Sunday, October 4, 2020

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்-பகுதி 6

 

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும்   வரின் இன்னிசை சாம்ராஜ்யமும்

பகுதி 6

என்.கே.எஸ்.திருச்செல்வம்

 

எஸ். பி. பி. அவர்கள் பாடிய 16 ஆவது பாடல்

1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த திரைப்படம் ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன், சரோஜாதேவி ஆகியோர் நடிப்பில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய மாலதி.  

இப்படத்தில் மொத்தமாக மூன்று பாடல்கள் இடம் பெற்றிருந்தன. மூன்றும் ஜோடிப் பாடல்கள். இவற்றில் ஒரு பாடலை டி.எம்.எஸ், எல்.ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடினர். ஏனைய இரண்டு பாடல்களையும் பி.சுசிலாவுடன் இணைந்து எஸ்.பி.பி பாடினார். கண்ணதாசன் அவர்களின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி. அவர்கள்  இசையமைத்திருந்தார்.

கற்பனையோ கை வந்ததோ-சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்.

என ஒரு பாடல் தொடங்குகிறது. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த இந்தப் பாடலை அந்தக் காலத்தில் முணுமுணுக்காத இளைஞர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு சூப்பர் ஹிட் பாடலாக இது விளங்கியது. இப்பாடலின் சரணத்தின் இறுதிப்பகுதியில் வரும் சுகமோ சுகம்-சுகமோ சுகம்-சுகமோ சுகம் எனும் வரிகள்   இருவரின் குரல்களில் மனதை மயக்கின.

17 ஆவது பாடல்

மாலதி படத்தில் இடம்பெற்ற அடுத்த பாடல்

சிடுசிடு சிடுசிடு சிடுசிடு சிடுசிடு எங்கே போவோம்          

எனத் தொடங்கும் பாடல். இப்பாடலிலும் பல்லவியின் இறுதிப் பகுதியில் வரும்

பச்சைக் கிளிபோல ஊரெங்கும் பறந்து-                          இச்சை மொழிபேசி எங்கெங்கும் திரிந்து-                          பார்த்தும் பாராமல் மகிழந்தாலென்ன-                            பாடித் திரிந்தாலென்ன  

எனும் வரிகள் இருவரின் குரல்களில் சிறப்பாக அமைந்தன.

மாலதி திரைப்படத்தை அந்தக்காலத்தில் நான் பார்க்கவில்லை. பாட்டுப் புத்தகம் மட்டுமே என்னிடம் இருந்தது. எஸ்.பி.பி. அவர்கள் பாடிய இந்த இரண்டு பாடல்களையும் ரவிச்சந்திரனுக்காக பாடியிருந்தார் என நினைத்திருந்தேன். காரணம் பாட்டுப் புத்தகத்தின் முகப்பில் ரவிச்சந்திரன், சரோஜாதேவி ஆகிய இருவரின் படங்களே காணப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் இத்திரைப்படத்தை வீடியோவில் பார்த்தபின் தான் தெரிந்தது எஸ்.பி.பி. அவர்கள் குரல் கொடுத்தது ரவிச்சந்திரனுக்கு அல்ல, ஜெமினி கணேசனுக்கு என்பது.    

18 ஆவது பாடல்

1970 ஆம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் எஸ்.பி.பி. அவர்களுக்கு இரண்டு பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படம் நிலவே நீ சாட்சி.

உயிருக்குயிராக காதலித்த இருவரில் காதலி சந்தர்ப்ப வசத்தால் மனோதத்துவ டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. இதை அறிந்த காதலன் சுய நினைவை இழக்கிறான். இந்நிலையில் தன் நண்பனின் தம்பியான காதலனை குணப்படுத்த மனோதத்துவ டாக்டர் கடும் முயற்சியை மேற்கொள்கிறார். அப்போது தன் மனைவிதான் நண்பனின் தம்பியின் காதலி என்பதை அறிந்து, தன்  மனைவியால் மட்டுமே அவளின் பழைய காதலனுக்கு மீண்டும் சுயநினைவைக் கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்து கணவன் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக கதை அமைந்துள்ளது. 

 

பி. மாதவன் இயக்கத்தில் ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, முத்துராமன் நடித்த இப்படத்தில் கண்ணதாசனின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி. இசையமைத்துள்ளார். படத்தில் உள்ள 5 பாடல்களும் பிரபல்யமானவை. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்கள். இவற்றில் இரண்டு பாடல்களை எஸ்.பி.பி.பாடியுள்ளார். ஒரு பாடலை தனியாகவும், அடுத்த பாடலை பாடகி ராதாவுடன் இணைந்தும் பாடியுள்ளார்.

அந்தக் காலத்து இளைஞர்கள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக  இப்பாடல் அமைந்திருந்தது. தான் காதலியை வர்ணித்துப் பாடும் அந்தப் பாடல்.

 பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ

பாடலின் ஆரம்பத்தில் எஸ்.பி.பி. அவர்கள் பாடும் ஹம்மிங் வழமை போல மிகவும் இனிமையாக இருந்தது.  

மூன்று கனிச்சாறு ஒன்றாகப் பிழிந்து-

மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து-

போதை மதுவாகப் போனமேனி மலர்ந்து-                    

பூவை வந்தால் பெண்ணாகப் பிறந்து

என தன் காதலியை வர்ணிக்கும் இந்த வரிகளை எஸ்.பி.பி.யின் குரலில் மூன்று கனிச்சாற்றையும் பாடலைக் கேட்கும் நாம் ஒன்றாகப் பருகியது போல இனிக்கும். அதிலும் மூன்று சரணங்களிலும் வரும் கடைசி வரிகளான,

பூவை வந்தால் பெண்ணாகப் பிறந்து

காணக் காணவேண்டும் ஒரு கோடி இன்று

இன்பம் அவளின்னும் அறியாத கல்வி                              

ஆகிய மூன்று வரிகளும் உண்மையில் எத்தனை தடவைகள் கேட்டாலும் அலுக்காதவை..   

 

19 ஆவது பாடல்

அடுத்த பாடலை எஸ்.பி.பி. அவர்கள் பாடகி ராதாவுடன் இணைந்து பாடியிருந்தார். அரிதான சில பாடல்களை மட்டும் பாடிய பாடகி ராதா. படத்தில் மனதை உருக்கும் அந்த உச்சக்கட்டப் பாடல்,

நிலவே நீ சாட்சி-மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்-

நிலவே நீ சாட்சி

காதலர்கள் காதலிக்கும் சமயம் நிலவை சாட்சியாக வைத்து காதலி பாடும் பாடல் இது. படத்தின் உச்சக் கட்டத்தில் காதலனுக்கு பழைய நினைவுகள் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்பதற்காக இன்னொருவனின் மனைவியான காதலி அந்தப் பாடலை மீண்டும் பாடும் போது, காதலன் நினைவு திரும்பி, தான் பழைய காதலியைப் பார்த்த மகிழ்ச்சியில் தானும் தொடர்ந்து அப்பாடலைப் பாடுவதாக அந்தக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பாடல்களையும் ஜெய்சங்கருக்காக எஸ்.பி.பி. பாடியுள்ளார்.

(தொடரும்..)

என்.கே.எஸ்.திருச்செல்வம்

இலங்கை


No comments:

Post a Comment