Sunday, June 21, 2020

பொலநறுவையில் உள்ள கற்சிலை யாருடையது? பராக்கிரமபாகு மன்னனுடையதா? இராவணனின் பாட்டன் புலத்தியருடையதா?


பொலநறுவையில் உள்ள கற்சிலை யாருடையது? 
பராக்கிரமபாகு மன்னனுடையதா?
இராவணனின் பாட்டன் புலத்தியருடையதா?



என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/178     21 ஜூன் 2020


குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)


பொலநறுவையில் உள்ள பராக்கிரம சமுத்திரத்தின் அருகில் ஓர் கற்சிலை உள்ளது. பாடசாலையில் படிக்கும் காலத்தில் ஒரு தடவை சுற்றுலா செல்லும் போது முதன் முதலாக அச்சிலையைப் பார்த்தேன். அது மன்னன் பராக்கிரமபாகுவின் சிலை என்று புத்தகங்களில் கூறப்பட்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் இருந்த ரூபாய்த் தாள்களிலும் இந்த சிலையின் படம் அச்சிடப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது அக்காலப்பகுதியில் புழக்கத்தில் இருந்த முத்திரையிலும் பராக்கிரமபாகு மன்னன் எனப் பெயரிடப்பட்டு இந்த சிலையின் படம் போடப்பட்டிருந்தது.



பாடசாலைக் காலத்தின் பின் 1998 ஆம் ஆண்டு குடும்பத்துடன் சுற்றுலா போன போது பொலநறுவையில் அந்த சிலையை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்குள் ஓர் சந்தேகம் எழுந்தது.

ஒரு மன்னனின் சிலை என்றால் கையில் வாளுடன் வீரமாக, முறுக்கு மீசையுடன் அல்லவா இருக்க வேண்டும். ஆனால் இச்சிலை கையில் ஏட்டுச் சுவடிகளுடன், கீழ் நோக்கிய மீசையுடன், சாந்தமான முகத்துடன் காணப்படுகிறதே. தவிர பராக்கிரமபாகு மன்னன் ஓர் கவிஞனும் அல்ல, நூல்களை எழுதியவனும் அல்ல. அப்படி இருக்க எப்படி இது பராக்கிரமபாகுவின் சிலையாக இருக்க முடியும் எனும் சந்தேகம் எழுந்தது.

அதன் பின்பு சிவ பூமியின் சுவடுகளைத் தேடி நான் ஆராய்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில், 2006 ஆம் ஆண்டு பேராசிரியர் மகிந்த சோமதிலக எழுதிய சில சிங்கள மொழிக் குறிப்புகளை வாசித்தபோது எனது சந்தேகம் உர்ஜிதமானது. இச்சிலை ஓர் மன்னனின் சிலை அல்ல என அவர் குறிப்பிட்டிருந்ததை வாசித்தேன்.

அதன் பின்பு பொலநறுவைக்குச் சென்றேன். இந்தத் தடவை  அச்சிலையை ஆராயும் நோக்கத்தோடு அங்கு சென்றேன். வித விதமாக சிலையை ஒவ்வொரு கோணத்திலும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பொலநறுவையில் இச்சிலை பற்றிய அரிய சில குறிப்புகள் கிடைத்தன. அவற்றை வைத்து கொழும்பு தேசிய நூலகத்திலும் சில குறிப்புகளை தேடி எடுத்த போது இச்சிலை பற்றிய பல உண்மைகள் வெளிப்பட்டன. 

இச்சிலை 11 அடி 6 அங்குலம் உயரத்தில் ஓர் கற்பாறையின் மீது செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலையை டாக்டர் பரணவித்தான, மன்னன் பராக்கிரமபாகுவின் சிலை எனக் கூறக் கூறியுள்ளார். அண்மைக் காலத்தில் இச்சிலையை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் டாக்டர் பரணவித்தானவின் கூற்று பிழையானது எனக் கூறியுள்ளனர். இச்சிலை ஓர் மன்னனுக்குரிய லட்சணங்களைக் கொண்டிருக்க வில்லை எனவும், சிலையின் ஜடா முடி, கையிலுள்ள ஏடு, முகபாவம், தாடி, உடை போன்றவை இது ஓர் முனிவரின் வடிவத்திற்குரிய லட்சணங்களே அன்றி அரசனுடையது அல்ல என பேராதனை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் மஹிந்த சோமதிலக குறிப்பிட்டுள்ளார்.



பொலநறுவை கற்சிலை அகத்தியருடையதா?

புலத்தி நகரம் எனும் பொலநறுவையில் உள்ள கற்சிலை எந்த முனிவருடையது என பலரும் ஆராய்ந்துள்ளனர். இச்சிலை மன்னன் பராக்கிரமபாகுவின் சிலை என டாக்டர் பரணவித்தாண கூறுவதற்கு முன்பே இது அகத்திய முனிவருடையது என ஆய்வாளர்களான .. வின்சர், அன்ட்ரூனெல் ஆகியோர் கூறியுள்ளனர்.

எனினும் அகத்திய முனிவர் கையில் கமண்டலமும், தண்டமும் இருப்பது வழக்கம் மேலும் அகத்தியர் குள்ளமான தோற்றத்தை உடையவர். எனவே கையில் ஏட்டுச் சுவடிகளுடன், உயரமாகக் காணப்படும் இச்சிலை அகத்திய முனிவருடையது அல்ல என வேறு ஆய்வாளர்கள் கூறினர்.

பொலநறுவை கற்சிலை கருவூர்த் தேவருடையது எனக் கூறும் பேராசிரியர் மகிந்த சோமதிலக

இச்சிலை இராஜராஜ சோழனின் அரசகுருவான கருவூர்த் தேவரின் சிலை என பேராசிரியர் மகிந்த சோமதிலக்க குறிப்பிட்டுள்ளார். தஞ்சைப்பெரிய கோயில் எனும் பிரகதீஸ்வரர் கோயிலின் கருவறை யில் உள்ள சித்திரங்களில் இராஜராஜ சோழனுக்கு அருகில் கருவூர்த் தேவரின் உருவம் வரையப்பட்டுள்ளது. அவ்வுருவமும் பொலநறுவையில் உள்ள சிலையும் ஒரே வடிவத்தில் காணப்படுவதால் இது கருவூர்த் தேவருடையது என அவர் கூறியுள்ளார். எனினும் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கருவூர்த் தேவரின் சிலையை மன்னன் தனது இராஜதானியில் அரண்மனைப் பகுதியில் அமைக்காமல் அரண்மனையின் தொலைவில் அதுவும் தனியாக ஏன் அமைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தமது இராஜகுருவின் சிலையை தமது அரண்மனைக்கு அருகில் அல்லவா அமைத்திருக்க வேண்டும். எனவே இச்சிலை கருவூர்த் தேவருடையதல்ல என வேறு சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பொலநறுவை கற்சிலை கபிலமுனிவருடையதா?

மேலும் இச்சிலை கபிலமுனிவரின் சிலை என ஆங்கிலேயர் காலத்தில் தொல்பொருட்திணைக்கள அதிகாரியாக இருந்த எச்.சி.பி. பெல் கூறியுள்ளார். இவரது கருத்தை கங்குலி மற்றும் பேராசிரியர் சிறி குணதிலக ஆகியோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். மன்னன் பராக்கிரமபாகு கபில முனிவரின் நினைவாக ஓர் கட்டிடத்தை அமைத்தான் என சூளவம்சத்தில் குறிப்பிட்டுள்ளதை மேற்கோள்காட்டி அக்கட்டிடம் இன்று பொலநறுவையில் காணப்படும்பொத்குல் விஹாரைஎனவும், அதன் அருகில் இச்சிலை அமைந்திருப்பதால் இது கபில முனிவருடையது எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் இது ஓர் யூகமே தவிர இதற்கு வேறு எந்த ஆதாரங்களும் இல்லை என ஆய்வாளர்களால் கூறப்பட்டது.



பொலநறுவை கற்சிலை புலத்தியருடையது எனக் கூறும் கல்வெட்டு

இந்நிலையில் சர்ச்சைக்குரிய இச்சிலை உண்மையில் யாருடையது என ஆராய்ந்த பேராசிரியர் அநுராத செனவிரத்ன அதுவரை யாரும்  கண்டுபிடிக்காத ஓர் தடயத்தை இச்சிலையில் கண்டு பிடித்தார். சிலையின் தலைப்பகுதியின் பின்பக்கம் சிதைந்த நிலையில் ஓர் கல்வெட்டை இவர் கண்டுபிடித்தார். இக்கல்வெட்டில் நான்கு எழுத்துக்கள் காணப்பட்டன. இவை பு - - - - எனும் எழுத்துக்களாகும். இது இச்சிலைக்குரியபுலஸ்திஎனும் பெயர் என அவர் தெரிவித்தார். பொ..12ஆம் நூற்றாண்டுக்குரிய இச்சிலைக்குப் பின்பகுதியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சிலையை செதுக்குவதற்கு முன்பே பொறிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதன்படி இச்சிலை இராவணனின் பாட்டனாரான புலத்திய முனிவரின் சிலை என்பதற்கு இக்கல்வெட்டு உறுதியான ஆதாரம் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கல்வெட்டில் உள்ள எழுத் துக்கள் வழமைக்கு மாறாக மேலிருந்து கீழாக செதுக்கப்பட்டுள்ள தாகவும் பேராசிரியர் அனுராத செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

புலத்தி நகரில் சோழர் நிறுவிய புலத்தியர் சிலை

இன்றைய பொலநறுவை புலத்திநகர எனும் பெயரில் மகாவம் சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலத்திய முனிவரின் தலைநகரான புலத்தி நகரம் எனும் இன்றைய பொலநறுவையில் புலத்தியரின் கற் சிலை காணப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரி நாட்டின் வடகிழக்குப் பகுதியான இலங்கையை ஆட்சி செய்ததுடன் பொதிகை மலை, மேருமலை ஆகியவற்றில் தவம் செய்து சிவ வழிபாட்டை இலங்கையிலும், குமரி நாட்டிலும் தோற்றுவித்ததோடு, சிறந்த மருத்துவராகவும் விளங்கிய புலத்திய முனிவருக்கு, சிவ வழிபாட்டில் மிக்க ஈடுபாடுடைய சோழ மன்னர்கள் இலங்கையைக் கைப்பற்றியபோது புலத்தியர் ஆண்ட புலத்தி நகரையே தமது புதிய இலங்கையின் தலைநகராகக் கொண்டதோடு, அந்நகருக்கு ஜனநாத மங்கலம் எனப் பெயரிட்டதொடு, புலத்தியரின் ஞாபகச் சின்னமாக அவரின் கற்சிலையை புலத்தி நகரில் நிறுவியுள்ளனர் என்பதே  உண்மையாகும்.

 என்.கே.எஸ்.திருச்செல்வம்                                      வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

1 comment:

  1. சிறப்பான தகவல்கள். நன்றி

    ReplyDelete