Thursday, October 1, 2020

நான்_அறிந்த_இசை_அரசன் எஸ்_பி_பியும் அவரின்_இன்னிசை_சாம்ராஜ்யமும் - பகுதி_3

 

இசை அரசன் எஸ்.பி.பி அவர்கள் அறிமுகமான முதல் ஆண்டிலே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் 3 பாடல்களும், கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் ஒரு பாடலும், தெலுங்கு திரைப்பட இசை அமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணி அவர்களின் இசையில் ஒரு பாடலும் பாடினார்.
5 பாடல்கள் மட்டுமே பாடியிருந்தாலும் எஸ்.பி.பி அவர்கள் பட்டி தொட்டி எல்லாம் புகழ் பெற்றிருந்தார். அதற்குக் காரணம் “ஆயிரம் நிலவே வா” பாடல்.

ஐந்தாவது பாடல்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் “அடிமைப்பெண்” திரைப்படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடியது. படத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பி அவர்கள் பாடிய “ஆயிரம் நிலவே வா” பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.
அறிமுக ஆண்டான 1969 ல் 5 பாடல்கள் பாடிய எஸ்.பி.பி அவர்களுக்கு அடுத்த ஆண்டான 1970 ல் 14 பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்கள் என்று கூட சொல்லலாம். 14 பாடல்களில் 7 பாடல்கள் அவரின் இசையில் பாடினார்.
இந்த 14 பாடல்களில் ஒன்றைத் தவிர ஏனைய 13 பாடல்களும் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்து அன்றைய இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.
1970 ல் பொங்கல் அன்று “ஏன்” என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளிவந்தது. ரவிச்சந்திரன், லஷ்மி, ஏ.வி.எம்.ராஜன் ஆகியோரின் நடிப்பில் டி.ஆர். ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பாவின் இசையில் 7 பாடல்கள் இடம்பெற்றன. இவற்றில் எஸ்.பி.பி. அவர்களுக்கு இரண்டு பாடல்கள் பாடும் வாய்ப்பை கிடைத்தது. இதிலே ஒரு சிறப்பான பாடல்.
அண்ணன், தங்கை ஆகியோர் பாடும் டூயட் பாடல்கள் தமிழில் மிக மிகக் குறைவு என்றே கூறலாம். பாசமலர் பாடலுக்குப் பின் அப்படியான பாடல்கள் வந்ததாக ஞாபகம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு பாடலை ஹம்மிங் பாடகி சரளாவுடன் இணைந்து பாடினார் எஸ்.பி.பி.

ஆறாவது பாடல்
எனும் பாடல் அது. அந்த அண்ணன், தங்கை பாடலை அண்ணன் ஏ.வி.எம். ராஜனுக்காக அனாயாசமாகப் பாடியிருந்தார் எஸ்.பி.பி.
அண்ணனும் தங்கையும் மகிழ்ச்சியோடு முருகனை வீட்டுக்கு அழைப்பது போன்ற வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
அண்ணனுக்கு பெண் பார்க்க-
வரும் அண்ணியை என் கண் பார்க்க
என் தங்கையின் துணையை நான் பார்க்க-
அந்த இன்பத்தை நீ பார்க்க-
நீ வருவாயா வேல்முருகா...
எனும் வரிகள் அண்ணன் தங்கை பாசத்தை படம் பிடித்துக் காட்டின.
இரண்டாவது பாடலை படத்தின் நாயகனான ரவிச்சந்திரனுக்காகப் பாடினார் எஸ்.பி.பி.

ஏழாவது பாடல்
என்ற இந்தப் பாடல் ஒரு தத்துவப் பாடலாக அமைந்தது.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 7 பாடல்களில் டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, சரளா ஆகியோர் 5 பாடல்கள் பாடியிருந்தனர். இருப்பினும் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய பாடல்கள் இரண்டும் பிரபல்யம் அடைந்தன.
அந்த ஆண்டு சித்திரை புதுவருடப்பிறப்பு அன்று வெளியான இரண்டு படங்களில் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய இரண்டு பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
அவற்றில் ஒன்று அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் வசனம் எழுதி, திருமலை மகாலிங்கம் இயக்கிய “காதல் ஜோதி” எனும் திரைப்படம். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், காஞ்சனா ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படத்தில் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் இசையில் 4 பாடல்கள் இடம்பெற்றன.

ரவிச்சந்திரனுக்காக சீர்காழி கோவிந்தராஜன் இரண்டு பாடல்களைப் பாடினார். எல் ஆர்.ஈஸ்வரி ஒரு பாடல். படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து எஸ்.பி.பி. பாடினார். மென்மையான இதய ராகமாக அந்தப் பாடல் ஒலித்தது.

எட்டாவது பாடல்
#கண்கண்ட_கனவெல்லாம்_கலையாதது எனும் இப்பாடலின் ஆரம்பத்திலும், இடையிலும் மனதை வருடும் ஹம்மிங் இசையை எஸ்.பி.பி, சுசீலா ஆகிய இருவரும் வழங்கி இருந்தமை பாடலைக் கேட்கும் எம்மை எங்கோ கொண்டு சென்றது. அத்தனை இனிமையான ஹம்மிங்.
இலங்கை வானொலியில் அடிக்கடி இப்பாடல் ஒலித்து சூப்பர் ஹிட் பாடலானது.

எஸ்.பி.பி. அவர்கள் பாடிய அடுத்த பாடல் இடம்பெற்ற படம் “பத்தாம் பசலி”. ஜெமினி கணேசன். நாகேஷ், ராஜஸ்ரீ ஆகியோரை வைத்து கே.பாலசந்தர் இயக்கிய படம். ஜெமினி கணேசன் நாயகனாக நடித்தாலும் நாகேஷ் அவர்களுக்கே படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
படத்தில் மொத்தமாக 6 பாடல்கள். எல்லாப் படல்களையும் ஆலங்குடி சோமு எழுத, வி.குமார் இசையமைத்திருந்தார்.
நாகேஷ் அவர்களுக்காக டி.எம்.எஸ். குரலில் 3 பாடல்கள். எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா ஆகியோர் தனியாக ஒவ்வொரு பாடலைப் பாடினார். படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடலை பி.சுஷீலாவுடன் இணைந்து எஸ்.பி.பி. பாடியிருந்தார்.








ஒன்பதாவது பாடல்
எனும் இப்பாடலை இலங்கை வானொலியில் கேட்க முடியவில்லை. படத்திலும் பாடல் இடம் பெறவில்லையாம். இன்று வரை இந்தப் பாடலை நான் கேட்டதில்லை. இப்படி ஒரு பாடல் உள்ளதென்பதை பாட்டுப் புத்தகத்தின் மூலமே நான் தெரிந்து கொண்டேன்.
(மிகுதி தொடரும்..)
என்.கே.எஸ்.திருச்செல்வம்
இலங்கை.

No comments:

Post a Comment