Friday, April 17, 2020

தமிழ்ப் புத்தாண்டு சித்திரையா? தையா? ஆராய்ந்து அறிந்து கொள்வோம்.


தமிழ்ப் புத்தாண்டு சித்திரையா? தையா?  

ஆராய்ந்து அறிந்து கொள்வோம்


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/107      10 April 2017































தமிழர்கள் அனைவரும்  உழவர் திருநாளான தைப்பொங்கலையும், சித்திரைப் புத்தாண்டையும் ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர்.

2008 ஆம் ஆண்டு வரை சந்தோஷமாக எமது பெருநாட்களை நாம் கொண்டாடிக் கொண்டிருந்த வேளை தமது சுயநலத்திற்காக சிலர் எமது பண்டிகை நாட்களில் குழப்பங்களை உருவாக்கினர்.

இக் கட்டுரை முற்று முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. 

சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் "தைந்நீராடல்' எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. 

எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.

அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் - சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் - அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட "ஏரீஸ்' வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.

இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி - சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது ""மீன மேஷம் பார்த்தல்'' என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.

இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா?

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.

மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். (""நாஞ்சிற்பனைக் கொடியோன்'' - புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.

பலராமனை "புஜங்கம புரஸ்ஸர போகி' எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு' குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.

பூம்புகாரில் இந்திர விழாவின்போது ""சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 - 69களில் குறிப்பிடப்படுகிறது.

பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா?

தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா? இவை இரண்டிற்குமே தெளிவான விடை ""அல்ல'' என்பதுதான்.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.

ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை - 360 பாகைகளை - 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.

சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் ""இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்'' என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).

தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி - பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.

பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.

வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.

""திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்'' என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 - 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட "ஏரீஸ்' என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.

இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 - 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 - 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, ""தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்'' என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் ""பிரபவ'' தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை ""வியாழ வட்டம்'' (Jovian Circle) எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், "இனம் புரிந்த', இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.

இந்தியா ""தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற'' காலகட்டத்தில், ""நேரங் கெட்ட நேரத்தில்'' மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் ""தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு'' என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் "சுதந்திர'மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: ""சித்திரையில்தான் புத்தாண்டு''.

ஆவணியில் கூட புத்தாண்டு கொண்டாடியதற்கு பண்டைய நூல்களில் ஆதாரம் உண்டு. ஆனால் தையில் கொண்டாடியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.



என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.

No comments:

Post a Comment