Thursday, June 11, 2020

சவால்கள் நிறைந்த குடும்பிமலை ஆய்வுப் பயணம்-பகுதி 3


சவால்கள் நிறைந்த குடும்பிமலை ஆய்வுப் பயணம்-பகுதி 3


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/173     10 ஜூன் 2020




குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)


குடும்பிமலை அடிவாரத்தில் உள்ள இராணுவ முகாமின் அருகில் ஜீப் வண்டி நின்றது. ஜீப் வண்டியை விட்டு இறங்கினேன். அங்கு நான் சற்றும் எதிர்பாராத சில சம்பவங்கள் காத்திருந்தன.

அங்கே இருந்து இராணுவ முகாம் பொறுப்பதிகாரி வந்து கைகுலுக்கி என்னை வரவேற்றார். வாருங்கள், தேநீர் அருந்தி விட்டு செல்லலாம் என்று எம்மை உள்ளே அழைத்தார்.  உள்ளே சென்றதும் வரவேற்பறையில் பால் தேநீர், பிஸ்கட், பட்டிஸ், கட்லட் போன்றவை மேசையில் காணப்பட்டன. ஓர் உதவியாளர் சிற்றூண்டியை எனக்குப் பகிர்ந்தார். பட்டிஸ், கட்லட் ஆகியவை சுடச்சுட சுவையாய் இருந்தன.

இராணுவ அதிகாரி எல்லாமே மரக்கறி சிற்றுண்டிகள். பிரிகேடியர் சேர் சொன்னவுடனே தயாரித்தோம் என்றார். எல்லாவற்றிலும் ஒவ்வொன்றை சாப்பிட்டு விட்டு எழுந்தேன். அதிகாரி கோப்ரல்மார் இருவருக்கும் இரண்டு தண்ணீர் போத்தல்களைக் கொடுத்தார்.
மலை உச்சிக்கு சென்று வாருங்கள். கீழே கோயில்கள் இருக்கின்றன. கிராமம் உள்ளது. அவற்றையும் பார்க்கலாம். பார்த்து விட்டு, பின்பக்கம் அழகான குளம் இருக்கிறது அதையும் பார்த்து விட்டு போகலாம் எனக் கூறினார். இதை நான் எதிர்பார்க்க வில்லை. அதிகாரிக்கு நன்றி தெரிவித்து விட்டு மலையேறத் தொடங்கினோம். நேரத்தைப் பார்த்தேன். சரியாக 11 மணி.

மலை அடிவாரத்தில் இருந்து அண்ணாந்து பார்த்தேன். மலை உச்சி தூரத்தில் தெரிந்தது. நல்ல ஏறு வெயில். இருப்பினும் இதெல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. மலை உச்சிக்குச் சென்று சிவலிங்கத்தையும், முருக வேலையும் பார்க்கப் போகிறேன் என்ற மகிழ்ச்சியும், ஆர்வமும் மட்டுமே மனதெல்லாம் நிறைந்திருந்தது. 
காய்ந்த இலுக்குப் பற்றைகள் நடுவே கரடு முரடான துண்டு துண்டான கற்களுக்கிடையில் மலைக்கு ஏறுவதற்கு ஒற்றையடிப் பாதை காணப்பட்டது. அப்பாதை வழியாக ஏறினோம்.

இடையிடையே சிறிய மரங்கள் வளர்ந்திருந்தன. இடையிடையே பெரிய பாறைகள் காணப்பட்டன. இவ்விடத்தில் இருந்து பார்த்தபோது கிழக்குப்பக்கம் மீரானைக்கடவை குளம் தெரிந்தது. சிறிது தூரம் ஏறியதும் ஒற்றையடிப் பாதை இரண்டாகப் பிரிந்தது. இடது பக்கம் சென்றால் கற்குகை உள்ளது. நாம் வலது பக்கம் போக வேண்டும் என்றார் கோப்ரல். இங்கிருந்து தெற்குப்பக்கம் பார்த்தபோது மலைத்தொடர்கள் தெரிந்தன. மேல் நோக்கிப் பார்த்தேன். மலையின் உச்சி தெரிந்தது.


அந்த வழியாக இன்னும் சிறிது தூரம் ஏறியதும் வெட்டி எடுத்தது போல் 15 அடி நீளமான ஓர் ஆசனக்கல் போன்ற பாறை காணப்பட்டது. அதைக் கடந்து சென்றதும் இடது பக்கம் உருண்டையான சில பாறைகள் காணப்பட்டன. அவற்றை அடுத்து மேலே ஏறியபோது பெரிய பாறைகளுக்கு இடையில் சிறிய நிழல் தரும் மரங்கள் காணப்பட்டன.

அவற்றையும் கடந்து மேல் நோக்கி ஏறியபோது 5 பாறைகளுக்கு மத்தியில் ஒரு நிழல் தரும் மரம் வளர்ந்து காணப்பட்ட இடத்தைக் கண்டேன். இவ்விடத்தில் சற்று களைப்பாறிச் செல்லலாம் என்று இராணுவ நண்பர்களிடம் கூறி விட்டு மரத்தில் சாய்ந்து பாறையில் உட்கார்ந்து போத்தலில் இருந்த தண்ணீரைக் குடித்தேன். நேரம் அப்போது 11.20. சுமார் 10 நிமிடங்கள் இங்கு ஓய்வெடுத்தோம்.
மீண்டும் மலை ஏற்றம் தொடர்ந்தது. இவ்விடத்தில் இருந்த சற்று சாய்வான பெரிய பாறை நான்கு துண்டுகளாக வெடித்துக் காணப்பட்டது. அப்பாறை மீது நடந்து சென்று வெடிப்புள்ள பகுதியைக் கடந்து மேல் நோக்கி முன்னேறினேன்.

சரியாக 10 நிமிடங்களில் மலையின் குடும்பிப் பகுதிக்கு வந்தோம். அதுவரை சாய்வான மலைப்பகுதியில் ஏறிக்கொண்டிருந்த நாம் இப்போது மலையின் செங்குத்தான பகுதியை வந்தடைந்தோம். இவ்விடம் தான் குடும்பிமலையில் ஏறுபவர்கள் கடக்க வேண்டிய மிகவும் கஷ்டமான இடம். செங்குத்தான இவ்விடத்தைக் கடப்பது முன்பெல்லாம் மிகவும் ஆபத்தாக இருந்ததாம். இப்போது இவ்விடத்தை மிக எளிதில் கடந்து விடலாம். இதற்குக் காரணம் இவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு ஏணியாகும்.   
இந்த ஏணியின் வலது பக்கம் உள்ள செங்குத்தான பாறையில் 5 அடி அகலம், 6 அடி உயரம் கொண்ட பரப்பில் தமிழ் மொழியில் ஓர் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டின் விபரம் பின்வருமாறு.

பேரும் குடும்பிமலை முருகக் கடவுளின் அருளைப் பெறுவதற்கும், முருகக் கடவுளின் மேல் மலையின் சுற்றளவைப் பார்ப்பதற்கும் ஏறி செல்லும் பக்த கோடிகள் மலையின் இவ்விடத்தில் சில கஷ்டத்தை அடைந்து மேல் செல்ல வேண்டி உள்ளது. இதை அவதானித்த பொறுமிய மேம்பாட்டு நிறுவன சீ.கேதீஸ் 1999.02.05 திகதி இன்று ஏணி ஒன்றை மக்களின் நலனுக்கு நிறுத்தி வைத்தார். நன்றி.ச.ஜீவன் என்று பொறிக்கப்பட்திருந்தது. 

இக்கல்வெட்டில் 1999 ஆம் ஆண்டு பொறுமிய மேம்பாட்டு நிறுவனத்தின் முக்கியஸ்தர் கேதீஸ் என்பவரால் ஏணி அமைக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. 
 
கல்வெட்டை வாசித்து முடிந்தவுடன் ஏணியின் வழியாக ஏறி மேல் நோக்கிச் சென்றேன். அவ்விடத்தில் இருந்து பார்த்தபோது மலையின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள குடும்பிமலை பாடசாலை மற்றும் மீரானைகடவை வயல் வெளிகள், கிராமம் ஆகியவை மிக அழகாகத் தெரிந்தன.

அங்கிருந்து மேலும் பத்து நிமிடங்கள் மேல் நோக்கி ஏறியபோது மீண்டும் ஓர் கடினமான இடம் காணப்பட்டது. இவ்விடத்தில் உள்ள பாறைகள், மரங்களின் கிளைகள் ஆகியவற்றைப் பிடித்து ஏறினேன். இவ்விடத்தைக் கடந்தவுடன் குடும்பிமலையின் உச்சியை அடைந்தோம். நேரம் அப்போது 11.45. மலை ஏறுவதற்கு மொத்தமாக 45 நிமிடங்கள் எடுத்துள்ளன.

உச்சியை அடைந்தவுடன் என் கண்களுக்குத் தெரிந்தது ஓர் மேடையும், அதன் பின்பக்கம் 5 அடி உயரமான ஓர் மாடமும். அந்த மாடத்தின் உள்ளே சிறிய புத்தர் சிலை ஒன்று காணப்பட்டது. அதற்கு மேல் ஓட்டுக் கூரை போடப்பட்டிருந்தது.


அங்கிருந்து சுமார் 100 அடி தூரத்தில், ஓர் சதுரமான கட்டிடமும், அதன் மேல் பகுதியில் கூம்பு வடிவில் விமானமும் காணப்பட்டது. அதுதான் நான் தேடிவந்த கோயில் என்பதைப் புரிந்து கொண்டேன். 6 அடி நீளமும், 6 அடி அகலமும், 7 அடி உயரமும் கொண்ட அக்கோயிலின் மேற்பகுதியில் சுமார் 6 அடி உயரம் கொண்ட விமானம் அமைக்கப் பட்டிருந்தது. விமானத்தின் உச்சியில் கலசம் காணப்படவில்லை. வடகிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருந்த இச்சிறிய கோயிலின் முன்பக்கம் ஓர் கதவு மட்டும் அமைக்கப் பட்டிருந்தது. உடைந்த தகரக் கதவு ஓர் மரப் பலகையினால் முட்டுக் கொடுக்கப்பட்டு சாத்தப்பட்டிருந்தது.



கோயிலின் அருகில் சென்று தகரக் கதவைத் திறந்து உள்ளே பார்த்தேன். நான் தேடி வந்த பொக்கிஷங்கள் இரண்டும் உள்ளே இருந்தன. நான்கு அடி உயரமான ஓர் மேடை அமைக்கப்பட்டு அதன் நடுவில் 3 அடி உயரமான முருகனின் வேலாயுதமும், அதன் இடது பக்கம் 2 அடி உயரமான சிறிய வேலாயுதமும், வலது பக்கம் சிறிய பிள்ளையார் சிலையும் காணப்பட்டன. பெரிய வேலாயுதத்தின் முன்பக்கம் 10 அங்குலம் உயரமான, ஆவுடையார் அற்ற லிங்கம் ஒன்று காணப்பட்டது. வேலாயுதங்கள் இரண்டிற்கும் பட்டு கட்டப் பட்டிருந்தது. லிங்கத்திற்கு விபூதி சாத்தப்பட்டிருந்தது. பலநாட்கள் முயற்சி செய்து பல தடைகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில், மிகவும் சிரமப்பட்டு வந்து மலையேறி எதைக் காண வந்தேனோ அந்த அரிய பொக்கிஷங்களைப் பார்த்ததும் கடந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் அந்த நொடியில் மறைந்து போய் மனதில் ஆனந்தம் மட்டுமே நிலை கொண்டிருந்தது. அப்போது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை சொல்லில் வடிக்க முடியாது. லிங்கத்தையும், முருக வேலாயுதத்தையும் வணங்கி விட்டு வெளியே வந்து பார்த்தேன். என்னைக் கூட்டிக் கொண்டு வந்த இராணுவ நண்பர்கள் இருவரும் கோயிலின் பின்பக்கம் இருந்த சிறிய மரத்தின் கீழ் இருந்த பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.

அவ்விடத்தில் நின்று அப்பகுதியை நோட்டமிட்டேன். கோயிலின் இடது பக்கத்தில் இரும்புக் கம்பிகளில் அமைக்கப்பட்டு, தகரக் கூரை போடப்பட்ட பந்தல் ஒன்று உடைந்த நிலையில் காணப்பட்டது. கோயிலின் வலது பக்கம் சற்று தூரத்தில் மூன்று பாறைகள் காணப்பட்டன. இவற்றின் மீது சூரிய சக்தியை  சேமிக்கும் தகடு ஒன்றும் இருந்தது. இவ்விடத்தில் அங்கும், இங்குமாக வயர்களும் சில கிடந்தன. சற்று தூரத்தில் இரண்டு தொலைத்தொடர்பு கோபுரங்கள் காணப்பட்டன.

குடும்பிமலையின் உச்சி கிழக்கு மேற்காக 400 அடி நீளமும், வடக்கு தெற்காக 200 அடி அகலத்திலும் காணப்பட்டது. மலையின் நடுப்பகுதியில் கோயில் அமைந்திருந்தது. கோயிலின் பின்பக்கம் 60 அடியிலும், முன்பக்கம் 50 அடியிலும், இடது பக்கம் 130 அடியிலும், வலது பக்கம் 200 அடியிலும் நடந்து செல்லக்கூடிய வகையில் கரடு முரடான தரை காணப்பட்டது. கோயிலின் இடது பக்கம் சற்று உயர்ந்தும், வலது பக்கம் சற்று தாழ்ந்தும் இவ்வுச்சி காணப்பட்டது. இடது பக்கம் பழமையான கோயில் இருந்தமைக்கான பண்டைய செங்கட்டிகள் மண்ணுள் புதைந்து காணப்பட்டன. கோயில் அமைந்திருக்கும் இடம் மட்டும் சமதளமாக இருந்தது. கோயிலின் பின்பக்கம் செங்குத்தான மலைச்சரிவு காணப்பட்டது.  

இவற்றை எல்லாம் நோட்டமிட்ட பின் அவ்விடத்தில் நின்று சுற்றிவர பார்த்தேன். மனதை மயக்கும் அழகிய காட்சிகள் தெரிந்தன. வடக்கு, கிழக்கு பகுதிகளில் கிராமங்களும், குளங்களும், சமதரையும், வயல் வெளிகளும் மனதை மயக்கின. மேற்கு, தெற்கு பகுதிகளில் காடும், மலைகளும் அழகைக் கொடுத்தன.

மேற்குப் பக்கத்தில் 10 கி.மீ தூரத்தில் உள்ள நெல் மலை தெரிந்தது. அதைவிட 30 கி.மீ தூரத்தில் உள்ள திம்புலாகல மலையும் தெரிந்தது. தென் மேற்குப் பக்கத்தில் முத்து மலை, மாடு கட்டிய மலை, மொட்டை மலை, வளமண்டி மலை, கொக்குக்கல் மலை, இரட்டைக் கல்மலை ஆகிய மலைகளும் தெரிந்தன.

தெற்குப் பக்கத்தில் மியான்கல்லுக் குளமும், அதன் பின்பக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக உயரமான லிந்தகல் மலையும், அதன் பின்பக்கம் தளவக்கல் மலையும், குளத்தின் அருகில் நாவின கல் மலையும், அதன் பின்பக்கம் இரண்டாவது அதி உயரமான நாரனமுல்லை மலையும், இவற்றோடு ஒட்டிய சிறிய மலைகளும் தொடராகக் காணப்பட்டன. இம்மலைகள் எல்லாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மலைகளாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உயரமான மலைகள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் இருந்து பார்க்கக் கூடிய இடமென்றால் அது குடும்பிமலை மட்டும் தான். மேலும் இத்தனை அழகிய இயற்கைக் காட்சிகளை இம்மலையில் இருந்து மட்டுமே பார்க்க முடியும்.

குடும்பிமலை உச்சி கோயிலைத் தரிசித்த மகிழ்ச்சியில் அங்கிருந்த பாறையில் சற்று ஓய்வெடுத்து விட்டு கீழே இறங்கத் தொடங்கினேன். குடும்பிமலை உச்சி கோயிலில் நான் பார்த்தவற்றை விட இன்னும் பல விடயங்கள் உள்ளன.

(ஆய்வுப் பயணம் தொடரும்....) 

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                       
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

No comments:

Post a Comment