Wednesday, April 29, 2020

தமிழ் மன்னன் எல்லாளனின் பலம்வாய்ந்த விஜித்தநகரக் கோட்டை



தமிழ் மன்னன் எல்லாளனின் பலம்வாய்ந்த  விஜித்தநகரக்  கோட்டை


இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களில் மிகவும் பலம் வாய்ந்த கோட்டையைக் கட்டிய இரண்டு மன்னர்களில் ஒருவன் எல்லாளன்

 என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                 
 NKS/154      28 April 2020
http://nksthiru.blogspot.com/2020/04/blog-post_41.html



எல்லாள மன்னனின் கோட்டையின் பிரதான வாயில்-இருமலைகளுக்கிடையில் அமைந்திருந்த இடம்

2000 வருடங்களுக்கு முன்பு இலங்கையை 44 வருடங்கள் ஆட்சி செய்த தமிழ் மன்னன் எல்லாளனின் சுவடுகளைத் தேடி இலங்கையின் முதலாவது தலைநகரான அனுராதபுரத்துக்குச் சென்றேன். அங்கு எல்லாள மன்னனின் சுவடுகள் காணப்பட்ட சில இடங்களுக்குச் சென்று ஆராய்ந்த பின் அங்கிருந்து திரும்பும் வழியில் எல்லாள மன்னனின் முக்கிய அடையாச் சின்னமொன்று இருக்கும் இடத்திற்கும் சென்று ஆய்வுகளை நடத்தவேண்டும் என முடிவு செய்தேன். அந்த அடையாளச் சின்னம் தான் விஜித்தநகரக் கோட்டை. எல்லாள மன்னனின் 32 koட்டைகளில் மிகவும் பலம் வாய்ந்த கோட்டை. 

விஜித்தநகரம் தற்போது விஜித்தபுர என அழைக்கப் படுகிறது. கல்குளம், திரப்பனை, மருதங்கடவளை, தோணியாகல் ஆகிய இடங்கள் ஊடாக தம்புள்ளைக்கு செல்லும் வீதியில் தோணியாகல் வரை சென்று அங்கிருந்து விஜித்தபுரத்திற்கு செல்ல வேண்டும். செல்லும் வழியில் தோணியாகல, இஹலகம ஆகிய சந்திகளில் இருந்த வழிப்பிள்ளையாரையும் வணங்கிச் சென்றேன்.

அனுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களைக் கொண்ட வடமத்திய  மாகாணத்தில் சந்தி சந்திக்கு வழிப் பிள்ளையார் கோயில்களைக் காணலாம். ஏனெனில் நமது பிள்ளையார் தான் வடமத்திய மாகாணத்தின் காவல் தெய்வம். இலங்கையில் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களிலும் சிங்கள மக்கள் பெரும்பான்மை யாக வாழ்கிறார்கள். இவ்வேழு மாகாணங்களிலும் ஏழு வெவ்வேறு காவல் தெய்வங்களை சிங்கள மக்கள் வழி படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இஹளகம சந்தியில் இருந்து மேலும் சிறிது தூரம் முன்னோக்கிச் சென்ற போது பிரசித்தி பெற்ற யோத எல கால்வாய் காணப்பட்டது. தாதுசேனன் மன்னன் கட்டிய கலாவெவ குளத்தில் அதி வடமுனையில் இருந்து, வடமேற்குப் பக்கமாக நீரை எடுத்துச் செல்லும் பண்டைய கால்வாயே யோத எல என்றழைக்கப்படுகிறது. இலங்கையை ஆண்ட தாதுசேன மன்னனால் பொ.ஆ. 459 ஆம் ஆண்டு இக்கால்வாய் வெட்டப்பட்டது. கலாவெவ குளத்திலிருந்து அனுராதபுரத்தில் உள்ள திஸ்ஸா வாவி குளத்திற்கு நீரைக் கொண்டு செல்வத ற்காக 87 கி.மீ நீளத்திற்கு இக்கால்வாய் வெட்டப்பட்டது.

கால்வாயைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் நான் தேடிவந்த விஜித்தபுரியை அடைந்தேன். விஜித்தபுரி கலாவெவ குளத்தின் வடபகுதியில் அமைந்துள்ள ஓர் சிறிய ஊர்.  அங்கு பிரசித்தி பெற்ற இடம் விஜித்தபுர ரஜமகா விகாரை எனும் பெளத்த வழிபாட்டுத் தலமாகும். 

அவ்விடத்தை நான் வந்து சேரும் போது நேரம் சரியாக மாலை 4.20 மணி. இருள் சூழ்வதற்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்களே உள்ளன. அதற்குள் எல்லாள மன்னனின் கோட்டையை முழுமையாக ஆராய்ந்து விட வேண்டும் எனும் ஆர்வத்தோடு விகாரையின் முன்பக்கம் இருந்த வாகன தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த சிலரிடம் விசாரித்தேன். அவர்கள் விஜித்தபுரி கோட்டை இருந்த இடம் இதுதான் என்று விகாரை வளாகத்தைக் காட்டினர். 

வாகனத் தரிப்பிடத்தில் ஓர் பண்டைய கட்டிட இடிபாடு காணப்பட்டது. செவ்வக வடிவில் கருங்கல்லில் அமைக்கப் பட்ட கட்டிடத்தின் அத்திவாரமும், நிறுத்தி வைக்கப்பட்ட சில தூண்களும், உடைந்து கீழே விழுந்த நிலையில் சில தூண்களின் துண்டுகளும்  அவ்விடத்தில் காணப்பட்டன. அவற்றைப் பார்த்ததும் கோட்டை  இருந்த இடம் இதுவாகத்தான் இருக்கும் என்பதை யூகித்துக் கொண்டேன்.

பிரதான வாயில் வழியாக விகாரை வளாகத்திற்குள் நுழைந்தேன். அங்கு பெளத்த தூபி, சிலைமனை, சிறிய விஷ்ணு கோயில், பிக்குகள் விடுதி, அரச மரம் ஆகியவை மட்டுமே காணப்பட்டன. இவை எல்லாமே அண்மையில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடங்களாகத் தெரிந்தன.

வைரவர் சிற்பம் கிடைக்கப்பெற்ற கட்டிட இடிபாடு

விகாரை வளாகத்தின் பின் பக்கம் மட்டும் ஓர் பண்டைய கட்டிடத்தின் சிதைவுகள் காணப்பட்டன. சதுர வடிவில் மூன்று அடி உயரமான கருங்கல் அத்திவாரமும், வாசல் படியும், நிறுத்தி வைக்கப்பட்ட சில தூண்கள் மட்டுமே அவ்விடத்தில் காணப்பட்டன. இவற்றின் அருகில் இருந்த தூபியின் முன் பக்கம் இரண்டு காவற்கல் சிற்பங்கள் காணப்பட்டன. இவை ஓர் முனிவரின் வடிவம் போல் தெரிந்தது. வேறு ஒரு இடத் தில் நாக சிற்பமும், வைரவர் சிற்பமும், மேலும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட சில தூண்களும் காணப்பட்டன. இவை யாவும் எல்லாள மன்னனின் கோட்டையின் உள்ளே இருந்த கட்டிடத்தின் சுவடுகளாகும். விகாரை வளாகம் முழுவதும் சுற்றி வந்தேன். ஆனால் நான் தேடிவந்த எல்லாளனின் கோட்டை இடிபாடுகளை எங்கு தேடியும் காணக் கிடைக்கவில்லை. கோட்டை இருந்தமைக் கான எந்த சுவடுகளையும் காணவில்லை. அதற்குள் நேரம் 6 மணியை நெருங்கி விட்டது. 

பழமை வாய்ந்த நாக சிற்பத்தின் உடைந்த துண்டுகள்

இருப்பினும் நம்பிக்கையோடு அங்கிருந்த பிக்குவிடம் கேட்டேன். விஜித்தபுரி கோட்டை இவ்விடத்தில்  தான் இருந்த தாக அறிந்தேன். ஆனால் அதன் இடிபாடுகள் எதையும் காணவில்லையே, அவை எங்கே உள்ளன எனக் கேட்டேன். அப்போது பிக்கு கோட்டை இங்கு தான் இருந்தது, ஆனால் அவை பற்றிய விபரங்களை பெரிய சாதுவிடம் தான் கேட்க வேண்டும் எனக் கூறினார். உடனே நான் அவரை பார்க்க முடியுமா எனக் கேட்டபோது, அவர்  பிரதம விகாராதிபதி இருக்கும் ஆவாச கெயவுக்கு என்னைக் கூட்டிச் சென்றார். அங்கே பிரதம பிக்குவை வணங்கி, அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு விஜித்தபுரி கோட்டை பற்றிக் கேட்டேன். அவர் கோட்டை பற்றிய சில  விபரங்களைக் கூறினார்.

எல்லாளனின் விஜித்தநகரக் கோட்டை போரின் போதே முற்றாக அழிந்து விட்டது. மன்னன் துட்டகைனுனு நான்கு  மாதங்கள் கடும் போர் புரிந்தே இந்தக் கோட்டை யைக் கைப்பற்றினான். அவ்வளவு பலம் வாய்ந்த கோட்டை. மன்னன் போரின் போது தனது வாளைக் கூர்மையாக்க பயன்படுத்திய சாணைக்கல் இன்றும் உள்ளது. துட்ட கைமுனு இக்கோட்டையைக் கைப்பற்றிய பின் இவ் விடத்தில் ஓர் தூபியைக் கட்டினான். அதன் பின்பு அந்தத் தூபி பராக்கிரமபாகு மன்னனால் புனரமைக்கப்பட்டது. அதன் பின்பு 19 ஆம் நூற்றண்டிலேயே இப்போதுள்ள ஏனைய கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஆனால் கோட்டையின் வாசல் மட்டும் எஞ்சியுள்ளது எனக் கூறி, வாருங்கள் காட்டுகிறேன் என்று என்னை முன் பக்கம் அழைத்துச் சென்றார். மகிழ்ச்சியும் ஆவலும் அதிகரித்த நிலையில் கோட்டை வாசலைப் பார்க்க பிரதம பிக்குவோடு  வெளியே வந்தேன். அவர் விகாரை வாசல்  பக்கத்தைக் காட்டி, அதோ அதுதான் கோட்டை வாசல் என்றார். பிக்கு காட்டிய பக்கம் பார்த்த போது ஆச்சரியம் அடைந்தேன்.

அது பாதையின் அடுத்த பக்கம்  அமைந்திருந்த இரட்டை மலைகள். ஒரே அளவிலான இரண்டு மலைகளுக்கும் இடையில் ஓர் பிளவு போன்ற அடிவாரம் காணப்பட்டது. அப்பிளவு தான் கிழக்குக் கோட்டை வாசலாகப் பயன் படுத்தப்பட்டுள்ளது. இம் மலைகள் ஒவ்வொன்றும் சுமார் 400 மீற்றர் நீளமும் 100 மீற்றர் அகலமும் கொண்ட சிறிய மலைகளாகும். 

தமிழர் பாரம்பரியத்தின் முக்கிய புராதன சின்னங்களில் ஒன்றுதான் இந்த விஜித்தநகரக் கோட்டை. இக்கோட்டை பொ.ஆ.மு. 145-101 வரையான 44 வருட காலப்பகுதியில் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த தமிழ் மன்னன் எல்லாளனின் பலம் வாய்ந்த, மிக முக்கிய கோட்டையாக விளங்கியது. 

விஜித்த நகரக் கோட்டையில் நான்கு பக்கங்களிலும் நான்கு வாசல்கள் இருந்தன. இவற்றில் பிரதான வாசலாக இந்த இரு மலைகளுக்கிடையிலான கிழக்கு வாசலே விளங்கியுள்ளது. இதைத் தவிர தெற்கு வாசலும் முக்கிய வாசலாக இருந்து ள்ளது. கிழக்குப் பக்கம் மலைகள் அரணாக இருந்துள்ள அதேவேளை, ஏனைய மூன்று பக்கங்களிலும் மூன்று அகழி கள் அரண்களாக அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் உள்ளே கற்களைக் கொண்டு 18 முழ உயரமான கோட்டைச் சுவர் கட்டப் பட்டிருந்தது. நான்கு வாசல்களிலும் பலமான இரும்புக் கதவுகள் அமைந்து வாசல்கள் பாதுகாக்கப் பட்டிருந்தன. கோட்டை வாசல்களில் காவற் கோபுரங்கள் இருந்தன.

எல்லாள மன்னனின் பல கோட்டைகள் மகாவலி கங்கைக் கரையிலேயே அமைந்திருந்தன. இக்கோட்டைகளை துட்ட கைமுனுவின் படைகள் கைப்பற்றிய பின் அதிலிருந்து தப்பிய எல்லாளனின் தமிழ்ப் படையினர் விஜித்த நகர கோட்டைக்கே வந்து சேர்ந்தனர்.

துட்டகைமுனுவின் பத்து  ராட்சத படைத் தளபதிகளில் வேலுசுமணன் என்பவன் விஜித்த நகரக் கோட்டையின் கிழக்கு வாசலில் குதிரைப் படையுடன் நின்று எல்லாளனின் தமிழர் படையுடன் போர் புரிந்தான். கந்துலன், நந்த மித்திரன், சூரநிமலன் ஆகிய ராட்சத தளபதிகள் தெற்கு வாசலிலும், மகாசேனன், கோதன், தேரபுத்திரன் ஆகியோர் ஏனைய வாசல்களிலும் நின்று தமிழர்களுடன் போர் புரிந்தனர். இவ்வாறு நான்கு மாதங்கள் போரிட்ட பின்பே எல்லாள மன்னனின் விஜித்த நகர் கோட்டையை துட்டகைமுனுவின் படைகளால் கைப்பற்ற முடிந்தது.

மகாவம்சத்தில் இக்கோட்டை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லாள மன்னனின் 32 கோட்டைகளில் 32 வது கோட்டையே விஜித்தநகரக் கோட்டை எனவும், ரோகனை இராச்சியத்தில் இருந்து படைதிரட்டி வந்த துட்டகைமுனுவின் படைகள் 31 கோட்டைளைக் கைப்பற்றிய பின்விஜித்த நகருக்கு வந்து 4 மாதங்கள் போராடிய பின்பே இக்கோட்டையைக் கைப் பற்றி,  பின்பு இங்கிருந்து அனுராதபுரம் சென்றதாகவும்  மகா வம்சம் கூறுகிறது.

 விஜித்த நகரக் கோட்டையை துட்டகாமினியின் படைகள் முற்றுகையிட்ட போது தான் எல்லாளன் இந்தியாவிற்கு ஓலை அனுப்பி தன் மருமகனான பாலுகனுக்கு யுத்தம் பற்றிய செய்தியைத் தெரிவித்தான்.

    வைரவர் அல்லது முனிவரின் சிற்பம்

இங்கு புராதன தமிழர்சைவ பாரம்பரிய எச்சங்கள் சில இன்றும் இங்கு காணப் படுகின்றன. இங்குள்ள விஹாரையில் காணப்படும் வைரவர் சிற்பம் இவற்றில் ஒன்றாகும். பெளத்த விஹாரைகள் எதிலும் காணக் கிடைக்காத இச்சிற்பம் எல்லாள மன்னன் காலத்தில் இங்கிருந்த வழிபாட்டுத் தலமொன்றின் சின்னமாக இருக்கலாம்  என நம்பப்படுகிறது. மிகத்தொன்மை வாய்ந்த உருவ அமைப்பைக் கொண்ட இந்த சிற்பம் ஓர் முனிவரின் சிற்பம் எனவும் கூறப்படுகின்றது.

வாள் சாணை பிடித்த கல்

துட்டகைமுனு எல்லாளனின் படைகளுடன் போர் செய்ய பயன்படுத்திய  வாளைத் தீட்டி கூர்மைப் படுத்திய கருங்கல் ஒன்றும் இங்கிருக்கும் விஹாரையில் காணப் படுகிறது. இது “கட்டு கே கல” என அழைக்கப்படுகிறது.



பண்டைய விஷ்ணு கோயிலின் இன்றைய தோற்றம்

விஜித்தபுர ரஜமஹாவிகாரையில் ஓர் பழமை வாய்ந்த விஷ்ணு கோயிலும் காணப்படுகிறது. இது “புராண ஸ்ரீ விஷ்ணு தேவாலய” என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இதன் காலம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை. விஷ்ணு கோயிலின் வாசல் படிக்கல்கைப்பிடி வரிசை மற்றும் கோயிலின் முன் பக்கம் காணப்படும் இரண்டு கற்தூண்கள் போன்றவை இதன் தொன்மையைக் காட்டு கின்றன. இவற்றைத் தவிர விகாரை வளவில் சிதைந்த சில நாக சிற்பங்களும் காணப்படுகின்றன.

இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களில் மிகவும் பலம் வாய்ந்த கோட்டையைக் கட்டி 44 வருடங்கள் நீதி வழுவாத ஆட்சியை நடத்திய ஒரே மன்னன் எல்லாளன் என்பது குறிப்பிடத்தக்கது.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை 

1 comment:

  1. இதனை ஆங்கிலத்தில் எழுதி யுனசுகோவிற்கு அனுப்புங்கள் ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்டதொல்ணியல்சான்றுகளை உலக மானிடதொல்ணலியல் சான்றாகஏற்று சர்வதேசசொத்தாகப் பராமரிப்பது வழமை.

    ReplyDelete