Sunday, May 17, 2020

ரம்புக்கனையில் சுவடுகள் கூடத் தெரியாமல் முற்றாக அழிந்து போன மொட்டப்புளிய சிவன் கோயில்



ரம்புக்கனையில் சுவடுகள் கூடத்
தெரியாமல் முற்றாக அழிந்து போன மொட்டப்புளிய சிவன் கோயில்


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/165  17 மே 2020

 
சிவ பூமியின் சுவடுகளைத் தேடி பல தடவைகள் கேகாலை மாவட்டத்திற்குச் சென்றுள்ளேன். அவ்வாறு நான் சென்ற இடங்களில் ஒன்று தான் ரம்புக்கனை. கொழும்பு-கண்டி வீதியிலுள்ள கேகாலையை அடுத்துள்ள கரந்துபான சந்தியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வீதியில் 9 கி.மீ. தூரத்தில் ரம்புக்கணை நகரம் அமைந்துள்ளது.

இன்றைய எனது இலக்கு ரம்புக்கனையில் மெதகொடல்ல என்னுமிடத்தில் உள்ள விகாரை. இங்கு தான் சுமார் 600 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோயில் பற்றிய கல்வெட்டு ஒன்று கிடைத்தது. இக்கோயில் வளாகத்தில் ஓர் கல் நந்தி மற்றும் ஓர் தெய்வத்தின் வெண்கலச் சிலை ஆகியவை கிடைத்துள்ளன. இது ஓர் சிவன் கோயிலாக இருக்க வேண்டும் எனும் சந்தேகமும் எனக்குண்டு.  இக்கோயில் 500 வருடங்களுக்கு முன்பு போர்த்துக்கேய சிப்பாய்களால் அழிக்கப்பட்டுள்ளது. அக்கோயில் பற்றிய கல்வெட்டு குறிப்பை மட்டும் வைத்துக் கொண்டு அதன் சுவடுகளைத் தேடிச் செல்கிறேன்.

வழமை போல அன்றைய தினம் காலையிலேயே ஆய்வுப் பயணத்தைத் தொடங்கினேன். கண்டிக்குச் செல்லும் பேரூந்தில் ஏறி, கேகாலை நகரில் மணிக்கூடு கோபுரத்தடியில் இறங்கினேன். எதிரில் கேகாலை நகர முருகன் கோயில் கோபுரம் கம்பீரமாகக் காட்சியளித்தது. கோயிலின் உள்ளே சென்று முருகனை வணங்கி, இன்றைய ஆய்வுப் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டேன்.  கேகாலை நகரில் இருந்து ரம்புக்கனைக்குச் செல்லும் பேரூந்தில் ஏறினேன். இங்கிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள கரந்துபான சந்தியில் பேரூந்து திரும்பியது. இச்சந்தியை இப்போது பின்னவேல சந்தி என்று அழைப்பதுண்டு. பிரசித்தி பெற்ற பின்னவெல யானைகள் காப்பகம் ரம்புக்கனை வீதியில் தான் அமைந்துள்ளது.

பின்னவெல காப்பகத்தில் அருகில் பேரூந்து நிறுத்தப்பட்டது. பாதையைக் கடந்து 12 யானைகள் செல்வதைக் கண்டேன். பக்கத்தில் உள்ள மகா ஓயா ஆற்றில் குளிப்பதற்காக யானைகள் அழைத்துச் செல்லப்படுகின்றன. 5 நிமிடத்தில் பேரூந்து அங்கிருந்து கிளம்பியது.

பேரூந்தில் எனக்குப் பக்கத்தில் இருந்த சிங்கள நடுத்தர வயதுடைய ஒருவர் என்னைப் பார்த்து சிரித்தார். கேகாலையில் என்னோடு ரம்புக்கனை பேரூந்துக்காக காத்து நின்றவர். நீங்கள் ரம்புக்கனையா என்று கேட்டார். இல்லை கொழும்பு என்றேன். அவர் ரம்புக்கனையாம். மகளை டியூஷனுக்கு விட்டு விட்டு வாராராம். ரம்புக்கனையில் நண்பர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டார். அப்போது நான் செல்லும் மெதகொடல்ல விகாரை பற்றி விசாரித்தேன். அங்குள்ள டம்பிட்ட விகாரைக்கு போக வேண்டும் என்றேன்.

தனக்கு அந்த இடம் தெரியும் எனவும், அங்கு செல்ல நீங்கள் ரம்புக்கனைக்குச் செல்லத் தேவையில்லை. பின்னவெல மத்திய கல்லூரிக்கு முன்பாக இறங்குங்கள். அங்கிருந்த நடந்தே போகலாம். 500 மீற்றர் தூரத்தில் மெடகொடல்ல விகாரை உள்ளது. ரம்புக்கணையில் இருந்து வந்தால் பெரிய சுற்று, நேரமும் அதிகமாகும் என்றார்.


சிறிது நேரத்தில் பேரூந்து பின்னவெல மத்திய கல்லூரிக்கு அருகில் வந்தது. இவ்விடத்தில் இறங்குங்கள் என்றார் அந்த முன்பின் தெரியாத நல்ல மனிதர். அவருக்கு நன்றி கூறிவிட்டு இறங்கினேன். எனக்கு கையசைத்து டாட்டா காட்டினார். அங்கிருந்த சந்தியில் உள்ள பெயர்ப்பலகையில் மெதகொடல்ல வீதி என எழுதப்பட்டிருந்தது. அவ்விடத்தில் நின்ற முச்சக்கர வண்டி சாரதியிடம் மெதகொடல்ல விகாரை பற்றி விசாரித்தேன். இந்தப்பாதை வழியே நடந்து போகலாம். கொஞ்ச தூரம் தான். ஆட்டோவில் போவதென்றால் எவ்வளவாவது தாருங்கள் என்றார். பேரூந்தில் சந்தித்த முன்பின் தெரியாத அந்த மனிதரைப் பற்றி நினைத்து மனம் நெகிழ்ந்தேன். எனது வேலையை இவ்வளவு சுலபமாக்கி விட்டார். இப்படித்தான் எனது ஆய்வுப் பயணத்தின் போது யாராவது முன்பின் தெரியாதவர்கள் வந்து பெரிய, மறக்க முடியாத உதவிகளை செய்து விட்டுப் போவார்கள்.

மெதகொடல்ல விகாரைக்கு சென்று விட்டு அங்கிருந்து ரம்புக்கனைக்கு செல்ல வேண்டும் எனக் கூறி முச்சக்கர வண்டிக் கட்டணத்தை பேசிக் கொண்டு முன்னேறினேன். 2 நிமிடத்தில் விகாரைக்கு வந்து விட்டேன். அது ஓர் சிறிய விகாரை. வாசலில் ஸ்ரீ சுமனாராம புராண டம்பிட்ட நரேந்திர சிங்க ரஜமகா விகாரை என சிங்கள மொழியில் பெயர்ப் பலகை போடப்பட்டிருந்தது. ஆட்டோவில் இருந்து இறங்கி விகாரை வளாகத்திற்குள் சென்றேன். பழமை வாய்ந்த சில கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஓர் சிறிய டம்பிட்ட விகாரையும், சில கற்தூண்களும் மற்றும் சில புதிய கட்டிடங்களும் காணப்பட்டன.

அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு வயோதிபரிடம் பிக்கு இருக்கிறாரா என விசாரித்தேன். அவர் பிக்குகள் தங்கும் வீட்டைக் காட்டி அங்கு போகச் சொன்னார். அங்கு சென்றேன். ஓர் நடுத்தர  வயது பிக்கு இருந்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இவ்விகாரை வரலாறு பற்றிக் கேட்டேன்.

250 வருடங்களுக்கு முன்பு கண்டியை ஆட்சி செய்த நரேந்திரசிங்கன் கட்டிய விகாரையே இது என்று சொன்னார். அதற்கு சான்றாக உள்ளது தான் நீங்கள் பார்த்த டம்பிட்ட விகாரை  என்று சொன்னார். மற்றும் இந்த விகாரையை நரேந்திர சிங்கன் காலத்தில் இருந்து பராமரித்த பழங்கால பிக்குகளின் பெயரைச் சொன்னார். அத்தோடு நிறுத்தி விட்டார். ஆனால் நான் எதிர்பார்த்த கோயில் பற்றி எதுவும் சொல்லவில்லை.

பின்பு நான் இங்கு கிடைத்த கல்வெட்டு பற்றிக் கேட்டேன். ஆம் இங்கு கிடைத்ததாக சொல்கிறார்கள். ஆனால் அக்கல்வெட்டு எங்கே என்று தெரியவில்லை என்றுசொல்லி விட்டு மீண்டும் மெளனமானார். பிக்கு பிடி கொடுக்காமல் பேசுகிறாரே என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சரி நேராகவே கேட்டு விடுவோம் என்று நினைத்து கேள்வியைத் தொடுத்தேன். சுவாமி இந்தக் கல்வெட்டில் இங்கு இருந்த ஒரு பழமை வாய்ந்த விகாரை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாமே, அது இந்த விகாரையா என்று போட்டு வாங்கினேன். உடனே மெளனத்தை உடைத்துக் கொண்டு வெள்ளம் போல் பாய்ந்தது அவரது வார்த்தைகள்.

ஆம் உண்மைதான். பழமையான விகாரை பற்றிதான் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் அது இருந்த இடம் இதுவல்ல. வாருங்கள் என்று என்னை வெளியே கூட்டிக் கொண்டுவந்து வயல் வெளிப் பக்கமாக காட்டினார் அதோ வயல்களுக்கு அப்பால் தெரியும் மேட்டுப்பகுதி அங்கே தான் அந்த விகாரை இருந்தது. இங்கிருந்து பிரதான வீதிக்கு சென்று மத்திய கல்லூரியிலிருந்து மேலும் சிறிது தூரம் சென்றால் மொட்டப்புளிய சந்தி வரும். அங்கிருந்து உள்ளே சென்றால் ஒரு வத்தை உள்ளது. மடமேவத்த என்று பெயர். அங்கு தான் பழைய விகாரை இருந்தது. ஆனால் இப்போது அங்கு ஒன்றும் இல்லை. அங்கிருந்து கொண்டு வந்த கற்கள் தான் இவை என்று சொல்லி சில கற்தூண்களின் துண்டுகளைக் காட்டினார். பிக்கு மூலமாக கோயில் இருந்த இடத்தை சரியாக அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது.


அங்கிருந்து எடுக்கப்பட்ட வேறு ஏதும் தொல்பொருள் சின்னங்கள் இல்லையா சுவாமி எனக் கேட்டேன். இல்லை என்றார். அவர் எதையோ மறைக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. இருப்பினும் இதுவரை அங்கிருந்த கோயில் பற்றி எதுவுமே சொல்லாதது கவலையாக இருந்தது. நன்றி சுவாமி எனக் கூறிவிட்டு திரும்பினேன். நல்லது கடவுள் காப்பாராக எனக் கூறியவர் கடைசியாக திருவாய் மலர்ந்தார்.

அந்த இடத்தில் மிகுந்த சக்தி இன்றும் இருப்பதாக கிராம வாசிகள் கூறுகின்றனர். காரணம் அங்கு விகாரை கட்டுவதற்கு முன்பு பழமை வாய்ந்த, சக்தி வாய்ந்த ஓர் கோயில் இருந்ததாம். அதனால் அங்கு வீடுகள் எதுவும் இதுவரை கட்டப்படவில்லையாம். என்று கூறினார். நான் எதிர்பார்த்த, எனக்குத் தேவையான விடயத்தை இறுதியில் பிக்கு சொல்லி விட்டார் என்ற மகிழ்ச்சியோடு அங்கிருந்து சென்றேன்.

நான் வந்த முச்சக்கர வண்டியிலேயே ஏறி மொட்டப்புளிய சந்திக்கு சென்று அங்கிருந்து  பிக்கு காட்டிய மடமே வத்தைக்கு போகச் சொன்னேன். 5 நிமிடத்தில் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றது வண்டி. அது பற்றைகள் நிறைந்த சற்று மேடான இடம். கட்டிடங்கள் எதுவும் காணப்படவில்லை. உள்ளே சென்று பார்த்தேன். எதுவும் தென்படவில்லை.    

மொட்டப்புளிய கோயில் பற்றி இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் தொல்பொருட் திணைக்கள ஆணையாளராகப் பணியாற்றிய எச்.சி.பி.பெல் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கையில், ரம்புக்கணை புகையிரத நிலையத்திலிருந்து அரைமைல் தூரத்தில் காணப்பட்ட ஓர் கட்டிட இடிபாடுகள் உள்ள மேட்டுத் திடலில் பாரம்பரியமிக்க பழைய கோயில் ஒன்று இருந்தது பற்றியும், இதன் கற்றூண்களும், கற்கள் சிலவும் இங்கு எஞ்சியிருப்பதாகவும் ஏனையவை அருகிலுள்ள மெதகொடெல்ல விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மேலும் சில கற்கள் கிராம வாசிகளால் வீடு கட்டுவதற்கும், ஏனைய தேவைகளுக்காகவும் பயன்படுத்தப் பட்டதாகவும் தற்போது சில கற்களும், தூண்களுமே எஞ்சிக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இக்கோயில் அமைந்திருந்த மேட்டுத்திடல் உள்ள இடம் கண்டி கந்தசுவாமி கோயிலின் பஸ்நாயக்க நிலமேயின் பொறுப்பில் இருந்ததாகவும், இவ்விடம் ஓர் வாழைத்தோட்டமாக மாற்றம் பெற்றிருந்ததாகவும், இங்கிருந்த இரு மேட்டுத் திடல்களில் ஒன்றில் கோயிலும், மற்றையதில் தூபி ஒன்றும் மேலும் சில கட்டிடங்களும் இருந்ததாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு பிற்காலத்தில் களிமண்ணால் கோட்டை மதிலும் அதன் வடக்குப் பக்கத்தில் அகழியும் அமைக்கப்பட்டிருந்ததாகவும், இக்கோட்டை மதிலின் உட்புறம் நேராகவும் வெளிப்பக்கம் 8 அல்லது 10 அடியில் சாய்தளமாகவும் காணப்பட்டதாகவும், இது போர்த்துக்கேயர் மொட்டப்புளியவில் யுத்தம் செய்த காலத்தில் அமைக்கப்பட்டிருந்த காவலரன் ஒன்றின் எச்சம் எனவும் தனது குறிப்பில் எழுதியுள்ளார்.

மொட்டப்புளியவில் கோயில் இருந்தது பற்றி எமக்குக் கிடைக்கும் வரலாற்றுச் சான்றாக அங்கு கிடைக்கப் பெற்ற கல்வெட்டு பற்றியும் பெல் குறிப்பிட்டுள்ளார். இக்கல்வெட்டு பற்றிய விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கினிகொட கோரளையில் மெதமெதிலிய பத்துவில் குடாகம என்ற மெதகொட விகாரையில் இக்கல்வெட்டு உள்ளது. கல்வெட்டின் மேல் பகுதியின் இடது பக்கத்தில் சூரியனும், வலது பக்கத்தில் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழே 11 வரிகளில் சிங்கள மொழியில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில் தெளிவற்ற நிலையில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டில் உள்ள வாசகத்தில் பொருள் பின்வருமாறு, “ஸ்ரீ விஜயபாகு மன்னனின் ஆறாம் ஆட்சியாண்டில் கார்த்திகை மாதம் 15 ஆம் திகதி கிந்திகொட கோரளையில் உள்ள மொட்டப்புளிய கோயிலுக்கு சொந்தமான ஊர்வலம் ஆகியவற்றில் கும்புருகல என்னுமிடத்தைத் தவிர மேட்டு நிலங்கள்..இவ்வாறு வாக்கியத்தின் மிகுதி எழுத்துக்கள் இல்லாமல் இக்கல்வெட்டு காணப்படுகிறது.
இக்கல்வெட்டின் படி இங்கு கோயில் இருந்தமை பற்றியும், இதற்கு ஊர்களும், நிலங்களும் சொந்தமாக இருந்தமை பற்றியும் தெளிவாகத் தெரிய வருகிறது. இக்கோயிலுக்குரிய நிலபுலங்களில் கும்புருகல என்னுமிடத்தைத் தவிர ஏனைய மேட்டு நிலங்களில் ஏதோ ஓர் வேலை செய்வதற்கு அரசனால் கட்டளை இடப்பட்டமையை குறிக்கும் கல்வெட்டாக இது இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. இக்கல்வெட்டு பின்பு கேகாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னன் ஆறாம் விஜயபாகு எனக் கண்டறியப்பட்டுள்ளது. கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலம் பொ.ஆ. 1515 (விஜயபாகுவின் 6 ஆம் ஆட்சியாண்டு) எனவும் அறியப்பட்டுள்ளது. இம்மன்னன் கோட்டை இராச்சியத்தை பொ.ஆ. 1509 முதல் 1521 வரை 12 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்தான்.

மொட்டப்புளிய கோயில், கோட்டை இராச்சியத்தை 55 வருடங்கள் ஆட்சி செய்த 6 ஆம் பராக்கிரமபாகுவால் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இம்மன்னனின் காலத்தில் பல இந்துக் கோயில்கள் கட்டப்பட்டதுடன், ஏராளமான இந்துக் கோயில்கள் புனரமைக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவனது காலம் பொ.ஆ. 1412 முதல் 1467 வரையாகும். இக்காலப்பகுதியிலும்,  இக்காலம் முதல் 6 ஆம் விஜயபாகு காலம் வரையும் இவ்வாலயம் சிறப்புற்று விளங்கியிருக்க வேண்டும் எனவும் நம்ப இடமுண்டு.  

எச்.சி.பி. பெல்லினால் 1892 இல் வெளியிடப்பட்டுள்ள மொட்டப் புளிய கோயில் பற்றிய அறிக்கையில் இக்கோயில் எந்த தெய்வத்திற் குரியது எனக் குறிப்பிடப்படவில்லை. எனினும் இது ஓர் சிவன் கோயிலாக இருக்க வேண்டும் என நம்பக் கூடியவகையில் சில தொல்பொருள் சின்னங்கள் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சில வருடங்களுக்கு முன்பு ரம்புக்கணை நகரசபையினரால்  மைதானம் அமைப்பதற்காக இப்பகுதியில் நிலத்தைக் கிண்டியபோது இந்து தெய்வத்திற்குரிய வெண்கலப் படிமம் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது. அதன்பின்பு 1973 ஆம் ஆண்டு இதே இடத்தில் கருங்கல்லினால் செதுக்கப்பட்ட மிக அழகிய நந்தி சிலையும் கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே இங்கு கோட்டை இராச்சிய காலப்பகுதியில் கட்டப்பட்டது சிவாலயமாக இருக்க வேண்டும் எனக் கருதலாம். நந்தி சிலையுடன் இங்கு மேலும் சில கற்றூண்களும், கற்பீடங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவையாவும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கோயிலுக்குரியவை எனவும், இவ்விடம் தான் இக்கோயில் அமைந்திருந்த இடம் எனவும் உறுதியாகத் தெரியவருகிறது.

மடமே வத்தஎன்றழைக்கப்படும் இவ்விடத்தில் தான் மொட்டப்புளிய சிவன் கோயில் அமைந்திருந்தது. இது மிகவும் சக்திவாய்ந்த இடமாக இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. கண்டி இலங்கையின் தலைநகரமாக இருந்த காலப்பகுதியில் இவ்விடம் கண்டி நாதனார் கோயிலுக்கு அருகிலுள்ள கந்தசுவாமிக் கோயிலுக்குரிய கிராமமாக இருந்தது. இவ்விடத்தில் இலங்கைத் தொல்பொருட் திணைக்களத்தினரால் மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஓர் குறிப்பு கூறுகிறது. இவ்வாய்வுகளின் முடிவில் இங்கிருந்த சிவன் கோயில் பற்றிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொட்டப்புளிய சிவாலயம் அமைந்திருந்த இடத்தின் அருகில் கண்டியை பொ.ஆ. 1706 -1739 வரை ஆட்சி செய்த நரேந்திர சிங்கன் காலத்தில் ஓர் டம்பிட்ட விஹாரை கட்டப்பட்டதாகவும், இதனால் இவ்விடம் பிரசித்தி பெற்று விளங்கியதாகவும் வரலாறு கூறுகிறது. மொட்டப்புளிய சிவாலயம் பொ.ஆ. 16 ஆம்  நூற்றாண்டில்  போர்த்துக்கேயரால் அவர்கள் வந்திறங்கிய ஆரம்ப காலப்பகுதியில் இடித்தழிக்கப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இருப்பினும் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் இது சிறப்புற்று விளங்கியிருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது.

அன்றைய எனது ஆய்வுப் பயணத்தில் மொட்டப்புளிய சிவன் கோயில் பற்றிய பல விடயங்களை அறிந்து கொண்டாலும், அதன் அழகிய நந்தி சிலையையும், வெண்கலச் சிலையையும் பார்க்க முடியவில்லை என்பது ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அடுத்த தடவை எப்படியாவது அவற்றைக் கண்டு பிடிப்பேன் என்ற முழு நம்பிக்கையோடு வீடு திரும்பினேன்.
என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                              வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

No comments:

Post a Comment