குதிரைமலையில் அஸ்வகிரி சிவாலயத்தின் இடிபாடுகள்
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/113 11 Feb 2018
வில்பத்து காட்டில் கடற்கரை ஓரத்தில் உள்ள குதிரைமலை முனையில் அஸ்வகிரி எனும் சிவாலயம் அமைந்திருந்தது. வில்பத்து இலங்கையின் வடமேற்கில் உள்ள புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இவ்வாலயம் 2300 ஆண்டுகளுக்கு முன் அல்லிராணி எனும் பாண்டிய இளவரசியால் கட்டப்பட்டது. இந்தியாவிலிருந்து யாத்திரீகர்கள் இவ்வாலயத்திற்கு வந்து சிவனை தரிசித்து சென்றுள்ளனர்.
இவ்விடமே விஜயன் தன் தோழர்களுடன் கரைசேர்ந்த இடமாகும். பண்டைய காலத்தில் கிரேக்கர், அரேபியர் ஆகியோர் வர்த்தகம் புரிந்த முக்கிய துறைமுகமாக குதிரைமலை விளங்கியுள்ளது.
இங்கிருந்த அஸ்வகிரி சிவாலயம் கடல் கோளின் போது முற்றாக அழிந்து போயுள்ளது. ஆலயத்தின் சிதைவுகள் சில இன்றும் காணப்படுகின்றன. இச்சிதைவுகளைச் சுற்றி கம்பி வேலி கட்டப்பட்டு பாதுகாக்கப் பட்டுள்ளது. அழிந்து போன இவ்வாலயத்தை மீண்டும் இவ்விடத்தில் கட்டி எழுப்ப இந்துக்கள் முன்வர வேண்டும் .
இந்த சிவன் கோயில் இருந்த இப்பிரதேசம் வனவிலங்குகள் சரணாலயமாகும். இப்பிரதேசத்தில் சிவன், முருகன், காளி, விஷ்ணு, வள்ளியம்மன் ஆகிய தெய்வங்களுக்குரிய கோயில்கள் இருந்தன.
முதலாவது தமிழர் குடியிருப்பு இப்பிரதேசத்தில் தான் அமைந்திருந்தது. இப்படிப்பட்ட தொன்மை வரலாற்றைக் கொண்ட இவ்விடத்தில் முன்பிருந்த சிவவழிபாட்டின் அடையாளச் சின்னம் மீண்டும் நிறுவப்பட வேண்டும்.
இங்கு பெரிய கட்டிடங்கள் எதுவும் கட்ட முடியாது. வனத்துறை திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று ஆலயம் இருந்த இடத்தில் ஓர் சிவலிங்கத்தை ஸ்தாபித்து அதைப் பாதுகாக்க ஓர் கூரையும், அதைச் சுற்றி ஓர் இரும்பு வேலியும் அமைக்க வேண்டும். இது ஓர் திறந்த வெளி கோயிலாகத்தான் அமையும் .முதல் கட்டமாக இதை மட்டும் தான் எம்மால் செய்ய முடியும்.
இந்த இடம் கடல் ஓரத்தில் இருப்பதால் வனத்துறை அனுமதியுடன் கடற்படையின் அனுமதியையும் பெற வேண்டும். இதற்கு என்னால் முடியுமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். அதே சமயம் இந்த இரு துறைகளுடன் தொடர்பு உடையவர்கள் இருந்தால் அனுமதி தொடர்பாக தம்மால் என்ன செய்ய முடியும் என்பதை அறியத்தரவும்.
எல்லாவற்றிற்கும் முதலில் இந்துக்கள் இங்கு சென்று எமது சிவாலயம் இருந்த இடத்தைப் பார்க்க வேண்டும்.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
No comments:
Post a Comment