தென்னிலங்கையில் யாள
காட்டுப் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சிவநகரம்
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/158
5 மே 2020
தென்னிலங்கையில்
சிவ பூமியின் சுவடுகளைத் தேடி யாள காட்டிற்குச் சென்றேன். அங்கு நான் ஆய்வு செய்ய
வேண்டிய பல இடங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் சித்துள் பவ்வ எனப்படும் சித்தர்
மலை.
யாள காடு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள ஓர் வன விலங்குகள் சரணாலயமாகும். கதிர்காமத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் 16 கி.மீ தூரத்தில், யாள வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ள காட்டின் தென்மேற்குப் பகுதியில் சித்தர் மலை அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான கற்குகைகள் காணப்படுகின்றன.
யாள காடு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள ஓர் வன விலங்குகள் சரணாலயமாகும். கதிர்காமத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் 16 கி.மீ தூரத்தில், யாள வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ள காட்டின் தென்மேற்குப் பகுதியில் சித்தர் மலை அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான கற்குகைகள் காணப்படுகின்றன.
இக்குகைகளில்
பண்டைய காலம் முதல் கதிர்காமத்திற்கு தல யாத்திரை வந்த சித்தர்களும், முனிவர்களும்
அதிகளவில் தங்கிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக இம்மலை சித்தர் மலை எனப் பெயர்
பெற்றுள்ளது. இதுவே சிங்கள மொழியில் சித்தர பப்பத்த என அழைக்கப்பட்டு, பின்பு
சித்தல பப்பத்த என மருவியுள்ளது. பப்பத்த என்பது மலை எனப் பொருள்படும். இப்படி
காலத்துக்குக் காலம் மருவி வந்து தற்போது சித்துள் பவ்வ என அழைக்கப் படுகின்றது.
சித்தர்
மலையில் உள்ள குகைகளிலும், பாறையிலும் 31 பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ளன. இக்கல்வெட்டுக்கள்
பற்றி பேராசிரியர் பரணவிதான தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் சிற்றம்பலம்
அவர்கள் தனது “ஈழத்து
இந்து சமய வரலாறு” எனும்
நூலிலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய
எனது ஆய்வுப் பயணம் முக்கியமான சில கல்வெட்டுக்களை
நேரில் பார்க்க வேண்டும் என்பதும், கல்வெட்டிக்களில் உள்ள சிவநகரம், சிவன், நாகம், வேலன் தொடர்பான
வழிபாட்டின் சுவடுகளை இப்பகுதியில் தேடிக் கண்டறிவதும் ஆகும்.
அதற்கு
முதல் நாள்இரவே கதிர்காமத்திற்குச் சென்று தங்கி விட்டு காலையில் சித்தர் மலைக்குச்
சென்றேன். இது மலைகளும், காடும் நிறைந்த வனப்பகுதி. குடியிருப்புக்கள் எதுவும்
இங்கு இல்லை. இவ்விடம் வனவிலங்குகள் சரணாலயத்தின் உள்ளே இருப்பதால்
குடியிருப்புகள் அமைக்க அனுமதி இல்லை. யாத்திரீகர்கள் மட்டுமே இங்கு செல்ல
அனுமதிக்கப்படுகின்றனர்.
அன்றும் “வந்தனா” பஸ்களில்
பெளத்த யாத்திரீகர்கள் வந்து கொண்டே இருந்தனர். சிலர் தமது சொந்த வாகனங்களில்
வந்து கொண்டிருந்தனர். நான் சென்ற ஆட்டோவை வாகன தரிப்பிடத்தில் இருக்கச் செய்து
விட்டு மலைப்பகுதிக்கு முன்னேறினேன்.
வாகன தரிப்பிடத்தின் முன்பக்கம்
சிறிய குளமும், அதன் இடது பக்கம் மலையும், இவற்றிற்கு நடுவில் பாதையும்
அமைந்திருந்தன. மலையின் உச்சியில் தூபி கட்டப்பட்டுள்ளது. தூபிக்குச் செல்வதற்கு மலையின் முன்பக்கம் வடக்கு வாசல் படிகள் காணப்படுகின்றன. படிகளின் முன்பக்கம் மலை அடி வாரத்தில் ஓர் கற்குகை காணப்பட்டது. இதில் இயற்கையாக உட்குழிவாக அமைந்த பாறையின் முன்பக்கம் களிமண், செங்கல் கலந்து சுவர் அமைத்து பிக்குகள் தியானம் செய்யும் இடமாகப் பயன் படுத்தப் பட்டுள்ளது.
வடக்கு வாசல் படிகள் மூலமாக தூபி அமைக்கப் பட்டிருக்கும் உச்சிப் பகுதிக்கு ஏறினேன்.அங்கிருந்து பார்த்தபோது அந்தப் பிரதேசத்தின் சுற்று வட்டாரம் முழுவதும் தெரிந்தது. ஒரு பக்கம் தென்பகுதிக் கடலும், அடுத்த பக்கம் மலைகளும், காடுகளும் இயற்கை அழகை அள்ளித் தந்து கொண்டிருந்தன. சுத்தமான குளிர்ந்த காற்று உடலை வருடிச் சென்றது. சற்று தூரத்தில் காணப்பட்ட இன்னுமோர் மலை உச்சியில் ஓர் சிறிய தூபி காணப்பட்டது. அது "குடா சித்துள் பவ்வ" (சிறிய சித்தர் மலை) என அழைக்கப்படுகிறது.
மலை உச்சியின் அடுத்த பக்கம் இறங்குவதற்கு தெற்கு வாசல் படிகள் அமைக்கப்பட்டிருந்தன. மலையின் இடது பக்கம் அமைந்துள்ள பிரதான பெரிய கற்குகையில் சிலைமனை உள்ளது. மலையின் வலது பக்க
அடிவாரத்தில் பாதையின் ஓரமாக இரண்டு நீர்ச் சுனைகள் காணப்பட்டன. அதில் இரண்டாவது
நீர்ச்சுனையின் அருகில் மலைச்சாரலில் முதலாவது கல்வெட்டைக் கண்டேன். இங்கு
பாறையில் வெவ்வேறு காலங்களில் பொறிக்கப்பட்ட மூன்று கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில்
ஒன்று நான் தேடி வந்த மிக முக்கியமான கல்வெட்டு. அதுதான் “சிவநகர” எனும் பெயர்
பொறிக்கப்பட்ட கல்வெட்டு.
சித்தர் மலைப்
பகுதியில் சிவ வழிபாடு நிலவிய முக்கிய நகர மொன்று பண்டைய காலத்தில் இருந்துள்ளது.
இது "சிவநகரம்" என அழைக்கப்பட்டுள்ளது. இச்சிவநகரம் பற்றிய பிராமிக் கல்வெட்டே பிரதான தூபியின் தெற்குவாசல் படிக்கட்டின் இடது பக்கம் உள்ள பாறையில்
பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பொ. ஆ. 35-44 காலப்பகுதியில் இலங்கையை
ஆட்சி செய்த ஈழநாகன் எனும் மன்னன் பொறித்த கல்வெட்டாகும்.
கல்வெட்டாய்வாளர் C.W.நிக்கலஸ் இக்கல்வெட்டை
ஆய்வு செய்து அதன் விபரங்களை ரோயல் ஆசியா கழக அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அதன்பின்
பேராசிரியர் எஸ்.பரணவிதான இவ்விபரங் களை Inscription of Ceylon எனும்
நூலின் இரண்டாவது தொகுதியில் பதிவு செய்தார். இக்கல்வெட்டு இரண்டு பகுதிகளாகப்
பிரிக்கப் பட்டு, 9 அடி அகலமும், 20 அடி நீளமும் கொண்டதாக பொறிக்கப் பட்டுள்ளது.
கல்வெட்டின் முதலாம் பகுதியில் 13
வரிகளிலும், இரண் டாம் பகுதியில் 15 வரிகளிலும் எழுத்துக்கள் காணப்படுகின்றன.
இதில் இரண்டாம் பகுதியில் 12 ஆம், 13 ஆம்
வரிகளில் “சிவநகரம்” எனும்
பெயர் பொறிக்கப் பட்டுள்ளது.
இக்கல்வெட்டில்
சித்தர் மலையில் உள்ள வழிபாட்டுத் தலத்திற்கு நிவந்தமாக வழங்கப்பட்ட இடங்களின்
பெயர்கள் பொறிக்கப் பட்டுள்ளன. இதில் 5 வயல்வெளிகளும், 2 குளங்களும், ஒரு
கால்வாயும், 3 ஊர்களும் அடங்குகின்றன. தக்ககாமம், (Dakagama)
கன்னிக்கரைப் பள்ளி, (Kanikarapali) சிவநகரம் (Sivanakaraya) எனும்
ஊர்களே கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளன. இவ்வூர்களில் ஒன்றே சிவநகரம் என அழைக்கப்பட்டுள்ளது.
சிவநகரம் இப்பகுதியில் இருந்த முக்கிய மூன்று நகரங்களில் ஒன்றாக விளங்கியுள்ளது.
இந்நகரில் சிவவழி பாடு நிலவிய சிவன் கோயில் ஒன்றும் இருந்திருக்கலாம் என நம்ப
இடமுண்டு.
சித்துள்
பவ்வ பகுதியில் உள்ள மலைக்குகைகளில் சிவன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட மேலும் 7
பிராமிக் கல்வெட்டுக்கள் காணப் படுகின்றன. இவை இப்பகுதியில் சிவவழிபாடு செல்வாக்கு
பெற்று விளங்கியமையை மேலும் உறுதி செய்கின்றன.
இக்கல்வெட்டின்
முதல் பகுதியில் மருமகன் எனும் தமிழ்ச் சொல் இரண்டு இடங்களில் காணப்படுகின்றது.
1ஆம், 2 ஆம் வரிகளில் இச்சொல் பொறிக்கப்பட்டுள்ளது.5 மேலும்
காக்கை வண்ணன் எனும் தமிழ்ப் பெயர் 1ஆம் வரியில் காணப்படுகிறது. இவற்றைத்
தவிர நாகராஜன் எனும் சொல் இரண்டாம் பகுதியில் 14 ஆம் வரியில் பொறி
க்கப்பட்டுள்ளது. மொத்தமாக நான்கு தமிழ் சொற்கள் இக்கல்வெட்டில் காணப்படுகின்றன.
இதன்படி சிவ வழிபாடும், நாக வழிபாடும் இப்பகுதியில் நிலவியது என்பதற்கு
இக்கல்வெட்டு முக்கிய சான்றாக விளங்குகிறது. இதே பாறையில் மேலும் இரண்டு பிராமிக்
கல்வெட்டுகள் பொறி க்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று நாக மகாராஜன் பற்றி
குறிப்பிடும் கல்வெட்டாகும்.
நான் தேடி வந்த முதலாவது முக்கிய கல்வெட்டைக் கண்ட திருப்தியுடன், உற்சாகத்தோடு அடுத்த கல்வெட்டைத் தேடி முன்னேறினேன்.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று
ஆய்வாளர்
இலங்கை
( வசந்தம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7.30 மணிக்கு இடம்பெறும் "வழிபாடு"
நிகழ்ச்சியில் இலங்கையின் பழமை வாய்ந்த கோயில்கள் பற்றிய எனது தொகுப்பைப்பார்க்கலாம். அல்லது vasantham.lk எனும் இணைய தளத்திற்குச் சென்று "வழிபாடு" நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.)
No comments:
Post a Comment