Tuesday, June 2, 2020

தீவிர சிவபக்தனும் லங்காபுரி சக்கரவர்த்தியுமான இராவணனின் உண்மை வரலாறு-பகுதி 3


தீவிர சிவபக்தனும் லங்காபுரி சக்கரவர்த்தியுமான இராவணனின் உண்மை வரலாறு-பகுதி 3 

இராவணனின் பரம்பரையும், குலமும்


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/1003     2  ஜூன் 2020

 

குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் இக்கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

இராவணனின் பரம்பரையில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்குபவரே புலஸ்திய முனிவராவார். இவர் இராவணனின் தந்தையான விஸ்ரவ முனிவரின் தந்தையாவார். புலஸ்திய முனிவரின் பேரனே இராவணன். சுமார் 7000 வருடங்களுக்கு முன்பு குமரி நாட்டில் இலங்கை அமைந்திருந்த பிரதேசத்தை இராவணனின் பாட்டனான புலஸ்திய முனிவரே ஆட்சிசெய்து வந்துள்ளார். இராவணனின் ஆட்சியின் பின்பு ஏற்பட்ட கடற் கோளில் இலங்கையின் பெரும்பகுதி கடலில் மூழ்கியதாக நூல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இலங்கையின் பன்னிரெண்டில் பதினொரு பகுதி கடற்கோளில் அழிந்துபோனதாக ராஜாவலிய எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நூற் குறிப்புகளின்படி அன்று இலங்கையின் பரப்பளவு சுமார் 780, 000 சதுர கிலோமீற்றராக இருந்திருக்க வேண்டும். இன்று இலங்கையின் பரப்பளவு 65,000 சதுர கிலோமீற்றர் என்பது குறிப் பிடத்தக்கது. எனவே இன்று இருப்பது போன்று 12 மடங்கு பெரியதாக இலங்கை இருந்திருக்க வேண்டும். இது இந்தியாவின் பரப்பளவில் நான்கில் ஒரு பங்காகும். இருப்பினும் வால்மீகி இராமாயணத்தில், உத்தர காண்டத்தின் 5ஆம் சர்க்கத்தில் இலங்கை 300 யோஜனை நீளமும், 100 யோஜனை அகலமும் கொண்ட தீவு எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு யோஜனை 8 கி.மீ - 15 கி.மீ எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சராசரியாக 11 கி.மீ என எடுத்துக் கொள்ளப்பட்டால் இலங்கை 3300 கி.மீ நீளமும், 1100 கி.மீ அகலமும் கொண்ட நாடாக இருந்திருக்க வேண்டும். ஏறத்தாழ 36,30,000 (36 லட்சத்து 30 ஆயிரம்) சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டிருக்க வேண்டும். இன்றைய இலங்கை 442 கி.மீ நீளமும், 235 கி.மீ அகலமும், 65,000 சதுர கி.மீ பரப்பளவையும் கொண்டதாகும். இதன்படி இன்றைய இலங்கையை விட இராமாயண காலத்து இலங்கை சுமார் 55 மடங்கு பெரிதாக இருந்துள்ளது எனலாம். இது இந்தியாவை விட அளவில் சற்று பெரியதாகும். இந்தியா  32,87,000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. எனவே இராமாயண காலத்து இலங்கையின் பரப்பளவு இன்றைய இந்தியாவின் அளவைப் போல இருந்துள்ளது.

கடற்கோளில் அழிந்துபோன குமரி நாட்டின் எஞ்சிய சிறு நிலப்பரப்பு

எது எப்படி இருப்பினும் இராவணனின் ஆட்சிக் காலத்தின் போது இன்றைய இலங்கை அமைந்திருந்த பிரதேசம் பலமடங்கு பெரியதாக இருந்துள்ளது என்பது நூற்குறிப்புகளின்படி ஊர்ஜிதமாகிறது. இப்பெருநிலப்பரப்பே பண்டைய காலத்தில் குமரிநாடு என அழைக்கப்பட்டது. இக்குமரி நாட்டில் சிறுபகுதியே இலங்கைத் தீவாகும். இராவணன் காலத்திலோ, அதற்கு முன்பு புலஸ்திய முனிவர் ஆட்சி செய்த காலத்திலோ இப் பெருநிலப்பரப்பு இலங்கை நாடு என்ற பெயரில் அழைக்கப்படவில்லை. ஏனெனில் இராமாயணத்தில் இராவணனின் தலைநகர் என்றே இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இலங்காபுரி நகரம்என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிரஇலங்கை நாடுஎனக் குறிப்பிடப் படவில்லை.

வால்மீகி இராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் அனுமன் இலங்கையை அடைந்தது பற்றி குறிப்பிடுகையில் தாமரை மலர்கள் நிறைந்த அகழிகளால் சூழப்பட்ட அற்புதமான இலங்கை நகரமானது திரிகூட மலையின் முன் பக்கத்தில் அமைந்திருந்ததை அனுமன் கண்டான். நகரத்தைச் சுற்றித் தங்கச் சுவர்கள் கட்டப்பட்டிருந்தன. சீதையைக் கடத்திய நாளிலிருந்து இந்நகரமானது பயங்கரமான அரக்கர்களால் காக்கப்பட்டதுஎனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் பாலகண்டத்தில் தசரத சக்கரவர்த்தி பற்றி குறிப் பிடுகையில் தசரதன் அயோத்தியை கோசல நாட்டின் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தார்எனக் குறிப்பிடுகிறது. இராவணன் ஆண்ட நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல் நகரின் பெயரையே குறிப்பிட்டுள்ளார் வால்மீகி. ஆனால் தசரதன் ஆண்ட நாட்டின் பெயரை கோசலநாடு எனவும், நகரின் பெயரை அயோத்தி மாநகர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இராவணன் ஆட்சி செய்த நாடு குமரி நாடாகும். இராவணனின் முக்கிய நகரம் இந்நாட்டிலிருந்த லங்காபுரி நகரமாகும்.

உலகத்தின் பல பகுதிகளை ஆண்ட இராவண சக்கரவர்த்தி

இராவணன் ஆட்சி செய்த நகரத்தின் பெயரைக் குறிப்பிடும் வால்மீகி நாட்டின் பெயரைக் குறிப்பிடவில்லை. இதற்கு ஓர் முக்கிய காரணத்தையும் இராமாயணத்தில் காணலாம். பாலகண்டத்தில் விஸ்வாமித்திரர் தனது யாகத்தை வெற்றிகரமாக முடிப்பதற்காக இராமனைத் தன்னுடன் கூட்டிச் செல்ல தசரத மகாராஜாவிடம் அனுமதி கேட்க வருகிறார். அப்போது விசுவாமித்திரர் இராட்சசர்களின் அரசனான இராவணன் உலகம் முழுவதையும் அடக்கி ஆள்கிறான். அவன் எனது யாகத்திற்கு இடையூறு செய்ய நேரிடையாக வராமல் ஆற்றல் படைத்த இராட்சஷர்களான மாரீசனையும், சுபாஹுவையும் அனுப்பியுள்ளான்என தசரதனிடம் கூறுகிறார்.

இதில் இராவணன் உலகம் முழுவதையும் ஆள்பவனாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. எனவே இராவணன் உலகின் பல பகுதிகளையும் ஆட்சி செய்த மாபெரும் சக்கரவர்த்தி என்பது இக்கூற்றின் மூலம் புலனாகிறது. எனவே தான் வால்மீகி முனிவர் இராவணனின் ஆட்சியில் இருந்த நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை நகரின் பகுதிகளைப் பற்றிக் குறிப் பிட்டுள்ளார். இதன் மூலம் இராவணன் பல நாடுகளை ஆண்ட சக்கரவர்த்தி என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

கடற்கோளினால் அழிந்து போன குமரிநாடு உட்பட பல நாடுகளை இராவணன் ஆட்சி செய்து வந்தான். இராவணன் ஆட்சி செய்த நாடுகளில் ஒன்றான குமரிநாட்டின் வடகிழக்குப் பகுதியில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை நகரம் அமைந்திருந்தது. இராவணனின் ஆட்சியின் பின்பு ஏற்பட்ட கடற்கோளில் இராவணனின் இலங்கை நகரம் அமைந்திருந்த வடகிழக்குப்பகுதி மட்டும் எஞ்சிய நிலையில் குமரிநாட்டின் ஏனைய பகுதிகள் கடலுள் மூழ்கியுள்ளன. கடற்கோளுக்குத் தப்பிய இப்பகுதி இங்கிருந்த நகரின் பெயரிலேயே இலங்கை நாடு என பிற்காலத்தில் அழைக்கப்பட்டது. இதன்படி இராவணன் ஆட்சி செய்த நாடுகளில் மிகச் சிறிய பகுதியே இன்றைய இலங்கை என்பது உறுதியாகிறது.

குமரிநாட்டின் வடகிழக்குப் பகுதியை ஆட்சிசெய்த புலஸ்தியர்

இராவணனின் காலத்திற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு குமரி நாட்டின் வடகிழக்குப் பகுதியை இராவணனின் பாட்டனாரான புலஸ்திய முனிவர் ஆட்சி செய்து வந்துள்ளார். இவரின் தலைநகராக புலஸ்தி நகரம் விளங்கியுள்ளது. புலஸ்தியர் ஆட்சி செய்த புலஸ்தி நகரமே இன்றைய பொலநறுவை என ஆய்வாளர்களால் அடையாளம் காணப் பட்டுள்ளது. பொலநறுவையின் முக்கிய அடையாளச்  சின்னமாக, பராக்கிரம சமுத்திரத்தின் கரையில் உள்ள கற்சிலை விளங்குகிறது. இச்சிலை முன்பு பராக்கிரமபாகு மன்னனுடையது எனக் கூறப்பட்டு வந்த போதும், இது இப்பகுதியை ஆட்சி செய்த புலஸ்திய முனிவரின் சிலையே என ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராவணனுக்கு முன்பே இலங்கையில் சிவவழிபாட்டை தோற்றுவித்த இராவணனின் பாட்டனார்

இராவணனின் பாட்டனாரான புலத்திய முனிவர் அகத்தியரின் பிரியமான சீடரும், கமலமுனிவரின் பேரனுமாவார். இவர்சிவராஜ யோகிஎனப்பெயர் பெற்றதோடு திருமந்திர உபதேசம் பெற்றவர் எனவும் போகர் 7000 எனும் நூலில் கூறப்பட்டுள்ளது. திரணபிந்து எனும் ராஜரிஷியின் மகளான ஆவிற்பூ என்பவளை மணம் புரிந்த புலத்தியருக்கு விஸ்ரவசு எனும் மகன் பிறந்தான். விஸ்ரவசுவின் மகனே இராவணனாவான்.

புலத்திய முனிவர் பிரம்மாவின் புதல்வர்களில் ஒருவர் என புராணங்கள் கூறுகின்றன. புலத்தியர் மேரு மலையில் தவம்புரிந்த தாகவும், பொதிகை மலைச் சாரலில் சில காலம் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பொதிகைமலையில் அகத்தியருடன் இருந்த புலத்தியர் அங்கு பனங்காடு என்னுமிடத்தில் அகத்தியர் ஸ்தாபித்து வணங்கிய சிவலிங்கத்திற்கு அருகில் தானும் ஓர் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இராவணனுக்கு முன்பே இலங்கை அமைந்திருந்த குமரி நாட்டில் சிவலிங்க வழிபாட்டை தோற்றுவித்தவர் புலத்திய முனிவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவவழிபாட்டில் ஈடுபாடு கொண்டமையால் புலத்தியர்சிவராஜயோகிஎனப்பெயர் பெற்றார். புலத்தியர் ஸ்தாபித்த லிங்கம்கிருபாபுரீஸ்வரர்என அழைக்கப்படுகிறது.



சிவகிரியில் (சிகிரியா) மருத்துவ மாநாட்டை நடத்திய புலத்திய முனிவர்

மூலிகை மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற புலத்தியர் மருத்துவம் தொடர்பான பல நூல்களை எழுதியதாகக் கூறப்படுகிறது. புலத்தியர் தவம் செய்த மேருமலை குமரி நாட்டில் அமைந்துள்ளதாகவும் கூறப் படுகிறது. இலங்கை மேருவின் சிகரம் என புராணங்கள் கூறுகின்றன. சில ஆய்வாளர்கள் சிவனொளிபாதமலையையே மேருவின் சிகரம் எனக் கூறுகின்றனர். அதேசமயம் மேருமலை இலங்கையின் தெற்குப் பக்கம் கடல் கொண்ட குமரி நாட்டில் இருந்தது எனவும் கூறப்படுகிறதுகடலுள் மூழ்கிப் போன குமரி நாட்டில் ஏழு முனிவர்கள் சென்று குடியேறியதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வெழுவரில் புலத்தி யரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பொதிகை மலை, மேருமலை, குமரிநாடு, இலங்கை ஆகிய இடங்களுக்கும் புலத்திய முனிவருக்கும் நெருங்கிய தொடர் புள்ளமை தெரியவருகிறது. குமரிநாட்டின் வடகிழக்குப் பகுதியிலிருந்த இலங்கையை புலத்திய நகரிலிருந்து ஆட்சி செய்து வந்தவரே புலத்திய முனிவராவார். அக்கால கட்டத்தில் இமயமலையில் நடைபெற்ற மருத்துவ மகாநாடு புலத்தியர் தலைமையில் நடந்ததாகவும், பின்பு தனது ஆட்சிப்பகுதியில் இருந்த சிவகிரிமலையில் ஓர் மருத்துவ மகாநாட்டை இவர் நிகழ்த்தியதாகவும், மேலும் பல மூலிகை வனங்களை இலங்கையில் இவர் உருவாக்கியதாகவும் ஆய்வாளர் தனேஷ் கொடிப்பிலி ஆராச்சி, கலாநிதி சூரிய குணசேகர ஆகியோர் குறிப் பிட்டுள்ளனர். சிவகிரி மலையே இன்றைய சீகிரியாவாகும். உலக தவசிகள் மகாநாடு இமயமலையில் நடைபெற்ற போது இலங்கை யிலிருந்து புலத்திய முனிவர் அம்மாநாட்டில் கலந்து கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இராவணனின் பாட்டியான ஆவிற்பூ கன்னியாக இருந்து நீராடிய கன்னியா

புலத்திய முனிவரின் மனைவி கன்னியாக இருந்து நீராடிய இடமே இன்று நாம் காணும் கன்னியா என பஞ்சாப் ஆய்வாளர் அமிரித்சிங் கூறியுள்ளார். புலத்திய முனிவர் மேரு மலையில் தவம் செய்து கொண்டிருந்தபொழுது கன்னிப்பெண்கள் அங்கு வந்து பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது புலத்தியரின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டதால் கோபம் கொண்ட புலத்திய முனிவர் இனி இங்கு வரும் கன்னிப்பெண்கள் கர்ப்பமுண்டாவர் என சாபம் இட்டதாகவும், இது தெரியாமல் இங்கு வந்த ஆவிற்பூ எனும் பெண் கர்ப்பம் முற்றதாகவும், பின்பு அப்பெண்ணின் தந்தையின் வேண்டுகோளின் படி புலத்தியர் அப்பெண்ணை மணம் முடித்ததாகவும், கன்னியாக இருந்தே அப்பெண் ஓர் குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன. அதன்பின் அப்பெண் நீராடிய இடம், கன்னியான அப்பெண் பெயரிலேயே கன்னி என அழைக்கப்பட்டு அதுவே பின்புகன்னியாஎனத் திரிபடைந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பெண்ணே இராவணனின் தந்தையைப் பெற்றவரும், இராவண னின் பாட்டியுமான ஆவிற்பூ என்பவராவர்.

(தொடரும்...)

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

No comments:

Post a Comment