Saturday, May 30, 2020

மிகுந்தலையில் இந்து சமயம்-பகுதி 2 கந்தக்க தூபியில் இருந்த நந்தியும், பிள்ளையாரும் எங்கே?


மிகுந்தலையில் இந்து சமயம்-பகுதி 2

கந்தக்க தூபியில் இருந்த நந்தியும், பிள்ளையாரும் எங்கே


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/170     30  மே 2020



குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளில் பல எனது அடுத்த நூலில் இடம்பெற உள்ளன. எனவே எனது அனுமதி இல்லாமல் யாரும் இவற்றை தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

நேற்றைய தொடர்ச்சி....
மிகுந்தலையில் உள்ள கந்தக்க தூபியில் பிள்ளையார் சிற்பத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். மொத்தமாக உள்ள நான்கு வாசல்களில் மூன்று வாசல்களில் தேடி விட்டேன். அங்கு பிள்ளையார் சிற்பத்தைக் காணவில்லை. கடைசியாக எஞ்சியிருப்பது கிழக்குத் வாசல் மட்டுமே.
சிவசிவா, அந்த சிலையை நான் பார்க்க வேண்டும், அது அகற்றப் பட்டிருக்கக் கூடாது என சிவனை மனதில் வேண்டிய வண்ணம், எஞ்சியிருந்த கிழக்குத் திசை வாசலை நோக்கி விரைவாகச்  சென்றேன்......

இந்த வாசலும் நன்கு பேணப்பட்ட ஓர் வாசலாகும். இடது பக்கம் இருந்த தூணின் உச்சியில் யானையின் சிலை காணப்பட்டது. அதன் இடது பக்கம் உள்ள முதலாவது முகப்பில் அடிமுதல் நுனிவரை மிகவும் உன்னிப்பாக, அவசரமில்லாமல் பிள்ளையார் சிற்பத்தை தேடினேன். காணவில்லை. அடுத்தது இரண்டாவது முகப்பு, அடியில் இருந்து நுனிவரை பிள்ளையாரைக் காணவில்லை. மூன்றாவது முகப்பிலும் இல்லை. இப்போது நெஞ்சு படபடத்தது. அழுகை வருவது போல இருந்தது. அடக்கிக் கொண்டேன். உண்மையிலேயே பிள்ளையார் சிற்பத்தை அகற்றி விட்டார்களோ!
தூணின் உச்சியில் இருந்த நந்தி சிலையை சுத்தியலால் தட்டி தனியாகக் கழட்டி விடலாம். அது மிகவும் சுலபமான வேலை. ஆனால் பிள்ளையார் சிற்பத்தை அவ்வளவு சுலபமாக உடைத்து அகற்ற முடியாது. கழட்டி எடுக்கவும் முடியாது. ஏனெனில் அது ஓர் புடைப்புச் சிற்பம். கல்லின் மேற்பரப்பில் முழுமையாகப் பதிந்துள்ள சிற்பம். எனவே அவ்வளவு சுலபமாக அதை உடைத்து அகற்ற முடியாது. 

  

முயற்சியைக் கைவிடவில்லை. நான்காவது முகப்பில் அடிமுதல் ஒவ்வொரு வரியாகத் தேடினேன். கீழிருந்து மேலாக பார்த்துக் கொண்டே போனேன். பிள்ளையார் இல்லவே இல்லை. இன்னும் ஒரே ஒரு முகப்பு தான் எஞ்சியிருந்தது. அது கிழக்கு வாசலின் வலது பக்கத் தூணின் அருகில் உள்ள கடைசிப் முகப்பு.
கந்தக்க தூபியில் உள்ள இந்த வாசல் பகுதி 25 அடி உயரமானது. நான்கு வாசல்களின் முன்பக்கம் 4 அடி உயரமான நீள்சதுர ஆசனக்கல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து வாஹல்கட எனும் வாசல் காணப்படுகிறது. இதில் நிலமட்டத்தில் இருந்து 5 அடி உயரத்தில் அதிஷ்டானம் அமைந்துள்ளது. அதற்கு மேல் பகுதியில் ஒன்றரை அடி அளவில் முதலாவது வரி காணப்ப டுகிறது. இந்த வரியில் வரிசையாக யானை, தாமரைப்பூ, யானை எனும் வரிசையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதன் மேல் பகுதியில் ஒவ்வொன்றும் ஒரு அடி உயரமான 2 ஆம், 3 ஆம்,  4 ஆம் வரிசைகள் காணப்படுகின்றன. இம்மூன்று நிரைகளிலும் சிற்பங்கள் எதுவும் செதுக்கப்படவில்லை. அதற்கு மேல் பகுதியில் ஒன்றரை அடி உயரத்தில் உள்ள 5 ஆம் வரிசையில் மேல் நோக்கிய வண்ணம் போதிகை, தாமரைப்பூ, போதிகை எனும் அளவில் சிற்பங்கள் உள்ளன. அதற்கு மேற்பகுதியில் ஒரு அடி உயரத்தில் 6 ஆம், 7 ஆம் வரிசைகள் உள்ளன. இவ்விரண்டு வரிசைகளின் நடுப்பகுதியில் சிறிய அளவில் அன்னப்பட்சிகளின்  சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதற்கும் மேற்பகுதியில் உள்ள   8 ஆவது நிரையில் சிறிய அளவில் பூத கணங்கள் வரிசையாக இருப்பது போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மொத்தமாக எட்டு வரிசைகள். அதற்கும் மேற் பகுதியில் இரண்டு பக்கங்களிலும் உள்ள தூண்களுக்கு அருகில் உள்ள முகப்பில் இரு தேவ கோஷ்டங்கள் காணப்படுகின்றன. அதில் உட்கார்ந்த வண்ணம் இரண்டு பெண் தெய்வச் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. சப்த கன்னியருக்குரிய இத்தெய்வச் சிலைகளின் தலைகள் காணப்படவில்லை.






இலங்கையிலேயே அதிகமான கோயில்களில் காணப்படும் தெய்வம் பிள்ளையார். ஒரு ஊரில் எந்த தெய்வத்துக்கு கோயில் இல்லாவிட்டாலும் நிச்சயமாக பிள்ளையாருக்கு கோயில் இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பு மிக்க, வரலாற்று முக்கியத்துவம் மிக்க பிள்ளையார் சிற்பத்தைக் கந்தக்க தூபியில் கடைசி முயற்சியாகத் தேடினேன். இப்போது கிழக்கு வாசலின் வலது பக்கத் தூணின் அருகில் உள்ள கடைசிப் முகப்பில் மட்டும் பிள்ளையார் சிற்பம் உள்ளதா எனப் பார்க்க வேண்டி உள்ளது.

இந்தப் முகப்பில் அடியில் இருந்து மேல் நோக்கிப் ஒவ்வொரு வரியாகத் தேடினேன். முதல் வரியில் யானைகளும், தாமரைப் பூக்களுமே செதுக்கப்பட்டிருந்தன. பிள்ளையார் சிற்பம் இல்லை.
2 ஆம், 3 ஆம்,  4 ஆம் வரிகளில் தேடினேன்.  இல்லை. 5 ஆவது வரியில் போதிகை. தாமரைப்பூ ஆகியவை காணப் பட்டன. பிள்ளையார் சிற்பம் இல்லை. 6 ஆம், 7 ஆம் வரிகளில் உன்னிப்பாகப் பார்த்தேன். சிறிய அன்னப்பட்சிகளின் சிற்பங்கள் காணப்பட்டன. மனம் சோர்வடைந்தது. கண்கள் களை இழந்தன. என்னை அறியாமலே கண்ணில் நீர் பெருகியது. தலையை அண்ணாந்து பார்த்துக் கொண்டே வந்ததில் கழுத்து வலித்தது. பிள்ளையாரைக் காணவில்லையே.

கந்தக்க தூபியில் நான்கு திசைகளிலும் ஒவ்வொரு வாசல். மொத்தமாக நான்கு வாசல்கள். ஒவ்வொரு வாசலிலும் 5 முகப்புகள் மொத்தமாக 20 முகப்புகள். ஒவ்வொரு முகப்பிலும் எட்டு வரிசைகள். மொத்தமாக 160 வரிசைகள். இதுவரை 159 வரிசைகளில் தேடி விட்டேன். பிள்ளையார் சிற்பத்தைக் காணவில்லை.
இன்னும் ஒரே ஒரு வரி உள்ளது. கடைசி வரி. உயரத்தில் உள்ளது. சுமார் 15 அடி உயரம். அண்ணாந்து பார்த்தேன். எல்லா பக்கங்களிலும் உள்ளது போல அந்த வரிசையிலும் சிறிய பூதகணங்கள் வரிசையாகக் காணப்பட்டன. இடமிருந்து வலமாக எண்ணிக் கொண்டே வந்தேன். மொத்தமாக 12 பூதகணங்கள். மீண்டும் வலமிருந்து இடமாக பார்த்துக் கொண்டே வந்தேன்.
அந்த பூத கணங்களில் சில முன்பக்கம் தெரியும் வண்ணமும், சில பக்கசாயல் தெரியும் வண்ணமும் அமர்ந்து இருப்பது போல் வடிவமைக்கப் பட்டிருந்தன.

இவற்றிலே முன்பக்கம் தெரியும் வண்ணம் அமர்ந்துள்ள பத்தாவது பூத கணம் சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. அந்த உருவத்தில் முகப்பகுதியில் தும்பிக்கை தெரிவது போல் இருந்தது. நீர் பெருகியிருந்த கண்ணைத் துடைத்து விட்டு உற்றுப் பார்த்தேன். தெளிவாகத் தெரியவில்லை. எனது டிஜிடல் புகைப்படக் கருவியில் அந்த உருவத்தை சூம் செய்து புகைப்படம் எடுத்தேன். எடுத்த அந்தப் புகைப்படத்தை பார்த்தேன்.

பார்த்தவுடன் உடல் சிலிர்த்தது. கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. அது ஆனந்தக் கண்ணீர். சந்தேகமே இல்லை. நான் தேடிவந்த பிள்ளையார் சிற்பம் அதுதான். கந்தக்க தூபியின் கடைசி வாசலில், கடைசி பக்கத்தில், கடைசி வரியில் அது செதுக்கப்பட்டிருந்தது. அப்பொழுது எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை. பல புகைப்படங்களை எடுத்தேன். முன்பக்கம் இருந்த கற்பாறையில் கீழே சாய்ந்து உட்கார்ந்தேன். புகைப்பட கருவியில் எடுத்த படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தேன்.




துதிக்கையுடன், பெரிய இரு காதுகளுடன், இரண்டு கைகளுடன் சம்மணம் கட்டி தொந்தி வயிறுடன் உட்கார்ந்த நிலையில் அந்த பிள்ளையார் சிற்பம் காணப்பட்டது. இடது பக்கம் இரண்டு பூத கணங்களும், வலது பக்கம் நான்கு பூத கணங்களும் கைகளில் பிரசாத பெட்டகங்களை எந்தி, பிள்ளையாரை நோக்கி வணங்கிய வண்ணம் வரிசையாக அமர்ந்து இருப்பது போல அந்த சிற்பத் தொகுதி காணப்பட்டது. மனம் நிறைந்த மகிழ்வோடு பெருமூச்சு விட்டு, சிறிது நேரம் களைப்பாறி விட்டு கந்தக்க தூபி பகுதியில் இருந்த அடுத்த ஆச்சரியமான விடயங்களை ஆராயத் தொடங்கினேன்.



மிகுந்தலையில் இந்துசமய தெய்வங்கள் தொடர்பான சிற்பங்கள் கந்தக்க தூபியின், வாஹல்கட என்றழைக்கப்படும் நான்கு பக்கங்களிலும் உள்ள வாயில்களில் தான் அதிகளவில் செதுக்கப்பட்டுள்ளன. இத்தூபி யாரால், எந்தக் காலப்பகுதியில் அமைக்கப்பட்டது எனும் விபரங்கள் வரலாற்று நூல்களில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் பொ.ஆ.மு 119-109 காலப் பகுதியில் இலங்கை மன்னனாகவிருந்த லஜ்ஜிதிஸ்ஸ எனும் மன்னன் கந்தக்க தூபிக்கு பூஜைகள் நடத்தியது பற்றிய குறிப்புகள் மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளன.

எனவே இவனது காலத்திலோ அல்லது இதற்கு சற்று முந்திய காலத்திலோ கந்தக்க தூபி அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதன்படி மிகுந்தலையில் கந்தக்க தூபி அமைக்கப் பட்ட காலத்தில் அதாவது சுமார் 2200 வருடங்களுக்கு முன்பு இங்கு பிள்ளையார் வழிபாடு செல்வாக்குடன் விளங்கியுள்ளது.

கந்தக்க தூபியில் காணப்படும் இப்பிள்ளையார் சிற்பத்தின் மூலம் தமிழகத்தை விட இலங்கையில் தான் காலத்தால் முற்பட்ட  பிள்ளையார் வழிபாட்டை இங்கிருந்த தமிழர்கள் கடைப் பிடித்துள்ளனர் எனக் கூறக் கூடியதாக உள்ளது. தமிழகத்தில் 1400  ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் காலத்தில் தான் பிள்ளையார் வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது என்பதும், இத்தனை பழமை வாய்ந்த பிள்ளையார் சிற்பம் தமிழ் நாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனால் இலங்கையில் உள்ள மிகுந்தலையில் 2200 ஆண்டுகளுக்கு முன்பே பிள்ளையார் வழிபாடு இருந்துள்ளது.
இதன் மூலம் மகிந்ததேரர் மிகுந்தலைப் பகுதிக்கு வருவதற்கு முன்பே இங்கு விநாயகர் வழிபாடு செல்வாக்குப் பெற்று விளங்கியுள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மிகுந்தலை அமைந்துள்ள வடமத்திய மாகாணத்தின் தொன்மைமிகு காவல் தெய்வம் பிள்ளையார் என்பது குறிப்பிடத்தக்கது.



கந்தக்க தூபியில் விநாயகர் மட்டுமல்லாது நந்தி சிலைகளும், நாகராஜர், சப்த கன்னியர் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. தூபியின் நான்கு பக்கங்களிலும் உள்ள வாகல்கடவில் அமைக்கப்படும் எட்டு கற்தூண்களில் இரண்டு தூண்களில் அழகிய நந்தியின் சிற்பம் காணப்பட்டது. இது இப்பகுதியில் நிலவிய சிவவழிபாட்டின் அடையாளமாகும். மேலும் வாயிலில் நாகராஜனின் இரண்டு சிற்பங்களும் காணப்படுகின்றன. இதன் மூலம் மிகுந்தலைப் பகுதியில் சிவன் மற்றும் நாக வழிபாடுகளும் சிறப்புடன் விளங்கியுள்ளன எனக் கூறலாம்.

மிகுந்தலையில் இது போன்ற இன்னும் பல ஆச்சரியங்கள் உள்ளன.  
(மிகுந்தலை ஆய்வு தொடரும்..) 

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                      
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

No comments:

Post a Comment