Wednesday, May 6, 2020

இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டும், அது இருட்டடிப்பு செய்யப்பட்டமையும்



இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டும், அது இருட்டடிப்பு  செய்யப்பட்டமையும் 

   

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                           
 NKS/159      6  மே  2020



சில வருடங்களுக்கு முன்பு “மவ்பிம” எனும் சிங்கள பத்திரிகையில் ஓர் முக்கியமான தகவலைப் படித்தேன். ஞாயிற்றுக்கிழமை  மவ்பிம பத்திரிகையில் இலங்கை வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான கட்டுரைகள் வரும். எனவே ஒவ்வொரு ஞாயிறும் மவ்பிம பத்திரிகையை வாங்கி வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

அன்று நான் படித்த தகவல் இதுவரை நான் தெரிந்திராத, புதுமையான, ஆனால் முக்கியமான தகவலாக இருந்தது. அக்கட்டுரையை ஓர் சிங்கள ஆராய்ச்சியாளர் எழுதியிருந்தார். அதில்  இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள் பல இலங்கையில் காணப்படுவதாகவும், அவை வேண்டுமென்றே மறைக்கப்பட்டு விட்டதாகவும், அவற்றில் ஒன்றை மட்டும் பேராசிரியர் பரணவிதான தனது நூலில் பதிவு செய்துள்ளதாகவும், அதில் உள்ள இராவணனின் பெயரை மறைத்து வேறு பெயரைப் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். அக்கல்வெட்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ளதாகவும், இடத்தைக் குறிப்பிட்டால் அக்கல்வெட்டை அழித்து விடுவார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயத்தைப் படித்தவுடன் ஆச்சரியமாக இருந்தது. நம்ப முடியாமலும் இருந்தது. ஏனெனில் நான் அறிந்தவரையில் இராவணனின் பெயர் எந்த பிராமிக் கல்வெட்டிலும் இல்லை.. பேராசிரியர் பரணவிதான பதிவு செய்த அம்பாறை மாவட்ட கல்வெட்டுக்களை ஏற்கனவே ஒவ்வொன்றாக  ஆராய்ந்து, அவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்பை படித்துள்ளேன். எனவே இங்கு குறிப்பிட்ட அந்த கல்வெட்டின் படியெடுக்கப்பட்ட பிரதியை வாசித்துப் பார்த்து உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும் என எண்ணினேன்.

பேராசிரியர் பரணவிதானவினால்  அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட  பிராமிக் கல்வெட்டுக்களின் படியெடுக்கப்பட்ட பிரதிகளை ஒவ்வொன்றாக வாசித்து இராவணன் பெயர் உள்ளதா எனப் பார்க்க வேண்டும் என எண்ணி, ஒவ்வொன்றாக வாசிக்கத் தொடங்கினேன். அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 164 பிராமிக் கல்வெட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் வாசித்து முடிக்க இரண்டு, மூன்று நாட்களாகும். ஞாயிற்றுக் கிழமை மதிய உணவின் பின் ஒவ்வொன்றாக வாசிக்கத் தொடங்கினேன். பதிவு செய்யப்பட்ட எல்லாக் கல்வெட்டுக்களின் படியெடுக்கப்பட்ட பிரதிகளும் நூலில் காணப்படவில்லை. சில கல்வெட்டுக்களின் பிரதிகள் விடுபட்டிருந்தன.

















பிராமி எழுத்துக்களை ஒவ்வொன்றாக எழுத்துக் கூட்டித்தான் வாசிக்க முடியும். ஞாயிறு இரவு 12 மணிவரை 75 கல்வெட்டுக்களை  வாசித்து முடித்தேன் ஞாயிறு  ஓடி விட்டது. அடுத்த நாள் திங்கள்கிழமை அலுவலகத்திற்கு சென்றேன். அங்கே வேலை செய்ய முடியவில்லை. நினைப்பெல்லாம் இராவணன் கல்வெட்டு மீதே இருந்தது. எப்படியாவது இன்று கல்வெட்டைக் கண்டு பிடித்து விட வேண்டும் எனும் ஆர்வத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன்.

அலுவலகத்தில் இருந்து வந்ததும் மீண்டும் கல்வெட்டு வாசிப்பைத் தொடர்ந்தேன். இடையில் குளியல், உணவு எல்லாம் முடிந்தது. இரவு இரண்டு மணி அளவில் 100 வது கல்வெட்டை வாசித்தேன். இருப்பினும் இராவணனைக் காணவில்லை.  மனம் தளரவில்லை. இரண்டரை மணியளவில் கண்கள் சொக்கிக் கொண்டிருந்தன. 116 வது கல்வெட்டை வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த மூன்றேழுத்துக்களும் இருப்பது போல் தெரிந்தது. “ ர வ ண “ எனும் எழுத்துக்கள். அது உண்மையா? அல்லது தூக்கக் கலக்கத்தில் தெரிகிறதா? ஆச்சரியத்தில், மகிழ்ச்சியில் மீண்டும் மீண்டும் வாசித்தேன்.  முகத்தை நன்றாகக் கழுவி விட்டு வந்தேன். மீண்டும் வாசித்தேன். ஆம், என் கண்களையே நம்ப முடியவில்லை. கல்வெட்டிலே 5 வது, 6 வது, 7 வது எழுத்துக்கள் ர வ ண எனப் பொறிக்கப்பட்டிருந்தன. உடனே அக்கல்வெட்டின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் பார்த்தேன். அதில் “ர வ ண” என்ற மூன்று எழுத்துக்களுக்குப் பதிலாக “தி ச ஹ” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இராவணனின் பெயர் பொறிக்கப்பட்ட இந்த  பிராமிக் கல்வெட்டு பம்பரகஸ்தலாவை என்னுமிடத்தில் உள்ள மலைக்குகையில்  காணப்படுகிறது. பம்பரகஸ்தலாவ நாகமலை, நாகபர்வத மலை எனும் பெயர்களில் அழைக்கப் படுகிறது. குமண பறவைகள் சரணாலயத்தின் வடகிழக்கு பகுதியில் காட்டின் மத்தியில் நாகமலை அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் இங்கு நாகவழிபாடு நிலவியமையால் இப்பெயர் உண்டானது எனக் கூறப்படுகிறது. எனினும் இம்மலை ஓர் இராட்சத நாகம் படமெடுத்தபடி இருப்பது போன்ற அமைப்பை உடையதால் நாகமலை எனப் பெயர்பெற்றது எனவும் கூறப்படுகிறது.

பண்டைய காலத்தில்  தென்கிழக்கில் இருந்த இராவணனின் முக்கிய உப நகரங்களில் ஒன்றாக நாகமலை விளங்கியிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. இங்கிருந்தே இராவணன் உகந்தை மலை சிவாலயத்தை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளான் எனத் தெரிகிறது. அம்பாறை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள உகந்தைமலை முருகன் கோயிலின் தென்மேற்கில் சுமார் 13 கி.மீ. தொலைவில் பம்பரகஸ்தலாவை எனும் நாகபர்வத மலை உள்ளது.

இங்கு செல்வதற்கு உகந்தைமலையில் இருந்து கூமுனைக்குச் செல்லும் வழியில் 5 கி.மீ பயணம் செய்து அங்கிருந்து தென்மேற்குப் பக்கமாகப் பிரிந்து செல்லும் வண்டிப் பாதையில் 8 கி.மீ காட்டுக்குள் சென்றால் நாகபர்வத மலையை அடையலாம். கதிர்காமத்திற்குப் பாதயாத்திரை செல்லும் போது இம்மலைக்குச் செல்ல முயற்சி செய்தேன். இங்கு செல்வதானால் வன இலாகாவின் அனுமதியுடன், அவர்களின் வாகனத்தில், வழிகாட்டியுடன் செல்ல வேண்டுமாம். எனவே வேறொரு நாளில் செல்வதே சிறந்தது என நினைத்தேன்.

இங்கு கண்டு பிடிக்கப்பட்ட  38 பிராமிக் கல்வெட்டுக்களில் இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் ஒன்றாகும். இக்கல்வெட்டில் பருமக ராவண ஜிதி ஷோகிலி லேன சகஸஎனப் பொறிக்கப்பட்டுள்ளது. இது பெருமகன் இராவணனின் மகள் ஷோகிலியின் குகை எனப்பொருள் படுகிறது.














இக்கல்வெட்டு ஆங்கிலேய ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டு பிற்காலத்தில் பேராசிரியர் பரணவிதாணவினால் ஆய்வு செய்யப்பட்டு ஆங்கிலமொழியில் 1970 ம் ஆண்டு “Inscription of Ceylon Volume-1” எனும் நூலில் 515 வது கல்வெட்டாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அதில் பருமக வணிஜ திசஹ லேன சகஸஎன குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தில் “The Cave of the chief Tissa the merchant is given to the sangha” என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள இராவணன் மற்றும் ஷோகிலி ஆகிய பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. ராவண என்பதற்குப் பதிலாக திஸ்ஸ என எழுதப்பட்டுள்ளது. எனவே இதில் இராவணன் எனும் பெயர் வெளிப்பட்டு விடக் கூடாது என நினைத்தே இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கலாம்

இக்கல்வெட்டின் மூலம் இராவணனுக்கு ஷோகிலி எனும் பெயரில் ஓர் மகள் இருந்தமை தெரிய வருகிறது. ஆனால் இராவணனுக்கு 6 ஆண் பிள்ளைகள் இருந்தது பற்றியே நூல்கள் கூறுகின்றன. எனவே ஷோகிலி எனும் மகள் இராவணனின் மனைவியர் ஒருத்தியின் மகளாக இருக்கலாம்.

இக்கல்வெட்டு மட்டுமல்லாது இராவணனின் தாய், தந்தை, சகோதரர்கள், மகன் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிட்ட கல்வெட்டுக்களும் பலாங்கொடை பகுதியில் காணப்படுவதாக “மவ்பிம” பத்திரிகை கட்டுரை கூறுகிறது.

பம்பரகஸ்தலாவை கல்வெட்டிலே இராவணனின் பெயர் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்டது ஏன்
7000 வருடங்களுக்கு முன்பு தீவிர சிவபக்தனாக இருந்த மாபெரும் சக்கரவர்த்தி இராவணன் இத்தனை தொன்மை வாய்ந்த இராவணனின் பெயர் ஓர் முக்கிய தொல்பொருட் சின்னம் மூலம் உலகிற்குத் தெரியவந்தால், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நாகரீகங்களில் வாழ்ந்தவர்களை விட இராவணன் காலத்தால் முற்பட்டவன் என்பது உறுதியாகி விடும் என்பதனாலா
அல்லது ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டு நூல் வடிவமாகிய மகாவம்சம் போன்ற நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ள விடயங்கள் நிராகரிக்கப்பட்டு விடும் என்பதனாலா
அல்லது இந்நூல்களில் இலங்கையின் முதல் மன்னன் எனக் குறிப்பிடப்பட்டுள்ள விஜயனுக்கு முன்பு இராவணன் என்பவன் இருந்தான் என்ற உண்மை தொல்லியல் ரீதியில் நிறுவப்பட்டுவிடும் என்பதனாலா
அல்லது இதுவரை உலகில் மிகத்தொன்மை  வாய்ந்தவை எனக் கருதப்படும் சுமேரிய கல் வெட்டுக்களை விட இலங்கைக் கல்வெட்டுக்கள் காலத்தால் முற்பட்டவை எனக் கருதப்பட்டு விடும் என்பதனாலா
எதை உண்மையாக்க இராவணன் பெயரை மறைத்தார்கள்? அறிஞர்களும், ஆய்வாளர்களும் சிந்திக்க வேண்டிய விடயம் இது.  

இலங்கையில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களின் ஆகக் கூடிய காலம் இற்றைக்கு 2300 வருடங்களாகும். ஆனால் இராவணனின் காலம் இற்றைக்கு 7000 வருடங்களாகும். எனவே இறைவன் காலத்தில் இக்கல்வெட்டுக்கள் பொறிக்கப்படவில்லை. அப்படியானால் ராவண எனும் பெயர் கல்வெட்டுகளில் எப்படி இடம் பெற்றது.

இராவணன் இறந்த பின்பு இராவணனின் சந்ததியினர், விசு வாசிகள், அரசபிரதானிகள் ஆகியோர் இக்குகைகளைப் பாதுகாத் ததோடு  வழிவழியாகப் பயன்படுத்தியும் வந்ததாகக் கூறப்படுகி றது. இராவணன் மற்றும் அவனது குடும்பத்தினர் இவற்றைப் பயன் படுத்தியதன் நினைவாக இக்குகைகளில் இவர்கள் இராவ ணனையும், மற்றவர்களையும் தெய்வங்களாகப் போற்றி வழி பட்டிருக்க வேண்டும் என்ற ஓர் கருத்தும் உள்ளது. இப்படிப்பட்ட இராவணனின் சந்ததியினர் பொறித்த கல்வெட்டுக்களே இன்று நாம் காணும் இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட பிராமிக் கல் வெட்டுக்கள் என கூறப்படுகிறது.

அதேசமயம் இராவணனின் பிற்கால சந்ததியினர் தமது மூதாதையரான இராவணன் மற்றும் அவனின் உறவினர் ஆகி யோரின் பெயர்களை தங்களுக்கும் சூடிக்கொண்டிருக்கலாம் என வும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படியானவர்கள் பொறி த்த கல்வெட்டுக்களே இவை எனவும் அவர்கள் கூறுகின்றனர். அப்படியானால் இராவணன் பற்றிய நூல்களில் காணப்படும் இரா வணனின் பரம்பரை சற்றும் மாறாமல் தாய், தந்தை, அண்ணன், தம்பிமார், மகன், பணியாளர்கள் என எல்லாப் பெயர்களையும் அச்சொட்டாக இராவணனின் சந்ததியினர் பிற்காலத்தில் தங்களு க்கும் எப்படி  சூடிக்கொண்டிருக்க முடியும் எனும் சந்தேகமும் எழுகிறது. எனவே இராவணனும், அவனது உறவினர்களும், பணி யாளர்களும் பயன்படுத்திய குகைகளை அவனின் சந்ததியினர் வழிவழியாக பாதுகாத்து வந்ததோடு, பிற்காலத்தில் அக்குகைக ளில் அவர்களது பெயர்களை கல்வெட்டுக்களாகப் பொறித்திருப்பர் என்பதே பலரும் ஏற்றுக் கொண்ட விடயமாகும்.  

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

( வசந்தம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
காலை 7.30 மணிக்கு இடம்பெறும்  "வழிபாடு" நிகழ்ச்சியில் இலங்
கையின் பழமை வாய்ந்த கோயில்கள் பற்றிய எனது  நிகழ்ச்சியைப்
பார்க்கலாம். அல்லது vasantham.lk எனும் இணைய தளத்திற்குச்
சென்று  "வழிபாடு" நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.)

2 comments:

  1. why are the inscriptions in Prakrit?

    ReplyDelete
  2. Veddas come from Yakkad race through Kuveni, They esist along with Nagar and Yaakar Ugndamalai Murugan temple is owned by Veddas So is aKthirgmmama Hence the only possibility is the Veddas in 600 BC wanted to say in the Stone inscription they come from Ravana (Yakkra) race. Tamil Brhimi inscrioptionsare found in Srilanka are maximm 800 BC.There isTamil inscriotion in TGissmahrgama.

    ReplyDelete