Friday, June 5, 2020

சவால்கள் நிறைந்த குடும்பிமலை (தொப்பிகல) ஆய்வுப் பயணம்-பகுதி 1




சவால்கள் நிறைந்த குடும்பிமலை ஆய்வுப் பயணம்-பகுதி 1


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/171     5 ஜூன் 2020

 
குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

சிவபூமியின் சுவடுகளைத் தேடி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல தடவைகள் சென்றுள்ளேன். அவ்வாறு நான் சென்ற இடங்களில் ஒன்று தான் குடும்பிமலை. யுத்தகாலத்தில் இவ்விடத்தின் பெயர் மிகவும் பிரபல்யமாகவும் இருந்தது. இம்மலையை சிங்கள மொழியில்  தொப்பிகல என அழைக்கின்றனர். ஆனால் தொப்பிகல் என்பது இப்பகுதியில் உள்ள வேறொரு மலையாகும். 

குடும்பிமலை அடிவாரத்தில் ஓர் தமிழ்க் கிராமமும் உள்ளது. இது மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கெல்லையில் உள்ள கடைசிக் கிராமமாகும்.  இங்குள்ள மலை உச்சியில் ஒர்கோயில் உள்ளதாகவும் அக்கோயிலில் ஓர் சிவலிங்கமும், முருக வேலும் உள்ளதாகவும் மட்டக்களப்பில் வசிக்கும்  நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன். அந்த மலை காட்டின் மத்தியில் இருப்பதாகவும், யுத்த காலத்தின் போது அவர் ஒரு தடவை அங்கு சென்றதாகவும், தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் அங்கு செல்ல முடியும் எனவும் கூறினார். அவர் என்னை அம்மலைக்கு கூட்டிச் செல்வதாகவும் கூறினார்.
அம்மலை உச்சிக்குச் சென்று சிவலிங்கத்தையும், வேலாயுதத்தையும்  பார்க்க வேண்டும் என ஆவல் கொண்டேன். அவர் கூறி ஒரு கிழமைக்குள் ஓர் சனிக்கிழமை அன்று அங்கு செல்ல முடிவெடுத்து, நண்பருக்கும் அறிவித்தேன். யுத்தம் முடிந்து ஒரு வருடம் பூர்த்தியான காலம் அது.

வெள்ளிக்கிழமை நண்பர் தொலைபேசியில் பேசினார். ஐயா, அந்த இடம் உயர் பாதுகாப்பு வலையமாம், முழுதும் ஆர்மி கொண்ட்ரோல் ஏரியாவாம், ஊர்க்காரர்களைத் தவிர வெளி ஆட்கள் யாரும் செல்ல முடியாதாம். மன்னிக்க வேண்டும் ஐயா, என்னால் வர முடியாது என்று சொன்னார். அன்று இரவு பயணத்தைத் தொடங்க இருந்தேன். அந்த வார பயணம் அத்தோடு தடைப்பட்டது. பெரும் ஏமாற்றமாக இருந்தது.

ஆனாலும் எனது ஆவல் அதிகரித்தது. அடுத்த வாரம் சில நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். எல்லோரும் அந்த இடம் தமக்குத்  தெரியாது என்றனர். காரணம் யுத்த காலத்தில் அம்மலை ஒரு கோட்டையாக விளங்கியது. எனவே சாதாரணமாக மட்டக்களப்பில் உள்ள மக்கள் அங்கு செல்வதில்லை. எனவே பலர் அந்த இடம் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் அங்கு சென்றதில்லை என அறிந்தேன்.

இந்நிலையில் எனது நண்பர் ஒருவர் மூலம் புதிய இன்னுமோர் நண்பரின் அறிமுகம் கிடைத்தது. அவர் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர். என்னைக் கூட்டிக் கொண்டு போவதாகச் சொன்னார்.

முதலாவது பயணம் தடைப்பட்டு இரண்டு கிழமையின் பின் ஓர் சனிக்கிழமை குடும்பிமலைக்கு செல்ல ஆயத்தமானேன். வழமைபோல வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் இருந்து பயணம் செய்ய ஆயத்தமானேன். வியாழக்கிழமை இரவு வந்தாறுமூலை நண்பர் தொலைபேசியில் அழைத்தார். ஐயா, வீட்டில் அம்மா போக வேண்டாம் என்று சொன்னா, அது பயங்கர ஏரியாவாம், போனால் திரும்பி வரமுடியாதாம், ஐயாவுடன் வர நான் மிகுந்த ஆவலாய் இருந்தேன், ஆனால் முடியாமல் போய் விட்டது, மன்னிக்க வேண்டும் ஐயா என்றார். எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இரண்டாவது முறையும் பயணம் தடைப்பட்டு விட்டது.

இருப்பினும் முயற்சியைக் கை விடவில்லை. தொடர்ந்து தெரிந்தவர்களைத் தொடர்பு கொண்டு எனக்குத் துணையாக வர ஒருவரைத் தேடினேன். எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் மட்டக்களப்பில் இருந்தாலும் அவர்கள் யாரும் அந்தப் பகுதிக்கு போய் இருக்கவில்லை என்றே அறிந்தேன். இப்படியே ஒரு மாதம் கழிந்து விட்டது.

அதன்பின்பு ஒரு புதிய நண்பரின் தொடர்பு கிடைத்தது. அவர் சித்தாண்டியைச் சேர்ந்தவர். இப்படியான பயணங்களில் ஆர்வம் மிக்கவர். குடும்பிமலைக்கு அருகில் உள்ள தரவைக் குளம் பகுதியில் அவரின் நண்பர் ஒருவர் இருப்பதாகவும், அவரையும் அழைத்துக் கொண்டு செல்லலாம் எனவும் எனக்கு நம்பிக்கை ஊட்டினார். முதலாவது பயணம் செல்ல ஆயத்தமான நாளில் இருந்து இரண்டு மாதங்கள் கழிந்து மூன்றாவது முறையாக குடும்பிமலை செல்ல ஆயத்தமானேன். வழமைபோல் வெள்ளிக்கிழமை இரவு பயணம் திட்டமிடப்பட்டது. 

வியாழக்கிழமை கடந்தது. நண்பரிடம் இருந்து அழைப்பு வரவில்லை. சிலநேரம் வெள்ளிக்கிழமை எடுத்து மன்னிக்க வேண்டும் ஐயா என்று சொல்வார் என எதிர்பார்த்தேன். வெள்ளிக்கிழமையும் நண்பரிடம் இருந்து அழைப்பு வரவில்லை. பின்னேரம் நானே நண்பரை தொலை பேசியில் அழைத்தேன். "என்ன பயணம் எல்லாம் சரிதானே, நான் இரவு கிளம்பப் போகிறேன்" என்று சந்தேகத்தோடு கேட்டேன். எல்லாம் சரி ஐயா, நீங்கள் வருவது மட்டும் தான் மிச்சம். வாருங்கள். நாளை காலை 7.30 மணிக்கு  சித்தாண்டி முருகன் கோயில் சந்தியில் உங்களுக்காகக் காத்திருப்பேன் என்றார்.

அளவில்லாத மகிழ்ச்சியோடு இரவு புறப்பட்டேன். அதிகாலை களுவாஞ்சிக் குடியில் உள்ள எனது தங்கையின் வீட்டுக்குச் சென்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆய்வுப் பயணத்துக்கு சென்றால் நான் களுவாஞ்சிக் குடியில் உள்ள தங்கை வீட்டில் தான் தங்குவேன். ஒவ்வொரு தடவையும் ஆய்வு செய்வதற்கு மட்டக்களப்புக்குச் சென்றால் தங்கையின் மகன், எனது மருமகன் சதீஸ் தனது மோட்டார் சைக்கிளை எனக்குத் தந்து விடுவார்.
அதிகாலை 5 மணிக்கு தங்கையின் வீட்டை அடைந்து, உடனே குளித்து, உடை மாற்றி விட்டு, காலை உணவை முடித்து விட்டு  காலை 6.45 க்கு களுவாஞ்சிக் குடியில் இருந்து கிளம்ப ஆயத்தமானேன். 

6.30 மணிக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சித்தாண்டி நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 7.30 க்குத் தானே சந்திக்க உள்ளோம். இப்போது ஏன் அழைக்கிறார் என சந்தேகம் வந்தது. அழைப்பை எடுத்தென். மறு முனையில் நண்பர் ஐயா... என்று தயக்கத்தோடு இழுத்தார். உடனே நான் என்ன என்னோடு வர முடியாதா? எனக் கேட்டேன். நண்பர் உடனே ஆமாம் ஐயா, மனைவிக்கு திடீரென கடுமையான காய்ச்சல், வைத்தியசாலைக்குக் கூட்டிக் கொண்டு போக வேண்டும், என்னை மன்னிக்க வேண்டும் ஐயா என்றார். நண்பரில் வீட்டில் அவரின் மனைவி போக வேண்டாம் என்று தடுத்து விட்டார் என்பதை அவர் சொல்லாமலேயே புரிந்து கொண்டேன்.

ஆனால் இந்தத் தடவை பயணத்தை நிறுத்தப் போவதில்லை. யார் வந்தாலும் வரா விட்டாலும் தனியாகவாவது செல்ல வேண்டும் என முடிவு செய்தேன். திட்டமிட்டபடியே 6.45 க்கு பயணம் ஆரம்பமானது. காலை வேளை குளிர்ந்த காற்று உடலை மோதிச் செல்ல மோட்டார் சைக்கிளில் உற்சாகமாக விரைந்து கொண்டிருந்தேன். தெரியாத இடம். தனியாகப் போகிறேன் என்ற எண்ணம் இருந்தாலும் இடையில் யாராவது துணைக்கு வருவார்கள் எனும் நம்பிக்கை மட்டும் இருந்தது.

சரியாக 7.30 மணியளவில் சித்தாண்டி சந்தியை அடைந்தேன். வண்டியை விட்டு இறங்கி முச்சந்தியில் இருந்த வழிப் பிள்ளையாரை வணங்கிவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தேன். சிறிது நேரத்தில் கிரான் சந்தியை அடைந்து அங்கிருக்கும் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று வணங்கி விட்டு, கோயிலில் நின்ற பெரியவர் ஒருவரிடம் குடும்பிமலைக்குச் செல்வது பற்றி விசாரித்தேன்.
ஊர்க்கார ஆட்களோடு செல்வது நல்லது. தரவை இராணுவ  முகாமுக்கு அப்பால் போக விட மாட்டார்கள் என்று சொன்னார். அருகில் கிராமங்கள் உள்ளனவா எனக் கேட்டேன். ஆம் கோரவெளி, திகிலிவட்டை, கூளாவாடி, ஆகிய ஊர்கள் இருக்கின்றன எனச் சொன்னார்.

இந்த ஊர்களில் யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்லலாம் என்ற நம்பிக்கையோடு, கிரான் சந்தியில் இருந்து இடது பக்கமாகத் திரும்பி குடும்பிமலை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தேன். சிறிது தூரத்தில் மாதுறு ஓயா ஆற்றுப் பாலத்தைக் கடந்தேன். ஆற்றின் ஓரமாக பாதை சென்றது. சிறிது தூரத்தில் புலி பாய்ந்த கல் எனும் இடத்தில் உள்ள நாற்சந்தியை அடைந்தேன். அங்கிருந்து வலது பக்கம் சென்றால் வடமுனையை அடையலாம். நேராக சென்றால் கோராவெளியை அடையலாம். இடது பக்கமாகச் செல்லும் பாதை குடும்பிமலைக்குச் செல்கிறது.    
        
வண்டியை இடது பக்கமாகத் திருப்பிச் சென்று கொண்டிருந்தேன். அது சிறிது பழுதடைந்த சிறிய தார் பாதை. சிறிது தூரத்தில் திகிலிவட்டை சந்தி காணப்பட்டது. சந்தியில் நின்ற ஒருவரிடம் திகிலிவட்டை எவ்வளவு தூரம் என விசாரித்தேன். 2 கட்டை தூரம் போக வேண்டும் என்றார். பாதை ஓரத்தில் ஊர் உள்ளதா எனக் கேட்டேன். கொஞ்ச தூரம் சென்றால் கூழாவடி என்ற ஓர் உள்ளது என்றார். கூழாவடியை நோக்கி முன்னேறினேன்.





















சுமார் 500 மீற்றர் தூரத்தில் பாதை ஓரத்தில் ஓர் வழிப் பிள்ளையார் கோயிலைக் கண்டேன். நேரம் அப்போது 8.30 மணி. வண்டியை நிறுத்தி விட்டு சென்று பார்த்தேன்.  ஓர் மரத்தடியில் திறந்தவெளி மரக்கோயிலாகக் காணப்படும் இக்கோயிலில் சுமார் 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட கருங்கல் பிள்ளையார் சிலை காணப்பட்டது. மிகவும் தொன்மை வாய்ந்த இச்சிலை சுதேச முறைப்படி, கரடு முரடான வடிவமைப்பைக்  கொண்டுள்ளது. பிள்ளையாரை வணங்கி விட்டு அங்கிருந்து மீண்டும் முன்னோக்கி சென்று கொண்டிருந்தேன்.

சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் ஓர் சந்தி காணப்பட்டது. அவ்விடத்தில் இருந்து இடது பக்கம் கிரவல் பாதை ஒன்று சென்றது. ஆள் நடமாட்டமே இல்லை. பாதையின் இரு பக்கமும் பற்றைக் காடுகள் காணப்பட்டன. ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அந்தக் கிரவல் பாதை எங்கே போகிறது? இப்பகுதியில் கோயில்கள் உள்ளனவா? என அவரிடம் கேட்டேன். அப்பாதை சிறுதண்ணிக்கல் என்னுமிடத்திற்குச் செல்வதாகவும், அங்கு ஓர் நாகதம்பிரான் கோயில் இருப்பதாகவும், சிறிது தூரம் சென்று வலது பக்கம் திரும்ப வேண்டும் என்றும் கூறிச் சென்றார். கிரவல் பாதை வழியாகத் திரும்பிச் சென்றேன். சிறிது தூரத்தில்   நாகதம்பிரான் கோயிலுக்கு செல்வதற்கு ஓர் வண்டிப் பாதையே காணப்பட்டது. இப்பாதை வழியாக ஓர் புல்வெளியைக் கடந்தவுடன்  ஆலமரத்துடன் கூடிய பசுமரச்சோலை ஒன்றைக் கண்டேன்.






















இச்சோலையின் நடுவில், ஆலமரத்தின் கீழ் நாகதம்பிரான் கோயில் அமைக்கப்பட்டிருந்தது. இக்கோயிலின் இடது பக்கம் நாகம் வாழும்  புற்றும், கோயிலைச்சுற்றி 5 சிறிய பரிவாரக் கோயில்களும் காணப்பட்டன. பிரதான நாககன்னி கோயில் கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டு வருகின்றமையைக் காணக்கூடியதாக இருந்தது.

கோயிலின் கருவறையின் பின் பக்கம் ஐம்பொன்னினால் வடிவ மைக்கப்பட்ட நாகத்தின் உருவம் காணப்பட்டது. பிள்ளையார் பரிவாரக் கோயிலில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலை மிகவும் தொன்மை வாய்ந்ததாகத் தெரிந்தது. சுமார் ஒரு அடி உயரமான இக்கற்சிலையே இக்கோயில் வளாகத்தில் காணப்படும் மிகவும் பழமை வாய்ந்த தொல்பொருட் சின்னமாகும். இங்கு கருங்கல்லில் ஆன பழமை வாய்ந்த ஆசனக்கல் ஒன்றின் உடைந்த பாகமும் காணப்பட்டது. நாகதம்பிரானை வணங்கி விட்டு நேரத்தைப் பார்த்தேன். காலை 9 மணி. கோயிலில் இருந்து திரும்பி, மீண்டும் குடும்பிமலை வீதியை வந்தடைந்தேன். குடும்பிமலை நோக்கிய பயணம் தொடர்ந்தது. சுமார் மூன்றரை கி.மீ தூரத்தில் இருந்த கூழாவடி எனும் சந்தியை சரியாக 9.20 க்கு அடைந்தேன்.

புலி பாய்ந்த கல்லில் இருந்து குடும்பிமலைக்குச் செல்லும் வீதியில் 7 கி.மீ தூரத்தில் கூழாவடி கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தின் வடக்குப் பக்கமாக பேரில்லாவெளிக் குளத்திற்கு ஓர்  பாதை செல்கிறது. இச்சந்தியின் இடது பக்கம் அரசினர் பாடசாலையும், வலது பக்கம் பிள்ளையார் கோயிலும் அமைந்திருந்தன.
பெரிய கூழா மரத்தின் கீழ் சீமெந்து மேடை அமைக்கப்பட்டு அதன் மீது 6 பிள்ளையார் கற்களை வரிசையாக வைத்து இக்கிராம மக்கள் பிள்ளையாரை வழிபடுகின்றனர். இதற்கு பாதுகாப்பாக மரத் தூண்களை நட்டு தகரக் கூரை போடப்பட்டுள்ளது. இக்கோயிலில் பழமை வாய்ந்த இரண்டு தொல்பொருள் சின்னங்கள் காணப்படுகின்றன. ஒன்று ஆலயத்தின் வாசலில் காணப்படும்  வட்ட வடிவமான முன்னடிக் கல். அடுத்தது கருங்கல்லில் அமைக்கப்பட்ட ஆசனக் கல்லின் ஓர் பாகம்.

கூழாவடி கிராமம் 1957 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றதாகவும், இங்கு தற்போது 100 தமிழ் சைவக் குடும்பங்கள் வசித்து வருவதாகவும் கிராம வாசிகள் கூறினர். தாம் இக்கிராமத்திற்கு குடிவந்த போது பெரிய கூழா  மரமொன்றின் கீழ் பழமையான ஓர் பிள்ளையார்  கல்லும், ஆசனக்கல், முன்னடிக்கல் மற்றும் சில கற்தூண்களின் துண்டுகளும் காணப்பட்டதாகவும், அச்சிலைக்கு மரம், தடி, ஓலை ஆகியவற்றைக் கொண்டு சிறிய கோயில் ஒன்றைக் கட்டி, பயபக்தியோடு வழிபட்டு வருவதாகவும் கிராம மக்கள் கூறினர்.

 



கூழாவடிப் பிள்ளையாரை வணங்கி விட்டு, குடும்பிமலைக்குச் செல்ல எனக்குத் துணையாக இந்தக் கிராமத்தில் ஒருவர் கிடைப்பார் என்ற நம்பிக்கையுடன் கோயில் அருகில் வசிக்கும்  ஆலய நிர்வாக உறுப்பினர் ஒருவரை சந்தித்தேன். எனது தேவையை அவரிடம் கூறினேன். குடும்பிமலை, மியன்கல்லு ஆகிய இரண்டு ஊர்களுக்கும் ஊர் காரர்களைத் தவிர யாரும் செல்ல முடியாது. எனவே அங்கு யாரும் வர மாட்டார்கள். போவதென்றால் தரவைக் குளம் இராணுவ முகாமில் அனுமதி பெற வேண்டும் என்றார். 

அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் ஏன் ஐயா அங்கு போகிறீர்கள். அது லேசுப்பட்ட காரியம் இல்லை. ஈரளக்குளம் சந்தியில் ஒரு செக் போயின்ட் உள்ளது. அதன் பின்பு மாவீரர் துயிலும் இல்லம் அருகில் இராணுவ முகாம் உள்ளது. அதன் பின்பு தரவைக் குளம் முகாம், பின்பு குடும்பிமலை சந்தி முகாம் , பின்பு மலை அடிவாரத்தில் இராணுவ முகாம் இவ்வளவு இடங்களையும் கடந்து குடும்பிமலையில் எப்படி ஏற முடியும்.  அநியாயமாக போய் சிக்கலில் மாட்டப் பார்க்கிறீர்கள். திரும்பிச் செல்லுங்கள் ஐயா என்றார். நான் உடனே ஐயா நீங்கள் கூறிய மாவீரர் துயிலும் இல்லம் எவ்விடத்தில் இருக்கிறது" எனக் கேட்டேன். தரவை இராணுவ முகாமைக் கடந்தவுடன் வலது பக்கம் தாமரைக் குளம் உள்ளது. குளத்தின் ஓரத்தில் வலது பக்கம் ஒரு பொட்டல் தரை இருக்கும். அந்த இடம் தான். ஆனால் அங்கு ஒன்றும் இல்லை. வெறும் பொட்டல் தரையும், புட்டியும் மட்டும் தான் உள்ளது என்றார் பெரியவர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.   

கூழாவடியில் இருந்து 5 கி.மீ தூரத்தில் தரவைக்குளம் இராணுவ முகாம் உள்ளது. அங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் குடும்பிமலை அமைந்துள்ளது. இன்றைய எனது இலக்கை அடைய இன்னும் 10 கி.மீ தூரத்தைக் கடக்க வேண்டும். உதவிக்கு யாரும் வருவதாகத் தெரியவில்லை. இவ்வளவு தூரம் வந்து விட்டு திரும்பிச் செல்வதா? சிவனே நீதான் எனக்கு ஒரு வழியைக் காட்ட வேண்டும் என்று சிவனை வேண்டிய வண்ணம் முன்னேறினேன்.  

நான் ஆய்வுப் பயணங்கள் செல்லும் போது சில சமயம் சில தவிர்க்க முடியாத தடைகள் ஏற்படும். ஆனாலும் நான் மேற்கொண்ட பயணத்தில் இருந்து பின் வாங்கியதில்லை. விடா முயற்சியோடு எனது இலக்கை அடைந்து நான் சென்ற காரியத்தை செய்து முடித்து விட்டுத் தான் திரும்புவேன்.

அது போல ஓர் தடை இன்றும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று ஏற்பட்ட தடை இதுவரை ஏற்படாத வகையில் ஓர் மிகப் பெரும் சவாலாக இருந்தது. எப்படி இதை சமாளிப்பது என்று யோசித்தவாறே நேரத்தைப் பார்த்தேன். சரியாக காலை 10 மணி. யோசித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை முன்னேறுவோம் என நினைத்த வண்ணம் குடும்பிமலை நோக்கி மோட்டார் வண்டியை செலுத்தினேன்.

( தொடரும்...)

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை










No comments:

Post a Comment