்சந்திக்கு இதே நேரத்திற்கு கற்பிட்டி நண்பர்கள்
வருவதாக ஏற்பாடு. 15 நிமிடத்தில் நண்பர் ரவியின் வேனில் நண்பர் ரவி, அவரது
சாரதி, நண்பர் சுப்பிரமணியம், அவரின்
மகன் ஆகியோர் வந்தனர். நாங்கள் இருவரும் வேனில் ஏறியவுடன், அங்கிருந்து
5 கி.மீ தூரத்தில் உள்ள புத்தளம் நகருக்குச் சென்றோம். புத்தளம் நகரில் ஐ.டி.என்
தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரையும், அவரின் உபகரணங்களையும் அவர்
வீட்டிற்குச் சென்று ஏற்றிக் கொண்டோம். புத்தளத்தில் தண்ணீர் போத்தல், பிஸ்கற் பக்கெட் ஆகியவற்றையும் வாங்கிக் கொண்டோம். நேரம் 7.30 ஆகி
விட்டது.
வேன் சாரதி மின்னல் வேகத்தில் வண்டியை
செலுத்திக் கொண்டு போனார்.
இது பழைய மன்னார் வீதி. கரடிப்பூவல், வண்ணாத்தி வில்லு, எழுவங்குளம் ஊடாக 25 நிமிடத்தில் வில்பத்து சரணாலய நுழைவாயிலை அடைந்தோம். இங்கிருந்து வில்பத்துக் காட்டை ஊடறுத்து மன்னாருக்குச் செல்லும் இப்பழைய வீதி பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. யுத்தம் முடிவுற்ற பின்னரே இப்பாதை திருத்தப்பட்டு, பொது போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. புத்தளத்தில் இருந்து அனுராதபுரம், மதவாச்சி ஊடாக 180 கி.மீ தூரம் சுற்றி மன்னாருக்கு செல்ல வேண்டும். ஆனால் இந்தப் பாதையில் 115 கி.மீ தூரத்தைக் கடந்து மன்னாருக்குச் சென்று விடலாம்.
வாயில் கடவையை அடுத்து கலா ஓயா ஆற்று
நீர் கொங்கிரிட் பாலத்தின் மேலே கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக்
கடந்ததும் நுழைவுச் சீட்டு வழங்கும் காரியாலயம் காணப்பட்டது. அவ்விடத்தில் எமது
வாகனத்தை நிறுத்திவிட்டு நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டோம். நாங்கள் மொத்தமாக 7
பேர். எங்களை சுமந்து செல்ல அங்கே ட்ரக் வண்டி காத்திருந்தது. ட்ரக் வண்டிக்குரிய
கட்டணத்தைப் பேசிக் கொண்டு சரியாக 8.10 க்கு குதிரைமலை நோக்கிப்
பயணமானோம். 8 பேர் அமரக்கூடிய ட்ரக் வண்டியில் சாரதியின்
அருகில் ஒளிப்பதிவாளர் அமர, நாங்கள் ஆறு பேரும் பின்னால் உள்ள 6 இருக்கைகளில்
அமர்ந்து கொண்டோம். அது காட்டுப் பயணத்திற்காக 6 இருக்கைகளோடு மேலே கூரை போட்டு
அமைக்கப்பட்ட ட்ரக் வண்டி.
இங்கிருந்து 40
கி.மீ தூரத்தில் உள்ள மோதரகம் ஆறு வரை அடர்ந்த வில்பத்து காடு அமைந்துள்ளது.
இப்பகுதி வனவிலங்குகள் சரணாலயம் என்பதால் வீடுகள், குடியிருப்புக்கள்
எதுவும் அமைப்பதற்கு அனுமதி இல்லை. காட்டின் உள்ளே சில குறிப்பிட்ட இடங்களில்
மட்டும் வனஜீவி காரியாலயங்கள் உள்ளன. ஒரே ஒரு இடத்தில் ஓர் கிறிஸ்தவ தேவாலயம்
அமைக்கப்பட்டுள்ளது. இக்காடு சிறுத்தைப் புலிகளுக்கு பெயர் போன இலங்கைக் காடாகும்.
இங்கு மேற்குக் கடல் ஓரமாக குதிரைமலை அமைந்துள்ளது.
கிரவல் பாதையில் புழுதியைக் கிளப்பிக்
கொண்டு ட்ரக் வண்டி ஓடிக் கொண்டிருந்தது. எனது கையடக்க தொலைபேசியில் கூகிள்
மேப்பில் ஒவ்வொரு இடங்களையும் பார்த்துக் கொண்டே வந்தேன். காட்டுப் பாதையில்
அய்யனார் குளம்,
கள்ளக்கண்டல், மூலகண்ட வெளிக் குளம் ஆகிய
இடங்களைக் கடந்ததும் பொம்பரிப்பு ஆற்றுப் பாலம் காணப்பட்டது. ஆற்றிலே நீர் நிரம்பி
ஓடிக் கொண்டிருந்தது. சற்று பழுதடைந்த இப்பாலத்தின் மேல் வண்டி மெதுவாகச் சென்றது.
அங்கிருந்து சற்று தூரத்தில் இடது பக்கம் பெரிய வெளி ஒன்று காணப்பட்டது. வெளியை
அடுத்து பொம்பரிப்பு சந்தியை அடைந்தோம். சந்தியில் சாந்த அந்தோனியார் சிலை ஒன்று
காணப்பட்டது. இங்கிருந்து உள்ளே சிறிது தூரம் சென்றால் பள்ளக்கண்டல் என்னுமிடம்
உள்ளது. இங்குதான் சாந்த அந்தோனியார் தேவாலயம் உள்ளது.
பொம்பரிப்பு சந்தியை அடுத்து 3 கி.மீ
தூரத்தில் வெள்ளை முந்தல் சந்தி காணப்பட்டது. இங்கிருந்து கிழக்குப்பக்கம் 3 கி.மீ
தூரத்தில் வெள்ளைமுந்தல் கடற்கரை அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து 7 கி.மீ
தூரம் வரை அடர்ந்த காடு. பாதையின் இரு மருங்கிலும் காட்டைத் தவிர எதுவுமே
தெரியவில்லை. அதை அடுத்து பாதையின் வலது பக்கம் ஆத்தா வில்லுக் குளம் காணப்பட்டது.
குளத்தின் நடுவில் சிறிதளவு நீர் தெரிந்தது. அதை அடுத்து 2 கி.மீ தூரத்தில் பெரிய
உப்பு வில்லு குளம் வறண்டு காணப்பட்டது.
இங்கிருந்து 3 கி.மீ தூரத்தில் பெரிய
வில்லு குளம் காணப்பட்டது. வில்பத்து காட்டில் உள்ள பெரிய குளம் இதுவே. அதனால்
தான் பெரிய குளம் எனப் பெயர் பெற்றுள்ளது. குளம் தான் பெரியதே தவிர அதில்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீரைக் காணவில்லை. குளம் வறண்டு போய்க் கிடந்தது.
அடுத்தது பெரிய நாக வில்லு குளம். அதன் அருகிலேயே பள்ளுகாதுறை சந்தி காணப்பட்டது.
அதையும் கடந்து 6 கி.மீ தூரம் சென்றதும்
குதிரைமலைக்குத் திரும்பும் சந்தி காணப்பட்டது. இங்கிருந்து இடது பக்கம்
திரும்பி மலைவில்லுக் குளத்தின் கரை ஓரமாகச் சென்றால் குதிரைமலையை அடையலாம். நேரம்
அப்போது காலை 9.15. இன்றைய எனது இலக்கான குதிரைமலையை அடைய இன்னும் 5 கி.மீ தூரம்
பயணம் செய்ய வேண்டும்.
குதிரைமலைப் பக்கம் ட்ரக் வண்டி
திம்பிய சிறிது நேரத்தில் மலை வில்லு எனும் பெரிய குளத்தைக் கண்டேன். இது
வில்பத்து காட்டில் காணப்படும் இரண்டாவது பெரிய வில்லுக் குளம். வில்லுக்குளம் என
அழைக்கப்படும் இவை காட்டுக் குளங்களாகும். இக்குளங்களுக்கு அணைக்கட்டு இல்லை,
துருசு இல்லை, வடிச்சல் இல்லை. இவை காட்டில் காணப்படும்
பள்ளமான வெளிகளாகும். இவற்றில் மழை காலங்களில் நீர் நிரம்பி குளம் போல்
காணப்படும். வெயில் காலங்களில் நீர் வற்றிப்போய் வெளியாகக் காணப்படும்.
இக்குளங்களில் சாப்பை, பன்னம் போன்ற புற்களும், கொட்டி, சூரல் போன்ற நீர்ச் செடிகளும் அதிகளவில்
காணப்படும்.
மலைவில்லு குளத்தில் தூரத்தில் நீர்
காணப்பட்டது. புற்களும்,
செடிகளுமே அதிகளவில் காணப்பட்டன. குளத்தின் வடகரை ஓரமாக பாதை
அமைந்திருந்தது. சுமார் இரண்டு கி.மீ தூரம் வரை குளக்கரையில் வண்டி
ஓடிக்கொண்டிருந்தது. குளத்து வெளியின் இதமான காற்று எம்மை நோக்கி
வீசிக்கொண்டிருந்தது. அதுவரை ஒன்றே கால் மணி நேரம் கிரவல் பாதையில் இருந்து கிளம்பிய தூசிக்
காற்றை சுவாசித்துக் கொண்டு வந்த எமக்கு, சுத்தமான குளிர்ந்த
காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
குளக்கரையைக் கடந்ததும் மீண்டும் 2
கி.மீ தூரம் வரை காடு அமைந்திருந்தது. காட்டைக் கடந்ததும் பெரிய அகலமான கிரவல்
பாதை காணப்பட்டது. வெள்ளை முந்தல் கடற்கரையில் இருந்து மேற்குக் கரையோரமாக மோதரகம்
ஆறு வரை 29 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்படும் புதிய பாதையே அது. தற்போது வேலைகள்
இடைநிறுத்தப் பட்டுள்ளதாம். இப்பாதையை வண்டி ஊடறுத்து 400 மீற்றர்
சென்றதும் குதிரைமலை முனை எனும் பெயர்ப்பலகை காணப்பட்டது. அதன் அருகிலே குதிரைமலை
பற்றிய விபரப் பலகையும் காணப்பட்டது. சுமார் 2 மணி நேர காட்டுப் பயணத்தின் பின்
குதிரைமலையை வந்தடைந்தோம்.
வண்டியை விட்டு இறங்கிப் பார்த்தபோது
ஓர் வித்தியாசமான அழகு நிறைந்த இடமாக அப்பிரதேசம் தென்பட்டது. மேற்குப்பக்கம் பள்ளத்தில்
கடல், வடக்குப் பக்கம் செந்நிறப் பாறைகளும், பற்றைகளும், கிழக்குப்பக்கம் காடு,
தெற்குப்பக்கம் கிரவல் மண். இப்படி நான்கு திசைகளிலும் நான்கு விதமான அழகுத்
தோற்றம் கொண்டது இவ்விடம். வந்த எல்லோரிடமும் இருந்த கையடக்க தொலைபேசி கேமராக்கள்
வேகமாக இயங்கின. விதவிதமாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.
குதிரைமலை எனும் பெயருக்கேற்ற வகையில்
எந்த கருங்கல் மலைகளும் அங்கு காணப்படவில்லை. உண்மையில் அது கடல் மட்டத்தில்
இருந்து சுமார் 60 அடி உயரமான “கபோக்” என்றழைக்கப்படும்
செந்நிற மணற்கற் பாறைகள் நிறைந்த இடம். இது கடலில் இருந்து பார்க்கும் போது மலை
போலத் தெரியும். பண்டைய காலத்தில் இம்மலை இன்று இருப்பதை விட சற்று உயரமாக
இருந்துள்ளது. கடல் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக இம்மலை கரைந்து அழிந்து
போயுள்ளது.
அவ்விடத்தில் சிவாலயத்தின் இடிபாடுகளைத்
தேடினேன். சாரதியாக வந்த வழிகாட்டி அது இங்கிருந்து 500 மீற்றர் தூரத்தில் உள்ள குதிரைமலை
முனையில் உள்ளதாகச் சொன்னார். செந்நிற தனித்தனி கற்பாறைகளும், பற்றைகளும் நிறைந்த
இப்பகுதியில் பாறைகளுக்கு நடுவில் சிறிய ஒற்றையடிப்பாதை காணப்பட்டது. ஒளிப்பதிவாளரின்
உபகரணங்களை எடுத்துக் கொண்டு எல்லோரும் முனையை நோக்கி அப்பாதை வழியாக நடந்தோம்.
மிகவும் அவதானமாக இப்பாதையில் நடக்க வேண்டும். ஏனெனில் சில இடங்களில் இடுப்பு வரை
உயரமான தனித்தனி பாறைகளின் பகுதிகளில் கூரான முனைகள் காணப்பட்டன. அசட்டையாக நடந்தால்
முழங்கால்களைக் காயப்படுத்தி விடும்.
சிறிது நேரத்தில் முனையை அடைந்தோம்.
முனையில் நான் தேடிவந்த சிவாலயத்தின் இடிபாடுகளின் ஓர் சிறிய பகுதி மட்டுமே
காணப்பட்டது. கடற்படையினரால் இச்சிதைவுகள் இரும்புக் கம்பி வேலியடைத்து
பாதுகாக்கப்பட்டிருந்தன. மேலும் சிதைவுகள் உள்ளனவா எனத் தேடித் பார்த்தோம். அவ்விடத்தில்
சுமார் 40 அடி சுற்றளவில் பழமை வாய்ந்த செங்கட்டிகளும், பற்றைகளுக்குள்ளே சில
கற்தூண்களின் துண்டுகளும் காணப்பட்டன. பெரிய ஆலயத்தின் இடிபாடுகள் கொஞ்சம்
கொஞ்சமாக அரிக்கப்பட்டு தற்போது இச்சிறிய பகுதியே எஞ்சியுள்ளது. சரியாக கடல்
ஓரத்தில் உள்ள முனையிலேயே இவ்விடிபாடுகள் காணப்பட்டன. இன்னும் சில காலத்தின்
பின்பு எஞ்சியுள்ள இந்த சிதைவுகளும் கடல் அரிப்பினால் அழிந்து போக வாய்ப்புண்டு. எஞ்சியுள்ள
இப்பகுதியே கோயிலின் முன் பகுதியாக இருக்க வேண்டும். இவ்விடத்தில் 35 அடி உயரமான
ஓர் குதிரையும், அதன் கடிவாளத்தை பிடித்த வண்ணம் ஓர் மனிதன் நிற்பது போன்ற வடிவில்
சிலை ஒன்று இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்வாலயம் 2300 ஆண்டுகளுக்கு முன் அல்லிராணி எனும் பாண்டிய இளவரசியால் கட்டப்பட்டதாக குறிப்புகள்
கூறுகின்றன. இந்தியாவிலிருந்து யாத்திரீகர்கள் இவ்வாலயத்திற்கு வந்து சிவனை
தரிசித்து சென்றுள்ளனர். இவ்விடமே விஜயன் தன் தோழர்களுடன் கரைசேர்ந்த இடம் எனவும் சில
அறிஞர்கள் கூறியுள்ளனர். பண்டைய காலத்தில் கிரேக்கர், அரேபியர்
ஆகியோர் வர்த்தகம் புரிந்த முக்கிய துறைமுகமாக குதிரைமலை விளங்கியுள்ளது.
சிதைவுகளை ஆராய்ந்த பின் இவ்விடத்தில்
ஒளிப்பதிவு ஆரம்பமானது. சிதைவுகளின் அருகில் இருந்து குதிரைமலை சிவாலயத்தின்
வரலாற்றைக் கூறிக் கொண்டிருந்தேன். ஒளிப்பதிவாளர் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
சுமார் முக்கால் மணி நேரம் படப்பிடிப்பு நடந்தது. அதன் பின்பு இங்கிருந்து கீழேயுள்ள
கடற்கரைக்கு இறங்கினோம். கடற்கரை ஓரத்தில் தரைமட்டமாக 40 அடி
நீளமான ஓர் நினைவுச் சின்னம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. அது ஓர் இஸ்லாமிய பெரியாரின்
சமாதி எனக் கூறப்படுகிறது.
அதை அடுத்து கடல் ஓரத்துக்குச் சென்ற
போது சுமார் 40
அடி உயரமான செந்நிற மணற்பாறை அழகாகத் தெரிந்தது. அவ்விடத்தின் அழகிய
காட்சிகளோடு எல்லோரும் சேர்ந்து படங்கள் எடுத்துக் கொண்டோம்.
வில்பத்து வனவிலங்குகள் சரணாலயத்தில் வெவ்வேறு இடங்களில் சிவன், முருகன், காளி, விஷ்ணு, வள்ளியம்மன் ஆகிய தெய்வங்களுக்குரிய கோயில்கள் இருந்தன. முதலாவது தமிழர் குடியிருப்பு இப்பிரதேசத்தில் உள்ள பொம்பரிப்பில் தான் அமைந்திருந்தது.
இப்படிப்பட்ட
தொன்மை வரலாற்றைக் கொண்ட இவ்விடத்தில் முன்பிருந்த சிவவழிபாட்டின் அடையாளச் சின்னம் மீண்டும் நிறுவப்பட வேண்டும். அழிந்து
போன இவ்வாலயத்தை மீண்டும் இவ்விடத்தில் கட்டி எழுப்ப இந்துக்கள் முன்வர வேண்டும்.
இங்கு பெரிய கட்டிடங்கள் எதுவும் கட்ட முடியாது. வனஜீவி
திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று ஆலயம் இருந்த இடத்தில் ஓர் சிவலிங்கத்தை
ஸ்தாபித்து அதைப் பாதுகாக்க ஓர் கூரையும்,
அதைச் சுற்றி ஓர் இரும்பு வேலியும் அமைக்க வேண்டும். இது ஓர் திறந்த
வெளி கோயிலாகத்தான் அமையும். முதல் கட்டமாக இதை மட்டும் தான் செய்ய முடியும். இந்த
இடம் கடல் ஓரத்தில் இருப்பதால் வனத்துறை அனுமதியுடன் கடற்படையின் அனுமதியையும் பெற
வேண்டும். எல்லாவற்றிற்கும் முதலில் இந்துக்கள் இங்கு சென்று சிவாலயம்
இருந்த இடத்தைப் பார்க்க வேண்டும்.
இன்றைய தினம் நான் வந்த நோக்கம் இனிதே நிறைவு பெற்றது. அனைவரும்
திருப்தியோடு குதிரைமலையை விட்டுத் திரும்பினோம். பகல் ஒரு மணியளவில் பிரதான நுழை
வாசலுக்கு வந்தோம். ட்ரக் வண்டிக்குரிய கட்டணத்துக்கு எனது பங்களிப்பையும்
வழங்கினேன். அரை மணி நேரத்தில் புத்தளத்தை வந்தடைந்தோம்.
இந்தப் சிறப்பான, முக்கிய பயணத்திற்கு தனது வாகனத்தை வழங்கி,
செலவிலும் அதிக பங்களிப்பை வழங்கிய நண்பர் ரவிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்
கொண்டேன். மற்றும் என்னுடன் வந்த நண்பர்கள் சுப்பிரமணியம், ராமச்சந்திரன் ஆகியோருக்கும்
நன்றிகளைத் தெரிவித்து விட்டு வீட்டுக்குத் திரும்பினேன். எனது ஆய்வுப் பயணத்தின்
முக்கிய நாட்களில் ஒன்றாக இந்நாள் அமைந்தது.
என்.கே.எஸ்.திருச்செல்வம் வரலாற்று
ஆய்வாளர்
இலங்கை
No comments:
Post a Comment