Friday, October 2, 2020

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்-பகுதி 5

 

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும்   அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்

பகுதி 5

 என்.கே.எஸ்.திருச்செல்வம்


1970 ஆம் ஆண்டு மீண்டும் இன்னுமோர் திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக எஸ்.பி.பி அவர்கள் பாடும் வாய்ப்பு கிட்டியது. பழம் பெரும் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர், கலைச்செல்வி ஜெயலலிதா நடித்து வெளிவந்த தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் எம்.எஸ்.வி அவர்களின் இசையில் ஒரு பாடலைப் பாடினார் எஸ்.பி.பி.  

திரைப்படத்தில் மொத்தமாக 7 பாடல்கள். இவற்றில் டூயட் பாடல்கள் மூன்று. இந்த மூன்று பாடல்களையும் டி.எம்.எஸ், பி.சுசீலா ஆகியோர் பாடினர். தொடர்ந்து ஜோடிப் பாடல்களைப் பாடி வந்த எஸ்.பி.பி அவர்களுக்கு வழமைக்கு மாறாக இப்படத்தில் தனிப்பாடல் ஒன்றை மட்டுமே பாடும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் தனிப் பாடல்கள் 4. இவற்றில் இரண்டு பாடல்களை டி.எம். எஸ். அவர்களும், ஒரு பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியும் பாட, அடுத்த பாடலை எஸ்.பி.பி. பாடினார்.

13 ஆவது பாடல்

 வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்-

அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும் 

எனும் இப்பாடல் வாலி அவர்களின் வரிகளில் தாயைப் போற்றிப் பாடும் பாடலாக எஸ்.பி.பி. அவர்களின் குரலில் ஒலித்தது.               


தாய்ப்பாலில் வீரம் கண்டேன்-

தாலாட்டில் தமிழைக் கண்டேன்

உண்ணாமல் இருக்கக் கண்டேன்-

உறங்காமல் விழிக்கக் கண்டேன்

மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ

அது உன்னிடத்தில் நானறிந்த பாடம் அல்லவோ

எனும் வரிகள் மூலம் எஸ்.பி.பி. அவர்கள் தாயைப் போற்றிப் பாடிய முதலாவது பாடலாக இது அமைந்தது.

1970 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியான நவக்கிரகம் திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான பாடலைப் பாடும் வாய்ப்பு எஸ்.பி.பி. அவர்களுக்குக் கிடைத்தது. கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் முத்துராமன், சிவகுமார், லக்ஷ்மி, நாகேஷ் ஆகியோர் நடித்த இப்படத்தில் வாலியின் பாடல்களுக்கு வி.குமார் இசையமைத்திருந்தார். படத்தில் மொத்தம் 5 பாடல்கள். நடிகர்களே வசனம் போல பேசும் பாடல்கள் மூன்று. இசையோடு பாடும் பாடல்கள் இரண்டு. அவற்றில் ஒன்றை ஏ.எல்.ராகவன் பாடினார். அடுத்த பாடல் ஒரு காதல் டூயட் பாடல். இப்பாடலை பி.சுசிலாவுடன் இணைந்து சிவகுமாருக்காக எஸ்.பி.பி. பாடினார். பாடினார் என்பதை விட ஹம் செய்தார் என்பதே சரி.

அன்றைய கால கட்டத்தில் பாடல்களின் ஆரம்பத்திலும், இடையிலும் பாடகர்கள் ஹம்மிங் இசைப்பது பாடல்களின் இனிமையைக் கூட்டும் ஒரு விடயமாகக் கருதப்பட்டது. அந்த வகையில் எஸ்.பி.பி அவர்களின் குரல் ஹம்மிங் இசைப்பதற்கு பொருத்தமானதாகவும் இருந்தது. இதை இனம் கண்டு கொண்ட இசையமைப்பாளர் எம்.எஸ்.வி அவர்கள் எஸ்.பி.பிக்குக் வாய்ப்புக் கொடுத்த தனது முதல் பாடலிலேயே அவரை ஹம்மிங் இசைக்க வைத்தார். அந்தப்பாடல் இயற்கையென்னும் இளையக்கன்னி.

அதன் பின்பு இசையமைப்பாளர்கள் எஸ்.பி.பி பாடிய பல பாடல்களை ஹம்மிங் இசையோடு பாட வைத்தனர். இவர்களை விட ஒரு படி மேலே சென்று ஒரு வித்தியாசமான கோணத்தில் எஸ்.பி.பி. அவர்களைப் பாட வைத்தார் இசையமைப்பாளர் வி.குமார்.

14 ஆவது பாடல்

 உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது

எனும் அந்தப்பாடல், ஆரம்பத்தில் எஸ்.பி.பி அவர்களின் ஹம்மிங் இசையோடு தொடங்கும். பி.சுசீலா அவர்கள் பாடலைப் பாடுவார். எஸ்.பி.பி பாடலின் இடையிலும், முடிவிலும் ஹம்மிங் மட்டும் இசைத்துக் கொண்டிருப்பார். இப்படி பாடல் வரிகள் எதையும் பாடாமல்

ஆஹாஹா... ஓஹோஹோ... ம்ம்ம்... லல்லல்லா..

என எஸ்.பி.பி அவர்களை ஹம்மிங் மட்டும் பாடவைத்து அந்தப் பாடலை முடித்து புதுமை செய்தார் வி.குமார். எஸ்.பி.பி அவர்களின் ஹம்மிங் இசைக்காக மட்டுமே இந்தப் பாடலை எத்தனை தடவையும் வேண்டுமானாலும் கேட்டகலாம்.

1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த இரண்டு திரைப்படங்களில் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய மூன்று பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் ஒன்று காவியத் தலைவி எனும் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது. ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், செளகார் ஜானகி ஆகியாரை வைத்து கே.பாலச்சந்தர் இயக்கிய படம். கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி இசையமைத்திருந்தார். படத்தில் மொத்தம் 7 பாடல்கள். ஒரு பாடலைத் தவிர ஏனைய பாடல்கள் எல்லாம் இலங்கை வானொலி மூலம் பிரபல்யம் ஆயின. நான்கு தனிப் பாடல்களை பி.சுசீலா பாடினார். பழம்பெரும் நடிகையும், பாடகியுமான எஸ்.வரலக்ஷ்மியுடன் சேர்ந்து சுசீலா மேலும் ஒரு பாடலைப் பாடி இருந்தார். நேரான நெடுஞ்சாலை எனும் ஒரு காவியப் பாடலை எம்.எஸ்.வி. பாடினார். படத்தில் இடம் பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ரவிச்சந்திரனுக்காகப் பாடியிருந்தார் எஸ்.பி.பி அவர்கள்.

15 ஆவது பாடல்

 ஆரம்பம் இன்றே ஆகட்டும்-ஆறேழு நாட்கள் போகட்டும்

எனும் அப்பாடல் இலங்கை வானொலியில் பல தடவைகள் இனிமையாக ஒலித்ததைக்  கேட்டேன். ஆனால் பிற்காலத்தில் இப்பாடலை வீடியோவில் பார்த்தபோது, நான் வானொலியில் கேட்ட பாடலை விட சற்று வித்தியாசமாக இருந்தது. வானொலியில் கேட்ட பாடலில் இடையிசை அதிகமாக இருந்தது. அத்துடன் சரணத்தின் சில வரிகள் இரண்டு தடவைகள் ஒலித்தன. அதனால் பாடல்  ஒலிக்கும் நேரம் சற்று அதிகமாக இருந்தது. இப்படி பல பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டுள்ளேன்.

(தொடரும்... )

என்.கே.எஸ்.திருச்செல்வம்



No comments:

Post a Comment