Thursday, October 1, 2020

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் - பகுதி-1

 

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும்   அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்


பகுதி-1

என்.கே.எஸ்.திருச்செல்வம்

நேற்றைய தினம் 25.09.2020 ஒரு மறக்க முடியாத நாள். இசை மாமேதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தன் உடலை மட்டும் இவ்வுலகில் இருந்து எடுத்துச் சென்ற நாள். ஆனால் நம் நெஞ்சில் நிறைந்த பாடல்களை எமக்கெல்லாம் உயிராகத் தந்து விட்டுச் சென்ற நாள்.

நான் மானசீகமாக நேசிக்கும் அண்ணன் எஸ்.பி.பி. அவர்களின் பாடல்கள் தொடர்பில் கடந்த 50 வருடங்களாக என் அடி மனதில் தேங்கிக் கிடக்கும் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் அன்று எனது பேச்சாகவும், மூச்சாகவும் இருந்தது அவரின் பாடல்களே.

ஒரு திரையுலகப் பிரபலத்திற்காக நான் அதிக மனவேதனை அடைந்த இரண்டாவது சந்தர்ப்பம் நேற்றைய தினத்தில் நடந்தது.

 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி காலை நான் மிகவும் வேதனையடைந்து, அன்று இரவு மிகவும் மனமகிழ்ச்சி அடைந்த மறக்க முடியாத நாள். அன்று இரண்டு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன.

 அன்று காலை, என் நெஞ்சில் மானசீக ஆசானாக வீற்றிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அந்த சமயத்தில் நான் அடைந்த துயரம் அளவிட முடியாதது. அன்று இரவே எனக்கு முதல் வாரிசாக என் மகன் பிறந்து, அந்தத் துயரத்தை ஈடுகட்டும் அளவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நாள் அது.

அன்றைய தினத்தின் பின்பு நான் மிகவும் வேதனை அடைந்தது நேற்றைய தினத்தில் தான்.

 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அடுத்த படியாக நான் நேசித்த, என் மனம் கவர்ந்த திரையுலகப் பிரபலம் என்றால் அது எஸ்.பி.பி அவர்கள் தான். காரணம் இந்த இருவரும் மானசீகமாக என் வாழ்க்கையோடு இணைந்து என்னை வழி நடத்தியவர்கள்.

 சிறுவயது முதல் எம்.ஜி.ஆர் அவர்களின் நல்ல கருத்துக்களை கடைப்பிடித்து வளர்ந்தது போல, எஸ்.பி.பி.அவர்களின் இனிமையான பாடல்களை சிறுவயது முதல் கேட்டு மகிழ்ச்சியாக வளர்ந்தவன் நான்.

 எனக்கு விபரம் தெரிந்த வகையில் நான் முதலாவதாக திரைப்படம் பார்த்தது 1965 ஆம் ஆண்டு. நான் பார்த்த முதலாவது திரைப்படம் எம்.ஜி.ஆர் அவர்களின் "எங்க வீட்டுப் பிள்ளை". அப்போது எனக்கு 4 வயது.

 இரண்டு ரூபாய் கொடுத்து வாடகைக் காரில் குடும்பத்தோடு எம்மைக் கூட்டிச் சென்று அந்தப் படத்தைப் அப்பா காண்பித்தார். எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வரும் "நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இந்த ஏழைகள் வேதனை படமாட்டார்" எனும் பாடல் பசு மரத்து ஆணி போல இன்றும் என் மனதில் பதிந்துள்ளது.

 என் தந்தையார் ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எனவே மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடப்படும் போது கூட்டிச் சென்று காண்பிப்பார். அன்று எமது தந்தை மட்டுமல்ல நான், எனது அண்ணா, சின்னத் தங்கை எல்லோருமே எம்.ஜி.ஆர் அவர்களின் ரசிகர்கள் ஆனோம்.

 அன்று முதல் என் தந்தையார் மூலம் மக்கள் திலகத்தின் பல படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கன்னித்தாய், அன்பேவா, பறக்கும் பாவை, தனிப்பிறவி, நான் ஆணையிட்டால், அரச கட்டளை, காவல்காரன், ஒளி விளக்கு, கணவன், கண்ணன் என் காதலன், குடியிருந்த கோயில், ரகசிய பொலிஸ் 115, நம்நாடு ஆகிய திரைப்படங்களை அன்று பார்த்த ஞாபகம் உண்டு.

 

இப்படங்களைப் பார்த்தபின் அதில் இடம் பெறும் எம்.ஜி.ஆர் பாடல்களை டி.எம்.எஸ் அவர்களின் குரலில் வானொலியில் விரும்பிக் கேட்க ஆசை ஏற்பட்டது.

 அன்று திரைப்பட பாடல்களைக் கேட்டது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை-2 எனும் வானொலியில் தான். அன்று இருந்த ஒரே வானொலியும் அதுதான். திரையில் பார்த்த எம்.ஜி.ஆர் பாடல்களை ரசித்துக் கேட்கக் கூடிய ஒரே சாதனம் அதுதான். காலப்போக்கில் அதுவே என் உயிர் நாடியாக மாறியது. பாடசாலை நேரம், வீட்டில் படிக்கும் நேரம் தவிர நான் அதிக நேரத்தை செலவிட்டது வானொலிப் பெட்டியின் அருகிலே தான்.

 1969 ஆம் ஆண்டு, எனக்கு 8 வயது. இலங்கை வானொலியில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது "புது வெள்ளம்" எனும் நிகழ்ச்சியில் ஒரு புதிய குரலில் அந்த இனிமையான பாடல் ஒலித்தது.

 

"ஆயிரம் நிலவே வா-ஓராயிரம் நிலவே வா"

பாடல் இடம்பெற்ற படம் - அடிமைப்பெண்.

பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா.

இசை-கே.வி.மகாதேவன்

பாடலை எழுதியவர்-புலமைப்பித்தன்

 

படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடல் இது. ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்டது. பத்திரிகைகள் மூலம், பாடசாலை நண்பர்கள் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்ட எம்.ஜி.ஆரின் திரைப்படம் அடிமைப்பெண். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு ஒரு புதியவர் பின்னணி பாடியுள்ளார் என்பது சற்று வியப்பாக இருந்தது. இருந்தாலும் அந்தப் புதிய குரல் ஏதோ இனம் புரியாத வகையில் என் மனதைக் கவர்ந்தது. எஸ்.பி.பி. அவர்கள் பாடி நான் கேட்ட முதலாவது பாடல் அதுதான். ஆனால் இது எஸ்.பி.பி அவர்கள் பாடிய 5 ஆவது தமிழ்த் திரை இசைப்பாடல்.

1969 ஆம் ஆண்டு எஸ்.பி.பி.அவர்கள் தமிழ்த் திரைஉலகில் அடி எடுத்து வைத்த காலம். அவர் மொத்தமாக 5 பாடல்களைப் பாடியிருந்தார்.

 

( தொடரும்..)


No comments:

Post a Comment