Tuesday, May 19, 2020

இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிரூபிக்கும் ஐந்து பிராமிக் கல்வெட்டுக்கள்


இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிரூபிக்கும் ஐந்து பிராமிக் கல்வெட்டுக்கள்


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/166  19 மே 2020





சிவ பூமியின் சுவடுகளைத் தேடி ஆராயத் தொடங்கிய கால கட்டத்தில் நான் அதிகப்படியாக ஆராய்ந்த ஓர் நூல் என்றால்  அது பேராசிரியர் பரணவிதான பதிவு செய்த பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றிய முதலாவது நூலாகும்.
இந்நூலில் இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட சுமார் 1500 பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றிய விபரங்களை பரணவிதான பதிவு செய்துள்ளார். இவற்றில் 5 கல்வெட்டுக்களில் தமிழர் மற்றும் தமிழரின் சமூகப் பிரிவுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2300 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழ் ஒரு பேச்சு மொழியாக வழங்கியமைக்கு இக்கல்வெட்டுக்கள் ஆதாரமாய் அமைகின்றன.

தமிழ் தமெத எனப் பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுக்கள்

இலங்கையில் கிடைக்கப்பெற்ற பிராமிக் கல்வெட்டுக்களில் 5 கல் வெட்டுக்களில் தமெத எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. தமேத என்பது தமிழ் என்பதன் பிராமி வடிவமாகும். இக்கல்வெட்டுக்களின் காலம் பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு வரையாகும்.

இவற்றில் வட மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்தில் 2 கல்வெட்டுக்களும், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 1 கல்வெட்டும், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் 1 கல்வெட்டும், வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்தில் 1 கல்வெட்டும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு சான்றுகள் மூலம் 2000 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதியாகிறது.
தமிழர் எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ள ஐந்து கல்வெட்டுக்கள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெரிய புளியங்குளம் கல்வெட்டு-1

வவுனியா நகரின் வடகிழக்கில் 13 கி.மீ தொலைவில் உள்ள பெரிய புளியங்குளம் எனும் இடத்தில் உள்ள குளத்தின் அருகில் உள்ள மலைக்குகைகளில் மொத்தமாக 38 பிராமிக் கல்வெட்டு க்கள் காணப்படுகின்றன.









இவற்றில் 2 கல்வெட்டுக்களில் தமிழர் எனும் சொல் பொறிக்கப் பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் தமெத வனிஜ கபதி விசகஹ லேன என பொறிக்கப்பட்டுள்ளது. இதை பேராசிரியர் பரணவிதான The cave of the householder Visakha, the Tamil Merchant” என மொழி பெயர்த்துள்ளார். இது தமிழ் வணிகனான குடும்பத் தலைவன் விசாகனின் குகை எனப் பொருள்படும். இக்கல்வெட்டு Inscriptions of Ceylon-Volum 1 எனும் நூலில் 356 வது கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

பெரிய புளியங்குளம் கல்வெட்டு-2

பெரிய புளியங்குளத்தில் காணப்படும் இரண்டாவது கல்வெட்டில் தமெத வனிஜ கபதி விசகஹ செனி கெமே எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இதை The work of the flight of steps is of the householder Visakha, the Tamil Merchant” என பேராசிரியர் பரணவிதான  மொழி பெயர்த்துள்ளார்.

 








இது தமிழ் வணிகனான குடும்பத் தலைவன் விசாகனால் படிகளில் செய்யப்பட்ட வேலைஎனப் பொருள்படுகிறது. இக்கல் வெட்டு Inscriptions of Ceylon-Volum 1 எனும் நூலில் 357 வது கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேருவில கல்வெட்டு

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் நகரின் தெற்கில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சேருவில என்னுமிடத்தில் ஓர் கல்வெட்டு காணப்படுகிறது. இதில் பத மகாதிசஹ கபதி தமெத சுடஹக லேன என பொறிக்கப்பட்டுள்ளது. இதை The cave of Lord Mahatisa and the Tamil house holder Cuda” என கல்வெட்டாய்வாளர் மாலினி டயஸ் மொழி பெயர்த்துள்ளார். இது சுவாமி மஹதிசவினதும் தமிழ் குடும்பத் தலைவன் சுட்டவினதும் குகை எனப் பொருள்படுகிறது. இக்கல்வெட்டு Epigraphical Notes 1-18. எனும் நூலில் 2886 வது கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இக்கல்வெட்டின் படி எடுக்கப்பட்ட படம் நூலில் காணப்படவில்லை.

குடிவில் கல்வெட்டு

அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகரின் தெற்கில் 13 கி.மீ. தொலைவில் உள்ள இறக்காமம் குளத்தின் அருகில் அமைந்துள்ள குடிவில் என்னுமிடத்தில் ஓர் இக்கல்வெட்டு காணப்படுகிறது.







இக்கல்வெட்டில் திகவாபி பொரண வனிஜஹ .....ய புதஹ பரியய தமெத திசய லேன எனப் பொறிக்கப்பட்டுள்ளது.இதை பேராசிரியர் பரணவிதான The cave of the Merchants who are the citizens of Dighavapi, of the sons of .. .. .. and of the Wife Tissa, the Tamil” என மொழி பெயர்த்துள்ளார்.
இது தீகவாபியின் குடிமகனான தமிழ் வணிகன் .... திசவின் குகை”​ எனப் பொருள்படுகிறது. இக்கல்வெட்டு Inscriptions of Ceylon-Volum-1 எனும் நூலில் 480 வது கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனுராதபுரம் கல்வெட்டு

அனுராதபுரம் புராதன நகரில் உள்ள அபயகிரி விஹாரைப் பகுதியில் தமிழ் குடும்பத் தலைவன் பற்றிய ஓர் பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது.






இக்கல்வெட்டில் இல்லுப் பரதஹி  தமெத சமனே கரிடே தமெத கஹபதிக்கன பசதெ சகச அசன நசடச அசன க.. .. .. திசஹ அசன .. .. அசன குபிர சுஜதஹ நவிக கரவஹ அசன எனப் பொறிக்கப் பட்டுள்ளது. இதை பேராசிரியர் பரணவிதான “The Terrace of the Tamil house holders caused to be made by the Tamil Samana of Ilubarata The seat of Saga The seat of Nasata The seat of Ka…Tissa The seat of Kubira Sujata The seat of Karava the mariner” என மொழி பெயர்த்துள்ளார். இது இல்லு பரதனான தமிழன் சமன மூலம் அமைக்கப்பட்ட தமிழ் குடும்பத் தலைவனின் மடம். சகவின் ஆசனம், நசடவின் ஆசனம், க...திசனின் ஆசனம், .. .. ..ஆசனம், குபிர சுஜாதாவின் ஆசனம், கப்பலோட்டி கரவனின் ஆசனம் எனப் பொருள்படுகிறது. இக்கல்வெட்டு Inscriptions of Ceylon-Volum-1 எனும் நூலில் 94 வது கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் 2500 க்கும் மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்ற பொழுதிலும் அவற்றிலே சிங்களவர் பற்றிய குறிப்பெதுவும் காணப்படவில்லை. சிங்களர் என்ற இனம் பிராமிச் சாசனங்கள் எழுதப்பட்ட காலத்தில் உருவாகியிருக்கவில்லை என்று கருத வேண்டியுள்ளது என பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தனது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் இலங்கையில் தமிழருக்கு மிக நீண்ட வரலாறு உண்டு என்பதற்கு வலுவான ஆதாரங்களாய் இக்கல்வெட்டுக்கள் ஐந்தும் அமைகின்றன.

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                         
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை


No comments:

Post a Comment