Friday, May 8, 2020

சிவன் பாதம் பதித்த சிவனொளிபாத மலையும், அதன் வரலாற்று உண்மைகளும் பகுதி 2



சிவன் பாதம் பதித்த சிவனொளிபாத மலையும், அதன் வரலாற்று உண்மைகளும்பகுதி 2

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        
NKS/161    8  மே  2020




சிவனொளிபாதமலையில் சிவவழிபாடு தொடர்பான பல வரலாற்று உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. அவை பற்றி  இந்துக்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு, அங்கு சென்று சிவனின் பாதச் சுவட்டை தொட்டு வணங்கி வரவேண்டும் என்பதால் தான் இவ்வளவு நீண்ட வரலாற்றுக் கட்டுரையை எழுதிகிறேன். இதைப் படிப்பது மட்டுமல்லாமல், அங்கு சென்று வர ண்டும் சிவனொளிபாதமலையின் வரலாற்று உண்மைகள் பற்றி நேற்று நான் பதிவிட்ட கட்டுரையின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பகுதி.

அரேபிய யாத்திரிகர் இபின் பதூதாவின் குறிப்பு

 சிவனொளிபாதம் ஆரம்பத்தில் இந்துக்களின் வழிபாட்டுத்தலமாக இருந்தபோதும் காலத்துக்குக் காலம் பௌத்தர்களின் ஆதிக்கத்தின் கீழும் இருந்துள்ளது. மீண்டும் இந்துக்களின் செல்வாக்கு மேலோங்கியும் காணப்பட்டுள்ளது. பொ.ஆ. 1345 இல் அரேபிய யாத்திரிகரான இபின் பதூதா இலங்கைக்கு வந்தபோது சிவனொளிபாதம் ஆரியச் சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தில் இந்து மதத்தின் செல்வாக்கு பெற்ற இடமாக இருந்துள்ளது. இபின் பதூதா மலையைத் தரிசிக்க ஆரியச் சக்கரவர்த்தியிடம் விருப்பம் தெரி வித்தபோது 15 பிராமணர்களையும், 4 யோகிகளையும், உதவிக்கு மேலும் 50 பேரையும் மன்னன் அவருடன் அனுப்பி வைத்ததாகவும், மலையில் இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் தான் கண்டதாகவும் இபின் பதூதா தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஆரியச் சக்கரவர்த்தியின் காலத்தில் இந்துக்களின் ஆதிக்கத்தின் கீழ் சிவனொளிபாதமலை இருந்தபோதும் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இங்கு வழிபடுவதற்கு எந்த தடையும் இருக்க வில்லை என்பதும் இபின் பதூதாவின் குறிப்பின் மூலம் தெரிகிறது. இபின் பதூதா அரேபியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அரபு மொழியில் எழுதிய நூற்குறிப்புகளில் இத்தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்த பகவானின் இலங்கை விஜயம் பற்றி ஆய்வாளர்களின் கருத்து

சிவனொளிபாத மலையிலுள்ள பாதம் புத்த பகவானுடையது அல்ல என்பது ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொண்ட முடிவாகும். ஏனெனில் புத்த பகவான் இலங்கைக் வரவில்லை என்பதே பல ஆய்வாளர்களின் ஏகோபித்த கருத்தாகவுள்ளது. புத்த பகவான் இந்திய கரையை ஒருபோதும் கடந்ததில்லை எனவும் இந்தியாவின் விந்திய மலைகளுக்கு தெற்கே ஒருபோதும் வரவில்லை எனவும் ஆய்வாளர்கள் பலர் கூறியுள்ளனர். சமகால இந்திய நூல்களிலும் இலக்கியங்களிலும் புத்த பகவான் இந்தியாவிற்கு வெளியே சென்றமை பற்றிய எந்த குறிப்புக்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவனொளிபாத மலையில் உள்ள தெய்வம் பேராசிரியர் பரணவித்தானவின் கருத்து

சிவனொளிபாத மலையில் உள்ள தெய்வம் பற்றி பேராசிரியர் பரணவித்தான இருவேறு கருத்துக்களைக் கூறியுள்ளார். இங்கிருந்த மலைக் கடவுளை மகாயான பௌத்தர்களால் வணங்கப்பட்ட சமந்த பத்திரஎனும் தெய்வம் எனக் குறிப்பிடுகிறார். அதேவேளை இக்கடவுள் ஓர் யக்‌ஷ தெய்வமாகிய சுமண எனவும், சுமண என்பதே  சமன்எனும் தெய்வமாக மாற்றம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுமண எனும் பாளி சொல்லின் சமஸ்கிருத வடிவம் யமன்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவனொளிபாதமலையில் இருக்கும் பௌத்த மலைத்தெய்வம் பற்றியோ, புத்தரின் பாதச்சுவடு பற்றியோ பொ.ஆ. 11 ஆம் நூற்றாண்டு வரை மகாவம்சத்தை தவிர வேறு எந்தப் பாளி நூல்களிலும் எந்தவித குறிப்புகளும் காணப்படவில்லை என பரணவித்தான தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவிலிருந்து இங்குவந்து குடியேறிய பண்டைய சிங்கள மக்கள் வழிபட்ட தெய்வங்களில் சுமணவும், உற்பலவனும் இடம் பெற்றிருக்கின்றனர். பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டில் சிங்கள மக்கள் பௌத்தத்தை தழுவிய பின்னர் (பௌத்த மதத்தோடு இயைபை ஏற்படுத்தும் பொருட்டுத்தான்) மகாவம்சத்தில் இத்தெய்வங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் கட்டுக் கதைகள் இணைக்கப்பட்டன என்று கொள்வதே தர்க்க ரீதியானதாகும்என பேராசிரியர் பரணவித்தான தெரிவித்துள்ளார்.











மகாசுமன் பற்றி பேராசிரியர் சி.க. சிற்றம்பலம்

பரணவித்தானவின் மேற்கண்ட கருத்தாவது சிங்கள மக்கள் பொ.ஆ.மு. 500 ஆம் ஆண்டளவில் வட இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு வந்தபோது வழிபட்ட தெய்வம் சுமண’ (யமன்) என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஆனால், அண்மைக்காலத்திற் கிடைத்த தொல்லியற் சான்றுகள் இத்தகைய வட இந்தியக் குடியேற்றம் வெறும் ஐதீகமே எனவும், பௌத்த மதத்தோடு பரவிய வட இந்தியக் கலாசாரமே இவ்வாறு வட இந்தியக் குடியேற்றமாக இனங்காணப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளன. அத்துடன் பரணவித்தானா கூறும் யமன்என்ற தெய்வம் வட இந்தியக் குடியேற்றம் இங்கு நடை பெற்றதாகக் கருதப்படும் காலத்தில் வட இந்தியாவிலோ அன்றி ஈழத்திலோ ஒரு செல்வாக்குள்ள வழிபாட்டுத் தெய்வமாகக் காணப்படவில்லை. இதனை ஈழத்தப் பிராமிக் கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன. வெறும் திசைக் கடவுளாக விளங்கிய இவ் யமன் மலையுறை தெய்வமாக எழுச்சி  பெற்றதற்கான ஐதீகங்களோ பிற மரபுகளோ சிங்கள மக்கள் பௌத்தர்களாக மாற முன்னர் கடைப் பிடித்த இந்து சமயத்திற் கூடக் காணப்படவில்லை. மாறாகப் பரண வித்தானா வட இந்தியாவிலிருந்து சிங்கள மக்களாற் கொண்டு வரப்பட்ட தெய்வமெனக் குறிக்கும் உப்புல்வன், தமிழ் நூல்கள் கூறும் மாயோனேஎன்பதனை இலக்கிய, தொல்லியற் சான்றுகள் உறுதிப் படுத்துவதால் மகாவம்சம் கூறும் சுமணனை இத்தகைய இந்துத் தெய்வங்களில் ஒன்றாக இனங்கண்டு கொள்வதே பொருத்தமுடைய தாகவுள்ளது.

சிவனொளிபாதம் பற்றி பேராசிரியர் சி.க. சிற்றம்பலத்தின் கருத்து

புத்தரது பாத வழிபாடுபற்றிய மரபும் கூட இந்துத் தெய்வ வழிபாட்டு மரபிலிருந்துதான் பௌத்தத்துடன் இணைந்தது எனக் கொள்ளுவதும் பொருத்தமுடையதாகும். இவ்வழிபாட்டுக்குரிய மலை இன்று சிவனொளிபாத மலைஎன அழைக்கப்படும் மரபைக்  கொண்டு சிலர் இத்தெய்வம் சிவன்எனவும் இங்கு காணப்படும் பாதம் சிவனுடையதே எனவும் கொள்வர். ஆனால் பரணவித்தானாவோ எனில் சிவனொளி என்ற வடிவம் காலத்தாற் பிற்பட்ட வடிவம் என்று கூறி, இதன் மூலம் சிவனுடன் இம்மலையை இணைக்கும் மரபும் பிற்பட்டதே எனவும் எடுத்துக் காட்டியுள்ளார். இதற்கு ஆதாரமாகக் பொ.ஆ. 5ஆம், 6ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட மணிமேகலையிற் காணப்படும் சமனொளி என்ற வடிவத்தைச் சுட்டிக்காட்டி, இது தான் மூல வடிவமெனவும் வாதிடுகின்றார்.
எனினும் கிரேக்க அறிஞரான தொலமியின் பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டிற்குரிய இலங்கை  பற்றிய குறிப்பில் இம்மலை ஒளிபாதஎனக் காணப்படுவதாக எடுத்துக் காட்டும் சின்னத்தம்பி இதன் மூலம் இம்மலையைச் சிவனுடன் இணைத்துள்ளார். அவரின் கருத்து யாதெனில் இப்பதத்திற் காணப்படும் ஒளிஎன்பது ஒரு தமிழ் வடிவம் என்பதாகும். சிவன் மட்டுமன்றி முருகனும் ஒளிக் கடவுளே. சிவந்த மேனியரான இவர்கள் மலையுறை தெய்வங்களே.

இராமர், சீதையைப் பார்க்க வந்த சிவன் மலையில் பதித்த பாதம்

சிவனொளிபாத மலையில் உள்ள பாதச்சுவட்டை புத்தபகவான் தனது மூன்றாவது இலங்கை விஜயத்தின் போது மலையில் பதித்துச் சென்றார் என ஐதீகமாகக் கூறப்படுகிறது. பொ.ஆ.மு. 6 ஆம் நூற்றாண்டில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் ஐதீகம். அதே சமயம் சிவன் தனது பாதத்தை மலையில் பதித்தது இராமாயண காலத்தில் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பொ.ஆ.மு.50 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இராம, இராவண யுத்தத்தின் பின், இராமர் சீதையை இராவணனிடமிருந்து மீட்டெடுக்கும் காட்சியைக் காண வந்த சிவன் இம்மலையில் தனது பாதத்தைப் பதித்துச் சென்றார் என ஆய்வாளர் காமினி புஞ்சிஹேவா இராவணன் சம்பந்தமான இடப்பெயர்கள் பற்றிய ஆய்வுக்குறிப்பிலே தெரிவித்துள்ளார்.









எல்லாளன் காலத்தில் சுமணகூட மலை

எல்லாளன் காலத்தில் அவனது படைத்தளபதியான தீகஜந்து என்பவன் மலை உச்சியில்  செங்கம்பளம் விரித்து அழகு படுத்தினான்  எனவும், இங்கிருந்த ஆலயத்திற்கு சிவப்பு நிறக்கூரை அமைத்து தனது நேர்த்தியை நிறைவு செய்தான் எனவும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட இரு குறிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழ் மன்னன் எல்லாளனின் காலத்தில் சுமணகூட மலையில் நிச்சயமாக சிவவழிபாடு நிலவியிருக்க வேண்டும் எனலாம்.

எல்லாளன் காலத்தில் மலையடிவாரத்தில் தமிழ்க் கிராமங்கள்

எல்லாளன் இலங்கையை ஆட்சி செய்த பொ.ஆ.மு. 145-101 காலப் பகுதியில் சிவனொளிபாத மலையில் சிவவழிபாடு நிலவியதோடு இப்பகுதியில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துள்ளமையும் தமிழர்கள் சிவனொளிபாத மலைக்குச் சென்று வழிபட்டு வந்துள்ளமையும் குறிப்புக்கள் மூலம் தெரிய வருகிறது. எல்லாளனை வெற்றி கொண்ட பின்பு துட்டகைமுனுவின் படையில் இருந்த பத்து இராட்ச தளபதிகளில் ஒருவனான தேரபுத்தபயன் என்பவன் சுமண கூட மலைக்குச் சென்று அங்கு ஸ்ரீ பாதத்தை வணங்கி விட்டு கீழே இறங்கி வந்து அங்கு தமிழர்கள் செறிந்து வாழ்ந்த மருகந்தஎனும் தமிழ் ஊரை அழித்து அங்கு தமிழர்களின் ஆதிக்கத்தை இல்லாதொழித்தான் எனவும் நூற் குறிப்புகள் கூறுகின்றன. சிவ னொளிபாத மலைப்பகுதியில் தமிழர்கள் புராதன காலம் முதல் வாழ்ந்து வந்துள்ளமை இதன் மூலம் தெரிய வருகின்றது.

இம் மலையின் உச்சிக்குச் செல்வதற்கு மொத்தமாக ஏழு வழிகள் உள்ளன. இவ்வழிகளில் உள்ள இடப்பெயர்களில் பல பண்டைய காலம் முதல் தமிழ்ப் பெயர்களாக உள்ளமை இங்கு தமிழர்கள் வாழ்ந்தமையை உறுதி செய்கிறது. இரத்தினபுரி-குருவிட்ட வழியில் கிளிமலை, ஆண்டியமலை, ராமகல்லு, குங்குமம், ஊசிமலை, மோகினி அருவி, இராஜமலை ஆகிய இடங்களும் , ஹட்டன் வழியில் நல்ல தண்ணி, சாமி மடம், காசி ஆறு, செம்மடம், உமைச்சாமி மேடம், ஊசி மலை  போன்ற இடங்களும் மலையைச் சுற்றிக் காணப்படுவதால் புராதன காலம் முதல் இப்பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்திருந்தமை இந்த இடப் பெயர்கள் மூலம் உறுதியாகிறது.

சிவனொளி பாத மலையடிவாத்தில் அகஸ்தியர் ஆச்சிரமம்

பொ.ஆ. 9 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இரண்டு சமஸ்கிருத நூல்களில் சிவனொளிபாத மலையில் அல்லது மலைக்குச் செல்லும் வழியில் அகஸ்தியரின் ஆச்சிரமம் இருந்தமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆச்சிரமம் எவ்வளவு காலம் இருந்தது என்பத் தெரியவில்லை. இருப்பினும் பொ.ஆ. 8ஆம், 9ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் அகஸ்தியர் வழிபாடு இங்கு செல்வாக்குப் பெற்று விளங்கியதாகவும், அகஸ்தியர் ஆச்சிரமம் இருந்த இடங்களில் இந்துக்களின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்பட்டதாகவும் சமஸ்கிருதக் குறிப்புகள் மூலம் தெரிய வருகிறது.

சிவனடி பாதம்

சிவனொளிபாத மலை இந்துக்களால் சிவனடி பாதம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் சிவனடி பாதம்என்ற பெயர் பிரசித்தி பெற்று விளங்கியமைக்கான ஆதாரங்கள் உள்ளன. இக்காலப் பகுதியில் சிவனொளிபாத மலையை அண்டிய பகுதிகளில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளில் சிவனடிபாதம் என்ற பெயரே எழுதப் பட்டுள்ளது. நோட்டன் பிரிட்ஜ், மஸ்கெலியா, ஹட்டன் போன்ற இடங்களில் சிவனடி பாதம்என்ற பெயருடன் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை இன்றும் நாம் காணக் கூடியதாகவும் உள்ளது.
மேலும் இக்காலப் பகுதியில் இந்துத் துறவிகளால் பாடப்பட்ட வழிநடைப் பாடல்களில் சிவனடி பாதம்என்ற பெயர் காணப்படுகிறது. சிவனடிபாத வழிநடைச்சிந்துஎன்ற பெயரில் நூல்கள் உள்ளன. சிங்கள மக்கள் இம்மலையை ஸ்ரீபாத என அழைக்கின்றனர். ஸ்ரீபாத என்ற பெயர் இந்துக்களுக்கும் உகந்த பெயராக உள்ளது. இந்துக்கள் பயன்படுத்தும் புனித எழுத்தாக ஸ்ரீ அமைகிறது. ஸ்ரீபாதம் என்பது புனிதபாதம், திருப்பாதம், திருவடி எனப் பொருள் படுகிறது.
தட்சிண கைலாய மான்மியத்தில் சிவனொளிபாதம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவனொளிபாத மலையில் உள்ள சிவனின் பாதத்தின் கீழ் மகாவலி கங்கை, மாணிக்க கங்கை, காவேரி கங்கை ஆகிய மூன்று கங்கைகள் உற்பத்தியாகின்றன எனவும், மகாவலிகங்கை வடக்கு நோக்கிப் பாய்ந்து திருக்கோணேஸ்வரத்தை தரிசித்து கடலில் கலப்பதாகவும், மாணிக்க கங்கை கிழக்கு நோக்கிப் பாய்ந்து கதிர்காமத்தை தரிசித்து கடலில் கலப்பதாகவும், காவேரி கங்கை மேற்கு நோக்கிப் பாய்ந்து மன்னாரில் உள்ள திருக் கேதீச்சரத்தை தரிசித்து கடலில் கலப்பதாகவும் பல நூற்றாண்டுகளுக்கு முன் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
(இன்னும் வரும்..)

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

( வசந்தம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 7.30 மணிக்கு இடம்பெறும் "வழிபாடு" நிகழ்ச்சியில் இலங் கையின் பழமை வாய்ந்த கோயில்கள் பற்றிய எனது  நிகழ்ச்சியைப் பார்க்கலாம். அல்லது vasantham.lk எனும் இணைய தளத்திற்குச் சென்று  "வழிபாடு" நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.)

No comments:

Post a Comment