தென்னிலங்கைக் காட்டில் சிவ, நாக வழிபாடு நிலவிய மகுல் மகா விகாரையும், அங்கு கண்ட சிவபூமியின் அரிய பொக்கிஷமும்
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/163 12 மே 2020
சிவ பூமியின் சுவடுகளைத் தேடி தென்னிலங்கைக்கு பல தடவைகள்
சென்றுள்ளேன். அப்படிச் சென்ற இடங்களில் ஒன்றுதான் மகுல் மகா விகாரை. இது யாள வன
விலங்குகள் சரணாலயத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள தெனியஹென என்றழைக்கப்படும்
அடர்ந்த காட்டின் மத்தியில் அமைந்துள்ளது.
அன்று காலை கதிர்காமத்தில் இருந்து திஸ்ஸமகராமைக்குச் சென்றேன்.
அங்கிருந்து கிரிந்தைக்குச் செல்லும் வழியில் யோதவெவ குளம் அமைந்துள்ளது. அந்த
குளத்தில் அருகில் சித்துள் பவ்வைக்கு
செல்லும் சந்தியிலிருந்து காட்டுக்குள் செல்ல வேண்டும்.
திஸ்ஸ மகாராமையில் இருந்து கிரிந்தைக்குச் செல்லும் பேரூந்தில் ஏறி
யோதவெவ குளத்தின் அருகில் இறங்கினேன். யோதவெவ குளம் மிகவும் பழமை வாய்ந்த
குளமாகும். பாதை ஓரத்தில் காணப்பட்ட குளத்தின் துருசு மிகப்பழமை வாய்ந்த கல்லில்
அமைக்கப் பட்டிருந்தது. அவற்றைப் பார்த்து விட்டு குளத்திற்குச் சென்றேன். இப்பகுதிக் கிராம வாசிகள் சிலர் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். நானும் குளத்தில்
இறங்கி முகத்தைக் கழுவி விட்டு, அவ்விடத்தில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் உள்ள யோதவெவ சந்திக்குச் சென்றேன்.
இச்சந்தியில் இருந்து 13 கி.மீ தூரத்தில் மகுள் மகா விகாரை அமைந்துள்ளது.
அங்கு சிவபூமியின் சுவடுகள் உள்ளனவா என்பது பற்றியும், அங்குள்ள மலைக் குகைகளில்
இந்து சமயம் தொடர்பாக பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றியும்
ஆராய்ந்து வரவேண்டும் என்பதே அன்றைய எனது பயணத்தின் நோக்கமாக இருந்தது.
காவந்தீசன் எனும் காக்கைவண்ணன் விகார மகாதேவியை திருமணம் முடித்த பின் தனது மாகம இராச்சியத்திற்கு வந்து கொண்டிருந்த போது இங்கு ஒரு நாள் தங்கி இருந்ததால் இவ்விடம் “மகுள் மகா விகாரை” எனப் பெயர் பெற்றதாக இப்பகுதி மக்களால் கர்ண பரம்பரையாகக் கூறப்படுகிறது.
யோதவெவ சந்தியில் நின்ற முச்சக்கர வண்டி ஒன்றை மகுல் மகா
விகாரைக்குச் சென்று பார்த்துவிட்டு மீண்டும் திஸ்ஸ மகாராமைக்கு வரவேண்டும் எனக்
கூறி, அதற்கான தொகையைப் பேசிக்கொண்டு, மகுல் மகா விகாரை நோக்கிப் பயணமானேன்.
மூன்று கி.மீ தூரத்தில் உத்தகந்தர எனும் கிராமம் காணப்பட்டது.
அதுவரை வீடுகள் காணப்பட்டன. அக்கிராமத்தின் முடிவு வரை நல்ல தார் பாதை அமைக்கப் பட்டிருந்தது. அதன் பின் வீடுகளைக் காணவில்லை. கிரவல்
பாதையும், காடும் ஆரம்பமானது. கிரவல் பாதையில் முச்சக்கர வண்டி புழுதியைக்
கிளப்பிக் கொண்டு பறந்தது. பற்றைகளும், சிறிய மரங்களும், இடையிடையே வெளிகளும்
காணப்பட்டன. சுமார் 3 கி.மீ தூரம் வரை இந்த சிறிய காடு காணப்பட்டது. 7 வது கி.மீ
தூரத்தில் இராணுவ முகாம் கடவை அமைந்திருந்தது. முச்சக்கர வண்டி சாரதி இறங்கிச்
சென்று அங்கிருந்த இராணுவ சிப்பாயிடம் மகுல் மகா விகாரைக்குச் செய்வதாகச் சொல்லி, தனது
வண்டியைப் பதிவு செய்து விட்டு வந்தார். முகாமை அடுத்து பாதையின் இரண்டு
பக்கங்களிலும் யானைகள் வருவதைத் தடுக்க மின்சார வேலிகள் அமைக்கப் பட்டிருந்தன.
முச்சக்கர வண்டியின் சிங்கள சாரதி இளைஞர் என்னோடு பேசிக் கொண்டே
வந்தார். அவ்விடத்தில் இருந்து யாள காடு தொடங்குவதாகக் கூறினார். மகுல் மகா
விகாரைக்கு இன்னும் 6 கி.மீ தூரம் உள்ளதாகவும் கூறினார். இந்த இடத்திற்கு தனியாக யாரும்
வருவதில்லை, பேரூந்தில், அல்லது சொந்த வேன்களில் சித்துள்பவ்வைக்கு சுற்றுலா வருபவர்கள்
மட்டுமே வருவார்கள். அபூர்வமாக சில வெள்ளக் காரர்களைக் கூட்டிக் கொண்டு சென்றுள்ளேன்.
ஆனால் எமது நாட்டவர் என்றால் தனியாக வந்தது நீங்கள் மட்டும் தான் என்று கூறினார்.
பாதையின் இரு மருங்கிலும் சிறிய மரங்களும், உள்ளே பெரிய மரங்களும் காணப்பட்டன.
ஜன சஞ்சாரமே இல்லை. மகுல் மகா விகாரை மற்றும் அங்குள்ள மலைக்குகைகள்,
கல்வெட்டுக்கள் பற்றிக் கேட்டேன். தனக்குத் தெரியும் என்றார். நண்பர்களோடு மூன்று
தடவை இவ்விடத்திற்கு வந்து சென்றதாகச் சொன்னார். தான் எல்லா இடத்திற்கும் என்னைக்
கூட்டிக் கொண்டு போய் காட்டுவதாகவும் கூறினார், கிரவல் பாதை சில இடங்களில் குன்றும்,
குழியுமாக இருந்தது. எனவே குறிப்பிட்ட வேகத்தில் தான் வண்டி சென்று கொண்டிருந்தது.
எனது கையடக்கத் தொலைபேசியில் கூகுள் மேப்பில் இடத்தைப் பார்த்துக்
கொண்டே வந்தேன். சுமார் 20 நிமிடங்களின் பின் மலைப்பாங்கான அந்தப் பகுதியை
அடைந்தோம். பாதையின் இடது பக்கம் மலைப் பாறைகள் தெரிந்தன. அதை அடுத்து இடையிடையே
மரங்கள் அமைந்த வெளி காணப்பட்டது. அதுதான் மகுல் மகா விகாரை. சாரதி வண்டியை ஓர்
மரத்தின் கீழ் நிறுத்தினார். இதுதான் மகுள்மகா விகாரை, காவந்தீச மன்னன் விகார மகாதேவியை
திருமணம் முடித்த பின் மாகமைக்கு வரும்போது தங்கிச் சென்ற இடம் தான் இது எனக் கூறினார்.
வண்டியை விட்டு இறங்கிப் அந்த இடத்தை நோட்டமிட்டேன். இடது பக்கம்
ஓர் சிறிய குளம், அதை அடுத்து சிறிய தூபி, முன்பக்கம் தட்டையான மலைப்பாறை, மலைப்பாறையின் முன் பக்கம் இரண்டு நீர்ச்சுனைகள், பாறையின் பின்பக்கம் சுமார் 100 அடி உயரமான மலை, வலது பக்கம் மலைச் சாரலில் உள்ள
குகைகளுக்குச் செல்லும் பாதை.
முதலாவதாக மலைக் குகைகளுக்குச் சென்று பார்த்து விட்டு, பின்பு தூபிக்குச்
செல்லலாம் என்று எண்ணினேன். வலது பக்கமாக குகைகளுக்குச் செல்லும் பாதை வழியே சாரதி
கூட்டிச் சென்றார். சற்று உயரமான பாதை வழியே முன்னேறினேன். போகப்போக மயான
அமைதியாகக் காணப்பட்டது. வண்டுகள் கத்தும் சத்தம் மட்டுமே கீ என்று கேட்டது. தூரத்தில்
ஓர் கற்குகை தெரிந்தது. யானைகளின் எச்சங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. யானைகள்
அதிகம் உலவும் இடம் அது.
ஆர்வத்துடன், உற்சாகமாக நடந்து சென்றேன். இப்படிப்பட்ட காடுகளுக்கு
பல தடவை தனியாகச் சென்றுள்ளேன். தைரியமாகவும், உற்சாகமாகவும் இருக்கும், எள்ளளவும் பயம் இருக்காது. இறைவன்
எனக்குக் கொடுத்த கொடை தான் தைரியம். நான் ஆய்வு செய்வதற்காக பயணத்தைத் தொடங்கும்
போது சிவசிவா என மனதில் நினைத்துக் கொள்வேன். சிவன் என் அருகிலேயே வருவது போல
இருக்கும். பல இடங்களில் அந்த அனுபவத்தை உணர்ந்துள்ளேன். மிகவும் சுறுசுறுப்பாக
காடுகளின் உள்ளே செல்வேன். மலைகளில் விரைவாக ஏறுவேன். இன்றும் அப்படித்தான்.
வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தேன். முதலாவது குகையை அடைந்தோம். குகையின் மேற்பகுதியில்
வெட்டப்பட்டிருந்த கற்புருவத்தின் கீழ் பிராமி எழுத்துக்களில் கல்வெட்டு
பொறிக்கப்பட்டிருந்தது. முதலாவது கல்வெட்டைக் கண்ட மகிழ்வோடு அதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
மேலும் மேல் நோக்கிச் சென்றேன். அடுத்த கற்குகை தென்பட்டது.
அதுதான் பிரதான பெரிய குகை. முன்பக்கம் மண்சுவர் எழுப்பப் பட்டு, நடுவில் மரக்கதவு
போடப்பட்டிருந்தது. மூன்று ஜன்னல்கள் இருந்தன. அவ்விடத்தில் நின்ற குரங்குகள்
இரண்டு மரத்தில் தாவி ஏறி ஓடின. கதவைத் திறந்து கொண்டு உள்ள சென்றேன். வெளவால்கள்
கீச்சிட்டுக் கொண்டு வெளியே பறந்தன. எலிகளின் சத்தம் கேட்டது. எலி, வெளவால்,
குரங்கு, காட்டுப்பூனை ஆகியவற்றின் எச்சங்களின் நாற்றம் மூக்கை முட்டியது. குகையின்
உள்ளே புத்தபகவான் படுத்த நிலையில் சுதைச் சிலையாகக் காணப்பட்டார். பகவானை வணங்கி
விட்டு வெளியே வந்தேன். அந்தக் குகையின்
மேற்பகுதியிலும் பிராமிக் கல்வெட்டு காணப்பட்டது. இவையெல்லாம் உயரமான மலையின்
அடிவாரத்தில் உள்ள கற்குகைகள்.
அங்கிருந்து மலையின் இடது பக்கம் உள்ள செங்குத்தான மலை யடிவாரத்தில் இருந்த பற்றைகளையும், மரங்களையும்
விலக்கிக்கொண்டு அடுத்த குகையை நோக்கி முன்னேறினேன். மலையின் செங்குத்தாத சாரலில்
குழிவான இடத்தில் மூன்று தேன் கூடுகள் தொங்கிக் கொண்டிருந்தன. சற்று தூரத்தில்
அந்தக் குகை இருந்தது. அதில் கல்வெட்டு உள்ளதா என ஆராய்ந்தேன். காணவில்லை. அதை அடுத்து அதன் பக்கத்தில் இன்னுமோர் குகை காணப்பட்டது. அந்தக் குகையில் கல்வெட்டு பொறிக்கப் பட்டிருந்தது. அவற்றைப் புகைப்படம்
எடுத்துக் கொண்டிருந்தேன். திடீரென நாங்கள் வந்த பற்றைகளின் பக்கம் இருந்து
சரசரவென சத்தம் கேட்டது.
யானையா? குரங்குகளா? சத்தம் வந்த பக்கம் இருவரும் திரும்பிப்
பார்த்தோம். பின்னேரம் இரண்டு மணிக்குப் பிறகு யானைகள் நடமாடத் தொடங்குமாம்.
தூபியின் அருகில் உள்ள குளத்திற்கு யானைகள் நீர் குடிக்க வருமாம். சாரதி சொன்னார்.
நேரத்தைப் பார்த்தேன். பகல் ஒரு மணி. யானைகள் வரத் தொடங்கும் நேரம். பற்றைகள்
அசைந்தன. பார்த்துக் கொண்டே இருந்தோம். யானையுமல்ல, குரங்குகளுமல்ல, மனிதர்கள்.
மூன்று பேர் எங்களை நோக்கி வந்தார்கள்.
வாட்டசாட்டமான ஒருவர், சாதாரமான ஒருவர், மெலிந்த ஒருவர். அருகில் வந்தபோது மூவரில் ஒருவர் சாரதிக்கு பழக்கமானவர் என்று
தெரிந்தது. நண்பர்கள் மூன்று பேரை சித்துள்பவ்வைக்கு கூட்டிக் கொண்டு வந்தாராம். த்ரீவீல் ஒன்று நிற்பதை
பார்த்தார்களாம். ஆட்கள் இருக்கிறார்கள் எனவே நாமும் இந்தத் தூபியைப் பார்த்து
விட்டு போவோம் என்று வந்தார்களாம். தூபி அருகில் யாரையும் காணவில்லை, ஆனால் தூரத்தில்
மலையடிவாரத்தில் கதைக்கும் சத்தம் கேட்டு இந்தப் பக்கம் வந்தார்களாம்.
இவர் கொழும்பில் இருந்து வந்த மாத்தையா, அவரைக் கூட்டிக் கொண்டு
வந்தேன் என சாரதி சொன்னார். மூன்று பேரும் என்னைப் பார்த்து சிரித்தார்கள். உடனே
நான் அடுத்த பக்கம் இரண்டு குகைகள் இருக்கின்றன, பார்த்தீர்களா என்று கேட்டேன். பார்க்க
நேரம் இல்லை. சித்துள் பவ்வைக்கு போய்த் திரும்ப வேண்டும் என்று சொல்லி விட்டு
அங்கிருந்து நகர்ந்தனர்.
அங்கிருந்து வெளியே வந்து தட்டையான பாறைப் பகுதிக்கு வந்தோம். பறையின்
நடுப்பகுதியில் ஓர் மேடையில் அமர்ந்த நிலையில் சிறிய புத்தர் சிலை ஒன்று
காணப்பட்டது. பாறையின் கீழ்ப்பக்கம் ஓர் நீர்ச்சுனை காணப்பட்டது. அதனருகில்
இன்னொமோர் குகை. அக்குகையின் முன்பக்கம் களிமண் சுவரும், ஓரத்தில் கதவும் காணப்பட்டது.
மலைப்பாறையோடு இணைத்து கூரையும் போடப்பட்டிருந்தது. அது பிக்குகள் தங்கும் குகை.
இங்கும் கல்வெட்டு பொறிக்கப் பட்டிருந்தது.
அக்குகையின் பின்பக்கம் இன்னுமோர் கற்குகை காணப்பட்டது. அதிலும் முன்பக்கம்
களிமண் சுவர் கட்டப்பட்டிருந்தது. நடுவில் சிறிய கதவும், இரண்டு பக்கமும் ஜன்னல்களும்
காணப் பட்டன. இன்னும் சில குகைகள் பெரிய மலையின் பின்பக்கம் உள்ள காட்டில்
உள்ளதாக சாரதி சொன்னார். பார்க்கக் கூடிய கற்குகைகள் எல்லாவற்றையும் பார்த்து
விட்டேன். மொத்தமாக 7 கற்குகைகள், 5 கல்வெட்டுக்களைப் பார்த்த திருப்தி மனதை
நிறைத்தது. ஆனாலும் சிவ பூமியின் சுவடுகள் எதையும் காணவில்லையே என்ற வேதனையும்
இருந்தது.
மலையேறி, காடுகளுக்குள்ளும், பற்றைகளுக்குள்ளும் அலைந்து திரிந்த களைப்பில் போத்தலில் இருந்த நீரைக்
குடித்தேன். சாரதிக்கும் கொடுத்தேன். வேண்டாம் உங்களுக்குத் தேவைப்படும், ஆட்டோவில்
தண்ணீர் போத்தல் உள்ளது, நான் குடித்து விட்டு வருகிறேன், நீங்கள் தூபியைப் பாருங்கள்
என்று சொல்லி விட்டு சாரதி சென்று விட்டார்.
தூபி இருக்கும் பகுதிக்குச் சென்றேன். சாதாரணமாக தூபியின் அருகில்
தான் பண்டைய சிதைவுகளின் எச்சங்கள் காணப்படும். 5 அடி உயரமான, சதுரமான மேடை மீது தூபி அமைக்கப்பட்டிருந்தது. அதன்
முன்பக்கம் பழமை வாய்ந்த செங்கல் கைப்பிடி வரிசை, கல் படிகள் ஆகியவை காணப்பட்டன. மேடையின்
வலது பக்கம் நேரான, நேர்த்தியான ஓர் கற்தூண் நாட்டப்பட்டிருந்தது. அது சற்று
வித்தியாசமாகத் தென்பட்டது. அருகில் சென்று பார்க்கலாம் என நினைத்துக் கொண்டு மேடையில்
ஏறி இடது பக்கமாகச் சுற்றி வந்தேன். சில பழமை வாய்ந்த ஆசனக் கற்கள் காணப்பட்டன. வலது
பக்கம் வந்தேன். அந்த நேரான, நேர்த்தியான தூண் தெரிந்தது. தூணின் அருகில் நெருங்கியவுடன் பேரானந்தம் அடைந்தேன். நான் வந்த
நோக்கம் நிறைவேறி விட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆம், அது சாதாரண தூண் அல்ல.
எட்டுப்பட்டைகள் செதுக்கப்பட்ட தாரா லிங்கம். 5 அடி உயரத்தில், மிகவும் சிதைந்த
நிலையில், கரடு முரடாகக் காணப்பட்டது.
பல்லவர் காலத்தில் தான் தாரா லிங்கங்கள் செதுக்கப்பட்டு
கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் தாரா
லிங்கங்கள் உள்ளன. மாமல்லபுரத்தில் புலிக்குகையின் அருகில் ஓர் தாரா லிங்கத்தைப்
பார்த்துள்ளேன். அது போன்ற ஓர் தாராலிங்கத்தை தென்னிலங்கைக் காட்டில் பார்ப்பேன்
என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை.
தாராலிங்கத்தை பல கோணங்களிலும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அங்கிருந்து
பார்க்கும் போது கீழே குளம் அழகாகத் தெரிந்தது. அதையும் படம் பிடித்துக் கொண்டேன்.
சாரதி ஓடி வந்தார். 2 மணியாகி விட்டது. யானைகள் வரும் நேரம். விரைவாகப் போய் விடுவோம் என்று
கூறினார். ஓடிப்போய் ஆட்டோவில் ஏறினேன். அங்கிருந்து மின்னல் வேகத்தில் விரைந்தது
முச்சக்கர வண்டி.
மகுல் மகா விகாரையில் உள்ள மலைக்குகைகளில்
11 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை பற்றி பேராசிரியர் பரணவிதான தனது
நூலில் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் 5 கல்வெட்டுக்களில் சிவன், நாகம், சுவாமி மற்றும் தமிழ் சொற்கள் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சிவன், மகேசன் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளும்,
நாகம் எனப் பொறிக்கப்பட்ட ஒரு கல் வெட்டும், சுவாமி எனும் பதம் பொறிக்கப்பட்ட 2
கல்வெட்டுக்களும், பெருமகன் எனும் தமிழ்த் தலைவன் பற்றிய இரண்டு கல்வெட்டுகளும்
காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் கூறும் செய்திகள் மூலம் இங்கு சிவன் மற்றும் நாக
வழிபாடு நிலவியமையும், முனிவர்கள் மற்றும் தமிழ் பிரதானிகள் வாழ்ந்து ள்ளமையும்
உறுதியாகத் தெரிகின்றது.
அந்த ஐந்து கல்வேட்டுக்களிலும் பின்வருமாறு
பொறிக்கப் பட்டுள்ளது.
1) கபதி கனகச வெமருக்கன சிவச லேன சகச
பொருள்-வேமருக்காசின் கணக்காளர், குடும்பத்தலைவன் சிவனின்
குகை சங்கத்திற்கு..
2) பருமக திசஹ புத்த பருமக
நாகச புத்த நாகச
பொருள்-பெருமகன் தீசனின் புத்திரன், பெருமகன் நாகனின்
புத்திரன், நாகன்..
3) பத்த வசஹ க பத்த
புசஹ க உபசிக சோனய க லேன-
உபசிக சோனைய லேன
பொருள்-சுவாமி வெஸ்ஸவினதும்,சுவாமி புஸ்ஸவினதும், பெண்
பக்தை சோணாவினதும் குகை. பெண் பக்தை சோணாவின் குகை.
4)
பத்த சுமனஹ... அப்பு மஹச... நம...சகச..
பொருள்-சுவாமி சுமணவின்
....மகேசன்....பெயர்...சங்கத்திற்கு...
5) பருமக அயிமர புத்த பருமக
சுடி திச புத்த பருமக சுடி திச லேன அகட்ட அனகட்ட ...
பொருள்-பெருமகன் அயிமரனின் புத்திரன், பெருமகன் சூள
தீசனின் புத்திரன், பெருமகன் சூளதீசனின் குகை, அவன் இருக்கின்ற போதும், இல்லாத
போதும் நான்கு காலாண்டிற்கு...
மகுள் மகா விகாரைப் பகுதியில் பரவலாக
மலைப்பாறைகள் அமைந்துள்ளன. பாதையின் இடது பக்கத்திலும், வலது பக்கத்திலும் சுமார்
ஒரு கி.மீற்றர் தூரம் வரை மலைப்பாறைகள் காணப் படுகின்றன. இப்பகுதி முழுவதும்
கற்புருவங்கள் வெட்டப்பட்ட ஏராளமான கற்குகைகள் காணப்படுகின்றன.
மகுள் மகா விகாரைப் பகுதியைச் சுற்றி பல தொன்மை வாய்ந்த
இடங்கள் அமைந்துள்ளன. அவை கல்கடுவ, கல்கே, பம்பேவ, ஜம்புரகல, குருளுகேம ஆகிய
இடங்களாகும். பண்டைய காலத்தில் சைவ சாம்ராஜ்யமாக விளங்கிய இவ்விடங்கள் யாவும்
தற்போது யாள வன விலங்குகள் சரணாலய காட்டின் உள்ளே மறைந்து கிடக்கின்றன.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
No comments:
Post a Comment