Saturday, June 20, 2020

காட்டின் மத்தியில் ஒரு கந்தசுவாமி கோயில் கபிலித்தை ஆன்மீகப் பயணம்-பகுதி 4


காட்டின் மத்தியில் ஒரு கந்தசுவாமி கோயில்கபிலித்தை ஆன்மீகப் பயணம்-பகுதி 4


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/177     20 ஜூன் 2020


குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)


நாம் எமது கபிலித்தை புனித பயணத்தை ஆரம்பித்த இடமான கொட்டியாகல எனும் கிராமமே இப்பகுதியில் உள்ள கடைசிக் கிராமமாகும். இக்கிராமத்தில் சுமார் 1000 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள கிரவல் வீதிகளின் இரண்டு பக்கங்களிலும் இலுக்குப் பற்றைகளே காணப்படுகின்றன. 

இக்கிராமத்தில் உள்ள மக்களின் பிரதான தொழில் சேனைப் பயிற்செய்கையாகும். மிகமுக்கியமாக சோளமும், நெல்லும் இவர்கள் பயிரிடும் முக்கிய பயிர்களாகும். சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சோளமும், 3000 ஏக்கர் நிலத்தில் நெல்லும் பயிர் செய்யப் படுகின்றன. இதைத் தவிர இங்குள்ள மக்களுக்கு வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கும் இன்னுமோர் முக்கிய தொழிலாக விளங்குவது கபிலித்தை போக்குவரத்து ஆகும்.   ட்ராக்டர் வண்டி, ஜீப் வண்டி ஆகியவற்றின் மூலம் கபிலித்தைக்கு செல்லும் மக்களை கூட்டிச் செல்வது, ஒரு நாள் தங்க வைத்து அடுத்த நாள் கூட்டிக்கொண்டு வந்து விடுவது. இதனால் இங்குள்ள பல வீடுகளில் சொந்தமாக ட்ராக்டர் வண்டிகள் உள்ளன. சற்று வசதியுள்ள சிலரிடம் ஜீப் வண்டிகளும் உள்ளன.

சாதாரணமாக ஒரு காட்டுக் கிராமம் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்தக் கிராமமும் இருக்கும். ஆனால் ஏனைய கிராமங்களைப் போல் இல்லாது வருடத்தில் ஆறு மாதங்கள் இந்தக் கிராமம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். ஏப்ரல் மாதம் புதுவருடம் முதல் செப்டம்பர் மாத நடுப்பகுதி வரையான ஆறு மாதங்கள் இங்குள்ள வண்டிகளும், அதன் உரிமையாளர்களும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கையில் பணம் அதிகளவில் புரளும் காலம் அதுவாகத்தான் இருக்கும். அந்தக் காலம் தான் கபிலித்தை சீசன் காலமாகும். அந்த சீசன் முடிந்ததும் அவர்கள் தங்கள் வழமையான தொழிலைச் செய்வார்கள்.

இப்படிப்பட்ட கொட்டியாகல கிராமத்திற்கு இப்படி ஒரு பெயர் உண்டாவதற்கும் ஓர் காரணம் உண்டு. கொட்டியாகல என்றால் தமிழில் புலிப்பாறைஎனப் பொருள்படும். இக்கிராமத்தின் வடமேற்கில் 4 கி.மீ தூரத்தில் வத்தேகம என்னுமிடத்தில் ஓர் மலைப்பாறை உள்ளது. கிராமத்தின் வடக்கில் 3 கி.மீ. தூரத்தில் வட்டராம என்னுமிடத்தில் ஓர் மலைப்பாறை உள்ளது. தெற்கில்   4 கி.மீ தூரத்தில் கோம்பஹெல எனும் மலை அமைந்துள்ளது.


இந்த மூன்று மலைகளும் முன்பு சிறுத்தைப் புலிகளின் கோட்டைகளாக விளங்கியுள்ளன. எந்நேரமும் இம்மலைகளில் புலிகள் அமர்ந்திருக்குமாம். எனவே இம்மலைகளுக்கு நடுவில் அமைந்த கிராமத்துக்கு கொட்டியாகல (புலிப்பாறை) எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. புலிகளுக்குப் பெயர்போன இவ்விடத்தில் மக்கள் குடியிருப்புகள் உண்டான பின்பு இங்கிருந்த புலிகள் எல்லாம் காட்டின் மத்திக்குப் போய் விட்டதாம். ஆனால் யானைகள் கோடை காலங்களில் கொட்டியாகல குளம், ஹெவன்பிட்டிய குளம் ஆகியவற்றுக்கு நீர் குடிக்க அடிக்கடி வருவதுண்டு. அச்சமயம் கிராமத்தின் உள்ளேயும் யானைகள் வந்து செல்லுமாம்.  

இத்தனை சிறப்புமிக்க கொட்டியாகல கிராமத்தில் நண்பர் சந்தன வீட்டில் இருந்து காலை 10.30 மணிக்கு எம்மை சுமந்து கொண்டு இரண்டு ட்ராக்டர் வண்டிகளும் விரைந்தன. சில நிமிட நேரத்தில் போகஸ் ஹந்திய எனும் அரசமரச் சந்தியின் வலது பக்கம் வண்டி திரும்பியது. இச்சந்தியில் இருந்து சற்று தூரத்தில் கப்பரகல எனும் சந்தி காணப்பட்டது. இங்கு சிறிய முருகன் கோயில் ஒன்று உள்ளது. கோயிலை அடுத்து சற்று தூரத்தில் ஹேவன்பிட்டிய குளம் அமைந்துள்ளது. அச்சந்திக்கு அப்பால் வீடுகளைக் காண முடியவில்லை. இலுக்குப் பற்றைக் காடாக இருந்தது.


நாம் கடந்து வந்த 5 நிமிட பயணம் சாதாரணமாக இருந்தது. இங்கிருந்து காட்டுப் பாதை ஆரம்பமானது. பாதை குன்றும் குழியுமாக இருந்ததால் ட்ராக்டர் பெட்டி குலுங்கியது. பெட்டியின் ஓரங்களைக் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டோம். அதனால் ஓரளவு மேலே தூக்கி அடிக்கப் படுவது குறைவாக இருந்தது. 

அங்கிருந்து 5 நிமிட பயணத்தின் பின் ஓர் சிறிய பள்ளத்தைக் கடந்தோம். அதுதான் குருப்பன் ஓடை ஆறு. ஆனால் ஆற்றில் மருந்துக்குக் கூடத் தண்ணீரை  காணவில்லை. மணல் மட்டுமே காணப்பட்டது.

அரை மணித்தியால பயணத்தின் பின் காட்டுப் பாதையின் வலது பக்கம் ஓர் மலை தெரிந்தது. அதுதான் சிறுத்தைப் புலிகள் வாழ்ந்த மூன்று மலைகளில் ஒன்றான கோம்பஹெல மலை. மலையைப் பார்த்த 5 நிமிட பயணத்தின் பின் ஓர் முக்கிய இடத்தை அடைந்தோம். அது தான் காட்டின் எல்லை ஆரம்பமாகும் இடம். இங்கிருந்து தான் அடர்ந்த காடு தொடங்குகிறது.

இவ்விடம் நுகே ஹந்திய என அழைக்கப்படுகிறது. இங்கு தான் எல்லை முருகன் கோயில் அமைந்துள்ளது. அவ்விடத்தில் வண்டியை நிறுத்தினார் சந்தன. இங்கு  5 அடி உயரமான மேடை ஒன்றின் மீது கையில் வேல் ஏந்திய நிலையில் சுதையினால் செய்யப்பட்ட முருகப் பெருமானின் சிலை ஒன்று திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்தது. முருகனின் தலையின் பின்பக்கம் ஒளி வட்டமும், மேல் பகுதியில் சிறிய கூரையும் அமைக்கப்பட்டிருந்தது. முருகனின் சிலைக்கு நான்கு பட்டுத் துண்டுகள் சாத்தப்பட்டிருந்தன.


மேடையின் கீழ்ப்பக்கம் ஒரு சட்டியில் விபூதியும், அதில் ஊதுபத்திக் குச்சிகள் குத்தப்பட்டும், அருகில் சிறிய பித்தளை விளக்கும், சீமேந்தில் செய்யப்பட்ட இரண்டு அடி உயரமான கற்பூரத் தட்டும் காணப்பட்டன. சிலையின் பின்பக்கம் முறித்துப் போடப்பட்ட மரக் கொப்புகளும் நிறைந்து காணப்பட்டன. சிங்கள மக்கள் காடுகளில் பயணம் செல்லும் போது அங்கிருக்கும் காட்டுக் கோயில்களில் உள்ள தெய்வங்கள் தம்மைக் காக்க வேண்டி மரக்கொப்புகளை முறித்து வைத்து வணங்கிச் செல்லும் வழக்கம் உள்ளது. அவ்வாறு வைக்கப்பட்ட கொப்புகளையே நாம் காணக் கூடியதாக இருந்தது. முருகன் சிலையின் பின்பக்கம் உயரமான, நேரான கருங்காலி மரம் ஒன்று வளர்ந்திருந்தது.

எல்லோரும் வண்டியை விட்டு இறங்கி கற்பூரம் கொளுத்தி முருகனை வணங்கினோம். சிலர் அருகில் இருந்த மரங்களில் இருந்த கொப்புகளை முறித்து முருகன் சிலையின் கீழே வைத்து வணங்கினர். ஒருவித பயபக்தியோடு, முதன் முதலாகக் கபிலித்தைக் காட்டுக்குள் பிரவேசிக்கும் யாத்திரீகர் அனைவருக்கும் காட்டு எல்லையில் முருகனைக் கண்டது அனைவரின் முகத்திலும் ஓர் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முருகனை வழிபட்டபின் சரியாக 11 மணிக்கு மீண்டும் பயணம் தொடர்ந்தது. அதுவரை இலுக்குப் பற்றைக் காட்டில் பயணம் செய்த நாம் இப்போது அடர்ந்த காட்டுக்குள் பிரவேசித்தோம். இக்காட்டுப் பாதை வாகனத்தின் இரண்டு சில்லுகளின் அடித்தடம் போல நடுவில் மேடாகவும், இரண்டு பக்கங்களும் பள்ளமாகவும் காணப்பட்டது. உண்மையில் இது பாதை அல்ல. மாரி காலத்தில் வெள்ளநீர் ஓடிய பள்ளங்கள். எனவே  சில இடங்களில் மணல் நிறைந்தும், ஒடுங்கி, வளைந்து வளைந்து மரங்களுக்கிடையில் செல்லும் பாதையாகக் இது காணப்பட்டது. அடர்ந்த காடு என்பதால் நடுப்பகல் வேளையாக இருந்தும் சூரிய வெயில் நிலத்தில் படவில்லை. சற்று இருட்டாகவே தென்பட்டது.  




அப்போது சந்தன எம்மிடம் ஓர் வேண்டுகோள் விடுத்தார். தயவு செய்து எல்லோரும் ட்ராக்டர் பெட்டியின் ஓரங்களைப் பிடித்துக் கொண்ட வர வேண்டாம் என்றார். எல்லோரும் அதிர்ச்சியில் என்னைப் பார்த்தனர். ஏன் என்றால் குலுங்கிக் குலுங்கிச் செல்லும் வண்டியின் பெட்டிகளில் இருந்து நாம் மேலே தூக்கி வீசப்படாமல் இருப்பதற்கு உள்ள ஒரே ஒரு பிடிமானம் பேட்டியின் ஓரங்கள் தான். ஆனால் இப்போது அதையும் பிடிக்க வேண்டாம் என்கிறாரே.

நண்பர் சந்தனவிடம் ஏன், என்ன காரணம் என்று கேட்டேன். அடர்த்தியான மரங்களின் ஊடாகவே பாதை உள்ளது. வண்டி செல்லும் போது ட்ராக்டர் பெட்டியின் ஓரங்கள் மரங்களில் உராய்ந்து கொண்டே போகும். கையை வைத்திருந்தால் கை மரங்களில் உராய்ந்து காயத்தை ஏற்படுத்தி விடும். எனவே கைகளை உள்ளே வைத்திருங்கள் என்றார்.

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். இனி நம் பாடு பெரும் பாடுதான் என ஒவ்வொருவரும் மனதில் நினைத்துக் கொண்டதை  அந்தப் பார்வையின் மூலம் நான் புரிந்து கொண்டேன். வேறு வழியில்லாமல் இப்போது ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டோம். பாதை சீராக இல்லாதபடியால் குலுங்கல் அதிகரித்தது. சில இடங்களில் எல்லோரும் குண்டுக் கட்டாக ஒரு அடி உயரத்துக்கு மேலே போய் வந்தோம். இடுப்பு எலும்பு முறிந்து விடும் போல் இருந்தது. ட்ராக்டர் பெட்டியில் தும்பு மெத்தைகள் போடப் பட்டிருந்ததால் பாதிப்பு அதிகமாக இருக்கவில்லை.

வண்டி மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது. எல்லை முருகன் கோயிலில் இருந்து 45 நிமிட குலுங்கல் பயணத்தின் பின் காடு முடிந்து ஓர் வெளி காணப்பட்டது. எல்லோரின் முகத்திலும் ஓர் சந்தோசம். எல்லோரும் ட்ராக்டர் பெட்டியின் ஓரங்களை மீண்டும்  கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

அவ்விடம் காட்டின் நடுவில் உள்ள சேனைப்பயிர் செய்யப்பட்ட இடம் போல் தெரிந்தது. சேனையின் நடுவில் இருந்த மரத்தின் மேல் காவற் பரண் ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. நண்பரிடம் கேட்டேன். சந்தன, என்ன இது காட்டின் மத்தியில் சேனைப்பயிர் செய்த இடமா? என்று கேட்டேன். ஆம் சேனைப்பயிர் செய்த இடம் தான். ஆனால் சட்டவிரோதமான சேனைப்பயிர் செய்த இடம். பல தடவைகள் காவல் துறையினரால்  சுற்றி வளைக்கப்பட்ட இடம். அதனால் இப்போது யாரும் இங்கு பயிர் செய்வதில்லை என்றார். அது என்ன பயிர் என்பது அப்போது தான் புரிந்தது.


அவ்விடத்தை அடுத்து ட்ராக்டர் வண்டிகள் இரண்டும் மீண்டும் காட்டுக்குள் புகுந்தன. மீண்டும் கைகளை உள்ளே இழுத்துக் கொண்டோம். மேலும் கீழும் வீசப்பட்டு, பக்கவாட்டில் வீசப்பட்டு, இருந்த இடத்திலிருந்து அங்கும் இங்கும் சாய்ந்தும் பயணித்துக் கொண்டிருந்தோம். சில இடங்களில் பாதையின் குறுக்கே யானைகள் முறித்துப் போட்ட மரங்கள் விழுந்து கிடந்தன. சில இடங்களில் பாதையில் பெரிய பள்ளங்கள் காணப்பட்டன. இப்படியான இடங்களில் வண்டியை காட்டுக்குள் திருப்பி, மரங்களுக்கிடையில் செலுத்தி, மிகவும் லாவகமாக  கொண்டு சென்றனர் நண்பர்கள். அவ்விடங்களில் மர வேர்களின் மேல் ட்ராக்டர் பெட்டிகள் ஏறி, பள்ளத்தில் வீழ்ந்து, மீண்டும் ஏறி எம்மை அலைக்கழித்தன. அந்த சமயத்தில் நாம் மேலே தூக்கி வீசப் பட்டபோது மரக்கிளைகளில் தொங்கிய இலைகளை எங்கள் தலைகள் தொட்டு வந்தன.                                                                                                                                                                                                                                                                      இப்படியாக 30 நிமிட நேர பயணத்தின் பின் நிழல் தரும் மரங்கள் நிறைந்த ஓர் இடத்தில் வண்டிகளை நிறுத்தினார்கள். நேரம் அப்போது பகல் 12.20. இவ்விடத்தில் ஓர் கற்பாறை அமைந்துள்ளது. இது தெலபோகல என அழைக்கப்படுகிறது. இது கபிலித்தைக் கோயிலுக்குச் செல்பவர்களின் இடைத்தங்கல் இடமாகும். கபிலித்தைக்குச் செல்பவர்கள் வண்டிகளில் இருந்து இறங்கி, உணவு உட்கொண்டு  அல்லது தேநீர் அருந்தி, சிறிது நேரம் இவ்விடத்தில் ஓய்வெடுத்து, தமது உடல் களைப்பைப் போக்கிச் செல்வார்கள். அதனால் இது வாடிகல எனவும் பெயர் பெற்றுள்ளது. இவ்விடத்தில் ஏற்கனவே ஓர் ட்ராக்டர் வண்டியில் வந்த சிலர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.




எமது யத்திரீகர்களும் ட்ராக்டர் பெட்டிகளில் இருந்து மகிழ்ச்சியாக இறங்கினர். வண்டியில் கட்டைகள் போல சுருண்டு கிடந்த எல்லோரும் இறங்கி கைகால்களை நீட்டியது உடல் வலியை சற்று குறைத்தது. இவ்விடத்தில் இது ஒரு தெய்வ வனம். இங்கு ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள் என சிங்கள மொழியில் எழுதப்பட்ட பெயர்ப் பலகைகள் மரத்தில் தொங்க விடப் பட்டிருந்தன.

இவ்விடத்தில் ஏதாவது உணவு உண்டு விட்டு செல்லலாமென குருசுவாமி கூறினார். அதன்படி கொண்டு வந்த பாத்திரங்களில் சிலவும், நீர் நிரப்பப்பட்ட பெரிய கேன்களும், அரிசி, தேங்காய்ப் பால்மா ஆகியவையும் இறக்கப்பட்டன. அங்கு ஓர் அவசர சாப்பாடு தயார் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. சிறிது நேரத்தில் பால்சோறு தயாரானது. குருசுவாமி எல்லோருக்கும் பால்சோறு பரிமாறினார். பயணக் களைப்பு, பசி ஆகியவற்றினால் எல்லோரும் மிகவும் ஆவலுடன் பாற்சோறை உண்டு மகிழ்ந்தனர். அங்கிருந்த கற்பாறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.



சுமார் 30 நிமிடங்களில் மீண்டும் பயணம் தொடர்ந்தது. அடர்த்தியான மரங்கள் நிறைந்த குகைக்குள் பயணம் செய்வது போல இருந்தது. இவ்வடர்த்தியான காடு மொறமண்டிய காடு எனும் பெயரில் அழைக்கப் படுகிறது. இங்கு அதிகளவில் கருங்காலி மரங்கள் காணப்பட்டன. மதிய உணவு உண்டு சுமார் முக்கால் மணி நேர பயணத்தின் பின் மணல் நிறைந்த ஓர் பள்ளத்தில் வண்டி இறங்கியது. அது தான் கொட்டியாகலைக்கும், கும்புக்கன் ஆற்றுக்கும் இடையில் ஓடும் பெரிய ஆறு. இதன் பெயர் அழகொல்ல ஆறு. மழைகாலங்களில் கபிலித்தைக்கு செல்லும் யாத்திரீகர்களின் வாகனங்களை இந்த ஆற்றில் இறக்கி ஏற்றுவது தான் மிகவும் சவாலாக இருக்குமாம். அப்படிப்பட்ட சவால் மிக்க அழகொல்ல ஆறு இப்போது ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் மணலை மட்டும் தன்னகத்தே கொண்டு அமைதியாகக் காணப்பட்டது.

ஆற்றுப் பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறும் போது எங்கள் விலா எலும்புகள் ஒரு வழியாகி விட்டன என்று தான் சொல்ல வேண்டும். இவ்வாற்றைக் கடந்ததும் பாதையின் மிக ஓரத்தில் கரடுமுரடான பெரிய உடுண்டையான பாறை காணப்பட்டது. எல்லோரும் பெட்டியின் இடது பக்கம் வாருங்கள், வலது பக்கம் பாறை உள்ளது, கவனம், என்றார் சந்தன. எல்லோரும் கவனமாக இடது பக்கம் நகர்ந்தோம். சுமார் 10 அடி உயரமான பாறை பாதையின் ஓரத்திலே காணப்பட்டது. ட்ராக்டர் பேட்டியின் ஓரங்கள் பாறையில் உரசிச் சென்றன. கொஞ்சம் அசந்திருந்தால் பாறை தலையைப் பதம் பார்த்திருக்கும்.


இவ்விடத்தைக் கடந்தவுடன் வலஸ்தெல்ல எனும் காடு அமைந்துள்ளது. இக்காடு கரடிகள் அதிகமாக வாழும் காடு. இக்காட்டில் உள்ள கோங்கெட்டு ஆற்றையும் கடந்தோம். இவ்வாற்றிலும் மணல் மட்டுமே காணப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் பாதையின் ஓரத்தில் சரசரவென்ற சத்தம் கேட்டது. நண்பர் சந்தன பார்த்து விட்டு அதோ சிறுத்தை ஓடுகிறது தெரிகிறதா என்று கேட்டார். பார்த்தோம் மரங்கள் சத்தமாக அசைந்தன. சிறுத்தை ஓடி விட்டது. இப்படித்தான் பாதைக்கு அருகில் சிறுத்தைகள் வருமாம். வண்டிகளின் சத்தம் கேட்டதும் ஓடிவிடுமாம். இப்பகுதியில் கோட்டைச் மதில் சுவர் போன்ற ஆறு, ஏழு அடி உயரத்தில் வேர்களைக் கொண்ட மருத மரங்கள் காணப்பட்டன.


தொடர்ந்து காட்டுக்குள் எமது வண்டிகள் ஓடிக்கொண்டிருந்தன. இடையில் இன்னுமோர் ஆற்று மணலைக் கடந்தோம். அது கரதங்க ஆறு. இவ்விடத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் காட்டுப்பாதை இரண்டாகப் பிரிந்தது. இடது பக்கம் சென்றால் கும்புக்கன் மடத்துறை அம்மன் கோயிலடிக்குச் செல்லலாம் என்றார் நண்பர். நாம் வலது பக்கம் திரும்பிச் சென்றோம். கபிலித்தையை நெருங்கி விட்டோம். பத்து நிமிட நேரத்தில் கந்தக் கடவுளின் கபிலித்தை வனத்தில் உள்ள கும்புக்கன் ஆற்றங்கரையை அடைந்தோம். நேரம் அப்போது சரியாக பிற்பகல் 3.20. சுமார் 5 மணி நேர சவாலான காட்டுப் பயணத்தின் பின் கந்தனின் கபில வனத்தை அடைந்தோம்.  

எல்லோரும் அரோகரா எனும் கோஷத்தோடு ட்ராக்டர் பெட்டிகளில் இருந்து இறங்கினர். இடுப்பு பயங்கர வேதனையைக் கொடுத்தது. உடல் நன்றாக வலித்தது. பல மணி நேரம் கால்களை மடக்கிய நிலையில் அமர்ந்து இருந்ததால் முழங்கால்கள் வலித்தன. பின்னால் வந்த ட்ராக்டர் பெட்டியில் இருந்தவர்கள் தூசியில் குளித்து மஞ்சள் வர்ணத்துடன் இறங்கினர். சிலரைக் கைத்தாங்களாக இறக்கினோம். இத்தனை கஷ்டங்களும், வேதனைகளும் இருந்தாலும் எல்லோர் முகத்திலும் ஓர் ஆனந்தக் களிப்பு தெரிந்தது. அதுதான் கபிலித்தைக் கந்தப் பெருமானின் சந்நிதியை அடைந்து விட்டோம் எனும் மகிழ்ச்சி.




இந்தக் கபில வனத்தில் அப்போது சில அற்புதங்கள் நடக்கும் என  எமக்குத் தெரியவில்லை. இங்கு நாம் பிரசாதங்கள் படைத்து பூஜைகள் செய்ய ஆயத்தமாக இருந்தோம். ஆனால் எம்மால் அவற்றை செய்ய முடியவில்லை. அங்கே திடீரெனத் தோன்றிய ஒருவர் எமக்காக பூஜைகள் செய்வார் என நாம் அப்போது அறிந்திருக்கவில்லை. யார் அவர்?

(மிகுதி நாளை....)

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                        
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

No comments:

Post a Comment