தென்னமரவாடியில் இருந்த சைவ சாம்ராஜ்ஜியத்தின் சுவடுகள்
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/168 25 மே
2020
குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளில்
பல எனது அடுத்த நூலில் இடம்பெற உள்ளன. எனவே எனது அனுமதி இல்லாமல் யாரும் இவற்றை
தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)
சிவபூமியின்
சுவடுகளைத் தேடி பல தடவைகள் திருகோணமலை மாவட்டத்திற்குச் சென்றுள்ளேன்.இங்கு பல
இடங்களில் ஏராளமான சுவடுகள் புதைந்து கிடக்கின்றன. இவ்வாறு சிவபூமியின் சுவடுகள்
புதைந்து கிடக்கும் இடங்களில் ஒன்றுதான் தென்னமரவாடி. திருகோணமலை மாவட்டத்தின் வடஎல்லையில் திருமலை நகரில் இருந்து 70 கி.மீ
தூரத்தில் தென்னமரவாடி அமைந்துள்ளது.
தென்னமரவாடி கிராமம் முற்கால பாண்டியர்
காலத்தில் உருவான ஓர் ஊராக இருக்கவேண்டும். ஏனெனில் தென்னமரவாடி எனும் பெயரோடு
பாண்டியருக்கு நெருங்கிய தொடர்புள்ளதாகத் தெரிகிறது. தென்னன்-மரபு-அடி எனும்
மூன்று சொற்களைக் கொண்டு இவ்வூரின் பெயர் உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள்
கருதுகின்றனர். தென்னன் என்பது பாண்டியரைக் குறிக்கும் சொல்லாகும். இதுவே தென்னன்
மரபடி என அழைக்கப்பட்டு பின்பு தென்னமரவாடி எனத் திரிபடை ந்துள்ளது. இதன்படி
தென்னமரவாடி சுமார் 1200 வருடங்கள் பழமை வாய்ந்த ஊர் எனக் கூறலாம்.
தென்னமரவாடி
பற்றிய விபரங்களைத் தேடினேன். அரிய, முக்கிய
சில தகவல்கள் கிடைத்தன. தென்னமரவாடிக்கு செல்வதற்கான தினத்தை முடிவு செய்து விட்டு குறித்த நாளின் திருமலைக்குச் சென்றேன். இரவு 10 மணிக்கு
கொழும்பில் இருந்து செல்லும் பேரூந்து மூலம் சென்று அதிகாலை திருகோணமலையை
அடைந்தேன். அங்கு வசிக்கும் எனது சகோதரன் மகேஸ்வரன் எனக்குத் துணையாக பல இடங்களுக்கும்
என்னோடு வருவார். அவருக்கு வர முடியாத சந்தர்ப்பத்தில் அவருடைய மோட்டார் சைக்கிளை
எனக்குக் கொடுத்து விடுவார்.
அன்றும்
அவர் என்னோடு வருவதாக இருந்தார். தென்ன மரவாடியைச் சேர்ந்த அவரின் நண்பர்
குகநாதனும் எங்களுடன் வர இருக்கிறார். காலை 7.00 மணியளவில் மூவரும் இரண்டு
மோட்டார் சைக்கிளில் திருகோணமலையில் இருந்து தென்னமர வாடிக்குப் பயணமானோம். அங்குள்ள
பழமை வாய்ந்த கோயில் களின் சுவடுகளை ஆராய்வதும், அங்குள்ள கந்தசுவாமி மலையில்
இருந்த சோழர்கால கோயிலின் இடிபாடுகளை ஆராய்வதும் அன்றைய எனது பயணத்தின்
நோக்கமாகும்.
திருகோணமலையில்
இருந்து சாம்பல் தீவு, நிலாவெளி, இறக்கண்டி பாலம், கும்புறுப்பிட்டி வழியாக
சலப்பையாறு எனும் அழகிய இடத்தை அடைந்தோம். அது வடக்கில் இருந்து வரும் சலப்பை
ஆறும், தெற்கில் இருந்து வரும் பன்குளம் ஆறும் ஒன்றிணைந்து கடலில் கலக்கும்
கழிமுகப் பகுதி. ஒருபக்கம் கடலும், அடுத்த பக்கம் அகன்ற ஆறும், இவற்றின் நடுவில்
பாலமும் அமைந்திருந்தது. மேற்குப்பக்கம் தூரத்தில் நாச்சியார் மலை அழகாகத்
தெரிந்தது. இம்மலையை பாவா மலை என்று அழைக்கின்றனர். அவ்விடத்தில் வண்டியை நிறுத்தி
விட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். மீண்டும் பயணம் தொடர்ந்தது.
அங்கிருந்து
குச்சவெளி என்னுமிடத்தைக் கடந்த பின்பு இன்னுமோர் ரம்மியமான இடத்தை அடைந்தோம்.
அதுதான் புடவைக்கட்டு பாலம். திருகோணமலை வடக்கு நெடுஞ்சாலையில் உள்ள மூன்று
பாலங்களில் இதுவே நீளமான பாலமாகும். இப்பாலம் 270 மீற்றர் நீளமுடையது. இவ்விடம்
குஞ்சிக்கும்பன் ஆறு கடலில் கலக்கும் கழிமுகமாகும். இதுவும் ஒருபக்கம் அகன்ற
ஆறும், அடுத்த பக்கம் கடலும், அதனருகில் சிறிய மலையும் அமைந்த அழகிய இடமாகும்.
அங்கும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன்.
மீண்டும்
பயணம் தொடர்ந்தது. அடுத்து திரியாய் சந்தியைக் கடந்து சென்று கொண்டிருந்தோம்.
தூரத்தில் பிள்ளையார் மலை தெரிந்தது. அதை இன்னுமோர் தடவை வரும்போது ஆய்வு
செய்யலாம் என எண்ணியவாறு முன்னேறினேன். சில நிமிடங்களில் யான் ஓயா பாலத்தை
அடைந்தோம். அங்கும் சில படங்களை எடுத்துக் கொண்டேன்.
அங்கிருந்து 5 கி.மீ
தூரத்தில் இருந்த புல்மோட்டை
எனும் சிறிய நகரை அடைந்தோம். நேரம் சரியாக 9.30 மணி. இச்சிறிய நகரம்
திருகோணமலையில் இருந்து 54
கி.மீ தூரத்தில் உள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள கடைசி நகரம். இதையும் விட கடைசியாக உள்ளது
ஓர் கிராமம். அதுதான் தென்னமரவாடி. அங்குதான் இப்போது சென்று கொண்டிருக்கிறோம்.
தென்னமரவாடிக்கு இன்னும் 16 கி.மீ தூரம் உள்ளது. புல்மோட்டையில் உள்ள ஓர் கடையில்
தேநீர் அருந்தி விட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம்.
புல்மோட்டை
சந்தியில் இருந்து மேற்குப் பக்கமாகச் செல்லும் வீதி பதவியாவிற்கு செல்கிறது.
இவ்வீதியில் எங்கள் மோட்டார் வண்டி ஓடிக் கொண்டிருந்தது. இடையில் பாதை ஓரத்தில்
ஓர் வழிப் பிள்ளையார் கோயிலைக் கண்டேன். அவ்விடத்தில் வண்டியை நிறுத்தி பிள்ளையாரை
வணங்கி விட்டு, மீண்டும் பயணத்தைத்
தொடர்ந்தோம்.
சிறிது தூரத்தில் ஓர் சந்தியை அடைந்தோம். அதுதான் அமரிவயல் சந்தி. பெயருக்கேற்ற வகையில் சுற்றிவர வயல் நிலங்கள் காணப்பட்டன. தென்னமரவாடிக்கு இங்கிருந்து வடக்குப் பக்கமாகத் திரும்பி 8 கி.மீ செல்ல வேண்டும். இச்சந்தியில் இருந்து கிரவல் மண் பாதை தொடங்கியது. இச்சந்தியில் ஓர் வழிப் பிள்ளையார் கோயில் காணப்பட்டது. சிறிய மாடம் அமைத்து உள்ளே பிள்ளையார் சிலையை வைத்திருந்தார்கள். அப்பிள்ளையாரையும் வணங்கி விட்டு தென்னமரவாடிக்கு முன்னேறினோம்.
சந்தியில்
இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் பற்றைக்காடு காணப்பட்டது. இவ்விடத்தில் கேம்படி
பிள்ளையார் கோயில் இருந்தது. இது ஓர் சிறிய கோயில். முன் பக்கம் சிறிய மண்டபமும்,
அதை அடுத்து கருவறையும் உள்ளது. கருவறை உள்ளே மேடை அமைக்கப்பட்டு அதில் சுதையில் அமைக்கப்பட்ட
பிள்ளையார் சிலை வைக்கப் பட்டிருந்தது. அப்பிள்ளையாரையும் வணங்கி விட்டு
முன்னேறினோம்.
இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்திற்கு பாதையின் இரு பக்கங்களிலும் வயல் வெளிகள் காணப்பட்டன. அதன் பின்பு ஓர் காடு காணப்பட்டது. சுமார் ஒரு கி.மீ நீளமான இந்தக் காட்டின் நடுப்பகுதியில் மேடான நிலத்தின் ஊடாக பாதை அமைக்கப் பட்டிருந்தது. இம்மேட்டு நிலத்தில் பாதையின் இரு பக்கங்களிலும் சிறிய பாறைகளும், கற்களும் காணப்பட்டன. இவ்விடத்தை கூனப் பிள்ளையார் மலை என அழைக்கின்றனர். இவ்விடத்தில் பாதை ஓரத்தில் ஐந்து உருண்டையான கற்களும், இவற்றின் அருகில் ஓர் சிறிய மேடையில் குடில் அமைக்கப்பட்டு அதில் பிள்ளையார் கல் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் இறங்கி பிள்ளையாரை வணங்கி விட்டு அப்பகுதியை ஆராய்ந்தேன்.
தென்னமரவாடிப் பகுதியில் உள்ள தொன்மை
வாய்ந்த கோயில் கூனப்பிள்ளையார் மலை என்னுமிடத்தில் அமைந்திருந்தது. இங்கு
பிள்ளையார் கோயிலும், கோயிலுக்குரிய கட்டிட இடிபாடுகளும், அவற்றின் அருகில் 4
கருங்கற் தூண்களும் காணப்பட்டதாக கிராம வாசிகள் கூறுகின்றனர். மேலும் 3 லிங்கக்
கற்களும், பிள்ளையார் சிலையும் காணப்பட்டதாகவும், இவை யாவும் யுத்த காலத்தின்
போது இனவாதிகளால் அழிக்கப்பட்டு தற்போது சில கற் தூண்களின் துண்டுகளும், புதிதாக
வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையும் காணப்படுவதாகவும் அறிந்தேன்.
இங்கிருந்து
மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். சிறிது நேரத்தில் ஓர் ஆறு காணப்பட்டது. ஆற்றில்
குறுக்கே கட்டப்பட்டிருந்த மிகவும் பழைய பாலத்தைக் கடந்தோம். இதுதான் குண்டாறு.
ஆற்றைக் கடந்ததும் சுமார் ஒன்றரை கி.மீ தூரத்திற்கு வயல் வெளிகள் காணப்பட்டன.
அதன்
பின்பு ஓர் ஆறு குறுக்கிட்டது. இவ்வாற்றின் பெயர் வண்ணாந்துறை ஆறு. இது சிங்கள
மொழியில் மீ ஓயா என அழைக்கப்படுகிறது. ஆற்றில் நீர் காணப்படவில்லை. இவ்வாற்றைக் கடக்க
பழைய பாலம் ஒன்று காணப்பட்டது. ஆற்றைக் கடந்தவுடன் 50 அடி தூரத்தில் இவ்வாற்றின்
நீர் பாதையின் குறுக்கே ஒரு அடி ஆழத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் மோட்டார்
வண்டியை சற்று கஷ்டப்பட்டே அடுத்த கரைக்குக் ஓட்டிச் சென்றோம்.
இங்கிருந்து
600 மீற்றர் தூரத்தில் முச்சந்தி ஒன்று காணப்பட்டது. அச்சந்தியின் மேற்குப்
பக்கமாகச் செல்லும் வீதி முல்லைத்தீவுக்குச் செல்கிறது. நேராக வடக்குப் பக்கம் 4 கி.மீ
தூரம் சென்றால் தென்னமரவாடியை அடையலாம்.
கிரவல் பாதையில் மேலும் முன்னேறிச் சென்றபோது வலது பக்கம் கொக்கிளாய் களப்பும்,
கந்தசுவாமி மலையும் அழகுத் தோற்றத்தில் தெரிந்தன.
எனது
இப்பயணத்தின் முக்கிய இலக்கு கந்தசுவாமி மலையில் இருந்த பண்டைய கோயிலை
ஆராய்வதாகும். இம்மலையில் இருந்த சோழர் காலக் கோயில் இடிபாடுகளுக்கு சென்று ஆய்வு
செய்ய வேண்டும் என்பது எனது பிரதான நோக்கமாக இருந்தது. ஆனால் அம்மலைக்கு
செல்வதானால் இராணுவ முகாமில் அனுமதி பெற வேண்டும் என ஊர் மக்கள் கூறினர். தென்னமரவாடி
கிராமத்தில் இருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள முல்லைத்தீவு சந்தியில் உள்ள
இராணுவ முகாமில் அனுமதி இல்லாமல் மலைக்குப் போக முடியாது எனக் கூறினர்.
உடனே
இராணுவ முகாமுக்கு திரும்பினோம். முல்லைத்தீவு சந்தியில் இருந்த சிறிய இராணுவ
முகாமுக்குச் சென்று அம்முகாமுக்குப் பொறுப்பான அதிகாரியோடு கதைத்தேன். நான்
கொழும்பில் இருந்து இம் மலையைப் பார்ப்பதற்காக வந்தேன் எனக் கூறி அனுமதி கேட்டேன்.
அனுமதி கொடுக்க தனக்கு அதிகாரம் இல்லை எனவும், அது பாதுகாப்பாற்ற பகுதி, அங்கே
எதற்காக செல்ல முயற்சி செய்கிறீர்கள் எனக் கேட்டார். நான் அங்குள்ள சிதைவுகளைப்
பார்க்க வேண்டும் என்றேன். சிங்கபுர இராணுவ முகாமில் கேர்ணல் இருக்கிறார். அவர்
இன்னும் சிறிது நேரத்தில் வருவார். வேண்டுமென்றால் அவரிடம் அனுமதி கேட்டுப்
பாருங்கள் எனக் கூறினார்.
அதற்குள்
கொழும்பில் உள்ள எனது நண்பர் பிரிகேடியர் ஒருவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
நான் தென்னமரவாடிக்கு வந்திருக்கும் விடயம் பற்றி அவரிடம் கூறினேன். சிங்கபுரம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி வந்தவுடன்
அழைப்பு எடுங்கள் என்றார்.
பத்து
நிமிடத்தில் ஒரு ஜீப் வண்டி வந்தது. அதில் இருந்து கேர்ணல் மூன்று இராணுவ
வீரர்களுடன் இறங்கி வந்தார். என்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவரும்
கொழும்பைச் சேர்ந்தவர். எனது விருப்பத்தை
அவரிடம் சொன்னேன். கொழும்பில் உள்ள எனது பிரிகேடியர் நண்பர் பற்றிக் கூறினேன்.
பிரிகேடியரை மீண்டும் தொலைபேசியில் அழைத்தேன்.
அவர் சிங்கபுர கேர்ணலுடன் கதைத்தார். இராணுவ அதிகாரிகள் இருவரும் ஏற்கனவே
அறிமுகமானவர்கள். நண்பர்கள் அன்போடு பேசிக் கொண்டார்கள். பின்பு என்னிடம்
தொலைபேசியைத் தந்தார். எனக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்
கொண்டதாக கொழும்பு நண்பர் என்னிடம் கூறினார்.
கந்தசுவாமி
மலைப்பகுதி இன்னும் காடாக இருப்பதாகவும், யுத்தம் முடிவுற்ற பின்பு இன்னும்
அப்பகுதியை கிளியர் செய்யவில்லை எனவும், பொது மக்களை இதுவரை அங்கு செல்ல அனுமதிக்க
வில்லை எனவும், இன்னும் ஒரு மாதத்தின் பின்பு அங்கு செல்லலாம், இப்போது செல்வது பாதுகாப்பல்ல,
உங்களை அங்கு அனுப்ப முடியாமைக்கு வருந்துகிறேன் எனவும் கேர்ணல் கூறினார். ஆனால்
உங்களை ஓர் முக்கியமான இடத்திற்கு கூட்டிச் செல்கிறேன் என்றார். ஆவலோடு எங்கே
என்று கேட்டேன்.
யுத்த
காலத்தின் போது இப்பகுதியில் காடுகளுக்குள் சில இந்து தெய்வச் சிலைகள் ஆங்காங்கே
காணப்பட்டதாகவும், அவற்றை எல்லாம் எடுத்து, சிங்கபுரம் இராணுவ முகாமின் முன்பாக
ஓர் கோயிலை அமைத்து அதில் பாதுகாத்து வைத்துள்ளதாகவும், தினமும் காலை அதற்கு பூ
வைத்து வணங்கி, பின்னேரம் விளக்கேற்றி வழிபட்டு வருவதாகவும் கூறினார். அச்சிலைகளை
நான் உங்களுக்குக் காட்டுகிறேன் என்று கூறி தன்னைப் பின் தொடருமாறு கூறி ஜீப்
வண்டியில் சென்றார். எங்களோடு வந்த நண்பரைப் பார்த்தேன். அவர் கலவரமடைந்த
முகத்தோடு எம்மைக் பார்த்தார். நாங்கள் இருவரும் சென்று வருகிறோம் எனக் கூறி ஜீப்
வண்டியைப் பின் தொடர்ந்தோம்.
இங்கிருந்து
நான்கு கி.மீ தூரத்தில் சிங்கபுர இராணுவ முகாம் அமைந்திருந்தது. நானும், எனது
சகோதரனும் குன்றும் குளியுமாகக் காணப்பட்ட கிரவல் பாதை வழியாக எங்கள் மோட்டார் சைக்கிளில்
ஜீப் வண்டியைத் தொடர்ந்து சிங்கபுர இராணுவ முகாமுக்குச் சென்றோம். சில
நிமிடங்களில் சிங்கபுர குளத்தின் அருகில் இருந்த இராணுவ முகாம் வாசலை அடைந்தோம்.
அங்கு பாதையின் ஓரத்தில் ஓர் சிறிய கோயில் காணப்பட்டது. அதனருகில் ஓர் சென்றி
பாயிண்ட் காணப்பட்டது. ஓர் நாற்சதுர கட்டிடத்தின் மேல்பகுதியில் கொங்கிரீட் கூரை
போடப்பட்டு, இரும்புக் கம்பிகளால் கதவு அமைக்கப்பட்டிருந்தது. அதன் சுவர்களில் அழகிய
பிள்ளையார் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. கோயிலின் முன்பக்கம் சதுர வடிவில்
தேங்காய் உடைக்க ஓர் கட்டு கட்டப்பட்டிருந்தது. கேர்ணல் இங்குதான் சிலைகள் உள்ளன.
பாருங்கள் என்றார். அருகில் சென்று பார்த்தேன்.
நம்ப
முடியாத, ஆச்சரியமான, ஆனால் உண்மையான ஓர்
காட்சியை அங்கே கண்டேன். தென்னைமரவாடிப் பகுதியில் இருந்த சைவ சாம்ராஜ்ஜியத்தின்
சுவடுகள் எல்லாம் அங்குதான் இருந்தன. அக்கோயிலில் மொத்தமாக ஆறு கற்சிலைகள் காணப்பட்டன.
நடுவில் இரண்டு அடி உயரமான மிகப்பண்டைய கால, கரடு முரடான பிள்ளையார் சிலை காணப்பட்டது.
அதை அடுத்து ஒன்றரை அடி அளவிலான மிகப்பண்டைய நந்தியின் கற்சிலை காணப்பட்டது.
இவற்றின் அருகில் ஓர் கல்லில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட ஒரு அடி உயரமான
வேல், எட்டு அங்குலம் உயரமான பண்டைய மூஷிகத்தின் கற்சிலை, ஒரு அடி உயரமான கல்லில்
புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்ட அம்மன் சிற்பம், ஒன்றரை அடி உயரமான ஓர்
கற்சிலை. கை கூப்பி வணங்கிய வண்ணம் காணப்படும் இச்சிலையின் இடுப்பு வரையான உடைந்த
துண்டுப்பகுதி மட்டுமே காணப்பட்டது.
சிலைகளைக்
கண்டு மெய்சிலிர்த்த நிலையில் இவற்றை புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என கேர்ணலிடம்
கேட்டேன். தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். சிலைகளை புகைப்படங்கள்
எடுத்துக் கொண்டேன். இச்சிலைகள் எப்படிக் கிடைத்தன என்று கேர்ணலிடம்
கேட்டேன். இவை தென்னமரவாடியை சுற்றியுள்ள காடுகளில் ஒவ்வொரு இடங்களிலும்
காணப்பட்டதாகவும்,
இப்பகுதியில் உள்ள சிங்கள மக்கள் இவற்றை விகாரைகளுக்கு கொண்டு செல்ல
முற்பட்டதாகவும், இவை இங்கிருந்த கோயில்களுக்கு உரியவை எனக் கூறி அவற்றை அவர்
கொண்டு வந்து முகாமின் முன்பக்கம் கோயில் கட்டி தனது கண்காணிப்பில் வைத்துக்
கொண்டதாகவும் கூறினார். இவற்றுக்கு உரிய கோயில் காரர்கள் யாராவது வந்து கேட்டால் கொடுத்து
விடுவேன் எனவும் கூறினார்.
கேர்ணல்
கூறிய விடயம் மன மகிழ்ச்சியைத் தந்தது. இந்த சிலைகளை எல்லாம் பெளத்த
விகாரைகளுக்குள் சென்று விட்டால் அதன் பின்பு யாராலும் இவற்றைக் கண்டு பிடிக்க
முடியாது. அந்த வகையில் இவற்றை பாதுகாத்து எனது கண்ணில் காட்டிய கேர்ணல்
அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.
கொழும்பில்
இருந்து வந்திருக்கிறீர்கள். எனது நண்பரின் நண்பர் நீங்கள். வாருங்கள் தேநீர் அருந்தி
விட்டு செல்லலாம் என முகாமுக்கு அழைத்தார். இல்லை நான் மீண்டும் திருமலைக்குச்
சென்று இன்று இரவு கொழும்புக்குச் செல்ல வேண்டும், எனவே அடுத்த தடவை நிச்சயம்
வருகிறேன் எனக் கூறி, நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றோம்.
முல்லைத்தீவு
சந்தியில் முகாமுக்கு வெளியே எங்களை அனுப்பிவிட்டு காத்துக் கொண்டிருந்தார்
எங்களுடன் வந்த நண்பர்.
எங்களைப்
பார்த்தவுடம் கலவரத்தோடு இருந்த அவர் மனம் மகிழ்ந்து பெருமூச்சு விட்டார். அவரது பெருமூச்சின்
அர்த்தம் என்னவென்று நான் புரிந்து கொண்டேன்.
தென்னமரவாடி
கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பிள்ளையார் கோயிலையும், கந்தசுவாமி மலையையும்
அடுத்த தடவை ஆய்வு செய்யலாம் என நினைத்த வண்ணம் தென்னமரவாடியில் 1300 வருடங்களுக்கு
முன்பு இருந்த சைவ சாம்ராஜ்ஜியத்தின் சுவடுகளைக் கண்ட மன நிறைவோடு
திருகோணமலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.
(தென்னமரவாடி
ஆய்வுப் பயணம் தொடரும்..)
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று
ஆய்வாளர்
இலங்கை
No comments:
Post a Comment