Thursday, May 7, 2020

சிவன் பாதம் பதித்த சிவனொளிபாத மலையும், அதன் வரலாற்று உண்மைகளும்-பகுதி 1



சிவன் பாதம் பதித்த சிவனொளிபாத மலையும், அதன் வரலாற்று உண்மைகளும்-பகுதி 1


என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                           
NKS/160      7  மே  2020



இன்று சித்ரா பெளர்ணமி தினம். ஒவ்வொரு வருடமும் சித்ரா பெளர்ணமி தினத்தன்று சிவனொளி பாத மலையில் ஏறி சிவனின் பாதத்தை தொட்டு வணங்கி வருவேன். இந்த வருடம் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. அந்த மனவருத்தத்தோடு இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
22 ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையில் சைவம் மற்றும் தமிழர் பாரம்பரியம் ஆகியவற்றை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்ய வேண்டும் என நான் எண்ணியபோது, முதல் முதலாக என் முழுமுதற் கடவுளான சிவனின் பாதத்தைத் தொட்டு வணங்கி விட்டு இந்தப் பணியை ஆரம்பிக்க வேண்டும் என எண்ணினேன். அதற்கு நான் தேர்ந்தெடுத்த இடம் சிவனொளி பாதமலை. 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதலாவது தடவையாக மலை உச்சிக்குச் சென்று சிவனின் பாதத்தைத் தொட்டு வணங்கி எனது ஆய்வுப் பணியைத் தொடங்கினேன். பின்பு இடையிடையே சென்று வந்தேன். கடந்த சில வருடங்களாக தொடர்ந்து சிவனொளிபாத மலைக்குச் சென்று வருகிறேன்.
ஒவ்வொரு வருடமும் மலையேறும் போது தமிழ் மக்களைக் காணாதது பெரிய மனக்குறையாக இருக்கும். ஓரிருவரைத் தவிர, இலங்கை சைவ மக்கள் சிவனின் பாதத்தை வணங்க சிவனொளிபாத மலைக்கு வருவதில்லை. நான் சிவனொளிபாதம் சென்று வந்த பின் முகநூலில் அந்த விபரங்களைப் பதிவிட்டு தமிழ் மக்களை வரும்படி கூறுவேன். எனது பதிவைப் பார்த்து பலர் என்னோடு தொடர்பு கொண்டு மலைக்குச் செல்வது பற்றி தெரிந்து கொள்வார்கள். சென்று வந்த பின் எனக்கு நன்றி தெரிவிப்பார்கள். 
சிவன், ஒளி, பாதம் இந்த மூன்றையும் ஒரே இடத்தில் தரிசிக்கக் கூடிய இடமே சிவனொளிபாதம். இஇலங்கை சைவ மக்கள்  அனைவரும் அவசியம் சென்று வழிபட வேண்டிய திருத்தலமே சிவனோளிபாத மலையாகும். இம்மலையில் எங்கும் இல்லாத வகையில் சிவ வழிபாடும்,  ஒளி வழிபாடும், பாத வழிபாடும் ஒருங்கே அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். இதன் காரணமாகவே இவ்விடம் சிவன் ஒளி பாதம் எனப் பெயர் பெற்றுள்ளது.













நுவரெலியா மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையில் அமைந்துள்ள
இம்மலை 2243 மீற்றர் உயரமானது. இம்மலையை ஓட்டியே
இரத்தினபுரி மாவட்டத்தின் வட எல்லை உள்ளது. கொழும்பிலிருந்து ஹட்டன் செல்லும் வீதியில் உள்ள கினிகத் தேனையை அடுத்து வரும் கரோலினா சந்தியிலிருந்து தெற்கு நோக்கி நோட்டன் பிரிட்ஜ், லக்சபான, மவுசாக்கல ஊடாக நல்லதண்ணி எனும் மலையடிவாரம் வரை ஓர் பாதை செல்கிறது. இங்கிருந்து கால்நடையாக மலைக்கு செல்ல வேண்டும். இதுவே சிவனொளிபாத மலைக்கு செல்லக் கூடிய இலகுவான பாதையாகும். இன்னுமோர் வழியும் இம்மலைக்குச் செல்வதற்கு உள்ளது. கொழும்பிலிருந்து இரத்தினபுரிக்குச் செல்லும் வழியில் உள்ள குருவிட்ட என்னுமிடத்திலிருந்து கிழக்கு நோக்கி எக்னெலிகொட, எம்புல்தெனிய, குருளுவான ஊடாக பாலபெத்தலே என்னுமிடத்தை அடைந்து அங்கிருந்து கால்நடையாக மலைக்கு செல்வதாகும்.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்து சிவனொளிபாதம் தமிழர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக இருந்து வந்துள்ளது. இலங்கை சைவ  மக்களால் வழிபடப்படும் மலைக்கோயில்களில் மிகவும் உயரமானதும் வரலாற்று சிறப்புமிக்கதும் இம்மலையே. இம்மலையில் புராதன காலத்தில் சிவனாலயம் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. இமய மலைத்தொடரில் உள்ள திருக்கைலாயமலை சிவன் பார்வதியின் வாசல் தலமாகும். லிங்க வழிபாடு நிலவிய காலத்திலிருந்து இம்மலையை இந்துக்கள் தமது புனித மலையாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், இம்மலை லிங்கத்தைப் போன்ற அமைப்பை உடையதாகும். இதனால் இம்மலை சிவனுக்குரிய மலையாக கருதப்படுகிறது. சிவனொளிபாத மலையும் கைலாயமலையைப் போன்ற அமைப்பையுடையதால் திருக்கைலாய மலைக்கு நிகராக இந்துக்களால் வழிபட்டு வந்தது.
சிவனொளிபாதமலை எனும் பதம் சிவனுடைய ஒளியை அடைய வழிகாட்டும் மலை எனப் பொருள்படுவதாகும். இந்துக்கள் முதலில் சிவலிங்கத்தை உருவகப்படுத்தும் மலையை வணங்கி, பின்பு மலை உச்சியை அடைந்து சூரியனை வழிபடுவர். இது ஆதிகாலத்திலிருந்து வந்த சிவசூரிய வழிபாடாகும்.

திருநாவுக்கரசு நாயனாரின் தேவாரப் பதிகங்களில் சிவசூரிய வழிபாடு

சிவசூரிய வழிபாடு பற்றி திருநாவுக்கரசு நாயனார் சிவனைக் குறித்து பாடிய தேவாரங்களில் குறிப்பிட்டுள்ளார். காண்கின்ற கதிரவனும் ஆகி”, “காலை முளைத்த கதிரே போற்றி”, “ஞாயிற்றை ஞான மூர்த்தியை நான் மறக்கிற்பனே”, பரிதியானை”, “விரிகதிரோன் சோற்றுத்துறையார் தாமே”, “பகலானானானைஎன அப்பர் தனது தேவாரங்களில் சிவனையும் சூரியனையும் இணைத்துப் பாடியுள்ளார்.
இதன்படி சிவசூரிய வழிபாடு இந்து மதத்தின் தொன்மையான வழி பாடு என்பதில் ஐயமில்லை. இவ்வழிபாடு மேலோங்கி இருக்கும் இடமே சிவனொளிபாத மலையாகும். இம்மலை உச்சியில் விசாலமான, மனித உருவிற்கு அப்பாற்பட்ட ஓர் பாதச்சுவடு காணப்படுகின்றது. இப்பாதத்தை இந்துக்கள் சிவனின் பாதச்சுவடு எனக்கருதி வழிபடுகிறார்கள். இதன் காரணமாக இது சிவனடிபாதம்எனவும்  அழைக்கப்படுகிறது.

சிவனடிபாதமலையில் இருந்த மகாசுமன்

பௌத்தமதம் அறிமுகமாவற்கு முன்பிருந்தே சிவனொளிபாத மலையில் இந்துக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். புத்தபகவான் இலங்கைக்கு மூன்று தடவைகள் விஜயம் செய்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன.
இதில் முதல் தடவை இலங்கைக்கு வந்தபோது  சிவனொளிபாதமலை இலங்கையின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கியிருந்தது. இம்மலையில் மகாசுமன் எனும் தேவகுமாரன்  இருந்ததாகவும் அவனுக்கு பௌத்த நெறிகளைப் போதிக்க வேண்டியே புத்தபகவானின் முதல் விஜயம் அமைந்திருந்தாகவும் பாளி நூல்கள் கூறுகின்றன.
இதன்மூலம் புத்தர் வருகைக்கு முன்பு சிவனொளிபாதம் ஓர் சிவவழிபாட்டுத் தலமாகவும், இங்கிருந்த மகாசுமன் சிவ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடுடையவனாகவும், இம்மலையிலிருந்த சிவ வழிபாட்டை போதிப்பவனாகவும் இருந்தான் எனக் கூறலாம். இதனை அறிந்த புத்தபகவான் மகாசுமன் போன்ற சிவசூரிய வழிபாட்டை கடைப்பிடிக்கும்  ஒருவனை பௌத்த நெறிக்குள் கொண்டுவருவதன் மூலம் இத்தீவில் உள்ள பலரை இந்நெறியை கடைப்பிடிக்கச் செய்யலாம் என்ற எண்ணத்துடன் சிவனொளிபாதம் சென்று மகாசுமனுக்கு பௌத்த நெறிகளைப் போதித்து சென்றிருக்க வேண்டும்.
புத்தபகவான் தனது மூன்றாவது விஜயத்தின்போது மீண்டும் ஒரு தடவை சிவனொளிபாத மலைக்கு சென்று மகாசுமனின் பௌத்த நெறி மாற்றத்தை உறுதிசெய்து கொண்டதோடு மகாசுமனை பௌத்த மதத் தவர்கள் வணங்க வேண்டுமென்றும் கூறிச் சென்றுள்ளார். அன்று முதல் பௌத்தராக மதம் மாறியவர்கள் சிவனொளிபாதத்திற்குச் சென்று மகாசுமனை வழிபட்டு வந்துள்ளனர். இதனால் இம்மலை பெளத்தர்களால் சுமண கூடபர்வதம்என அழைக்கப்பட்டது.

கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இந்துக்கள் பற்றிய குறிப்புகள்

கி.மு 5 ஆம் நூற்றாண்டில் விஜயன் இலங்கைக்கு வரும்போது இந்நாட்டில் இந்திய குடியேற்ற வாசிகள் இருந்துள்ளதாகவும் இவர்கள் எல்லோரும் இந்துக்கள் எனவும் வரலாற்று ஆசிரியர்களான சேர். வில்லியம் ஜோன்ஸ் கிளப், பெக் கோலொக்கி பென்னெற் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். இதேகாலப்பகுதியில் இங்கு பெளத்தர்கள் இருந்தார்கள் என்பதற்கு எந்தக்குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதன்படி புத்தபகவான் இலங்கைக்கு வந்து சென்ற பின்பும் இங்கு பௌத்தம் பரவவில்லை என்பது புலனாகிறது. புத்தபகவான் இங்கு வந்து  சென்ற காலத்திற்கும் விஜயன் இங்கு வந்த காலத்திற்கு முள்ள இடைவெளி சுமார் 50 ஆண்டுகளே.










புத்தபகவான் விஜயம் செய்து 280 ஆண்டுகளின் பின்பு பரவிய பௌத்தமதம்

இக்காலப் பகுதியில் பௌத்தர்கள் இங்கு இருக்கவில்லை என்பதும் இக்காலப் பகுதியின் பின்பும் சுமார் இரண்டரை நூற்றாண்டுகளுக்கு பௌத்த மதம் இங்கு பரவியிருக்கவில்லை என்பதும் உறுதியாக தெரிகிறது. ஆக, புத்தபிரான் இலங்கைக்கு வந்து சென்று 280 ஆண்டுகளின் பின் தேவநம்பியதிஸ்ஸன் காலத்திலே தான் பௌத்தம் இங்கு பரவியது என்பது சரியான கூற்றாகும்.

எல்லா மதத்தவரும் பின்பற்றும் சூரியவழிபாடு, சூரியதரிசனம்

தற்போது சிவனொளிபாதமலையை இந்துக்களும்,  பௌத்தர்களும் பிற சமயத்தவரும் எந்தவித தங்குதடையுமின்றி வழிபட்டு வருகின்றனர். இது பண்டைய காலத்தில் இந்துக்களின் வழிபாட்டுத்தலமாக இருந்தாலும் பௌத்தர்கள் புத்த பெருமானின் கூற்றுக்கிணங்க மகாசுமனை இம்மலையில் வழிபட்டு வருகின்றனர்.
இருப்பினும் தொன்றுதொட்டு இங்கு நிலவிய சிவசூரிய வழிபாடு இன்றும் நிகழ்வது குறிப்பிடத்தக்கது. இங்கு செல்லும் எல்லா மதத்த வர்களும் சூரிய வழிபாடு செய்த பின் மலையை விட்டு இறங்குவதும், பண்டைய காலம் முதல் சிவவழிபாடு நிலவிய இம்மலை உச்சியில் சிவசின்னங்களான விபூதி, சந்தனம், குங்குமம் ஆகியவை இங்கு வரும் சகல மதத்தவர்களுக்கும் இன்றும் வழங்கப்படுவதும் மிகச் சிறப்பாக குறிப்பிடத்தக்கது.

சிவன் ஒளி பாதம்

மிகப்புராதன காலம் முதல் சிவனொளிபாதமலையில் மூன்று முக்கிய வழிபாடுகள் நிலவியதாக ஐதீகம். ஒன்று சிவவழிபாடு இரண்டாவது ஒளி வழிபாடு (சூரிய வழிபாடு) மூன்றாவது பாதச்சுவடு வழிபாடு (பாதவழிபாடு), இம்மூன்று வழிபாடுகளும் நிலவியதால் இம்மலை சிவன்+ஒளி+பாதம் (சிவனொளிபாதம்) என இந்து மக்களால் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சிவ வழிபாடு

இம்மூன்று வழிபாடுகளில் சிவ வழிபாடு இராவணன் காலம் முதல் இலங்கையில் நிலைகொண்டுள்ளதாக குறிப்புகள் கூறுகின்றன. விஜயன், பண்டுகாபயன் காலத்தில் இலங்கையில் சிவ வழிபாடே நிலவியது.

ஒளி வழிபாடு எனும் சூரிய வழிபாடு

ஒளி வழிபாடு எனப்படும் சூரியனை நோக்கி வழிபடும் முறை மனிதன் முதன் முதலில் கைக்கொண்ட வழிபாட்டு முறையாகும். மனிதன் இயற்கையாகத் தோன்றிய சூரியனை வணங்கிய போதும் பிற்காலத்தில் சூரியனை உருவகப்படுத்தி அதற்கு கோயில்கள் அமைத்து பூஜை வழிபாடுகள் நடத்தி வந்தான். மத்திய அமெரிக்காவில் மெக்சிக்கோ பகுதியில் வாழ்ந்த அஸ்டெக்இனத்தவர்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் பிரமிட்எனும் மிகப் பிரமாண்டமான கோயில்களை அமைத்து வழிபட்டு வந்துள்ளனர். இந்தியாவிலே ஒரிசா மாநிலத்தில் உள்ள கோனார்க்சூரிய பகவான் கோயிலும், குஜராத் மாநிலத்தில் உள்ள மொதெராசூரியனார் கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

பாத வழிபாடு

பாதவழிபாடு என்பது ஓர் தெய்வத்தின் அல்லது மகானின் பாதத்தை புனிதமானதாகக் கருதி வழிபடும் முறையாகும். உலகில் மிக அரிதாகக் காணப்படும் இவ்வழிபாட்டு முறையானது வட இந்தியாவில் பீகார் மாநிலத்தில் உள்ள கயா என்னுமிடத்தில் சிறப்புற்றுக் காணப்படுகிறது. கயாவிற்கு அடுத்தபடியாக பாதச்சுவடு வழிபாடு மேலோங்கிக் காணப்படுவது சிவனொளி பாதத்திலே தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின்  முக்கிய மதத்தவர்கள் அனைவரும் வழிபடும் ஓரே வணக்கஸ்தலம்

சிவனொளிபாத மலையில் உள்ள பாதத்தை இந்துக்கள் சிவனின் பாதம் எனவும், பௌத்தர்கள் புத்தரின் பாதம் எனவும், இஸ்லாமியர்கள் ஆதாமின் பாதம் எனவும், கிறிஸ்தவர்கள் சாந்த தோமஸின் பாதம் எனவும் தத்தமது மதத்திற்குரியதென வழிபடுகின்றனர். இலங்கையில் உள்ள நான்கு மதத்தவர்களும் எந்தவித தடையுமின்றி சுதந்திரமாக வழிபாடு செய்யும் ஒரே இடமாக சிவனொளிபாதமலை அமைகிறது. உலகின் முக்கிய மதத்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வழிபடும் ஒரே வழிபாட்டுத்தலம் உலகத்திலேயே இது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். 

எனினும், சிவனொளிபாதமலை சிவனின் பாதம் பதிக்கப்பட்ட மலை தான் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

(இன்னும் வரும்...)

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

வசந்தம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 7.30 மணிக்கு இடம்பெறும்  "வழிபாடு" நிகழ்ச்சியில் இலங்கையின் பழமை வாய்ந்த கோயில்கள் பற்றிய எனது  நிகழ்ச்சியைப் பார்க்கலாம். அல்லது vasantham.lk எனும் இணைய தளத்திற்குச் சென்று  "வழிபாடு" நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.)

No comments:

Post a Comment