Thursday, October 1, 2020

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்-பகுதி 2

 

"ஆயிரம் நிலவே வா" பாடலை முதன் முதல் கேட்ட பின்பு இப்பாடல் மீண்டும் இலங்கை வானொலியில் எப்போது ஒளிபரப்பாகும் என அவதானித்துக் கொண்டிருந்தேன். கேட்ட முதல் தடவையே என் மனதில் இடம் பிடித்த இப்பாடலை கேட்டு எழுதிப் பாட வேண்டும் என எண்ணினேன்.
கையில் கொப்பியும், பென்சிலுமாக காத்துக் கொண்டிருந்தேன். பாடல் அடுத்த நாளும் வானொலியில் ஒலித்தது. வானொலியில் பாடலைக் கேட்டுக் கொண்டே அதன் வரிகளை வேகமாக எழுதத் தொடங்கினேன். இரண்டு தடவைகள் கேட்ட பின்பு பாடலை முழுமையாக எழுதி விட்டேன். அன்று முதல் இலங்கை வானொலியில் ஒளிபரப்பாகும் புதிய பாடல்களைக் கேட்டு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது.

இதற்காக இலங்கை வானொலியில் புது வெள்ளம், பொங்கும் பூம்புனல், அன்றும் இன்றும் ஆகிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் நேரத்தைத் தவற விடுவதில்லை.
இசைச் சிகரம் எஸ். பி.பி அவர்கள் தமிழ்த்திரை உலகில் அடி எடுத்து வைத்த 1969 ஆம் ஆண்டில் 5 பாடல்களை மட்டுமே பாடியிருந்தார். அந்த 5 பாடல்களில் அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆருக்காக பாடிய "ஆயிரம் நிலவே வா" பாடல் மிகவும் பிரபல்யம் அடைந்தது. அடிமைப்பெண் திரைப்படம் அந்த ஆண்டு சித்திரை வருடப் பிறப்பின் பின் வெளியிடப்பட்டது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தயாரித்த இந்த பிரமாண்டமான திரைப் படத்தில் மொத்தமாக 6 பாடல்கள்.
அதில் 3 தனிப்பாடல்களை டி.எம்.எஸ் அவர்கள் பாடினார். கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் தனது முதலாவது பாடலைப் பாடினார். பி.சுசீலாவுடன் எஸ்.ஜானகியும் இணைந்து ஒரு பாடலைப் பாடினார்கள்.
ஆனால் படத்தில் இடம்பெற்ற முத்தாய்ப்பான ஒரே ஒரு காதல் டூயட் பாடலை பி.சுசீலா அவர்களுடன் இணைந்து எஸ்.பி.பி அவர்கள் பாடி, அதன் மூலம் மிகவும் பிரபல்யம் ஆகி, தமிழ்த்திரை இசையில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தார்.
அன்றைய கால கட்டத்தில் கொழும்பில் உள்ள கலைமகள் கம்பனி, எம்.கே.பொன்னையாபிள்ளை, சாந்தி புத்தகசாலை ஆகிய இடங்களில் இருந்து தான் பாட்டுப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படும். அவை வெளிவருவதற்கு சில வாரங்கள் ஆகும்.
ஆனால் பாட்டுப் புத்தகங்கள் வெளிவரும் முன்பே வானொலியில் பாடல்களைக் கேட்டு முழுமையாக எழுதி, அவற்றை தாளம் தப்பாமல், ராகத்தோடு பாடும் பழக்கமும் எனக்கு ஏற்பட்டது.
இதனால் நண்பர்கள், உறவினர்கள் புதிய பாடல்களைப் பாடிக்காட்டும்படி என்னிடம் கேட்பார்கள். அவர்கள் விரும்பும் புதிய பாடல்களைப் பாடிக் காட்டி பாராட்டுக்கள் பல பெற்றேன்.
அதன் பின்பு எஸ்.பி.பி.அவர்களின் ஏனைய பாடல்களையும் தேடித்தேடி வானொலியில் கேட்டு எழுதினேன்.
1969 ஆம் ஆண்டு மொத்தமாக 5 பாடல்களை எஸ்.பி.பி.அவர்கள் பாடியிருந்தார்.
முதலாவது பாடலை எம்.எஸ்.வி.அவர்களின் இசையில் "ஹோட்டல் ரம்பா" எனும் திரைப்படத்திற்காகப் எஸ்.பி.பி. அவர்கள் பாடினார். ஆனால் அந்தப்படம் வெளிவரவில்லை.
"இயற்கையென்னும் இளையகன்னி"
எம்.எஸ்.வி.அவர்களின் இசையில் "சாந்தி நிலையம்" திரைப்படத்தில் ஜெமினி கணேசனுக்காக பி.சுசீலாவுடன் இணைந்து பாடிய காதல் டூயட் பாடல்.

ஆங்கிலத் திரைக்கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் மொத்தம்
5 பாடல்கள். டி.எம். எஸ் அவர்கள் குழுவினருடன் ஒரு பாடல் பாடினார். பி.சுசீலா அவர்கள் 2 தனிப் பாடல்கள் பாடினார். எல்.ஆர்.ஈஸ்வரி ஒரு பாடலைப் பாடினார். படத்தில் இடம் பெற்ற ஒரே ஒரு டூயட் பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடினார் எஸ்.பி.பி.
பாடலின் ஆரம்பத்தில் இருவரும் இசைத்த ஹம்மிங் நம் இதயத்தை வருடி எங்கோ கொண்டு சென்றது. இலங்கை வானொலியில் கேட்டு கேட்டு நான் ரசித்த இந்தப் பாடலும் பிரபல்யம் அடைந்தது.
"முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு"
இது ஜெமினி கணேசனுக்காக கோதண்டபாணி அவர்களின் இசையில் "குழந்தை உள்ளம்" எனும் திரைப்படத்தில் பி.சுசீலாவுடன் எஸ்.பி.பி.அவர்கள் பாடிய பாடல். இந்தப்பாடலை அன்று இலங்கை வானொலியில் கேட்டதில்லை.
நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் ஜெமினி, வாணிஶ்ரீ ஆகியோரை வைத்து சொந்தமாகத் தயாரித்த படம். படம் ஓடவில்லை.

படத்தில் மொத்தமாக 6 பாடல்கள். டி.எம்.எஸ் அவர்கள் ஒரு பாடலும், பி.சுசீலா 4 பாடல்களும் பாடினர். பி.சுசீலா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுடன் ஒரு பாடல்,
எஸ்.பி.பி.அவர்களுடன் ஒரு பாடல். எஸ்.ஜானகியுடன் ஒரு பாடல், தனியாக ஒரு பாடல் என பாடினார். தனியாக பாடிய "அங்கும் இங்கும் ஒன்றை ரத்தம்" எனும் பாடல் மட்டும் கொஞ்சம் மனதில் நின்றது. எஸ்.பி.பி.பாடிய பாடல் உட்பட ஏனைய பாடல்கள் எதுவும் மக்கள் மத்தியில் வரவில்லை.
ஆனால் பாட்டுப் புத்தகத்தில் பாடல் இருந்தது. பாடலை வானொலியில் கேட்காத படியால் மெட்டு தெரியவில்லை. பலருக்குத் தெரியாத அபூர்வமான SPB பாடிய பாடல்.
பிற்காலத்தில் வீடியோவில் தான் இப்பாடலைப் பார்த்தேன்.
"மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்.
புன்னகையின் நினைவாக"

"பால்குடம்" படத்தில் இடம் பெற்ற பாடல். எம்.எஸ்.வி.அவர்களின் இசையில் ஏ.வி.எம்.ராஜனுக்காக பி.சுசீலாவுடன் இணைந்து எஸ்.பி.பி.பாடிய சோகப் பாடல்.
"உனக்காக...அன்பே...நான்... உனக்காக." எனும் வரிகளில் எஸ்.பி.பி யின் மாயக்குரல் மனதை உருக்கும் சோகமாக ஒலித்தது. இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்க முடிந்தது.
இந்த இரண்டு படங்களும் 1969 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகின.
"பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா"
"கன்னிப்பெண்" படத்தில் எம்.எஸ்.வி. அவர்களின் இசையில் எஸ்.ஜானகி அவர்களுடன் இணைந்து பாடிய காதல் டூயட் பாடல். பிற்காலத்தில் சூப்பர் பின்னணிப் பாடல் ஜோடி எனப் புகழப்பட்ட எஸ்.பி.பி- எஸ்.ஜானகி ஆகியோர் முதன் முதலாகப் பாடிய பாடல். படத்தின் இரண்டாவது நாயகனாக நடித்த சிவகுமாருக்காக எஸ்.பி.பி. இப்பாடலைப் பாடினார்.

எஸ். பி.பி. தனது முதலாவது ஆண்டில் பாடிய இந்தப் பாடல் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது.
மொத்தத்தில் SPB அவர்கள் தமிழத் திரையுலகில் காலடி எடுத்து வைத்த முதல் ஆண்டிலே பாடிய 5 பாடல்களில் 4 பாடல்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தன.
(தொடரும்...)
என்.கே.எஸ்.திருச்செல்வம்
இலங்கை.

No comments:

Post a Comment