Sunday, June 14, 2020

காட்டின் மத்தியில் ஓர் கந்தசுவாமி கோயில் கபிலித்தை ஆய்வுப் பயணம்-பகுதி 2


காட்டின் மத்தியில் ஓர் கந்தசுவாமி கோயில்கபிலித்தை ஆய்வுப் பயணம்-பகுதி 2


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/175     15 ஜூன் 2020






குறிப்பு:
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)

எனது நண்பர் தேசாந்தவிடம் கபிலித்தை முருகன் கோயிலுக்குச் செல்லும் முன்பு கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள் பற்றிக் கேட்டேன். அவர் கூறிய விரத முறைகளும், கபிலித்தை தொடர்பான வேடர்கால சம்பிரதாயங்களும் பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கின.

கபிலித்தை முருகன் கோயிலுக்குச் செல்லும் முன்பு பல பாரம்பரிய விரத முறைகளைக் கடைப் பிடிக்க வேண்டுமாம். அவை 21 நாட்கள் பூரண விரதம் இருக்க வேண்டும். இவ்விரதத்தின் போது புலால் உண்ணாமை, துர்வார்த்தை பிரயோகிக்காமை, தீய செயல்கள் செய்யாமை, கோபம் கொள்ளாமை, பிறருக்கு தீங்கு நினையாமை ஆகியவையும் பிரமச்சரியம், எளிமையான வாழ்க்கை முறை, தீட்டு தொடக்கு ஆகியவற்றில் விலகி இருத்தல், சுத்தமாக இருத்தல், அமைதி, தெய்வத்தின் மீது பூரண நம்பிக்கை போன்றவற்றை கட்டாயமாகக் கடைப் பிடித்தல் வேண்டும் என்றார் நண்பர். அவர் கூறிய இந்த விபரங்களோடு கபிலித்தை பற்றி ஆராய்ந்த போது மேலும் பல விடயங்கள் கிடைத்தன.



கபிலித்தைப் பகுதி குடியிருப்புக்கள் எதுவும் இல்லாத அடர்ந்த காடு. கரை புரண்டோடும் காட்டாறுகள், சேற்றுப் புதை குழிகள், திடீரெனப் பெய்யும் அடைமழை போன்ற இயற்கையான ஆபத்துக்கள் இக்காட்டில் உள்ளன.

இவற்றைத் தவிர கொடிய காட்டு விலங்குகள், விஷப் பூச்சிகள் மூலம் ஏற்படும் ஆபத்துக்களும் உள்ளன. மேலும் இரவில் கடும் குளிர், காரிருள் போன்றவையும் எமக்கு சவாலாக அமைகின்றன.

எனவே இத்தனை ஆபத்துக்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் மேற்சொன்ன விரதக் கட்டுப்பாடுகளும், தெய்வத்தின் மீதான அதீத பக்தியுமே இக்கோயிலை நாம் சென்றடைவதற்கு அனுகூலமாகவும், சாத்தியமானதுமாக அமைகின்றன. இவ்விடயங்களை சட்டை செய்யாமல் பொழுது போக்கிற்காக கபிலித்தைக்குச் சென்றவர்கள் பல ஆபத்துக்களை சந்தித்து, வழிதவறி, ஆலயத்துக்குச் செல்ல முடியாமல் திரும்பி வந்த சம்பவங்கள் பல உண்டு.



கபிலித்தையில் வேடர் கால சம்பிரதாயங்கள் பல உள்ளன. கும்புக்கன் ஆற்றைக் கடந்து அக்கரையில் உள்ள கோயிலுக்குப் போகும் முன்பு இக்கரையிலே தங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்த பின்பே ஆற்றைக் கடந்து முருகன் கோயிலுக்குச் செல்கின்றனர். ஏனெனில் கோயில் அமைந்திருக்கும் இடத்தில் யாரும் தங்குவதில்லை.

கோயிலுக்குச் செல்வதற்கு முன்பு கும்புக்கன் ஆற்று மணலில் 7 கிணறுகள் தோண்டி ஒவ்வொரு கிணற்றில் இருந்தும் நீரை ஏழு தடவைகள் எடுத்துக் குளித்து விட்டு, ஏழு தானியங்கள், ஏழு பழங்கள், ஏழு பூக்களுடன் ஈரத்துணியுடன் சென்று வணங்க வேண்டும்.


கோயிலுக்குக் கொண்டு செல்லும் பாத்திரங்கள், விளக்குகள், பழங்கள், பூக்கள் எல்லாவற்றையும் மணலில் தோண்டிய கிணற்றில் மஞ்சள்தூள் இட்டு, கலக்கி அந்நீரில் கழுவிய பின்பே கொண்டு செல்ல வேண்டும்.

வேடர்கள் கடைப்பிடித்து வந்த இப்பழமையான வழமை தற்போது சற்று மாற்றமடைந்து விட்டது. தற்போது கும்புக்கன் ஆற்றில் குளித்து விட்டு வெள்ளை உடுப்பு உடுத்தி, இக்கரையில் இருக்கும் அரச மரத்தையும், அதன் அருகில் உள்ள பத்தினி அம்மனையும் வணங்கி விட்டே ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் சென்று முருகனை வணங்குகின்றனர்.


கபிலித்தை முருகன் கோயிலில் ஏனைய கோயில்களைப் போல கட்டிடங்கள் எதுவும் இல்லை. ஐயர், பூசாரிகளும் இல்லை. பழமை வாய்ந்த ஒரு புளிய மரமும்,, அதன் கீழே ஓர் சிறிய மேடையுமே உள்ளன. இம்மேடையில் வேல், சூலம், சிறிய முருகன் சிலைகள் போன்றவையே காணப்படுகின்றன. இப்புளிய மரமும், வேல், சூலம், முருகன் சிலை ஆகியவையுமே இவ்வாலயத்தின் அபார சக்தி மிக்க சின்னங்களாகும்.

இப்புளிய மரத்தின் கீழேயே முருகப் பெருமான் என்றும் உறைந்திருப்பதாக நம்பப்படுகிறது. எனவே இவ்விடத்தை சிங்கள மொழியில் சியம்பலாவே தேவாலய என அழைக்கின்றனர்.
இப்புனித புளிய மரத்தைச் சுற்றி 30 அடி சுற்றளவுக்கு ஒரு புல், பூண்டு கூட வளராமல் சுத்தமாகக் காணப்படுகிறது. அடர்ந்த காட்டின் மத்தியில் இருக்கும் இவ்விடத்தில் மட்டும் புல், பூண்டு செடி முளைக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. மரத்தில் இருந்து விழும் இலை குலைகள் கூட இவ்விடத்தில் காணப் படுவதில்லையாம். எப்பொழுது பார்த்தாலும் இவ்விடம் கூட்டித் துப்பரவு செய்யப்பட்டது போல் இருக்குமாம். இங்கு சென்று வந்தவர்கள் எல்லோரும் இவ்விடம் சுத்தமாகவே இருப்பதாகக் கூறுகின்றனர். மனித சஞ்சாரம் இல்லாத இக்காட்டில், மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படும் வனத்தில் ஆலய வளவு மட்டும் இலை குலைகள் கூட இல்லாமல் புல் பூண்டு வளராமல் இருப்பது எப்படி?

கந்தக் கடவுளின் அற்புதங்கள் நிறைந்த இப்புனித வனத்திலே முருகப் பெருமானைத் தரிசிக்க வந்து கபிலித்தைப் பகுதியிலேயே தங்கியிருந்து சமாதியான சித்தர்களும், முனிவர்களுமே இங்கு சூட்சுமமாக உலாவுவதாகவும், அவர்களே காட்டின் மத்தியில் உள்ள இத் திறந்தவெளி மரக் கோயிலைப் பராமரித்து வருவதாகவும், இவ்வாலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பாகவும், துணையாகவும் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.


மிகப்பண்டைய காலத்திலே யாள காட்டில் வாழ்ந்த வேடர்களாலேயே கபிலித்தையில் முருகன் கோயில் உருவாக்கப்பட்டது. வேடர்களால் வழிபாடு செய்யப் பட்டதோடு, தவறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்கும் இடமாகவும், ஒருவருக்கொருவர் ஏற்படும் பிரச்சினைகளின் போது சத்தியம் செய்யும் இடமாகவும், பரிகாரம் தேடும் இடமாகவும் மிகவும் பயபக்தியுடன் வேடர்களால் வணங்கப்பட்ட புனித திருத்தலமாக இது விளங்கியது.

இருவருக்கிடையில் பிரச்சினைகள் உண்டாகும் போது எல்லோரும் ஒன்று சேர்ந்து சம்பந்தப்பட்ட இருவரையும் முருகன் சந்நிதிக்கு கூட்டிக் கொண்டு வருவார்களாம். பிரச்சினை உள்ள இருவரும் முருகப் பெருமானுக்கு பிரசாதங்கள் படைத்து, மண்டியிட்டு தத்தமது மனக்குறைகளையும், பிரச்சினைகளையும், தமது பக்கத்தில் உள்ள நியாயங்களையும் கூறி இங்கிருக்கும் இரண்டு பாறைகள் மீது அவற்றை இறக்கி வைத்து விட்டுச் செல்வார்களாம். இவ்வாறு செய்த பின் அன்றிரவு இருவரில் தவறு செய்தவருக்கு அம்மனின் சிறுத்தை வந்து தண்டனை வழங்குவதாகவும் வேடர்கள் நம்பினார்கள்.


கபிலித்தைப் பகுதியின் வடக்கு, வடமேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள ஒக்கம்பிட்டிய, மொனறாகலை, கொட்டியாகல, சியம்பலாண்டுவ, பாணமை ஆகிய இடங்களில் உள்ள மக்கள் இவ்வாலயத்தை பயபக்தியுடன் போற்றி வணங்குகின்றனர். இவர்களே இன்றும் இவ்வாலயத்திற்கு அடிக்கடி வருவதோடு தங்கள் மனக்குறைகள், பிரச்சினைகள், வேண்டுதல்கள் போன்றவற்றை இச்சந்நிதியில் உள்ள கந்தசுவாமிக் கடவுளின் முன் வைக்கின்றனர். பூசாரிகளுடன் வந்து தனது விளை நிலங்களில் அறுவடை செய்யும் நெல் மற்றும் தானியங்களை முதன் முதலில் இம்முருகன் சந்நிதியில் படைத்து பூஜை மற்றும் விழாக்களை நடத்துகின்றனர்.


கபிலித்தையின் வடக்கில் 22 கி.மீ தூரத்தில் உள்ள கொட்டியாகல என்னுமிடத்தில் கபிலித்தை கோயிலுக்கு பூஜை செய்வதற்கென்றே கப்பு மாத்தையா என்றழைக்கப்படும் சிங்கள கிராமத்து பூசாரிகள் பலர் இருக்கின்றனர். கபிலித்தை கோயிலுக்கு பூஜை செய்ய வருபவர்களை ஏற்றிக் கொண்டு செல்வதற்கு கொட்டியாகலயில் ட்ராக்டர் வண்டிகள் வாடகைக்கு உள்ளன.

இங்கிருந்து ட்ராக்டர் வண்டி, ஜீப் வண்டி அல்லது ட்ரேல் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைத் தவிர வேறு வாகனங்களில் கபிலித்தைக்குச் செல்ல முடியாது. எனவே இவ்வாகனங்கள் கூட கொட்டியாகலயில் வாடகைக்கு விடப்படுகின்றன.  



கபிலித்தை பற்றிய இத்தனை விபரங்களையும் ஆராய்ந்து அறிந்து கொண்ட போதும் அங்கு செல்வதற்கான சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இக்கால கட்டத்தில் நான் கதிர்காமத்துக்கு பாதயாத்திரை சென்ற முதலாவது வருடத்தில் இவ்வாலயம் பற்றிய விபரங்களை இரவு நேர பிரசங்கத்தின் போது யாத்திரீகர்களுக்குக் விளக்கிக் கூறினேன். அதன்பின் நான் பாதயாத்திரை மேற்கொள்ளும் மாமாங்கப் பிள்ளையார் பாதயாத்திரை சங்கத்தின் குருசுவாமியான விஜயசிங்கம் அப்பாசாமியும் கபிலித்தைக்கு செல்வது பற்றி என்னுடன் பேசினார். பாதயாத்திரை வந்த யாத்திரீகர்கள் பலர் கபிலித்தை முருகன் கோயிலுக்கு தாம் இதுவரை சென்றதில்லை எனவும், அங்கு தம்மைக் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு கதிர்காம பாதயாத்திரை சென்று திரும்பியபின் கபிலித்தைக்கு எல்லோரும் செல்வது என முடிவெடுக்கப்பட்டது. அந்த வருடம் பாதயாத்திரை சென்று வந்த பின் கபிலித்தைக்குச் செல்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன்.


கபிலித்தைக்கு வெவ்வேறு காலங்களில் சுமார் 20 தடவைகள் சென்று வந்த அனுபவம் மிக்க நண்பர் தேசாந்தவைத் தொடர்பு கொண்டு எமது குழுவினர் கபிலித்தை முருகனை தரிசிக்க ஆயத்தமாக உள்ளனர் என்று கூறியபோது உடனே அவர் ஜீப் வண்டி, ட்ராக்டர் வண்டி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் கபிலித்தைக்குச் சென்ற சில புகைப்படங்களையும்,  காணொளிகளையும் அனுப்பி வைத்தார். அவற்றைப் பார்த்தவுடன் பிரமிப்பாக இருந்தது. அத்துடன் நாம் அங்கு செல்வதற்கான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் கபிலித்தை பயணம் இவ்வளவு சவால் மிக்கதாக அமையும் என அப்போது நான்
நினைத்திருக்கவில்லை.

(தொடரும்..)

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                       
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

1 comment: