Thursday, October 1, 2020

 

“வீட்டுக்கு வீடு” எனும் திரைப்படம் வெளியானது. ஜெய்சங்கர், லக்ஷ்மி, முத்துராமன் நடிப்பில் சி.வி.ராஜேந்திரன் இயக்கிய இப்படத்தில் 5 பாடல்கள். கண்ணதாசனின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி. இசையமைத்திருந்தார். பி.சுசீலா, சாயிபாபா ஆகியோர் ஒவ்வொரு தனிப்பாடல்களையும், எல். ஆர்.ஈஸ்வரி இரண்டு தனிப் பாடல்களையும் பாடியிருந்தனர்.
படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடலை எல்.ஆர். ஈஸ்வரியுடன் இணைந்து ஜெய்சங்கருக்காக எஸ்.பி.பி பாடினார்.

பத்தாவது பாடல்
“அங்கம் புதுவிதம்-அழகினில் ஒரு விதம்-நங்கை முகம் நவரச நிலவு” எனும் இப்பாடல் ஆரம்பத்தில் ஹம்மிங் இசையுடன் தேனாக ஒலித்தது. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகி ஹிட் ஆனது.

"கற்பனை அற்புதம்-காதலே ஓவியம்-
தொட்டதும் பட்டதும் தோன்றுமே காவியம்"
எனும் முதலாவது சரணத்தின் இறுதியில் வரும் வரிகள், இருவரின் குரலிலும் தேனைக் கலந்து ஊட்டியது. பாடலும் வெற்றி பெற்றது.
#1970_ஆம்_ஆண்டு_ஜூலை_மாதம் எஸ்.பி.பி அவர்கள் பாடிய பாடல்களுடன் இரண்டு திரைப் படங்கள் வெளிவந்தன. ஒன்று ஜெய்சங்கர், லக்ஷ்மி நடித்து, சின்னப்பா தேவர் தயாரித்த “மாணவன்”. சங்கர்-கணேஷ் இரட்டையர்களின் இசையில் படத்தில் 4 பாடல்கள். இரண்டு தனிப் பாடல்கள், இரண்டு ஜோடிப் பாடல்கள்.
ஜோடிப் பாடல்களில் ஒன்றை டி.எம்.எஸ். உடன் பி.சுசிலா பாடினார். “வீசிலடிச்சான் குஞ்சுகளா” எனும் இப்பாடலுக்கு மட்டும் உலக நாயகன் கமல் இளைஞனாக முதன் முதல் தோன்றி ஆடிப் பாடினார்.
அடுத்த காதல் ஜோடிப் பாடலை ஜெய்சங்கருக்காக பி.சுசிலாவுடன் இணைந்து எஸ்.பி.பி. பாடினார்.

11 ஆவது பாடல்
“கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ” எனும் வாலியின் இப்பாடல் சங்கர்-கணேஷ் இசையில் எஸ்.பி.பி பாடிய முதலாவது பாடலாகும்.
"ஆஹா.. ஹா.. ஆஹா.. ஆஹா..
லல்ல லல்ல லா...லல்ல லல்ல லா '
என பாடலின் ஆரம்பத்தில் தொடங்கும் ஹம்மிங் இசை இருவரின் குரலிலும் தித்திப்பாக ஒலித்தது. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த இப்பாடல் எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைத்த பாடல் போலவே இருந்தது. சங்கர்-கணேஷ் இசையமைத்த பாடல் என்பதை நம்ப முடியவில்லை. அத்தனை சிறப்பாக மெட்டமைத்திருந்தனர் சங்கர்-கணேஷ் இரட்டையர்கள்.
பாடலின் இரண்டு சரணங்கள் மட்டுமே வானொலியில் ஒலித்தன. வீடியோவிலும் அப்படியே. இந்த இரண்டு சரணங்களுக்கும் இடையில் இன்னுமொர் சரணம் இருந்ததை பாட்டுப் புத்தகத்தின் மூலமே அறிந்து கொண்டேன்.
"வானவில்லின் ஏழு வண்ணம் கண்ணோடுதான்-
வாங்கி வந்த பாவை இனி உன்னோடுதான்-
நான் தொடத்தான்... நாணமோ
தேன் சுவைத்தேன்... தீருமோ"

என வாலி அவர்கள் எழுதிய அழகிய வரிகளை எஸ்.பி.பி-பி.சுசீலா அவர்களின் குரல்களில் கேட்க முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது.
சாண்டோ சின்னப்பா தேவர் ஒரு தீவிர முருக பக்தர். இதனால் அவரது படங்களுக்கு பாட்டெழுதும் போது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் முருகன் பற்றிய சொற்களை சேர்த்து எழுதுவது வழக்கம். இதே யுக்தியை வாலி அவர்களும் இந்தப்பாடலில் கையாண்டிருந்தார். பாடலின் மூன்றாவது சரணம் அவ்வாறு எழுதப்பட்டது.
"மின்னுகின்ற கன்னிரண்டும் வேலாயுதம்-
மங்கை மனம் மன்னனுக்கு மயில் வாகனம்-
வா பக்கம் வா... நெருங்கி வா-
தா தொட்டுத் தா... தொடர்ந்து தா"
எனும் அந்த வரிகள் எஸ்.பி.பி-சுசீலா ஆகியோரின் குரலில் தேன் சுவையை ஊட்டியது.
#1970_ஆம்_ஆண்டு_ஜூலை_மாதம் வெளிவந்த அடுத்த திரைப்படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், வாணிஸ்ரீ நடித்த “தலைவன்”. பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையானாயுடுவின் இசையில்
4 பாடல்கள் படத்தில் இடம்பெற்றன. மூன்று ஜோடிப் பாடல்கள். ஒரு தனிப்பாடல். தனிப்பாடல் ஒன்றையும், ஜோடிப்பாடல்கள் இரண்டையும் டி.எம்.எஸ்.அவர்கள் பாடினார்.
படத்தில் ஒரு காதல் டூயட் கனவுப் பாடல். இப்பாடலைப் பாடும் வாய்ப்பு எஸ்.பி.பி. அவர்களுக்குக் கிடைத்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்காக இரண்டாவது பாடலை பி.சுசிலாவுடன் இணைந்து எஸ்.பி.பி பாடினார்.

12 ஆவது பாடல்
“நீராளி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில்”
எனும் அப்பாடலை வாலி அவர்கள் எழுதியிருந்தார். இலங்கை வானொலியில் கேட்ட இப்பாடலை அப்போதே திரையிலும் பார்த்தேன்.
திரைப்படம் கருப்பு-வெள்ளையாக இருந்தபடியால்





கனவுப் பாடலை நன்றாக ரசிக்க முடியவில்லை. எம். ஜி. ஆர். அவர்கள் எழுபதுகளில் நடித்து வெளிவந்த திரைப்படங்களில் மூன்று படங்கள் மட்டுமே கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டன. அவற்றில் “தலைவன்” படமும் ஒன்று. பாடலின் சரணத்தின் இடையில் எஸ்.பி.பி. அவர்கள் இசைக்கும் ஹம்மிங் இசை இதயத்தை வருடிச் சென்றது.
( தொடரும்..)
என்.கே.எஸ்.திருச்செல்வம்
இலங்கை

No comments:

Post a Comment